உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/038-052

விக்கிமூலம் இலிருந்து


3. சங்ககாலத் தமிழரின் கடல்
செலவும் தரைச் செலவும்[1]

சங்க காலத்திலே தமிழர் அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தனர். அவர்கள் மரக்கலம் ஏறிக் கடல் கடந்து அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தார்கள். அவர்கள் கடல் கடந்து அக்கரை நாடுகளுக்குச் செல்லும்போது தம்முடன் தம்முடைய பெண்டிரை அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை. இதனைத் தொல்காப்பியரும் கூறுகின்றார்.

"முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லை" (தொல். அகத்திணை - 37)

இதற்கு இளம்பூரண அடிகள் கூறும் உரை இது:

"இதுவும் பொருள்வயிற் பிரிவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்: (ஈண்டு அதிகரிக்கப்பட்ட பிரிவு, காலிற் பிரிவும் கலத்தில் பிரிவும் என இரு வகைப்படும் அவற்றுள்) கலத்திற் பிரிவு தலைமகளுடன் இல்லை. எனவே, காலிற்பிரிவு தலைமகளை உடன்கொண்டு பிரியவும் பெறும் என்றாவாறாம்".

இதனால், கடல் கடந்த நாடுகளுக்குச் செல்லும் போது பெண் மகளிரைத் தம்முடன் அழைத்துச் செல்வது தமிழரின் வழக்கம் அன்று என்பதும், காலில் செல்லும் போது (தரை வழியாக அயல்நாடுகளுக்குப் போகும் போது) பெண்டிரை அழைத்துச் செல்லுவதும் உண்டு என்பதும் அறிகிறோம்.

உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்துக்கு நேர்பொருள் கொள்ளாமல், சுற்றி வளைத்துப் பொருத்தமல்லா உரை கூறுகின்றார். முந்நீர் என்பதற்குக் கடல் என்று நேர் பொருள் கொள்ளாமல் ‘மூன்று தன்மை’ என்று பொருள் கூறுகிறார். இவர் கூறும் உரை இது:

“இதன் பொருள்: ஓதலும் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற் செல்லும் செலவு தலைவியோடு கூடச் சேறலின்று... இனி இச்சூத்திரத்திற்குப் 'பொருள் வயிற் பிரிவின்கட் கலத்திற் பிரிவு தலைவியுடன் சேறலில்லை; எனவே, காலிற்பிரிவு தலைவியுடன் சேறல் உண்டு' என்னும் பொருள் கூறுவார்க்குச் சான்றோர் செய்த புலனெறி வழக்கம் இன்மை உணர்க”.

இதில், நச்சினார்க்கினியர் இளம்பூரணர் கருத்தை மறுக்கிறார். தரை வழியாக அயல்நாடுகளுக்குச் செல்லும் போது பெண்டிரையும் உடன்கொண்டு செல்லும் வழக்கம் உண்டு என்று இளம்பூரணர் கூறியதை இவர் மறுக்கிறார். அதாவது, கடல் வழியாக அயல் நாடுகளுக்குச் செல்லும் தமிழன் தன்னுடன் மனைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை. அன்றியும் தரை வழியாக அயல் நாடுகளுக்குச் செல்லும் தமிழனும் தன்னுடன் மனைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை என்று கூறுகிறார்.

இவ்வுரையாசிரியர்கள் இதில் மாறுபடக் கூறுகின்றார்கள். எனவே இளம்பூரணர் உரை சரியா, நச்சினார்க்கினியர் உரை சரியா என்பதை ஆராய்வோம். இதற்கு, எபிகிறாபி என்னும் சாசனம் எழுத்துச் சான்றும், ஆர்க்கியாலஜி என்னும் பழம்பொருள் ஆராய்ச்சிச் சான்றும் உதவி புரிகின்றன.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே (அதாவது கடைச் சங்க காலத்திலேயே) தமிழ் நாட்டிலிருந்து தமிழ் வாணிகர் (சாத்துக் கூட்டத்தினர்) கலிங்க தேசத்துக்குச் சென்று வாணிகம் புரிந்ததையும், அவர்கள் நாளடைவில் அங்குச் செல்வாக்குப் பெற்றுக் கலிங்க நாட்டின் ஆட்சிக்கு ஆபத்தாக விளங்கினார்கள் என்பதையும், அந்த ஆபத்தை அறிந்த அக்காலத்தில் கலிங்க நாட்டை அரசாண்ட காரவேலன் என்னும் அரசன் அத்தமிழ் வாணிகச் சாத்தை அழித்து ஒடுக்கினான் என்பதையும் கலிங்க நாட்டிலுள்ள ஹத்திகும்பா குகைச் சாசனம் கூறுகின்றது. இந்த ஹத்திகும்பா குகைச் சாசனத்தை எழுதியவன் காரவேலன் என்னும் அரசனே. இவன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலிங்க தேசத்தையரசாண்டான். இவன் தன்னுடைய பதினோராவது ஆட்சி ஆண்டில் (கி.மு. 165 இல்) தமிழ்நாட்டு வாணிகச் சாத்தை அழித்தான். அந்தத் தமிழ் வாணிகச் சாத்தினர், அவர்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு 113 ஆண்டுகளாகக் கலிங்க நாட்டில் தங்கி வாணிகம் புரிந்து வந்தனர். எனவே, (கி.மு. 165 + 113) - 278) கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே அத்தமிழ் வாணிகச் சாத்துக்குழு, கலிங்க நாட்டிற் சென்று வாணிகம் செய்யத் தொடங்கிற்று என்பது தெரிகின்றது.

நூற்றுப்பதின் மூன்று ஆண்டுகளாகக் கலிங்க நாட்டிலேயே தங்கி வாணிகம் புரிந்த தமிழர்கள், தங்களுடன் மனைவிமக்களையும் அழைத்துக் கொண்டு போய் இருப்பார்களல்லவா? மனைவி மக்களுடன் வாழாமலா அவர்கள் பரம்பரை பரம்பரையாக அத்தனை ஆண்டுக்காலம் அங்கே தங்யிருப்பார்கள்? எனவே, தரைவழியாக அயல்நாடுகளுக்குச் சென்றபோது, கடைச் சங்ககாலத் தமிழன் தன்னுடன் மனைவியையும் அழைத்துச் சென்றான் என்பது இதனால் பெறப்படுகின்றது.

இதற்கு இன்னொரு சான்றும் கிடைத்திருக்கின்றது. ஆந்திர தேசத்திலே பண்டைக் காலத்தில் புகழ்பெற்றிருந்த அமராவதி நகரத்திலே தமிழ் வணிகர்கள் இருந்தார்கள். அவர்கள் குடும்பத்தோடு அங்குத் தங்கி இருந்தார்கள். அவர்களில் இருவர், பேர்பெற்ற அமராவதி பௌத்த ஸ்தூபிக்குத் திருப்பணிக் கைங்கரியம் செய்திருக்கிறார்கள். இச்செய்தி அங்குக் கிடைத்த சாசன எழுத்துக் கல் எழுத்துக்களினால் தெரிகின்றது.

(பேர்பெற்ற அமராவதி பௌத்தத்தூபி ஏறத்தாழ கி.மு. 200 இல் தொடங்கப்பெற்று கி.பி. 150 அல்லது 200இல் முடிக்கப்பட்டது என்பர். இந்தக் காலம் கடைச்சங்க காலமாக அமைவது ஈண்டுக் கருதத்தக்கது. பிற்காலத்தில், இந்த அமராவதி ஸ்தூபி சிதைந்து அழிந்த பிறகு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுச் சிதையுண்ட கற்களும் சிற்பங்களும் சேகரிக்கப்பட்டுச் சென்னை மாநகரப் பொருட்காட்சி சாலையில் சில கற்களும், இங்கிலாந்தில் லண்டன் மாநகரத்துப் பொருட்காட்சி சாலையில் சில கற்களும் கொண்டு போய் வைக்கப்பட்டுள்ளன.)

அமராவதி பௌத்த ஸ்தூபிக் கட்டடத்திலிருந்து கிடைத்த தூண்கல் ஒன்றில், தமிழன் கண்ணனும் அவன் தம்பி இளங்கண்ணனும் அவன் தங்கை நாகை (நாகம்மாள்) என்பவளும் சேர்ந்து அந்தத் தூண் திருப்பணியைச் செய்ததாக எழுதப்பட்டுள்ளது. இந்தச் சாசனக் கல்லின் அளவு 2 அடி 8 அங்குல அகலமும், 3 அடி 6 அங்குல உயரமும் உள்ளது. இதில் எழுதப்பட்டுள்ள எழுத்து பழைய பிராமி எழுத்தாகவும் பாஷை பாலி பாஷையாகவும் உள்ளன. இந்தச் சாசனத்தின் வாசகம் இது.

“தமிளா கணஸ பாதுணம் சுலக்ண்ஸ் நாகாய ச(தான்)ன மஹாசே
தியபாத மூலே உதம்பதோ.”1

‘தமிழக் கண்ணனும் அவன் தம்பி இளங்கண்ணனும் தங்கை நாகையும் இந்த மகா சைத்தியத்திற்கு அமைத்த உதம்பதக்கல்’ என்பது இச் சாசனத்தின் பொருள். இத் தமிழன், சகோதர சகோதரிகளுடனும் மனைவி மக்களுடனும் தரை வழியாக அயல்நாடு சென்று வாழ்ந்து வந்த செய்தி பெறப்படுவது காண்க.

உதம்பதம் என்பது தூண்கல் என்று பொருள்படும். இதில் கூறப்படுகிற கண்ணனும் அவன் தம்பி இளங்கண்ணனும் தமிழ் நாட்டிலிருந்து சென்று அமராவதி நகரத்தில் தங்கியவர்கள் என்பது தமிழ்க் கண்ணன் என்பதிலிருந்து தெரிகின்றது. கடைச் சங்ககாலத்தில் அண்ணன் தம்பியர் ஒரே பெயருடன் வழங்கப்பட்டது போலவே (சான்றாக, குமணன்-இளங்குமணன்,பெருஞ்சேரலிரும் பொறை- இளஞ்சேரலிைரும்பொறை, தத்தன் - இளந்தத்தன், விச்சிக்கோ இளவிச்சிக்கோ, வெளிமான் இளவெளிமான் முதலியன) இவர்களும் கண்ணன் -இளங்கண்ணன் என்று கூறப்பட்டிருப்பது நோக்குக. (சுலண என்பது சுல்லகண்ணன் அதாவது இளங்கண்ணன் என்பது பொருள்.)

பாலி மொழியில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட இந்தச்சாசனம் அமராவதி பௌத்தச் சயித்தியம்(பௌத்த ஸ்தூபம்) கட்டப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. அமராவதி பௌத்தச் சயித்தியம் கட்டப்பட்ட காலம் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரையில் உள்ளகாலம் என்று கூறுகிறார்கள். அதாவது நேர் கடைச் சங்ககாலம் எனவே கடைச் சங்ககாலத்தில் எழுதப்பட்ட சாசனம் இது. பௌத்த மதத்தாரின் “தெய்வ பாஷை”யாக அக்காலத்தில் பாலி பாஷை இருந்தபடியால் இச்சாசனம் பாலிமொழியில்எழுதப்பட்டிருக்கிறது.

இந்தச் சாசனம்,தமிழ் நாட்டிலிருந்து தரை வழியாக அயல் நாட்டுக்குக் குடும்பத்தோடு சென்று வாணிகம் செய்தனர் தமிழர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றது. சங்க காலத்தில் தமிழர் தரை வழியாகப் பெண்டிரையும் அழைத்துக் கொண்டு அயல்நாடுகளுக்குச் சென்றனர் என்னும் செய்தியை, கலிங்கநாட்டுக் காரவேல அரசரின் ஹத்திகும்பா சாசனமும் அமராவதி பௌத்த சயித்தியக் கல்வெட்டெழுத்துச் சாசனமும் சற்றும் ஐயத்துக்கிடமில்லாமல் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, 'முந்நீர் வழக்கம் மகடூவோ டில்லை' என்னும் தொல்காப்பியர் சூத்திரத்துக்கு உரை எழுதிய இளம்பூரண அடிகள், “காலில் (தரை வழியாக அயல்நாடுகளுக்குச செல்வது) பிரிவு தலைமகளை உடன் கொண்டு பிரியவும் பெறும்' என்று கூறியுள்ளது சரியானதென்பதும், நச்சினார்க்கினியர் கூறும் பொருள் சரியானதென்று என்பதும் இந்தப் பழம்பொருள் சாசனச் சான்றுகளினால் அறியப்படுகின்றன.

அடிக்குறிப்பு

1. No.80,P.20 Notes on the Amaravati Stupa by J. Burgess, 1882. Archaeological Survey of South India.

  1. சங்க கால தமிழக வரலாற்றில் சிலசெய்திகள் (1970) நூலில் உள்ள கட்டுரை.