உள்ளடக்கத்துக்குச் செல்

குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்/பாட்டின் இலக்கணம்

விக்கிமூலம் இலிருந்து

பாட்டின் இலக்கணம்


இரண்டு கவிஞர்களும், தாங்கள் எடுத்துக் கொண்ட கதையைச் சொல்ல கலிவெண்பாவைக் கையாளுகிறார்கள்.

வெண்பா நான்கடிகள் மட்டுமே கொண்டது.

அதே வெண்பா பதினோரடி வரையில் பஃறொடை வெண்பா எனப்படும். அதைத் தாண்டும்போது கலிவெண்பா எனப்படும். அடிவரையறையற்ற வெண்பாவே கலி வெண்பாவாகும்.

நால்வகைப் பாக்களிலே வெண்பா எழுதுவது கடினமானது என்று இலக்கணப் புலவர்கள் சொல்லுவார்கள். ஆனால், பாரதியும் பாரதிதாசனும் எழுதியுள்ள வெண்பாக்களைப் பார்த்தால் கடினமாக எழுதியதுபோல் தோன்றவில்லை. மிக எளிமையாக இயற்றியது போலவே தோன்றுகிறது.

இலக்கணப் புலவர்கள் வெண்பா எழுதுவதை ஏன் கடினமானது என்று சொன்னார்கள்?

மற்ற பாக்களில் சீர் அமைப்பு ஒழுங்காக அமைந்திருந்தால் போதும். வெண்பாவில் ஒவ்வொரு சீரும் பின்வரும் சீருடன் சரியான வெண்டளையில் கட்டுண்டிருக்க வேண்டும்.

ஒருசீர் மாச்சீராக முடிந்தால் வருசீர் நிரையசையில் தொடங்க

வேண்டும்.

ஒரு சீர் விளச்சீரில் அல்லது காய்ச் சீரில் முடிந்தால் தொடர்ந்து வரும் சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.

இரண்டு அடிகள் ஒரே எதுகை யுடையனவாய் இருக்க வேண்டும். மூன்றாவது சீரில் மோனை அமைந்திருக்க வேண்டும்.

சொல்லுங் கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

இரண்டு தடவை படித்தால் மனப்பாடம் ஆகிவிட வேண்டும். அவ்வளவு எளிமையாக அமைந்திருக்க வேண்டும் வெண்பா.

இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளோடு பாடுவது கடினம் என்று இலக்கணப் புலவர்கள் கருதுவார்கள்.

இலக்கணம் வேண்டாத புதுக் கவிதைக்காரர்களும், இந்தக் கட்டுப்பாடெல்லாம் தேவையில்லை. வடிவமைப்பு இல்லாமலே பாடல் படைக்கிறோம் என்று தமிழில் குப்பை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பயிற்சி பெற்ற ஒரு பெண். வண்ண நூல்களை எடுத்துக் கண்ணிக் கணக்கு வைத்துப் பின்னிக் கொண்டு வந்தால் அழகிய கைப்பை உருவாகிறது. அவளே பின்னுவது வீண் முயற்சி, பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது கால விரயம் என்று சொல்லி கண்டில் உள்ள நூலைப் பிரித்து, தரையின் மீது கைக்கு வந்தபடி மேலே மேலே கோணலும் மாணலுமாய்ப் போட்டுக் கொண்டு வந்தால், எதற்கும் பயன்படாத குப்பையாகி எடுத்தெறியத் தக்கதாய் இருக்குமே தவிர. போற்றி வைத்துக் கொள்வதாய் இராது. அதுபோலவே, புதுக் கவிதைகளும் குப்பையாய் அப்புறப்படுத்தத் தக்கனவே தவிர, இலக்கியப் பேழையில் இடம் பெறா.

பாரதியும் பாரதிதாசனும் கைவந்த கலைஞர்களாய் விளங்குகிறார்கள். யாப்பு அவர்களுடைய கைக்கருவியாய், அழகாகவும் திறமையாகவும் பாப்புனையப் பயன்படுகிறது. சொற்கள் அழகாகவும் சீராகவும் அமைகின்றன. மிக எளிமையாகப் பின்னப்படுகின்றன. எவ்வித முயற்சியுமின்றி இயல்பாக அமைந்தனபோல் தோற்றமளிக்கின்றன. அதே நேரத்தில் வெண்பா அமைப்பில் சிறிதும் வழுவாது ஒழுங்குற அமைந்துள்ளன.

இயல்பான உணர்ச்சியும் திறமான பயிற்சியும் பின்னி அழகான கவிதை பிறக்கிறது. கடுஞ்சொற்கள் வழக்கிழந்த, சொற்கள் இல்லாமல் நடைமுறையில் உள்ள எளிய சொற்களில், எதுகையும் மோனையும் தேடாமலே வந்து கூடி ஒரு மோகனப்பாட்டை உருவாக்கித் தருகின்றன.

பாட்டின் தொடக்கமே எவ்வளவு எளிமையாகவும் அழகாகவும் அமைந்துள்ளது என்று பார்த்தால் புரியும்.

காலையிளம் பரிதி வீசும் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாம் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகரின்
மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை.
(குயில்)

குயில் கூவிக் கொண்டிருக்கும்; கோல மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும்; சுண்ணாடி போன்ற நீர்
ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க உண்டு;
பூக்கள் மணங்கமழும், பூக்கள்தொறும் சேன்றுதே
னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்.

வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு
காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு
நெஞ்சில் நிறுத்துங்கள் இந்த இடத்தைத்தான்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்று சொல்லிடுவார்.
(ச. பா. சாரல்)


தேர்ந்த கவிஞனுக்கு இலக்கணம் தடையாய் இருப்பதில்லை; நல்ல நடையைக் கொடுக்கும் என்பதற்கு இந்த இரு நூல்களுமே சான்று.

பெற்ற குழந்தை மூக்கும் விழியுமாய், பிஞ்சுக்கையும் காலும் பஞ்சுபோல் உடலும் கொண்டு ஒரு பூக்குவியலாய்க் காணும்போது தான் அதன் மீது யாருக்கும் அன்பு பிறக்கும், தாயும் தன் குழந்தை என்று பெருமையோடு தூக்கி மார்பில் அணைத்துக் கொண்டு முத்தமாரி பெய்து சித்தம் களிப்படைவாள்.

அதுவே குறைப்பேறாகி, வெறும் சதைக் கட்டியாய்ப் பிறந்து விட்டால் எந்தத் தாயும் அதை ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டாள். இப்படியொரு பிண்டம் தன் வயிற்றில் பிறக்க என்ன பாவம் செய்தேனோ என்று துன்புறுவாள்.

ஆனால், இந்தப் புதுக்கவிதைக்காரர்கள் மட்டும், இயற்கைக்கு மாறுபாடாக, அரைகுறைப் பேறுகளைப் படைத்துவிட்டு ஆகா ஓகோ என்று துள்ளாட்டம் போடுவது வேடிக்கையாகத் தான் இருக்கிறது. முயற்சியில்லாமலும், பயிற்சியில்லாமலும் கவிஞர் என்ற பெயரைப் பெற்று விடவேண்டும் என்ற அறியாமையின் வயப்பட்ட இவர்களை எண்ணும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது. பாரதியும் பாரதிதாசனும் புதுமையைப் படைத்தார்களே தவிர, புதுக்கவிதை என்ற கோணல் கவிதைகளைப் படைக்க வில்லை.

அவர்கள் கருத்தில் புதுமையிருந்தது: கற்பனையில் புதுமையிருந்தது; இலட்சியத்தில் புதுமையிருந்தது; எதையும் எடுத்துச் சொல்லும் போக்கில் புதுமையிருந்தது. புதுமை என்ற பெயரால், பொருந்தாக் கூற்றுகளையும் புல்லிய கருத்துகளையும், வடிவில் அடங்காத துண்டங்களையும் பிண்டங்களையும், பெய்து கழியும் பித்தர் இதனை யுணர வேண்டும.

குயில் பாட்டிலும், சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலும் காணப்படும் கலிவெண்பாக் கண்ணிகள் நெஞ்சில் ஒட்டிக் கொள்ளும் கவிதை வரிகளாய் உள்ளன.

அவற்றின் நயங்களை இனிக் கூறு கூறாய் ஒப்பிட்டுப் பார்ப்போம்!