கருத்துக் கண்காட்சி/இயற்கை மணி காட்டிகள்
மர இனப் பகுதி (Botany)
17. இயற்கை மணி காட்டிகள்
ஞாயிறு திரும்பி :
ஞாயிறு (சூரியன்) செல்லும் பக்கம் வணங்கித் (சாய்ந்து) திரும்பும் சூரியகாந்திச் செடிக்கு உரியனவாக, “ஞாயிறு திரும்பி; பொழுது வணங்கி ‘பொழுது திரும்பி’ என்னும் பெயர்கள் பின் வரும் நூல்களில் ஏற்றபெற்றிச் சூட்டப்பட்டுள்ளன. அந்நூல்கள் வருமாறு:-
மருத்துவ மலையகராதி, பச்சிலை மூலிகைச் சித்த மருத்துவ அகராதி, பதார்த்த குண அரும்பொருள் மருத்துவ அகராதி, ஃபாபிரியசு (Febricius) தமிழ்-ஆங்கில அகர முதலி, ஜூபிலி தமிழ்ப் பேரகராதி, வின்சுலோ (Winslow) தமிழ்-ஆங்கில அகர முதலி, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக் கழக-ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சிய அகராதி, சாம்ப சிவம் பிள்ளையின் மருத்துவம்-மரஇயல்-அறிவியல் பற்றிய தமிழ்-ஆங்கில அகர முதலி, முய்சே (L. Mousset)-துய்புய் (L. Dupus) என்னும் பிரெஞ்சுத் துறவியர் இருவர் தொகுத்த இலத்தீன் பிரெஞ்சு தமிழ் அகர முதலிபிரெஞ்சு தமிழ் அகர முதலி-தமிழ் பிரெஞ்சு அகர முதலி ஆகிய அகர முதலிகள், லரூசு என்பவரின் Dictionnaire Larousse என்னும் பிரெஞ்சுக்குப் பிரெஞ்சுப் பேரகராதி, Lucien M.Giboin arsr, Jouff stapu Eptiome De Botanique Et De Matiere Medicale De L'Inde என்னும் பிரெஞ்சு நூல், அமெரிக்க-ஆங்கிலக் கலைக் களஞ்சியம் முதலியன. மறுப்பு:
இல்வளவு நூல்களில், சூரியகாந்தி ஞாயிறை நோக்கித் திரும்பும் என்னும் பொருளைக் குறிக்கும் பெயர்கள் கூறப்பட்டிருந்தும், தமிழப் பேரறிஞர் ஒருவர் இதற்கு மறுப்பு தெரிவித்தார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகச் 'செய்தி மலர்’ என்னும் இதழில் யான் எழுதிய மேற்கூறிய கருத்துக்கு அந்த அறிஞர் எழுதிய மறுப்பு வருமாறு:- “சூரியகாந்தி சூரியனை நோக்கித் திரும்புவதில்லை; நெருஞ்சிப் பூதான் திரும்புகிறது; இது பலகாலும் சோதித் தறியப் பட்டது என்பது அவரது மறுப்புக் கருத்து.
மறுப்புக்கு மறுப்பு:
சூரிய காந்தியில் ஏறக்குறைய அறுபது இனங்கள் உண்டு. அவற்றுள் சில, சூரியனை நோக்கித் திரும்பாமலும் இருக்கலாம். நெருஞ்சி பூ சூரியனை நோக்கித் திரும்புவது உண்டு. ஆனால், ஆங்கிலத்தில் Son Flower என்றும், மர நூலாரால் (Botanists) ஃஎலியாந்தஸ் அன்னுசஸ் (Helianthus Annuses) இனத்தைச் சேர்ந்த கூறப்படும் இனத்தைச் சேர்ந்த சூரியகாந்திவகைகள் சூரியனை நோக்கித் திரும் புவது முற்றிலும் உண்மை.
இது சார்பாகச் சில அகர - முதலிகளில் உள்ள நேர் விளக்கம் வருமாறு:-
1. சாம்ப சிவம் பிள்ளையின் தமிழ் ஆங்கில அகர முதலி:-சூரிய. காந்திப் பூ-சூரியன் பக்கம் திரும்பி நிற்கும் பூ -Flower facing the Sun-Helianthus Indica.
2. Encyclopedia Americana:-Helianthus=Sun Flower....Plant With large flower heads that turn to follow the Path of the Sun.
3. Epitome De Botanique.....De L Inde-Helianthus Annus Souriakandicedy-Tournesol, Cultive: (Pondich...)
- { மூன்றாவது நூலில், சூரியகாந்தி புதுச்சேரி வட்டாரத்தில் பயிரிடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சூரியகாந்திச் செடி என்பதன் பெயராக இதில் குறிப் பிடப்பட்டுள்ள Tournesol என்னும் பிரெஞ்சு மரபுத் தொடரின் பொருள், சூரியனை நோக்கித் திரும்புவது’ என்பதாகும். Tourne=Turn=திரும்புதல்; Sol=சூரியன். பிரெஞ்சுத் துறவியர் இருவரின் பிரெஞ்சு-தமிழ் அகரா தியில் உள்ள இதன் பொருள் வருமாறு:
‘Tournesol=சூரியகாந்தி=ஞாயிறுதிரும்பி=பொழுது வணங்கி என்பதாகும்”
அடுத்து, லரூசு பிரெஞ்சுக்குப் பிரெஞ்சுப் பேரகராதியில் (Dictionnaire Larousse) உள்ள இதன் பொருள் விளக்கம் வருமாறு; Tournesol = “... Les Fleurs Se tournent vers le Soleil comme l’ heliotrope et l’ helianthe...” guyslv இதன் பொருளாவது:- “ஹெலி யோத் ரோப்’, ‘ஹெலி யாந்த்’ என்பன போலச் சூரியனை நோக்கித் திரும்பும்மலர்கள் என்பதாம்.
கைப் பூணுக்குக் கண்ணாடி எதற்கு? சூரிய காந்திப் பூக்கள் மட்டு மல்ல-சூரியகாந்தி இலைகளும் சூரியனை நோக்கித் திரும்புவதைப் புதுச்சேரி வட்டாரத்தில் காண லாம். தம்மூர்ப் பக்கத்தில் சூரிய காந்தியைப் பொழுது வணங்கி"என்னும் பெயரால் பொது மக்கள் வழங்குவதுண்டு என்பதாக வேலூர் நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். எனவே, சூரிய காந்தி ஞாயிறு நோக்கித் திரும்புவதுண்டுபொழுது வணங்குவதுண்டு-என்று துணிந்து சொல்லலாம் நேரங்காட்டி:
இக்கருத்துக்கு ஆதரவு அளிக்கும் இன்னொரு செய்தியையும் இங்கே மறப்பதற்கில்லை: சூரிய காந்தி சூரியனைநோக்கிச் சாய்ந்து திரும்புவதைக் கொண்டு நேரத்தையும் (கால மணியையும்) ஒருவாறு உய்த்துணர்ந்து வந்த நம் முன்னோர், இதற்கு ‘நேரம் காட்டி’ என்னும் பெயரையும் சூட்டியுள்ளனர். இப்பெயரை, பச்சிலை மூலிகைச் சித்த மருத்துவ அகராதியிலும், சாம்ப சிவம் பிள்ளையின் தமிழ்-ஆங்கில அகர முதலியிலும் இன்ன பிறவற்றிலும் காணலாம்.
எனவே, சூரிய காந்தி, ஓர் இயற்கை மணி காட்டியாகவும் பண்டு பயன்பட்டு வந்தது என்று கூறலாம் அல்லவா? இனி, சூரியகாந்தியை நோக்கிக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியுள்ள பாடல் பகுதிகளைக் காண்போம்:
“காயும் கதிரவன் மேனியை நோக்கி-உன்
கண்களும் கூசிக் கலங்காவோ?’’
“செங்கதிர் செல்லும் திசையது நோக்கி-உன்
செல்வ முகமும் திரும்புவ தேன்?”
“உன்பெயர் சூரிய காந்தி யென்றார்.அதன்
உண்மையும் இன்றே அறிந்து கொண்டோம்”
(நூல்: மலரும் மாலையும்-தலைப்பு 49. சூரிய காந்தி).
நெருஞ்சி:
சூரியகாந்தியைப் போலவே நெருஞ்சியும் சூரியனை நோக்கித் திரும்புவதாகும். நெருஞ்சியைச் சூரிய காந்தியின் எட்டின தூரத்துப் பங்காளி என்று கூறலாம். சூரிய
காந்தி சங்க நூல்களில் இடம் பெறவில்லை; ஆனால் நெருஞ்சி சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற் களஞ்சிய அகர முதலியில், Helianthus-என்னும் சொல் லுக்கு, சூரிய காந்தியை உட்படுத்திய நெருஞ்சிப் பேரினம்’ எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. எனவே, இவை சூரியனை நோக்கித் திரும்புவதினால் ஓரினம் எனப்படுகிறது.நெருஞ்சி ஞாயிறை நோக்கித் திரும்பும் செய்தி முற்கால இலக்கியங்களாகிய சங்க நூல்களிலும் இடைக்கால இலக்கியங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் குறிப் பிடப்பட்டுள்ளது. அவற்றுள் ஒருசில காண்பாம்:
“ஓங்கு மலைநாடன் ஞாயிறு அனையன், தோழி!
நெருஞ்சி அனைய என்பெரும் பணைத் தோளே”.
(குறுந் தெகை-315)
‘வானிடைச் சுடரொடு திரிதரு நெருஞ்சி போல
என்னொடு திரியேன் ஆயின்’’.
(அகநானூறு: 336-18,19)
“பாழுர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாஅங்கு’
(புறநானூறு: 155-4,5)
‘நீள் சுடர் நெறியை நோக்கு
நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போல்’
(சீவக சிந்தாமணி -461),
“வெஞ்சுடர் நோக்கும் நெருஞ்சியில்’
(இறையனார் அகப் பொருள்-47-உரைப்பாட்டு)
‘ஏழுளைப் புரவியொ டெழுகதிர் நோக்கிய
சிற்றிலை நெருஞ்சிப் பொற்பூ என்ன
நின்முகக் கிளையினர்’
(கல்லாடம்: 65-14,15,16)
“செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப்
பொன்புனை மலரின் புகற்சி போல்’’.
(பெருங் கதை: 2-4:14,15)
“நிரம்பு கதிர்நேர் நெருஞ்சி யெனத் தன்பால்
திரும்பு விழி ஆயமொடு சென்றாள்’.
(திரு வெங்கை உலா-354.355)
‘வெஞ்சுடர் நோக்கு நெருஞ்சியில்"(பாண்டிக்கோவை)
மேற்காட்டியுள்ள அகச் சான்றுகளால், புலவர்களின் கூர்த்த நோக்கில் நெருஞ்சி ஞாயிறை நோக்கித் திரும்புவது நன்கு தென்பட்டிருக்கிறது-என்பது புலனாகும். நெருஞ்சி யைப் போல் சூரியகாந்தி பழைய இலக்கியங் களில் இடம்பெறாமையால், சூரிய காந்தி பிற்காலத்தது-வெளியி லிருந்து வந்தது-என்று எண்ணத் தோன்றுகிறது.
சூரியகாந்தி, நெருஞ்சி என்னும் இரண்டுமே ஞாயிறை நோக்கிச் சாய்ந்து வணங்கித் திரும்புவதால் ஒரளவு நேரத்தை அறிய உதவுகின்றன. எனவே, இவற்றை நேரம் காட்டிகள்’ என்றும் இயற்கை மணி காட்டிகள் என்றும் இயம்பலாம் அன்றோ?