உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டடமும் கதையும்/தாஜ்மகால்

விக்கிமூலம் இலிருந்து

4. தாஜ்மகால்

இந்திய நாட்டில் மாபெரும் நகரங்கள் பல உள்ளன. அவற்றுள் ஆக்ரா நகரை அறிந்த அளவு, வேறு எந்த நகரையும் உலக மக்கள் அறிந்தார்களல்லர். காரணம் ஆக்ரா நகரம் அழகின் இருப்பிடம்; கலையின் நடுவிடம். இந்திய நாட்டில் எத்தனையோ அரச பரம்பரையினர் அரியணை ஏறி ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்களுள் மொகலாயர்களின் ஆட்சி ஈடு எடுப்பற்றது ; செல்வச் சிறப்புக்கும், ஆடம்பரத்துக்கும், கலைக்கும் பெயர் பெற்றது, மொகலாயர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் மாபெரும் மசூதிகளையும், கோபுரங்களையும், கலைச்சிறப்போடு கூடிய பளிங்குச் சமாதிகளையும், கண்கவர் பூங்காக்களையும் நிறுவினர். அவை யாவும் மொகலாய மன்னர்களின் பெருமையைப் பறைசாற்றிய வண்ணம் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றன.

இச் சிற்பச் செல்வங்களுக்குப் புகழ் பெற்ற இடம் ஆக்ரா நகரமாகும். இந்நகரின் நடுநாயகமாக யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தாஜ்மகால் ஈடு இணையற்ற சிற்பக்கலையின் சின்னமாக விளங்குகிறது. உலக விந்தைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஐரோப்பிய மக்களின் உள்ளத்தில் இஃது ஓர் அரிய கலைக் கோவிலாக இடம் பெற்று விட்டது. இப்பளிங்குச் சமாதியைக் காணும் மக்கள் எல்லாரும் மூக்கின்மேல் விரலை வைத்து வியப்புடன் நோக்குகின்றனர். தாஜ்மகால் தொன்மையானது ; அளவால் மிகப்பெரியது; அளவற்ற பொருட் செலவில் கட்டப்பட்டது; செய்தற்கரியது. மொகலாயர்கள் காலத்தில் கட்டடக் கலை மிகவும் உன்னத நிலையில் இருந்தது. அவர்கள் காலக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ கட்டடங்கள் டில்லியிலும், ஆக்ராவிலும், பதேபூர் சிக்ரியிலும் எழுப்பப்பட்டன. இருந்தாலும் மொகலாயப் பேரரசின் கலை வரலாற்றில் தாஜ்மகாலே சிறப்பிடம் பெற்றுள்ளது.

இந்திய நாட்டு வரலாற்றில் ஆக்ராவிற்குச் சிறப்பிடம் உண்டு. இந்நகரில் பல அரச பரம்பரையினர் வீற்றிருந்து அரசு புரிந்தனர். முதன் முதலாக ஆக்ரா நகரம் இராசபுத்திரச் சிற்றரசன் ஒருவனுக்கு உரிமையுடையதாக இருந்தது. பிறகு லோடி வம்சத்தினரும், மொகலாயர்களும் இந்நகரைக் கைப்பற்றிக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினர்.

முதன் முதலாக ஆக்ரா நகரில் தன் ஆட்சிப் பீடத்தை அமைத்த மன்னன் சிக்கந்தர் லோடி. மொகலாயப் பரம்பரையை இந்திய நாட்டில் தோற்றுவித்த பாபர் கி. பி. 1526 ஆம் ஆண்டு தன் ஆட்சிப் பீடத்தை ஆக்ராவில் அமைத்துக் கொண்டார். பாபர் வெறும் படைத்தலைவர் மட்டுமல்லர். அவர் பெரிய கலைஞர். அவர் ஆக்ரா நகரில் அழகு மிக்க சோலையொன்றை அமைத்தார்; அச்சோலையின் நடுவே கலையழகோடு கூடிய மாளிகை யொன்றைக் கட்டினார்; அச்சோலையின் நடுவே செயற்கை நீர் ஊற்றுக்களையும், வாய்க்கால்களையும் நிறுவினார்; மணம் மிக்க கொடிப்பந்தர்களையும் அமைத்தார்; நாள் தோறும் மாலை வேளையில் அப்பந்தலில் அமர்ந்திருந்து கவிஞர்களோடும், கலைஞர்களோடும் விருந்துண்டார் ; கலையாராய்ச்சி செய்தார்; கவிதைகள் இயற்றினார். பாபர் எழுப்பிய இத் தோட்ட மாளிகை ‘சார்பாக்’ என்ற பெயரால் வழங்கப்பட்டது. அது இப்போது அழிந்து விட்டது. அதனுடைய சின்னங்கள் கூட இன்று காணப்படவில்லை.

பாபர் இறந்த பிறகு அவர் மகனான உமாயூன் அரியணை ஏறினார். சூர் பரம்பரையின் மன்னரான ஷெர்ஷா உமாயூனைத் துரத்திவிட்டு, ஆக்ராவில் தன் ஆட்சிப் பீடத்தை அமைத்தார். ஷெர்ஷா இறந்தபிறகு உமாயூனின் மகனாகிய அக்பர் ஆக்ராவைக் கைப்பற்றிக் கொண்டார். அக்பர் உறுதியான கோட்டையொன்றை ஆக்ராவில் எழுப்பினார். அக்கோட்டை இன்றும் காணப்படுகிறது. ஆக்ரா நகரில் மிகவும் பழமையான வரலாற்றுச் சின்னம் இதுதான். அக்பரின் மகனாகிய ஜஹாங்கீரின் ஆட்சியில் ஆக்ரா சிறப்பிடம் பெறவில்லை. ஜஹாங்கீரின் மகனான ஷாஜகான் அரியணை ஏறியதும், ஆக்ரா அவருடைய ஆட்சியில் அழியாப் பெரும்புகழைப் பெற்றது.

ஷாஜகானின் அன்பு மனைவியான மும்தாஜ் பேகம் இறந்ததும் அவளுடைய நினைவுச் சின்னமாகத் தாஜ்மகால் எழுப்பப்பட்டது. இது கி. பி. 1631 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுக் கி. பி. 1648 ஆம் ஆண்டு முற்றுப் பெற்றது. ஷாஜகான், தம் அன்பு மனைவியின் நினைவாக அமைக்கப்படும் இவ்வழகுச் சமாதி ஈடும் எடுப்புமற்றதாக விளங்க வேண்டும் என்று எண்ணினர். இக்கட்டடம் கட்டப்பட்டதைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன.

இக்கட்டடம் எழுப்புவதற்கு முன், இதன் அமைப்பை விளக்கும் சிறந்த கிடைப்படத்தை வரைந்து கொண்டு வருபவருக்குப் பெரும் பொருள் பரிசுகொடுப்பதாக ஷாஜகான் பறையறைந்தாராம். அப்போது ஷாஜகானுடைய அரசவையில் இருந்த வெனிசு நாட்டுக்காரர் ஒருவர் தாஜ்மகாலின் கிடைப்படத்தை வரைந்து கொடுத்தாரென்றும், அப்படத்தை வைத்துக் கொண்டு அவ்வமைப்பின் படி இக்கட்டடம் எழுப்பப்பட்டதென்றும் சொல்லுகின்றனர்.

இக்கதையைச் சான்று காட்டிப் பேசுபவரெல்லாம் மேலை நாட்டினரே. ஆனால் இக்கதை நம்பத்தகுந்ததாக இல்லை. காரணம், இசுலாமியக் கட்டடக் கலையின் வளர்ச்சி பெற்ற நிலையைத்தான் தாஜ்மகாலில் காண முடியுமே தவிர, மேலை நாட்டுக் கட்டடக் கலையின் சிறு சாயலைக்கூட இதில் காண முடியாது.

தாஜ்மகால் எழுந்த வரலாற்றைப் பற்றி வேறொரு கதையும் வழங்குகிறது. இக்கட்டடம் அமைப்பதற்கான கிடைப்படத்தை முதலில் தீட்டிக் கொடுத்தவன் உஸ்தாத் ஈசா என்ற இசுலாமியன். இவன் பாரசீக நாட்டைச் சேர்ந்தவன். இவன் எழுதிய அமைப்பின்படியே தாஜ்மகால் கட்டப்பட்டது. இக்கட்டட வேலைக்காகச் சிற்பிகள் பாக்தாத் நகரிலிருந்து வரவழைக்கப்பட்டனர். சமர்க்கண்டிலிருந்து வளைவுக் கோபுரம் அமைக்கும் கலையில் வல்ல சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். பளிங்குக் கல்லில் பூவேலைப்பாடு செய்யும் கலையில் மிகவும் கைதேர்ந்தவனான சிற்பியொருவன் சிராஸ் நகரிலிருந்து வரவழைக்கப்பட்டான். எனவே, இசுலாமிய உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தாஜ்மகாலைக் கட்டச் சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர் என்பது தெளிவாகும்.

மும்தாஜின் சமாதி வெள்ளைப்பளிங்குக் கற்களால் ஆனது. அவ்வழகு மணிமாளிகையைச் சுற்றிக் கண்ணைக் கவரும் வண்ணமலர்கள் பூத்த பரந்த பூஞ்சோலையொன்று உள்ளது. அப்பூஞ்சோலை, அழகின் இருப்பிடம். அங்கே குளிர் நிழல் தங்கும் பசுமரங்கள் உண்டு. அப்பசு மரங்களைச் சுற்றிப் படர்ந்து பூங்கொடிகள் தலையை ஆட்டிச் சிரிக்கும். மரகதப் பாய் விரித்தாற் போன்று எங்குப் பார்த்தாலும் பசும் புற்றரைகள் தென்படும். திரும்பிய திசையெல்லாம் செயற்கை நீர் ஊற்றுக்கள் தம் உடலையசைத்துக் களிநடம் புரியும்.

இச் சோலையின் நுழைவாயில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வெள்ளைப் பளிங்குக் கற்களாலும், செந்நிறப் பளிங்குக் கற்களாலும் அமைக்கப்பட்டது. இவ் வாயிலில் நுழைந்து, சோலையின் நடுவே நீண்டு செல்லும் கண்கவர் பாதையின் வழியே சென்று சமாதியை அடையவேண்டும் வழியின் இரண்டு பக்கங்களிலும் இயற்கையழகும், செயற்கையழகும் கூடிய மரங்களும் செடிகளும் வரிசையாக வளர்ந்துள்ளன. இப்பாதையில் நடந்து போகும் போது ஏதோ ஒரு கனவுலகில் மிதந்து செல்வது போலத்தோன்றும். இக்காட்சி கவிஞரின் கற்பனையைத் தூண்டும்; சிற்பியின் சிந்தனைக்கு விருந்தளிக்கும்; ஓவியனின் உள்ளத்தில் உணர்ச்சியைத் தூண்டிவிடும்.

இதைக்காணும் மக்களெல்லாரும், “இது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட செயல்; உயர்ந்த கவிஞனின் கற்பனைக்கு, ஒப்பற்ற சிற்பியொருவன் உயிரூட்டியிருக்கிறான்! ஷாஜகான் தம் மனைவியின் பால் எத்தகைய அன்பு கொண்டிருந்தாரோ? அவர் கொண்டிருந்த அன்புக்கு எல்லை இருந்திருக்க முடியாது. இல்லாவிட்டால் அவள் நினைவுச் சின்னமாக, உலக விந்தை ஒன்றை உருப்படுத்தியிருப்பாரா? இச்சமாதியே இவ்வளவு பேரழகோடிருந்தால், இங்குப் புதைக்கப்பட்ட மும்தாஜ் எத்துணை அழகியோ! இனி உலகில் எவராலும் இது போன்ற கலைக் கோவிலை எழுப்ப முடியாது; இந்திய நாட்டின் கலைப் புகழுக்கு இதுதான் எடுத்துக் காட்டு!” என்றெல்லாம் வியந்து பேசுவதைக் காதாரக் கேட்கலாம்.

கலப்பில்லாத உயர்ந்த சலவைக் கற்களால் எழுப்பப்பட்டுள்ள இக்கலைக் கோவிலை, முழு நிலா வானத்தில் ஆட்சி செலுத்தும் இரவு நேரத்தில் பார்த்து மகிழவேண்டும். அப்பொழுது தான் அதன் சிறப்பு நமக்குத் தெரியும். தாஜ்மகாலைக் கட்டி முடித்த சில ஆண்டுகளில் ஷாஜகானை, அவர் மகனான ஔரங்கசேப் கைது செய்து, ஒரு மாளிகையில் சிறைவைத்து விட்டார். சிறைப்பட்ட அம்மாளிகையில் இருந்தவண்ணம், தம் அன்பு மனைவியின் சமாதியை நிலாக்கால இரவில் மணிக்கணக்காக ஷாஜகான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாராம்.

இப்பளிங்குச் சமாதியின் இரு பக்கங்களிலும், செந்நிறக் கற்களால் கட்டப்பட்ட இரண்டு மாபெரும் கூடங்கள் உள்ளன. ஒன்று, முக்கியமான நிகழ்ச்சிகளின் போது அரசர் உள்பட மக்கள் எல்லாரும் கூடும் அவைக் கூடம், மற்றொன்று, சடங்குகள் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட கூடம். செந்நிறமான இவ்விரண்டு கூடங்களுக்கும் இடையில் வெண்மையான பளிங்குச் சமாதி மிகவும் எடுப்பாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது. தாஜ்மகாலை அருகிலிருந்து பார்ப்பதை விடத் தொலைவிலிருந்து கண்டால், மிகவும் பேரழகோடு தென்படும். இக் கட்டடத்தின் வெளி உருவ அமைப்புப் போற்றத் தகுந்ததாக உள்ளது.

தாஜ்மகாலின் உட்புறத்தில் சென்று பார்த்தால் சிற்பக்கலையின் முழுச் சிறப்பையும் காணலாம். உட்சுவரில் சிற்ப வேலைப்பாடு இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். அவைகளைக் காணும் போது, அவற்றை உருவாக்கிய சிற்பியின் கை வண்ணத்தை எண்ணி எண்ணி வியவாமல் இருக்க முடியாது. முக்கியமான சிற்பங்களின் நடுவே கெம்பு, மரகதம், நீலம், வைடூரியம், கோமேதகம், வைரம் முதலிய நவமணிகளும் பதிக்கப்பட்டிருந்தன. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, உயர்ந்த வைரக்கற்களெல்லாம் பெயர்த்து எடுக்கப்பட்டுவிட்டன. அவ்விடங்களில் போலி வைரங்களே இப்பொழுது மின்னுகின்றன.

தாஜ்மகாலின் சிறப்பை இந்திய மக்களைவிட மேலை நாட்டு மக்கள் மிகவும் உணர்ந்திருக்கின்றனர். ஆக்ராவைப் பற்றியும், தாஜ்மகாலைப் பற்றியும் ஐரோப்பியர்களே சிறந்த நூல்கள் எழுதியுள்ளனர்; அந்நூல்களில் தாஜ்மகாலின் சிறப்பை அணு அணுவாகச் சுவைத்து எழுதியிருக்கின்றனர். 17 ஆம் நூற்றாண்டிலிருந்து, தாஜ்மகாலைப்பற்றிப் பல நூல்கள் ஐரோப்பிய மொழிகளில் எழுந்த வண்ணம் உள்ளன.

தாஜ்மகாலை நேரில் கண்ட பெரினியர் என்ற பிரெஞ்சுக்காரர், அக்கலைக் கோவிலைக் கண்ட போது நான் ஓர் இந்தியனாகவே மாறிவிட்டேன், தாஜ்மகால் உலக விந்தைகளில் ஒன்று என்று எல்லாரும் சொல்லுகிறார்கள். நான் கூறுகின்றேன்! அது உலக விந்தைகளில் தலைசிறந்தது!” என்று மெய்ம்மறந்து கூறுகிறார். ஹீபர் என்ற பாதிரியார், “தாஜ்மகாலில் சிற்பக்கலை நுணுக்கம் காணப்படாத இடமே இல்லை. ஐரோப்பியக் கட்டடக் கலைக்கு இஃது ஓர் அறைகூவல்!” என்று வியந்து பாராட்டுகிறார்.

தாஜ்மகாலைக் கண்டு பொறாமைப்பட்ட வெள்ளையர்களும் உண்டு. தங்களுடைய நாட்டில் இத்தகைய கலைக்கோவில் இல்லையே என்ற ஏமாற்றமே அவர்களுடைய பொறாமைக்குக் காரணம். அப்பொறாமைக்காரர்களால் கூடத் தாஜ்மகாலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவ்வாறு பாராட்டப் புகுந்த ஒரு வெள்ளையர், “பண்டைய கிரேக்க நாட்டுச் சிற்பங்களுக்குத் தாஜ்மகால் ஈடாகாது என்றாலும், இது உலக விந்தைகளுள் ஒன்று என்பதில் ஐயமில்லை!” என்று தம்மை மறந்து கூறுகிறார். தாஜ்மகாலை நேரில் கண்ட அமெரிக்க அறிஞர் ஒருவர் கற்பனை நயத்தோடு பாராட்டுகிறார். “தாஜ்மகால் வானத்தில் தவழும் ஒரு புகை ஓவியம் போலவும், நிலவைப் போலவும் காட்சியளிக்கிறது. அதன் உச்சியில் காணப்படும் வளைவுக் கோபுரங்கள் வெள்ளிக் கொப்புளங்களைப் போல் காணப்படுகின்றன” என்று கூறுகிறார்.

ஹாவல் என்ற மற்றோர் ஐரோப்பியர், “தாஜ் மகால் காண்பவரின் உள்ளத்தில் உணர்ச்சி வெள்ளத்தைக் கொட்டுகிறது; இதற்கு முன் ஒருவன் எண்ணிப்பார்க்காத உயர்ந்த கற்பனைகளையும் சிந்தனைகளையும் தூண்டி விடுகிறது. கலைக்குக் கருவூலமாக விளங்கும் இவ்வொப்பற்ற மாளிகை, இந்திய நாட்டுப் பெண்ணினத்தின் பெருமைக்கும், அழகுக்கும் படைக்கப்பட்ட காணிக்கையாகும். இவ்வுயரிய கலைக்கோவில் எழுவதற்குக் காரணமாக விளங்கிய பெண்மையை நான் நாவார வாழ்த்துகிறேன்!” என்று கூறுகிறார். தாஜ்மகாலின் சிறப்பைப்பற்றி இன்னும் எவ்வளவோ அரிய கருத்துக்களை யெல்லாம் மேலை நாட்டறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.

‘கல்லால் எழுந்த காவியம்’ என்று நம் நாட்டவராலும், மேலை நாட்டறிஞராலும் போற்றப்படும் இக் கலைக்கோவிலின் சிறப்பை, வந்த புதிதில் ஆங்கிலேயர் உணரவில்லை. தமது குடியேற்ற நாடான இந்திய நாட்டின் செல்வத்தைச் சுரண்டுவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்த ஓர் ஆங்கிலக் கவர்னர் ஜெனரல், தாஜ்மகாலைப் பிரித்து அதன் சலவைக் கற்களை விலைக்கு விற்றுப் பணமாக்க விரும்பினார். வெளிநாட்டு நிறுவனம் ஒன்றனுக்கு நூற்றைம்பதாயிரம் ரூபாய்க்கு ஏலத்திலும் விற்றுவிட்டார்.

இக் கொடுஞ் செயலை உணர்ந்த இந்திய மக்கள் கொதித்தெழுந்தனர். நாட்டில் கிளம்பிய பேரெதிர்ப்பைக் கண்ட அவ்வாங்கில ஆளுநர் பிறகு அத்திட்டத்தைக் கைவிட்டார். நல்ல வேளை! தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போயிற்று. அன்று மட்டும் இந்திய மக்கள் உணர்ச்சியற்றவர்களாக இருந்திருப்பார்களேயானால், தாஜ்மகாலினால் நாம் இன்று அடைந்திருக்கும் கலைப்புகழ் மண்ணோடு மண்ணாயிருக்கும்.

தாஜ்மகால் கட்டப்பட்டு முந்நூற்றுப் பதினாறு ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கட்டும் பணியில் எவ்வளவு பேர் ஈடுபட்டார்களோ, அதைவிட இதை அழியாமல் காக்கும் பணியில் மிகப் பெரும் தொகையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பெரும் கலைச் செல்வத்தை இந்திய நாட்டுத் தொல்பொருள் ஆராய்ச்சியினர் தம் கண்ணின் கருமணியாய்க் காத்து வருகின்றனர். இதைப் பாதுகாத்துப் பேண ஆங்கில அரசினர் இரண்டு லட்சம் ரூபாய் செலவிட்டனர். இந்திய நாடு விடுதலை பெற்ற பின்னர், நமது அரசியலார் பதினாறு இலட்சம் ரூபாய் செலவிட்டுள்ளனர். ஆங்கில அரசியலார் கி.பி. 1810ஆம் ஆண்டிலும், 1864 ஆம் ஆண்டிலும், 1874 ஆம் ஆண்டிலும் இதைப் பழுது பார்த்தனர்; கி. பி. 1930 ஆம் ஆண்டில் இந்திய நாட்டுக் கட்டடக் கலைஞர்களையும், பொறியியல் வல்லுநர்களையும் ஒன்று கூட்டி ஒரு குழு அமைத்துத் தாஜ்மகாலை நன்கு ஆராய்ந்து பழுது பார்த்தனர். இந் நிகழ்ச்சிகள் யாவும் ஆங்கிலேயரின் ஆட்சிக் குறிப்புகளில் காணப்படுகின்றன.

தாஜ்மகாலின் அழகுச் சிறப்புக்குக் காரணமாக விளங்குவது அதைச் சூழ அமைந்திருக்கும் சொக்குப் பச்சைத் தோட்டமே. இத் தோட்டம் உயர்ந்ததும், குட்டையானதுமான பசிய மரக் கூட்டங்களைத் தன்னகத்தே கொண்டது. குலுங்கிச் சிரிக்கும் கொத்து மலர்ச் செடிகளையும், பொங்கிப் பாயும் செயற்கை நீரூற்றுக்களையும் எங்கணும் கொண்டது. இவ்விள மரக்காவின் நடுவில், தன் பளிக்குருவம் காட்டித் தலை நிமிர்ந்து நிற்கும் இக் கலைக்கோவில், பச்சைக் கம்பளத்தின் நடுவே கொட்டி வைத்த முத்துக் குவியல் என்று சொன்னால் மிகப் பொருத்தம். இப் பசுமைச் சூழல் தாஜ்மகாலின் அழகைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டத் துணைபுரிகின்றது.

ஆங்கில ஆட்சியின் போது அறுபதாண்டுக் காலம் இத் தோட்டம் கவனிப்பாரற்று அழிந்து கிடந்தது. இத்தோட்டம் அழிவுற்றதும் தாஜ்மகாலின் அழகில் செம்பாதி அழிந்து விட்டது என்று கூறலாம். நம் நாடு விடுதலையடைந்த பிறகு நம் நாட்டு அரசியலார் அருமுயற்சி செய்து, பெரும் பொருட் செலவில் இத்தோட்டத்திற்குப் புத்துயிர் வழங்கினர். இக்காவனம் இன்று கண்ணைக் கவரும் பூவனமாகக் காட்சியளித்துக் கண்டவர் உள்ளத்தைச் சுண்டியிழுக்கிறது.

தாஜ்மகாலைப் பழுது பார்க்கும் வேலை, அது கட்டி முடிக்கப் பெற்ற நான்காம் ஆண்டிலேயே முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டது. கி. பி. 1652 ஆம் ஆண்டில் கட்டடத்திற்குக் கீழே பூமிக்குள் அமைக்கப்பட்டிருந்த அறைகளில் அடிக்கடி வெடிப்பு ஏற்பட்டது. தாஜ்மகாலின் கடைக்கால் அடி நில நீரூற்றுக்கள் வரை ஆழமாக அமைந்திருந்தது. யமுனை ஆற்றில் ஏற்பட்ட மிகுந்த வெள்ளப்பெருக்கே இவ் வெடிப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று அக்காலக் கட்டடக் கலைஞர்கள் கருதினர். இதை முதன் முதலில் கண்டவர் ஔரங்கசேப்பே. அவர் இதுபற்றி ஷாஜகானுக்கு எழுதித் தெரிவித்தார். பிறகு அவ் வெடிப்புகள் பழுது பார்க்கப்பட்டன. இச் செய்தி ‘பாத்ஷா நாமா’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாஜ்மகாலுக்கு ஏற்படும் பழுதுகளில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது, அதன் கற்களில் ஏற்படும் வெடிப்புகளே. இவ் வெடிப்புகள் இருவிதக் காரணங்களால் ஏற்படுகின்றன. தட்ப வெப்ப நிலைகளின் மாறுதலால் கற்களில் ஏற்படும் சுருக்கம் வெடிப்பை உண்டாக்குகிறது. இக் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இருப்புக் கப்புகள் துருப்பிடிப்பதாலும் கற்களில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. வெடித்த இச் சலவைக் கற்களை அகற்றி விட்டுக் குற்றமற்ற தூய பளிங்குக் கற்களை அவ்விடத்தில் பொருத்திப் பழுது பார்க்கின்றனர். கற்களைப் பொருத்துவதற்காகப் புதுவிதச் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்துகின்றனர். சலவைக் கல்லைத் தூளாக்கி எரித்து, அந்த எரிபொருளைக் கொண்டு இச்சாந்து செய்கின்றனர். இச் சாந்தில் போதிய அளவு இளக்கம் ஏற்படுவதற்காக ரூமிமஸ்தகி என்ற ஒருவகைக் கோந்தையும், பதாசா என்ற வெல்லப் பாகையும், பேல்கரி என்ற ஒரு வகைக் கொடியின் சோற்றையும் கலக்கின்றனர். கட்டடக் கலை பற்றிய இந் நுணுக்கம் பண்டைய நூல்களில் விவரமாகக் கூறப்பட்டிருக்கிறது. இம் முறையைப் பயன்படுத்துவதனால் கட்டட அமைப்பிற்குள் எந்த விதமான மாசுமறுவோ, கேடு தரும் பொருளோ புகுந்து கட்டடத்தைச் சீர்குலைத்து விடாமல் காக்க முடிகிறது.

கி. பி. 1874 இல் தாஜ்மகாலின் விமானத் (dome)திலும், அதைத் தாங்கும் கழுத்தி (drum) லும் பல கற்கள் வெடித்துப் பழுது நேர்ந்தது. விமானத்தின் அமைப்புச் சீர்குலைந்து விட்டதோ என்று கட்டடக் கலைஞர்கள் ஐயுற்றனர். விமானத்தின் மேற்புறத்தில் பதிக்கப் பெற்றிருந்த சில பளிங்குக் கற்களில் வெடிப்பு ஏற்பட்டது. அவ் வெடிப்புகள் வழியாக மழைநீர் உள்ளே இறங்கி ஊறிச் சொட்டுச் சொட்டாக உள்ளே விழத்தொடங்கியது. அவ்வாறு சொட்டும் மழைநீர் மும்தாஜின் கல்லறைமேல் விழத் தொடங்கியது. இக் காட்சியைக் கண்ட மக்கள் ஷாஜகான், வடிக்கும் கண்ணீரே மும்தாஜின் கல்லறை மேல் விழுவதாகப் பேசிக் கொண்டனர். கட்டடக் கலைஞர்கள் இவ்விமானத்தை நன்கு ஆராய்ந்தனர். மழை நீரில் ஊறிய காரணத்தால், விமானத்தின் ஒரு பகுதி உப்பேறி வலுவற்றிருந்தது. இவ்வுப்பை அகற்றுவதற்காகக் கட்டடக் கலைஞர்கள் புதிய முறை ஒன்றைக் கையாண்டனர். பத்துப் பங்கு மணலும், ஒரு பங்கு சிமெண்டும் கொண்ட சத்துக் குறைந்த கலவையை விமானத்தின் உட்புறத்தில் பூசினர். இக் கலவை உப்பை உறிஞ்சும் ஆற்றல் பெற்றது இதைப் பன்முறை மாற்றி மாற்றிப் பூசி விமானத்திலுள்ள உப்பை எடுத்துவிட்டனர். பிறகு வலிமையான சிமெண்டுக் கலவையால் உட்பக்கத்தைப் பழுது பார்த்தனர். விமானம் மீண்டும் உறுதி பெற்றுவிட்டது.

அளவில் மிகப் பெரிதாக இருக்குமொரு கட்டடம் பல நூறு ஆண்டுகள் கழிந்த பின்னும், தன்னுடைய கடைக்கால் சிறிதும் தளராமல் இருப்பது. வியப்பிற்குரியதல்லவா? எனவே நம் நாடு விடுதலை பெற்ற ஆண்டாகிய கி.பி. 1947 இல் நம் நாட்டுக் கட்டடக் கலை வல்லுநர்கள் இதன் கடைக்காலை ஆராய விரும்பினர்; கடைக்காலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கடைக்கால் பரப்பிலும் நூற்று நான்கு அடையாளக் குறிகளை (bench marks) அமைத்து அவற்றின் மட்டத்தைக் குறித்துக் கொண்டனர்; திரும்பவும் இதே சோதனைகளைக் கி. பி. 1953 ஆம் ஆண்டிலும், 1958 ஆம் ஆண்டிலும் செய்தனர்; கி. பி. 1952 ஆம் ஆண்டில் இதன் கடைக்கால் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் இன்றும் சிறிதுகூட மாறாமல், தளராமல் இருப்பதைக் கண்டறிந்தனர்; மேலும் இக் கட்டடத்தின் நாற்புறங்களிலும் உள்ள கூம்புக் கோபுரங்களும் (Minarets) தம் நிலையிலிருந்து சாயாமல் இருக்கின்றனவா என்றும் ஆராய்ந்து தெளிந்தனர்.

காலப் போக்கில் எவ்வளவு உயர்ந்த கட்டடத்திலும் வெடிப்புகள் தோன்றுவது இயற்கையே. தட்ப வெப்ப நிலையால் தாஜ்மகாலில் தோன்றும் சிறு வெடிப்புகள் மேலும் விரிகின்றனவா என்பதை மெல்லிய கண்ணாடித் துண்டுகளை அவ் வெடிப்புகளில் ஒட்டி ஆராய்கின்றனர். வெடிப்பு மேலும் விரிந்தால் இக் கண்ணாடித் துண்டுகள் உடைந்து விடும். இவ்வாறு இருநூற்று நாற்பத்தொன்பது கண்ணாடித் துண்டுகளைப் பொருத்தித் தாஜ்மகாலின் வெடிப்புகளே ஆராய்ந்தனர். ஒரு துண்டு கூட உடையவில்லை. இதனால் வெடிப்புகளில் நெகிழ்ச்சி ஏற்படவில்லை என்பது புலனாகிறது.

இவ்வாறு பல்லாற்றானும் ஆராய்ந்து தாஜ்மகாலின் உறுதியை நம் நாட்டுக் கட்டடக் கலை வல்லுநர்கள் உறுதி செய்திருக்கின்றனர்; இன்னும் ஆயிரம் ஆண்டானாலும் இதைச் சிதையாமல் காப்பாற்ற முடியும் என்று நம்புகின்றனர்.