குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்/கதையமைப்பு
கதையமைப்பு
குயில் கதை ஒரு புராணக் கதையாக அமைந்துள்ளது. பழம் பிறப்புக் கொள்கையடிப்படையிலே கதையைப் பின்னி அதில் வேதாந்தக் கருத்து விரவியிருப்பதாகக் கூறிப் பாட்டை முடிக்கிறார் பாரதியார். புதுமைக் கொள்கையைப் பாடும் பாரதியார். பழம் புராண நம்பிக்கைகளிலிருந்து விடுபடாதவராகவே காட்சியளிக்கின்றார்.
சாரல் கதை பழம் புராணங்களின் மூடத்தனத்தை முறியடிக்கும் குறிக்கோளுடனேயே பாரதிதாசனால் படைக்கப்பட்டிருக்கிறது. தன் குறிக்கோளை அது செம்மையாகச் செய்கிறது. வெறும் குறிக்கோள் உரையாக இல்லாமல் இலக்கியச் சுவையுள்ள ஒரு படைப்பாக அமைந்துள்ளது. அறிவுக் கருத்துக்களை வெல்லம் போன்ற இனிய தமிழில் சுவைமிக்க கற்பனை நயத்தோடு திறமாகப் படைத்துள்ளார் பாரதியின் தாசன்!
குயில் பாட்டின் கதை
குயில் மோகன இசை பாடிக் கொண்டிருக்கிறது. பாவலர் அங்கே செல்கிறார். குயில் தன் காதலை வெளிப்படுத்துகிறது. மீண்டும் நான்காம் நாள் சந்திக்க வருமாறு குயில் கூறுகிறது. காதல் வெறியுந்த மறுநாளே பாவலர் சோலைக்குச் செல்கிறார்.அங்கே கண்ட காட்சி பாவலரைத் திடுக்கிட வைக்கிறது. குயில் ஓர் ஆண் குரங்குடன் காதல் பேசிக் கொண்டிருக்கிறது. மானிடர்களைப் பழித்து இளக்காரமாகப் பேசுகிறது. சினத்துடன் பாவலர் வாளை வீச குரங்கு தப்பிப் போகிறது. குயிலும் மறைகிறது.
மூன்றாம் நாள் மீண்டும் சோலைக்குப் போகிறார். அப்போது குயில் ஒரு காளை மாட்டுடன் காதல்பேசிக் களிக்கிறது. பாவலர் வாளெடுத்து வீசக் காளை மாடு தப்பியோடுகிறது. குயில் மறைந்து விடுகிறது. பாவலர் வீடு திரும்புகிறார்.
மீண்டும் நான்காம் நாள்–குயில்–வரச்சொல்லித் தவணை கொடுத்த நாள்–பாவலர் போகின்றார்.
குயில் மீண்டும் பழைய காதல் பாட்டைப் பாடுகிறது. பாவலர் கோபத்தோடு அதன் பொய்க் காதலைக் கூறிச் சாடுகிறார்.
ஒரு முனிவர் தம் பழம் பிறப்பை யுணர்த்தியதாக ஒரு கதை கூறுகிறது குயில்.
குயில் முன்பிறப்பில் ஒரு வேடர் தலைவன் மகளாகப் பிறந்திருந்ததாம். மாமன் மகன் மாடன் சின்னக் குயிலி என்ற பெயருடைய இந்தப் பெண்ணைத் திருமணம் செய்யக் காத்திருந்தாராம். இதற்கிடையே வேறோர் வேடர் தலைவனுடைய மகன் நெட்டைக் குரங்கனுக்கு மணம் பேசி முடித்து வைத்திருந்தானாம் வேடர் தலைவன்.
இந்நிலையில் காட்டுக்கு வேட்டையாட வந்த சேரமான் மகனைக் கண்டு உண்மையான காதல் கொண்டாளாம் சின்னக் குயிலி. பாவலர் தான் முற்பிறப்பில் சேரமான் மகனாகப் பிறந்தவராம்.
இவர்கள் இருவரும் காதல் புரிந்து கொண்டிருந்த வேளையில் மாமன் மகன் மாடனும், நெட்டைக் குரங்கனும் அங்கு வந்து சேர, சேர இளவரசனுக்கும் அவர்களுக்கும் சண்டை மூண்டு ஒருவரை யொருவர் வெட்டிக் கொண்டு மூவரும் மடிந்து போனார்களாம். இந்தப் பிறப்பிலும், காதலுக்கு இடையூறாய் மாடனும், நெட்டைக் குரங்கனும் பிறந்து வந்து தொல்லை கொடுக்கிறார்களாம்.
முனிவர் கூறியதாக இந்தக் கதையைக் குயில் கூறியவுடன், பாவலர் அதைப் பற்றி யிழுத்து முத்தமிட குயில் அழகிய பெண்ணாக மாறிவிட்டதாம். அந்த அழகு மகளுடன் பாவலர் சித்தம் மயங்கியிருந்த போது கனவு கலைந்து விட்டதாம்.
கனவில் தோன்றிய இந்தக் கற்பனையில் வேதாந்தக் கருத்துத் தொக்கியிருக்கிறது. அதைக் கண்டு கொள்வது கற்றோர் திறன் என்று முடிக்கிறார் பாரதியார்.
வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
இது பாரதியார் குயில் பாட்டைப் படிப்பவர்களுக்கு இடும் வேலை.
எந்தக் கதைக்கும் வேதாந்தக் கருத்துக் கூறுவது நம்மவர்களின் இயல்பு. அதுபோல் தன் கதைக்கும் கருத்துத் தேடியுரைக்குமாறு பாரதியார் வாசகர்களை வேண்டுகிறார்.
குயில் சீவான்மா என்றும், பாவலர் பரமான்மா என்றும், சீவான்மா பரமான்வாவோடு ஐக்கியப்படுவது முக்தி என்றும் முக்தியே பிறப்பின் இலட்சியம் என்றும் கூறுவது வேதாந்தம்.
பொதுவாக சீவான்மா பரமான்மாவை நாடுவது தான் இயற்கை. சில நேரங்களில் பரமான்மா வலித்து ஆட்கொள்ளச் சீவான்மாவைத் தேடிவருவது சிறப்பு. பாவலர் குயிலைத் தேடிச் செல்வது பரமான்மாவின் ஆட்கொள்ளும் அருள் குணத்தைக் காட்டுகிறது. சீவான்மா பரமான்மாவிடம் ஐக்கியமாவதற்குத் தடையாயிருப்பது அதனிடம் உள்ள விலங்குணர்வும், அலைபாயும் மனவியல்பும் ஆகும். விலங்குணர்வுக்கு மாடும், அலைபாயும் மன இயல்புக்குக் குரங்கும் எடுத்துக் காட்டுகள். இவற்றைக் கொன்றபின், விட்டு விலகிய பின், சீவான்மா பரமான்மாவை அடைவது எளிதில் கை கூடுகிறது. இப்படித்தான் பாரதியாரின் குயில் பாட்டுக்கு வேதாந்தப் பொருள் உரைக்க முடியும்.
பாரதியார், புராணப் போக்குள்ள ஒரு கதையைக் கற்பனை செய்து அதில் வேதாந்தப் பொருள் இருக்கிறதென்ற குறிப்போடு கதையை முடிந்துவிட்டார். இப்படி அவருக்கொரு கற்பனை தோன்றக் காரணமாய் இருந்தது. அவர் பிறந்து வளர்ந்த சூழ்நிலை யென்றுதான் சொல்ல வேண்டும். இலக்கியம் என்பவற்றில் பெரும்பாலானவை புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் இருப்பதால், அவற்றையே படித்தும் கேட்டும் பழக்கப்பட்ட பாரதியார் அதுபோன்ற ஒரு கதையைத் தாமும் படைக்க முற்பட்டது வியப்பன்று.
இனி பாரதிதாசனின் படைப்பான சஞ்சீவி பர்வதத்தின் சாரல் கதையைப் பார்ப்போம்.
சாரல் கதையமைப்பு.
சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே முன் ஏற்பாட்டின்படி வஞ்சியும் குப்பனும் சந்திக்கிறார்கள்.
முன்னொரு நாள் குப்பன் இரண்டு மூலிகைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தான். ஒன்றைத் தின்றால் உலக மக்கள் பேசுவது காதில் கேட்கும்; மற்றொன்றைத் தின்றால், அந்த இடத்தில் நடப்பதைக் கண்ணால் பார்க்கலாம். இந்த மூலிகைகள் சஞ்சீவி மலையில் உள்ளன என்று குப்பன் கூறியிருந்தான். அவற்றைப் பறித்துத் தரும்படி வஞ்சி கூறவே, குப்பன் அவளை மலைக்கு அழைத்துச் செல்கிறான்.
மலையின் உச்சியில் மூலிகைச் செடியைக் காட்டி இவை தான் கிள்ளிக் கொள் என்கின்றான். மூலிகைகளைப் பறித்துக் கொண்டு இருவரும் கீழிறங்கி வந்து ஒரு மர நிழலில அமர்கின்றார்கள்.
எந்த மூலிகையைத் தின்றால், உலகத்துப் பேச்சுக்கள் கேட்குமோ அதை முதலில் தின்றார்கள். உலகத்து மாந்தர் அவரவர் மொழியில் பேசுவது இவர்களுக்குச் செந்தமிழில் மொழி பெயர்த்துக் (!) காதில் விழுகிறது.
முதலில் எங்கோ ஓர் உணவு விடுதியில் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவன் ஒருவன், இத்தாலி நாட்டான் ஒருவனிடம் - பேசிக் கொண்டிருப்பது காதில் விழுகிறது. இத்தாலிக்காரனின் நிற்பேத வாதத்தைப் பிரெஞ்சுக்காரன் கண்டிக்கிறான். அடுத்து அமெரிக்க நாட்டின் குரல் ஒலிக்கிறது. உலக சகோதரதத்துவக் கொள்கையை அமெரிக்கன் ஒலிக்கின்றான்.
மூன்றாவதாக இங்கிலாந்து நாட்டானின் பேச்சுக் கேட்கிறது. இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஆங்கில நாட்டான், இந்திய மக்களின் குறைபாடுகளை எடுத்துக்கூறி அவர்கள் என்றென்றும் அடிமையாய் இருக்கவே தகுதியுள்ளவர்கள் என்று விளக்கமாக எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறான்.
கடைசியாக அவர்கள் காதில் தமிழ் நாட்டுப் பேச்சு விழத் தொடங்குகிறது.எங்கோ ஒர் வீட்டுத் திண்ணையில் ஒரு பாகவதர் இராமாயணம் படித்துக் கொண்டிருக்கிறார். அதில் அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு வரும் காட்சியை வருணித்துக் கொண்டிருக்கிறார்.
குப்பன் தாங்கள் சஞ்சீவி மலையில் இருக்கும்போது அந்த அனுமன் வந்து மலையைத் தூக்கிக் கொண்டு போனால், தங்கள் கதி என்ன ஆகும் என்று நினைத்துக் கலங்குகின்றான்.
வஞ்சி இப்போது தன் காதலனுக்குப் பகுத்தறிவுப்பாடம் போதிக்கின்றாள். உண்மை தெளிந்த குப்பனும் வஞ்சியும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலுக்குக் கீழிறங்கி வந்து, காதல் புரிந்து மனம் களிக்கின்றார்கள்.
இது பாரதிதாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் கதை.
பாரதியின் குயில் கதை கனவில் நிகழ்கின்றது.
சஞ்சீவிச் சாரல் கதையோ, மாயமூலிகையின் துணையோடு நிகழ்கின்றது.
இரண்டுமே கற்பனைக் கதைகள். முன்னது, புராணப் போக்கில் அமைகின்றது. வேதாந்தம் பேசுகிறது. பின்னது புராணத்தின் புன்மைகளை எடுத்துக் காட்டிப் பகுத்தறிவு ஊட்டுகிறது.