உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩0

சந்திரிகை

பந்துலுவின் மனைவி பரிமாறிக் கொண்டிருந்தாள். “யாருடைய சமையல் தெரியுமா?” என்று பந்துலுவின் மனைவி கேட்டாள். “காலையில் வந்தாளே, அந்தப் பெண்ணுடைய சமையலா?“ என்றார் பந்துலு.

“ஆம்“ என்றாள் பந்துலுவின் மனைவி.

“அந்தப் பெண்ணை இங்கு சற்றே வரச்சொல். நம்முடைய கோபாலய்யங்கார் அவளுடைய முகத்தின் அழகையும் அவள் சொல்லின் அழகையும் அவளறிவின் அழகையும் பார்க்க வேண்டும். சமையலழகை மாத்திரம் பார்த்தால் போதுமா? அந்த மஹா ஸுந்தரியின் சகல சௌந்தர்யங்களையும் பார்க்க வேண்டாமா?“ என்றார் வீரேசலிங்கம் பந்துலு.

“அவளுக்கு பலமான தலைநோவு. சமையல் சிரமம், யாத்திரை சிரமம் எல்லாம் சேர்ந்து அவளுக்குத் தலைநோவு உண்டாக்கிவிட்டன. இராத்திரி அவளுக்கு உடம்பு நேராய் விடும். அப்போது அய்யங்கார் அவளைப் பார்க்கலாம் என்று பந்துலுவின் மனைவி சொன்னாள். அப்பால் நெடுநேரம் இருவரும் ஆஹாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். போஜனம் முடிந்து கைகழுவிவிட்டுப் பந்துலுவும் அய்யங்காரும் மறுபடி பந்துலுவின் படிப்பறையில் வந்து நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். மேஜைமேல் பந்துலுவின் மனைவி கொண்டு வந்து வைத்த தாம்பூலத்தை எடுத்துப் போடத் தொடங்குகையில் “இதுவே சுவர்க்கம்“ என்று பந்துலு சொன்னார்.

“எது?“ என்று பந்தலுவின் மனைவி கேட்டாள்.