உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/003-052

விக்கிமூலம் இலிருந்து

2. கொங்கு நாட்டுக் குறுநில மன்னர்கள்

அதிகமான் அரசர்

கொங்கு நாட்டைச் சேர அரசர் கைப்பற்றுவதற்கு முன்பு அந்நாட்டைப் பல சிற்றரசர் பரம்பரையரசாண்டு கொண்டிருந்தது. அச்சிற்றரசர்களைப் பற்றி நமக்குத் தெரிந்தவரையில் கூறுகின்றோம். கொங்குநாட்டையரசாண்ட சிற்றரசர்களில் தகடூரையரசாண்ட அதிகமான் அரசர் பேர்போனவர். அவர்கள் அதிகமான் என்றும், அதியமான் என்றும் கூறப்பட்டனர். தகடூர் இப்போது தர்மபுரி என்று பெயர் கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள தர்மபுரி வட்டமே பழைய தகடூர் நாடு. தகடூர் அதிகமான் அரசர் தகடூரில் கோட்டைக் கட்டிக் கொண்டு அரசாண்டார்கள். அது அதிகமான் கோட்டை என்று பெயர் பெற்றிருந்தது. அதிகமான் கோட்டை என்பது பிற்காலத்தில் ‘அதமன் கோட்டை’ என்று சிதைந்து வழங்கப்பட்டது. இந்த அதிகமான் கோட்டை தகடூரிலிருந்து (தர்மபுரியிலிருந்து) தென்மேற்கே 5 மைல் தூரத்திலிருக்கின்றது. சேலத்திலிருந்து வடக்கே 29 மைலில் இருக்கிறது.

தகடூரை, அதிகமான் அரசர் பரம்பரை பரம்பரையாக அரசாண்டார்கள். சங்க காலத்தில் அரசாண்ட தகடூர் அதிகமான்களில் மூவர் பெயர் மட்டும் தெரிகின்றது. அதிகமான் அரசர்களின் முன்னோன் ஒருவன் தேவலோகத்திலிருந்து கரும்பைக் கொண்டு வந்து கொங்கு நாட்டில் பயிராக்கினான் என்று ஔவையார் கூறுகிறார்.1 தேவலோகத்திலிருந்து கரும்பு கொண்டுவந்தான் என்பது மிகைப்படக் கூறலாகும். வேறு ஊர் எங்கிருந்தோ அவன் கரும்பைக் கொண்டு வந்து பயிராக்கினான் என்பதே சரியாகும்.

அதிகமான் அரசர்களில் முதன்முதலாக அறியப்படுகிறவன் நெடுமிடல் அஞ்சி என்பவன். சேர நாட்டு அரசனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (சேரன் செங்குட்டுவனுடைய தமயன்) நெடுமிடல்அஞ்சியை ஒரு போரில் வென்றான் என்று பதிற்றுப்பத்துச் செய்யுள் கூறுகிறது.2

இதில் கூறப்படுகிற நெடுமிடல் என்பது அதிகமான் அரசர்களில் ஒருவனுடைய பெயர் என்று பழைய உரையாசிரியர் கூறுகிறார். “நெடுமிடல் அஞ்சி இயற்பெயராம்” என்று உரையாசிரியர் தெளிவாகக் கூறுவது காண்க. பரணர், தம்முடைய செய்யுள் ஒன்றில் நெடுமிடலைக் கூறுகிறார். பதிற்றுப்பத்து கூறுகிற நெடுமிடல் அஞ்சியே இந்த நெடுமிடல் என்பதில் ஐயமில்லை. இந்த நெடுமிடல் பசும்பூண் பாண்டியனுடைய நண்பனாகவும் சேனைத் தலைவனாகவும் இருந்தான். பசும்பூண் பாண்டியனுடைய பகைவர்கள் சிலர், நெடுமிடலுடன் போர் செய்து அவனை வென்றார்கள் என்று பரணர் கூறுகிறார்.3 இந்த அதிகமான் நெடுமிடல் அஞ்சியும் பசும் பூண் பாண்டியனும் நண்பர்கள் என்பது அகம் 162 செய்யுளினால் தெரிகின்றது.4

(குறிப்பு : இந்தப் பசும்பூண் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாகிய பசும் பூண்செழியன் அல்லன்; இவனுக்கு முன்பு களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் காலத்திருந்தவன். இரண்டு பசும்பூண் பாண்டியரில் முதல் பசும்பூண் பாண்டியன் அதிகமான் நெடுமிடல் அஞ்சியின் காலத்திலிருந்தவன்.)

பசும்பூண் பாண்டியன் துளுநாட்டு நன்னன்மேல் படையெடுத்துச் சென்றான். அவனுடைய படைக்குச் சேனாதிபதியாக இருந்தவன் அதிகமான் நெடுமிடல் அஞ்சி. துளு நாட்டு வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் துளு நாட்டுச் சேனாதிபதியாகிய மிஞிலிக்கும் நெடுமிடல் அஞ்சிக்கும் போர் நடந்தது. அந்தப் போரில் நெடுமிடல் அஞ்சி இறந்து போனான்.5

அதிகமான் நெடுமிடல் அஞ்சிக்குப் பிறகு தகடூர் நாட்டுக்கு அரசனானவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன். அதிகமான் நெடுமான் அஞ்சி ஔவையாரை ஆதரித்தவன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஔவையார் இவனுடைய வீரத்தையும் வெற்றிகளையும் பாடியுள்ளார் (புறம். 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 97, 98, 315, 390). இவன் ஏழு அரசர்களோடு போர் செய்து வென்றதை ஔவையார் கூறுகிறார்.6 இவன், மலையமான் திருமுடிக்காரியின் கோவலூரின் மேல் படையெடுத்துச் சென்று போரில் வென்றான் என்றும் அந்த வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடினார் என்றும் ஔவையார் கூறுகின்றார். இவனுடைய வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடிய செய்யுள் இப்போது கிடைக்கவில்லை. கோவலூர்ப் போரை இவன் வென்றோனேயல்லாமல் கோவலூரை இவன் பிடிக்கவில்லை.

அதிகமான் நெடுமான் அஞ்சி வேறு சில போர்களில் வெற்றிபெற்றான் என்று ஔவையார் கூறுகிறார். “கடிமதில் அரண்பல கடந்த நெடுமான் அஞ்சி” (புறம் 92: 5-6). இந்தப் போர்கள் யாருடன் எங்கு நடந்தன என்பதும் தெரியவில்லை.

உண்டவரை நெடுங்காலம் வாழச் செய்கிற கிடைத்ததற்கரிய கரு நெல்லிக்கனி அதிகமான் நெடுமான் அஞ்சிக்குக் கிடைத்தது. அக்கனியை அவன் தான் உண்ணாமல் பெரும் புலவராகிய ஔவையாருக்குக் கொடுத்தான். அவர் அதையுண்ட பிறகுதான் அது கிடைத்தற்கரிய கருநெல்லிக்கனி என்பது அவருக்குத் தெரிந்தது. அப்போது அவர் இவனை வியந்து பாடினார்.7 இந்தச் செய்தியைச் சிறுபாணாற்றுப் படையுங் கூறுகின்றது.

அதிகமான் அரசர் கரும்பைக் கொண்டுவந்து பயிராக்கியதையும் ஔவைக்குக் கருநெல்லிக்கனி கொடுத்ததையும் பிற்காலத்து நூலாகிய கொங்குமண்டல சதகமுங் கூறுகின்றது.

“சாதலை நீக்கு மருநெல்லி தன்னைத் தமிழ்சொலௌவைக்
காதர வோடு கொடுத்தவன் கன்னலை யங்குநின்று
மேதினி மீதிற் கொடுவந்து நட்டவன் மேன்மரபோர்
மாதிரஞ் சூழரண் மேவுவதுங் கொங்கு மண்டலமே”

இவ்வதிகமான் ஔவையாரைத் தொண்டைமான் இளந்திரையனிடம் தூது அனுப்பினான் என்பது ஔவையார் பாடிய புறம் 95 ஆம் செய்யுளிலிருந்து தெரிகின்றது. இந்தத் தூது எதன் பொருட்டு அனுப்பப்பட்டது என்பது தெரியவில்லை.

அதிகமான் நெடுமான் அஞ்சிக்கு ஒரு மகன் பிறந்தான். அப்போது போர்க்களத்தில் போர் செய்துகொண்டிருந்த அதிகமான் இந்தச் செய்தி அறிந்து போர்க்கோலத்தோடு விரைந்து வந்து தன் மகனைக் கண்டு மகிழ்ந்தான். அந்தக் காட்சியை ஔவையார் பாடியுள்ளார் (புறம் 100). அந்த மகனுடைய பெயர் பொகுட்டெழினி என்பது.

இவர்கள் காலத்தில் தென்கொங்கு நாட்டையரசாண்ட பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் நாட்டின் மேல் படையெடுத்துப் போர் செய்தான். அவனை நெடுமான் அஞ்சியும் பொகுட்டெழினியும் எதிர்த்துப் போர் செய்தார்கள். பெருஞ்சேரலிரும்பொறை வெற்றி பெற்றுத் தகடூரைக் கைப்பற்றினான்.

நெடுங்காலம் சுதந்தரமாக அரசாண்டிருந்த அதிகமான் அரசர் தகடூர்ப் போருக்குப் பிறகு கொங்குச் சேரருக்குக் கீழடங்கி அரசாண்டார்கள். அதிகமான் அரசர் பரம்பரை கி.பி. 13ஆம் நூற்றாண்டிலும் இருந்தது என்பதற்குச் சாசனச் சான்றுகள் உள்ளன.

கடைச்சங்க காலத்தில் இருந்த அதிகமான் அரசர் பரம்பரையில் கீழ்க்கண்டவர் நமக்குத் தெரிகின்றனர்:

அதிகமான் நெடுமிடல் அஞ்சி

அதிகமான் நெடுமான் அஞ்சி

அதிகமான் பொகுட்டெழினி

ஓரி

கொங்கு நாட்டைச் சேர்ந்த கொல்லி மலையையும் அதனைச் சார்ந்த கொல்லிக் கூற்றத்தையும் அரசாண்ட மன்னர் ஓரி என்று பெயர் பெற்றிருந்தனர். அவர்களுடைய வரலாறு முழுவதும் கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவன் ஆதனோரி. இவன் வள்ளலாக விளங்கினான். இவன் தன்னை நாடிவந்த புலவர்களுக்கு யானையையும் தானங் கொடுத்தான்.8 இவன் கடை ஏழு வள்ளல்களில் ஒருவனாகக் கூறப்படுகின்றான். இவன் போருக்குப் போகும்போது தன்னுடைய ஓரி என்னும் பெயருள்ள குதிரைமேல் அமர்ந்து செல்வான். இவனும் இவனுடைய கொல்லி நாட்டுக்கு அடுத்திருந்த தகடூர் அரசனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியும் நண்பர்களாக இருந்தார்கள்.

முள்ளூர் மன்னனாகிய மலையமான் திருமுடிக்காரி, கொல்லிமலை ஓரியுடன் போர் செய்தான். காரி, தன்னுடைய காரி என்னும் குதிரை மேல் அமர்ந்தும் ஓரி தன்னுடைய ஓரி என்னுங் குதிரைமேல் அமர்ந்து போர் செய்தார்கள்.9 போரில் ஓரி இறந்துபோக, காரி ஓரியின் ஊரில் வெற்றியோடு புகுந்தான்.10 ஓரியின் கொல்லி நாட்டை வென்ற காரி அந்நாட்டைத் தன்னுடைய அரசனாகிய பெருஞ்சேரலிரும் பொறைக்குக் கொடுத்தான்.11 ஓரி அரசர், பரம்பரையாக ஆண்டு வந்த கொல்லி நாடு பெருஞ்சேரல் இரும்பொறைக் காலத்தில், சேரரின் கொங்கு இராச்சியத்தில் சேர்ந்துவிட்டது.

கழுவுள்

கொங்கு நாட்டுக் காமூரில் வாழ்ந்த இடையர்களின் தலைவன் கழுவுள். காமூரைச் சூழ்ந்து பலமான கோட்டைமதிலும் அகழியும் இருந்தன. இவனுக்கு முன்பு காமூரையரசாண்ட இவனுடைய பரம்பரையரசர் இன்னாரென்று தெரியவில்லை. கொங்குச் சேரர் தங்களுடைய கொங்கு இராச்சியத்தை விரிவாக்கினபோது, பெருஞ்சேரல் இரும்பொறை கழுவுள் மேல் படையெடுத்துச் சென்று போர்செய்தான். கழுவுளும் பலமுடையவனாக இருந்தபடியால் அவனை எதிர்த்துப் போர் செய்தான். பெருஞ்சேரல் இரும்பொறைக்கு உதவியாகப் பதினான்கு வேள் அரசர் கழுவுளுக்கு எதிராகப் போர்செய்து கழுவுளை வென்றார்கள்.12 கடைசியில் கழுவுள் பெருஞ்சேரலிரும் பொறைக்குக் கீழடங்கினான். காமூர் சேரரின் கொங்கு இராச்சியத்தில் சேர்ந்தது. இந்தப் போர், பெருஞ்சேரலிரும்பொறை கொல்லிக் கூற்றத்தையும் தகடூர் நாட்டையும் பிடிப்பதற்கு முன்பு நடந்தது. கொங்குச் சேரர் தங்கள் இராச்சியத்தைப் பெரிதாக்கிய காலத்தில் அவர்களில் ஒருவனான பெருஞ்சேரலிரும் பொறை கழுவுள் மேல் படையெடுத்துச் சென்று போர்செய்தான். அவனுக்கு உதவியாகப் பதினான்கு வேளிர் வந்து கழுவுள்மேல் போர்புரிந்தார்கள். கடைசியில் கழுவுள் தோற்றுப் பெருஞ்சேரலிரும் பொறைக்கு அடங்கினான்.

குமணன்

கொங்கு நாட்டில் முதிரம் என்னும் ஊர் இருந்தது. அவ்வூரில் குமணன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். வள்ளலாக இருந்த அவன் புலவருக்கும் மற்றவர்களுக்கும் தான தருமம் செய்தான்.13 பெருஞ்சித்திரனார் இவனைப் பாடிய செய்யுள்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.14

இளவெளிமானிடஞ் சென்று பரிசு கேட்டபோது அவன் சிறிது கொடுக்கக் கொள்ளாமல் பெருஞ்சித்திரனார் குமணனிடம் வந்து யானையைப் பரிசில் கேட்டார்.15 அவன் யானை கொடுக்க, அதைக் கொண்டு போய் வெளிமானூர்க் காவல் மரத்தில் கட்டி ஒரு செய்யுள் பாடினார்.16

குமணனுடைய தம்பி இளங்குமணன் என்பவன் தமயனாகிய குமணனைக் காட்டுக்கு ஓட்டி நாட்டைக் கைப்பற்றியரசாண்டான். குமணன் காட்டில் தங்கியிருந்தான். அப்போது பெருந்தலைச்சாத்தனார்

குமணனைக் கண்டு ஒரு செய்யுள் பாடினார்.17 அச்செய்யுளில் அப்புலவருடைய வறுமை நெஞ்சையுருக்கும் தன்மையதாக இருந்தது. அச்செய்யுளைக் கேட்ட குமணன், தன்னுடைய துன்பத்தைவிடப் புலவரின் துன்பம் கொடியது என்று உணர்ந்து, தன் கையில் பொருள் இல்லாதபடியால், தன்னுடைய வாளைப் புலவரிடம் கொடுத்து, தன் தலையை வெட்டிக் கொண்டுபோய்த் தன் தம்பியிடங் கொடுத்தால் அவன் பரிசாகப் பொருள் கொடுப்பான் என்று கூறினான். வாளைக் கையில் வாங்கிக்கொண்டு புலவர் இளங்குமணனிடம் வந்து குமணன் வாள்கொடுத்த செய்தியைக் கூறினார் (புறம் 165). பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. குமணனைப் பற்றி இவ்வளவுதான் தெரிகின்றது. குமணனுடைய முதிரம் என்னும் ஊர் கொங்கு நாட்டில் எவ்விடத்தில் இருந்தது என்பது தெரியவில்லை. இளங்குமணனைப் பற்றியும் ஒன்றுந் தெரியவில்லை.

விச்சியரசர்

விச்சிமலையையும் அதனைச் சார்ந்த நாட்டையும் அரசாண்டவர் விச்சிக்கோ என்று பெயர் பெற்றிருந்தனர். விச்சியூரில் விச்சிமலை இருந்தது. பச்சைமலை என்று இப்போது பெயர் பெற்றுள்ள மலையே பழைய விச்சிமலை என்று கருதுகிறார்கள். பச்சைமலை இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கின்றது. விச்சியரசரைக் ‘கல்லக வெற்பன்’ என்றும் ‘விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக்கோ’ என்றும் கபிலர் கூறுகின்றார். விச்சிமலைமேல் இருந்த ஐந்தெயில் என்னும் கோட்டையில் விச்சியரசர் வாழ்ந்தார்கள். விச்சி நாட்டில் குறும்பூர் என்னும் ஊர் இருந்தது. அங்குப் பாணர் என்னும் இனத்தார் வசித்து வந்தார்கள். விச்சி மன்னன் பகைவரோடு போர் செய்தபோது, அவன் புலி போன்று வீரமாகப் போர் செய்ததைப் பாணர்கள் கண்டு ஆரவாரஞ் செய்து மகிழ்ந்தார்கள் என்று பரணர் கூறுகின்றார்.18

பாரி வள்ளல் போரில் இறந்தபிறகு, அவனுடைய பரம்பு நாட்டைப் பகைமன்னர் கைக்கொண்ட பின்னர், பாரியின் மகளிரான அங்கவை, சங்கவை என்பவரைக் கபிலர் அழைத்துக் கொண்டு விச்சிக்கோவிடம் வந்து அவர்களைத் திருமணஞ் செய்துகொள்ளும்படி கேட்டார். அதற்கு விச்சியரசன் இணங்கவில்லை (புறம் 200 அடிக்குறிப்புக் காண்க) விச்சியரசன் தம்பி இளவிச்சிக்கோ என்று பெயர் பெற்றிருந்தான்.

சுதந்தரமாக அரசாண்டுகொண்டிருந்த விச்சியரசரை இளஞ்சேரல் இரும்பொறை வென்று விச்சி நாட்டைத் தன்னுடைய கொங்கு இராச்சியத்தோடு இணைத்துக் கொண்டான். விச்சியரசனுடைய ஐந்தெயில் கோட்டையை இளஞ்சேரல் இரும்பொறை முற்றுகையிட்ட போது விச்சியரசர்களுக்குப் பாண்டியனும் சோழனும் உதவியாக இருந்தார்கள். ஆனாலும், இளஞ்சேரல் இரும்பொறை விச்சியை வென்று அவனுடைய ஐந்தெயில் கோட்டையைக் கைப்பற்றினான்.19

கட்டியரசர்

கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆதிகாலம் முதல் அரசாண்டவர் கட்டி என்னும் பெயர் பெற்ற பரம்பரையரசர். கட்டியர் அரசாண்ட பகுதி வடகொங்கு நாட்டில், வடுக தேசமாகிய கன்னட தேசத்தின் தெற்கு எல்லையைச் சார்ந்திருந்தது.20 வடகொங்கு நாட்டின் வடமேற்கில் இருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின் மேல் சோழனுடைய சேனைத் தலைவனான பழையன் படையெடுத்துச் சென்று போர்செய்தபோது புன்னாட்டு அரசனுக்கு உதவியாகப் பழையனை எதிர்த்துப் போர்செய்த கொங்கு நாட்டு அரசர்களில் கட்டியரசனும் ஒருவன்.21 ஒரு கட்டியரசன், உறையூரையாண்ட தித்தன் வெளியன் என்னுஞ் சோழன்மேல் போருக்குச் சென்று உறையூர்க் கோட்டையை யடைந்தபோது, கோட்டைக்குள் தித்தன் வெளியனுடைய பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தில் கிணைப்பறை கொட்டப்பட்ட முழக்கத்தைக் கேட்டுப் போர் செய்யாமல் திரும்பிப் போய்விட்டான்.22

கட்டியரசர், கொங்கு நாட்டையாண்ட பொறைய அரசருக்குக் கீழடங்கியிருந்தனர் என்று தோன்றுகின்றனர். கட்டி பரம்பரையார் மிகமிகப் பிற்காலத்திலும், விசயநகர ஆட்சிக் காலத்திலும் இருந்தார்கள். இக்காலத்தில் அவர்கள் கெட்டி முதலியார் என்று பெயர் பெற்றிருந்தார்கள். கட்டி என்னும் பெயரே பிற்காலத்தில் கெட்டி என்று மருவியது.

குதிரைமலைக் கொற்றவர்

கொங்கு நாட்டில் குதிரைமலையும் அதனை அடுத்து முதிரம் என்னும் ஊரும் இருந்தன. பிட்டங்கொற்றன் என்பவன் இங்குச் சிற்றரசனாக இருந்தான். இவன் சேரனுடைய சேனாபதி என்றும் வள்ளல் என்றும்ஆலம்பேரி சாத்தனார் கூறுகிறார். குதிரைமலைக் கொற்றன் ஈகைக் குணம் உடையவன் என்று கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் கூறுகிறார்.23 இவன் வானவனுடைய (சேரனுடைய) மறவன் என்றும் போர் செய்வதில் வல்லவன் என்றும் கூறப்படுகிறான்.24 வடம வண்ணக்கன் தாமோதரனார், பிட்டங்கொற்றனையும், அவனுடைய அரசனான கோதையையும் கூறுகிறார்.25 மாவண் ஈகைக் கோதையும் பிட்டனுடைய இறைவனும் கோதை எனப்படுகிறான். கோதை என்பது தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் சிறப்புப் பெயர் என்று தோன்றுகிறது. உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் (புறம் 170 : 6– 8) இவனைப் பாடியுள்ளார்.

குதிரைமலை நாட்டை ஆண்ட எழினி என்பவன் ஒருவன் கூறப்படுகிறான். இவன் பிட்டங்கொற்றனுக்குப் பிறகு இருந்தவன் எனத் தோன்றுகிறான். (இந்த எழினி தகடூரையாண்ட அதிகமான் குலத்தில் இருந்த எழினியல்லன்.) குதிரைமலை எழினி வள்ளலாகவும் இருந்தான். “ஊராதேந்திய குதிரைக் கூர்வேல், கூவிளங்கண்ணிக் கொடும்பூண் எழினி” என்று (புறம் 158:8.9) இவன் கூறப்படுகிறான்.

எழினிக்குப் பிறகு முதிரத்தையும் குதிரைமலையையும் அரசாண்டவன் குமணன் என்பவன். இவன் வள்ளல்களில் ஒருவன்.26 குமணனைப் புகழ்ந்து பெருஞ்சித்திரனார் பாடிய செய்யுட்கள் புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன (புறம். 160, 161, 162, 163).

குமணனுக்குத் தம்பியொருவன் இருந்தான். அவனுக்கு இளங்குமணன் என்று பெயர். இளங்குமணன், தமயனான குமணனைக் காட்டுக்கு ஓட்டிவிட்டு நாட்டைக் கைப்பற்றியரசாண்டான். குமணன் காட்டிலே இருந்தான். புலவர் பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டிலே கண்டு ஒரு செய்யுளைப் பாடினார். அதில் அவர் தம்முடைய வறுமைத் துன்பத்தைக் கூறினார் (புறம் 164). குமணன் செய்யுளைக் கேட்டு மனம் உருகித் தன்னிடம் அப்போது பொருள் இல்லையே என்று கலங்கி தன்னுடைய போர்வாளைப் புலவரிடம் கொடுத்துத் தன்னுடைய தலையை வெட்டிக்கொண்டுபோய் இளங்குமணனிடங் கொடுத்தால் அவன் பெரும்பொருள் கொடுப்பான் என்று கூறினார். புலவர் வாளைக் கையில் வாங்கிக் கொண்டு, நேரே இளங்குமணனிடம் வந்து வாளைக் காட்டிக் குமணன் வாள் கொடுத்த செய்தியைக் கூறினார் (புறம் 165). பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

முதிரைமலைக் குமணனும் குதிரைமலைக் குமணனு ம் வெவ்வேறு ஆட்கள் போலத் தோன்றினாலும் இருவரும் ஒருவரே. முதிரமலைக்குக் குதிரைமலை என்றும் பெயர்.

நள்ளி

கண்டிரம் என்னும் நாட்டையரசாண்ட மன்னர்கள் கண்டிரக்கோ என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களில் நள்ளி என்பவன் ஒருவன். இவனைக் கண்டிரக்கோ பெருநள்ளி என்பர். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவனைக் ‘கண்டிரக்கோபெருநள்ளி’ என்பர். தேர் (வண்டி)களையும் யானைகளையும் பரிசிலர்களுக்குக் கொடுத்துப் புகழ் படைத்திருந்தான். நள்ளி ஊரில் இல்லாதபோது இரவலர் அவனுடைய மாளிகைக்கு வந்தால் அவனுடைய பெண்டிர் அவர்களுக்கு யானைக் கன்றுகளைப் பரிசாக அளித்தார்கள் (புறம் 151:1-7). நள்ளியின் கொடைச் சிறப்பைச் சிறுபாணாற்றுப்படையும் (அடி 104- 107) கூறுகிறது. பெருஞ்சித்திரனாரும் இவனுடைய வள்ளன்மையைக் கூறுகிறார் (புறம் 158 : 13 -14).

வன்பரணர் என்னும் புலவர் நள்ளியின் தோட்டிமலைக் காடுகளின் வழியே பயணஞ் செய்தபோது பசியினால் சோர்ந்து ஒரு பலாமரத்தின் அடியில் உட்கார்ந்துவிட்டார். அருகில் ஊர் இல்லாத காடாகையால் உணவு கிடைக்கவில்லை. அப்போது நள்ளி அங்கு வந்து மான் ஒன்றை வேட்டையாடிக் கொண்டு வந்து அதன் இறைச்சியை நெருப்பிலிட்டுச் சமைத்துப் புலவருக்குக் கொடுத்து அவர் பசியை நீக்கினான். இச்செய்தியை அவர் தாம் பாடிய செய்யுளில் கூறுகிறார் (புறம் 150). நள்ளியின் பெயரினால் நள்ளியூர் என்று ஓர் ஊர் இருந்தது. புகழூர்மலைக் குகையில் உள்ள பிராமி எழுத்துச் சாசனம் நள்ளியூரைக் கூறுகிறது (Epl - coll 296 of 1963-64).

புன்னாட்டரசர்

புன்னாடு வடகொங்கு நாட்டின் வடமேற்கில் இருந்தது. கி. பி. 2ஆம் நூற்றாண்டில் இருந்த தாலமி என்பவர் (Ptolemy) புன்னாட்டைத் தம்முடைய நூலில் குறிப்பிடுகிறார். அவர் அதை பொவுன்னாட (Pounnata) என்று கூறுகிறார். புன்னாட்டில் உலகப் புகழ் பெற்ற நீலக்கல் சுரங்கம் இருந்ததையும் அந்த நீலக்கற்களை உரோம தேசத்தவர் மதித்து வாங்கிச் சென்றதையும் முன்னமே கூறினோம். புன்னாட்டு வழியாகக் காவிரி, கப்பிணி என்னும் இரண்டு ஆறுகள் பாய்ந்தன. கப்பிணி ஆறு காவிரியின் ஒரு கிளை நதி. கப்பிணி ஆற்றங்கரையில் புன்னாட்டின் தலைநகரமான கட்டூர் இருந்தது (Mysore Archaeological Report for 1917, p. 40 -44). கட்டூரைப் பிற்காலத்தில் கிட்டூர் என்றும் கிட்டிபுரம் என்றும் பெயர் வழங்கினார்கள். தலைநகரமான கட்டூரில் புன்னாட்டரசர் இருந்து அரசாண்டார்கள். இது பிற்காலத்தில் புன்னாடு ஆறாயிரம் என்று பெயர் பெற்றிருந்தது. வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்த புன்னாடு இப்போது மைசூர் இராச்சியத்தில் ஹெக்கடதேவன் கோட்டை தாலுகாவில் சேர்ந்திருக்கிறது.

துளு நாட்டு அரசனான நன்னன் புன்னாட்டைக் கைப்பற்ற முயன்றான். அப்போது ஆய் எயினன் (வெளியன் வேண்மான் ஆய் எயினன்) புன்னாட்டு அரசனுக்கு உதவியாகத் துளு நாட்டரசனின் மேல் படையெடுத்துச் சென்றான். துளு நாட்டரசனின் சேனாதிபதியான மிஞிலி, பாழி என்னும் போர்க்களத்தில் ஆய்எயினனுடன் போர் செய்து அவனைக் கொன்றான்.27 இந்த வெளியன் வேண்மான் ஆய்எயினன், சேர நாட்டரசனாகிய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலினுடை சேனாதிபதி, துளு நாட்டு நன்னன் தான் கருதியது போல் புன்னாட்டைக் கைப்பற்ற முடியவில்லை.

புன்னாட்டரசர் கொங்குச் சேரர்களுக்குக் கீழ் அடங்கியிருந்தனர் என்று தெரிகின்றது. பெரும்பூண் சென்னி என்னுஞ் சோழன் புன்னாட்டைக் கைப்பற்ற எண்ணித் தன்னுடைய சேனாதிபதி பழையன் என்பவன் தலைமையில் தன்னுடைய சேனையையனுப்பினான். பழையன் புன்னாட்டுக் கட்டூரின் மேல் படையெடுத்துச் சென்றான். புன்னாட்டரசனுக்கு உதவியாகக் கங்க அரசன், கட்டியரசன், அத்தி, புன்றுறை முதலியவர்கள் இருந்து பழையனுடன் போர் செய்தார்கள். அப்போரில் பழையன் இறந்து போனான்.28

புன்னாட்டரசர் சங்க காலத்துக்குப் பிறகும் கி.பி.5 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் அரசாண்டனர். புன்னாட்டில் கிடைத்த ஒரு சாசன எழுத்து புன்னாட்டரசர் சிலருடைய பெயர்களைக் கூறுகின்றது (Indian Antiquary, xii 13, xvii 366). இதில் கீழ்க்கண்ட அரசரின் வழிமுறை கூறப்படுகிறது. ராஷ்ட்ரவர்மன், இவன் மகன் நாகதத்தன், இவன் மகன் புஜகன் (இவன் சிங்கவர்மன் மகளை மணஞ் செய்து கொண்டான்). இவனுடைய மகன் ஸ்கந்தவர்மன், இவனுடைய மகன் இரவிதத்தன் (Mysore and Coorg from its Inscriptions, B. Lewis Rice, 1909, p.146).

(புன்னாட்டரசர் பரம்பரையில் கடைசி அரசனுக்கு ஆண் பேறு இல்லாமல் ஒரே ஒரு பெண் மகள் மட்டும் இருந்தாள். கங்க நாட்டரசன் அவனிதனுடைய மகனான துர்வினிதன் (கி.பி. 482 - 517) புன்னாட்டரசனுடைய மகளை மணஞ் செய்து கொண்டான். அதன் பிறகு புன்னாடு கங்க நாட்டுடன் இணைக்கப்பட்டது.

கடைச் சங்க காலத்தில் புன்னாடு வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தது.

சாலிதொரெ என்பவர் புன்னாடு சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படவில்லை என்று தவறான, உண்மைக்கு மாறான, செய்தியைக் கூறுகிறார் (B.A. Saletore, ‘History of Tuluva’, Ancient Karnataka, Vol. I, p.51).

சங்க இலக்கியத்தில் கூறப்படுகிற எருமையூரன் (எருமை நாடன்) என்பவனுடைய எருமையூர் பிற்காலத்தில் மைசூர் என்று பெயர் பெற்றது என்றும் (எருமை - மகிஷம், எருமை ஊர் - மகிஷ ஊர், மைசூர்) மைசூர் என்னும் பெயரே பிற்காலத்தில் கன்னட நாடு முழுவதுக்கும் வழங்கப்படுகிறது என்றும் ஆராய்ச்சிக்காரர்கள் கூறுகிற உண்மை. இதைச் சாலிதொரெ மறுக்கிறார். மறுப்பதற்கு இவர் கூறுகிற காரணம் தவறாக இருக்கிறது. கர்நாடக தேசத்திலிருந்த பழைய பெயர்களான கழபப்பு (இப்போதைய சந்திரகிரி), புன்னாடு, குந்தளம் முதலிய பெயர்கள் சங்கச் செய்யுள்களில் கூறப்படாதபடியால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த எருமையூர் பிற்காலத்தில் மகிஷூர் (மைசூர்) என்றாயிற்று என்று கருதுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று என்று இவர் எழுதுகிறார். எருமையூரைக் கூறுகிற சங்கச் செய்யுள் புன்னாடு முதலிய வேறு ஊர்ப் பெயர்களைக் கூறவில்லை. ஆகையால் எருமையூர் என்று சங்கச் செய்யுள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார். புன்னாட்டின் பெயரைச் சங்க இலக்கியம் கூறவில்லை என்று இவர் கூறுவது வியப்பாக இருக்கிறது. புன்னாட்டின் பெயரைச் சங்க செய்யுள் கூறுவதை மேலே காட்டியுள்ளோம். சாலிதொரெ அவர்கள் உண்மையறியாமல் தவறாக எழுதியிருக்கிறார். எருமையூரை. கூறுகிற சங்கச் செய்யுள் புன்னாட்டையும் கூறுகிறது.

கோசர்

கோசர் என்னும் ஓர் இனத்தவர் போர் செய்வதையே தங்களுடைய குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். அவர்களுடைய தாய்நாடு, அக்காலத்தில் தமிழ்நாடாக இருந்த துளு நாடு. துளு நாட்டைத் தாய் நாடாகக் கொண்டிருந்த இவர்கள் பாண்டிநாடு, சோழநாடு, கொங்கு நாடு முதலிய பல நாடுகளிலும் பரவியிருந்தார்கள். இவர்கள் தமிழ்நாட்டு அரசரின் கீழே அவர்களுடைய படைகளில் சேர்ந்திருந்தார்கள். சில சமயங்களில், குடிமக்கள் அரசருக்குச் செலுத்த வேண்டிய இறைப் பணத்தை வசூல் செய்யும் சேவகர்களாகவும் இருந்தார்கள். இந்த முறையில் சில ஊர்களில் இவர்களில் சிலர் ஊராட்சியினராகவும் இருந்தனர். எண்ணிக்கையில் சிறு தொகையினராக இருந்தும் தமிழகமெங்கும் பேர் பெற்றிருந்தார்கள். போருக்கு அஞ்சாத இவர்கள் ஆற்றலும் உறுதியும் கண்டிப்பும் உடையவர்களாக இருந்தனர். இவர்கள் குறுநிலமன்னர் அல்லர்; ஆனாலும், நாட்டில் இவர்களுக்கு அதிகச் செல்வாக்கு இருந்தது.

போர்ப் பயிற்சியே இவர்களுடைய குலத்தொழில். குறி தவறாமல் வேல் எறிவதிலும் அம்பு எய்வதிலும் கை தேர்ந்தவர்கள். கோசர் குலத்து இளைஞர்கள், உயரமான மரக்கம்பத்தை நிறுத்தி அதன் உச்சியைக் குறியாகக் கொண்டு வேல்களை (ஈட்டிகளை) எறிந்து பழகினார்கள். அம்புகளை எய்து பயின்றார்கள். ஓங்கியுயர்ந்து வளர்ந்த முருக்க மரத்தின் பக்கக் கிளைகளை வெட்டிக் களைந்து நீண்ட நடுமரத்தை மட்டும் வைத்துக்கொண்டு வேல் எறிந்தும் அம்பு எய்தும் போட்டி போட்டுப் பழகினார்கள்.29 போர்க்களத்தில் உயிருக்கு அஞ்சாமல் போர் செய்து வெற்றியடைந்தனர்.30 போர்க்களத்தில் ஆயுதங்களினால் காயமடைந்ததனால் இவர்களுடைய முகத்தில் வடுக்கள் இருந்தன.31 உடம்பு முழுவதும் நகைகளை அணிந்திருந்தார்கள். இவர்கள் புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.32

கோசர் தமிழ்நாட்டுக்கு அப்பால் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர் என்று சிலர் கருதுகின்றனர்.33 இது தவறு. கோசரின் தாய்நாடு துளு நாடு. “மெய்ம்மலி பெரும்பூண் செம்மற் கோசர், கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாகலார்கைப் பறைக்கட் பீலித், தோகைக் காவின் துளு நாடு” (அகம் 15 : 2-5). துளுநாட்டுச் செல்லூருக்குக் கிழக்கில் இவர்கள் இருந்தார்கள். “அருந்திறற் கடவுள் செல்லூர்க்குணா அது, பெருங்கடல் முழக்கிற்றாகி யாணர் இருப்பிடம் படுத்த வடுவுடை முகத்தர், கருங்கட் கோசர் நியமம்” அகம் 90:9-12). துளுநாட்டு நாலூரிலும் இவர்கள் இருந்தார்கள். “நாலூர்க் கோசர்” (குறுந். 15: 3). துளு நாட்டில் நால்கூர் என்னும் ஊர் இருக்கிறது (நால்கு - நான்கு).

போர் வீரர் ஆகையால் இவர்கள் கள் அருந்தினார்கள். இவர்களுடைய வீடுகளில் மதுபானம் இருந்தது. மதுவருந்திக் குரவைக் கூத்தாடினார்கள். “நனைக் கள்ளின் மனைக்கோசர், தீந்தேறல் நறவு மகிழ்ந்து, தீங்குரவைக் கொளைத்தாங்குந்து" (புறம். 396: 7- 9)

கோசர் கொங்கு நாட்டிலும் இருந்தனர். அவர்கள், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்ததை யறிந்து கொங்கு நாட்டிலும் கண்ணகிக்கு விழாச் செய்தனர். இதனை, “அதுகேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழாவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று” என்று சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறுவதிலிருந்து அறியலாம். கொங்கு நாட்டுக் கோசர், பொறையரசருக்கு அடங்கி அவர்களின் கீழ் ஊழியஞ் செய்திருந்தனர் என்று தோன்றுகிறது.

கோயம்புத்தூர் என்பது கோசர் பெயரால் ஏற்பட்ட ஊர். கோசர் என்பது கோயர் என்றாகி கோயம்புத்தூர் என்று வழங்குகிறது. கோயன்+புத்தூர் = கோயன்புத்தூர். பிறகு இப்பெயர் கோயம்புத்தூர் என்றாயிற்று.

சோழநாட்டில் ஓர் ஊரையரசாண்ட அஃதை என்பவன் இடத்திலும் கோசர் இருந்தனர் (அகம் 113:4-7)


✽ ✽ ✽

அடிக்குறிப்புகள்

1. “அமரர்ப் பேணியும் ஆவுதியருத்தியும், அரும்பெறல் மரபில் கரும்பு இவண் தந்தும், நீரக விருக்கை யாழி சூட்டிய, தொன்னிலை மரபின் முன்னோர்.” (புறம் 99: 1-4). “அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்ன. கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே”. (புறம்.392: 19-21)

2. “நெடுமிடல் சாயக்கொடுமிடல் துமியப், பெருமுலை யானையொடு புலங்கெட இறுத்து”. (4 ஆம் பத்து, 2010-1)

3. ‘யாழிசை மறுகின் நீடூர் கிழவோன், வாய்வாள் எவ்வி ஏவல் மேவார், நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பெருந்தலர், அரிமணவாயில் உறந்தூர்’ (அகம் 2: 10-13).

4. “சுழல்தொடி அதிகன், கோளற, வறியாப், பயங்கெழு பலவின், வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன், களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர, ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்றருவி” (அகம்.162: 18-23).

5. “கறையடி யானை நன்னன் பாழி, ஊட்டரு மரபின் அஞ்சுவர பேஎய்க், கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி, புள்ளிற் கேமமாகிய பெரும்பெயர். வெள்ளாத்தானை அதிகன் கொன்று வந்து, ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பு” (அகம். 142:9-14) “கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும் பூண்பாண்டியன், வினைவல் அதிகன், களிறொடுபட்ட ஞான்றை ஒளிறுவாள் கொண்கர் ஆர்ப்பு.” (குறும். 393:3-6).

6. “செருவேட்டு, இமிழ் குரல் முரசின் எழுவரோடு முரணிச் சென்றமர் கடந்த நின் ஆற்றல் தோன்றிய அன்றும் பாடற்கரியை” (புறம். 99:8-11).

“இன்றும், பரணன் பாடினன் மற்கோல் மற்றுநீ “இன்றும், பரணன் பாடினன் மற்கோல் மற்றுநீ. முரண்மிகு கோவலூர் நூறிநின், அரண்டு திகிரியேந்திய தோளே” (புறம். 99: 11-14).

7. “நீலமணி மிடற்று ஒருவன் போல, மன்னுகபெரும நீயே தொன்னிலை பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது. ஆதனி்ன்னதத் தடக்கிச் சாதல் நீங்க வெமக்கீத் தனையே” (புறம். 91: 5-11) “கமழ்பூஞ்சாரல் கவினியநெல்லி. அமிழ்து விளை தீங்கனி ஔவைக்கீந்த உரவுச் சினங்கனலும் ஒளிதிகழ் நெடுவேல், அரவக் கடற்றானை யதிகன்” (சிறுபான். 100-103).

8. “இழையணி யானை இரப்போர்க் கீயும், சுடர்விடு பசும்பூண் சூர்ப்பமை முன்கை, அடுபோர் ஆனா ஆதனோரி, மாரி வண்கொடை” (புறம். 153: 2-5) “வெம்போர். மழவர் பெருமகன் மாவள்ளோரி, கைவளம்”. (நற். 52:8-10)

9. காரிக்குதிரை காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை ஓரியும் (சிறுபாண் 110-111).

10. “ஓரிக் கொன்ற ஒரு பெருந்தெருவில், காரிபுக்க நேரார் புலம் போல், கல்லென்றால் ஊரே. ” (நற். 320:4-7).

11. “முள்ளூர் மன்னன் கழல் தொடிக்காரி, செல்லா நல்லிசை நிறுத்தவில்வில், ஓரிக்கொன்று சேரலர்க்கீத்த, செல்வேர்ப் பலவின் பயங்கொழு கொல்லி” (அகம். 209: 12-15).

12. “வீயாவிழுப்புகழ் வின்தோய் வியன்குடை, ஈரெழுவேளிர் இயைந் தொருங்கெறிந்த கழுவுள் காழூர்” (அகம். 135:11-33)

13. “அதிரா யாணர் முதிரத்துக் கிழவன், இவண்விளகு சிறப்பின் இயல்தேர்க் குமணன்” (புறம். 158:25-76).

14. “அரிது பெறு பொலங்கலம் எளிதினின்வீசி, நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன், மட்டார் மறுகின் முதிரத் தோனே. ” (புறம். 160: 11-3)

“பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்து வேற்குமணன்”. (புறம். 163:89).

15. (புறம். 160, 161, 162, 163).

16. (புறம். 161, 162).

17. (புறம். 164)

18. “வில்கெழுதானை விச்சியர் பெருமகன், வேந்தரோடு பொருத ஞான்றைப் பாணர், புலிநேர் குறழ் நிலைகண்ட, கலிகெழு குறும்பூர் ஆர்ப்ப” (குறும். 326:5-8).

19. ‘வெருவருதானையொடு வெய்துறச் செய்து சென்று இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ வருமிளைக் கல்லகத் ததந்தெயில் எறிந்து’ (9ஆம் பத்து பதிகம்)

20. குல்லைக் கண்ணி வடுகர் முனையது, பல்வேற் கட்டி நன்னாட்டு உம்பர், மொழி பெயர் தேயம். (குறும். 11:5:7)

21. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி, பொன் அணி வல்வில் புன்றுறை என்றாங்கு. அன்றமர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப், பருந்துபடப் பண்ணி பழையன்பட்டென” (அகம். 44: 7-11)

22. “தித்தன் வெளியன் உறந்தை நாளவைப், பாடின் தெண்கிணைப் பாடுகேட்டஞ்சிப் போரடுதானை கட்டி. பொரா அ தோடிய ஆர்ப்பு” (அகம். 226: 14-7)

23. “வசையில் வெம்போர் வானவன் மறவன், நசையில் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும். பொய்யா வாய்வாள் புனைகழல் பீட்டன். மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன், அகலறை நெடுஞ்சுனை” (அகம். 143: 10:14)

24. “ஊராக் குதிரைக்கிழவ கூர்வேர். . . கைவள் ஈகைக்கடுமான்கொற்ற” (புறம். 168:14-17). ஊராக்குதிரை – குதிரைமலை) “வானவன் மறவன் வணங்கு விற்றடக்கை, ஆனா நறவின்வண்மகிழ்ப் பிட்டன்” (அகம். 17–15–16)

25. “வன்புல நாடன் வயமான் பிட்டன், அரமர் கடக்கும் வேலும் அவன் இறை, மாவள ஈகைக் கோதையும் மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே” (புறம். 172:8-11) உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் (புறம். 170:6-8) காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரும் (புறம். 169, 171) இவனைப் பாடியுள்ளனர்.

26. ‘அதிரா யாணர் முதிரத்துக்கிழவன், இவன் விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமணன்’ (புறம். 158:25, 26) “அரிதுபெறு பொலங்கலம் எளிதினில் வீசி, நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன், மட்டார் மறுகின் முதிரத்தோனே” (புறம். 60:11-18).

27. “பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென, யாழிசை மறுகின் பாழியாங்கண், அஞ்சலென்ற ஆ. அய் எயினன். இகலடுகற்பின் மிஞிலியொடு தாக்கித் தன்னுயர் கொடுத்தனன்” (அகம், 396:2-6).

“வெளியின் வேண்மான்ஆஅய் எயினன், அளியியல் வாழ்க்கைப் பாழிப்பறந்தலை இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு, நண்பகல் உற்ற - செருவிற்புண் கூர்ந்து, ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தென” (அகம். 208:5-9)

28. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு, அன்றவர் குழீஇ அளப்பருங்கட்டூர்ப், பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டென” (அகம். 44: 7-11).

29. “வென்வேல், இளம்பல் கோசர் விளங்குபடை கண்மார், இகலினர் எறிந்த அகலிலை முருக்கின், பெருமரக் கம்பம். ” (புறம். 169:8-11).

30. “கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்” (மதுரைக்காஞ்சி. 773).

31. “இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்” (அகம். 90:1)

32. “மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர்” (அகம். 15:2)

“வாய்மொழி நிலைஇய சேண் விளங்குநல்லிசை, வளங்கெழு கோசர்” (அகம். 205: 9- 20)

33. 1. 87. Ancient India and south Indian History and Culture Vol. I. Dr. S. Krishnaswami Aiyengar.