மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/037-052
2. இலங்கைத் தீவில் தமிழ் நாட்டுத் தெய்வங்கள்[1]
‘மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையான் சொல்லியும் படுமே'
என்பது தொல்காப்பிய (அகத்திணையியல் 5-ஆம்)
முல்லை நிலத்தில் திருமால் வணக்கமும், குறிஞ்சி நிலத்தில் முருகன் வணக்கமும், மருத நிலத்தில் இந்திரன் வணக்கமும், நெய்தல் நிலத்தில் வருணன் வணக்கமும் தமிழ் நாட்டிலே அக்காலத்திலே நிகழ்ந்தன. இந்தத் தெய்வங்களின் வழிபாடு அக்காலத்திலே இலங்கையிலும் பரவி, அக்காலத்தில் அங்கிருந்த இயக்கர், நாகர், வேடர் முதலியவர்களால் மேற் கொள்ளப்பட்டிருந்தது. பிறகு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே பௌத்தமதம் இலங்கைக்கு வந்து அது அரசாங்க மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மெல்ல மெல்ல இலங்கை முழுவதும் பரவிற்று. பௌத்தம் இலங்கையில் அரசாங்க மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு செல்வாக்கடைந்தபோது, அங்கு முன்பு இருந்து வந்த தமிழர் தெய்வ வழிபாடு பின்னிலையடைந்தது. பின்னிலையடைந்ததே தவிர மறைந்து அழிந்து விடவில்லை. பௌத்த மதத்தைச் சார்ந்த சிங்களவர் இன்றுங்கூட மாயோன், சேயோன் முதலிய தமிழ்த் தெய்வங்களை வழிபடுகின்றனர். இதனைச் சற்று விளக்கிக் கூறுவோம்.
முருகன், திருமால், வருணன், இந்திரன் என்னும் பழைய தெய்வங்களைத் தமிழர் வழிபட்டனர். இத்தெய்வங்களில் முருகன், திருமால், வருணன் என்னும் மூன்று தெய்வங்கள் இலங்கையில் முற்காலத்திலும் பிற்காலத்திலும் வழிபடப்பட்டனர். இந்திரன் வணக்கம் இலங்கையில் நடைபெறவில்லை. மற்ற மூன்று தெய்வங்கள் இலங்கையில் தொன்றுதொட்டு, அங்குப் பௌத்த மதம் வருவதற்கு முன்னரேயே, வழிபடப்பட்டனர். இத் தெய்வங்களில் வருணன் வணக்கம், பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது போலவே, இலங்கையிலும் மறைந்து விட்டது. ஆனால் முருகன் வணக்கமும் திருமால் வணக்கமும் தமிழ் நாட்டில் இன்றும் நிகழ்ந்து வருகிறது போலவே இலங்கையிலும் தொன்று தொட்டு இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் வாழ்கிற தமிழர்களால் முருகனும் திருமாலும் வழிபடப்படுகின்றனர் என்பது மட்டும் அல்ல; தமிழரல்லாத பௌத்தராகிய சிங்கள மக்களாலும் முருகனும் திருமாலும் தொன்று தொட்டு இன்றுகாறும் வழிபடப்படுகின்றனர். முருகன் சிங்களவர்களால் ஸ்கந்தன் என்றும் கந்தன் என்றும் வழிபடப்படுகிறார். திருமால், விஷ்ணு என்றும் மாவிஸ் உன்னானே என்றும் சிங்களவர்களால் வழிப்படப்படுகிறார். இவற்றை விளக்கிக் கூறுவோம்.
ஸ்கந்தன் - (முருகன்)
ஸ்கந்தனாகிய முருகனை (இலங்கைத் தமிழர் வழிபடுவது மட்டுமல்லாமல்) சிங்களவரும், இலங்கைக் காட்டில் வாழும் வேடர்களும் வழிபடுகின்றனர். ஸ்கந்தனைக் கெலெதெவியோ (கல்தெய்வம், கல்-மலை, தெவியோ - தெய்வம்) என்றும் கலெ இயக்க (கலெ - மலை, இயக்க சிறுதெய்வம்) என்றும் கூறுகிறார்கள். கந்தன், கடலுக்கப்பாலிருந்து (இந்தியாவிலிருந்து) இலங்கைக்கு வந்ததாகவும் கூறுகிறார்கள். இதனால், கந்தன் வழிபாடு தமிழ் நாட்டிலிருந்து கடல்கடந்து இலங்கைக்குச் சென்றது என்பது வலியுறுகின்றது.
இலங்கையில் கந்தனுடைய முக்கிய கோவில் கதிர்காமத்தில் இருக்கிறது. இலங்கையில் தென்கிழக்கே மாணிக்க கங்கை ஆற்றின் கரையிலே கதிர்காமம் அல்லது கதரகாமம் என்னும் இடம் இன்றும் பேர் பெற்றிருக்கிறது. இங்குக் கந்தனுக்கும் வள்ளிக்கும் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் திருவிழா நடக்கிறது. கதிர்காமக் கோவிலுக்கு அறுபதாயிரம் ஏக்கர் நிலம் உண்டு. இந்தக் கோவிலைச் சேர்ந்த காடுகளில், இலங்கை வேடர்களில் ஒரு இனத்தவாகிய கோவில் வனமை வேடர் என்பவர் வசித்து வந்தார்கள். இந்த வேடர்களின் முன்னோர், வள்ளியம்மையைக் குழந்தை உருவத்துடன் ஒரு வயலில் கண்டெடுத்து வளர்த்ததாகவும், வள்ளி வயதடைந்த பிறகு கந்தன் அவளை மணம் செய்து கொண்டதாகவும் இவ்வேடர்கள் கூறுகிறார்கள். இப்போது இவ்வேடர்கள் இங்கு இல்லை. கி.பி. 1886 இல் இவ்வேடர்களின் சந்ததியார் இங்குச் சிலர் இருந்ததாகவும் அவர்களும் மிகவும் வறுமையுற்றிருந்தனர் என்றும் ஒருவர் கூறுகிறார்.1
கதர்காமத்தெய்வம் (கந்தன்), வயலைக் காத்துக் கொண்டிருந்த வள்ளியின் முன்பு பசி தாகத்தினால் இளைத்த பண்டாரம்போல வந்ததாகவும், அப்போது அங்கு வந்த யானைக்கு அஞ்சிய வள்ளி அப்பண்டாரத்தினிடம் அடைக்கலம் புகுந்ததாகவும், பிறகு பண்டாரமாகிய கந்தன் வள்ளியை மணம் செய்ததாகவும் கூறுகின்றனர். இது தமிழ் நாட்டில் கூறப்படுகிற முருகன் கதையோடு மிகவும் பொருந்தியுள்ளது. கதிர்காமக் கோவிலுக்கு 4 மைல் தூரத்தில் ஒரு பாறைக் கல்லில் யானையினுடைய கால் அடையாளம் காணப்படுகிறது. அது வள்ளியைத் துரத்திவந்த யானையின் காலடி அடையாளம் என்று கூறப்படுகிறது.
கதிர்காம முருகனைப்பற்றி ஒரு கதை வழங்குகிறது. கதிர்காமத்துக்கு அருகில் ஒரு குன்றின்மேல் ஆதியில் முருகன் எழுந்தருளி இருந்ததாகவும், அவ்வழியாகச் செல்லும் தமிழர்களை முருகன் விளித்துத் தன்னைக் கீழே கொண்டுபோய் விடும்படி பலமுறை கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அத்தமிழர்கள் அதற்கு உடன்படாமல் மறுத்துவிட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது. பிறகு முருகன், அவ்வழியாகச் சென்ற சிங்களவரை விளித்துத் தன்னைக் கொண்டுபோய்க் கீழே விடும்படி கேட்டுக்கொள்ள அதற்கு அவர்கள் உடன்பட்டுக் குன்றின்மேல் இருந்த முருகனைக் கீழே கொண்டுவந்து விட்டனர் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கதையிலிருந்து ஒரு உண்மை புலனாகிறது. குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகன் மலைமேல் ழுந்தருளி இருக்க வேண்டியவன். ஆகவே அவனைக் குன்றிலிருந்து கீழே கொண்டுவரத் தமிழர்கள் மறுத்துவிட்டனர். ஆனால், தமிழர் மரபு அறியாத சிங்களவர் முருகனைக் குன்றிலிருந்து கீழே கொண்டு வந்துவிட்டார்கள். பிறகு, முருகன் இருந்த அந்த இடத்தில் சிங்களவர் ஒரு பௌத்தத் தகோபாவை (தாதுகர்ப்பத்தைக்) கட்டிவிட்டனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்த துட்டகமுனு என்னும் சிங்கள அரசன், தன் பகைவனாகிய ஏலேலனைப் போரில் வெல்வதற்குக் கதிர்காமத் தெய்வத்தின் அருளைப் பெற்றான் என்றும் அதற்காக அவன் கதிர்காமக் கோவிலுக்குத் தானங்களைக் கொடுத்தான் என்றும், மகாவம்சம் என்னும் நூலில் கூறப்படுகிறான். கதிர் காமத்தில் மட்டுமல்ல; இலங்கையின் ஊவா மாகாணம், வடமத்திய மாகாணம், வடமேற்கு மாகாண, கண்டி முதலிய இடங்களிலும் கலெதெவியோ (Gale Deviyo) என்னும் மலைத் தெய்வமாகிய கந்தன் வழிபடப்படுகிறான். ஆண்டுதோறும் வேடர் (சிங்களவருங்கூட) மலையுச்சிகளில் உள்ள பாறைகளில் கந்தனுக்கு வெறியாடுகிறார்கள். இது, தமிழ் நாட்டில் சங்க காலத்தில், நடந்துவந்த வேலன் வெறியாடலை நினைவுறுத்துகிறது. குருநாக்கல் காட்டில் உள்ள ரிட்டிகலா, ரணகிரியா முதலிய மலைகளில் கந்தன் வணக்கம் இன்றும் சிங்களவர்களால் நடைபெறுகிறது இலங்கைக் காடுகளில் வாழும் வேடர்கள் வணங்கும் பல தெய்வங்களில் ஸ்கந்தனாகிய கல் யக்கனும் (மலை இயக்கன்) ஒன்று.
கண்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘பிரஹா’ என்னும் உற்சவத்தில் ஸ்கந்தனுக்கு முதலிடம் தரப்பட்டிருந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த முதலிடம் புத்தருடைய பல் ஊர்வலத்துக்குத் தரப்பட்டது. ஆனால், பண்டைக்காலம் போலவே இன்றும் இலங்கையில் பௌத்தர்களால் முருகன் (ஸ்கந்தன்) வணக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
திருமால்
இலங்கையில் திருமால் வணக்கமும் மிகப் பழைய காலத்திலிருந்து நிகழ்ந்து வருகிறது. திருமால், இலங்கைத் தீவில் விஷ்ணு என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார். சிங்கள மொழியில் திருமாலாகிய விஷ்ணுவை மாவிஸ் உன்னானெ என்று கூறுவர். இது மஹாவிஷ்ணு என்பதன் சிதைவாக இருக்கலாம். இலங்கையிலே கதிர்காமத் தெய்வம் என்றும் கலெதெய்யோ என்றும் கூறப்படுகிற ஸ்கந்தனுக்குத் தனியாகக் கோயில்கள் உண்டு. கந்தனை பௌத்தக் கோவிலுக்குள் வைத்துப் பூசிப்பது இல்லை. ஆனால் விஷ்ணுவை பௌத்தக் கோயில்களிலும் வைத்துப் பூசிக்கிறார்கள். கருடவாகனம் உடையவராக, சங்கு சக்கரம் ஏந்தியவராகத் திருமாலைச் சிங்களவர் இன்றும் வழிபடுகிறார்கள்.
இலங்கையில் தம்புல்ல என்னும் ஊர் உண்டு. இது கண்டியிலிருந்து 18-மைல் தூரத்திலுள்ள மாத்தளை என்னும் ஊரிலிருந்து வடக்கே 28-மைல் தூரத்தில் இருக்கிறது. இவ்வூருக்கு அருகிலே பாறைக்கல்லால் அமைந்த மலையொன்று உண்டு. 500 அடி உயரமுள்ள இந்த மலைமேலே இயற்கையாக அமைந்த ஐந்து குகைக் கோவில்கள் இருக்கின்றன. இக்குகைக் கோவில்களில் புத்தர் பெருமானுடைய உருவங்கள் வழிபடப்படுகின்றன.
இக்குகைகளில் முதலாவது குகைபெரியது. இதில் புத்தர் பெருமான் பள்ளிகொண்டிருப்பது போன்ற உருவம் கற்பாறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் நீளம் 42-அடி. இவ்வுருவத்தின் தலைப்பக்கத்தில் விஷ்ணு (திருமால்)லின் உருவம் நின்ற கோலமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இது மரத்தினால் செய்யப்பட்ட உருவம். இந்த விஷ்ணுவின் பெயரினாலே இந்தக் குகை தேவராஜவிகாரை என்று பெயர் பெற்றிருக்கிறது. தேவராஜன் என்பது விஷ்ணுவின் பெயர்.
இதற்கு அடுத்த இரண்டாவது குகையிலும் புத்தர் உருவமும் வேறு சில பௌத்தத் தெய்வங்களின் உருவங்களும் காணப்படுகின்றன. பாறையில் வர்ணத்தினால் எழுதப்பட்ட தெய்வ உருவங்களும் காணப்படுகின்றன வர்ணத் திருவுருவங்களில் விஷ்ணுவின் திருவுருவமும் ஒன்றாக அமைந்திருக்கிறது.
இந்தக் குகைக் கோவில்கள் கி.மு. 104-இல் இலங்கையை யாண்ட வலகம்பாகு (வடகெமுனு) என்னும் அரசன் காலத்தில் ஏற்பட்டவை.
கந்தன் இலங்கைத் தீவின் தெற்குத் திசைக்கும், விஷ்ணு மேற்குத் திசைக்கும் காவல் தெய்வங்கள் என்று கூறப்படுகின்றனர். மேற்குத் திசையின் காவல் தெய்வமாகிய விஷ்ணுவே, பிற்காலத்தில், விபீஷணனை மேற்குத் திசையில் காவல் தெய்வமாக அமைத்தார் என்றும் கூறுகிறார்கள்.
இலங்கை முழுவதுக்கும் காவல் தெய்வமாகப் புத்தர் இந்திரனை ஏற்படுத்தினார் என்றும், அக்கடமையை ஏற்றுக்கெண்ட இந்திரன் பிற்காலத்தில், தன் தம்பியாகிய விஷ்ணுவை இலங்கையின் காவல் தெய்வமாக அமைத்தான் என்றும் மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது.
வருணன்
தமிழ்நாட்டில் நெய்தல் நில மக்கள் வணங்கிய தெய்வம் வருணன். கடல் கடந்து கப்பல் வாணிகம் செய்த பண்டைக் காலத்துத் தமிழ் வியாபாரிகளும் வருணனை வழிபட்டனர். தொல்காப்பியர் காலத்திலும் அவர் காலத்துக்குப் பிற்பட்ட காலத்திலும் வருணன் வணக்கம் தமிழ் நாட்டில் இருந்து வந்தது. வருணன் மேய பெருமணல் உலகம்' என்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுவதிலிருந்து, கடற்கரையோரத்தில் வாழ்ந்த மக்களும் மாலுமிகளும் வருணனை வழிபட்டனர் என்பது அறியப்படுகிறது. சங்க இலக்கியங்களிலே வருணனைப்பற்றி அதிகமாகக் காணப்படவில்லை. வருணனைப் பற்றிச் சிலப்பதிகாரத்தில் இரண்டு குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றிலும் வருணன் என்று நேரே பெயர் கூறப்படாமல் 'கடல் தெய்வம்' என்று கூறப்படுகிறது. அவை:
'கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக்காட்டி
அரியசூள் பொய்த்தார் அறனிலரென்று ஏழையம் யாங்கு
அறிகோம் ஐய' (சிலம்பு - கானல்வரி -5)
'பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று
மாக்கடல் தெய்வத்தின் மலரடி வணங்குதும்' (சிலம்பு – கானல்வரி – 51)
சிலப்பதிகாரத்தின் முதல் இரண்டடிகளுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், நெய்தற்றிணையைக் கூறுமிடத்தில் “கடற்றெய்வங் காட்டிக்காட்டி, என்பதனால் வருணனும்... கூறுகிறார்” என்று எழுதுவது காண்க.
சங்க இலக்கியங்களிலே வருணனைப்பற்றி அதிகமாகக் காணப்படாததன் காரணம் என்னவென்றால், கடல் தெய்வமாகிய பழைய வருணனுக்குப் பதிலாக மற்றொரு கடல் தெய்வம் புதிதாகப் புகுத்தப்பட்டதுதான். புதிதாகப் புகுத்தப்பட்ட கடல் தெய்வத்தின் பெயர் மணிமேகலை என்பது.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே அசோக சக்கரவர்த்தி காலத்திலே பௌத்த சமயம் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பரவிற்று. (மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய ‘பௌத்தமும் தமிழும்' என்னும் நூலில் காண்க.) பௌத்த மதம் பரவியபோது பௌத்த மதச் சிறு தெய்வங்களின் வழிபாடும் பரவிற்று. அவ்வாறு பரவிய பௌத்தச் சிறு தெய்வ வழிபாட்டில் ஒன்று மணிமேகலை வணக்கம். மணிமேகலை வணக்கம் புகுத்தப்பட்ட பிறகு வருணன் வணக்கம் மெல்ல மறைந்து விட்டது.
கடல் தெய்வமாகிய மணிமேகலையைப் பற்றிப் பௌத்தமத நூலில் ஒரு கதை உண்டு. சக்கன் (சக்கரன்) ஆகிய இந்திரன், கடலில் கப்பல் யாத்திரை செய்கிறவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஆபத்துக்குட்பட்டவர் நல்லவராக இருப்பார்களானால், அவரைத் துன்பத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மணிமேகலா தெய்வத்தைக் கடற்காவல் தெய்வமாக ஏற்படுத்தினான் என்பது அக்கதை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்கு ஐந்தாம் நூற்றாண்டுவரைப் பௌத்த மதம் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தபடியால், பௌத்தமதத் தெய்வமாகிய மணிமேகலை வழிபாடும் தமிழ்நாட்டில் செல்வாக்குப்பெற்றது. பெறவே, பழைய கடல் தெய்வமாகிய வருணன் வணக்கம் பையப்பைய மறைந்து விட்டது. மணிமேகலைத் தெய்வ வழிபாடு எவ்வளவு ஆழமாகப் பரவியிருந்தது என்பதைச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் நூல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மணிமேகலை என்னும் தெய்வத்தின் பெயரைத் தனக்குப் பெயராகக் கொண்ட மணிமேகலை என்னும் பெண்ணின் வரலாறு தான் மணிமேகலை காவியம்.
புத்த ஜாதகக் கதைகளிலே, மணிமேகலா தெய்வம் கப்பல் யாத்திரிகருக்கு உதவிசெய்து அவர்களைத் துன்பத்திலிருந்து காத்த செய்திகள் கூறப்படுகின்றன.
பௌத்த மதம் இலங்கையில் பரவுவதற்கு முன்னே, வருணன் வணக்கமும் இலங்கையில் (தமிழ் நாட்டிலிருந்துபோய்) இருந்தது. முருகன், திருமால் வணக்கம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு ஆதிகாலத்தில் சென்று அங்கு வழிபடப்பட்டது போலவே, வருணன் வணக்கமும் தமிழ் நாட்டிலிருந்து சென்று இலங்கையில் வழிபடப் பட்டது.2 தமிழ்நாட்டில் பௌத்மதம் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பரவியது போலவே, தமிழ் நாட்டுக்கு அடுத்துள்ள இலங்கைத் தீவிலும் பௌத்தமதம் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பரவியது. பௌத்த மதத்துடன் மணிமேகலை வழிபாடு இலங்கையில் புகுந்த பிறகு இலங்கையில் வழிபடப்பட்டிருந்த வருணன் வணக்கம் பையப் பைய மறைந்துவிட்டது. ஆனாலும், இலங்கையின் தென்கோடியில் இருந்த துறைமுகப்பட்டினமாகிய தொண்டர பட்டினத்தில் நெடுங்காலமாக வழிபடப்பட்டிருந்த வருணன் வணக்கம் பிற்காலத்திலுங்கூட மிகப் புகழ்பெற்று விளங்கியது. இச்செய்தி பலருக்கு வியப்பாக இருக்கக்கூடும்.
இலங்கையில் பழைமையான துறைமுகப்பட்டினங்களில் தொண்டர பட்டினமும் ஒன்று இது இலங்கையின் தென்கோடியில் இப்போது சிறு கிராமமாக இருக்கிறது. தேவ நுவர (தேவ நகரம்) என்னும் சிங்களப்பெயர் தேவுந்தர என்று திரிந்து வழங்கிற்று. தேவுந்தர என்னும் பெயரை இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர் தொண்டர என்று மாற்றி விட்டார்கள். எனவே, தேவ நுவர என்னும் சொல்லின் ஆங்கிலச் சிதைவு தொண்ட்ர என்பது.
தேவ நுவர இலங்கையின் பழைய பேர் போன துறைமுகப் பட்டினம். இது இலங்கையின் தென்கோடியில் இருந்தது. (இப்போது இலங்கையில் உலகப் புகழ்பெற்று விளங்குகின்ற கொளும்பு துறைமுகப்பட்டினம் மிகச் சமீப காலத்தி ஏற்பட்டது). தேவ நுவரப் பட்டினத்திலே மிகப் பழைய காலத்திலிருந்து வருணனுக்குக் கோவில் இருந்து வந்தது. அந்த வருணன் கோவில் உலகப் புகழ்பெற்றுச் சிறப்புற்றிருந்தது. கடலிலே கப்பல் யாத்திரை செய்தவர்களுக்கு இந்தக் கோவிலின் கோபுரங்களும் கட்டிடங்களும் ஒரு பெரிய நகரம் போலத் தெரிந்தனவாம். இந்த வருணனைச் சிங்கள மக்களும் தமிழரும் வழிபட்டனர். சிங்க அரசர்கள் இக்கோவிலைப் போற்றி மானியம் அளித்துப் பாதுகாத்தார்கள். ஆண்டு தோறும் அந்தக் கோவிலிலே வருணனுக்குத் திருவிழா நடந்தது. அந்தத் திருவிழாவில் வருணனுக்கு உரிய முத்துக்குடை ஊர்வலமாகக் கொண்டு போகப்பட்டது.
இலங்கைத் தீவிலே தேவ நுவரப் பட்டினத்தில் இருந்த வருணன் கோவிலைப்பற்றிய வியப்பான செய்தி என்னவென்றால், அந்தக் கோவிலை அங்கே முதுன் முதலாக அமைத்தவன் கப்பல் வாணிகனாகிய தமிழ் நாட்டுத் தமிழன் என்பதே. இச் செய்தியை இலங்கைச் சரித்திர நூல்கள் கூறுகின்றன. இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் அந்த வருணன் கோவிலில் பூசை முதலிய வழிபாடுகளைச் செய்தவர்களும் தமிழர்களே!
வருணனைச் சிங்களவர் உபுல்வன் என்று கூறினர். உதகபால வருணன் என்னும் சொல் சிதைந்து சிங்கள மொழியில் உபுல்வன் என்று ஆயிற்று என்பர். உதகபாலன் என்றால் நீரை ஆட்சி செய்கிறவன் என்பது பொருள். அதாவது நீர்க் கடவுள். சிங்கள இலக்கண முறைப்படி உதகபால என்பது உதபால என்றாகிப் பின்னர் உபுல என்றாயிற்று என்பர். வருணன் என்பது வணன் என்றாகிப் பின்னர் வணன் என்பது வன் என்றாயிற்று என்பர். எனவே உதகபால வருணன் என்னும் சொல் சிதைந்து சிங்கள மொழியில் உபுல்வன் என்றாயிற்று.
தேவ நுவரவிலிருந்து வருணனைப் பிற்காலத்திலே கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் விஷ்ணு (திருமால்) ஆக மாற்றிவிட்டனர். வருணனை விஷ்ணுவாக மாற்றியவர்கள் தமிழர்களே. கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக் காபர் என்னும் முகமதியன் தில்லியிலிருந்து தென்னாட்டுக்கு வந்து கோவில்களைக் கொள்ளையடித்து நாசப்படுத்தினான் என்னும் செய்தி சரித்திரம் கூறும் உண்மை. அக்காலத்திலே, தமிழ் நாட்டிலே இருந்த சில வைணவப் பிராமணர்கள் தங்கள் குடும்பத்தோடு இலங்கைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அவர்களைச் சிங்கள அரசன் ஆதரித்து தேவ நுவர வருணன் கோயிலில் பரிசாரக வேலை செய்யும்படி அமர்த்தினான். அந்த வைணவப் பிராமணர்கள் நாளடைவில் பையப்பைய வருணனை விஷ்ணுவாக மாற்றிவிட்டார்கள். ஆயினும் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையில் உபுல்வன் கோயில் (வருணன் கோயில்) என்றே பெயர் பெற்றிருந்தது.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் இலங்கையைப் போர்ச்சுகீசுக்காரர் பிடித்து ஆட்சி செய்தனர். போர்ச்சுகீசியர் மத வெறியர். போர்ச்சுகீசியச் சேனைத் தலைவன் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் பேர் பெற்ற உபுல்வன் கோயிலைக் (வருணன் கோயிலை) கொள்ளை யடித்து இடித்துத் தகர்த்தழித்துப் போட்டான். போர்ச்சுகீசியர் இலங்கையில் இருந்த புகழ்பெற்ற கோயில்கள் பலவற்றை அழித்தனர். அவ்வாறு அழிக்கப்பட்ட முக்கியமான கோயில்களில் உபுல்வன் (வருணன்) கோயிலும் ஒன்ற
இலங்கைப் பழம்பொருள் ஆராய்ச்சி இலாகா (ஆர்க்கியாலஜி இலாகா) வைச் சேர்ந்த டாக்டர் பரண விதான என்பவர், மறைந்துபோன உபுல்வன் (வருணன்) கோயிலைப் பற்றிச் சிறந்த ஆராய்ச்சி நூல் எழுதியிருக்கிறார்.3 அந்நூலில் அவர், வைதிகப் பிராமணர் வட இந்தியாவிலிருந்து வருணன் வணக்கத்தை இலங்கையில் புகுத்தியிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கண நூல்களைப் படித்திருப்பாரானால் பண்டைத் தமிழர் தமிழ் நாட்டில் வருணன் வணக்கம் நிகழ்த்தியிருந்தார்கள் என்பதை அறிந்திருப்பாரானால், இந்தத் தவறான முடிவுக்கு வந்திருக்கமாட்டார். தமிழ் நாட்டில் வருணன் வணக்கம் பண்டைக் காலத்தில் இருந்தது என்பதை அவர் அறியாதபடியால், தமிழ் நாட்டிலிருந்து வருணன் வணக்கம் இலங்கையில் புகுந்தது என்பதை அறியாமல், வட நாட்டிலிருந்து வைதிக மதத்தவரால் வருணன் வணக்கம் இலங்கையில் புகுத்தப்பட்டது என்று எழுதியுள்ளார். பக்கத்து நாட்டுச் சரித்திரம் அறியாததால் ஏற்பட்ட தவறு இது.
தமிழ் நாட்டிலிருந்து முருகன் (கந்தன்), திருமால் (விஷ்ணு), வருணன் (உபுல்வன்) என்னும் தெய்வ வணக்கம் தமிழ்நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவிலே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே புகுத்தப்பட்டு அங்கு இத்தெய்வ வழிபாடுகள் நடைபெற்று வந்தன என்பதை இதனால் அறிகிறோம். இலங்கையில் பௌத்த மதம் பரவின கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுத் தெய்வங்கள் அங்குச் சிங்களவர்களிடம் முதன்மை பெறவில்லை. ஆனால், தமிழரின் தெய்வங்கள் இலங்கையிலும் சிங்களவர்களால் சிறு தெய்வங்களாகப் போற்றப்பட்டு வருகின்றன. இந்தத் தெய்வ வணக்கம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைக்குச் சென்றிருக்கவேண்டும்.
அடிக்குறிப்புகள்
1. (P. 156, The Veddas by C.G. Seligmann and Brenda z. Seligmann 1911).
2. வருணனை ஆதி காலத்தில் ஆரியரும் வழிபட்டனர். வடமொழி வேதங்களில் வருணன் வணக்கம் கூறப்படுகிறது. வட இந்தியாவில் வாழ்ந்திருந்த திராவிட சமூகத்தினர் வருணனை வழிபட்டனர். என்றும் அவர்களிடமிருந்து ஆரியர் வருணன் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு வழிபட்டனர் என்றும் ஆராய்ச்சிக்காரர் கூறுகின்றனர். திராவிடராகிய தமிழரும் வருணனை வணங்கினர். இது பற்றிய ஆராய்ச்சி இங்கு வேண்டுவது இல்லை.
3. The Shrine of Upulvan at Devundara, by Dr. S. Paranavitana 1953, Memolrs of the Archaeological Survey of Ceylon. Vol. VI.
- ↑ சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள் (1970) நூலில் உள்ள கட்டுரை.