உள்ளடக்கத்துக்குச் செல்

கருத்துக் கண்காட்சி/தேடக் கிடைக்காத செல்வம்

விக்கிமூலம் இலிருந்து

சிறு கதைப் பகுதி

20. தேடக் கிடைக்காத செல்வம்

இப்படி நேருமென்று சேதுநாதன் எதிர் பார்க்கவேயில்லை. அவர் வந்த விரைவு என்ன! இங்கே நடந்ததென்ன !

உண்மையிலேயே அவர் புது மாப்பிள்ளையாகப் பொலிந்தார். இடுப்பிலே உயர்ந்த சரிகைவேட்டி; உடம்பின் மேல் பளபளக்கும் பட்டுச் சட்டை; தோளிலே மடிப்புப் பட்டை அகலத்துக்கும் சரிகை கொண்ட விசிறிமடி; தலை யிலே நீண்ட நேரம் கண்ணாடியும் சீப்புமாய் ஏற்றி இறக்கி வளைத்து நெளித்து வாரி விட்ட வலம்புரிக் கிராப்பு; கழுத்திலே 'மைனர்’ சங்கிலி, கைவிரல்களிலே ஒன்பான் மணி பதித்த மோதிரங்கள்; நெஞ்சத்திலே நிலை கொள்ளாத மோகம்!

சேது நாதனின் எல்லா ஒப்பனைகளும் கலாவின் கண்ணுக்குத் திரையிடத்தான். இடையிலே திரையிடுவதால் மட்டும் எல்லாக் கண்களும் ஏமாந்து விடுமா? 'எக்ஸ்-ரே’ வைத்துப் பார்க்கும் கண்களும் இருக்கத்தானே செய்கின்றன!

கலா ஒரு கை படாத உரோசா. பல தலை முறைகளாகவே முள் இல்லாத உரோசா பரம்பரையில் வந்த அவள், இப்போது தனக்குத் தானே முள் முளைக்கச் செய்து கொண்டதோடு வேலியும் போட்டுக் கொண்டாள். கள்ளம் பொருந்திய உள்ளம் எதுவும் கை தீண்டிப் பறித்து விட முடியாது.

கலா ஒரு வயதுக் குழந்தையா யிருந்தபோதே தாயை இழந்து விட்டாள். அன்று தொடங்கி இன்றுவரை தன் பாட்டி சித்ராதேவியிடமே வளர்ந்து வந்தாள்.

சித்ராதேவி வேசியர் குலத்தைச் சேர்ந்தவள்; தன் அருமை மகள் கோதை கலாவைப் பெற்றுத் தந்து விட்டுக் காலன் கைக்குப் போனதிலிருந்து கலாவைக்கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருகிறாள். பேரப் பெண் என்ற 'பாச’ உணர்வு ஒரு மடங்கு என்றால், செழுமையாக வளர்த்தால் பலி கொடுத்துப் பயன் பெறலாம் என்ற மோச உணர்வு மும்மடங்கு சித்ராதேவிக்கு உண்டு.

கலா இப்போது பதினாறு வயது நிரம்பிய பருவ மங்கை. எந்தத் தரத்தைச் சேர்ந்த ஆடவரும் அவளை ஒருமுறை பார்த்துவிடின், காட்சி இன்பத்திற்காகவாவது மறுமுறையும் அவள் முகத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கொடுக்காமல் தங்கள் கண்களை ஏமாற்ற முடியாது. கண் காட்சியில் கண்ணாடி மாளிகையில் வைத்துக் கண்டு களிக்க வேண்டியவள் அவள். வேசி சித்ரா தேவியின் மகளாகிய கோதை என்னும் அழகு தேவதைக்கும் அரசபோகத்தில் மிதந்த எந்த ஆடவனுக்குமோ பிறந்த உயர்ந்த இன ஒட்டு மாங்கனி வளமாகத் தானே இருக்கும்! அந்தக் கணியைக் கொய்து அருந்தத்தான் சேதுநாதன் வந்திருக்கிறார்.

சேது நாதன் பாண்டிய நாட்டில் பழைய பாளையப் பட்டுப் பரம்பரை ஒன்றினைச் சேர்ந்தவர். ஏராளமான செல்வத்துக்கு உடையவர். இன்னும் சில தலைமுறைகளின் ஆடம்பரச் செலவிற்கும் அவரது செல்வம் தாக்குப் பிடிக்கும்.

சேது நாதனுக்குச் சென்னையிலும் ஒரு பெரிய மாளிகை உண்டு. அடிக்கடி வந்து அங்கே தங்கிப் போவார். நாற்பது வயதைக்கடந்தவர் என்றாலும்; அவரை இன்னும் குறைந்த வயதுக்கு மதிப்பிட வேண்டும். காட்சிக்கு இனியவ ராகிய அவரை விட்டு மைனர்’ விளையாட்டு இன்னும் நீங்கவில்லை. பெண்ணின்பம் அவருக்கு ஒரு பெரும் பொழுது போக்கு.

கலாவுடனும் மற்ற பரிவாரங்களுடனும் சித்ராதேவி சென்னையிலே சில ஆண்டுகளாக முகாம் இட்டுள்ளாள் கலா மலரத் தொடங்கியதும் வண்டுகளும் சுற்றி வட்டமிடத் தொடங்கின. ஆனால், சித்ராதேவியோ, கலாவின் முழு மலர்ச்சிக்கு அரங்கேற்றம் செய்யப் பெரிய பொன் வண்டை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்-அது இப்பொழுது கிடைத்து விட்டது. அந்தப் பொன் வண்டுதான் சேதுநாதன்.

கட்டிளங்கன்னி கலாவை முதல் முதல் சுவைக்க விரும்புபவர்கள் ஐயாயிரம் உரூபா அளிக்க வேண்டும் என்பது பாட்டியின் ஏற்பாடு. ஐயாயிரம் என்ன-பதினையாயிரம் வேண்டுமானாலும் தரத் தயார் சேதுநாதன். தீராத விளையாட்டுப் பிள்ளையாகிய அவருக்கு, இந்தத் தொகை, மற்றவரது காஃபி செலவைப் போன்றதே! இதற்கென்றே உள்ள மாமா மூலம் கலாவின் கட்டில் அறைக்குள் நுழைந்து விட்டார் அவர். பணம் பத்தும் செய்யும்-பணம் பாதாளம் வரைக்கும் பாயும்-என்பார்களே!

சேதுநாதன் இதுவரை தமது வாழ்நாளில் காமக் காட்டிற்குள் புகுந்து எத்தனையோ மான்மறிகளை வேட்டையாடிய துண்டு. இந்தத் துறையில் அவர் மிக்க வல்லுநர் எந்த மானாவது மருண்டாலும் வெருண்டாலும் எப்படியாவது அந்த மானை வளைத்து வலைக்குள் அகப்படுத்திக்கொள்வார். அதற்குரிய நயப்பு எல்லாம் அவருக்குத் தண்ணீர் பட்ட பாடு. ஆனால் கலாவிடம் .........?

கலாவின் ஆரஞ்சு மேனி அழகை அள்ளி அள்ளிப் பருக வேண்டும் என்னும் ஆர்வத்தில் சேதுநாதன் மெய்ம்மறந்து காணப்பட்டார். எத்தனையோ இளைஞர்களை எண்ணி யெண்ணி ஏங்கிப் பெருமூச்சு விடச் செய்து வந்த கலாவின் காந்தள் கைகளைத் தீண்ட அவர் கைகள் விரைந்தன. ஆமைபோல் அவள் தன் கைகளை இழுத்துக்கொண்டாள். ‘வெட்கப்படுகிறாயா?’ என்று கேட்டுக்கொண்டே நெருங்கினார். அவள் நின்றால்தானே! கலா அவருக்குக் கானல்நீர் ஆனாள். அருகில் தெரியும் கானல்நீர், நெருங்க் நெருங்க நகர்ந்துகொண்டே யிருப்பதைப் போல, அவள் நகர்ந்து நகர்ந்து அவரைக் கண்ணாம்பூச்சி சுற்றவைத்துக்கொண்டிருந்தாள்.

இந்தத் துறையில் தமது முதல் தோல்வியை ஒத்துக் கொண்டவர் போல வலிந்து வரவழைத்துக் கொண்ட அசடு வழியும் பொய்யான புன்சிரிப்புடன் சேதுநாதன் அங்கிருந்த ஒரு பஞ்சணையில் அமர்ந்தார். கலாவின் மருட்சிக்குக் காரணம் என்னவாயிருக்கலாம் என்று சிறிது சிந்தித்தார். வெட்கமா? அல்லது விளையாட்டுக்கா? இருக்க முடியாது. வேதனைதான் காரணம் என்பதை அவள் முகத்திலிருந்து வடித்தெடுத்துக் கொண்டார். எப்போதுமே பெண்களிடம் அவர் நளினமாக நடந்து, கொள்வாரே தவிர முரட்டுத்தனம் செய்வதில்லை-வெட்கப்படுகிறாயா கலா? என்று மற்றொரு முறை அமைதியாகக் கேட்டார். 'இல்லை, வேதனைப்படுகிறேன்’ என்ற பதில் கலக்கத்துடன் வந்து, அவர் காதுகளுக்குள் நாராசம் காய்ச்சி விட்டது போல் புகுந்தது.

‘ஏன், நான் சற்று வயதானவன் என்பதினாலா?',

“இல்லை”

"அல்லது நான் உன்னுடன் ஒரு நாளைக்கு உறவாடி விட்டு, பிறகு கைவிட்டுவிடுவேன் என்ற காரணமோ?”

“அதுவும் இல்லை”

“பின் ஏன்?”

“என்னை எதுவும் கேட்டுத் தொந்தரவு செய்யாதீர்கள். நீங்கள் பாட்டியிடம் கொடுத்த ஐயாயிரம் ரூபாய்க்கு ஈடாக என் வைர நெக்லெசைத் தருகிறேன்? எடுத்துக் கொண்டு போய் விடுங்கள்”.

"எனக்குப் பணம் தேவையில்லை; நீதான் தேவை. அதற்காக இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் தரத் தயார்.”

"நீங்கள் பணத்தாலேயே என்னை முழுக்காட்டினாலும் நான் உங்களுக்குக் கிடைக்க மாட்டேன்.”

“ஏன்? கை நிரம்பக் காசை அள்ளி அள்ளிக் கொடுப்பவர்க்குத் திருப்தியளிப்பதுதானே உங்கள் குலத் தொழில்?”

“கை நிரம்ப என்ன? கூரையையே பிரித்துக் கொட்டினாலும் நான் எவர்க்கும் இசைய மாட்டேன்"

அப்படியென்றால் எனக்கு இவ்வளவு சிரமம் கொடுத்திருக்க வேண்டியதில்லையே. இதை நீ முன் கூட்டியே உன் பாட்டி தேவியிடம் தெரிவித்திருக்கலாமே?”

"தெரிவிக்க இனி ஒன்று மில்லை".

“ஓ! தெரிவித்தும் அவள் உன்னை வற்புறுத்தினாளா?"

“ஆம்”

"அப்படியென்றால் உனக்கு இந்தத் தொழில் பிடிக்கவில்லை-அவ்வளவுதானே?”

“ஆம், நான் நல்லவர் ஒருவரை மணந்து கொண்டு குடும்பம் செய்யவே விரும்புகிறேன். வருகிற வண்டுகளுக்கெல்லாம் ஈடு கொடுத்து வாடி வதங்க விரும்பவில்லை. எனக்கு நிலையான வாழ்வளிப்பவரே நான் வணங்கும் தெய்வம்".

கலாவின் கண்டிப்பான பதில், சேதுநாதனுடைய அடங்காத ஆசையின் வன்சிறகை அறுத்தெறிந்து, அவரைச் சிந்தனையில் ஆழ்த்தியது. அவர் எண்ணம் அவரது சொந்தக் குடும்பத்தைச் சுழன்றது.

மணமாகிப் பதினாறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. தம் மனைவி மரகதவல்லிக்கு எவ்வளவோ மருத்துவம் செய்து பார்த்து விட்டார்; ஒன்றும் பயனில்லை. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படிச் சில கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் அவருக்கு விருப்பந்தான் ஆனால் மரகதவல்லி ஒத்துக் கொண்டால்தானே. இனி மேல் தனக்குக் குழந்தை பிறக்கக் கூடும் என்று சொல்லிச் சொல்லி அவள் கணவனது ஆசையை மட்டந்தட்டிக் கொண்டு வருகிறாள். போதாக் குறைக்குத் தன் தம்பியைத் தத்து எடுத்துக் கொண்டு கல்லூரியில் படிக்க வைக்கிறாள். இந்த நிலையில் கணவன் எவ்வாறு இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்க முடியும்?

குடை சாய்ந்திருந்த சேதுநாதனது ஆசை இப்போது நிமிர்ந்து விட்டது. அழகி கலாவை இழக்க அவர் மனம் பொறுக்கவில்லை. குழந்தை யில்லாக் குறையைச் சுட்டிக் காட்டி மரகதவல்லியை எப்படியாவது சரிகட்டிக் கொண்டு கலாவைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் என்ன என்று எண்ணினார். இப்போது அவர் முகத்தில் மகிழ்ச்சிக் கோடு படர்ந்தது. கலாவின் ஒடிந்துபோன உள்ளத்திற்கு முட்டுக் கொடுக்க முயன்றார்.

“கலா! உனக்கு நிலையான வாழ்வுதானே வேண்டும்? நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அந்த நிலையான வாழ்வுக்கு வழி செய்கிறேன் என்றார்” சேதுநாதன்.

"உண்மையாகவா! நீங்கள் பொறுப்பேற்று என் நிலையான வாழ்வுக்கு வழிசெய்கிறீர்களா! நான் ஒன்றும் கனவு காணவில்லையே-நனவுதானே இது! அப்படியென்றால் நான் பெரும் பாக்கியசாலி”-என்றாள் கலா. அவள் முகத்தில் நம்பிக்கையின் சாயல் தெரிந்தது.

விட்ட கோட்டையைப் பிடித்து விட்ட வெற்றிக் களிப்பு சேதுநாதனது முகத்தில் தாண்டவமிட்டது. ‘செண்டு' மணம் கமழும் கைக்குட்டையைப் பிரித்தபடி கலாவை நோக்கி. இப்பொழுதிருந்தே உன்னை நான் என் மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழ்நாள் முழுதும் வைத்துக் காக்கிறேன்” என்று சொன்னார். சொன்ன மாத்திரத்திலேயே கலாவின் முகத்தில் சோகம் முத்திரையிட்டது.

"நீங்கள் என் கணவனாகப் பொறுப்பேற்றுக் கொள்வதை நான் விரும்பவில்லை”.

“பின் என்ன விரும்புகிறாய் என்னிடத்தில்?”

"நீங்கள் எனக்குத் தந்தையாகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்".

"ஏற்றுக் கொண்டு......"

“ஒரு நல்ல இளைஞரைத் தேடி என்னை மணஞ்செய்து கொடுக்கவேண்டும்”.

"ஏன், என்னை மணப்பதால் உனக்கு என்ன குறை?”

“உங்கள் வயதைப் பார்த்தால், நீங்கள் இதற்கு முன்பே மணஞ் செய்துகொண்டிருக்க வேண்டுமே”.

"உண்மைதான்; ஆனால் எனக்குக் குழந்தை இல்லை. அதனால்தான் உன்னை மணக்க விரும்புகிறேன்".

"அப்படியானால் மிகவும் நல்லதாயிற்று".

"ஒத்துக் கொள்கிறாயா கலா?"

"இல்லை. உங்களுக்குக் குழந்தை இல்லாததனால், என்னை உங்கள் குழந்தையாக ஏற்றுக் கொள்ளலாமே, என்கிறேன்”.

“அது நடக்குமா? மனைவியாக ஆசைப்பட்டவளை மகளாக ஏற்றுக் கொள்ள முடியுமா?"

“அப்படியென்றால், என் தாயைப் போல எனக்குத் தற்கொலையைத் தவிர வேறு வழி யில்லையா?”

"என்ன! உன் தாய் தற்கொலை செய்து கொண்டாளா? ஏன்?"

"அது ஒரு பெரிய கதை" என்று சொல்பவள் போல் பெருமூச்சு விடுதல் என்னும் பெயரில் மூக்கிலிருந்து நெருப்பைக் கக்கினாள். கண்கள் முத்துக்களை உதிர்த்தன உடல் முழுதும் வியர்த்து விட்டது. பனியில் நனைந்த பளிங்குச் சிலையானாள் கலா.

“ஏன் கலங்குகிறாய்? ஏதாவது சொன்னால் தானே... ..." என்று உள்ளடங்கிய திரியைத் தூண்டிவிட்டார் சேதுநாதன்.

"சொல்லுகிறேன். சொன்னாலாவது உங்கள் மனம் மாறாதா? பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு என் தாய்க்கு, எனக்கு இப்போது ஏற்பட்டது போன்ற முதல் அனுபவம் ஏற்பட்டதாம். என்னைப் போலவே என் தாய்க்கும் அப்போதே இந்தத் தொழிலில் விருப்பம் இல்லையாம். பாட்டியின் வற்புறுத்தலுக்காக இசைந்தாளாம். முதல் நாள் வரும் இளைஞரை எப்படியாவது வசப்படுத்தி மணந்துகொண்டு குடும்பவாழ்க்கை தொடங்கலாம் என்ற கனவுடன் ஒத்துக்கொண்டாளாம். வந்த இளைஞரோ பெரிய பணக்காரர் வீட்டுப் பிள்ளையாம். நன்றாக எனக்கு நினைவில்லை-படிப்புக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அவ்விளைஞர் வெளியூரிலிருந்து வந்து அங்கே தங்கியிருந்தாராம். வந்த இடத்தில், என் பாட்டி சித்ராதேவி விரித்த வலையில் சிக்கிக் கொண்டாராம். என் தாயோடு முதல் தொடர்பு கொள்ளுமுன்பு, அவளை மணந்துகொள்வதாக வாக்குறுதி அளித்தாராம். அதன் பின்னரே என் தாயைத் தொட முடிந்ததாம். சில நாள் உறவுகொண்டிருந்து விட்டு, பின்பு என் தாய்க்குக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, தன் பெற்றோருக்கு அஞ்சிச் சொந்த ஊருக்கே ஓடிவிட்டாராம்."

"ஊம், அப்புறம்?"

“ஓடியவர் ஓடியவரே என் தாய் ஏமாந்துபோனாள். அந்த இளைஞரின் தொடர்பால் அவள் கருவுற்றாளாம். அவரைக் காணாத ஏக்கத்தால் வருந்திப் புலம்பிக்கொண்டிருந்தாளாம். ஆனால் என் பாட்டிக்கோ, தன் மகள் வருந்துவது பெரிய பித்துக்கொளித்தனமாகப்பட்டது. இந்த வண்டு போனால் இன்னும் உயர்ந்த வண்டு வரும் என்று சொல்லித் தேற்றினாளாம். பாட்டியின் கடல் போன்ற அனுபவத்தில் இந்நிகழ்ச்சி ஒரு சிறு துளியாக இருக்கலாம். ஆனாலும் என் தாய்க்கு ஆறுதல் ஏற்படவில்லை. அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினாளாம். பாட்டியா சொல்லுவாள்? சொன்னால், அவர் இருக்கும் இடத்தைத் தேடி மகள் ஓடிவிட்டாலும் ஓடிவிடலாமல்லவா? அதோடு கூட, அந்த இளைஞரின் சொந்த வரலாறு பற்றி என் பாட்டிக்கும் சரியாகத் தெரியாதாம். இந்த நிலையில் புதுப்புது ஆட்களை அவள் ஏற்பாடு செய்தாளாம். வந்தவழியே எல்லோரையும் என் தாய் அனுப்பிவிட்டாளாம். அந்த முதல் இளைஞரை மணந்து கொண்டு குடும்பவாழ்க்கை நடத்தப் போகிறேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்தாளாம்".

"ஊம், பிறகு என்ன வாயிற்று?"

"இந்த ஊரிலேயே இருந்தால் என்றைக்காவது ஒரு நாள் அந்த இளைஞன் வந்தாலும் வரலாம்; அதனால் தன் மகள் அவனோடு போய்விடவுங்கூடும் என்று அஞ்சிப் பாட்டி ஊரை மாற்றிக் கொண்டாளாம். அதாவது, அந்த ஊரிலிருந்து இந்தச் சென்னைக்குக் குடியேறிவிட்டாளாம்”.

"முன்பு இருந்த ஊர் எது என்று நீ இன்னும் சொல்லவே யில்லையே!”

'ஓ, அதுவா! மறந்துவிட்டேன்-பெங்களுர்'

"பெங்களுரா..." சரி சரி, சென்னைக்கு வந்ததும் உன் தாய் என்ன ஆனாள்?’’

“இந்த ஊரிலே என்னைப் பெற்று விட்டு இறந்து போனாள்.

"ஏதோ தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னாயே”.

“ஆம்! நான் பிறந்த ஒராண்டுவரையும், எப்படியாவது அந்த இளைஞர் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் உயிர் வாழ்ந்து பார்த்தாள்-அவர் கிடைக்கவேயில்லை. இடையிலே பாட்டியின் தொல்லை பொறுக்க முடியவில்லை. பணத்துக்காகப் பலரைத் திருப்தி செய்யும் படி வற்புறுத்திக் கொண்டேயிருந்தாள். அந்த வேதனை தாங்க மாட்டாமல், குழந்தையாகிய என்னையும் மறந்து என் தாய் தற்கொலை செய்துகொண்டாள்’ என்று சொல்லித் தன் கண்களை வெந்நீர் ஊற்றாக ஆக்கிக் கொண்டாள் கலா. அவளது பட்டுத் தளிர் மேனி துயரத்தால் கன்றிவிட்டது.

"இந்தச் செய்தி யெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று சேதுநாதன் கேட்டார்.

என்னை வளர்த்துவந்த செவிலிக் கிழவி இப்படி அடிக்கடிச் சொல்லுவாள். என் தாயின் வரலாற்றைக் கேட்கக்கேட்க, எனக்கும் அவளுக்கிருந்த நல்ல உணர்வு ஏற்பட்டது. அவளை ஏமாற்றிச் சென்றுவிட்ட அந்த இளைஞர்-இல்லை-என் தந்தை எங்கு இருக்கிறாரோ? யார் அறிவார்?" என்று கலா பொருமினாள்.

“அந்த இளைஞரின் நினைவான பொருள் எதுவும் உன் தாயினிடத்தில் சிக்கவில்லையா?” என்று சேதுநாதன் வினவினார்.

"இல்லை, ஒன்றும் சிக்கவில்லை. ஆனால் அவரும் என் தாயும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று உள்ளது. பெற்றோர் நினைவிற்காக நான் அதைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதோ மாட்டியிருக்கிறது பாருங்கள்-அதுதான்" -என்று சொல்லிச் சுவரில் மாட்டியிருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டினாள்.

அந்தப் புகைப் படத்தை உற்றுக் கவனித்த சேதுநாதன், திடீரெனக் கலாவின்மேல் பாய்ந்து, 'கண்ணே’ என்று கதறிக் கொண்டே அவளைக் கட்டியணைத்துக் கொண்டார்.

“என்னை விடுங்கள்! என் உடன்பாடு இல்லாமல் ஏன் என்னைத் தொட்டீர்கள்? இந்த அறையை விட்டு உடனே போய் விடுங்கள்"-என்று கடிந்தபடியே அவரது அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள் கலா.

"கண்ணே கலா! நான்தானம்மா உன் தந்தை. உன் அன்னையை ஏமாற்றிவிட்டு ஓடிப்போன அந்தக் கயவன் நான்தானம்மா! அதற்காகவும், இப்போது நான் உன்னிடம் நடந்து கொண்ட விலங்குச் செயலுக்காகவும் என்னைப் பொறுத்துக் கொள் அம்மா" என்று கெஞ்சியபடியே கலாவின் கால்களைக் கட்டிக் கொண்டார் சேதுநாதன்.

"என் அப்பாவா நீங்கள்! என்ன காரியம் செய்து விட்டீர்கள் அப்பா! நான் வேசித் தொழில் செய்திருப்பின், உங்கள் சொந்த மகளை அந்தத் தொழிலுக்கு அனுப்பியதாகத் தானே பொருள்படும். வேசி வீட்டிற்குச் சென்று பிள்ளை பெறும் ஆண்மக்கள் இதை உணர வேண்டாமா?

‘இனி ஒன்றும் சொல்லாதே கண்ணே! என்னால் தாங்க முடியாது. குழந்தை இல்லாத குறை இனி எனக்கு இல்லை. என் செல்வம் உனக்குத்தான். ஆனால் எனக்கோ நீதான் செல்வம். தேடக் கிடைக்காத செல்வம் - எப்படியோ கிடைத்துவிட்டாய்-என்று கூறி மகிழ்ச்சிக் கூத்தாடினார் தந்தை சேதுநாதன்.

அப்போது கலா சொரிந்த மகிழ்ச்சிக் கண்ணீரில் குளிர்ச்சி இருந்தது.