உள்ளடக்கத்துக்குச் செல்

கருத்துக் கண்காட்சி/பகலில் விண்மீன்

விக்கிமூலம் இலிருந்து

மருத்துவப் பகுதி

16. பகலில் விண்மீன்

புதுச்சேரியில் எங்கள் வீட்டில் ஒரு நாள் முற்பகல் பத்து மணியளவில், பொன்னாங்கண்ணிக் கீரை வாங்கி ஆய்ந்து கொண்டிருந்தோம். “அப்போது நான் (சு.ச.), பொன்னாங்கண்ணிக் கீரை கண்ணுக்கு மிகவும் நல்லது என்று சொன்னேன். அதைத் தொடர்ந்து என்மனைவி கூறிய ஒரு கதை வருமாறு:-

ஆண்டுக் கணக்கில் பொன்னாங்கண்ணிக் கீரை பறித்துக் கொண்டு வந்து தெருவிலே கூவி விற்கும் கிழவியொருத்தி, ஒரு நாள் பகலில் திடீரென வானத்தை அண்ணாந்து நோக்கிய போது, அந்தப் பகல் நேரத்திலேயே வானில் உள்ள விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) தெரிந்தனவாம். இது என் மனைவி சொன்ன கதை.

சரி.கீரை ஆய்ந்து முடிந்ததும், யான். திறந்த நடு வாசலில் போய் நின்று கொண்டு, 'ஓடிவாருங்கள்-ஓடி வாருங்கள்’ என்று கூவினேன். உடனே என் மனைவி மக்கள், என்னவோ-ஏதோ என்று பதறிப் பதைத்துப் பரபரப்புடன் ஓடிவந்து என்ன-என்ன என்று வினவினர்.

நான் அப்போது வானத்தைச் சுட்டிக் காட்டி, “அதோ பாருங்கள்-ஆகாயத்தில் நட்சத்திரங்கள் நன்றாகத் தெரிகின்றன’ என்று கூறினேன். பொன்னாங்கண்ணிக் கீரை விற்ற கிழவிக்குப் பகலில் நட்சத்திரங்கள் தெரிந்தன என்று கூறிய கதைக்கு ஏட்டிக்குப் போட்டியாகப் பகலிலேயே உங்களுக்கு ஆகாயத்தில் நட்சத்திரங்கள் தெரிவதாகப் புளுகுகிறீர்கள் - கிண்டல் செய்கிறீர்கள்-என்று கூறிக்கொண்டு என் மனைவி மக்கள் அப்பால் நகர்ந்தனர், நான் கூறியது உண்மையன்று-விளையாட்டே இது நடந்த பல ஆண்டுகட்குப் பின் நேர்ந்த நிகழ்ச்சி ஒன்று வருமாறு:

1982 ஆம் ஆண்டு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொகுப்பியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தயான், சாம்பசிவம் பிள்ளையின் மருத்துவம்- வேதியியல் -மரவியல.- பல துறை அறிவியல் தொடர்பான தமிழ்-ஆங்கில அகர முதலியைப் பார்த்து மரவினப் பெயர்களைக் குறித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெருவியப்பு காத்திருந்தது. அந்நூலில், 'நட்சத்திரம் தோன்றி=பொன்னாங் கண்ணி' என்று ஒரு சொற்பொருள் விளக்கம் தரப்பட்டிருந்தது. அதாவது: ‘நட்சத்திரம் தோன்றி' என்பதற்குப் 'பொன்னாங் கண்ணி' என்று பொருள் எழுதப்பட்டிருந்தது. அதாவது, பொன்னாங்கண்ணிக்கு 'நட்சத்திரம் தோன்றி' என்ற ஒரு பெயர் உண்டு என அறிவிக்கப்பட்டது.

இதைக் கண்டதும், யான் அடைந்த வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. பல ஆண்டுகட்குமுன் எங்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து மேலும் சுவை யூட்டிற்று.

இதனால் நாம் அறிவது, பொன்னாங் கண்ணிக்கீரை, தன்னை உண்பவர்க்குக் கண் பார்வையைக் கூர்மையாக்கும் என்பது, பகலிலேயே விண்மீன்கள் தோன்றித் தெரியும் என்பது. 'உயர்வு நவிற்சி’யாக இருக்கலாம்? அல்லவா ஒரு வேளை சித்தர் யாருக்காவது உண்மையாகவே தெரிந்திருக்குமோ!

இங்கே, இரண்டாம் உலகப்பெரும்போரின்போது ஏற்பட்ட நிகழ்ச்சி ஒன்று நினைவிற்கு வருகிறது: செர்மானியர் தங்கள் போர் வானூர்தியில் இருந்தபடி இங்கிலாந்தைத் தாக்கத் தொடங்கினர், விழிப்படைந்த ஆங்கிலேய வானூர்திப் படையினர், செர்மானியரின் போர் வானூர்திகள் மிக்க தொலைவில் வரும்போதே கண்டு பிடித்துச் சுட்டுத் தாக்கிச் செர்மானியரைச் செயலறச் செய்தனர்.

இந்நிலையில், ஆங்கில வானூர்திப் படையினர் மிக்க தொலைவில் வரும் வானூர்திகளை எவ்வாறு காண முடிகிறது என்பது கேள்விக் குறியாயிற்று. ஆங்கில வானூர்திப் படையினர்க்கு 'கேரட்' (carrot ) நிரம்ப உண்ணத் தருவதால், அவர்கட்குக் கண்பார்வை கூர்மை பெற்று மிக்க தொலைவில் உள்ள பொருள்களையும் கண்டுபிடிக்க முடிகிறது-என்ற செய்தி பரப்பப்பட்டது. இதை அறிந்ததும், இங்கிலாந்தில் கேரட் கிழங்கின் விலை உயர்ந்து விட்டதாம். பலரும் மிகுதியாக வாங்கி உண்ணத் தொடங்கியதே இதற்குக் காரணமாம்.

உண்மை பிறகு தெரிய வந்தது. 'ராடார்' (Rader) என்னும் ‘தொலை இயக்கமானி ' கண்டு பிடிக்கப்பட்டு அமைக்கப்பெற அதன் உதவியால் தொலைவிலுள்ள பொருள்களையும் காண முடிந்தது; அதனால் செர்மானியரின் வான ஊர்திகளை எளிதில் தகர்க்க முடிந்ததுஎன்பதே பிறகு அறியப்பட்ட உண்மை. இந்த 'ராடார் கருவி செய்யும் வேலையைப் பொன்னாங் கண்ணிக் கீரை செய்யும் போலும்!

பொன்னாங் கண்ணிக்கீரைக்கு, ‘கண்ணுக்கு அணி' கண்ணுக்கு இனியான்' என்ற பெயர்கள் உண்மையும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.