உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/அன்னை மொழி

விக்கிமூலம் இலிருந்து

அன்னை மொழி


குருவி ஒன்று மரத்திலே
கூடு ஒன்றைக் கட்டியே
அருமைக் குஞ்சு மூன்றையும்
அதில் வளர்த்து வந்தது.

நித்தம், நித்தம் குருவியும்
நீண்ட துரம் சென்றிடும்;
கொத்தி வந்து இரைதனைக்
குஞ்சு தின்னக் கொடுத்திடும்.

‘இறைவன் தந்த இறகினால்
எழுந்து பறக்கப் பழகுவீர்.
இரையைத் தேடித் தின்னலாம்’
என்று குருவி சொன்னது.

‘நன்று, நன்று, நாங்களும்
இன்றே பறக்கப் பழகுவோம்’
என்று கூறித் தாயுடன்
இரண்டு குஞ்சு கிளம்பின.


ஒன்று மட்டும் சோம்பலாய்
ஒடுக்கிக் கொண்டு உடலையே,
அன்று கூட்டில் இருந்தது !
ஆபத் தொன்று வந்தது !

எங்கி ருந்தோ வந்தனன்,
ஏறி ஒருவன் மரத்திலே,
அங்கி ருந்த கூட்டினை
அடைய நெருங்கிச் சென்றனன்.

சிறகு இருந்தும் பறக்கவே
தெரிந்தி டாமல் விழித்திடும்
குருவிக் குஞ்சைப் பிடித்தனன் ;
கொண்டு வீடு சென்றனன்.

குருவிக் குஞ்சு அவனது
கூட்டில் வாட லானது.
அருமை அன்னை உரைத்தது
அதனின் காதில் ஒலித்தது.