உள்ளடக்கத்துக்குச் செல்

கருத்துக் கண்காட்சி/புதுவை பு. அ. பெரியசாமிப் பிள்ளை

விக்கிமூலம் இலிருந்து

புலவர் பகுதி

4. புதுவை பு.அ. பெரியசாமிப் பிள்ளை

பெரியசாமி:

"புதுச்சேரி என்றால் என்னவோ என்று எண்ணிவிட வேண்டா; இங்கே ஒரு சாமி இருக்கிறது; சாமி என்றால் சாமியிலும் சாமி பெரிய சாமி"-

இந்தப் புகழுரை, 'புதுவை மகா வித்துவான்’ எனப்படும் பெரும்புலவர் பு.அ.பெரிய சாமிப் பிள்ளையவர்களைப்பற்றி, அன்று மாபெருங்கல்விக் கடலாய் விளங்கிய திருப் பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளார் புதுவைக்கு எழுந்தருளியபோது மொழிந்தது.

புதுவைக்குப் பெருமை

‘சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' என்று புலவர் பிசிராந்தையாரும், எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என்று ஔவையாரும் மொழிந்துள்ளபடி, இடத்தினால் மக்களுக்குப் பெருமையில்லை. பிறந்து வாழும் உயர்ந்த மக்களாலேயே இடத்திற்குப் பெருமை ஏற்படும். இந்தப் பொது உண்மைக்குப் புதுச்சேரியும் உட்பட்டதே.

புதுச்சேரிக்கு நிலையான பெருமையளித்தவர்களுள் தலையானவர்கள் பத்தொன்பது-இருபதாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ஆவர். புதிய புதுவை. உருவான பத்தொன்பதாம் நூற்றாண்டளவில், புதுவை வளர்த்த புலவர்களுள், காலத்தாலும் தகுதியாலும் ஒருசேர முதன்மையானவர் பு.அ.பெரியசாமிப் பிள்ளையே. பெரிய புரட்சிக்காரர்களான சுப்பிரமணிய பாரதியார், வ.வெ.சு. ஐயர் முதலானவர்கள், பெரியசாமிப்பிள்ளை தலைமை தாங்கி நடத்திய கலைமகள் கழகத்தின் உறுப்பினர்கள். பாவேந்தர் பாரதிதாசனோ பெரியசாமிப்பிள்ளையின் மாணாக்கர். இன்ன பிற செய்திகளைக் கொண்டு பெரியசாமிப் பிள்ளையை நம் உள்ளத்திரையில் ஒவியப்படுத்திக் கொள்ளலாம்.

தோற்றம்:

பெரியசாமிப் பிள்ளை புதுவை நகருக்கு மேற்கே ஒரு கல் தொலைவிலுள்ள குயப்பாளையம் என்னும் ஊரில் கி.பி. 1843 ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் நாள் பிறந்தார். தந்தையார் அப்பாசாமிப்பிள்ளை; தாயார் பூரணி அம்மா,

கல்வி:

இவர் இளமையில், புதுவை அம்பலத்தாடையர் மடத்தின் தலைவராய்ச் சின்னாள் விளங்கிய நாகலிங்க அடிகளாரிடம் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை நன்கு தெளிவுறக்கற்றார். தம் ஓயாத உறுதியான சொந்த உழைப்பினால் மேன்மேலும் தமிழ்ப் புலமையை வளர்த்து வளமுடைய தாக்கிக் கொண்டார். இருபது வயதிலேயே எப்பொருள் பற்றியும் எடுத்த எடுப்பில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றார். நாளடைவில் சிறந்த நூற்கள் பல இயற்றிப் பீடும் பெருமையும் உற்றார். இவரது பெரும் புலமைத் திறமறிந்த பெரியோர் பலர் இவரது நட்பை நாடிப் பெற்றுப் பலபடப் பாராட்டலாயினர்.

அவைக்களப் புலவர்:

அந்த நாளில் புதுவையில் 'லூய் ஞானப்பிரகாச முதலியார்’ என்னும் மாபெருஞ் செல்வர், அருங்கலை ஆர்வலராயும் வரையாது வழங்கும் வள்ளலாயும் திகழ்ந்தார் அவர்தம் அவைக்களப் புலவராய்ப் பிள்ளையவர்கள் வீற்றிருந்து பெருமை செய்தார். முதலியாரும் அவரிடம் வரும் அன்பர்களும் புலவரின் நாநலமும் பாநலமும் பெற்றுத் துய்த்து மகிழ்ந்தனர்.

மாணாக்கர்கள்:

பெரும் புலவர் பிள்ளையவர்களிடம் கல்வி பயின்றோர் கணக்கிலர். அவர்களுள். பங்காரு பத்தர், இராமாநுசச் செட்டியார், துரைசாமி முதலியார், வேங்கடாசல நாய்க்கர் கனக. சுப்புரத்தினம் என்னும் பாரதிதாசன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பிள்ளையவர்களின் மாணாக்கர் ஒவ்வொருவரும் பெரும் புலவராய்த் திகழ்ந்து பாக்கள் பலவும் நூல்கள் பலவும் இயற்றியும், இதழ்கள் நடத்தியும், கழகங்கள் கண்டும் சிறந்திருந்தமையைப் பலரும் அறிவர். ‘தாய் பத்தடி தாண்டினால், குட்டி பதினாறடி தாண்டும்’ என்னும் பழமொழியின் உண்மையைப் பாரதி தாசன் மெய்ப்பித்த வரலாறு நாடறிந்த செய்தி.

கற்பிக்கும் கலை மன்னர்:

புலவர் பெரியசாமி கற்பிக்கும் கலையில் பெருமன்னராய்த் திகழ்ந்ததாகப் பாராட்டப்படுகிறார். வாய் திறந்து ஒருசில சொற்கள் சொல்வதற்கே பணம் எதிர்பார்க்கும் இவ்வுலகில், இவர் பணமின்றியே பல மணி நேரம் அன்புடனும் இன்முகத்துடனும் பாடம் கற்பித்தாராம். மாணாக்கராக இளைத்துக் களைத்தால்தான் பாடம் நிற்குமே தவிர, புலவர் தம் களைப்பினிமித்தம் பாடத்தை நிறுத்துவ தில்லையாம். வைகறை நான்கு மணிக்கேகூடச் சிலருக்குப் பாடம் சொல்லிய துண்டாம். மாணாக்கர்கள் திண்ணையில் அமர்ந்து பாடம் கேட்க, தாம் எள் துழவிக் கொண்டும்-நெல் துழவிக் கொண்டுங்கூடப்பாடம் சொல்லுவாராம். எள்ளும் நெல்லும் துழவும் போதும் பாடத்தை நிறுத்தாத ஆர்வத்தை - அக்கறையை என்னென்று புகழ்வது !

பாராட்டு:

புலவர் அவர்கள் பாடங் 'கற்பித்த சிறப்பினைப் பற்றித் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளார் பின் வருமாறு பாராட்டினார்களாம்:

“இந்நல்லாசிரியர் தம்மையடுத்து வாசிக்க வருபவர் பால் பொருள் ஒரு காசும் பெறுவதில்லை; அவர்கள் தம்மைப்போல் படித்துச் சிறந்த புலவர்களாகவேண்டும் என்ற அவ்வொரு விருப்பமே பொருளாகக் கொண்டதாலேயே இங்குப் பலர் பாட்டெழுதும் பாவலராகக் காணப் படுகின்றனர்" -இது ஞானியாரின் பாராட்டு.

புலமைப் பரப்பு:

ஞானியார் அடிகளின் பாராட்டேயன்றி, பல்வேறு வெளியூர்களில் வாழ்ந்த இருபதின்மருக்கும் மேற்பட்ட புலவர்கள் பலர், பிள்ளையவர்களின் பெரும் புலமையைப் பாராட்டிப் பாடல்கள் பல இயற்றியுள்ளனர். உள்ளுர்ப் புலவர் பெருமக்களின் பாராட்டுப் பாடல்களுக்கோ அளவே யில்லை. இதைக் கொண்டு, பெரியசாமிப் பிள்ளையின் பெரும்புலமையின் ஆழமும் அகலமும் உயரமும் புலப்படும். மகாவித்துவான் பெரியசாமிப்பிள்ளையின் மாணாக்கருள் ஒருவர் எனத் தம் பெயருக்கு முன்னால் பொறித் துக் கொள்வதை அன்று பலர் பெருமையாகக் கருதினார்கள் எனில், பிள்ளையவர்தம் பெருமபுலமையின் பரப்பளவு நன்கு புலனாகுமே!

புலமைப் பேராண்மை:

பெரியசாமியவர்கள் புலமைப் பேராண்மை உடைய வராக விளங்கினார். பிற புலவர்களின் பாடல்களில்படைப்புக்களில் குற்றங் கண்டவழி கடிந்துரைத்தார். தம் முடன் மோதியவருக்குத் தக்க பதிலடி தந்தார். ஒருமுறை இவர் சென்னை சென்றிருந்த போது, அங்கே ஒரு குறும்பர், ‘இவர்தான் மகா வித்துவானா? இவருக்கு இலக்கணத்தில் ஒரு மாத்திரையின் அளவு தெரியுமா? என்று கிண்டல் செய்தாராம். அதற்குப் பிள்ளையவர்கள், ஒரு மாத்திரை மட்டுமன்று; கால் மாத்திரை, அரை மாத்திரை, முக்கால் மாத்திரை ஆகியவாற்றின் அளவும் தெரியும்’ எனக் கூறி அவற்றை நன்கு விளக்கி அவரை வாயடைக்கச் செய்தாராம்.

பேராண்மையிடையே ஊராண்மை:

புலமைப் பேராண்மையுடைய பிள்ளையவர்கள், பிற புலவர்கள் தளர்ச்சியுற்றக்கால் அவர்கட்கு ஊராண்மை புரியும் அதாவது உதவி செய்யும் பேரிரக்கமும் உடையவராக விளங்கினார். ஒரு கால், புதுவைக் காசுக்கடைப்

பகுதியில் வெளியூர்ப் புலவர் ஒருவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அதுகாலை, அவர் பிழைபடக் கூறிய ஒரு கருத்தைப் பெரியசாமிப் பிள்ளையின் மாணாக்கப் புலவர் ஒருவர் மறுத்தார். புலவர் இருவர்க்குமிடையே பெரிய சொற்போர் மூண்டது. உள்ளுர்ப் புலவர் வெளியூர்ப் புலவர்மேல் ‘அணுகுண்டுகளை’ அள்ளி அள்ளி வீசினார். வெளியூர்ப் புலவர் தாக்குப் பிடிக்கமுடியாமல் திக்குமுக் காடினார். அவ்வேளை, பிள்ளையவர்கள் வந்து, ‘வெளியூராரை நாம் மதித்துப் போற்றவேண்டும்’ என்று தம் மாணாக்கரிடம் கூறி அமரவைத்து, வெளியூர்ப் புலவர் தொடர்ந்து சொற்பொழிவாற்ற வழிசெய்து, ‘இறுதிவரை உடன் இருந்து இனிதே கூட்டத்தை முடித்துக் கொடுத்து விட்டுச் சென்றார்களாம்.

“பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு”

என்பது வள்ளுவர் வாய்மொழியாயிற்றே!

அகமும் முகமும்:

கீழ்ப்பாய்ச்சும், நெடுஞ்சட்டையும், வலப்புறத்தோளுக்கும் இடப்புற இடுப்புக்குமாகக் குறுக்குக் கச்சைபோல் போடப்பட்ட மேலாடையும், அழகிய தலைப்பாகையும் பெரிய மீசையும் மாநிறமும் நடுத்தரமான உயரமும் பருமனும் கொண்டிருந்த பிள்ளையவர்கள், அன்பும் அமைதியும்-கனிவும் பணிவும் கொண்ட தம் அகத்தோற்றத்தை முகத்தோற்றத்தில் வெளிப்படுத்தினார்.

நூல்கள்

இவ்வாறு பெறலரு நற்பண்புகளுடன் பெருந்தமிழ்ப் புலமை ஓச்சிய புலவர் ஏறாகிய பெரியசாமியவர்கள்



இயற்றிய நூல்கள் பல; அவை: கந்தர் நிரோட்டக அந்தாதி, சிவ சன்னிதான முறையீடு, சித்தி விநாயகர் பதிகம், சுப்பிரமணியர் நிரோட்டக யமகவெண்பா, புதுவைக் கலம்பகம், புதுவை வெண்பா, யமக மயிலத் தந்தாதி, மயிலக் கலம்பகம், மயிலைச் சிலேடை வெண்பா, இராமாயணத் சங்கிரகம், அப்பூதி நாயனார் சரித்திரப்பா, புரூரவச் சக்கரவர்த்தி வாசகப்பா,சூரபத்மன் சரித்திரப்பா, ஞானப்பிரகாசர் புகழ்ப் பாமாலை, இயற்றமிழ்ப் பாமாலை, நலங்குப்பாடல்கள், திருமணப்பாடல்கள் முதலியனவாகும். உதடு குவித்து ஒலிக்கும் உ, ஊ,ஒ,ஓ முதலிய எழுத்துக்கள் வராமல் பாடுவது நிரோட்டகமாகும். நிரோட்டகம், யமகம், சிலேடை முதலியன எழுதுதல் மிகவும் அருமையாகும். இவையே யன்றித் தனிப் பாடல்கள் பல பாடியுள்ளார்.

முத்தமிழ்ப் பாவலர்:

பிள்ளையவர்கள் இயற்றமிழேயன்றி, இசைத்தமிழ்நாடகத் தமிழிலும் வல்லுநராய்க் காணப்படுகிறார். இராமாயணச் சங்கிரகப் பாடலை ஆரபிஇராகம்-ஆதிதாளம் அமைத்துப் பாட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்பூதி நாயனார் சரித்திரப்பா, சூரபத்மன் சரித்திரப்பா, புரூரவச் சக்கரவர்த்தி வாசகப்பா ஆகியவை இசையுடன் பாடி நடித்தற்குரிய இசை நாடகங்களாகும். புதுவையில் இவை அன்று நடிக்கப்பட்டன. சூரபத்மன் சரித்திரப்பா, சாரம் முருகன் கோயிலில் கந்தர் சட்டி விழாவின்போது இன்றும் நடிக்கப்படுகிறது. அச்சாகியுள்ள புரூரவச் சக்கரவர்த்தி வாசகப்பாவின் முன்னுரையில், அந்நாடக நூல் நடிப்புடன் அரங்கேற்றப்பட்டதாக ஆசிரியரே தெரிவித்துள்ளார். அப்பூதி நாயனார் சரித்திரப்பா, உரையாடலும் பல்வேறு வண்ணப் பாக்களும் கொண்டது. புரூரவச்

சக்கரவர்த்தி வாசகப்பாவோ, (வசன) உரையாடலே இன்றி, முற்றிலும் இசைப்பாடல்கள் மட்டுமே கொண்ட இசை நாடகம் ஆகும். இந்நூல், சிறியனவும் பெரியனவுமாக 1172 இசைப்பாடல்கள் கொண்டதொரு பெரிய நூலாகும்.. இசை நாடகம் அன்று ‘வாசகப்பா’ என அழைக்கப் பட்டது போலும்.

ஒரு சோறு பதம்

பெரியசாமிப்புலவரின் இலக்கியநயத்தின் மாதிரிக்காக மயிலக் கலம்பகம் என்னும் நூலிலிருந்து மறம்’ என்னும் தலைப்புடைய ஒரு பாடல் சோற்றைப் பதம் பார்ப்போமே. மறவர் குலத்தில் பெண் கேட்டுவர அரசன் அனுப்பிய தூதனிடம், அரசனுக்குப் பெண் கொடுக்க முடியாதென மறவர்கள் மறுத்துரைப்பதாக உள்ள பாடலே ‘மறம்’ என்பது. இனிப் பாடல் வருமாறு:

“மட்டில்லா மகிமையுடன் நாளும் ஓங்கு
     மயிலவரை வரைவாழும் மறவர் நாங்கள்
சட்டியிலே கொக்கவித்த மறவனாம்வேள்
     தனக்கெங்கள் குலத்துதித்த மின்னை ஈயாது
இட்டமுடன் வளர்த்த பொன்னைக் கொடுப்பதற்கே
     எவ்வளவோ போர்செய்தோம் இறைவன் தூதா
வெட்டிமிளிர் பூவரசை வேலால் வைப்போம்
     விளம்பு பெண்ணை வினவியஉன் வேந்தனுக்கே”.

அதாவது, 'சட்டியிலே கொக்கு அவித்த மறவனாகிய முருகனுக்கேகூட, நாங்கள் பெற்ற பெண்ணைக் கொடாமல், வளர்ப்புப் பெண்ணாகிய வள்ளியையே, அதிலும் பெரிய போராட்டத்திற்கிடையே கொடுத்தோம். எனவே, எங்கள் பெண்ணைக் கேட்டால், நாடாளும் அரசரை வேலால் வெட்டி வீழ்த்துவோம்’-என்பது பாடலின்

கருத்து. இப்பாடலில் பொருள் நயத்துடன், இருபொருள் தரும் சொல் நயங்களும் உள்ளன. புலவர் முருகனைச்'சட்டியிலே கொக்கு அவித்த மறவன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 'சட்டி' என்றால் கந்தர் சஷ்டி நாள்; 'கொக்கு' என்றால் மாமரம். சூரபத்மன் மாமரமாய்க் கடலுள் மறைந்துநின்றான். அவனை முருகன் சஷ்டியன்று கொன் றார். இதனையே சட்டியிலே கொக்கு அவித்த மறவன்’ என நயப்படுத்திக் கூறியுள்ளார் புலவர். மேலும் இதில், 'சட்டியிலே கொக்கு ஆக்கி உண்ணும் வேடன்’ என்னும் குறிப்பும் படுகிறது. மற்றும், பாடலின் இறுதியில் உள்ள

'வெட்டிமிளிர் பூவரசை வேலால் வைப்போம்
விளம்பு பெண்ணை வினவியஉன் வேந்தனுக்கே’.

என்னும் தொடரில் பொதிந்துள்ள நயம் சுவைத்துப் பாராட்டத்தக்கது. பெண்ணை என்றால் பனைமரம் 'பெண்ணைக் கேட்டால், அரசை வேலால் வெட்டி வீழ்த்துவோம்’ என்னும் வெளிப்படைப் பொருள் இருக்க, மற் றொரு மறை பொருளும் உள்ளே பொதிந்து கிடக்கிறது. அதாவது, வெட்டிவேர், பூவரசுமரம், வேலமரம், ஆல மரம், பனைமரம் ஆகியவற்றின் பெயர்கள் மறைந்துள் ளன. பெண்ணை அதாவது பனைமரம் கேட்டவர்க்கு வெட்டிவேர், பூவரசுமரம், வேலமரம், ஆலமரம் ஆகிய வற்றை முன்வைப்போம் என்னும் உட்பொருள் மறைந்து நின்று மகிழ்வுறுத்துகிறது.

பனிக்காலக் காட்சி: -

புலவர் மற்றொரு பாடலில் பின்வருமாறு பனிக்காலத்தைச் சுவைபெறப் புனைந்துரைத்துள்ளார். பாடல் இதோ-

     வம்புவிடு மாம்பூக்கள் கருகுங் காலம்
          வரகுமுதல் புன்பயிர்கள் வளருங் காலம்

கம்பளத்தை வாலிபரும் களிக்குங் காலம்
கனல் கலத்தை விருத்தரெலாம்.கைக்கொள் காலம்
தம்பதிதோள் மின்னார்கள் தழுவுங் கால்ம்
தழல்புகைபோல் மூடும் இந்தப் பணித்தண்காலம்
நம்பினருக்கு அருள் முருகர் மயில வெற்பில்
நாயகரை நான் விடுத்து நலியுங் காலம்’

இந்தப் பணிக்காலக் காட்சிப் பாடல் மிக்க சுவையின்பம் ஈந்து, புலவரின் சிறப்பிற்குச் சான்று பகர்கிறது.

மறைவு:

இவ்வாறு தனிப்பெருஞ்சிறப்புடன் புதுவையில் புலமை ஆட்சி நடத்திய பெரியசாமிப் பிள்ளை, 1920 ஆம் ஆண்டு சனவரி 24 ஆம் நாள் இறுதி யெய்தினார். அவரது பிரிவாற்றாது மாணவர் குழாமும் அறிஞர் குழாமும் பாடிய இரங்கற்பாக்கள் கணக்கில. அப்பாக்கள் ஒரு நூல் வடிவில் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றுள், பிள்ளையவர்களின் மாணாக்கராய பாவேந்தர் பாரதிதாசனாரது ஒரு பாடலைக் காணலாம்.

(பதினான்கு சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
பூமியை மறந்துவிட் டீரே எமக்கிங்கோர்
     போக்கிலா தாக்கினிரெம்
புன்மதி விளக்குமதி காரத்தை நீரிங்குப்
     பொற்கதிர்க் கீந்தி ரேனும்
யாமதைப் புதுமையாய்க் கொள்வதுண் டோதினம்
     எங்கள்பாற் காட்டு மன்பை
ஈன்றதாய்க். கீந்துசென் ஹீரெனினு மன்னதால்
     இதயத்துள் அமுத முறுமோ
தாமதமி லாதுகவி பாடிடுந் தன்மையைச்
     சமுத்திரற் கீந்தி ரதுதான்

சாற்றுவது மற்றொர்முறை சாற்றுமோ கீர்த்தியைச்
     சாரிமய மலையில் வைத்துச்
சாமியும் பொறுமையைப் பூமிக்க ளித்தின்சொல்
     சந்தக் குயிற்க ணிட்டுச் -
சகக்கடை வரைப்பெரிய சாமியாம் பெயர்நிறுவித்
     தாணுவடி வெய்தி னிரே".

இப்பாடல், அன்று மிகவும் இளைஞராயிருந்த பாரதி தாசனது புலமையின் கற்பனை வளத்தை அறிவிப்பதோடு, பெரியசாமிப் பிள்ளையின் மாபெரும் புலமைச் சிறப்பையும் உயர்பண்பையும் ஒருசேர அறிவிக்கிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியுமே!

கம்பன் வீட்டுக் கட்டுத்தறி:

பெரியசாமிப் பிள்ளையோடு அவர் குடும்பத்தில் புலமையின் ஊற்று அடைபட்டுவிடவில்லை. அவர்தம் ஒரே மைந்தராகிய வைத்தியலிங்கம் பிள்ளையும் சிறந்த புலவராய் விளங்கினார். இவர் பல பதிகங்களும் தனிப் பாக்களும் பாடியுள்ளார். ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமாமே!’

தமிழ்மணம் -

யான் எழுதியுள்ள 'தமிழ் அகராதிக் கலை’ என்னும் நூலுக்கு வேண்டிய குறிப்புகளைத் திரட்டிக் கொண்டிருந்த போது, உரிச் சொல் நிகண்டு என்னும் நூலின் புதுவைப் பதிப்பு எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில் எதிர்பாரா வகையில் பெரியசாமிப் பிள்ளையின் பேரர் வீட்டிலிருந்து அது கிடைத்தது. பிள்ளைக்கு ஒரு வகையில் பேரன் முறையுள்ள திரு சோமசுந்தர ஆசிரியர் அதைத் தேடித் தந்தார். அக்குடும்பத்தில் இன்னும் தமிழ் மணம் வீசிக் கொண்டிருக்கிறது.