உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

போ, போ. நெருப்பு அணைந்திடுவதற்குள் போ. நீறு ஆகி விடுவாய், நேராகச் சொர்க்கம் சேர்ந்திடுவாய். சதியும் பதியும் இணைபிரியாமல் வாழ்வீர்கள். அவன் செல்கிறான், உன்னை அழைக்கிறான், போடி மகளே, போ.”— என்று பாரதப் பண்பாடு கூறுகிறது. அந்தப் பெண் செல்கிறாள்—வாலிபன் பதைக்கிறான். நெருப்பில் இறங்குகிறாள்,

“ஐயோ” என்று அலறித் துடித்து, அதைவிட்டு வெளிவர எழுகிறாள், நீண்ட கம்புகளைக்கொண்டு ‘சாஸ்திர சம்பிரதாய ரட்சகர்கள்’ அவளை மீண்டும் நெருப்பில் தள்ளுகிறார்கள். அவள் உடலைத் தீ பற்றிக்கொள்கிறது— வேதனையால் துடிக்கிறாள் — வேதமுணர்ந்தவர்கள் அவள் தீக்குண்டத்தைவிட்டு வெளி ஏறாவண்ணம், கோல்கொண்டு தடுத்து, அவளைப் பிணமாக்குகிறார்கள். பாரதத்துக்கு மற்றோர் பத்தினி கிடைத்துவிட்டாள். ஆனால் ஒரு ஒப்பற்ற சீர்திருத்த வீரனும் கிடைக்கிறார். அவர்தான் இராஜாராம் மோகன்ராய்.

தன் அண்ணி, உடன்கட்டை ஏறியபோது, வைதீக வன்கணாளர்கள் காட்டிய குரூரத்தைக் கண்டபோதுதான், இராஜாராம் மோகன்ராய், மடைமையினால் விளையும் கொடுமை குறித்து உணரமுடிந்தது. சுடலையில் அவர் எடுத்துக்கொண்ட சூளுரையை நிறைவேற்ற அவர் இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்துவரை சென்று போரிட்டார்— வெற்றி கண்டார். சதி சட்டப்படி தடுக்கப்பட்டது. வைதீகர்கள் அவர்மீது காட்டிய குரோதம் கொஞ்சமல்ல, அவர்கள் சாஸ்திரத்தை, யுகயுகமாக இருந்துவந்த சம்பிரதாயத்தை எடுத்துக் கூறினர். ராஜராம் மோகன்ராய்க்கு சுடலையில் கண்ட காட்சி உடனே மனக் கண்ணில் தெரியும், அவர் இதயத்தில் பெருநெருப்பு மூளும், பொறிகள் வார்த்தைகளாகி வெளிவந்து, வைதீகத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிற்று.

சதியை ஒழித்தார் இராஜாராம் மோகன்ராய் !

நான் அறிவேன்! நான் அறிவேன்! உடன்கட்டை ஏறுவது என்பது எவ்வளவு கொடுமை என்பதை நான் அறிவேன். என் கண்ணால் கண்டேன், அலறினாள், துடித்தாள், உயிருக்காக மன்றாடினாள், உலுத்தர்கள் என்ன செய்தனர்? கோல் கொண்டு அவளை நெருப்பில் தள்ளினர்—உயிர் கருக்கினர்.

அபலையின் அழுகுரலைக் கேட்டால், கன்னெஞ்சக்காரனுக்கும் கருணை பீறிட்டெழும். அந்த அழுகுரல் பிறர் செவியில் விழக்கூடாது என்பதற்காக வைதீக வெறியர்கள், காது செவிடு படும்படி சங்கம் ஊதினர், தாளம் தட்டினர், மேளம் கொட்டினர், பஜனைச் சத்தமிட்டனர், எல்லாம் ஒரு பெண்ணைப் பிணமாக்க; தங்கள் பைத்யக்காரமுறையை வாழவைக்க, நான்