உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலைப்போர், இரண்டாம் பதிப்பு/அழைப்பு

விக்கிமூலம் இலிருந்து

அழைப்பு


தாய்நாட்டின் விடுதலையைக் குறிக்கோளாகக்கொண்டு, பணிபுரிபவனே, வீரன்—விவேகி. அவனுடைய அறிவும் ஆற்றலும் அந்த அரும்பணிக்கே, அர்ப்பணிக்கப்படவேண்டும்.

உலக வரலாற்றுச் சுவடியிலேயே, தாய் நாட்டின் விடுதலைக்காகப் போரிட்ட மாவீரர்களைப் பற்றிய செய்தியே, உன்னதமான பகுதி.

மணிமுடிதரித்து மன்னன் தங்கச்சிங்காதனத்தின் மீது வீற்றிருக்க, நடனமாதர் கடை காட்டி இடை அசைத்து, அவனுக்கும் அவனை அண்டிப்பிழைக்கும் அலங்காரப் பொம்மைகட்கும் களிப்பூட்ட, அக்காட்சியினை அகவலாகவோ, சிந்து ஆகவோ ஆக்கிடும் புலவனின் கவிதைகளைவிட, தாய்நாட்டின் விடுதலைப் போருக்காகக் களம்புகுந்த காளை, தன் உடலிலே எதிரியின் வாள் பட்டதால் வழிந்தோடும் இரத்தத்தைத் துடைக்கவும் நேரமின்றி, வீரப் போர்புரிந்து கீழே விழும் போதும், "என் நாட்டுக்காக நான் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்வேன். நான் துவக்கிய பணியைத் தொடர்ந்து நடத்த என் தோழர் வருவர். வாழ்க தாயகம் !" என்று வீர முழக்கமிடும் ஒலி, இன்பம் ஊட்டக்கூடியது மட்டுமல்ல, மன எழுச்சி தரக்கூடியது.

விடுதலைப் போர், முடிவுற்று, அன்னை பாரத தேவி அரியாசனம் ஏறும் இந்நாள், முன்னாள் நடை பெற்ற காதையைக் கூறுகிறாயோ என்று கேட்கத் தோன்றும் நண்பர்கட்கு.

இது முன்னாள் காதையுமல்ல - இந்நாள் நடைபெறும் முடிசூட்டுவிழாவினை ஒட்டிய விஷயமுமல்ல. இது, இந்நாள் ஏக்கம் — நாளையதினம் நடத்தப்பட வேண்டிய பணிக்கான துவக்கம்.

விடுதலைப்போர் திராவிடத்தின் விடுதலைப்போர்—இந்திய துணைக் கண்டத்து விடுதலைப்போர் எனும் பழங்கதை அல்ல.

பரங்கிக்கும் - பனியாவுக்கும் இடையே நடைபெற்ற போர், ஒருவாறு முடிவுபெற்றது - பனியாவுக்குப் பீடம் கிடைத்து விட்டது. பீடம் ஏறும் பனியாவின் பிடியிலே சிக்கியுள்ள திராவிடம் இனித் தன் விடுதலைக்காகப் போரிட்டாக வேண்டும்.

திராவிடம், வெளிநாட்டானின் பிடியில் மட்டுமல்ல, அறியாமையின் பிடியில், சிக்கிச் சிதைகிறது. இயற்கைச் செல்வத்தை எத்தர்கள் சுறண்டிச் செல்கின்றனர். சிந்தனையையோ, அறியாமையையோ கலை உருவிலே புகுத்திய கயவர் வழி வழிவந்தவர்கள், செல்லென அரித்து வருகின்றனர்.


தேய்ந்து வருகிறது திராவிடம் !
தெருவெலாம் வறுமை தாண்டவமாடுகிறது !
கடல் கடந்த நாடுகளிலே எல்லாம் திராவிடர்
கூலிகளாயினர் !

திராவிடத்தின் இந்நாள் நிலையினை எண்ணிடுவோர், ஒரு பெரும் விடுதலைப் போர் நடத்தியே தீரவேண்டும், என்ற முடிவுக்கு வந்தே தீருவர்.

ஒரு வஞ்சக ஏகாதிபத்தியம் இன்று திராவிடத்தைக் கொஞ்சிக் குலவி சொக்க வைக்கிறது—சேல் விழியும் பாதிமதியும்கொண்ட மங்கை நல்லாளை செல்வச் செருக்கும் வஞ்சக நினைப்பும் கொண்ட காமுகன், கனிமொழி பேசி ஏய்ப்பது போல.

பொருளாதார பலமும், பிரசாரவசதியும், ஆயுதபலமும், அந்தணரின் ஆசீர்வாதபலமும், அமோகமாகக் கொண்டுள்ள வடநாட்டு ஏகாதிபத்தியத் தொடர்பை அறுத்துக்கொண்டு, முப்புறம் கடலும், எப்புறமும் வளமும், அதனைப் பயன்படுத்தும் நாலரைக் கோடி மக்களும் கொண்ட திராவிடம் தன்னாட்சி பெற்றாக வேண்டும்.—அதுவே விடுதலைப் போரின் குறிக்கோள் !

இந்நூல் உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல—மாற்றுக் கட்சிக்காரரின் பார்வைக்கும் கூட.

சி. என். அண்ணாதுரை