உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/028-052

விக்கிமூலம் இலிருந்து

4. சைவசமய அடியார்கள்

நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த சைவ சமய அடியார்களை ஆராய்வோம். திருநாவுக்கரசர், அப்பூதியடிகள், சிறுத்தொண்டர், திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், திருநீல நக்கர், முருக நாயனார், குங்கிலியக்கலயர் முதலான சைவ அடியார்கள் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர்கள். இவர்களுடைய வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்.

திருநாவுக்கரசர்

இவர், திருமுனைப்பாடி நாட்டிலே திருவாமூரிலே வாழ்ந்திருந்த புகழனாருக்கும் மாதினியாருக்கும் மகனாகப் பிறந்து மருணீக்கியார் என்னும் பெயருடன் வளர்ந்து இளமையிலேயே பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். பிறகு, அக்காலத்திலே செழித்து வளர்ந்திருந்த சமண சமய நூல்களைக் கற்று அச்சமயத்தை மேற்கொண்டார். இவருடைய கல்வி அறிவு ஒழுக்கங்களைக்கண்ட சமணர், இவருக்குத் தருமசேனர் என்னும் பெயர் கொடுத்துச் சமணசமயத் தலைவராக்கிப் பாடலிபுரத்தில் இருந்த சமண சமய மடத்தின் தலைவராக அமர்த்தினார்கள். நெடுங்காலமாக இவர் சமண சமயத் தலைவராக இருந்தார்.

தருமசேனருடைய முதுமை வயதில் இவருக்குச் சூலைநோய் உண்டாயிற்று. மணிமந்திர ஔஷதங்களினாலும் அந்நோய் தீராதபடியினாலே, அவர் பெரிதும் வருந்தினார். பிறகு, இவருடைய தமக்கையாரான திலகவதியாரால் சைவசமயத்தில் சேர்க்கப்பட்டார். பிறகு, இவருடைய சூலைநோய் தீர்ந்தது. அதுமுதல் பக்தி இயக்கத்தையும் சைவசமயத்தையும் பரவச் செய்யும் பணியில் இறங்கித் தமது ஆயுள் காலம் வரையிலும் அவற்றை செய்து கொண்டிருந்தார். சைவ சமயத்தில் சேர்ந்தபிறகு, இவருக்குத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் உண்டாயிற்று. பல்லவ அரசனான குணபரன் என்னும் மகேந்திரவர்மன் (கி. பி. 600-630) சமண சமயத்தவனாக இருந்தான். அவ்வரசனைத் திருநாவுக்கரசர் சைவசமயத்தில் சேர்த்தார். நரசிம்மவர்மன் அரசனானான். இவ்வரசன் காலத்திலும் இவர் வாழ்ந்திருந்தார்.

இவர் மிகுந்த வயதுசென்ற “தொண்டு” கிழவராக இருந்தபோது, சீகாழியில் இருந்த ஐந்து வயது சிறுவராகிய திருஞானசம்பந்தரைக் கண்டார். அதுமுதல் இவ்விரு நாயன்மார்களும் நண்பராக இருந்தனர். அப்பூதியடிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், முருக நாயனார், குங்கிலியக் கலயர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நெடுமா நாயனார், மங்கையர்க் கரசியார், குலச்சிறை நாயனார் முதலியவர்கள் இவருடன் பழகிய நாயன்மார்களாவர்.

பாண்டிநாட்டிலே அரசுபுரிந்த பாண்டியன் நெடுமாறன் சமணனாக இருந்தான். அவனைத் திருஞானசம்பந்தர் சைவசமயத்தில் சேர்ந்த பிறகு, திருநாவுக்கரசர் பாண்டிநாட்டில் தலயாத்திரை செய்தார். அப்போது பாண்டியன் நெடுமாறனும் அரசி பாண்டிமா தேவியாரும் அமைச்சர் குலச்சிறையாரும்,வரை வரவேற்றார்கள். பாண்டிநாட்டு யாத்திரைக்குப் பிறகு திருநாவுக்கரசர் தமது எண்பத்தொன்றாவது வயதில் சிவபதம் அடைந்தார். இவர் உத்தேசம் கி.பி. 569 முதல் 650 வரையில் வாழ்ந்திருந்தார்.1

திருஞானசம்பந்தர்

சீர்காழியிலே சிவபாதவிருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகப் பிறந்தவர் திருஞானசம்பந்தர். மூன்றாவது வயதிலே திருவருள் பெற்று, சிவபெருமானை இனிய பாடல்களினாலே பாடித் துதிக்கும் ஆற்றல் அடைந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் பாணர் இவர் பாடிய இசைப்பாட்டுகளை யாழில் அமைத்து வாசித்துக் கொண்டிருந்தார். இவருக்கு முன்பே பக்தியியக்கத்தையும் சைவ சமயத்தையும் பரப்பிவந்த மிக வயோதிகரான திருநாவுக்கரசர், மிக இளையவரான ஞானசம்பந்தரைச் சீகாழிக்கு வந்து கண்டு மகிழ்ந்தார். முதிர்ந்த வயதினரான திருநாவுக்கரசரைக் கண்ட இளைஞரான ஞானசம்பந்தர், அவரை அப்பா என்று அழைத்தார் ஆதலினாலே, திருநாவிக்கரசருக்கு அப்பர் என்னும் பெயரும் வழங்கலாயிற்று.

திருஞானசம்பந்தர், பௌத்த ஜைன சமயங்களையழித்துப் பக்தி இயக்கத்தையும் சைவ சமயத்தையும் நிலைநாட்டுவதில் தமது வாழ்நாளைக் கழித்தார். இவருடன் சிறுத்தொண்டர், திருநீல நக்கர், முருக நாயனார், குங்கிலியக் கலயர் முதலியவர்கள் நண்பராக இருந்தனர். திருநாவுக்கரசு சுவாமிகள், குணபரன் என்னும் மகேந்திரவர்ம பல்லவ அரசனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியதுபோலவே, திருஞானசம்பந்தரும் கூன்பாண்டியன் என்னும் பாண்டியன் நெடுமாறனைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாற்றினார். பின்னர்,

ஞானசம்பந்தரின் பதினாறாவது வயதில் அவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. அத்திருமணத்தின் முடிவில் தோன்றிய ஒளியிலே, ஞானசம்பந்தரும் அத்திருமணத்திலிருந்த மற்ற எல்லோரும் புகுந்து மறைந்தனர் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவருடைய பிரிவான வரலாற்றினைத் திருத்தொண்டர் புராணத்தில் திருஞானசம்பந்த நாயனார் புராணத்தில் காண்க.

நெடுமாறர்

பாண்டிய மன்னனாகிய இவருக்கு நெடுமாறன் என்று பெயர். கூன்பாண்டியன் என்றுங் கூறுவர். வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் இவ்வரசனை அரிகேசரி, அசம சமன், மாறவர்மன் என்று கூறுகிறது. சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டுச் சாசனம் அரிகேசரி, அசம சமன், அலங்கிய விக்ரமன், அகாலகாலன், மாறவர்மன் என்னும் பெயர்களைக் கூறுகிறது. எனவே இவனுக்கு இப்பெயர்கள் எல்லாம் வழங்கியதாக அறிகிறோம். பாண்டிக்கோவை இவ்வரசன் மீது பாடப்பட்டதென்பர். இவன் வாதாபிகொண்ட நரசிம்மவர்மன் என்னும் அரசன் காலத்தில் இருந்தவன். இவன் காலத்தில், தமிழ்நாடு எங்கும் சமணசமயம் சிறப்பாக இருந்ததுபோலவே, இவனுடைய பாண்டிய நாட்டிலும் சிறந்திருந்தது. இந்த அரசனும் சமண சமயத்தவனாக இருந்தான்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாண்டிநாடு சென்று சமண சமயத்தவனாக இருந்த இந்தப் பாண்டியனைச் சைவனாக்கினார்.2 இவன் சைவனானவுடனே 80 வயதுடையவரான திருநாவுக்கரசு நாயனார் பாண்டிய நாட்டில் தலயாத்திரை செய்தார். அப்போது, இப் பாண்டிய னும் இவன் அரசியான மங்கையர்க்கரசியாரும் அமைச்சரான குலச்சிறை நாயனாரும் நாவுக்கரசரை வரவேற்றார்கள். இப்பாண்டியன் வரலாற்றைப் பெரியபுராணம் நெடுமாறநாயனார் புராணத்தில் காண்க.

பிரம சூத்திரத்தின் பூர்வ மீமாம்சைக்கு ஆசாரிய சுந்தரபாண்டியர் என்பவர் ஒரு விரிவுரையெழுதியிருக்கிறார். அந்த உரையை, ஆதி சங்கராச்சாரியாரும் குமாரிலபட்டரும் தங்களுடைய பிரமசூத்திர பாடியத்திலே போற்றிப் புகழ்ந்திருப்பதோடு, அந்த உரைப் பகுதிகளையும் மேற்கோள் காட்டுகிறார்கள். இவ்வாறு இவர்களால் போற்றப்படுகிற ஆசாரிய சுந்தரபாண்டியர் என்பவர் நெடுமாற நாயனாராக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகின்றனர். அரிகேசரி மாறவர்மன், கூன்பாண்டியன், நெடுமாறன், சுந்தரபாண்டியன் என்று கூறுப்படுகிற இவ்வரசனே ஆசாரிய சுந்தரபாண்டியனாக இருக்கக்கூடும் என்று கருதுகிறார்கள்.3

அப்பூதியடிகள்

இவர், சோழநாட்டுத் திங்களூரிலே இருந்த பிராமணர், திருநாவுக்கரசர், நாடெங்கும் தலயாத்திரை செய்து பக்தி இயக்கத்தையும் சைவ சமயத்தையும் பரப்பி வருவதைக் கேள்விப்பட்ட இவர், அவர்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டார். ஆகவே, தமது பிள்ளைகளுக்குத் திருநாவுக்கரசு என்னும் பெயரைச் சூட்டினார். திருநாவுக்கரசர் பெயரால் பல தண்ணீர்ப்பந்தல்களையும் அறச்சாலைகளையும் ஏற்படுத்தினார். திருநாவுக்கரசரை நேரில் காணாமலே இவ்வாறெல்லாம் செய்து சிறந்த சிவனடியாராக விளங்கினார் அப்பூதியடிகள்.

திருநாவுக்கரசர், சோழநாட்டுத் தலயாத்திரை செய்தபோது திங்களூருக்குச் சென்றார். அப்பூதியடிகள் அவரை வரவேற்றுத் தமது மனையில் உபசரித்தார். இவரது விரிவான வரலாற்றைப் பெரியபுராணம், அப்பூதியடிகள் நாயனார் புராணத்தில் காண்க.

முருகநாயனார்

சோழநாட்டுத் திருப்புகலூரில் இருந்தவர். அவ்வூர் வர்த்தமானீச்சுரம் என்னும் சிவன் கோயிலில் வழிபாடு செய்துகொண்டிருந்தார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர் (பரஞ்சோதியார்) இவர்களின் நண்பராக இருந்தார். திருஞான சம்பந்தரின் திருமணத்திற்குச் சென்று, அவர் சோதியில் கலந்தபோது இவரும் சோதியில் கலந்தார். இவருடைய வரலாற்றைப் பெரியபுராணம் முருகநாயனார் புராணத்தில் காண்க.

குங்கிலியக் கலயர்

சோழநாட்டுத் திருக்கடவூரில் இருந்தவர். அவ்வூர்ச் சிவன்கோயில் குங்கிலியத் தூபம் இடுகிற திருத்தொண்டினைச் செய்துவந்தார். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் திருக்கடவூருக்குத் தலயாத்திரையாகச் சென்றபோது அவர்களை வரவேற்று உபசரித்தார். இவருடைய முழுவரலாற்றினைத் திருத்தொண்டர் புராணம் குங்கிலியக் கலநாயனார் புராணத்தில் கண்டுகொள்க.

திருநீலநக்கர்

சோழநாட்டுச் சாத்தமங்கை என்னும் ஊரில் இருந்தவர். திருஞானசம்பந்தரிடம் மிகுந்த அன்புள்ள நண்பர். திருஞானசம்பந்தருக்குத் திருமணம் நடந்தபோது இவர் புரோகிதராக இருந்தார். பிறகு, அத்திருமணத்தின்போது திருஞானசம்பந்தருடன் சோதியில் கலந்தார். இவர் வரலாற்றினைத் திருத்தொண்டர் புராணம் திருநீல நக்கநாயனார் புராணத்தில் காண்க.

சிறுத்தொண்டர்

இவருக்குப் பரஞ்சோதியார் என்றும் பெயர் உண்டு, சோழநாட்டுத் திருச்செங்காட்டங்குடியில் இருந்தவர். பல்லவ அரசனிடம் (மாமல்லன் நரசிம்மவர்மனிடம்) சேனைத்தலைவராக இருந்தவர். அவ்வரசன் கட்டளைப்படி வாதாபி (வாதாபி) என்னும் நகரத்தின்மேல் படையெடுத்துச்சென்று அந்நகரை (கி. பி. 642-இல்) வென்றார். பிறகு சேனைத்தலைவர் பதவியிலிருந்து நீங்கிக் கணபதீச்சரத்துச் சிவன் கோயிலில் திருத்தொண்டு செய்துகொண்டிருந்தார். அப்போது சீராளன் என்னும் மகன் இவருக்குப் பிறந்தான். இவர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் முதலிய நாயன்மாருடன் நண்பராக இருந்தார். இவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருமணத்திற்கு முன்பே இறைவன் அடியைச் சேர்ந்தார். இவருடைய விரிவான வரலாற்றைப் பெரியபுராணம் சிறுத்தொண்ட நாயனார் புராணத்தில் காண்க.

பாண்டிமா தேவியார்

இவருக்கு மங்கையர்க்கரசியார் என்னும் பெயர்உண்டு. சோழஅரசனுடைய மகளார். இவருடைய தந்தையான சோழ அரசன், பல்லவ அரசனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாக இருந்தவன். பாண்டியன் நெடுமாறனுக்கு வாழ்க்கைப்பட்ட மங்கையர்க்கரசியார், சைவசமயப் பற்றுடையவர். திருஞானசம்பந்தரைப் பாண்டிநாட்டிற்கு அழைத்துப் பாண்டியனைச் சைவனாக்கிப் பாண்டிநாட்டில் சைவமதத்தைத் தழைக்கச் செய்வதற்கு முதற்காரணமாக இருந்தவர். திருநாவுக்கரசர் பாண்டிநாட்டில் தலயாத்திரை செய்தபோது அவரை வரவேற்று உபசரித்தார். இவரது வரலாற்றினைப் பெரியபுராணத்தில் காண்க.

குலச்சிறை நாயனார்

பாண்டி நாட்டிலே மணமேற்குடி என்னும் ஊரிலே பிறந்தவர். பாண்டியன் நெடுமாறனிடம் அமைச்சராக இருந்தவர். சைவசமயத்தில் பற்றுள்ள இவர், பாண்டி நாட்டில் சமணசமயம் செழித்துச் சைவசமயம் குன்றியிருந்ததைக்கண்டு, சைவசமயத்தை வளர்க்கவும் சமணனாக இருந்த பாண்டியனைச் சைவனாக மாற்றவும் எண்ணங்க கொண்டார். அதற்காகப் பாண்டிமாதேவியாருடன் சேர்ந்து ஞானசம்பந்தரைப் பாண்டியநாட்டிற்கு அழைத்தார். திருநாவுக்கரசர் பாண்டிய நாட்டில் தலயாத்திரை செய்தபோது அவரை வரவேற்றார். இவரது வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க.

திருநீலகண்ட யாழ்ப்பாணர்

நடுநாட்டில் திருஎருக்கத்தம்புலியூரில் பிறந்தவர். பாணர் மரபைச் சேர்ந்தவர். பாணர்கள் இசைப்பாட்டிலும் யாழ் வாசிப்பதிலும் தொன்றுதொட்டுப் பேர்போனவர்கள். சங்ககாலத்திலே (கி. பி. 300- க்கு முன்பு) பாணர்கள் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படவில்லை. அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்குச் சமநிலையில் இருந்தார்கள். ஆனால், பிற்காலத்திலே தாழ்த்தப்பட்டுத் தீண்டப்படாதவராகக் கருதப்பட்டனர். இந்த நிலையில்தான் கி. பி. 7-ஆம் நூற்றாண்டிலே நீலகண்ட யாழ்ப்பாணர் இருந்தார்.

யாழ் வாசிப்பதில் தேர்ந்தவராகிய இவர், சிவபெருமான் மீது பக்தியுள்ளவராய், திருக்கோயில்களுக்குச் சென்று சிவபெருமானைப்பாடி யாழ் வாசித்துக்கொண்டிருந்தார். தீண்டப்படாதவர் என்னும் நிலையில் கோயிலுக்கு வெளியிலேயிருந்து இப்பணியைச் செய்துவந்தார். மதுரைச் சொக்கனாதர் ஆலயத்தில் இவர் இசைபாடியபோது, இவருடைய பக்திக்கும் இன்னிசைக்கும் மனமுருகி அடியார்கள் இவரைக் கோயிலுக்குள் அழைத்துச்சென்று இசை வாசிக்கச் செய்தனர். அது மட்டுமன்றி பொற்பலகைஇட்டு அதன்மேல்இருந்து வாசிக்கச் செய்தனர். திருவாரூரிலும் அவ்வாறே கோயிலுக்குள் அழைத்துச்சென்று இவரை இசைபாடச் செய்தனர்.

இவ்வாறு நெடுங்காலம் யாழ்வாசித்த இவர், இளைஞராகிய திருஞான சம்பந்தர் இனிய இசைப்பாடல்களைப் பாடுவதையறிந்து சீகாழிக்கு வந்து அவருடைய பாடல்களை யாழில்இட்டு வாசித்தார். அதுமுதல் ஞானசம்பந்தருடனே தங்கியிருந்து அவருடைய பதிகங்களை யாழில் வாசித்துக கொண்டிருந்தார். இவர் கடைசியில், ஞானசம்பந்தரின் திருமணத்தில் அவருடன் ஒளியில் கலந்தார். இவர் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க.

அடிக்குறிப்புகள்

1. இந்நூலாசிரியர் எழுதிய மகேந்திரவர்மன் என்னும் நூலைக் காண்க.

2. திருஞானசம்பந்த நாயனாரைவிட இப்பாண்டியன் வயதில் இளைஞன் என்று ஒரு சரித்திரப் பேராசிரியர் கூறுகிறார். (The pndian Kingdom by K.A. Nilakanta Sastri) ஞான சம்பந்தர் தமது 16 ஆவது வயதில் இறைவனை அடைந்தார். சம்பந்தர் தமது 16ஆவது வயதில் இறைவனை அடைந்தார். அவர் பாண்டியனைச் சைவனாக்கியபோது ஏறக்குறைய 14 வயது இருக்கும். பாண்டியன் அவருக்கு வயதினால் சிறியவனாக இருந்தால், பாண்டியனுக்கு 13 அல்லது 12 வயதாக இருக்க வேண்டும். இவ்வளவு சிறுவயதில் நெடுமாறன் அரசாட்சிக்கு வந்தான் என்பதற்கு இலக்கியம், சாசனம் முதலிய யாதொரு சான்றும் கிடையாது. ஆகவே சரித்திர ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறுவது கொள்ளத்தக்கதல்ல.

3. J.O.R.M. 1927. P. 5. 15. சுந்தரபாண்டியன், நெடுமாற நாயனார் அல்லர். நெடுமாறனுக்கு முன்பிருந்தவராகக்கூடும் என்று வேறு சிலர் கருதுகிறார்கள்.