கருத்துக் கண்காட்சி/மன்றம்
கூத்துப் பகுதி
19. மன்றம்
முத்தமிழ் :
முத்தமிழ் என்னும் சிறப்புப் பெயர் தமிழ் மொழிக்கு உண்டு. இயல் தமிழ், இசைத்தமிழ், கூத்துத் தமிழ் என் பன தமிழின் மூன்று பிரிவுகள். இலக்கிய-இலக்கணம் சார்பானவை இயல் தமிழ் என்றும், இசை தொடர்பானவை இசைத் தமிழ் என்றும் இயம்பப்படுகின்றன. கூத்துத் தமிழோ நாட்டியம், நாடகம் என இருவகையினதாகக் கூறப்படுகிறது. -
கூத்துத் தமிழ்:
உள்ளத்து உணர்ச்சிகளை-கருத்துகளை உடல் உறுப்பு களால்(ஒலியுடன்) நடித்துக் காட்டுவதில் நாட்டியமும் நாடக மும் ஒப்புமை உடையன. இவற்றிடையே வேறுபாடாவது: ஒருவரே உடல் உறுப்புகளால் நடிப்பது நாட்டியம்; பலர் உரையாடலுடன் நடிப்பது நாடகம். நாட்டியத்திலும் ஒரு வர்க்குமேல் சிலர் அல்லது பலர் பங்கு பெறுவதும் நடை - முறையில் உள்ளது. இது 'நாட்டிய நாடகம்’ எனப்பெறும். எனவே, இப்போது கூத்துத் தமிழை நாட்டியம், நாடகம், நாட்டிய நாடகம் என மூவகையாகப் பிரிக்கலாம் போலும்! இஃதிருக்க, முதலில் தோன்றியது நாட்டியமா? நாடகமா? - என்பதைத் தெளிவு செய்ய வேண்டும். சிலரை வைத்துச் சிறிய நாடகம் பழக்குவதே முதலில் இயல்பாயுள்ளது. பின்னரே, பலரை வைத்துப் பெரிய நாடகம் பயிற்றப்படுகிறது. இதிலிருந்து, முதலில் ஆள் குறைவாயிருப்பதே எளிது என்பது தெளிவாகிறது. இந்த அடிப்படை விதியுடன் பொருத்திப் பார்க்குங்கால், நாடகத் தினும் நாட்டியமே முற்பட்டது என்பது தெளிவாகும். மகிழ்ச்சியால் பலர் குதிக்கும் இடங்களிலும், முதலில் ஒரு வரே குதிக்கத் தொடங்கி யிருப்பார்.-பின்னரே அவரைத் தொடர்ந்து பலரும் குதித்திருப்பர்.
கூத்துத் தமிழ் நூல்கள்:
நாட்டியத்தையும் நாடகத்தையும் தன்னுட்கொண்ட கூத்தத் தமிழ் தொடர்பான நூல்கள் பல தமிழில் இருந்தன. இதன் சான்றுக்கு, தமிழ் முத்தமிழ் என வழங்கப்படுகின்ற ஒன்றே போதும். ஆனால் கூத்துத் தமிழ் நூல்கள் அழிந்து போயின-அழிக்கப்பட்டு விட்டன. ஆடல் கலை தொடர்பான சில செய்திகளையும் அவற்றைக் கூறும் சில நூல்களையும் பற்றிச் சிலப்பதிகாரம் முதலிய நூல்களாலும் அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்களின் உரை களாலும் நாம் ஒரளவே இன்று அறிய முடிகின்றது.
பயிலிடம்:
‘முத்தமிழ்’ என்னும் பெயர் அமைப்பைக் கொண்டு இம்மூன்று கலைகளும் தமிழகத்தில் பல இடங்களிலும் பயிற்றப்பட்டன - பலராலும் பயிலப்பட்டன-என்னும் உண்மை விளங்கும். இக்காலத்தில் பல்கலைக் கழகம் என்னும் பெயருடைய பல்வேறு வகை நிறுவனங்கள் பல்வேறு கலைகளைப் பயிற்றுகின்றன. இவ்வாறே அக்காலத்திலும் பல நிறுவனங்களால் பல கலைகளும் பயிற்றப்பட்டிருக்கவேண்டும். அன்று இயல் தமிழைப் பயிற்றிய நிறுவனங்கள் பலவும், இசைத் தமிழைப் பயிற்றிய நிறுவனங்கள் பலவும், கூத்துத் தமிழைப் பயிற்றிய நிறுவனங்கள் பலவும், முத்தமிழையும் பயிற்றிய நிறுவனங்கள் சிலவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்திருக்க வேண்டும்.
சிற்சில கலைகளைப் பயிற்றச் சிற்சில இடங்கள்-ஊர்கள் சிறப்புடையனவாக இருந்திருக்க வேண்டும். இயல் தமிழுக்குச் சில இடங்களும், இசைத்தமிழுக்குச் சில இடங்களும், கூத்துத் தமிழுக்குச் சில இடங்களும் சிறந்தனவாய்த் திகழ்ந் திருக்கவேண்டும்.
முத்தமிழுள் கூத்துத் தமிழ் பயிற்றிய இடங்களுள் சிதம்பரம் ஒன்று. ஆனால், பத்தோடு பதினொன்று-அத் தோடு இது ஒன்று’ என்றாற்போல் சிதம்பரத்தைக் கூறி விடுவதற்கில்லை. கூத்துத் தமிழ் பயிற்றிய இடங்களுள் சிறந்தது சிதம்பரம்-தலையாயது சிதம்பரம். இதற்குச் சான்று வேண்டுமா;
நடராசர்:
சிவபெருமானின் தெய்வக் கூறுகளுள் தெய்வத் திரு மேனிகளுள் ஒன்றாகிய நடராசர் திருவுருவத்தை அறியாதார் இலர். நடராசர் என்றால், நடனம் (நாட்டியம்) ஆடுவதில் மன்னர் என்று பொருளாம் எனவே, நாட்டியக் கலையின் தந்தை-தலைவர் நடராசர் என்பது பெற்றாம். நடராசரது நாட்டியத்தின் வாயிலாகவே ஐந்தொழில்கள் (பஞ்ச கிருத்தியங்கள்) நடைபெறுகின்றன என்பதுபோன்ற மெய்யுணர்வுக் (தத்துவக்) கருத்துகளை ஈண்டு விரிக்காமல் விடுப்போம். இந்தக் கருத்து நாட்டியக் கலையின் பெருஞ் சிறப்புக்குத் தக்க சான்றாகும் என்ற அளவோடு அமைவோம். அம்பலம்: -
எல்லா ஊர்ச் சிவன் கோவில்களிலும் நடராசர் திரு மேனியிருப்பினும், ஆங்கெல்லாம் சிவலிங்க உருவமேமுதன்மையுடையது. நடராசர் திரு உருவமோ, ‘பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று’ என்ற அளவினதேயாம். சிதம்பரத்துப் பொன்னம்பலமும் மதுரை வெள்ளியம் பலமும். திருவாலங்காட்டு இரத்தின அம்பலமும், திருநெல்வேலித் தாமர அம்பலமும், குற்றாலத்துச் சித்திர அம்பலமும் ஆகிய ஐந்தும், மற்ற ஊர்களினும் சிறப்பாக நடராசர் நடம்புரியும் இடங்களாகும் என்ற கருத்தும் அறிந்ததே. ஆயினும் இந்த ஐந்து ஊர்களுக்குள் சிதம்பரம் தவிர, மற்ற நான்கு ஊர்களிலும் சிவலிங்க உருவமே பெரும்பாலும் முதன்மை பெற்றுள்ளன. சிதம்பரத்தில் மட்டுமே, சிவலிங்க உருவம் இன்றி நடராசர் உருவம் முதன்மை பெற்றுள்ளது. சிதம்பரத்தில் முதன்மை இட மாகிய மூலத்தானம் நடராசர் திருவுருவம் கொலுவீற்றிருக்கும் அம்பலமேயாகும். இதனை ஞான சபை, சிற் சபை, பொற்சபை, கனக சபை, சிற்றம்பலம், பொன்னம் பலம் என்றெல்லாம் அன்பர்கள் போற்றி மகிழ்வர் சிதம்பரம் என்னும் ஊர்ப்பெயரே, இந்த அம்பலத்தின் பெயரிலிருந்து வந்ததுதான். அம்பலத்திற்குச் சிதம்பரம் என்ற பெயரும் உண்டு; சித்-அம்பரம்=சிதம்பரம். சித்= ஞானம்=அறிவு; அம்பலம்=ஆகாசம்=வெளி. எனவே. சிதம்பரம் என்றால். ஞான ஆகாசம் =அறிவு வெளி என்பது பொருளாம்.
மன்று:
அம்பலம், சபை என வழங்குதல் போலவே, மன்றம் என வழங்குதலும் இலக்கியங்களில் பெருவரவிற்றாம். நடராசர் மன்றுள் ஆடுவதால் மன்றாடி; மன்று மன்றுளாடி’ என்றெல்லாம் பெயர் வழங்கப் பெறுகிறார். இறைவன் இவ்வாறு சிதம்பரத்தில் மன்றுள் ஆடும் நடராசராக ஆன வரலாறு யாதாக இருக்கலாம்?
புராணங்களில்-மெய்யுணர்வு நூல்களில் சிதம்பரம் பற்றியும் நடராசர் பற்றியும் எத்தனையோ கதைகள் வரலாறுகள் பேசப்பட்டுள்ளன. அவற்றை யெல்லாம் ஈண்டு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய தில்லை. அவற்றிற் கெல்லாம் அடிப்படையாய் இருந்திருக்கக் கூடிய இயற்கை நெறி நின்றே ஆராயத் தொடங்குவோம்.
பண்டு, கூத்துத்தமிழின்-ஆடற்கலையின் தலைமையிட மாகச் (கேந்திரமாகச்) சிதம்பரம் திகழ்ந்தது. ஆடல்கலை யின் பல்கலைக்கழகம் (university)ஆகவும் இஃது இருந்திருக்கலாம். பல்வேறிடங்களிலிருந்து இங்கு வந்து கலைஞர்கள் ஆடல் பயின்றிருக்கலாம். ஆடல்கலையில் தேர்ந்தவர்கள் இங்கே வந்து அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கலாம். ஆடல்கலை பயிலும் இடம் மன்றம்’ என்ற பெயரால் பண்டுவழங்கப்பட்டிருக்க வேண்டும். ‘இறைவன் மக்களைப் படைத்தான்-இறைவன் உருவங்களை மக்கள் படைத்தனர் என்பர். மன்றத்தில் ஆடல் பயின்ற மக்கள், இறைவனது ஓவியத்தை எழுதி முதலில் மன்றத்தில் வைத்திருப்பர், இன்றும் இறை ஓவியங்கள் மன்றங்களில் இருப்பதைக் காண்கிறோம் அல்லவா? இறைவனது ஓவியத்தை எழுதிய மக்கள் நாட்டியம் ஆடும் தோற்றத்திலேயே எழுதிவைத் திருப்பர். பின்னர் அந்த ஓவியத்தைச் சிறப்பாகச் சிலை யாக வடித்துவைத்திருப்பர். சிதம்பரத்து மன்றத்தில், தொடக்கத்தில் நடராசர் சிலை ஏற்பட்டவரலாறு இப்படியாக இருந்திருக்கலாம்-என்பது ஒருவகை நுனித்த உய்த் துணர்வேயாகும். கருத்து வேறுபாடு உடையவர்கள் அருள் கூர்த்து பொறுத்துக் கொள்க. மன்றாடுதல்:
அழகிய நடராசர் சிலையை அமைத்து வைத்துக் கொண்டு, அதன் எதிரே ஆடல்கலை பயின்றனர். பயிற்றினர்-வளர்த்தனர். வேறிடங்களில் ஆடல்கலை பயின்றவர்களும், இந்த அம்பலத்தில் வந்து அரங்கேற்றம் செய்து கொண்டனர். இதனை, அறையில் ஆடிப் பழகிய பின்னரே அம்பலத்தில் ஆடவேண்டும்’ என்ற பழமொழியாலும் உய்த்துணரலாம். அரங்கேற்றத்தோடு நின்று விட்டதா? ஆடல் கலைஞர்கட்குள்ளே, மன்றத்தில் ஆடல் போட்டி களும் நடைபெறலாம். இஃது இயற்கைதானே! சிவனுக்கும் காளிக்கும் நடனப் போட்டி நடைபெற்றதாமே. தோல்வி காளிக்குத்தானாம். மன்றில் நடைபெறும் ஆடல் போட்டி உயர் கட்டம் அடைவதுண்டு. வெற்றி-தோல்வி பற்றிய முடிவு பரபரப்புத் தருவதுண்டு. சொற்போர், விற்போர், மற்போர் என்பன போல, மன்றங்களில் ஆடல்போர்ஆடல் போராட்டம் நடைபெற்றது. இதிலிருந்துதான் மன்றாடுதல் என்னும் தொடர், போராடுதல் என்னும் பொருளுக்கும் மாறியிருக்கவேண்டும்.
மன்றம்-சிதம்ப்ரம்: .
நாளடைவில், கலை நிகழ்ச்கி நடைபெறும் இடங்களும் பலர் கூடும் பொது இடங்களும் வழக்காடும் இடங்களும் மன்றங்கள் எனப்பட்டன. இவற்றிற்கெல்லாம். அடிப்படையாக இருந்த முதலிடம், ஆடல் அரங்கு நடை பெற்ற மன்றம் என்னும் பெயருடைய இடமேயாகும். இந்த மன்றம் முதல் முதலில் சிதம்பரத்திலேயே சிறப்புற்றிருந்தது. அந்தக் காலத்தில் மன்றத்திற்குச் செல்கிறேன் என்றால், சிதம்பரம் செல்கிறேன் என்று பொருளாம். இன்று அந்த வட்டாரத்தில், பல்கலைக் கழகத்திற்குச் செல்கிறேன் என்றால், அண்ணாமலை நகருக்குச் செல்கிறேன் என்று பொருள்படுவது போன்றதே அது.
பதினாறாம் நூற்றாண்டில். மண்டல புருடரால் இயற்றப் பெற்ற சூடாமணி நிகண்டு, சிதம்பரத்தின் வேறு பெயர்கள் புலியூர், தில்லை என்பன என்று கூறுகிறது.
‘புலியூர் தில்லை கதிதரு சிதம்பரப்போர்”
என்பது சூடாமணி நிகண்டு நூற்பா. புலிக்கால் முனிவர் (வியாக்கிர பாதர்) வழிபட்ட இடமாதலின், சிதம்பரம் புலியூர் எனப்பட்டது-என்பது புராணக்கதை. பண்டு தில்லை என்னும் மரங்கள் காடாக இருந்ததால், சிதம்பரம் தில்லை என்றும் தில்லை வனம் என்றும் வழங்கப்பட்ட தாம். இஃதிருக்க, எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற சேந்தன்திவாகர நிசுண்டு என்னும் நூல், சிதம்பரத்தின் பழைய பெயர் 'மன்றம்’ என்று கூறுகிறது.
“கூடல் மதுரை; மன்றம் சிதம்பரம்’
என்பது திவாகர நிகண்டு நூற்பா. திவாகர நிகண்டு காலத்தைச் சேர்ந்த பிங்கல நிகண்டும் இவ்வாறே கூறுகின்றது.
இதுகாறும் கூறியவற்றால், சிதம்பரத்தின் உண்மையான பழம் பெரும் பெயர் மன்றம் என்பதும், அப்பெயர் ஏற்பட்ட இயற்கை வரலாறும் தெள்ளிதின் விளங்கும். மன்றம் வாழ்க!