உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/030-052

விக்கிமூலம் இலிருந்து

6. தமிழ் இலக்கியம்

நரசிம்மவர்மன் காலத்தில் தமிழ் இலக்கியம் எவ்வாறு இருந்தது என்பதை ஆராய்வோம். அக்காலத்தில் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடினார்கள். அப்பாடல்கள் இசைத் தமிழ் ஆக இருந்தாலும் அவை இயற்றமிழாகவும் விளங்குகின்றன. நாவுக்கரசர் நாற்பத்தொன்பதாயிரம் பதிகங்களைப் பாடினார். “இணைகொள் ஏழெழு நூறு இரும்பனுவல் ஈன்றவன் திருநாவுக்கரையன்” என்று சுந்தரமூர்த்திகள் கூறியுள்ளார். ஞானசம்பந்தர் பதினாறாயிரம் பதிகங்களைப் பாடினார். இவர்கள் பாடிய பாடல்கள் பனையேடுகளில் எழுதப்பட்டுச் சிதம்பரத் திருக்கோயிலிலுள்ள ஓர் அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தன. இவை கையாளப் படாமலும் அவ்வப்போது துப்புரவு செய்யப்படாமலும் இருந்த படியால், நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு அபய குலசேகர சோழ மகா ராசன் இவ்வறைகளைத் திறந்து பார்த்தபொழுது ஏடுகள் கறையான் அரித்து மண்தின்று கிடந்தன. அழியாமல் எஞ்சிநின்றவை, அப்பர் பாடல்கள் முன்னூற்றுப் பன்னிரண்டு பதிகங்களும், ஞானசம்பந்தர் பாடல்கள் முன்னூற்று எண்பத்துநான்கு பதிகங்களும் ஆகும். எனவே அப்பர் சம்பந்தர் பாக்களில் பெரும்பகுதிகள் இப்போது மறைந்து விட்டன.

இவையல்லாமல், பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதி நூறு வெண்பாக்களும், பூதத்தாழ்வார் இயற்றிய இரண்டாந் திருவந்தாதி நூறு வெண்பாக்களும், பேயாழ்வார் இயற்றிய மூன்றாந் திருவந்தாதி நூறு வெண்பாக்களும், திருமழிசையாழ்வார் இயற்றிய நான் முகன் திருவந்தாதி தொண்னூற்றாறு வெண்பாக்களும், திருச்சந்த விருத்தம் நூற்றிருபது விருத்தப் பாக்களும் அக்காலத்தில் இயற்றப் பட்ட தமிழ் இலக்கியங்களாகும். மேலும், கூன்பாண்டியன் என்னும் நெடுமாறன் மீது இயற்றப்பட்ட (இறையனால் அகப்பொருள் உரையில் மேற்கோள் காட்டப்பட்ட) பாண்டிக்கோவையும் அக் காலத்தில் தோன்றிய இலக்கியம் ஆகும்.

தமதுட காலத்தில், செல்வர்கள் புலவர்களை ஆதரித்தார்கள் என்பதை ஞானசம்பந்தர் தமது பாடல்களில் கூறுகிறார்:

"கலை நிலவிய புலவர்களிடர் களைதரு
கொடை பயில்பவர் மிகு
சிலைமலி மதில்புடை தழுவிய பொழில்
வளர்தரு மிழலையே."1

என்றும்,

“உரவார் கலையின் கவிதைப்
புலவர்க் கொருநாளும்
கரவா வண்கைக் கற்றவர்
சேருங் கலிக்காழி."2

என்றும்,

"வையம் விலைமாறிடினும் ஏறும்புகழ் மிக்கு
இழிவிலாத வகையார்
வெய்ய மொழிதான் புலவருக்கு உரை
செய்யாதவர் வேதி குடியே."3

என்றும் அவர் கூறியிருப்பது காண்க.

சிவபெருமான் மதுரையில் தொகை நூலைத் தொகுத்தார் என்னும் கதையை ஞானசம்பந்தர் கூறுகிறார்:

"அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்
தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்
பற்றின்றிப் பாங்கெதிர் விரவும் பண்பு நோக்கிற்
பெற்றன் றுயர்ந்த பெருமான் பெருமானு மன்றே."4

இப்பாட்டுக்கு உரை கூறுவதுபோல, சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் இவ்வாறு பாடியுள்ளார்:

"ஆன அற்றன்றி என்ற அத்திருப்பாட்டிற் கூடல்
மாநகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத்தேறா
ஈனர்கள் எல்லைக்கிட்ட எடுநீர் எதிர்ந்து செல்லில்
ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்."5

நாவுக்கரசர் கூறுவதையும் இதனுடன் ஒத்திட்டுப் பார்ப்போம்.

"மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க விழுமியநூல்
ஆய்ந்தான் அடிநிழற் கீழதன் றோவென் னாருயிரே."6

"அளவு கண்டிலள் ஆவடு தண்டுறைக்
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே."7

"விரிக்கு மரும்பதம் வேதங்க ளோதும் விழுமியநூல்
உரைக்கி லரும்பொரு ளுள்ளவா கேட்கில் உலகமுற்றும்."8

சம்பந்தர், மதுரைத்தொகையாக்கினான் என்று கூறுவதும், அப்பர், விழுமியநூல் ஆய்ந்தான், களவுகண்டனள் என்று கூறுவதும் இறையனார். அகப்பொருள் என்னும் நூலை கருத்தில் கொண்டு கூறியதாகத் தோன்றுகின்றது.

சம்பந்தர் தமது காலத்தில் வழங்கிய கிளிவிருத்தம் எலி விருத்தம் என்னும் நூல்களைக் கூறுகிறார். இந் நூல்களைச் சமணர் இயற்றினர்.

"கூட்டினார் கிளியின் விருத்த முரைத்ததோ ரெலியின்தொழில்
பாட்டு மெய்சொலிப் பக்கமே செலும் எக்கர் தங்களை....."9

அப்பா சுவாமிகள் நரிவிருத்தத்தைக் கூறுகிறார்.

"அரியயற் கரியானை அயர்த்துப் போய்
நரிவிருத்தம தாகுவர் நாடரே."10

பிற்காலத்தில், 11-ஆம் நூற்றாண்டிலே உண்டான வீர சோழியம் என்னும் இலக்கண நூலின் உரையிலே, அந்நூல் உரையாசிரியர் கிளி விருத்தம், எலிவிருத்தம், நரி விருத்தம் என்னும் நூல்களைக் கூறுகிறார். அவர் கூறுவது: "குண்டலகேசி விருத்தம் கிளிவிருத்தம் எலிவிருத்தம் நரிவிருத்தம் முதலியவற்றுள் கலித்துறைகளு முளவாம்.” என்பது.

சம்பந்தர் கூறிய கிளிவிருத்தம் எலிவிருத்தம் என்னும் நூல்கள் இப்போது மறைந்துவிட்டன. அப்பர் கூறிய நரிவிருத்தம் என்னும் நூல் இப்போதும் இருக்கிறது.

நரிவிருத்தம், சீவகசிந்தாமணியை இயற்றிய திருத்தக்கதேவர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. சீவக சிந்தாமணியை இயற்றுவதற்கு முன்னர் நரிவிருத்தத்தைத் திருத்தக்கதேவர் இயற்றித் தமது ஆசிரியரிடம் காட்டினார் என்றும் அதனைக் கண்ட ஆசிரியர், சீவக சிந்தாமணியை இயற்ற அனுமதியளித்தார் என்றும் வரலாறு கூறப்படுகிறது. அப்பர் சுவாமிகள் நரிவிருத்தத்தைக் கூறுகிற படியினாலே, அக்காலத்திலேயே சீவக சிந்தாமணியும் இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்பது தெரிகிறது.

மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் சாசனங்களும் செப்பேடுகளும் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் காலத்தில் எழுதப்பட்ட சாசனங்களும் செப்பேடுகளும் இதுகாறும் கிடைக்க வில்லை. அவன் காலத்தில் எழுதப்பட்ட ஒரே ஒரு தமிழ்ச்சாசனம் மட்டும் நமக்குக் கிடைத்திருக்கிறது. அது, திருக்கழுக்குன்றத்து மலைமேல் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் என்று கூறப்படுகிற குகைக்கோயிலில் எழுதப்பட்டுள்ள சாசனம் ஆகும். அச் சாசனத்தின் அமைப்பைக் கீழே காண்க. அதிலிருந்து அக் காலத்துத் தமிழ் எழுத்து எப்படியிருந்தது என்பதை ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.

“ஸ்ரீரி திருக்கழுக்குன்றத்து பெருமான்னடிகளுக்கு களத்தூர் கோட்டத்து ... ... திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமலைமேல் மூலட்டானத்து பெருமானடிகளுக்கு வழிபாட்டுப்புறமாக வாதாபிகொண்ட நரசிங்கப் போத்தரசர் (வை) வத்தது”

என்பது இதன் வாசகம். இதில் சில எழுத்துக்கள் மறைந்தும், சில எழுத்துக்கள் மழுங்கியும் காணப்படுகின்றன.

அடிக்குறிப்புகள்

1. சம்பந்தர் | திருவீழிமிழலை. 3

2. சம்பந்தர் | சீகாழி. 1.

3. சம்பந்தர் III திவேதிகுடி. 6.

4. சம்பந்தர் III திருப்பாசுரம் 11.

5. சம்பந்தர் புராணம் 843.

6. அப்பர் I ஆருயிர்த் திருவிருத்தம் 6.

7. அப்பர் II திருவாவடுதுறை 2.

8. அப்பர் | திருக்கழுமலம் 4.

9. திருவாலவாய்ப் பதிகம் 5.

10. ஆதிபுராணக் குறுந்தொகை 7.