உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போது, உற்சாக மிகுதியால் இலட்சக்கணக்கில் கூடிடும் மக்கள் கட்டுக்கடங்காது போவர் என்ற கவலையால், போலீஸ் அதிகாரிகள் ஹெலிகாப்டர் விமானத்தில் ஏறிக்கொண்டு, மேலே தாழ்வாகப் பறந்து கொண்டே, மக்களை ஒழுங்கு படுத்தும் திட்டம் தயாரிக்கிறார்கள்.

புனாவில், வேதகால இரதம் ஓடிக்கொண்டிருக்கிறது,
டில்லியில் ஹெலிகாப்டர் விமானம் தயாராகிறது !!

‘பாரதம்’ எவ்வழி செல்கிறது என்று கூறமுடியும்? யாக குண்டமும் தெரிகிறது விஞ்ஞானக் கூடமும் அமைக்கப்படுகிறது, இரதமும் ஓடுகிறது ஹெலிகாப்டரும் பறக்கிறது! புல்கானின் வரவேற்கப்படுகிறார், சவுதி அரேபிய மன்னருக்கும் இராஜ உபசாரம் தயாராகிறது.

மேதாப் பேசுகிறார், பாரதம் யாக யோகாதிகளிலே சிறந்த தேசம்,—என்று

நேரு பண்டிதர் அதே கிழமை வேறோர் பகுதியிலே பேசுகிறார், இன்னமும் நாம் சாணியுகத்தில்தான் இருக்கிறோம்,— என்று.

உலகம் அணுயுகத்தில் இருக்கிறது—பாரதம் சாணியுகத்தில் இருக்கிறது, என்று கூறுகிறார் நேரு பண்டிதர்—மனம் நொந்து கூறுவதுபோலத்தான் இருக்கிறது.

அவர் இவ்விதம் கேலியும் வேதனையும் கலந்த குரலில் எந்தச் சாணியுகம் பற்றிக் குறிப்பிடுகிறாரோ, அதைச் சிலாக்கியமானது, என்று புகழ்ந்து பேசி, வாஜபேய யாகத்தைத் துவக்கி வைக்கிறார் கவர்னர் மேதாப்! எல்லாம், பாரதத்தில்! எதுதான் நமக்கு உரியது ? எவ்வழிதான் நல்வழி ? எந்த முறையைப் பின்பற்றப் போகிறீர்கள் ? என்று கேட்டாலோ, தலைவர்கள் கோபம் கொள்கிறார்கள்—குழப்பம் அடைகிறார்கள், இவர்கள் இவ்விதம்தான் ‘பத்தாம் பசலிகள்’. பண்டிதர் அப்படிப்பட்டவர் அல்ல, அவர் தான் காசி அரித்துவாரம், சேது, சீரங்கம், திருப்பதி, தில்லை, இவைகளல்ல என் திவ்ய க்ஷேத்திரங்கள்; என் திவ்ய க்ஷேத்திரங்கள், தேக்கம் அணை, சிந்திரி சித்தரன்ஜன், என்ஜின் எழில், என்று பேசுகிறாரே, அவர் நாட்டினை, அறிவுலகத்தின் சார்பில் நடத்திச் செல்வார், விஞ்ஞானப் பாதை வழி நடத்திச் செல்வார் என்று எண்ணித் தெம்பும் தைரியமும், நம்பிக்கையும் பெறலாம் என்றாலோ, இவ்வளவு பகுத்தறிவும் பேசிவிட்டு, அவரும் இராமலீலா பார்க்கச் செல்கிறார், பேரப்பிள்ளைகளுடன்! அவரும் இவ்வளவுதான் என்று தெரிகிறபோது ஆயாசப்படாமல் என்ன செய்வது?

அந்த வாலிபன் பதறினான் இளம் பெண் பதைபதைத்தது கண்டு! அவள் அழுகுரல், அவன் இதயத்தைத் துளைத்தது.