கட்டடமும் கதையும்/குதுப்மினார்
5. குதுப்மினார்
டில்லி நகரில் காலெடுத்து வைத்தவுடன் விண்ணை இடித்துப் பெருமிதத்துடன் நிற்கும் குதுப்மினார் தான் நம் கண்களில் படும். டில்லி நகரில் எப்பகுதியி விருந்தும் குதுப்மினாரைக் காணலாம். அதேபோலக் குதுப்மினாரின் மேல் ஏறி நின்று டில்லி நகரம் முழுவதையும் காணலாம். இதன் உயரம் சுமார் 12 மீட்டர். உலகிலேயே மிக உயர்ந்த கோபுரம் இதுதான். உலகில் வரலாற்றுப் புகழ் பெற்ற வேறு பல கோபுரங்களும் உள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கவை இத்தாலி நாட்டுப் பைசா நகரில் உள்ள சாய்ந்த, கோபுரமும், சீன நாட்டில் பீகிங் நகரில் உள்ள பெரும்பகோடாவும் ஆகும். ஆனால் இவையிரண்டையும்விட உயரத்தால் மிக்கது டில்லி பெருநகரில் உள்ள குதுப்மினார்.
மினார் என்ற அரபுச் சொல்லுக்குக் கோபுரம் என்பது பொருள். இதன் அருகில் சென்று இதை நிமிர்ந்து பார்ப்பவரின் உள்ளத்தில் பல கேள்விகள் எழும். குத்புதீன் மன்னன் இவ்வளவு உயர்ந்த கோபுரத்தை எதற்காக எழுப்பினான்? இக் கோபுரத்தை எழுப்பிய சிற்பி யார் ? எழு நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் இக் கோபுரம் கீழே விழாமல் எப்படி நிற்கிறது? என்பனவே அக் கேள்விகள். தொழுகைக்காக மக்களை அழைக்கும் அறிவிப்பை ஒலிபரப்புவதற்காகவே இவ்வுயர்ந்த கோபுரத்தைக் குத்புதீன் எழுப்பியிருக்கவேண்டும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் அதன் உண்மைக் காரணம் என்னவென்பதை ஈண்டு ஆய்வோம்.
இசுலாமிய சமயம் காலத்தால் பிற்பட்டது. இது கி. பி. ஏழாம் நூற்றாண்டில் அரேபிய நாட்டில் நபி நாயகத்தினால் தோற்றுவிக்கப்பட்டது. பாலை நிலத்தில் நாடோடிகளாகத் திரிந்த அராபிய மக்களை இச்சமயம் ஒன்று சேர்த்தது; நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்த்து வலிவுள்ள இனமாக அவர்களை மாற்றியமைத்தது. புதிய சமயத்தால் ஒன்றாக இணைந்த அம்மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். மிக விரைவில் தங்கள் சமயத்தை ஆசிய நாட்டின் மேற்குப் பகுதியில் பரப்பி விட்டனர்.
சமயத்தைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு, புது நாடுகளைக் கைப்பற்றி ஆள வேண்டும் என்ற பேரவாவும் அராபியரைப் பிடர் பிடித்துத் தள்ளியது. மாபெரும் வீரர்களும், அரசியல் தலைவர்களும் அவர்களிடையே தோன்றினர். புயல்போல அவர்கள் நாற்புறமும் சீறி எழுந்தனர். வலிமைமிக்க அவர்கள் வாள்வீச்சுக்கு முன்னால் மணி முடிகள் உருண்டு மண்ணில் விழுந்தன. கொடி கட்டி ஆண்ட மாபெரும் பேரரசுகளெல்லாம் மண்மேடாயின. பாரசீகம், ஆப்கானிஸ்தானம், துருக்கிஸ்தானம், துருக்கி, வட ஆப்ரிக்கா முதலிய நாடுகள் அவர்கள் காலடியில் சரணடைந்தன. ஏறத்தாழ ஐரோப்பாவின் பெரும் பகுதி இவர்கள் குதிரைக் குளம்படியில் கும்பிட்டுப் பணிந்தன.ஜபர் உல் தாரீக் என்ற ஓர் அராபியத் தளபதி வட ஆப்பிரிக்காவை வட்டமிட்டு, இன்று ஜிப்ரால்டர் நீரிணைப்பு என வழங்கும் இடத்தை அடைந்து, அங்கிருந்து ஸ்பெயின் நாட்டிலும் புகுந்து அதைக் கைப்பற்றினான். அவன் கடந்து வந்த நீரிணைப்புக்கு ஜிப்ரால்டர் நீரிணைப்பு என இன்றும் அவனுடைய பெயரே மருவி வழங்குகிறது. ஸ்பெயின் நாட்டின் தென்பகுதியில் 15 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் இசுலாமியர் ஆட்சி நிலைத்திருந்தது.
இவ்வாறு உலகமே நடுங்கப் போர் முரசு கொட்டிய அராபியர்களின் கவனத்தை இந்தியப் பெருநிலம் ஈர்த்தது. இந்திய நாடு பரந்த ஒரு துணைக்கண்டம். இமயம் முதல் குமரிவரை எல்லாச் செல்வமும் ஒருங்கே அமையப் பெற்ற இணையற்ற பெருநிலம். புனிதக் கங்கையும், சீறிப் பாயும் சிந்துப் பேராறும், நல்வளம் கொழிக்கும் நருமதையும், வான் பொய்ப்பினும் தான் பொய்யா வளமிக்க காவிரியும் ஓடி வளப்படுத்தும் வளநாடு இந் நாவலந்தீவு. முத்தும் பவளமும் அகிலும் தேக்கும் நெல்லும் கரும்பும் தமிழகத்திலுண்டு. குறையாத கோதுமை வளம் சிந்து, கங்கைச் சமவெளியில் உண்டு. மேருமலையில் மணியுண்டு. இங்கிருப்பது போன்ற வளமிக்க பெருஞ் சமவெளிகளை வேறெங்கும் காண்பது அருமை.
இந்திய நாட்டின் செல்வ வளம் அராபியரின் செவிகளுக்கு எட்டியது. அச்செல்வத்தை விட்டு வைக்கக் கூடாது என்று கச்சை கட்டி நின்றனர் அராபியர்; கி.பி. 712 இல் முகம்மது பின் காசிம் என்ற வீரன் தலைமையில் கடலைக் கடந்து சிந்து நாட்டில் காலடி எடுத்து வைத்தனர். சிந்து நாட்டின் மன்னான தாகிர் கொல்லப்பட்டான். சிந்து நாடு அராபியர் ஆட்சிக்கு உட்பட்டது. சிறிது காலமே அவ்வாட்சி நிலைபெற்றது; பிறகு செத்து மடிந்தது.
மீண்டும் பத்தாம் நூற்றாண்டில் இசுலாமியர் இந்திய நாட்டின் மேல் தம் படை வெள்ளத்தைத் திருப்பினர். இப்போது இவர்கள் கடல்வழியாக வரவில்லை ; கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்திய நாட்டிற்குள் நுழைந்தனர். அவ்வாறு நுழைந்தவன் கஜ்னி நகரை ஆட்சி புரிந்த சபக்டிஜின் என்ற மன்னன். இவன், செயபாலன் என்ற இராசபுத்திர மன்னனைத் தோற்கடித்துப் பெஷாவர் வரையிலுமுள்ள பகுதிகளைக் கைப்பற்றினான். ஆனால் சில நாட்களில் அவனும் செத்து மடிந்தான். அவனுக்குப்பின் அவன் மகனான மாமூது காட்டாற்றைப்போல் இந்தியப் பெருநிலத்தில் புகுந்தான்.
இந்திய வரலாற்றில் கொடுமையின் சிகரமாகக் குறிக்கப்படும் கஜ்னி மாமூது என்ற குருதி வெறிக் கோமான் இவனே. இவனே ஒரு காட்டுத்தீக்கு ஒப்பிடலாம். காட்டுத்தீ, பற்றிய இடத்தையெல்லாம் சாம்பலாக்குவது போல, இவன் காலடி வைத்த இடமெல்லாம் சுடுகாடாக்கினான். இந்திய நாட்டின் வளமிக்க நகரங்களெல்லாம் இவன் வாள்வீச்சுக்குச் சரிந்தன.மாமூதின் நோக்கம் இந்திய நாட்டில் இசுலாமியப் பேரரசை நிறுவ வேண்டும் என்பதன்று. பொன் விளையும் பூமியான இந்திய நாட்டின் செல்வம் எல்லாவற்றையும் அடியோடு சுரண்டிக் கொண்டு போய்த் தன் நாட்டில் குவிக்க வேண்டும் என்பதுதான். மேலும் இசுலாமிய சமயத்தை இந்திய நாட்டில் பரப்ப வேண்டுமென்றும் இவன் நினைத்தான்; இந்திய நாட்டில் உள்ள கோவில்களையெல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு, எங்கும் மசூதிகளை எழுப்ப வேண்டுமென்று நினைத்தான்; இந்திய நாட்டின்மீது பதினேழு முறை படையெடுத்தான்; ஒவ்வொரு முறையும் குதிரைகளின் மீதும், ஒட்டகங்கள் மீதும் இந்திய நாட்டின் செல்வத்தை வாரி மூட்டை கட்டிக்கொண்டு சென்றான்.
பெஷாவர், மூல்தான், நாகர்கட், படிண்டா , நாராயணபுரம், தானேசுவரம், மதுரா, சோமதநாதபுரம் ஆகிய பட்டணங்களை மாமூது கொள்ளையடித்தான்; கோவிற் சிலைகளைச் சுக்கு நூறாக்கினான்; இந்திய நாட்டிலிருந்து எடுத்துச் சென்ற செல்வத்தைக் கொண்டு தன் தலைநகரான கஜ்னியை அழகு படுத்தினான்; அங்குப் பல்கலைக்கழகத்தையும், நூல் நிலையங்களையும் நிறுவினான்; பிர்தௌசி, அல்பெரூனி முதலிய கவிஞர்களை ஆதரித்தான். ஆனால் இந்திய நாட்டில் பேரரசை நிறுவ அவனால் முடியவில்லை.
கி. பி. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோரியிலிருந்து புறப்பட்ட முகம்மது என்ற மன்னன் வடஇந்தியாவில் சிறப்புடன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த இராசபுத்திர மன்னனாகிய பிருதிவியைத் தோற்கடித்து விட்டு இசுலாமியப் பேரரசை டில்லியில் நிறுவினான். ஆனால் அவனும் சில ஆண்டுகளில் கொலையுண்டு இறந்தான். இவ்வாறு இசுலாமியர்கள் பலமுறை இந்திய நாட்டின்மீது படையெடுத்தும் யாராலும் நிலைத்த ஓர் அரசியலை உருவாக்க முடியவில்லை.
இந்திய நாட்டில் முகம்மது கோரி துவக்கி வைத்த இசுலாமிய அரசு என்னும் அடிப்படையின் மீது, பேரரசு என்னும் பெருமாளிகையை எழுப்பிய பெருமை, அவனுடைய அடிமை ஒருவனையே சாரும். அவன்தான் குத்புதீன். முகம்மது கோரியிடம் இவன் அடிமையாகப் பணி செய்தவன்; தன் உழைப்பாலும் அறிவாற்றலாலும் கோரியின் நன் மதிப்பைப் பெற்றுப் படிப்படியாக உயர்ந்து, இறுதியில் அவன் முழு நம்பிக்கைக்கும் அன்புக்கும் உரியவனாக மாறிவிட்டான்.
கோரி கி.பி. 1206 ஆம் ஆண்டில் இறந்ததும், இந்திய நாட்டில் அவன் வென்ற பகுதிகளுக்குக் குத்புதீன் மன்னன் ஆனான்; மேலும் பல பகுதிகளை வென்று, தன் ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டான்; வலிமை மிக்க ஆட்சியை இந்திய நாட்டில் வேரூன்றுமாறு செய்து விட்டான். எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இந்திய நாட்டை வென்று ஒரு பேரரசை நிறுவ வேண்டும் என்று எண்ணி முயன்ற அராபியரின் முயற்சி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின் குத்புதீனால் முற்றுப் பெற்றது. தன் முன்னோரால் சாதிக்க முடியாத பெருஞ்செயலைச் சாதித்து முடித்த குத்புதீன் அவ்வெற்றிப் புகழ் என்றும் நிலைத்திருக்குமாறு செய்ய விரும்பினான். அவ்விருப்பத்தின் விளைவாக எழுந்த வெற்றிச் சின்னமே குதுப்மினார்.
குதுப்மினார் உலகிலேயே மிக உயர்ந்த கோபுரமென்று நாம் கண்டோம். இதன் உச்சியில் ஏறி நிற்கும் ஒருவன் உரக்கக் கூவினால்கூட, இதன் அடியில் நிற்பவனின் காதில் அச்சத்தம் விழாது. இவ்வுயர்ந்த கோபுரத்தை வெற்றியின் சின்னமாகத்தான் குத்புதீன் எழுப்பினான் என்பதற்கு வேறு சில சான்றுகளும் உண்டு. இந்திய நாட்டைப் பதினேழு முறை கொள்ளையடித்துச் சென்ற கஜ்னி மாமூது, தன் தலைநகரான கஜ்னி மாநகரில் இதைப் போன்றே, ஒரு கோபுரத்தைத் தன் வெற்றியின் சின்னமாக எழுப்பினான். கோரி முகம்மதுவும் வெற்றிச் சின்னமாகக் கோரி நகரில் ஒரு கோபுரத்தை எழுப்பினான். தன் முன்னோர்களைப் பின் பற்றிக் குத்புதீனும் டில்லியில் குதுப்மினாரை எழுப்பியிருக்கவேண்டும்.
கோரி முகம்மது டில்லியைக் கைப்பற்றுவதற்கு முன்பாக இப்பெரு நகரில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த இராசபுத்திர வீரன் பிருதிவி. அவனோ அல்லது அவன் மாமனான விக்கிரக ராஜாவோ, தோமார் இராசபுத்திரர்களிடமிருந்து டில்லியைக் கைப்பற்றிய அவ்வெற்றியின் சின்னமாக இக்கோபுரத்தை எழுப்பியிருக்கலாம் என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்து அரசர்கள் வெற்றிச் சின்னமாகப் பெருந்தூண்களை எழுப்பி யிருக்கின்றனரே யன்றி, இதுபோன்ற உயர்ந்த கூம்புக் கோபுரங்களை எழுப்பியதாக இந்திய நாட்டு வரலாற்றில் காணமுடியாது. இக் கோபுரத்தைக் குத்புதீன் தான் எழுப்பி யிருக்க வேண்டும் என்று நம்புதற்கிட மிருக்கின்றது. அல்லது கோரி முகம்மது இக்கோபுர வேலையைத் தொடங்கி, குத்புதீனும் அல்டமிசும் இதை முற்றுப் பெறச் செய்திருக்கலாம் என்றும் எண்ண இடமிருக்கிறது. இக்கோபுர வேலை கி.பி. 1220 ஆம் ஆண்டு முற்றுப் பெற்றது.
குத்புதீன் தோற்றுவித்த அடிமையினப் பேரரசு அழிந்த பிறகு டில்லி நகரில் அரியணை ஏறி ஆட்சிபுரிந்த இசுலாமியப் பேரரசர்கள் கில்ஜி" இன அரசர்கள் . இவர்களில் குறிப்பிடத்தக்க பெருவீரன் அலாவுத்தீன் கில்ஜி. இவனுடைய படைத் தலைவனான மாலிக் காபூர் தமிழகத்து மதுரை வரையில் படையெடுத்து வந்து வெற்றி பெற்றான். வடக்கே இமயம் முதல் தெற்கே மதுரை வரையில் இவன் பேரரசு பரவிக்கிடந்தது.
தக்கணத்தில் தான் பெற்ற இவ்வெற்றியை. நிலை நாட்டும் பொருட்டுக் கில்ஜி ஒரு வெற்றிக் கோபுரம் எழுப்ப விரும்பினான்; அக்கோபுரம் குதுப்மினாரைப் போல் இருமடங்கு உயர்ந்ததாக, இருக்க வேண்டும் என்று எண்ணினான். கட்டட வேலையும் துவக்கப்பட்டது. ஆனால் அதன் துவக்க காலத்திலேயே அலாவுத்தீன் இறந்து, விட்டான். அதன் பிறகு அக்கோபுரப் பணி முற்றுப் பெறாமலேயே நின்று விட்டது. அவன் வழியில் வந்த மன்னர்கள் யாரும் அப்பணியைத் தொடர்ந்து செய்ய முன் வரவில்லை, குத்பு தீனுடைய மசூதிக்கு மறுபுறத்தில் முற்றுப்பெறாத இக்கோபுரத்தின் அழிவுச் சின்னங்களை இன்றும் காணலாம்.
பிரோஜ்ஷா வினுடைய ஆட்சிக் காலத்தில் டில்லியில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. அந்நில நடுக்கத்தால் குதுப்மினாரின் உச்சியிலுள்ள இரண்டு மாடிகள் சிதைந்தன. பிரோஜ்ஷா அவற்றைப் புதிதாக அமைத்து ஓர் அழகிய தாழ்வாரத்தையும் சேர்த்தான். இம்மாடிகள் கி. பி. 1505 ஆம் ஆண்டு சிக்கந்தர் லோடியினால் மீண்டும் பழுது பார்க்கப்பட்டன. கி. பி. 1794 ஆம் ஆண்டில் குதுப்மினார் மீண்டும் பழுதடைந்தது. மேஜர் ஸ்மித் என்ற பொறியியல் வல்லுநர் இதைப்பழுது பார்த்ததோடு இதன் உச்சியில் மற்றொரு தாழ்வாரத்தையும் அமைத்தார். கி. பி. 1848 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் தலைமை ஆளுநராக விளங்கிய ஹார்டிஞ்சு பிரபு இத்தாழ்வாரங்களை அகற்றி விட்டார். இத்தாழ்வாரங்கள் குதுப்மினாருக்கும் தங்கல் மனைக்கும் நடுவிலுள்ள பூங்காவில் கிடக்கின்றன.
பிரோஜ் ஷாவினால் புதிதாக அமைக்கப்பட்ட அவ்விரண்டு மாடிகளும் வெண்மையான சலவைக் கற்களால் கட்டப்பட்டவை; பளபளப்பானவை. அவற்றிற்கு அடிப்புறத்திலுள்ள மூன்று மாடிகளும் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டவை.குதுப்மினாரைச் சற்றுத் தொலைவிலிருந்து கூர்ந்து நோக்கினால், அது செங்குத்தாக இல்லாமல் சற்றுச் சாய்ந்திருப்பது தென்படும். பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கங்களே இச் சாய்வுக்குக் காரணம். டில்லியிலுள்ள தொல்பொருள் காப்புத் துறையினர் இதை மிகவும் கண்காணிப்போடு காத்து வருகின்றனர். சிறு விரிசல் ஏற்பட்டால் கூட உடனுக்குடன் அதைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
குதுப்மினாரின் அருகிற் சென்று பார்த்தோமானால் அல்டமிசின் சமாதியில் காணப்படுவது போன்ற அழகிய சிற்ப ஓவியங்கள் கீழ்மாடிகளின் சுவர்களில் காணப்படுகின்றன. கோபுரச் சுவர்களில் நாற்புறமும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அல்டமிசு குதுப்மினாரைக் கட்டி முற்றுப் பெறச் செய்த செய்தியைப் பற்றிய எல்லாக் குறிப்புகளும் அவற்றில் காணப்படுகின்றன. கோபுரம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, இதன் சுவர்களை வெளிப்புறத்தில் மிகவும் சரிந்திருக்குமாறு சாய்த்துக் கட்டியிருக்கின்றனர், கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒருவன் கீழே குதித்தால் அவன் நேராகப் பூமியில் விழமாட்டான்; சுவரிலேயே மோதிக் கொள்வான். தாவிக் குதிப்பதில் மிகவும் வல்லவனா யிருந்தால்கூடச் சுவரில் மோதாமல் கீழே குதிக்க முடியாது.
குதுப்மினாரின் உச்சியை நாம் அடைந்தோமானால் டில்லி நகரின் அழகிய காட்சிகளையெல்லாம் ஒன்று விடாமல் பார்க்கக் கூடும். இவ்வுச்சியை யடைய 378 படிக்கட்டுகளை ஏறியாக வேண்டும். இவ்வுச்சியில் நிற்போருக்குச் செங்கோட்டையின் வெளிப் புறச் சுவர்கள் தென்படும். டில்லி நெடுஞ்சாலை ஆறு கிடந்தாற்போல் அகன்று செல்வதைக் காணலாம் ; இடப் புறத்தில் ஆஸ்காஸ் மாளிகைகளையும், வலப்புறத்தில் ஐகன்பன்னா, சிரி ஆகியவற்றின் சுவர்களையும் காணலாம்.
(ஜகன்பன்னா என்ற இடம், முகம்மது துக்ளக் என்பவனால் கட்டப்பட்ட கோட்டை; சிரி. அலாவுத்தீன் கில்ஜியால் கட்டப்பட்ட கோட்டை. அவைகள் யாவும் சிதைந்து, அழிவுச் சின்னங்களாகவே இன்று காணப்படுகின்றன.)
இவ்வுச்சியின் மேல் ஏறி நின்றுதான், துக்ளக் அரசர்களும், கில்ஜி மன்னர்களும், முரட்டு மொகலாயர்கள் டில்லி நகரைச் சூறையாடிய கொடிய காட்சியைக் கண்ணால் கண்டனர். தைமூரின் படை வெள்ளம், இப்போதுள்ள வில்லிங்டன் விமான நிலையத்தில் பாசறை அமைத்துத் தங்கியிருந்த காட்சியை, முகம்மது துக்ளக் இவ்வுச்சியில் ஏறி நின்றுதான் கண்டான்.
இவ்வுச்சியில் நின்ற வண்ணம் நம் பார்வையைச் சற்றுத் தொலைவில் செலுத்தினால் ஒரு பக்கத்தில் துக்ளகாபாத்தின் சுவர்களையும், மறு பக்கத்தில் பழங்கோட்டை (புராணா கிலா) யையும், உமாயூனுடைய சமாதியையும் காணலாம். உமாயனுடைய சமாதியின் மேல் நம் கண் பார்வை மோதியவுடன் தம்மையறியாமல் நம் உணர்ச்சி சிலிர்ப்படையும். மொகலாயர்களின் மிக்க அழகிய கலைக் கோவில்களில் இதுவும் ஒன்று. கி. பி. 1565 ஆம் ஆண்டு மொகலாயப் பேரரசின் புகழுக்கும் பெருமைக்கும் காரணமாக விளங்கிய அக்பரின் தாயும், உமாயூனின் மனைவியுமான அமிதா பானு பேகத்தினால் இச்சமாதி எழுப்பப்பட்டது. சிற்பக் கலையழகில் தாஜ்மகாலுக்கு அடுத்த நிலையில் வைத்து உமாயூன் சமாதி பேசப்படுகிறது.
இச்சமாதியில் நிலைத்த நம் பார்வையைத் திருப்பினால் பிரோஜ்ஷா கோட்லா தென்படும். அதை அடுத்து ஜும்மா மசூதியின் உச்சிப் பிறைக் கோளங்கள் தென்படும். மொகலாயப் பெரு மன்னர்களின் மதிப்பிற்குரிய தொழுகையிடம் இதுவே. ஜும்மா மசூதிக்கு அடுத்தாற்போல் நம் கண்ணில் படுவன சப்தர் ஜங்கின் சமாதியும், புது டில்லியும் ஆகும். கடைசியாக நம் கண்ணில்படுவது தென்மேற்குப் பகுதியில் காணப்படும் பாறைக் கூட்டம் ஆகும். அப்பாறைக் கூட்டத்தின் நடுவில் சுல்தான் காரியின் அழகிய சமாதியைக் காணலாம். இவ்வரலாற்றுச் சின்னங்களையெல்லாம் இணைக்கும் பாதைகள், இருபுறங்களிலும் செழித்த பசுமரங்களைக் கொண்டு விளங்குகின்றன.
'மேலே கூறப்பட்ட இவ்வளவு காட்சிகளையும் குதுப்மினாரின் உச்சியிலிருந்து உளங்குளிரக் காணலாம். இத்தகைய அழகுக் காட்சிகளை உரோமாபுரியிலன்றி, உலகில் வேறெங்கும் காண முடியாது.