உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டடமும் கதையும்/இறுவாய்

விக்கிமூலம் இலிருந்து

8. இறுவாய்

மக்கள் நாகரிகம் பெறத் தொடங்கிய காலந்தொட்டு ஒவ்வொரு நாட்டிலும் சிறிதும் பெரிதுமாகிய எத்தனையோ கட்டடங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மக்களின் கலையறிவு வளர வளரக் கட்டடக் கலையும் நுட்பமும் புதுமையும் பெற்று வளர்ந்து வருகின்றது. புதுமை என்பது மக்கள்பால் படிந்திருக்கும் இயல்பூக்கங்களில் தலையாய ஒன்று. நாள்தோறும் மாந்தர்கள் புதுமையை நாடி அலைகின்றனர். புதுமையின்பால் அவன் கொண்டிருக்கும் ஆறாக் காதல்தான் ஆராய்ச்சியாக மாறி, இன்று அறிவியலாக வளர்ந்திருக்கிறது. நேற்றைய பொருள் இன்று நமக்குப் பழமையாகப்படுகிறது.

இப்புதுமை விருப்பம் மக்களின் கலையுணர்வையும் மாற்றிக் கொண்டிருக்கிறது. இம்மாறுதலுக்கேற்ப நூற்றாண்டு தோறும் கட்டடக்கலை மாறுபட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் இக்கலை பல தனித் தன்மைகளையும், சிறப்புக்களையும் பெற்று விளங்குகின்றது. கிரேக்கக் கட்டடக் கலை, உரோமானியக் கட்டடக் கலை, பாரசீகக் கட்டடக் கலை, இந்தியக் கட்டடக் கலை, தமிழர் கட்டடக்கலை எனப் பல துறைக் கலைகள் உலகில் பிரித்துப் பேசப்படுவதனால் இவ்வுண்மை விளங்கும்.

இக்கால இந்திய மக்களின் கலைச்சுவை பண்டைச் சுவையினின்றும் முற்றிலும் மாறி விட்டது. சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியர்களாலும், இசுலாமியர்களாலும் பேணி வளர்க்கப்பட்ட கட்டடக் கலை, இன்று காட்சிக்கும் பாராட்டுதலுக்கும் உரிய பழங்கலையாக மாறிவிட்டது. பண்டைய இந்தியாவில் அமைக்கப்பட்ட சிற்பக் கலையழகோடு கூடிய கட்டடங்கள் இன்று கட்டப்படுவதில்லை. சிற்பக்கலையும் இன்று வலிமை குன்றி நசித்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஓவியக் கலையை எண்ணும்போது நமக்குப் பெருங் குழப்பமும் வியப்பும் ஏற்படுகின்றன. இன்றைய கலைப் பிரியர்கள் ஓவியனின் ஆற்றலுக்கு முதலிடம் அளிக்கின்றார்களே ஒழிய, எழுதப்படும் கலை இயற்கையை ஒட்டியதாக அமைந்திருக்க வேண்டும். என்று கருதுவதில்லை. இன்றைய மறுமலர்ச்சி' ஓவியர்களின் புகைப்படங்களும், அவர்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளும், அவர்கள் தீட்டிய ஓவியங்களும் செய்தித் தாள்களில் அடிக்கடி வெளிவருகின்றன. அவ்வோவியங்கள் யாவும் மேலும் கீழும், குறுக்கும் நெடுக்குமாக உள்ள பல நேர் கோடுகளாகவும், வளைவுக் கோடுகளாகவுமே காணப்படுகின்றன. உடைந்துபோன வண்ணக். கண்ணாடிப் பலகைபோல் அவைகள் காட்சியளிக்கின்றன. தெளிவான உருவம் எதையும் அவற்றில் காண முடியாது. ஆனால் அவற்றை உயர்ந்த, ஓவியங்கள் என்று உலக மக்கள் பாராட்டுகின்றனர்; பரிசு வழங்குகின்றனர். இன்றைய மக்களின் கலைச்சுவை அவ்வாறு மாறிவிட்டது.

சென்ற நூற்றாண்டு வரை இந்திய நாட்டில் ஒருநோக்குக் கட்டடங்களே (Symmetrical buildings) மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. பழையகால மசூதிகள், அரண்மனைகள், கோவில்கள் முதலியவை ஒருநோக்குக் கட்டடங்களே. ஒரு பக்கம் எம்மாதிரி அமைக்கப்படுகின்றதோ, அதே போல அக்கட்டடத்தின் எதிர்ப் புறத்தையும் அமைப்பது இதன் சிறப்பியல்பாகும். வடக்கில் தாஜ்மகாலும், தெற்கில் தஞ்சைப் பெரிய கோவிலும் ஒருநோக்குக் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

இருபதாம் நூற்றாண்டில் இதுபோன்ற கட்டடங்களை மக்கள் விரும்புவதில்லை. இன்று பல்நோக்குக் கட்டடங்கள் (Unsymmetrical buildings) மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்படுகின்றன. இக்கட்டடங்கள் பல கோணங்களில், பலவித உருவ வேறுபாடுகளோடு அமைக்கப் படுகின்றன. ஒருநோக்குக் கட்டடங்களில் நடுவிடமே வாயிலுக்கு ஏற்றதாகக் கருதப்பட்டது. பல்நோக்குக் கட்டடங்களில் வாயிலை ஒரு மூலையில் அமைப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.

பண்டைக் காலத்தில் கட்டடங்கள் செங்கல், கருங்கல், வண்ணக்கல், சலவைக்கல், சுண்ணச் சாந்து, மணல் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கட்டப்பட்டன. இந்நூற்றாண்டில் சிமெண்டு என்ற புதிய பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. சிமெண்டு கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கட்டட வேலை மிகவும் எளிதாகிவிட்டது. சிமெண்டு, மணல், பொடிக் கற்கள் ஆகியவற்றை ஏற்ற அளவில் கலந்து 'காங்கிரீட்டு' செய்கிறார்கள், அதன் குறுக்கே இரும்புக் கம்பிகளை வைத்து 'வலுப்படுத்தப்பட்ட காங்கிரீட்டு' செய்கிறார்கள். காங்கிரீட்டு கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கட்டடக் கலையில் வியக்கத்தக்க மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தூண் தாங்கும் கட்டடங்கள் (Column frammed structures): மேற் கூரையின் பளுவைத் தூண்கள் பகிர்ந்து கொள்ளுதலே இக்கட்டடத்தின் சிறப்பியல்பாகும். மதுரைத் திருமலை நாயக்கர் மகாலும், சிதம்பரத்திலுள்ள ஆயிரங்கால் மண்டபமும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். ஆனால் இவ்விரு கட்டடங்களிலும் நாட்டப்பட்டுள்ள பெரும் பெரும் தூண்கள் இடத்தைப் பெரிதும் அடைத்துக் கொண்டிருக்கின்றன. வலுப்படுத்தப் பட்டுள்ள காங்கிரீட்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தூண் தாங்கும் கட்டடங்கள் மிகவும் பிரபலமடையத் தொடங்கி யிருக்கின்றன. வலுப்படுத்தப்பட்ட காங்கிரீட்டுகளைக் கொண்டு சிறிய தூண்களை அமைத்து, எங்கெங்கு மறைப்புச் சுவர்கள் தேவையோ அங்கெல்லாம் மிகவும் அகலக் குறைவான சுவர்களைக் கட்டிவிடுகிறார்கள். பல பெரிய கடைகள், தொழிற்சாலைகள் முதலியன அமைப்பதற்கு இக்கட்டட முறை பெரிதும் பயன்படுகின்றது.

பிரித்தமைக்கும் கட்டடங்கள் (Collapsible buildings): இக்கட்டடங்கள் மேலை நாடுகளில் நடுத்தர வகுப்பினராலும், அலுவலகங்களில் வேலை செய்வோராலும் பெரிதும் விரும்பப்படுகின்றன. இக்கட்டடங்கள் பல மூலைத்தூண்களாலும், சிமெண்டுப் பலகைகளாலும் அமைக்கப்படுகின்றன. தூண்களில் பலகைகள் செருகுவதற்குத் தேவையான இடைவெளிகள் விடப்பட்டிருக்கும். இது போன்ற கட்டடங்களைத் தேவையான பொழுது பிரித்து எடுத்துச் சென்று வேறு இடங்களில் அமைத்துக் கொள்ளலாம், நம் நாட்டில் கட்டடங்களில் வெளிப்புறச்சுவர் (Compound walls) அமைப்பதற்கு மட்டும் இம்முறை கையாளப் படுகிறது.

புறக்காழ்க் கட்டட முறை (Hollow block building): செங்கற்களைப் போல் சிமெண்டினால் பெருங்கற்கள் செய்யப்படுகின்றன. சிக்கனத்தின் பொருட்டு இடையில் தொளை விடப்பட்டு இக்கற்கள் அமைக்கப் பெறுகின்றன. இக்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச் சுவர்கள் எழுப்பப்படுகின்றன. இம்முறையைக் கட்டடங்களின் உட்புறச்சுவர்கள் அமைக்கக் கைக்கொள்ளுகின்றனர்.

இடச்சுருக்கம் : உலக மக்களின் எண்ணிக்கை தாள் தோறும் நூறாயிரம் நூறாயிரமாகப் பெருகிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மக்களின் குடியிருப்புக்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. வீட்டு நிலங்களின் விலையும் ஒன்றுக்குப் பத்தாகப் பெருகிக்கொண்டிருக்கிறது. எனவே சிறு இடத்தை. வாங்கி அதில் பல வசதிகளையும் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரு.. வீட்டை எடுத்துக் கொண்டால் அதில் குறுக்குச் சுவர்கள் பல இருப்பதைக் காணலாம். இச்சுவர்களை மிகவும் மெல்லியவையாகக் கட்டினால், வீட்டின் உட்பரப்பு மிகுந்து காணப்படும். புதிய முறையில் கட்டப்படும் வீடுகளில் வெளிச்சுவர்கள் கனமானவையாகவும், உட்சுவர்கள் ஒன்பது அங்குல கனத்திற்கு மிகாமலும் கட்டப்படுகின்றன. கூரையின் பளுவை வெளிச்சுவர்களே தாங்கிக் கொள்கின்றன.

பண்டைக் காலத்தில் செல்வர்கள் மிகப் பரந்த பல அடுக்கு மாடிகளையுடைய மாளிகைகளையே பெரிதும் விரும்பினர். இன்று நிலைமை மாறிவிட்டது. 'சிறுகக் கட்டிப் பெருக வாழ்' என்ற பழமொழியை வாழ்க்கையில் கடைப் பிடிக்கத் தொடங்கி விட்டனர். வீட்டைச் சிறியதாகக் கட்டிச் சுற்றிலும் திறந்த வெளிகள் இருக்கும்படி விட்டுச் சுற்றுச்சுவர் எழுப்புகின்றனர். அத்திறந்த வெளியில் இளமரங்களையும், அழகிய பூச்செடிகளையும் பயிரிட்டு வீட்டைக் கலையழகோடு வைத்துக் கொள்ளப் பெரிதும் விரும்புகின்றனர். வீட்டோடு வீட்டை ஒட்டிக் கட்டுவது வாழ்க்கை நலத்திற்கு ஏற்றதல்ல என்று மக்கள் உணருகிறார்கள். சுரங்கக் கழிநீர்ப் பாதைகள் சுற்றுப்புறத் தூய்மைக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.

வண்ணத் தளவைமப்பு (Mossaic flooring): பண்டைக் காலத்தில் அரசர்களும் செல்வர்களும் அழகானதும் வழவழப்பானதுமான பளிங்குக் கற்களைத் தமது மாளிகைகளில் பதித்துத் தளம் அமைத்தனர்.இக்கற்கள் மிகவும் விலையுயர்ந்தவை. ஆனால் இக்காலத்திலோ வெள்ளைச் சிமெண்டு. மணல், கண்ணாடிக் கற்கள் ஆகியவற்றைப் பயன் படுத்திச் சிறுசிறு பலகைகள் செய்து நிலத்தில் பதித்துத் தளம் அமைக்கின்றனர். தளங்களில் மட்டுமின்றி, சுவர்களிலும் சிறிது உயரத்திற்கு இப்பலகைகளைப் பதிக்கின்றனர். இத்தள வமைப்பு மிகக் கவர்ச்சியாக இருப்பதோடு, அழுக்குப் படியாமல் தூய்மையாகவும் காட்சி யளிக்கிறது.

பூச்சு முறை: பண்டைக் காலங்களில் தூய்மையின் பொருட்டும், சுகாதாரத்தின் பொருட்டும் சுவர்களுக்குச் சுண்ணாம்பினால் வெள்ளையடிப்பது வழக்கம். இன்று சுவர்களுக்கு வண்ணம் பூசுவது நாகரிகமாகக் கருதப்படுகிறது. சுண்ணப்பூச்சுச் சில திங்கள்களில் உதிர்ந்துவிடும். சுவரில் சாயும் போது கண்ணம் நம்மேல் ஒட்டிக் கொள்ளும். ஒட்டாமலும், விரைவில் அழியாமலும் ஆண்டுக் கணக்கில் இருக்கக் கூடியதான உயர்ந்த வண்ணப் பூச்சுக்கள் (Silvicrete) இப்பொழுது வீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.\

இவ்வாறு பல துறைகளிலும் கட்டடக் கலை வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. எளிமை, வாழ்க்கை வசதி, சுகாதாரம் ஆகிய மூன்றுமே இன்றைய கட்டடக் கலையின் நோக்கங்களாக இருக்கின்றன.

மேற்படித்த இருபதாம் நூற்றாண்டின் கட்டடக் கலையினை நுகரும் நாம் பண்டைக் கட்டடக் கலையை நோக்குங்கால், நினைவலைகளில் எழும் கதைகளைப் போன்று தோன்றி நம்மை வியப்பிலாழ்த்துகின்றன அல்லவா?