உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டடமும் கதையும்/பிரமிடு

விக்கிமூலம் இலிருந்து

3. பிரமிடு

உலகில் மிகவும் பழமையான நாகரிகம் என்று குறிப்பிடத்தக்கவை சிலவே. சங்கம் வைத்து மொழி வளர்த்த தமிழர் நாகரிகம் மிகத் தொன்மையானது என்று நாம் பெருமைப்படுகிறோம். பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து சென்று கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து, அரேபியா முதலிய நாடுகளுடன் வாணிகம் செய்தனர் என்பதைச் சங்க இலக்கியங்களின் மூலமாகவும், கிரேக்க, உரோம ஆசிரியர்களின் பிரயாணக் குறிப்புகள் மூலமாகவும் அறியலாம். பழம் பெரும் கடற்றுறைமுகப்பட்டினமான பூம்புகாரில் வெளிநாட்டு வணிகர்கள் கடற்கரையின் ஓரத்தில் கண் கவர் மாளிகைகளை எழுப்பி அவற்றில் வாழ்ந்தனர்.

ஐரோப்பாக் கண்டத்து மக்கள் நாகரிக நுட்பம் தெரியாது வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் மூவேந்தர்களின் பண்பட்ட ஆட்சி நிலவியது. இயல், இசை, நாடகம் சிறப்புற்று விளங்கின. கட்டடக்கலையும் பிற கலைகளும் போற்றற்குரிய வளர்ச்சியைப் பெற்றிருந்தன.

இத்தகைய பழம்பெரும் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற் கிணையான மிகத்தொன்மையான நாகரிகம் ஒன்று உண்டு. அதுதான் எகிப்திய நாகரிகம். அந்நாகரிகம் சாக்ரட்டீசு, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்கள் அரும்பாடு பட்டு வளர்த்த கிரேக்க நாகரிகத்திற்கும் முற்பட்டது. சீசர் போன்ற பெருவீரர்கள் கடல்கடந்து பரப்பிய உரோம நாகரிகத்திற்கும் முற்பட்டது. உலகத்தையே கட்டியாண்ட உரோமானியர்கள் எகிப்து நாட்டிற்குள் காலடி எடுத்து வைத்த பொழுது, அங்கு விண்ணையிடித்து நிமிர்ந்து நின்ற பிரமிடுகளையும், மாபெரும் கோவில்களையும், கலை நுணுக்கம் மிக்க சிற்பங்களையும், வானளாவிய அழகுத் தூண்களையும் கண்டு வியப்படைந்தனர். அவ்வழகுச் சின்னங்களைத்தான் அவர்களால் காண முடிந்ததே தவிர, அம்மாபெரும் நாகரிகத்தின் சிற்பிகளான அம்மக்களைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை. உரோமானியர்கள் காலடி வைப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பாகவே அந்தாகரிகம் அழிந்துபட்டது.

எகிப்து நாட்டு நாகரிகச் சின்னங்களை நேரில் கண்டு வியந்த பண்டைக் காலத்து மக்கள், “இந் நாகரிகம் மிகவும் பழமையானது. இந்நாகரிகத்தை உருவாக்கிய மக்கள் கட்டடக் கலையிலும், சிற்பக் கலையிலும் வல்லவர்கள்; பாறைகளைப் பிளந்தெடுப்பதிலும், பளுவான பெரும் பொருள்களை இடம் பெயர்த்துக் கொண்டு செல்வதிலும், பெரும் பாறைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி மலைபோன்ற கோபுரங்களை எழுப்புவதிலும் ஆற்றல் படைத்தவர்கள்” என்று மட்டுமே எண்ணியிருந்தனர். ஆனால் இந்நாகரிகத்தின் தலைவர்களான பாரோ மன்னர்களைப்பற்றியும், அவர்கள் சிறப்புக்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாத நிலையில் இருந்தனர்.

இருபதாம் நூற்றாண்டு மக்களான நாம், உரோமானியர்களை விட இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பட்டவர்கள் என்றாலும், பாரோ மன்னர்களைப் பற்றியும், அவர்களுடைய பழம் பெரும் நாகரிகத்தைப்பற்றியும் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. பத்தொன்பது-இருபதாம் நூற்றாண்டுகளில் புதை பொருள் ஆராய்ச்சி சிறப்புறத் தொடங்கியது. நிலத்திற்கடியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் புதையுண்டு மறைந்த பொருள்களையெல்லாம் தோண்டி எடுத்துப் பழமையான நாகரிகச் சிறப்புக்களையெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

பாரோ மன்னர்களின் எகிப்திய நாகரிகம் அழிந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும், அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்பங்களும், தூண்களும், நாகரிகச் சின்னங்களும் நிலத்திற்குள் இன்றும் மறைந்து கிடக்கின்றன. புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்று அவற்றையெல்லாம் தோண்டி எடுத்துள்ளனர். தோண்டியெடுக்கப்பட்ட அச்சிற்பங்களெல்லாம் சிறிது கூடப் பழுதுபடாமல், சிற்பியின் கையிலிருந்து புதிதாக வெளிப்பட்டவை போல் தோன்றுகின்றன. எகிப்து நாட்டில் படிந்திருக்கும் மணலும், தட்பவெப்ப நிலையுமே இதற்குக் காரணம்.

எகிப்து நாட்டில் எந்த இடத்தைத் தோண்டினாலும், பழங்காலச் சின்னங்களைக் காணலாம். இதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. உலகில் வாழ்ந்த மக்கள் எல்லாரும் இறப்பிற்குப்பின் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்பினர். தமிழ் மக்களாகிய நாம்கூடச் சுவர்க்கம், நரகம் இவற்றில் நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறோம். இறந்த பிறகு ஒருவன் தான் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப நன்மையோ, தீமையோ வேறொரு உலகில் சென்று அடைவதாக நம்புகிறோம். எகிப்தில் வாழ்ந்த பண்டைய மக்கள், ஒருவன் இறந்த பிறகு அவனுடைய ஆவி வசதியோடு வாழ்வதற்கு வேண்டிய தேவைப் பொருள்களையும் அவன் பிணத்தோடு வைத்துப் புதைப்பது வழக்கம். ஒரு பாரோ மன்னன் இறந்தால் தேர், குதிரை, பல்லக்கு, ஆடை, அணி, அளவற்ற செல்வம் ஆகியவற்றையும் அவனுடன் வைத்துப் புதைப்பார்கள்; செல்வராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவரவர் தகுதிக்கு ஏற்ற முறையில் தேவையான பொருள்களை வைத்துப் புதைப்பார்கள். இவ்வாறு கோடிக்கணக்கான மக்கள் எகிப்து மண்ணில் புதைக்கப்பட்டனர். இக்காரணத்தால் எகிப்து நாட்டில் எந்த இடத்தைத் தோண்டினாலும் பண்டைய நாகரிகச் சின்னங்கள் தென்படுகின்றன.

கிரேக்க நாட்டு வெற்றி வீரனான அலெக்சாந்தரும் உரோம நாட்டுத் தலைவனான சீசரும் எகிப்தை வென்றபொழுது, அந்நாட்டின் நாகரிகச் சின்னங்களைக் கண்டு வியப்படைந்தார்களே யல்லாமல், அவைகளைப்பற்றி ஆராய வேண்டும் என்று எண்ணியதில்லை. ஆனால் பிரெஞ்சு நாட்டுப் பேரரசனான நெப்போலியன் எகிப்து நாட்டின்மீது படையெடுத்துச் சென்றபோது ஆராய்ச்சியாளர் பலரையுயும் உடன் அழைத்துச் சென்றான். அவ்வாராய்ச்சியாளர்கள் எகிப்து நாட்டில் தங்கி, அந்நாட்டின் பழமையான நாகரிகத்திற்குக் காரணமாக விளங்கிய சின்னங்களையெல்லாம் ஆராயத் தொடங்கினர்.

தேனான் என்ற ஆராய்ச்சியாளர், பெரு முயற்சி எடுத்துக் கொண்டு தம் ஆய்வுகளை நிகழ்த்தினார்; தம் ஆராய்ச்சிகளின் பயனாக வெளிப்பட்ட உண்மைகளை யெல்லாம் ஒன்று திரட்டி இருபத்து நான்கு பகுதிகளடங்கிய ஒரு பெரு நூலாக எழுதி வெளியிட்டார். “எகிப்து நாட்டின் வருணனை” என்பது அந்நூலின் பெயர் ஆகும். அந்நூல் வெளியானவுடன் எகிப்து, உலக மக்களின் கவனத்தைக் கவரத் தொடங்கியது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் எகிப்து நாட்டில் வந்து கூடினர். பழமைச் சிறப்பைப் பறைசாற்றிய வண்ணம் நிமிர்ந்து நிற்கும் அச்சின்னங்கள் கண்டோரைப் பெரு வியப்பில் ஆழ்த்தின.

எகிப்து மணலில் புதைந்து கிடந்த எண்ணற்ற சிற்பங்களும், விண்முட்டும் தூண்களும், பரப்பிலுயர்ந்த கற்கோவில்களும், பார்த்தவர்களின் உள்ளத்தை மலைக்க வைக்கும் பிரமிடுகளும், அப்பிரமிடுகளுக்குள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பாரோ மன்னர்களின் பிணங்களும் அவர்களுடைய அன்றாட உரையாடல்களாகி விட்டன. எல்லா நாட்டு மக்களும் எகிப்து நாட்டுப் பழஞ்சின்னங்களைத் தத்தம் பொருட்காட்சி நிலையங்களில் கொண்டுவந்து சேர்க்கப் போட்டியிட்டனர்.

எகிப்து நாட்டைப் பழம்பொருள்களின் சுவர்க்கம் என்று குறிப்பிடலாம். அங்குக் காணப்படும் பழம் பொருள்களில் மக்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்வது பிரமிடுதான், பிரமிடுகளை நாம் படத்தில் பார்த்திருக்கிறோம். அவைகளைப் படத்தில் பார்த்தால், அவற்றின் சிறப்பு நமக்குத் தெரியாது. அவற்றைக் கண்ணெதிரில் கண்டால்தான், அவைகளுடைய சிறப்பு நமக்குப் புலப்படும். எகிப்து நாட்டில் வந்து காலடி வைத்தவுடன், பிரமிடைப் பார்த்ததும் எல்லாருடைய உள்ளத்திலும் புல கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கிளம்பும்.

எகிப்து நாட்டை ஆண்ட பாரோ மன்னர்கள் இவ்வளவு பெரிய செயற்கை மலைகளை நிறுவக் காரணம் என்ன? கல்லே கிடைக்காத பாலை நிலத்தில் மாபெரும் பாறைகளை எவ்வாறு கொண்டு வந்தார்கள் ? பெரும் பாறைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அக்காலத்தில் அவர்களால் எப்படி அடுக்க முடிந்தது? இம்மலைகளை உருவாக்க எவ்வளவு மக்கள் இடையறாது உழைத்திருப்பார்கள் ? எவ்வளவு பொருள் செலவாகி இருக்கும்? என்பன போன்ற கேள்விகள் தோன்றும். அங்குள்ள பிரமிடுகளில் மிகவும் பெரியது ஏறத்தாழ 137½ மீட்டர் உயர முடையது ; ஏறத்தாழ 805 மீட்டர் சுற்றளவுடையது. இதன் பருமனை எண்ணும்போது, உலக விந்தைகளில் இதுவும் ஒன்று என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

ஒரு மனிதன் இறந்தவுடன், அவனுடைய ஆவிக்கும் உடலுக்கும் மீண்டும் எந்தவிதத்தொடர்பும் இல்லை என்பது நம்முடைய நம்பிக்கை. ஆனால் பண்டைய எகிப்தியரின் கொள்கை அதற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். ஒருவன் இறந்தவுடன் அவனுடைய ஆவி, மறு உலகம் செல்வதில்லை யென்பதும், அவனுடைய உடலையே சுற்றிக் கொண்டிருக்கும் என்பதும் அவர்களுடைய கொள்கை. ஆவி பிரிந்ததும் உடல் அழிந்துவிடும் என்று நாம் கருதுகிறோம். அவர்கள் அவ்வாறு கருதவில்லை. உடல் உலகில் எதுவரை அழியாமல் இருக்கிறதோ, அதுவரை ஆவிக்கும் அதற்கும் தொடர்புண்டு என்று கருதினர். உடலின் ஒரு பகுதி அழிந்தால் ஆவியின் ஒரு பகுதி அழிகின்றதென்றும், உடல் முழுதும் அழிந்தால் ஆவியும் அடியோடு அழிந்து விடுகின்றதென்றும் அவர்கள் நினைத்தனர். எனவே உடலை அழியாமல் பாதுகாத்தால், ஆவியையும் அழியாமல் பாதுகாக்க முடியும் என்று அவர்கள் கருதினர்.

உடலை எவ்வாறு அழியாமல் பாதுகாப்பது என்பதைப்பற்றி அவர்கள் சிந்தித்தனர்; ஒரு விதத் தைலத்தைக் கண்டுபிடித்தனர். அத்தைலத்தில் பிணத்தைப் போட்டுப் பதப்படுத்தினர். அவ்வாறு பதப்படுத்தப்பட்ட சடலங்கள் நான்காயிரம் ஆண்டுகள் ஆகியும் இன்றும் அழியாமல் இருக்கின்றன. அவ்வுடல்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது அவர்களது அடுத்த கடமையாயிற்று. அதற்காக மாபெரும் பிரமிடுகளை எழுப்பி அவற்றுக்குள் அவ்வுடல்களை வைத்து மூடினர். பிரமிடு எகிப்தியர்களின் குறிக்கோளாக மாறிவிட்டது. ஏழையாக இருந்தால் பூமிக்குள் ஓர் உறுதியான கல்லறை அமைத்து, அதற்குள் அவனுடைய உடலைப் பதப்படுத்தி வைத்தனர். செல்வர்கள் பெரிய கல்லறைகளை எழுப்பினர். எகிப்து நாட்டை ஆண்ட பாரோ மன்னர்கள் தங்களைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதி வந்தனர். புனிதமான தம் உடலை அழியாமல் காக்கப் பெரிய மலைகளை எழுப்பினர்.

குபு என்ற பாரோ மன்னன், தான் இறந்தபின் தன் உடலைப் பேணிப்பாதுகாப்பதற்காக எழுப்பிய பிரமிடு குறிப்பிடத்தக்கது. அதைக் கட்ட முப்பது ஆண்டுகள் பிடித்தனவாம். பல்லாயிரக் கணக்கான எகிப்து மக்கள் அப்பணியில் ஈடுபட்டனர். அதைக் கட்டுவதற்கு நிறையப் பொருள் வேண்டுமல்லவா? அதனால் தாங்க முடியாத கொடிய வரிகளை விதித்து நாட்டு மக்களின் செல்வத்தை அவன் உறிஞ்சினான். தன்னுடைய உடலையும், செல்வத்தையும் கள்வர் கவர்ந்து செல்லமுடியாத படிமறைவு வழிகளை அதில் அமைத்தான். எகிப்து நாட்டுச் சிற்பிகள் தம் நுண்ணறிவையெல்லாம் பயன்படுத்தி இப்பிரமிடை எழுப்பினர்.

ஒருவன் இறந்த பிறகு அவன் உடலைச்சுற்றித் திரியும் ஆவிக்கு வாழ்க்கையுண்டு என்று எண்ணிய எகிப்தியர் இவ்வுலகில் வாழும் மக்களுக்கு ஏற்படும் இன்ப துன்பங்கள் ஆவிகளுக்கும் ஏற்படுகின்றன என்று கருதினர். மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை யெல்லாம் பிரமிடுகளில் பாரோ மன்னர்கள் வைத்துப் புதைத்தனர், பட்டாடைகள், பொன் அணிகள், வைர மாலைகள் போன்ற ஆடம்பரப் பொருள்களையும் வைத்துப் புதைத்தனர். அரசனுடைய ஆவி அமர்ந்து களைப்பாற அரியணையும், படுத்துறங்கப் பஞ்சணையும் உடன் வைத்தனர். இன்னும் வேறு தேவைப் பொருள்களான ஆடு, மாடு, குதிரை, தானியம், பொன் ஆகியவற்றையும் உடன் வைத்து மூடினர். அரசனின் பிரிவைத் தாங்கமுடியாத நெருங்கிய உறவினரும், கணவன் ஆவியோடு இன்பவாழ்வு நடத்த விரும்பிய மனைவியரும், அறிவுரை கூறும் அமைச்சரும்கூடப் பிரமிடுகளில் வைத்து மூடப்பட்டனர்.

ஒவ்வொரு பிரமிடுக்குக் கிழக்கிலும் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. அக்கோவில்கள் பிரமிடுகளைவிடப் புனிதமான இடங்களாகக் கருதப்பட்டன. உலகில் வாழும் ஒரு மனிதன் பசியால் வாடுவது போலவே, ஆவிகளும் வாடுகின்றன என்று எகிப்தியர் கருதினர். எனவே நாள்தோறும் மூன்று வேளையும், அறுசுவை உண்டியை அக் கோவில்களில் வைத்துப் படைப்பர், இறந்தவரின் ஆவி அவ்வுணவை ஏற்றுக்கொள்கிறது என்று நம்பினர். ஒவ்வோர் எகிப்திய மன்னனும் தான் இறப்பதற்கு முன்பாகவே, தன் உடலைப் பாதுகாப்பதற்கு வேண்டிய பிரமிடையும், அதன் கிழக்கில் ஒரு கோவிலையும் எழுப்பிவிடுவது வழக்கம்; அதனுடன் தனக்குரிய விளை நிலத்தின் ஒரு பகுதியை, அக்கோவிலுக்கு எழுதிவைப்பான்; அந்நிலத்தில் விளையும் தானியங்களைக்கொண்டு, இறந்த பிறகு தன் ஆவிக்கு உணவு படைக்க வேண்டும் என்று அவன் விரும்பினான்; இச்செயலைப் பொறுப்பாகச் செய்ய ஒரு பணியாளையும் அமர்த்திவிடுவான். அப்பணியாளும், அவன் பரம்பரையினரும் இப்பணியைத் தப்பாமல் செய்யக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

பாரோ மன்னர்களின் பிரமிடுகளை அடுத்தாற் போல் அவர்களுடைய அமைச்சர் பிரதானியர் முதலியோரின் சமாதிகளும் எழுப்பப்பட்டுள்ளன. இவைகள் உருவத்தால் பிரமிடுகளை ஒத்திருந்தாலும் அளவால் சிறியவை. இச்சமாதிகளின் உள்ளே நுழைந்து பார்த்தால், சுவர்களில் அழகான வண்ண ஓவியங்களைக் காணலாம். அவ்வோவியங்கள் நாட்டுப்புற வாழ்க்கையை விளக்குவனவாகக் காட்சியளிக்கின்றன. நிலத்தை உழுதல், பண்படுத்தல், விதை விதைத்தல், பயிர் வளர்த்தல், தானியங்களை அறுத்தல், அடித்தல் போன்ற படங்களும், உணவு சமைப்பது போன்ற ஓவியங்களும் காணப்படுகின்றன. ஆடு, கோழி போன்ற உயிரினங்களை வளர்ப்பது போலவும், அவற்றைக் கொன்று உணவு சமைப்பது போலவும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவற்றைக் காணும்போது புதிய உண்மை ஒன்றும் புலப்படுகிறது. இறந்தவர்களின் ஆவி, சுவரில் தீட்டப்பட்டுள்ள இவ்வுணவுப் பண்டங்களைக் கண்ணால் பார்த்தாவது தம் பசியைத் தீர்த்துக் கொள்ளலாமன்றோ ?

எகிப்தியர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டடக் கலையில் வல்லவர்களாக விளங்கினர் என்பதற்குப் பிரமிடுகள் சான்றுகளாக விளங்குகின்றன. இக்காலத்தில் மாபெரும் கட்டடங்களைக் கட்டுவதற்குப் பல கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இக்காலத்தில் உள்ள புதிய கருவிகளைப் போன்று, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இல்லை.

நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள பெருங் கற்களை மேலே கொண்டு செல்ல ‘உயரத் தூக்கி’கள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன. பண்டைக் காலத்தில் எகிப்தியர்கள் மிக எளிய முறைகளைக் கையாண்டு, பெருங்கற்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் சென்றனர். இம்முறை, ஒரு பிரமிடின் உட்சுவரில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. வானளாவிய ஒரு பெருஞ்சிலை. அச்சிலை பல நூறு டன் எடையுள்ளது. அதை உருளைகளின் மேல் ஏற்றி நூற்று எழுபத்திரண்டு பேர் அடங்கிய ஒரு மக்கட் கூட்டம் மணலின்மேல் இழுத்துச் செல்வதுபோல் அச்சிலை அமைந்துள்ளது. பெரும் பாறைகளை இழுத்துச் செல்லவும், மேலே தூக்கவும் அளவு கடந்த மக்களாற்றலே அவர்களால் பயன்படுத்தப்பட்டது.

எகிப்து நாட்டில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கல் தச்சர்களாகவும், கூலிகளாகவுமே வாழ்ந்தார்கள் எனலாம். அவர்களுடைய வயிற்றுக்கு அரைவயிற்றுச் சோறு வழங்கப்பட்டது. பாரோ மன்னர்களுக்குப் பிரமீடு எழுப்பும் வேலை, வாழ்க்கையின் குறிக்கோள்; மக்களுக்கோ அது வாழ்க்கைப் பிழைப்பு. மக்கள் மாடுகளைப்போல் உழைத்தனர். மன்னர்களோ மக்களை இப்பணியில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தினர். மன்னனின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். கட்டடப் பணியை மேற்பார்வை செய்த அரசாங்க அதிகாரிகள் மிலாறினால் கூலிகளை அடித்துத் துன்புறுத்தினர். ஒரு தனி மனிதன் விருப்பத்திற்காகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குருதியை வடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சுவீடன் நாட்டில் ஆல்பிரெட் நோபெல் என்ற விஞ்ஞானி தோன்றி, வெடி மருந்து கண்டுபிடித்தார் என்று நாம் படித்திருக்கிறோம். அவ்வெடி மருந்தின் துணை கொண்டு இக்காலத்தில் பெரும் பெரும் பாறைகளைப் பிளந்து தூளாக்கிவிடுகிறோம். பண்டைக் காலத்தில் எகிப்து நாட்டில் இதுபோன்ற வாய்ப்பு ஒன்றுமில்லை. அவர்கள் பெரும் பாறைகளைப் பிளப்பதற்கு மிகவும் எளிய ஒரு முறையைக் கையாண்டனர். எந்தப் பாறையைப் பிளக்க வேண்டுமோ அப்பாறையில் துளையிடுவர். அத்துளையில் மர ஆப்புகளைச் சீவி உறுதியாக அடிப்பர். பிறகு நாள்தோறும் அவ்வாப்பில் தண்ணீர் விடுவர். அவ்வாப்பு நீரில் ஊறிச் சிறிது சிறிதாகப் பருக்கும். ஆப்புப் பருக்கத் தொடங்கியதும் பாறையில் பிளவு ஏற்படும். பிறகு தங்களுக்குத் தேவையான அளவு கற்களைப் பிளந்து எடுத்துச் செல்லுவர்.

கற்களோடு போராடுவதே பண்டை எகிப்தியரின் வாழ்க்கையாக இருந்த காரணத்தால் பெரும் பெரும் பாறைகளைக் கையாளுவதில் அவர்கள் மிக்க திறமை பெற்றிருந்தனர். பிரமிடுகளில் பயன்படுத்தப்பட்ட கற்களைவிட மிகவும் பளுவான கற்களைக் கோவில்கள் கட்டுவதில் பயன்படுத்தினர். கோவில்களின் மேற் கூரையாகப் பயன்படுத்தப்பட்ட கற்களும், கோவில்களின் முன்னால் சிற்பக் கலையழகோடு நாட்டப்பட்டிருக்கும் உயர்ந்த தூண்களும், கோவிலின் வாயிலை அலங்கரிக்கும் கண்கவர் சிற்பங்களும் நூற்றுக்கணக்கான டன் எடையுள்ளவை.

பாரோ மன்னர்கள், பிரமிடுக்குள் பிணங்களைப் புதைக்கும் போது அளவற்ற செல்வத்தையும் உடன் வைத்துப் புதைத்தனர் எனக் கண்டோம். இப்பழக்கம் பின் நாட்களில் பெருந் தீமையாக முடிந்தது. செல்வத்திற்கு ஆசைப்பட்ட கள்வர்கள், பிரமிடுகளின் வழிகளை உடைத்து உள்ளே நுழைந்து களவாடத் தொடங்கினர். இதை அறிந்த பாரோ மன்னர்கள் பிரமிடைப் பெரிய அளவில் கட்டுவதைவிடச் சிறியதாகவும், எளிதில் வழியைக் கண்டறிய முடியாதபடி நுட்பமான கட்டடக் கலைத்திறனோடு அமைந்ததாகவும் கட்டத் தொடங்கினர். இச்செயலால், திருடர்களை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால், அப்பிரமிடுகளை எழுப்பிய சிற்பிகளை எவ்வாறு தடுக்கமுடியும்? கட்டட நுட்பம் தெரிந்த சிற்பிகளே பிரமிடுகளைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

இவ்வுண்மையை அறிந்த பாரோ மன்னர்கள் புதியதொரு வழியைப் பின்பற்றத் தொடங்கினர்; தங்களுடைய ஆவிகளை வழிபடுவதற்காகவும், அவைகளுக்கு உணவு படைப்பதற்காகவும் பெரிய கோவில்களைத் தலைநகருக்கருகில் எல்லாருடைய கண்களுக்கும் தெரியும்படி அமைத்தனர்; பிணத்தையும், செல்வத்தையும் ஒருவர் கண்ணுக்கும் தெரியாதபடி தலை நகருக்கு வடக்கே நெடுந் தொலைவில் அமைந்திருந்த ஒரு பள்ளத்தாக்கில் புதைத்தனர், இவ்வாறு செய்வதைப் பாரோ மன்னர்கள் முதலில் தொல்லையாகக் கருதினர்; இறந்தவரின் ஆவி உணவின் பொருட்டு நாள்தோறும் நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டுமே என்று எண்ணி வருந்தினர்; இதனால் முதலில் சிறிது தயக்கம் கூடக் கொண்டனர். ஆனால் வேறு வழியில்லை. இறந்தவரோடு அளவற்ற செல்வத்தைப் புதைக்கும் வழக்கத்தைவிட்டு விட்டால், கள்வர்களும் தங்கள் தீச்செயலை விட்டுவிடுவர். ஆனால் செல்வத்தைப் புதைக்காமலிருப்பதென்பது அவர்களால் முடியாத செயல்.

கி. மு. 1500 ஆம் ஆண்டிலிருந்து பாரோ மன்னர்கள் இப்புதிய பழக்கத்தை மேற்கொண்டனர்; ஐந்நூறு ஆண்டுகள் தொடர்ந்து இவ்வாறு செய்தனர். முப்பது பாரோ மன்னர்களின் பிணங்கள், அளவற்ற பெருஞ்செல்வத்தோடு இப்பள்ளத் தாக்கில் புதைக்கப்பட்டன. பொதுமக்களுக்கு இவ்வுண்மை தெரியாதவாறு மறைக்கப் பாரோ மன்னர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் எப்படியோ இவ்வுண்மை வெளியாகி விட்டது. இறந்த மன்னர்களின் பிணங்களை அடக்கம் செய்த போது, சில முக்கியமான அரசியல் அதிகாரிகளும், உறவினர்களும் உடன் செல்வது வழக்கம். அவர்களுக் கெல்லாம் இவ்வுண்மை தெரியாமற்போகாது. அப்பிணங்களை அடக்கம் செய்வதற்காகப் பூமிக்கடியில் சமாதி எழுப்பவேண்டும். அப்பணியைச் செய்யும் சிற்பிகளுக்கும் அவ்வுண்மை தெரிந்துதான் ஆகவேண்டும். மீண்டும் கள்வர்களின் தொல்லை தொடங்கிற்று.

சமாதிப்பள்ளத்தில் புதைந்து கிடந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதில், கள்வர்களேயன்றி வேறு பலரும் ஈடுபட்டனர். பிணவடக்கத்தின் போது சடங்குகள் செய்த குருமார்களும், அப்பள்ளத்தாக்கின் காவற்பொறுப்பை ஏற்றுக் கொண்ட அதிகாரிகளுமே இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் சமாதிகளை எழுப்பிய சிற்பிகளை வர வழைத்து அவர்களுக்குக் கையூட்டு வழங்கி அவர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டனர். சமாதிப் பள்ளத்தாக்கைக் கொள்ளையடிக்கும் வேலை ஒரு கூட்டத்தாரின் தொழிலாகவே மாறிவிட்டது. இச்செய்தி எப்படியோ பாரோ மன்னர்களின் செவிகளுக்கு எட்டியது. இக்கொள்ளையைத் தடுக்கத் தீவிரமான நடவடிக்கைகளை மேற் கொண்டனர். பள்ளத்தாக்கில் காவலை அதிகப்படுத்தினர். கொள்ளையடிக்க முயற்சி செய்தவர்களைப் பிடித்து ஈவிரக்க மின்றிக் கொன்றனர்.

தாட்மசு என்ற பாரோ மன்னனுடைய பிணம் புதைக்கப்பட்டபோது, சமாதி எழுப்பிய சிற்பிகளைக் கொன்று விட்டனர். அவ்வாறு செய்வதன் மூலம் உண்மை வெளியாகாதவாறு காப்பாற்ற முடியும் என்று எண்ணினர். வேறு சில மன்னர்கள் மிகவும் நம்பிக்கையான ஒரு சிற்பியை மட்டும், சமாதி வேலைக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இவ்வாறு பலவித முறைகளைக் கொண்டு, புதைக்கப்பட்ட செல்வமும், முன்னோர்களின் பிணமும் அழியாதவாறு காக்கப் பெரு முயற்சி செய்தனர் பாரோ மன்னர்கள். ஆனால் என்ன செய்தும், கள்வர்களின் கழுகுக் கண்களிலிருந்து இவை தப்ப முடியவில்லை.

ஒரு முறை சமாதிப் பள்ளத்தாக்கின் காவல் அதிகாரியாகப் பீரோ என்பவன் இருந்தான். வேலியே பயிரை மேய்வது போல், இவனே சமாதிகளைக் கொள்ளையிடத் தொடங்கினான். இத்திருட்டு எப்படியோ வெளியாகி, இறுதியில் மன்னரின் காதுகளையும் எட்டிவிட்டது. பீரோ கைது செய்யப்பட்டு அரசவையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். தனக்கும் சமாதித் திருட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று முதலில் அவன் சாதித்தான். அரசவையில் இருந்த காவலர்கள் அவனை நையப் புடைத்தனர். பிறகு அவன் வாயிலிருந்து உண்மை பின் கண்டவாறு வெளிப்பட்டது:

தெய்வத்தன்மை பொருந்திய மன்னர் பெருமானே! நான் சமாதித் திருட்டில் ஈடுபட்டது உண்மை. பள்ளத்தாக்கின் வடக்குப் பகுதியிலிருந்த சமாதியொன்றை நான் கொள்ளையடித்தேன். இக் கொள்ளையில் என்னோடு இன்னும் எழுவர் ஈடுபட்டனர். முதலில் சவப்பெட்டியின் மூடியைக் கழற்றினோம். அதில் இறந்த மன்னரின் பிணம் காணப்பட்டது. மன்னரின் முகம் தங்கமுக மூடியால் போர்த்தப்பட்டிருந்தது. உடல் வெள்ளித் தகட்டினால் போர்த்தப்பட்டிருந்தது. வெள்ளித் தகட்டின்மேல் தங்கத் தகடு போர்த்தப்பட்டிருந்தது. தங்கத்தகட்டில் விலைமதிப்பற்ற மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. கழுத்தில் பொன்னரி மாலைகள் பல பூட்டப்பட்டிருந்தன. அம்மாலைகளை முதலில் கழற்றினோம். தங்கத் தகட்டின்மேல் பதிக்கப்பெற்றிருந்த மாணிக்கக் கற்களைப் பெயர்த் தெடுத்தோம். பிறகு உடலை ஒட்டிக்கிடந்த வெள்ளியையும் தங்கத்தையும் பெயர்த்தெடுத்தோம். அரசரின் பிணத்திற்கருகில் அரசியாரின் பிணம் காணப்பட்டது. அதன் கழுத்திலும் தங்கச் சரங்கள் நிறையப் பூட்டப்பட்டிருந்தன. அரசருடைய உடலுக்குப் போர்த்தப்பட்டிருந்தாற்போல், அரசியாரின் உடலுக்கும் தங்கத்தினாலும், வெள்ளியினாலுமான தகடுகள் போர்த்தப்பட்டிருந்தன. அவைகளையும் நாங்கள் எடுத்துக் கொண்டோம். இவ்விரண்டு பிணங்களுக்கும் அருகில் தங்கத்தாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட பலவிதப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அவைகளும் எங்களால் களவாடப்பட்டன. பிறகு களவாடிய பொருள்களை எட்டுப் பங்காகப் பிரித்து ஆளுக்கொரு பங்கு வைத்துக் கொண்டோம்.”

இவ்வாறு தன் கொள்ளையைப்பற்றி விளக்கமாகக் கூறினான் பீரோ. பீரோ கூறிய செய்திகளிலிருந்து நாம் பல உண்மைகளை அறிந்து கொள்ளலாம். பண்டைய எகிப்து மன்னர்கள் தங்களுடைய பிணங்களைப் புதைக்கும்போது, என் வளவோ பெருஞ் செல்வத்தை உடன் வைத்துப் புதைத்தார்கள் என்பது நன்கு தெரிகிறது. சமாதிப் பள்ளத்தாக்கில் வேலைபார்த்த தாழ்ந்த வேலைக்காரரிலிருந்து, உயர்ந்த அதிகாரிகள் வரை எல்லாரும் கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டனர் என்பதும், சமாதித் திருட்டு அவர்களுடைய அன்றாடத் தொழிலாகவே மாறிவிட்டது என்பதும் புலனாகின்றன.

பிற்காலத்தில் பாரோ மன்னர்களின் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது. திறமையற்ற மன்னர்கள் எகிப்து நாட்டை ஆளத் தொடங்கினர். அவர்கள் காலத்தில் சமாதித் திருட்டு மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியது. கள்வர்களைத் தடுத்து நிறுத்த அம்மன்னர்களால் முடியவில்லை. அம்மன்னர்களின் ஆட்சி ஒழிந்த பிறகு, எகிப்து நாட்டில் அரச குருமார்களின் ஆட்சி தோன்றியது. அவர்களில் ஒரு மன்னன் சமாதித் திருட்டை ஒழிக்கப் புது வழியொன்றைக் கையாண்டான். சமாதிப் பள்ளத்தாக்கிலிருந்து எல்லாச் சமாதிகளையும் தோண்டி எடுத்தான். அவைகளை யெல்லாம் நகருக்கு நெடுந்தொலைவில், யாரும் நெருங்க முடியாத ஓரிடத்தில் புதைத்து விட்டான். அச்சமாதிகள் மூவாயிரம் ஆண்டுகளாக யாருடைய கண்களிலும் படாமல் மண்ணிற்குள் உறங்கிக் கொண்டிருந்தன. சென்ற நூற்றாண்டிலேயே அவைகளெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு உலகின் பல பகுதிகளிலுமுள்ள பொருட்காட்சி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன.

இனிப் பிரமிடுகளின் உட்பகுதிகளில் என்னென்ன பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதைக் காண்போம். பிரமிடுகளை ஆராய்ந்த ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளர் பின்கண்டவாறு குறிப்பிடுகின்றார்:

“நான் பல நாள் முயன்று வழிகண்டுபிடித்தேன் ; பிரமிடின் அடித்தளத்தை அடைந்தேன். அங்கு ஒரே இருட்டாக இருந்தது. காற்று மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் என்னுடைய உடலெங்கும் எரிச்சலெடுத்தது. கையில் கொண்டு சென்ற மின்விளக்கை ஏற்றினேன். நான் கண்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. என் எதிரில் தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட பொருள்கள் குவிந்து கிடந்தன. ஒரு பொருட் காட்சி நிலையமே என் எதிரில் இருப்பதாக உணர்ந்தேன். அங்கிருந்தவற்றில் என் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த பொருள்கள் மூன்று. ஒன்று, தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளித்தேர். அத்தேரின் கலையழகு என்னை மெய்ம்மறக்கச் செய்தது. தேரின் இரண்டு பக்கங்களிலும் பூவேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உட்புறத்தில் பெரிய விலங்குகளின் உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டிருந்தன.

“மற்ற இரண்டு பொருள்கள், அப்பிரமிடில் புதைக்கப்பட்டிருந்த மன்னனின் சிலைகளாகும். அவைகளும் வெள்ளியினால் செய்யப்பட்டு மேலே தங்க முலாம் பூசப்பட்டவை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாரோ மன்னன் உயிரோடு எழுந்து நடமாடுவதுபோல என் கண்களுக்குப் பட்டது. “இப்பொருள்களேயன்றி, வைரக்கற்கள் நிரப்பப்பட்ட பொற்பேழைகளும், பளிங்கினால் செய்யப்பட்ட பூந்தொட்டிகளும், பளிங்குப் பலி பீடமும், தந்த நாற்காலிகளும், கட்டில்களும், பொன்னாலான அரியணையும், வெண்மையான தந்தப் பெட்டிகளும் அங்கு வைக்கப்பட்டிருந்தன” என்று எழுதியிருக்கிறார்.

இப்பிரமிடுகளின் துணைகொண்டு, பண்டைய எகிப்து நாகரிகமும், மன்னர்களின் ஆடம்பர வாழ்க்கையும் எப்படியிருந்தன என்பதை ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளனர்.

எகிப்து நாட்டை ஆண்ட பாரோ மன்னர்கள் வளர்த்த நாகரிகம் மிகவும் தொன்மையானது. அவர்கள் வளர்த்த அழகுக் கலைகள் மிகவும் உயர்ந்தவை. இம்மன்னர்கள் ஆடம்பரமான வாழ்க்கையைப் பெரிதும் விரும்பினர். அழகைக் கடவுளாக வழிபட்டனர். இவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் அளவால் பெரியவை. இவ்வரண்மனையின் வெளிச்சுவர்கள் கரடுமுரடான செங்கற்களால் கட்டப்பட்டவை. உட்சுவர்கள் மழமழப்பான கற்களால் கட்டப்பட்டவை. அச்சுவர்கள் கலையழகோடு காட்சியளித்தன. கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்கள் அச்சுவர்களில் வரையப்பட்டிருந்தன.

அரண்மனையின் மேற் கூரையைத் தாங்கி நிற்பதற்காகப் பெரிய தூண்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. அத்தூண்கள் கிடைத்தற்கரிய உயர்ந்த மரங்களால் செய்யப்பட்டவை; மழமழப்பாக இழைக்கப்பட்டுச் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டவை. இவ்வரண்மனைகளில் இணைக்கப்பட்டிருந்த கதவுகள் வெள்ளியினாலும் தங்கத்தினாலும் இழைக்கப்பட்டிருந்தன. இடையிடையே வைரக்கற்களும், மரகதக்கற்களும், கெம்புக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. அரண்மனையின் தளங்களும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடியிருந்தன. மேல் விதானங்களில் இயற்கைக் காட்சிகள் தீட்டப் பெற்றிருந்தன. மலைகளும், அருவிகளும், சோலைகளும் அங்குக் காட்சியளித்தன. வன விலங்குகளை வேட்டையாடுவது போன்ற காட்சிகளும் வரையப்பெற்றிருந்தன. அரசன் வீற்றிருந்து. ஆட்சிபுரியும் அத்தாணி மண்டபத்தில் வரிசையாக இடப்பட்டிருந்த இருக்கைகள் யாவும் உயர்ந்த மரத்தால் சிற்பக்கலையழகோடு செய்யப்பட்டவை.

அரண்மனைகள் மிகவும் பெரிய அளவில் கட்டப்பட்டன. அவ்வாறு கட்டப்பட்டதற்குக் காரணமுண்டு. ஒவ்வொரு மன்னனுக்கும் பல மனைவியர் இருந்தனர். ஒரு சில மன்னருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனவாம். இவ்வளவு பெரிய குடும்பம் வாழ வேண்டுமானால் அரண்மனையைச் சிறிதாகவா கட்ட முடியும் ?

அரண்மனையில் அன்றாட வேலைகள் செம்மையாக நடைபெறுவதற்கு நூற்றுக் கணக்கான அடிமைகள் அமர்த்தப்பட்டனர். அரண்மனையில் வாழும் அரச குடும்பத்தை மகிழ்விக்க இசைக்குழு ஒன்று இருந்ததாம். அரண்மனை நிருவாகத்திற்கென்றே பல அதிகாரிகள் இருந்தார்களாம்.

“பாரோ மன்னர்களின் ஆடம்பர வாழ்க்கையைப் பற்றி மாசுபெரோ என்ற தொல்பொருள் ஆராய்ச்சியறிஞர், சுவையான செய்திகள் பலவற்றைக் கூறுகிறார். எகிப்து நாட்டின் தொல்பொருள் துறைத் தலைவராக நீண்ட நாள் பணியாற்றிய அவர் கூறும் செய்திகள் பின்வருவனவாகும்:

“பாரோ மன்னர்கள் மணம் தரும் பொருள்களைப் பெரிதும் விரும்பினர். இத்துறையில் இருபது வகைத் தொழில்கள் வளர்ச்சி பெற்று இருந்தன. அரசாங்க நாவிதர்கள் என்ற பெயரால் ஒரு தனிக் கூட்டத்தாரே வாழ்ந்தனர். அவர்கள் தாம் அரச குடும்பத்தார்க்குச் சவரத் தொழில் செய்ய வேண்டும். அரசரின் தலையை அழகு செய்வதோடு பொய் முடியும் அவர்கள் தயாரித்துக் கொடுப்பர். அம் முடிகளில் ஒளிவீசும் வைரங்களை வரிசையாகப் பொருத்தி வைப்பர். நகத்தை ஒழுங்காகச் சீவிவிட்டு அதற்கு வண்ணம் தீட்டுவதற்கும், அரச குடும்பத்தினரை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவதற்கும், கண்ணுக்கு மை செய்து பூசுவதற்கும், உதட்டுக்கும் கன்னத்திற்கும் வண்ணச் சாந்து செய்து அப்புவதற்கும் தனித்தனியே நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இருந்தனர்.

“செருப்புத் தைப்பதற்கும், அரைக்கச்சை தைப்பதற்கும் தனித்தனியே தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். அரச குடும்பத்து ஆடை தைப்பதற்கென்று, தையற்காரர்களின் கூட்ட மொன்று இருந்தது. அவர்களில், பட்டாடை தைப்போர், பருத்தியாடை தைப்போர், காலாடை தைப்போர், மேலாடை தைப்போர், தடித்த ஆடை தைப்போர், மெல்லிய துகிலாடை தைப்போர், மகளிர்க்கு ஆடை தைப்போர், உடலோடு பொருந்திய ஆடை தைப்போர் எனப் பல பிரிவினர் இருந்தனர். அரச குடும்பத்தார் பெரும்பாலும் வெண்மையான ஆடைகளையே உடுத்திக் கொண்டனர். இவ்வாடைகளைச் சலவை செய்வதற்கென்று பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர்.

“பலவிதமான பொன்னணிகளையும், வைர மிழைத்த நகைகளையும் அரச குடும்பத்தார் அணிந்திருந்தனர்; பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளுக்கேற்பப் பலவித நகைகளை அணிந்தனர். அரசிகளுக்கு நூற்றுக் கணக்கான பணிப்பெண்டிர் இருந்தனர். உள்ளத்தில் சலிப்பேற்பட்ட நேரங்களில் இசைக் குழுவினர் இன்னிசை எழுப்பி அரசியரை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினர். ஆடற்பெண்டிர் ஆடல் நிகழ்த்தினர்; கோமாளிகளும் குள்ளர்களும் கேளிக்கை காட்டி வேடிக்கை புரிந்தனர்.

“அரச குடும்பத்தினர்க்கு நகை செய்வதற்கென்று அரண்மனையின் அருகே ஒரு பட்டறையே இருந்தது. பொற்கொல்லர்களும், கல்லிழைக்கும் பணியாளரும், கருமாரும் உலைக் கூடத்தை விட்டு அகலாது பணி புரிந்தனர். விடிந்தது முதல் இரவு நெருங்கும் வரை உலைக்கூடத்தில் நெருப்படியில் காயும் இப்பாட்டாளிகள் பெற்ற கூலி மிகமிகக் குறைந்ததுதான்.

கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த கல் தச்சர்களின் நிலையோ மிகவும் இரங்கத்தக்கது. வெயிலிலும் மழையிலும் அவர்கள் சலியாமல் உழைக்க வேண்டியவர்களானார்கள். கல்லை அடித்து அடித்து அவர்கள் கை ஓய்ந்துவிடும். இடையிடையே மாபெருங் கற்களைப் பலர் கூடி ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இழுத்துச் செல்லவேண்டும்; பெருந் தூண்களை எடுத்து நிறுத்தி நிலை நாட்ட வேண்டும்; மாபெரும் கற்பாலங்களைக் கூரைமேல் ஏற்றவேண்டும். இவ்வேலைகளைச் செய்யும்போது கற்களின் அடியிற்சிக்கி எத்தனையோ தொழிலாளர்கள் மடிய நேரிடும். இவ்வாறு நாள் முழுவதும் உழைத்து, மாலை வேளையில் அரசாங்க அதிகாரிகள் கொடுக்கும் ரொட்டித் துண்டுகளைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும். வீட்டில் மனைவி மக்கள் இவ்வேழையின் வருகையை எதிர் நோக்கி இருப்பர்.

“அரச குடும்பத்தார்க்கு ஆடை நெய்யும் சேணியர்களின் நிலை மிகவும் மோசமானது. காலையிலிருந்து மாலை வரை காலை மடக்கி உட்கார்ந்து வேலை செய்யவேண்டும். இடை வேளைக்குள் குறிப்பிட்ட அளவு ஆடை நெய்தால்தான், அவர்களுக்கு உணவுண்டு. இல்லாவிட்டால் அவ் வேலை முடிந்த பிறகுதான் உணவு கொடுப்பார்கள். சாயப்பட்டறையில் வேலைசெய்யும் தொழிலாளர் நிலை இன்னும் கேவலமானது. சாயத்தண்ணீரின் நாற்றம் மூக்கைத் துளைக்கும். நாள் முழுவதும் தண்ணீருக்குள் கையைவிட்டு நூலையும், ஆடையையும் பிழிந்து கொண்டிருப்பதால், அவர்களுடைய கைகளில் குருதியோட்டமே நின்று விடும். செருப்புத் தைக்கும் தொழிலாளர்களின் நிலையைக் கூறவேண்டியதில்லை. நாள் முழுவதும் தீநாற்றம் வீசும் தோலொடு தோலாய் அவர்கள் கிடப்பர். அவர்கள் உடலும், ஆடையும் அழுக்கடைந்து அருவருப்பாகக் காட்சியளிக்கும்.

மேலே விவரிக்கப்பட்ட காட்சிகளை நாம் உள்ளத்தால் காணும்போது, சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்த பாரோ மன்னர்களின் ஆட்சியில் ஏழை மக்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள் என்பதையும், அரச குடும்பத்தாரும், செல்வர்களும் உல்லாசமாக வாழ்வதற்கு ஏழைமக்கள் எத்தகைய கொடுந்துயர்பட்டு மடிந்தார்கள் என்பதையும் அறியலாம். ‘ஒரு மனிதனுக்கு முதுகைப் படைத்திருப்பது அடிக்கும் தடிக்குக் குனிந்து கொடுப்பதற்குத்தான்’ என்பது பண்டை எகிப்து நாட்டுப் பழமொழி.

ஆம்! இக்கூற்று உண்மையே! இல்லாவிட்டால் மாபெரும் பிரமிடுகள் உருவாகியிருக்க முடியுமா? மாபெரும் கோவில்களும், சிற்பத் தூண்களும், விண்முட்டும் சிலைகளும் உருப்பெற்றிருக்க முடியுமா ? பல நூறு கி. மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் வெட்டப்பட்டு நைல் ஆற்றின் நீரை அவற்றில் திருப்பி விட்டிருக்க முடியுமா ? மத்தியக் கிழக்கு நாடுகளை வென்று பாரோ மன்னர்கள் வெற்றிக்கொடி நாட்டியிருக்க முடியுமா ? இவ்வேழை மக்கள் இவ்வாறு தங்கள் குருதியைச் சிந்தியிராவிட்டால் ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் நாம் பிரமிடுகளைக் கண்டு வியப்படைய மாட்டோம்! பாரோ மன்னர்களின் பழம் பெருமைகளைப் பற்றிப் பாராட்டிப் பேசமாட்டோம்!