உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டடமும் கதையும்/செங்கோட்டை

விக்கிமூலம் இலிருந்து

6. செங்கோட்டை

ஐரோப்பாக் கண்டத்தில் வரலாற்றுச் சின்னங்களுக்குப் புகழ்பெற்ற பெருநகரம் உரோமாபுரியாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் வரலாற்றுச் சின்னங்களுக்குப் புகழ்பெற்ற இடம் டில்லி மாநகரம்.

இந்நகரம் எத்தனையோ அரச பரம்பரையைக் கண்டுள்ளது. இந்நகரில் மணி முடி தரித்த மன்னர் பலர் அரியணை ஏறி அரசு புரிந்துள்ளனர். மாவீரர் பலர் தங்கள் குருதிச் சேற்றை இந்நகரில் கொட்டி வெற்றி விழாக் கொண்டாடி யிருக்கின்றனர்.

வெனிசு, யவனம், பாரசீகம், துருக்கி முதலிய நாடுகளிலிருந்து கட்டடக் கலைஞர்களும் சிற்பிகளும் இங்கு வந்து கூடி. இந்நகரைத் தம் கைவண்ணத்தாலும், கலை வண்ணத்தாலும் அழகுபடுத்தி இருக்கின்றனர். தான்சேன் போன்ற மாபெரும் இசைக் கலைஞர்கள், தம் இசை வெள்ளத்தில் இந்நகரை ஆழ்த்தி இன்பம் கண்டிருக்கின்றனர். இராசபுதனத்து எழில் மங்கையரும், அரபு நாட்டு அழகியரும், பாரசீகப் பாவையரும் இப்பொன்னகரின் பூங்காக்களில் அடி பெயர்த்து நடந்து இதை விண்ணகராக்கி யிருக்கின்றனர். வரலாற்றாசிரியர்களின் பொன்னேட்டைப் புரட்டிப்பார்த்தால், புகழ் மிக்க இத்தலை நகரம் ஆயிரமாயிரம் கதைகள் கூறும்.

டில்லி நகரில் அரசுக்கட்டில் ஏறிய அரசப் பெருங்குடியினரில் மொகலாயர் குறிப்பிடத்தக்கவர்கள் என்பது சொல்லாமல் விளங்கும். ஷாஜகான் ஆட்சியை மொகலாயர்களின் பொற்காலம் என்று சொல்லுவர். அவன் காலத்தில் அரண்மனைக் கருவூலத்தில் பொன்னும் மணியும் மலைபோலக் குவிந்து கிடந்தன. டில்லிப் பெரு நகரம் அவன் கைவண்ணத்துக்காகக் காத்துக்கிடந்தது. இந்நகருக்குள் காலடி எடுத்து வைப்பவர் ஒவ்வொருவரும் காண விரும்புவது செங்கோட்டையைத்தான். இக்கோட்டையை எழுப்பிய பெரு மன்னன் ஷாஜகானே.

இக்காலத்தில் இதைச் செங்கோட்டை என்று வழங்குகின்றனர். ஷாஜகான் காலத்தில் இது உருது-இ-முஅல்லா என்ற பெயரால் வழங்கப்பட்டது. ஷாஜகானுக்குப் பிறகு ஆண்ட மொகலாய மன்னர்கள் 'பெருமைக்குரிய பெருங் கோட்டை' என்ற பெயரால் இதை அழைத்தனர்.

இந்தியாவில் பல இடங்களில் உள்ள மன்னர்களுடைய அரண்மனைகளைவிடச் செங்கோட்டை பேரழகோடு விளங்குகிறது. குறிப்பாகச் சொல்லப் போனால், இந்திய நாட்டிலேயே செங்கோட்டைக்கு ஒப்பான பெருமாளிகையை எங்கும் காண முடியாது. இது கோட்டைக்குக் கோட்டையாகவும், அரண்மனைக்கு அரண்மனையாகவும் விளங்கியது. திவானீ ஆம், திவானீ காஸ், ஜெனானா, ரங்மகல் முதலிய மாளிகைகள். செங்கோட்டையில் அடங்கிய பகுதிகளாகும். அயத்பக்சு, மேதாப் பாக் என்பன இம்மாளிகைகளைச் சூழ்ந்திருக்கும் அழகிய பூங்காக்களாகும்.

கோட்டையின் மதிற்சுவரைக் கடந்து உள்ளே நுழைந்ததும் அரண்மனை வாயில் தென்படும்.

அரண்மனையின் வாயில் மிக்க பேரழகுடையது. இதை நக்கர் கானா என்று அழைப்பர். இவ்வாயிலுக்குள் நுழைந்தவுடன், முரசுப் பீடம் தென்படும். இப்பீடத்தின் மேல் முரசங்கள் அணிபெற வைக்கப்பட்டிருக்கும். காவல் மரமும், முரசுக் கட்டிலும் தமிழ் மன்னர்களால் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டன என்பதை நாம் சங்க இலக்கியங்களின் மூலமாக அறிந்திருக்கிறோம். அதே போல மொகலாயர்களும் முரசுப் பீடத்தைப் புனித முடைய ஒன்றாகப் போற்றி வந்தனர். அரச குடியினரும், அரசரின் பெரு மதிப்பிற்குரிய அதிகாரிகளுமே இம் முரசை முழக்கும் உரிமை பெற்றவர்கள். இவ்வரச முரசம் நாள்தோறும் ஆறு முறை முழக்கப்படும்.

நக்கர் கானா என்று கூறப்படும் இவ்வழகு மிக்க பெருவாயிலுக்குமேல், மாடம் ஒன்று அமைந்துள்ளது. முரசை முழக்கும் குழுவினர் அம்மாடத்தின் மேல் அணி பெற வீற்றிருப்பர். இப்போது இம்மாடம் பண்டைப் போர்க் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும் பொருட் காட்சி நிலையமாக விளங்குகிறது.

இவ்வாயிலுக்குள் நுழைந்து தான் அரச மாளிகைகளுக்குள் செல்ல வேண்டும். கி. பி. 1754 ஆம் ஆண்டு, பேரரசர் அகமதுஷா இந் நக்கர் கானாவில்தான் படுகொலை செய்யப்பட்டார். மதிற் சுவரின் வாயிலுக்கும் தக்கர் கானாவுக்கும் இடைப்பட்ட வெளியில் அரண்மனைக் காவலுக்கென அமர்த்தப்பட்ட படை வீரர்களின் பாடி அமைந் திருந்தது. அரண்மனைக் காவல் என்பது பெருமதிப்பிற்குரிய பணியாகும். இப்பணியை ஏற்கப் போர் வீரர்கள் போட்டியிட்டு முந்துவர். பெரும்பாலும் இராசபுத்திரர்களே இப்பணியை ஏற்கும் காவல் வீரர்களாக அமர்த்தப் பட்டனர்.

நக்கா கானாவைக் கடந்து உள்ளே சென்றதும், திவானீ ஆம் என்ற பெருமாளிகை உள்ளது. இம் மாளிகையின் முன் பகுதியில் அமைந்துள்ள அத்தாணி மண்டபம் மிகப் பெரியது; கலைச்சிறப்புடன் கூடியது. மொகலாய மன்னர்களின் நாளோலக்கம் இம்மண்டபத்தில் தான் இடம் பெறும். மன்னர் பெருமான் இம்மண்டபத்தில் வீற்றிருந்து வெளிநாட்டுத் தூதுவர்களுக்குக் காட்சி கொடுப்பார்; அவர்களோடு அரசியல் உறவுபற்றி உரையாடுவார் ; படை வீரர்களின் அணி வகுப்பை நாள்தோறும் பார்வையிடுவார்; வணிகர்களோடு வாணிகம் பற்றி உரையாடுவார். மன்னனைக் காண விரும்பும் பொது மக்களும், முன்னிசைவு பெற்று இம்மண்டபத்தில் சென்று காணலாம்.

திவானீ ஆம் மாளிகையின் சுவர்கள், வெண்ணெய்போல் மென்மையாக அரைத்தெடுத்த சுண்ணச் சாந்தினால் தளம் பூசப் பெற்றவை. அரசர் வீற்றிருக்கும் அத்தாணி மண்டபத்தின் முன் பகுதி நீண்ட, சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய அழகு முற்றத்தைக் கொண்டது. டில்லி நகரில் வாழும் பிரபுக்கள் யாவரும் தத்தம் தகுதிக்கேற்ப, முறைப்படி வரிசையாக, எதிரெதிரில் இம் முற்றத்தே நிற்பர். இளவரசர்கள் அரியணைக்கு இரு மருங்கும் நின்று கொண்டிருப்பர்.

அரியணைக்குப் பக்கத்தில் ஓர் அழகு வாயில் தென்படும். இவ்வாயிலின் வழியாகத் தான் அரசர் பெருமான் அத்தாணி மண்டபத்தில் அடியெடுத்து வைப்பார். அரசர் வீற்றிருக்கும் அரியணை, உயர்ந்த பீடத்தின் மேல் அமைந்துள்ளது. ஷாஜகானும், அவுரங்கசேப்பும் நாள் தோறும் இரு முறை இந்நாளோலக்கத்தில் அமர்ந்து அரசியற் செயல்களை மேற்கொண்டனர். வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது இப்பேரவை கூடும். சிறிய பிரபுக்களெல்லாம் அத்தாணி மண்டபத்தின் வெளியில் நிற்பர். இவர்களை மற்றவர்களினின்றும் பிரிப்பதற்காக நடுவில் ஒரு திரை இடப்பட்டிருக்கும்.

மொகலாயப் பெருமன்னர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் மிகச் சிறந்த கலைஞர்களை வரவழைத்து அவர்களை ஆதரித்து வந்தனர். பன்னாட்டுக் கலைஞர்களும் தங்களுடைய அரசவையை அலங்கரிக்க வேண்டும் என்று அவர்கள் பேரவாக் கொண்டனர். அதைப் பெருமைக்குரிய செயலாகவும் கருதினர். அரசர் வீற்றிருக்கும் அரியணைக்குப் பின்னால், உயரத்தில் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் சிற்பத்தோடு கூடிய வண்ணப் பளிங்குப் பலகையொன்று பொருத்தப்பட்டுள்ளது. அது ஒரு பிரெஞ்சுச் சிற்பியினால் செதுக்கப்பட்டது. ஓர் ஆடவன் ஒரு கின்னரத்தை மீட்டி இன்னிசை எழுப்புவதுபோல் அச்சிற்பம் அமைந்துள்ளது. கிரேக்கர்களின் இசைக் கடவுளான ஆர்பியசையே (Orpheus) அவ்வாடவனின் உருவம் குறிப்பிடுகிறது என்று கூறுகின்றனர். கி. பி. 1857 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிப்பாய்க் கலகம் (Soldiers' Mutiny) என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் முதல் உரிமைப் போரின்போது, இச்சிற்பம் இம்மாளிகையினின்றும் பெயர்த் தெடுத்துக் கொண்டு செல்லப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலத் தலைமை ஆளுநராக இந்தியாவிற்கு வந்த கர்சன் பிரபு இலண்டன் மாநகரில் அச்சிற்பத்தைக் கண்டுபிடித்து, மீண்டும் இம்மாளிகையிலேயே கொண்டு வந்து பொருத்தினார். கோடை நாட்களின் வெப்பத்தைத் தணிப்பதற்காக இவ்வத்தாணி மண்டபத்தைச் சுற்றிச் செந்நிறத் திரைகள் தொங்கவிடப்படும். அத்திரைச் சேலைகள் தொங்கவிடப் பொருத்தப்பட்ட வளையங்களை இன்றும் அங்குக் காணலாம்.

திவானீ ஆம் என்று சொல்லக் கூடிய இம்மாளிகையின் இடப் புறத்தில் ஒரு பாதை செல்லுகிறது. இப்பாதையின் முகப்பில் ஒரு வாயில் உள்ளது. இவ்வாயிலைச் செந்நிறத்திரை மறைத்துக் கொண்டிருந்த காரணத்தால் 'செந்திரை வாயில்' (லால் பர்தா) என்று இது அழைக்கப்பட்டது. அரசரின் நன்மதிப்பைப் பெற்ற பெருமக்களே இவ்வாயிலுக்குள் நுழைய முடியும், அவர்கள் 'லால் பர்தாரிகள்' என்று அழைக்கப்பட்டனர். லால் பாதாரிகள் மொகலாய அரசியலில் செல்வாக்குப் பெற்றவர்கள்.

திவானீ ஆம் மாளிகையிலிருந்து பார்த்தால் லாகூர் வாயிலுக்கு (Lahore gate) எதிரில் ஒரு நெடுஞ்சுவரைக் காணலாம். இது பேரரசன் அவுரங்கசேப்பினால் கட்டப்பட்டது. இது இம் மாளிகையையும் நிலவு அங்காடி (Chandni chowk) யையும் பிரிக்கிறது. அரசர் அத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்தால் அங்காடியில் போவோர் வருவோர் எல்லாரும் கண்களுக்குத் தென்படுவர். இதைத் தடுக்கவே இப் பெருஞ்சுவர் எழுப்பப்பட்டது.

திவானீ ஆம் என்ற இப்பெரு மாளிகையை அடுத்தாற்போல் திவானீ காஸ் என்ற மற்றோர் அழகு மணி மாளிகை அமைந்துள்ளது. இம் மாளிகைக்குள் எல்லாரும் செல்ல முடியாது. அரசரின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு இம் மாளிகை இடமாக விளங்கியது. அரசியலில் பங்கு கொண்டுள்ள முக்கிய அலுவலர்களே இதனுள் செல்ல முடியும். அவ்வலுவலர்கள் இக் காலச் சட்டசபை உறுப்பினர்களின் தகுதியைப் பெற்றவர்கள் என்று கூறலாம். இம்மாளிகையில் வேறு சில தனிப்பட்ட அறைகளும் உண்டு. அவ்வறைகள் கண்ணைக்கவரும் ஒப்பனையுடன் கூடியவை. இவ்வறைகளில் மன்னர் தம் நண்பர்களோடு உரையாடுவார்; விருந்துண்பார்.

இத்திவானீ காசில்தான் மயிலாசனம் (Peacock throne) அமைக்கப்பட்டிருந்தது. இது மொகலாய மன்னன் ஷாஜகானால் செய்து வைக்கப்பட்டது. இவ்விருக்கை பொன்னாலாகியது; நவமணிகளும் பதிக்கப் பெற்றது ; பன்னூறாயிரக் கணக்கான மோகராக்கள் மதிப்புடையது. பாரசீக மன்னன் நாதிர்ஷா இந்தியாவின்மீது படையெடுத்தபொழுது டில்லி நகரத்தின் செல்வங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றானல்லவா ? அப்போது இம் மயிலாசனத்தையும், விலைமதிப்பற்ற கோகினூர் வைரத்தையும் மற்றக் கொள்ளைப் பொருள்களோடு கொண்டு சென்று விட்டான்.

நாதிர்ஷா தன் கொள்ளைப் பொருள்களோடு பாரசீகம் திரும்புவதற்கு முன்பாக இம்மாளிகையில் தான் வீற்றிருந்து, வெற்றிகொண்ட இந்நாட்டை மீண்டும் முகம்மது ஷாவிற்குத் திருப்பிக் கொடுத்தான். குலாம்காதிர், ஷா ஆலத்தின் கண்களைக் குருடாக்கிய இடமும் இதுவே. மொகலாய மன்னன், ஷா ஆலம், இம்மாளிகையில் வீற்றிருந்துதான் கி. பி. 1803 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி லேக் பிரபுவிற்கு வரவேற்பு நல்கினான். இந்திய நாட்டிற்குச் சுற்றுலா வந்த ஆங்கிலப் பேரரசன் ஐந்தாம் ஜார் ஜும், அவருடைய மகன் வேல்சு இளவரசனும் இந்தத் திவானீ காசிலேயே அமர்ந்து நாளோலக்கம் நடத்தினர்.

திவானீ காஸ் மாளிகையின் பின்பகுதி மன்னர் வாழும் இருப்பிடத்தைக் கொண்டதாகும். இந்திய நாட்டைத் தம் விரலசைவில் ஆட்டிப் படைத்த மொகலாயப் பெருமன்னர்கள் உண்டு, உறங்கும் இடம் எத்தகைய சிறப்போடு இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. நம் கண்பட்ட விடமெல்லாம் மிக உயர்ந்த பளிங்குக் கற்களே தென்படும், சிற்ப நுணுக்கம் இல்லாத இடமே அங்கு இல்லை. உலகின் நாற்புறங்களிலும் வாழ்ந்த சிற்பக்கலை வல்லுநர்கள் தங்கள் தங்களது பேராற்றலை இவ்விடத்தில் நிலை நாட்டிச் சென்றிருக்கின்றனர். தொட்ட இடமெல்லாம் 'கலைகலை!' என்று முழக்கம் செய்கின்றன. மின்னொளி பரப்பும் அப்பன்னிறச் சலவைக் கற்களுக்கு வாயிருந்தால், ஒவ்வோர் அணுவும் ஓராயிரம் கதைகளை நம் காது குளிர எடுத்தியம்பும் என்பதில் ஐயமில்லை.

மொகலாய மன்னர்கள் படுத்துப் புரண்ட இப்பளிங்கு மாளிகை, கலைத் தேவியின் அழகுத்தொட்டில் ; அழகுக்கலை பதுக்கி வைக்கப்பட்ட அலங்காரப் பெட்டகம் ; மனிதன் வளர்த்த கலை நாகரிகத்தின் உச்ச வரம்பு. இவ்விடமே டில்லியில் பரந்து காணப்படும் மொகலாயக் கட்டடக் கலையின் மூல நாடி. இவ்விடத்தில் மன்னர் அமர்ந்து உரையாடுவதற்கென்று ஒரு முன் அறை (Drawing room) உள்ளது. இதில் மொகலாய மன்னர்களின் நீதியின் சின்னமான துலாக்கோல் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளது. மன்னர் நண்பர்களோடு உரையாடுவதும், பொதுமக்களுக்குக் காட்சி கொடுப்பதும் இவ்விடத்தில் தான் ; இவ்வறைக்கு எதிரிலுள்ள திறந்த வெளியில் பொதுமக்கள் கூடி நிற்பர். மன்னர் நாளுக்கு ஒரு முறை இவ்விடத்தில் அமர்ந்து அவர்கட்குக் காட்சி கொடுப்பார்.

திவானீ காசிற்கு இடப் புறத்தில் அரச குடும்பத்தினர் நீராடும் வாவிகளும், குளியல் அறைகளும் உள்ளன. இதைப் போன்ற குளிக்கும் கட்டத்தை உலகில் வேறெங்கும் காண முடியாது. இங்குள்ள நீர் வாவி ஒன்றில் பளிங்குக் கல்லால் அமைக்கப்பட்ட மாபெரும் தாமரைப்பூ ஒன்றுள் ளது. இது தொட்டிபோல் அமைந்துள்ளது. இதைச் சுற்றிலும் மூன்று குழாய்கள் அமைந்துள்ளன. ஒரு குழாயில் தண்ணீரும், மற்றொன்றில் வெந்நீரும், பிறிதொன்றில் பன்னீரும் கொட்டுமாம். அரச மகளிர் வேண்டும் நீரில் விருப்பப்படி குளித்து மகிழ்வராம். இவ்விடத்தை நேரில் காணக் கொடுத்து வைத்தவர்கள் உள்ளத்தில், மொகலாயப் பேரரசர்களின் இன்ப வாழ்வும், ஆடம்பர வாழ்வும் தென்படாமல் போகா.

இக் குளிக்கும் கட்டத்திற்கு அருகில் அரச குடும்பத்திற்கென்று அமைக்கப்பட்ட மசூதி உள்ளது. விழாக் காலங்களில் அரசர் பெருமான் அரண்மனைக்கு வெளியில் உள்ள ஜும்மா மசூதிக்குச் சென்று தொழுகை நடத்துவார். மற்ற நாட்களில் இம் மசூதியே மன்னர்களின் தொழுகைக்கு ஏற்ற இடமாக அமைந்திருந்தது. இம் மசூதியைக் கட்டியவர் அவுரங்கசேப். இவர் ஒவ்வொரு நாளும் பன்முறை இம் மசூதிக்குச் சென்று தொழுகை நடத்துவார்.

இம்மசூதியை அடுத்தாற்போல் அரண்மனைப் பூஞ்சோலைகள் அமைந்துள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கது அயத்பக்சு என்ற பூங்காவாகும். இது மொகலாயர் காலத்திய பூங்காக்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. இப்பூங்காவின் ஒரு பகுதி இன்று படைவீடாகப் பயன்படுகிறது. இப் பூங்காவிற்கு அருகில் மேதாப் பாக் என்ற மற்றொன்றும் உள்ளது'. 'நிலவொளிப் பூங்கா' என்பது இதன் பொருள். நிலவொளியில் மலரக்கூடிய மலர்ச் செடிகள் இதில் நிரம்பியிருந்த காரணத்தால் மொகலாய மன்னர்கள் இப் பெயரை இதற்குச் சூட்டினர். இப்பூங்காவில் அருவி யொன்று மேலிருந்து கொட்டுவதற்காகக் கல்லினால் அமைக்கப்பட்ட நீர்வீழ்ச்சி யொன்றும் காணப்படுகிறது.

இந்நிலவொளிப் பூங்காவின் ஓரத்தில் அமைந்த மாடி ஒன்று உள்ளது. உயரமான இம் மாடியின் பெயர் ஷாபர்ஜ் என்பதாகும். மொகலாய மன்னர்தம் அந்தரங்க அமைச்சர்களுடனும் அலுவலர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தும் இடம் இதுவே. கி. பி. 1787 ஆம் ஆண்டு மொகலாய மன்னன் ஷா ஆலத்தின் மூத்த மகனான சிக்கந்தர்பக்த் டில்லியிலிருந்து தப்பி ஓடுவதற்காக இம்மாடியின் மீதிருந்தே கயிற்றினால் கட்டி இறக்கப்பட்டான். இம்மாடியின்மீது அமைந்துள்ள முற்றம் இரண்டாம் அக்பர் ஷாவினால் கட்டப்பட்டதாகும்.

மொகலாய மன்னனின் பட்டத்தரசி குடியிருக்கும் இடம் பொதுவாக ஜெனானா என்று அழைக்கப்படும். ஜெனானாவில் ரங்மகல் என்ற ஒரு மாளிகை உள்ளது. வண்ண மாளிகை என்பது இதன் பொருள். இம்மாளிகையின் கலையழகு போற்றத் தகுந்தது. ஆனால் இம்மாளிகை பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் போதிய கண் காணிப்பின்மையால் சிதைவுற்றது. இந்த ரங்மகலுக்கு அருகில் மற்றொரு மாளிகையும் காணப்படுகிறது. அது இப்போது பொருட் காட்சி நிலையமாகப் பயன்படுகிறது.

திவானீ ஆம் மாளிகைக்கு எதிரில் அமைந்திருக்கும் வெளியில் நிலவங்காடி என்றொரு கடைத்தெரு இருந்தது. நிலாக்கால இரவுகளில் இவ்வங்காடி மிகவும் பரபரப்பாக இருக்கும். லாகூர் வாயிலுக்குள் மூடு அங்காடி (chattar chowk) என்றொரு. கடைத் தெருவும் உண்டு. இக்கடைத்தெரு மொகலாய வரலாற்றில் மிகவும் சிறப்பிடம் பெற்றது. இவ்வங்காடி அரச குடும்பத்தினர்க்கென்றே கூடியது. அரச குடும்பத்தார்க்கு வேண்டிய ஆடம்பரப் பொருள்களெல்லாம் இங்கு விற்கப்பட்டன. பாண்டி நாட்டிலிருந்து முத்தும், மேருவிலிருந்து மணியும், அரபு நாட்டிலிருந்து உயர்ந்த சாதிக் குதிரைகளும், கிரேக்கம், உரோம் முதலிய நாடுகளிலிருந்து பட்டும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து மதுவும் மணப் பொருள்களும், அரேபியா, பாரசீகம், பிரான்சு, வெனிசு முதலிய நாடுகளிலிருந்து அழகியரும் இவ்வங்காடியில் கொண்டு வந்து விற்கப்பட்டனர். குர்ரம் இளவரசன் (ஷாஜகான்) மும்தாஜை முதன் முதலாகச் சந்தித்த இடம் இதுவே. அரச குடும்பத்தாரைத் தவிர மற்றையோர் இங்கு நுழையக் கூடாது.

'இறப்பதற்கு முன் வாழ்வில் ஒரு முறையேனும் நேபிள்ஸ் நகரைக் கண்ணால் கண்டுவிட்டு இறக்க வேண்டும்' என்பது ஆங்கிலப் பழமொழி. இந்தியனாகப் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் இந்நாட்டின் தலை நகரான டில்லியை ஒரு முறையாவது கண்ணால் கண்டபிறகே இறக்க வேண்டும் என்றுரைப்பதும் முறையே.