கருத்துக் கண்காட்சி/கம்பன் அறிமுக வரலாறு
தன் வரலாற்றுப் பகுதி
8. கம்பன் அறிமுக வரலாறு
இலக்கியம் படிப்பதன் நோக்கங்களுள் சுவையுணர்வும் ஒன்று என்பது மட்டுமன்று; அது தலையாய நோக்காகும். இலக்கியத்தைச் சுவைத்து இன்புற வேண்டும். இலக்கிய இன்பம் யாதினும் இனிது, இது குறித்தே,
“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”
என்றார் திருவள்ளுவனார். நவிலுந் தோறும் நூல் (இலக்கியம்) நயம் பயக்குமாம்.
“தேருந்தொறும் இனிதாம் தமிழ்போன்று இவள்
செங்கனி வாய்
ஆருந்தொறும் இனிதாய் அமிழ்தாம் என தாரு
யிர்க்கே’’
என்று தஞ்சை வாணன் கோவையில் பொய்யாமொழிப் புலவர் கூறியிருப்பதும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.
பாவேந்தர் பாரதிதாசனோ,
“மங்கை யொருத்தி தரும் சுகமும்
எங்கள் மாதமிழ்க்கு ஈடில்லை”
என்று பகர்ந்துள்ளார். தமிழ் இன்பம் என்பதன் பொதுவான கருத்து இலக்கிய இன்பமாகும்.
இவ்வாறு இன்பம் பயக்கும் தமிழ் இலக்கியங்களுள் தலையாயதொன்றுகம்பராமாயணமாகும்.நூலுள்நுழைந்து பார்த்தாலேயே உண்மை விளங்கும். இது கம்பனுக்குப் பெரும் புகழ் நல்கும் படைப்பாகும்.
தக்கவர்கள் வாயிலாகக் கம்பனது அறிமுகம் நமக்குக் கிடைக்குமாயின் நாம் கம்பனை விடமாட்டோம். எனக்குக் கம்பனது அறிமுகம் கிடைத்த வரலாற்றை மிகச் சுருக்கமாகக் கீழே தருகிறேன்.
அறிமுகம் செய்தவர்கள்:
1) யான் 1935-36-ஆம் ஆண்டு காலத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடத்தில், புலவர் புகுமுகத் தேர்வுக்குப் (Entrance) படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது பதினான்கு. கம்பராமாயணத்திலிருந்து, ‘சூளாமணிப் படலம்’ பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. மடத்தின் ஐந்தாம் பட்டத்து அடிகளாரும் அந்தக் காலத்தில் தமிழ் உலகம் முழுவதும் பெரும் புகழ்பெற்றுத் திகழ்ந்தவருமாகிய ‘சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிக சிவாசாரிய அடிகளார்’ எங்களுக்குச் சூளாமணிப் படலம் நடத்தினார்கள். அந்தக் கலை முழுவதையும் துய்ப்பதற்கு ஏற்ற வயது அப்போது இல்லையெனினும்,இலக்கியச் சுவையுணர்விற்கு அடிகளாரால் வித்து ஊன்றப் பெற்றது. பொதுவாகக் கம்பராமாயணத்தில்-சிறப்பாகத் தமிழ் இலக்கியத்தில் நல்ல தேர்ச்சிபெறுவதற்கு அப்போது அடிகோலப்பட்டது. எனவே. கம்பனை எனக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தவர்கள், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) ஞானியார் மடத்து ஐந்தாம் பட்டத்து அடிகளாரேயாவார்கள் .
2) புலவர் புகுமுக வகுப்பில் தேர்ந்ததும், புலவர் (வித்துவான்) பட்டப் படிப்புக்காகத் திருவையாற்று அரசர் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். கல்வி ஆண்டு 1938-39 என்று நினைக்கிறேன். பெரியார் புருடோத்தம நாயுடு அவர்களால், கம்பராமாயணத்தில் புலவர் வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்த அயோத்தியா காண்டம்
நடத்தப் பெற்றது. அப்போது வயது பதினேழு முன்னிலும் இலக்கியத்தைச் சுவைக்கும் பயிற்சி வளர்ந்திருந்தது. பேராசிரியர் புருடோத்தம நாயுடு அவர்கள் இராமயணப் படிப்பில் உருக்கம் ஊட்டினார்கள். நகர் நீங்கு படலம் நடத்திய போது,இராமன் காட்டிற்குப்போகின்றானே என்ற துயரத்தால்,பேராசிரியர் அவர்கள் நடு நடுவே சிறிது தேம்பி அழுததாக எனக்கு நினைவிருக்கின்றது. இந்தக் காலத்து மாணவர்கள் பலரைப் போல அந்தக் காலத்தில் நாங்கள் இல்லை. அடியேன் உட்பட மாணாக்கர் பலர் கண்களிலும் நீர் துளித்த நினைவு எனக்கு இருக்கிறது. இவ்வாறு புருடோத்தம நாயுடு அவர்கள், உருக்கத்துடன்-பக்திச் சுவையுடன் கம்ப இராமாயணத்தைப் படிக்கும் பான்மையில் கம்பனை அறிமுகப் படுத்தினார்கள்.
அவர்கள் பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராய் அமர்ந்து நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வியாக்கியான ஈட்டிற்கு விளக்கம் எழுதிப் பெரும்புகழ் பெற்றதைத் தமிழுலகம் நன்கு அறியும். இத்தகைய பெரியோராலும் கம்பனது அறிமுகம் எனக்குக் கிடைத்தது எனது நற்பேறே.
3) 1940 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் அடியேன் மயிலம் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளனாய் அமர்ந்தேன். பல ஆண்டுகள் மயிலம் கல்லூரியில் பணிபுரிந்தேன். அப்போது புலவர் வகுப்புக்குக் கம்பராமாயணப் பாடம் நடத்தும் பொறுப்பு என்னிடமே விடப்பட்டது. புலவர் வகுப்பிற்குப் பாடம் நடத்த வேண்டும் என்பதனால், கம்பராமாயணத்தை ஒரளவு துருவியும் ஆழமாகவும் படிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இவ்வாறு இயற்கையாகவும் கம்பனது அறிமுகம் எனக்குக் கிடைத்தது.
4) 1942 ஆம் ஆண்டு சனவரித் திங்களில் என் தாயாரும், மார்ச்சுத் திங்களில் என் தந்தையாரும் இறந்து போயினர். இரண்டு திங்கள் இடைவெளியில் பெற்றோர் இருவரையும் இழந்துவிட்ட நான் மிகவும் சோர்ந்து போனேன். எங்கட்கு மூன்று திங்கள் காலம் கோடை விடுமுறை விடப்பட்டது விடுமுறை தொடங்கிய சிலநாளில், ஆறுதலுக்காக ஊரிலிருந்து மயிலம் சென்றேன். அப்போது அங்கே முதுபெரும் புலவர் தோரமங்கலம் அ. வரதநஞ்சையப்பிள்ளை வந்திருந்தார்கள். சொற்பொழிவிற்காக அவர்கள் இதற்கு முன்பும் சிலமுறை வந்திருக்கின்றார்கள். அதனால் அவரது தொடர்பு முன்னமேயே எனக்கு உண்டு.
பெரியார் வரதநஞ்சையப் பிள்ளையவர்களைப் பற்றிச் சில சொற்கள் சொல்ல வேண்டும். அவர்கள் தமிழில் ஆழ்ந்த புலமையுடையவர்கள். அவர்தம் தமிழ் வாழ்த்துப் பாடல்கள் மிகச் சிறந்தவை. அவர்கள் இயற்றிய ‘தமிழரசுக் குறவஞ்சி’ என்னும் இனிய நூல், கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவில் அரங்கேற்றப் பெற்று அவர்கட்குப் பெரும்புகழும் பேரும் பெற்றுத் தந்தது. அவர்கள் எப்போதும் நகைச்சுவையோடு பேசும் இயல்பினர். ஒருநாள் ஒருவர் சாவியைத் தொலைத்து விட்டு, ‘என்சாவி எங்கே எங்கே’ என்று வினவிக் கொண்டிருந்தார். புலவர் அவர்கள் அவரை நோக்கி, ‘சாவி சாவி என்று உசாவிக் கொண்டு இருக்கிறீர்களே’ என்று கூறி அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தினார்கள். ஒருநாள் ஒருவர் மோட்டார் காரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். புலவர் அவர்கள் அவரை நோக்கி “கார் வரவில்லையா? நீ சிறிது நேரம் கார் (காத்திரு); சரி இப்படி உட்கார் ; நீ விரும்புகார் வராததனால் ஒரே புகார் ஏற்பட்டிருக்கிறது” என்றெல்லாம் வேடிக்கையாகப் பேசினார்கள். இன்னும் இவ்வாறு பற்பல கூறலாம்.
இத்தகைய பெரும் புலவர் அவர்கள், இருபது வயதுடைய என்னை நோக்கி,“தம்பி, இந்தப் பயணத்தில் நீ சிறிது சோர்வாகக் காணப்படுகிறாயே! காரணம் என்ன” என்று வினவினார்கள். இரண்டு திங்கள் இடைவெளியில் பெற்றோர் இருவரையும் இழந்துவிட்ட இரங்கத்தக்க எனது நிலையை யான் அவர்கட்குத் தெரிவித்தேன். உடனே புலவர் அவர்கள் எனக்குத் தக்க ஆறுதல்கூறி, “உனக்கு இப்போது விடுமுறைதானே! இந்த விடுமுறைக் காலத்தில் என்னுடனேயே இரு” என்று பணித்தார்கள். அவ்வாறே நான் அவருடனே இருந்தேன். அவர் சொற் பொழிவிற்காகச் சென்ற பல ஊர்கட்கு அவருடனே யானும் சென்றேன். அவர்தம் சொற்பொழிவின் தலைப்புகள் பெரும்பாலும் கம்பராமாயணத்திலிருந்தே கொடுக்கப்பட்டன. சொற்களைப்பொருட்கவையுடன் நகைச்சுவையும் கலந்து பேசுவதில் அவர்கள் மிகவும் வல்லவர்கள். சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவையுடன், ஆழமான கருத்தும் கொண்ட அவர்தம் கம்பராமாயணச் சொற்பொழிவுகளைக் கேட்ட யான் கம்பனிடத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டேன். எனக்கு ஆழ்ந்த அறிமுகம்கிடைத்தது. நான் கம்பராமாயணச் செற்பொழிவு ஆற்றும் போதும், கம்பராமாயணப் பாடம் நடத்தும்போதும் இவ்வாறே சொற்சுவை பொருட்சுவைகளை எடுத்துமொழிய வேண் டும் என எனக்குள்ளே உறுதி பூண்டேன்.
5) அடுத்து, மகா மகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்களின் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் சிலவற்றைக் கேட்டேன். ஒருமுறை அவர்கள் தலைமையில் ‘குறிப்பினால் உணரும் கொள்கை யான்’ என்னும் கம்பராமாயணப் பாடல் தொடரைத் தலைப்பாகத் தந்து சொற்பொழிவும் ஆற்றியுள்ளேன். இலக்கியத்திற்குச் சொல் நயம் பொருள் நயம்
சொல்வதில் பண்டிதமணியவர்கள் மிகவும் வல்லுநர். அவர்தம் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் சிலவும் கம்பனைப் பற்றிஎனக்கு மிகவும் ஆழமாக அறிமுகம் செய்து காட்டின.
எனவே, யானும் சொற்பொழிவுகட்குக் கம்பராமாயணத்திலிருந்து தலைப்பு கொடுக்கலானேன். கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி போல,யானும்சொற்சுவை பொருட்சுவை கூறலானேன். மயிலம் கல்லூரியில் கம்பராமாயணப் பாடம் நடத்தியபோது,சொல்நயம் பொருள் நயம் கூறி மிகவும் அலட்டிக் கொண்டேன். கம்பனை முற்ற முழுதும் சுவைக்க வேண்டும் என விரும்பினேன். 1943 ஆம் ஆண்டு, மூன்று திங்கள் காலம் கோடை விடுமுறை விட்டார்கள். அபபோது கல்லூரி நூல்நிலையத்திலிருந்து கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும் விட்டிற்கு எடுத்து வந்துவிட்டேன்.காலையிலிருந்து மாலை வரை வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு ஆறுகாண்டங்களையும் மனநிறைவோடு படித்து முடித்தேன். நூற்றுக் கணக்கான பாடல்களை மனப்பாடம் செய்தேன்.
இதுநிற்க, கம்பனை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் நன்றாக அறிமுகம் செய்து காட்டியுள்ளார்கள் என்பதற்கும், யானும் ஒரளவேனும் கம்பனைக் கண்டுகொண்டுள்ளேன் என்பதற்கும் சான்று தரவேண்டுமல்லவா? இதோ ஒன்று தருகிறேன்:
தென்னார்க்காடு மாவட்டத்தில் சங்கராபரணி ஆற் றின் வடகரையில் கொடுக்கூர் என்னும் திருமால் திருப்பதி ஒன்றுள்ளது. ஒருமுறை அந்த ஊருக்கு யான் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தேன். சொற்பொழிவின் தலைப்பு ‘ஒரு நாள் பழகிய உத்தமன்’ என்பது- அஃதாவது குகனைப் பற்றியதாகும் அது. அவைத் தலைவர் உயர்திரு, க. இராமநாதன் செட்டியார், B.A.,B.L. ஆவார். இவர்
நல்ல தமிழறிஞர்; சென்னையில் வழக்கறிஞர் தொழில் புரிந்தவர்;சென்னை சைவ சித்தாந்த மகா சமாசத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்; பொதுத் தொண்டு புரிவதில் ஆர்வம் மிக்கவர்; வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் மலேயா சென்று தங்கி, அங்குள்ள இந்தியர் சங்கத்தின் தலைவராய்ப் பணிபுரிந்தவர். இப்பெரியாரது தலைமையில் யான் சொற்பொழிவாற்றி முடித்து அமர்ந்தேன். அப்போது எனக்கு வயது இருபத்தொன்று தொடங்கியிருந்தது.
யான் பேசி அமர்ந்தவுடனே, அங்கிருந்த ஐயங்கார் பெரியார் ஒருவர் எழுந்து தலைவரிடம் சென்று ‘இந்தத் தம்பி பேசியதைப்பற்றி யான் சிறிது பேச வேண்டும்; ஒப்புதல் அளியுங்கள்’ என்று கேட்டார். தலைவர் தயங்கினார். ‘பேசியவர் சிறு பிள்ளை; ஏதோ குற்றங்குறை இருந்தாலும் பெரியவர்களாகிய நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்; எனவே, இதோடு விட்டுவிடுங்கள்’ என்று தலைவர் கேட்டுக் கொண்டார். ‘நான் என்ன பேசப் போகிறேன்-எப்படி பேசப் போகிறேன் என்பதைச் சிறிது நேரம் எனக்குக் கொடுத்துப் பாருங்கள் என்று பெரியவர் வற்புறுத்தினார். பிறகு தலைவர் பெரியவர் பேச ஒப்புதல் அளித்தார். பெரியவர் பேசியதின் சாரத்தை மட்டும் சுருக்கமாக இங்கே தருகிறேன். ‘சுந்தர சண்முகம் இளம் பிள்ளையாயிருப்பினும் இவ்வளவு சிறப்பாகச் சொற்பொழிவாற்றினாரே! நான் வசதியுடையவனாயிருந்தால் அவருக்குக் ‘கனகாபிஷேகம்’ செய்வேன்’ என்பதுபோலத் தொடங்கி என்னை மிகவும் புகழ்ந்து பாராட்டி வாழ்த்தினார். இதுநிற்க.
1943 டிசம்பர் இறுதியில், சீர்காழியில், சைவ சித்தாந்த சமாச இளைஞர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தலைவர் முன்பு சொன்ன க. இராமநாதன் செட்டியார்
அவர்களே. யானும் அம்மாநாட்டில் அவர் தலைமையில் சொற்பொழிவாற்றினேன். யான் பேசத் தொடங்கு முன், தலைவர் என்னைக் கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்து முகத்தான், கொடுக்கூரில் ஐயங்கார் பெரியவர் எனக்குக் கனகாபிஷேகம் செய்ய வேண்டும் என்று பாராட்டிப் பேசினாரே-அந்த நிகழ்ச்சியைக் கூட்டத்தில் எடுத்துக்கூறி, அத்தகைய பாராட்டுதலுக்கு உரிய சுந்தர சண்முகம் இப்பொழுது பேசப் போகிறார் என்று என்னைக் கூட்டத்தாருக்கு அறிமுகப்படுத்தினார்.ஐயையோ என்னைப் பற்றி மிகுதியாகச் சொல்லி விட்டேன் போல் இருக்கிறதே! மன்னிக்க வேண்டுகிறேன். ஒரு சான்றாயினும் தந்தால்தானே, கம்பன் எனக்கு ஓரளவேனும் நன்றாக அறிமுகம் செய்துவைக்கப் பெற்றுள்ளான் என்பது மெய்யாகும்.
அடியேனுக்குக் கம்பனை அறிமுகம் செய்து வைத்த பெரியார்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன். கம்பன் வாழ்க! கன்னித் தமிழ் வாழ்க.