மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/039-052
4. இலங்கையில் தமிழர்[1]
சங்ககாலத்து இலங்கை
நில அமைப்பு
தமிழகத்துக்குத் தென்கிழக்கே, பாண்டி நாட்டுக்கு அருகிலே, இலங்கைத் தீவு இருக்கிறது. தமிழகத்துக்கு மிகச் சமீபத்திலே இருப்பதனாலே இலங்கைக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு ஆதிகாலம் முதல் இருந்துவருகிறது. சமயத் தொடர்பும் வாணிகத் தொடர்பும் அக்காலத்தில் இருந்தன.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது தனித் தீவாகப் பிரிந்திருக்கிற இலங்கை, தமிழகத்தோடு இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அந்தக் காலத்தில் கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் கிழக்கிலும் பாண்டி நாட்டோடு இணைந்திருந்த நிலம் இலங்கையோடு இணைந்து சேர்ந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. பின்னர்க் காலந்தோறும் ஏற்பட்ட கடல்கோள்களினாலே அந்த நிலப்பகுதி சிறிதுசிறிதாக அரிக்கப்பட்டுத் தனித் தீவாகப்பிரிந்து இலங்கை என்று பெயர் பெற்றிருக்கிறது. அதன் பிறகு, குமரிமுனையோடு இணைந்து இருந்த நிலப்பகுதி, அவ்வப்போது நிகழ்ந்த சில கடல்கோள்களினாலே சிறிதுசிறிதாகக் கடலில்முழுகி இப்போதுள்ள நிலையையடைந்தது. தமிழ்நாட்டின் கரையோரங்களைச் சுற்றிலும் இலங்கைத்தீவின் கரையோரங்களைச் சுற்றிலும் இப்போதுள்ள கடல் ஆழமில்லாமல் இருக்கிறது. இந்தக் கடல் ஆழமில்லாமலிருப்பது, முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி நிலமாக இருந்து இலங்கையும் தமிழகமும் ஒன்றாக இணைந்திருந்தன என்பதற்குச் சான்றாக இருக்கிறது.
சங்ககாலத்தில் இலங்கையில் இருந்த இடங்களை இனிப்பார்க்கலாம்:
அநுராதபுரம்
இதை அநுரை என்றும் கூறுவர். சிறு கிராமமாக இருந்த இந்த ஊரைச் பாண்டுகாபய அரசன் இலங்கையின் தலைநகரமாக்கினான். பின்னர் இது சிறிதுசிறிதாக வளர்ந்து பெரிய நகரமாயிற்று. சிங்கள ராச்சியத்தின் தலைநகரமாக இருந்த இந்த நகரத்தில் சிங்கள அரசரும் தமிழ் அரசரும் தங்கி அரசாண்டார்கள். தேவனாம்பிய திஸ்ஸன் காலத்தில், அசோகச் சக்கரவர்த்தி புத்தகயாவிலிருந்து அனுப்பிய போதி (அரச) மரத்தின் கிளை இந்நகரத்தில் நடப்பட்டது. இப்போதுள்ள அரசமரம் அந்த அரசமரக் கிளைகள் என்று கூறப்படுகிறது. புகழ்பெற்றுப் பெருஞ்சிறப்பாக இருந்த அநுராதபுரம் பிற்காலத்தில் சிறப்புக் குன்றிவிட்டது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் புலத்தி நகரம் (பொலனறுவா) இலங்கையின் தலைநகரமானபோது அநுராதபுரம் பெருமை குன்றிக் காலப்போக்கில் சாதாரண நகரமாக மாறிவிட்டது. இடைக்காலத்தில் இந்த நகரம் பாழடைந்து காடுபிடித்து நெடுங்காலம் மறைந்துகிடந்தது. சென்ற நூற்றாண்டில் இந்த நகரம் தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. மறைந்துகிடந்த பல இடங்களும், விகாரைகளும், தாகோபாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இந்நகரத்தில் தங்கியிருந்து வாணிகஞ்செய்த தமிழ்வணிகரின் மறைந்துபோன மாளிகையும் ஒன்று. அங்கு எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்தினால் இது தெரிகிறது.
உரோகண நாடு
உரோகண நாடு பழைய இலங்கையின் ஒரு பிரிவு. இலங்கையின் தென்கிழக்கில் இந்த நாடு அமைந்திருந்தது. இதனுடைய கிழக்கிலும் தெற்கிலும் கடல் எல்லையாக இருந்தது. இதனுடைய தலைநகரம் மாகாமம் (மாகாமம் பிற்காலத்தில் திஸ்ஸமாகாமம் என்று கூறப்பட்டது). மாணிக்க கங்கை என்னும் ஆறு உரோகண நாட்டில் வடக்கிலிருந்து தெற்காகப் பாய்ந்து கடலில்கலக்கிறது. சம்பந்திட்டை என்னும் துறைமுகப்பட்டினம் இதன்தெற்கில் இருந்த பேர்பெற்ற துறைமுகப்பட்டினம். இப்போது இஃது ஹம்பந்தோட்டம் என்னும் சிறு துறைமுகமாக இருக்கிறது.
முருகக் கடவுளின் (ஸ்கந்த முருகனின்) பெயர்பெற்ற கதிர்காமம் உரோகண நாட்டில் இருந்தது. இப்போதும் கதிர்காமம் பேர்பெற்றுள்ள திருப்பதியாக இருக்கிறது. கதிர்காமத்தைச் சிங்களவர் 'கதரகாமம்' என்றும், 'கஜரகாமம்' என்றும், ‘காசரகாமம்’ என்றும் கூறுவர். கதிர்காம முருகனைச் சிங்களவர் ‘கதரகாம தெவியோ' (கதிர்காமத் தெய்வம்) என்று கூறுவர்.இலங்கையின் நான்கு பெரிய காவல் தெய்வங்களில் கதிர்காமக் கந்தனும் ஒரு தெய்வமாகக் கருதப்பட்டான். பழங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த இலங்கைக்கு முருகன் வழிபாடு சென்றது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் பாண்டிநாட்டுத் தமிழர் உரோகண நாட்டுக்கு வந்து குடியேறியபோது அவர்கள் தங்களுடைய முருகவழிபாட்டை உரோகண நாட்டில் நிறுவினார்கள். முருகன் குறிஞ்சிநிலக் கடவுள் ஆகையால், தமிழரின் வழக்கப்படி அவர்கள் கதிர்காம மலைமேல் முருகனுக்குக் கோயில்கட்டி வழிபட்டார்கள். பிற்காலத்தில் பௌத்தமதம் இலங்கையில் பரவினபோது பௌத்தபிக்குகள் மலைமேல் இருந்த முருகனைக் கீழே இறக்கிவிட்டு மலைமேல் தாகோபா (தாதுகர்ப்பத்தைக்) கட்டிவிட்டனர்.
உரோகண நாட்டில் தமிழர் வழிபட்ட இன்னொருகோயில் அட்டாலயம் என்பது. அது சிவன் கோயிலா, கொற்றவை கோயிலா என்பது தெரியவில்லை. தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பியான மகாநாகன். தன்னுடைய உயிருக்கு அஞ்சி உரோகண நாட்டு மச்சமகாராசனிடம் அடைக்கலம்புகச் சென்றபோது இந்த அட்டாலயத்தில் அவனுடைய மனைவி குழந்தையைப் பெற்றாள். அந்தக் குழந்தைக்கு அவன் அட்டாலயதிஸ்ஸன் என்று பெயர் இட்டான்.1 உரோகன நாட்டில் இருந்த இன்னொரு கோயில் சிவன்கோயில் என்று தோன்றுகிறது. அந்தக் கோயில் ஏரகாவில்ல என்னும் ஊரில் இருந்தது. நெடுங்காலமாக இருந்த அந்தக் கோயிலைப் பிற்காலத்தில் மகாசேனன் என்னும் சிங்கள அரசன் (கி.பி. 325-352) பௌத்தமத வெறிகொண்டு இடித்துப்போட்டு அங்குப் பௌத்தவிகாரை ஒன்றைக் கட்டினான்.2
தமிழர் குடியேறி வாழ்ந்த உரோகண நாட்டைப்பாண்டியன் மரபைச் சேர்ந்த மச்சமகாராசர் (பாண்டியரின் அடையாளம்மீன்)கி.மு. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு.2 ஆம் நூற்றாண்டு வரையில் அரசாண்டனர். பல நூற்றாண்டுகளாக உரோகண நாட்டில்நிலையாகத்தங்கியிருந்த அவர்கள் பாண்டியரோடு தொடர்புஇல்லாமலே தனித்து இருந்தனர். அவர்கள் பிற்காலத்தில் பௌத்த மதத்தைத் தழுவியிருந்தனர். அவர்களிடம் தேவனாம்பிய திஸ்ஸனின் தம்பியான மகாநாகன் அடைக்கலம் புகுந்து உரோகண நாட்டில் தங்கியிருந்தான். பிறகு, அவனும் அவனுடைய மகனும் மச்ச மகாராசரை அழித்து அவர்களுடைய உரோகணநாட்டை கைப்பற்றிக் கொண்டார்கள். இவ்வாறு உரோகண நாட்டை அரசாண்ட மச்சமகாராசர் அழிக்கப்பட்ட போதிலும், அவர்கள் அக்காலத்தில் கற்பாறைகளில் எழுதிவைத்துள்ள பிராமி எழுத்துச் சாசனங்களும் அச்சாசனங்களோடு பொறிக்கப்பட்டுள்ள மீன் அடையாளங்களும் அவர்களைப்பற்றிக் கூறுகின்றன.
சமந்தம்
இது இலங்கையின் நடுவில் உள்ள மலையநாட்டில் மிக உயரமான மலை. இது 'சமனொளி மலை' என்றும் 'சமந்த கூடம்' என்றும் கூறப்பட்டது. இந்த மலையின் உச்சியில் புத்தருடைய அடிச்சுவடு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே, பௌத்தர்கள் இந்த மலையைப் புனிதமாகக்கருதி அங்கு யாத்திரை போகிறார்கள். மணிமேகலைக் காவியமும் இந்த மலையைக் கூறுகிறது. ‘இரத்தின தீவத்து ஓங்குயர் சமந்தத்து உச்சி மீமிசை’ புத்தருடைய பாதச்சுவடு இருப்பதாகக் கூறுகிறது.3 ‘இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பு’ எனவும் கூறுகிறது.4
பிற்காலத்தில் இங்குவந்த முகமதியர்களும், கிறித்தவர்களும் இந்த மலையை ‘ஆதம் மலை’ என்று கூறினார்கள்.
மணிபல்லவம் ( சம்பு கொலப்பட்டினம்)
தமிழில் மணிபல்லவம் என்றும், சிங்கல மொழியில் சம்புகொலப் பட்டினம் என்றும் பெயர்பெற்ற இந்தத் துறைமுகம் மிகப் பழைமையானது. இது இலங்கையின் வடகோடியில் நாகநாட்டின் (இப்போதைய யாழ்ப்பாணத்தின்) வடக்கே இருந்தது. சம்பில் துறை என்றும் இது கூறப்பட்டது. இங்குப் பெரியபட்டினம் (ஊர்) இல்லை. இங்கு ஏற்றுமதி, இறக்குமதிகள் நடைபெறவில்லை. ஆனால், தமிழருக்கு முக்கியத் துறைமுகமாக இருந்தது. சோழ நாடு, பாண்டிய நாடுகளிலிருந்து தூரக்கிழக்கு நாடாகிய சாவக நாட்டுக்குப் (கிழக்கிந்தியத் தீவுகளுக்கு) போன வணிகக் கப்பல்கள் மணிபல்லவத் துறையில் தங்கி அங்கிருந்து கடல் பிரயாணத்துக்கு வேண்டிய குடிநீரை எடுத்துக்கொண்டு போயின. மணிமேகலைக் காவியத்தில் இந்தத் துறைமுகம் சிறப்பாகக் கூறப்படுகிறது.
இலங்கையின் பழைய தலைநகரமாயிருந்த அநுராதபுரத்துக்கு நெடுஞ்சாலையொன்று மணிபல்லவத் துறையிலிருந்து சென்றது. இலங்கையை அரசாண்ட தேவனாம்பிய திஸ்ஸன் (கி.மு. 247-207), அக்காலத்தில் இந்திய தேசத்தை அரசாண்ட அசோகச் சக்கரவர்த்தியிடம் தூதுக்குழுவை அனுப்பியபோது, அந்தத் தூதுக்குழு சம்புகொலத் (மணிபல்லவத்) துறையிலிருந்து கப்பலேறிச் சென்றது.5 அந்தத் தூதுக்குழு மீண்டும் திரும்பிவந்தபோது இந்தத் துறைமுகத்தில் வந்து இறங்கி அநுராதபுரத்துக்குச் சென்றது.6
அசோகச் சக்கரவர்த்தி, சங்கமித்திரையின் தலைமையில் மகாபோதிக் கிளையை இலங்கைக்கு அனுப்பியபோது அந்தக் கப்பல் இந்தத் துறைமுகத்தில் வந்து இறங்கிற்று.7 போதிமரக் கிளையுடன் அனுப்பப்பட்ட எட்டுப் போதிமரக் கன்றுகளில் ஒரு கன்றைத் தேவனாம்பிய திஸ்ஸன் இங்கு நட்டான்.8 பிறகு இந்தபோதி மரத்தின் அடியில் புத்தருக்குப் பாதபீடிகை அமைக்கப்பட்டது. இந்தப் பீடிகைக்கு மணிபல்லங்கம் (பல்லங்கம் பலகை என்று பெயர். மணிபல்லங்கம் என்னும் பெயர் தமிழில் மணிபல்லவம் என்று திரிந்து வழங்கியது. இந்தப் பீடிகையை மணிமேகலைக் காப்பியம் ‘மணிபீடிகை’ என்றும் ‘தரும பீடிகை’ என்றும் கூறுகிறது.
காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்திலிருந்து தெற்கே முப்பதுயோசனை தூரத்தில் மணிபல்லவத் துறை இருந்தது.9 கோவலன் மகள் மணிமேகலை பௌத்த சமயத்தை சேர்ந்தபிறகு மணிபல்லவஞ் சென்று அங்கிருந்த புத்த பாதபீடிகையை வணங்கித் திரும்பி வந்தாள்.10
யாழ்ப்பாண நாட்டை (நாக நாட்டை) அக்காலத்தில் அரசாண்ட வளைவணன் என்ற நாக அரசனுடைய மகளான பீலிவளை, மணிபல்லவத் துறையிலிருந்து கப்பல் ஏறிக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்த நெய்தலங்கானலில் சில நாள் தங்கியிருந்தாள்.11 மணிமேகலை சாவகநாடு சென்று அந்நாட்டுஅரசன் புண்ணியராசனோடு மணிபல்வத்துக்கு வந்து அங்கிருந்த பாதபீடிகையை வணங்கினாள்.12 மணிபல்லவத் துறைமுகம், சங்க காலத்திலும் அதற்குப் பிறகும் கப்பல்கள் தங்குவதற்கு வாய்ப்பான துறைமுகமாக இருந்தது. ஆனால், அது வாணிகப் பண்டங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் துறைமுகமாக அமைந்திருக்கவில்லை.
மாதிட்டை
இலங்கையின் மேற்குக் கரையில் மன்னார்குடாக்கடலில், பாண்டி நாட்டுக்கு எதிர்க்கரையில் இருந்த பேர்பெற்ற பழைய துறைமுகம் இது. மகாதிட்டை என்பது மாதிட்டை என்று மருவி வழங்கிற்று. பிற்காலத்தில் இந்தப் பட்டினம் மாதோட்டம் என்று கூறப்பட்டது. இது மாந்தை என்றும் வழங்கப்பட்டது. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட முதல் சிங்கள அரசனான விசயன் பாண்டியனுடைய மகளை மணஞ்செய்துகொண்டான். அவனுடைய 700 தோழர்களும் பாண்டிநாட்டு மகளிரை மணஞ்செய்து கொண்டார்கள். பாண்டியன் மகளும், பாண்டிநாட்டு மணமகளிரும் பரிவாரங்களோடு இலங்கைக்கு வந்தபோது மாதிட்டைத் துறைமுகத்தில் வந்து இறங்கினார்கள்.13
கி.மு. முதல் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட ஏலார அரசன்மேல் துட்டகமுனு போர் செய்தபோது, ஏலாரனுக்கு உதவி செய்யப் பல்லுகன் என்பவன் சோழ நாட்டிலிருந்து சேனையை அழைத்துக்கொண்டு மாதிட்டைத் துறைமுகத்தில் வந்து இறங்கினான்.14 வட்டகாமணி அரசனுடைய ஆட்சிக்காலத்தில் பாண்டி நாட்டிலிருந்து ஏழு வீரர்கள் கி.மு. 29 இல் தங்கள் சேனைகளோடு மாதிட்டைத் துறைமுகத்தில் வந்து இறங்கினார்கள்.15 கி.பி. முதல் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட இளநாகனை. இலம்பகன்னர் அரசைவிட்டு ஓட்டியபோது, அவன் மகாதிட்டைத் துறைமுகத்தில் கப்பல்ஏறித் தமிழ்நாட்டுக்கு வந்து புகல் அடைந்தான்.16
தமிழ்நாட்டிலிருந்து வாணிகத்துக்காகவும் பிற அலுவல் காரணமாகவும் இலங்கைக்குச் சென்றவர்கள் மாதிட்டைத் துறைமுகத்தில் இறங்கிச்சென்றார்கள். அவ்வாறே இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களும் இந்தத் துறைமுகத்தில் வந்து கப்பல் ஏறினார்கள். (அந்த காலத்தில் இப்போது உள்ள கொழும்புத் துறைமுகம் இல்லை. கொழும்புத் துறைமுகம் மிகப் பிற்காலத்தில் ஐரோப்பியர் வந்து வாணிகஞ் செய்யத் தொடங்கியபோது புதிதாக ஏற்பட்டது).
மாதிட்டை என்னும் பழைய பெயர் காலப்போக்கில் மாதோட்டம் என்றாகி, பிறகு அது மாந்தோட்டம் என்று மாறிக் கடைசியில் மாந்தை என்றும் வழங்கப்பட்டது. சங்ககாலத்தில் சேரநாட்டுத் துறைமுகமாயிருந்த மாந்தைப் பட்டினத்தை இந்த மாந்தை என்று கருதுவது தவறு. சேரநாட்டு மாந்தைத் துறைமுகத்தைக் ‘குட்டுவன் மாந்தை’ என்று சங்கநூல்கள் கூறுகின்றன. சங்கநூல்களில் கூறப்படுவது சேரநாட்டு மாந்தைத் துறைமுகத்தையே; திரு. நவரத்தினம் அவர்கள் மாதோட்டத்தை, (மகாதிட்டையை) மாந்தை என்று சங்கநூல்கள் கூறுவதாகக் கருதிக்கொண்டு தவறாக எழுதியுள்ளார்.
சங்ககாலத்திலும் அதற்கு அடுத்த காலத்திலும் மாதிட்டைக்கு மாந்தை என்று பெயர் இருக்கவில்லை. இப்பெயர் மிகமிகப் பிற்காலத்தில்தான் அங்கு வழங்கப்பட்டது. எனவே, சேரநாட்டில் இருந்த மாந்தைப் பட்டினத்தை இலங்கையில் சங்ககாலத்தில் இருந்த மாதிட்டைத் துறைமுகத்துடன் இணைப்பது தவறாகும்.
மாவலி கங்கை
மாவலி கங்கை இலங்கையில் உள்ள பெரிய ஆறாகும். இலங்கையின் மத்தியில் உள்ள மலையநாட்டில் (கண்டிமலைப் பிரதேசங்களில்) இது உற்பத்தியாகிக் கிழக்காகப் பாய்ந்து பிறகு வடகிழக்காகஓடிக் கடைசியில் வங்காளக் குடாக்கடலில் உள்ள திருக்கோணமலைக்கு அருகில் கடலில்சேர்கிறது. மாவில கங்கையின் சரியான பெயர் மகாவாலுக கங்கை என்பது. (மகா = பெரிய, வாலுகம் = மாணல், கங்கை = ஆறு. எனவே, ‘பெருமணல் ஆறு’ என்பது இதற்குப் பொருள்.) மகாவாலுக கங்கை என்னும் பெயர் சுருங்கி மாவலி கங்கை என்று வழங்கப்படுகிறது. மாவலி கங்கை இலங்கையை வடக்குப்பகுதி என்றும், தெற்குப்பகுதி என்றும் இருகூறாகப் பிரிக்கிறது. சிங்கள இராச்சியத்தின் (இராசாட்டத்தின்) தெற்கு எல்லையாக இந்த ஆறு இருந்தது. இந்த ஆற்றின் தெற்கே மலைய நாடும், உரோகண நாடும் இருந்தன. இந்த நாடுகள் சிங்கள ஆட்சிக்கு அடங்காமல் இருந்தன.
இலங்கையின் பழங்குடி மக்கள்
இலங்கையில் ஆதிகால முதல் நிலையாகத் தங்கி வாழ்ந்தவர்கள் இயக்கர். நாகர், வேடர் என்னும் பழங்குடி மக்களாவர். இந்தப் பழங்குடி மக்களைப்பற்றிய இலங்கை வரலாற்றைத் தீபவம்சம், மகாவம்சம் என்னும் நூல்கள் கூறுகின்றன. இந்த நூல்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் வாழ்ந்த புத்தர் பெருமான். இலங்கைக்கு மூன்றுமுறை வந்தார் என்றும், முதல்முறை வந்தபோது அவர் இயக்கரை இலங்கைத் தீவிலிருந்து வெளியேற்றினார் என்றும், இரண்டாம்முறை, மூன்றாம்முறை வந்தபோது அவர் நாகர் என்னும் இனத்தாருக்குப் பௌத்தமதத்தைப் போதித்துச் சென்றார் என்றும் கூறுகின்றன. ஆனால், புத்தர் பெருமான் வடஇந்தியாவிலேயே தம்முடைய வாழ்நாள் முழுவதையும் கழித்தார் என்றும் தென்னிந்தியாவுக்கோ, இலங்கைக்கோ, வேறு நாடுகளுக்கோ அவர் போகவில்லை என்றும் அவருடைய வாழ்க்கை வரலாறு கூறுகிறது. ஆனால், புத்தரை இலங்கையோடு சம்பந்தப்படுத்த வேண்டும் என்னும் ஆசையினாலே, தீபவம்சமும் மகாவம்சமும் புத்தர் மூன்றுமுறை இலங்கைக்கு வந்துபோனார் என்று கூறுகின்றன.
புத்தர் பெருமான் போதிஞானம் அடைந்தபிறகு ஒன்பதாவது திங்களில் இலங்கைக்கு வந்தார் என்றும், அப்போது இலங்கையில் வாழ்ந்திருந்த இயக்கர் ஆற்றங்கரையிலே இருந்த மகாநாகத் தோட்டத்திலே வழக்கம்போலக் கூடியிருந்ததைக்கண்டு அவர், அவர்களை அச்சுறுத்த எண்ணிக் காரிருளையும் புயற்காற்றையும் பெருமழையையும் உண்டாக்க, அவர்கள் அஞ்சிநடுங்கித் தங்களை இந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்றவேண்டும் என்று புத்தரை வேண்டிக்கொள்ள, அவர் தமக்கு இருக்கச் சிறிதளவு இடந்தந்தால் அந்தத் துன்பத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதாகக் கூற, அவர்கள் அவருக்குத் தம்நாட்டில் இருக்க இடந்தந்தனர் என்றும், இடம்பெற்ற புத்தர் புயலையும் மழையையும் அகற்றிக் கீழே இறங்கிவந்து தம்முடைய தோல் ஆசனத்தை விரித்து அதில் அமர்ந்தபோது, அது அகன்று விரிந்துகொண்டுபோக, இயக்கர் ஒதுங்கிச்சென்று கடற்கரையில் நின்றனர் என்றும், அப்போது புத்தர் அருகில் கடலில் இருந்த கிரித் நீவு என்னும் தீவைத் தம்முடைய இரித்தி (சித்தி)யினால் இலங்கைக்கு அருகில் வரவழைக்க, இயக்கர் அந்த கிரித்தீவில் சென்றுவிட அவர் அத்தீவை முன்போலக் கடலிலிருந்து அகன்று போய்விடச் செய்தார் என்றும் இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு, புத்தர் இலங்கையிலிருந்து இயக்கரை வேறு தீவுக்கு அனுப்பிவிட்டார் என்று கூறுகின்றன.17 இலங்கை நூல்கள் கூறுகிற இந்தச் செய்தியைப் புத்தருடைய வரலாறு கூறவில்லை. ஆகையால், இது ஒரு கற்பனைக்கதை என்று தெரிகிறது. புத்தர், கொடியவரையும் நல்லவராக்கி அவர்களுக்குப் பௌத்தக் கொள்கையை உபதேசித்தார் என்று அவருடைய வரலாறு கூறுகிறது. ஆனால், இலங்கை நூல்கள் அவர் அப்படிச் செய்யாமல் இயக்கரை வேறுதீவுக்கு அனுப்பிவிட்டார் என்று கூறுகின்றன.
இயக்கரை வேறுதீவுக்கு ஓட்டியபிறகு தேவர்கள் இலங்கைக்கு வந்தார்கள் என்றும், அவர்களுக்குப் புத்தர் திரிசரணம், பஞ்சசீலம் முதலான உபதேசகங்களைச் செய்தார் என்றும், இந்நூல்கள் கூறுகின்றன.18 இந்தத் தேவர்கள் யார், எங்கிருந்து இலங்கைக்கு வந்தார்கள் என்று இந்நூல்கள் கூறவில்லை. இலங்கையிலிருந்த இயக்கரைத் துரத்திவிட்டுத் தேவருக்குத் தருமோபதேசம் செய்த புத்தர் மீண்டும் வடஇந்தியாவுக்குப் (உருவேல் என்னும் இடத்துக்குப் போய்விட்டார்.19 இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், ஆதிகாலத்தில் இலங்கையில் இயக்கர் என்னும் பழங்குடிமக்கள் பெருவாரியாக வாழ்ந்திருந்தனர் என்பதே இயக்கர்கள் இலங்கையிலிருந்து கிரித் தீவுக்கு ஓட்டப்பட்டதாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகிறபோதிலும், இயக்கர்கள் எல்லோரும் இலங்கையை விட்டுப் போய்விடவில்லை. ஏனென்றால், இயக்கரும் அவர்களுடைய அரசர்களும் இலங்கையில் பிற்காலத்திலும் வாழ்ந்திருந்தனர் என்பதை மகாவம்சமும் தீபவம்சமும் கூறுகின்றன.
இலங்கையில் அந்தப் பழங்காலத்திலே நாகர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்திருந்ததையும் நாக அரசர்கள் அவர்களை ஆண்டு ஆட்சி செய்ததையும் தீப வம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன. புத்தர் வடஇந்தியாவில் ஜேதவனம் என்னும் இடத்தில் இருந்தபோது (அவர் புத்த பதவியடைந்த ஐந்தாவது ஆண்டில்) இலங்கையில் இருந்த நாகர் குலத்து அரசர்களான மகோதான், குலோதான் என்பவர்கள் ஒரு மணியாசனத்துக்காகப் போர் செய்யப்போவதையறிந்து, அவர்கள் மேல் இரக்கங்கொண்டு புத்தர் இலங்கைக்குவந்து அவர்களுடைய போரை நிறுத்தித் தருமோபதேசம் செய்தார் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன.20
இலங்கையின் வடக்கில் கடல் பிரதேசத்தில் (இப்போதைய யாழ்ப்பாணத்தில்) நாகர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்திருந்தனர். அவர்களுடைய அரசனான நாகராசனுக்கு இரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். நாகராசன் தன்னுடைய மகளை மலைநாட்டில் வாழ்ந்திருந்த நாகராசனுக்கு மணஞ்செய்து கொடுத்துத் தன்னிடத்தில் இருந்த மணியாசனத்தையும் அவளுக்குப் பரிசாக கொடுத்தான். அவளுக்குக் குலோதரன் என்னும் ஒரு மகன் பிறந்தான். யாழ்ப்பாணப் பகுதியில் இருந்த நாகராசன் இறந்துபோனபிறகு அவனுடைய மகனான மகோதரன் யாழ்ப்பாணத்தை (நாக நாட்டை) அரசாண்டான், அப்போது அவனுடைய மருகனான (தங்கையின் மகனான) குலோதரன் அரசாண்டு கொண்டிருந்தான். மகோதரன் தன் தந்தை தன்னுடைய தங்கைக்குப் பரீசாகக் கொடுத்த மணியாசனத்தைப் பெறஎண்ணிக் குலோதரன்மேல் படையெடுத்துப் போர்செய்யச் சென்றான். இருவரும் போர்க்களத்திலே சந்தித்தபோது புத்தர்பெருமான் போர்க்களத்திலே உயரத்தோன்றிப் பேரிருளை உண்டாக்கினார். அந்த இருட்டைக் கண்ட நாகர் நடுங்கி அஞ்சினார்கள். அப்போது புத்தர் வெளிச்சத்தை உண்டாக்கினார். நாகர்கள் மகிழ்ந்து புத்தரை வணங்கி அவருக்கு மணியாசனத்தைக் கொடுத்து அதில் அமரச்செய்தார்கள். மணியாசனத்தில் அமர்ந்த புத்தர் அவர்களுக்குத் தருமோபதேசம் செய்தார். போர்செய்யக் காரணமாக இருந்த மணியாசனம் புத்தருக்கு உரியதாயிற்று. இவ்வாறு நாகர்களின் போரை நிறுத்திய புத்தர். பிறகு வடஇந்தியாவுக்குப் (ஜேதவனத்துக்கு) போய்விட்டார். அவர் அமர்ந்து உபதேசம் செய்த மணியாசனத்தை நாகர் வழிபட்டு வணங்கினார்கள்.21 மணியாசனத்துக்காக நாகஅரசர் போர் செய்ததையும், அப்போது புத்தர்வந்து அந்தப் போரை நிறுத்தியதையும் மணிமேகலைக் காப்பியமும் கூறுகிறது.22
நாக அரசர் போர்செய்யக் கூடியிருந்தபோது இலங்கையில் கலியாணி நாட்டையாண்ட மணியக்கன் என்னும் நாகராசனும் போர்க்களத்துக்கு வந்திருந்தான். அவன் யாழ்ப்பாணத்தை ஆண்ட நாகஅரசனான மகோதரனுடைய தாய்மாமனாவான். அவன் புத்தருடைய உபதேசத்தைக்கேட்டு மகிழ்ந்தான். அவன் கலியாணி நாட்டுக்கு அரசன். கலியாணி நாடு என்பது இலங்கையில் மேற்குக் கரைப்பக்கம் இருந்தது. (இப்போதைய கொழும்புப் பக்கத்தில் கெலனிஓயா என்னும் கெலனியாறு பாய்கிற பிரதேசந்தான் பழைய கலியாணிநாடு.) கலியாணி நாட்டில் நாகர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களை ஆண்ட மணியக்கன் புத்தரைத்தன்னுடைய நாட்டுக்கு வருமாறு அழைக்க, புத்தர் தம்முடைய சீடர்களோடு அங்குச் சென்றார். மணியக்கன் மணியாசனத்தில் புத்தரை அமர்த்தி அவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு கொடுத்தான். உணவு கொண்டபிறகு புத்தர் மணியாசனத்தில் அமர்ந்து தருமோபதேசம் செய்தார் என்று மகாவம்சம் கூறுகிறது.23
இவற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், இலங்கையில் பழங்காலத்தில் நாகர் என்னும் இனத்தவர் வாழ்ந்திருந்தனர் என்பதும், அவர்கள் இலங்கையின் வடபகுதியிலிருந்த நாகநாட்டிலும் இப்போதைய யாழ்ப்பாணம்), இலங்கையின் நடுப்பகுதியான மலையநாட்டிலும், இலங்கையின் மேற்குப்பகுதியான கலியாணி நாட்டிலும் வாழ்ந்திருந்தனர் என்பதும் தெரிகின்றன.
சங்ககாலத் தமிழகத்திலேயும் இயக்கர், நாகர் என்னும் இனத்தவர் வாழ்ந்திருந்தார்கள் என்பதைச் சங்கநூல்களிலிருந்து அறிகின்றோம். தமிழ்நாட்டு இயக்கரும் நாகரும் தமிழரின் ஒரு பிரிவினர். அவர்கள் பிற்காலத்தில் தமிழரோடு கலந்துபோனார்கள்.
விசயன் வருகை
இந்தியாவின் மேற்கே இலாடதேசத்திலிருந்து (இப்போதைய குஜராத்து நாட்டிலிருந்து) விசயன் என்னும் அரசகுமரன் தன்னுடைய எழுநூறு தோழர்களோடு இலங்கைக்கு வந்தான். விசயன் வங்காள தேசத்திலிருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறுவதும் உண்டு. அவன் வந்ததும். புத்தர் பரிநிருவாணம் அடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஆனால் இலங்கை நூல்கள் புத்தரை இலங்கையோடு தொடர்பு படுத்துவதற்காக, அவர் பரிநிருவாணம் அடைந்த அதேநாளில் விசயன் இலங்கைக்கு வந்ததாகக் கூறுகின்றன. புத்தர்பெருமான் வடஇந்தியாவில் குசி நகரத்தில் பரிநிருவாணம் அடைந்தஅன்று, சக்கன் (தேவேந்திரன்) அவரிடம் சென்றான். பரிநிருவாணம் அடைகிற நிலையில் இருந்த புத்தர் இந்திரனிடம், 'விசயன் இலாடதேசத்திலிருந்து இலங்கைக்கு வருகிறான், இலங்கையில் பௌத்த தர்மம் பரவப்போகிறது; ஆகையால், அவனையும் அவனுடைய தோழர்களையும் காப்பாற்றுக' என்று கூறினாராம். அதுகேட்ட இந்திரன், உற்பல வண்ணனை (நீலத்தாமரை வண்ணனை) அதாவது திருமாலை (விஷ்ணுவை) இலங்கையில் பாதுகாப்பாளராக நியமித்தானாம்.24 விசயனும் அவனுடைய 700 தோழர்களும் கப்பலில் வந்து இலங்கையில் தம்பபாணி என்னும் இடத்தில் தங்கினார்கள். அவர்கள் தங்கினஇடம் இப்போது அநுராதபுரம் உள்ள இடத்தைச் சார்ந்திருந்தது. அது இயக்கர் வாழ்ந்த இடம். இயக்க அரனுடைய மகளான குவண்ணி என்பவளோடு விசயன் தொடர்புகொண்டு, அவளுடன் வாழ்ந்தான். குவண்ணி, இயக்கநாட்டை விசயன் கைப்பற்றுவதற்கு உதவிசெய்தாள். அவளுடைய உதவியினாலே, விசயனும் அவனுடைய தோழர்களும் இயக்க அரசனைக் கொன்று அவனுடைய நாட்டைக் கைப்பற்றினார்கள். அவர்கள் கைப்பற்றிய இயக்கருடைய தலைநகரத்தின் பெயர் ‘சிர்சவத்து’ என்பது.25 விசயனுடைய தோழர்கள் ஆங்காங்கே கிராமங்களை அமைத்துக்கொண்டனர். அநுராதன் என்பவன் கடம்ப நதிக்கரையில் (இப்போதைய மல்வட்டெஓயா) அநுராத கிராமத்தையும், உபதிஸ்ஸன் கிராமத்தையும் உண்டாக்கினார்கள். உச்சேனி, உருவேலா, விஜிதம் முதலான ஊர்களையும் அமைத்தார்கள்.26
பாண்டிநாட்டுத் தொடர்பு
இயக்க அரசன் மகளான குவண்ணிக்கும் விசயனுக்கும் ஓர் ஆணும் பெண்ணும் பிறந்திருந்தனர். விசயனுடைய தோழர்கள், விசயனுக்கு முடிசூட்டி அவனை அரசனாக்க விரும்பினார்கள். அவர்கள் தங்கள் எண்ணத்தை அவனுக்குக் கூறினபோது, அவன் இயக்க குலத்துக் குவண்ணியை இராணியாக்கி முடிசூட்டிக்கொள்ள விரும்பவில்லை. நல்ல அரசகுலத்து மகளை மணந்து அவளை இராணியாக்கி முடிசூட்டிக்கொள்ள விரும்பினான். அவனுடைய தோழர்கள் எண்ணிப்பார்த்து இலங்கைக்கு அக்கரையில் உள்ள பாண்டிநாட்டு அரசனிடம் மகள் கேட்க, முத்து மணிகள் முதலான விலையுயர்ந்த பொருள்களைக் கொடுத்துத் தூதர்களை அனுப்பினார்கள். தூதர்கள் மதுரைக்குச்சென்று பாண்டியன் மகளை விசயனுக்கு மணம்செய்விக்கக் கேட்டார்கள். பாண்டியன் அமைச்சர்களோடு கலந்து ஆய்ந்து தன்மகளை மணஞ்செய்விக்க இசைந்தான். மற்ற எழுநூறு தோழர்களும், பாண்டிநாட்டில் பெருங்குடி மக்கள் வீடுகளிலிருந்து மணப்பெண்களை மணம்பேசி முடித்தனர். மதுரையிலிருந்து பாண்டியன் மகளும் மற்ற மணப்பெண்களும் பரிவாரங்களோடும் யானை, குதிரை, தேர் முதலானவற்றோடும் பதினெட்டு வகையான கைத்தொழில் செய்யும் சாத்தர்களோடும் அவர்களைச் சார்ந்த ஆயிரம் குடும்பங்களோடும் இலங்கைக்குச் சென்றனர். சென்றவர்களை விசயனும் அவனுடைய தோழர்களும் வரவேற்று அவர்கள் தங்குவதற்குரிய இடங்களை அமைத்துக் கொடுத்தார்கள்.
விசயன் குவண்ணியையும் அவளுடைய மக்களையும் துரத்திவிட்டான். தங்கள் அரசனையும் நாட்டையும் காட்டிக்கொடுத்த குவண்ணியை இயக்கர்கள் கொன்றுவிட்டார்கள். பிறகு விசயனும் அவனுடைய தோழர்களும்முறையே பாண்டிய அரச குமாரத்தியையும் பாண்டிநாட்டு மகளிரையும் திருமணஞ்செய்து கொண்டார்கள். தோழர்கள் விசயனுக்கு முடிசூட்டி அவனை அரசனாக்கினார்கள்.27
பாண்டியன் மகளைத் திருமணம் செய்துகொண்டு முடிசூடிய விசயன் தன் மாமனாகிய பாண்டியனுக்கு ஆண்டுதோறும் இரண்டு நூறாயிரம் (இரண்டு இலட்சம்) பொன் மதிப்புள்ள முத்துகளைக் காணிக்கையாகச் செலுத்திவந்தான். விசயன் 38 ஆண்டுகள் அரசாண்டான்.28
இவ்வாறு கி.மு. 4 ஆம் நூற்றாண்டிலே இலங்கையரசனுக்கும் பாண்டிய அரசனுக்கும் அரசியல்தொடர்பும் திருமணத்தொடர்பும் ஏற்பட்டது.
விசயன் இலங்கை முழுவதும் அரசாளவில்லை. விசயன், அநுராதபுரத்தைச் சூழ்ந்துள்ள நாட்டை அரசாண்டான். இலங்கையின் மற்ற இடங்களை இயக்கரும் நாகரும் அரசாண்டார்கள். இலங்கையின் வடபகுதியாகிய நாகநாட்டை (யாழ்ப்பாணப் பிரதேசம்) நாக அரசனும், கலியாணி நாட்டை இன்னொரு நாக அரசனும், மலைய நாட்டையும் உரோகண நாட்டையும் வேறுவேறு அரசர்களும் அரசாண்டார்கள். மகாவலி கங்கை என்னும் ஆற்றின் வடகரைக்கும் நாகநாட்டின் தென்எல்லைக்கும் இடையில் இருந்த சிங்களநாட்டை விசயன் அரசாண்டான். விசயன் கி.மு. 483 முதல் 443 வரையில் 38 ஆண்டுகள் அரசாண்டான் என்பர். அவனுக்கு மக்கட்பேறு இல்லை. பாண்டிநாட்டிலிருந்து மணமகளிரோடு இலங்கைக்குச்சென்ற 18 வகையான தொழிலாளிகள் இலங்கையின் தலைநகரத்தை அமைத்தார்கள் என்று தோன்றுகிறது.
விசயன் இறந்த பிறகு, ஓராண்டு வரையில் சிங்கள இராச்சியத்தை அவனுடைய அமைச்சர்கள் அரசாண்டார்கள். அப்போது நாட்டுக் குடிமக்களான இயக்கர், அரசியல் காரணமாகக் கலகஞ்செய்தனர் என்று தோன்றுகிறது. அதன் பிறகு, பாண்டு வாசுதேவன் என்பவன் இலங்கையை அரசாண்டான். அவன் விசயனுடைய தம்பியாகிய இலாடதேசத்தை அரசாண்ட சுமித்தனுடைய இளையமகன் என்று மகாவம்சம் கூறுகிறது. ஆனால், இவன் பாண்டிநாட்டுப் பாண்டிய அரசகுலத்தவனாக இருக்கக்கூடும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். தீபவம்சம் இவனைப் பாண்டுவாசன் என்றுதான் கூறுகிறது.29
ஆனால், அதற்குப்பின் எழுதப்பட்ட மகாவம்சம் பாண்டு வாசனைப் பாண்டுவாசுதேவன் என்று மாற்றிக் கூறுகிறது.30 பாண்டுவாசன் என்பதன் பொருள் 'வெள்ளாடை அணிந்தவன்' என்றும் 'பாண்டி நாட்டில் இருந்து வந்தவன்' என்றும், ஆகும். வெள்ளாடை அணிந்தவன் என்பதைவிடப் பாண்டிய நாட்டிலிருந்து வந்தவன்; அதாவது, பாண்டி நாட்டவன் என்று கூறுவதே பொருத்தமாகும்.31 ஆனால் மகாவம்சம், புத்தர் இலங்கைக்கு வந்தார் என்று கூறி அவரை இலங்கையோடு தொடர்புபடுத்தியது போலவே, பாண்டுவாசனைப் பாண்டி நாட்டிலிருந்து சென்ற பாண்டிய அரச மரபினனாகத் தோன்றுகிறான். இவன் கி.மு. 444 முதல் 414 வரையில் 30 ஆண்டுகள் அரசாண்டான்.
சிங்களவர் ஆட்சி
பாண்டுவாசனுக்குப் பத்து ஆண் மக்களும் ஒரு மகளும் பிறந்தனர். மூத்தமகனுக்கு அபயன் என்றும், கடைசி மகளுக்கு சித்தா என்றும் பெயர். சித்தாவின் மகன் தன்னுடைய அம்மான்களைக் (பாண்டுவாசனுடைய மக்கள் பதின்மரைக்) கொன்றுபோட்டு அரசாள்வான் என்று நிமித்திகர்கள் கூறினார்கள். ஆகவே, அந்த அம்மான்கள் தங்கள் தங்கைக்கு மகன் பிறந்தால் அவனைக் கொன்றுவிடுவதற்கு வழிசெய்திருந்தார்கள். சித்தாவுக்கும் தீக்காமணி என்பவனுக்கும் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்த ஆண்குழந்தையை அம்மான்களிடம் அகப்படாதபடி ஒளித்துவைத்து வளர்த்தார்கள். அவனுக்குப் பெயர் பாண்டுகாபயன் என்பது.
பாண்டுவாசன் இறந்தபிறகு அவனுடைய மூத்தமகனான அபயனுக்கு முடிசூட்டினார்கள். அவனுடைய தம்பிமார் ஒன்பதுபேரும், தங்கள் தங்கையின் மகனைக்கொல்ல அவனைத் தேடிக் கொண்டிருந்தார்கள். பாண்டுகாபயன் அவர்கள் கையில் அகப்படாமல் மகாவலி கங்கையாற்றின் தென்கரையில் மறைந்து வாழ்ந்திருந்தான். அவன் பதினாறு வயதடைந்தபோது தனக்குச் சேனையைச் சேர்த்துக்கொண்டான். அவன் சேதியா என்னும் பெயருள்ள இயக்கியின் உதவியினால் தன்னுடைய அம்மப்போரில் கொன்றான். கடைசியில் தன்னுடைய மூத்த அம்மானாகிய அபயனையும் வென்று சிங்கள இராச்சியத்தைக் கைப்பற்றினான்.
பாண்டுகாபயன், பழைய தலைநகரான உபதிஸ்ஸ கிராமத்தை விட்டு, அநுராதபுரத்தைத் தலைநகரமாக்கினான். இவன் அநுராதபுரத்தின் காவல்தெய்வங்களாக இயக்கரை அமைத்தான். நகரத்தின் கிழக்குப் பக்கத்தின் காளளேள என்னும் இயக்கரை நியமித்தான். அபயவாவி என்னும் ஏரியின் (இப்போதைய பசவக்குளம்) கரைமேல் சித்தராசன் என்னும் இயக்கத் தெய்வத்தை அமைத்தான். அநுராதபுரத்தின் தெற்குவாயிலில் இயக்கிக்கு ஒரு கோயில் கட்டினான். அரண்மனையை அடுத்து, போரில் தனக்கு உதவிசெய்த சேதியா என்னும் இயக்கிக்குக் கோயில் அமைத்தான். இந்த இயக்கத் தெய்வங்களுக்கும் வேறு இயக்கத் தெய்வங்களுக்கும் இவன் பூசைகளையும் விழாக்களையும் நடத்தினான். நாட்டில் குடிமக்களாக இருந்த இயக்கர்களை மகிழ்விப்பதற்காக இத்தெய்வங்களைக் கொண்டாடினான் என்று தெரிகிறது.
திருவிழாக்காலங்களில் இவன் சித்தராசன் என்னும் இயக்கத்தெய்வத்தின் அருகில் அமர்ந்து விழாவைக் கொண்டாடினான்.32 பாண்டுகாபயன் அநுராதபுரத்தில் முடிசூடி எழுபது ஆண்டு (கி.மு. 377 - 307) அரசாண்டான். சித்தராசன் என்னும் இயக்கத் தெய்வங்களைக் கண்கண்ட தெய்வங்களாகக் கொண்டும், இயக்க பூதங்களை நண்பர்களாகக் கொண்டும் அரசாண்டான்.33
விசயன் இலங்கையில் சிங்களராச்சியத்தை அமைத்தபோது, அவன் இயக்கருடைய இராச்சியத்தை இயக்கியாகிய குவண்ணியின் உதவியினால் கைப்பற்றினான். அதனால், இயக்கர் அவனுக்குப் பகைவராக இருந்தனர். அவர்கள் தங்களையும் தங்கள் அரசனையும் காட்டிக்கொடுத்த குவண்ணியைக் கொன்றுவிட்டார்கள். ஆனால், பாண்டுகாபயன் இயக்கருடைய உதவிகொண்டு தன்னுடைய அம்மான்களை வென்று சிங்கள இராச்சியத்தை அமைத்தான். இவன் இயக்கரைப்போற்றி அவர்களுக்கு உயர்ந்த இடங்கொடுத்து, இயக்கத் தெய்வங்களுக்குக் கோயில்கட்டித் திருவிழாசெய்து வழிபட்டான். இவனுக்குக் குடிமக்களான இயக்கர் ஆதரவு இருந்தது.
உரோகண நாட்டில் பாண்டியர் ஆட்சி
பாண்டுகாபயன் காலத்திலோ, இவன் காலத்துக்கு முன்போ, இலங்கையின் தென்கிழக்குப் பக்கத்தில் உள்ள உரோகண நாட்டில், பாண்டிய அரசர் குலத்தைச் சேர்ந்தவர் வந்து அந்நாட்டையும் அதற்கு வடக்கேயுள்ள கிழக்கு இலங்கையையும் கைப்பற்றி அரசாண்டனர். அவர்களைப்பற்றிய வரலாற்றைத் தீபவம்சமும் மகாவம்சமும் பேசவில்லை அந்தப் பாண்டிய குலத்து அரசர்கள் உரோகண நாட்டிலே நிலைகொண்டு அப்பகுதிகளை அரசாண்டு கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வழியினர் பிற்காலத்தில் எழுதிவைத்த பிராமி எழுத்துச் சாசனங்களிலிருந்து அவர்களைப்பற்றி ஒருவாறு அறிகிறோம்.
பாண்டுகாபயன் அநுராதபுரத்தில் கி.மு. 307 இல் காலமான பிறகு, அவனுடைய மகனான முட்டசிவன் அநுராதபுரத்தில் சிம்மாசனம் ஏறிச் சிங்கள இராச்சியத்தை அரசாண்டான். சிவன் என்று பெயர் பெற்றிருந்தமையால் இவன் சைவ சமயத்தவன் என்று கூறலாம். இவன் சிங்கள இராச்சியத்தை அறுபது ஆண்டுகள் (கி.மு. 307 (கி.மு. 307 - 247) அரசாண்டான். இவன் ஆட்சிக்காலத்திலும் இலங்கையைச் சேர்ந்த உரோகண நாட்டில் பாண்டிய குலத்தார் அரசாண்டு கொண்டிருந்தார்கள். உரோகண நாட்டில் மாகாமம் (மகாகிராமம்) என்னும் ஊரைத் தலைநகரமாக்கிக்கொண்டு அவர்கள் அரசாண்டார்கள். முட்டசிவனுக்குப் பிறகு இவனுடைய இரண்டாவது மகனான திஸ்ஸன் அரசாண்டான். திஸ்ஸனைத் தேவனாம்பிய திஸ்ஸன் (தேவனாம்பிரிய திஸ்ஸன்) என்று கூறுவர். தேவனாம்பிரிய திஸ்ஸன் கி.மு. 247 முதல் 207 வரையில் அரசாண்டான்.
பாரத தேசத்தை அரசாண்ட அசோகச் சக்கரவர்த்தியும் திஸ்ஸனும் சமகாலத்தில் இருந்த அரசர்கள். அசோகச் சக்கரவர்த்தி, ‘தேவனாம்பிரியின்’ என்னும் சிறப்புப்பெயர் பெற்றிருந்தது போலவே, இலங்கையையாண்ட திஸ்ஸனும் ‘தேவனாம்பிரியன்’ என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டிருந்தான். திஸ்ஸன், தூதரை அசோகச் சக்கரவர்த்தியிடம் அனுப்பி, பகவான் புத்தர் போதிஞானம் பெற்ற போதிமரத்தின் கிளையை இலங்கைக்கு அனுப்பும்படியும், பௌத்த மதத்தை இலங்கையில் பரவச் செய்வதற்காகச் சங்கமித்திரை முதலான பௌத்தப் பிக்குகளை அனும்பும்படியும் கேட்டுக்கொண்டான். அவ்வாறே அசோகச் சக்கரவர்த்தி போதிமரக் கிளையையும், பிக்குணிகளையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தார்.34 இதற்கு முன்பே அசோக சக்கரவர்த்தி மகிந்தன் (மகேந்திரன்) என்னும் பிக்குவை இலங்கைக்கு அனுப்பி பௌத்தமதப் பிரசாரம் செய்வித்திருந்தார்.35 திஸ்ஸ அரசன் புத்தகயாவிலிருந்து வந்த போதிமரக் கிளையை அநுராதபுரத்தில் நட்டபோது அந்த விழாவிற்கு இலங்கையில் இருந்து அரசர்களும் பெருமக்களும் வந்திருந்தார்கள். அவர்களில் கஜர காமத்திலிருந்து (கதிர்காமத்திலிருந்து - அதாவது உரோகண நாட்டிலிருந்து) அதன் பெருமக்களும் வந்திருந்தனர்.36 மகாவம்சம், கதிர்காமப் பெருமக்கள் என்று கூறகிறதே தவிர அவர்களின் பெயரைக் கூறாமலே மறைத்துவிட்டது. கதிர்காமத்துப் பெருமக்களில் உரோகணநாட்டுப் பாண்டிய குல அரசனும் முக்கியமானவன் என்பதில் ஐயமில்லை. மகாவம்சம் உரோகணநாட்டுப் பாண்டியகுல அரசர்களைக் கூறாமல் விட்டபோதிலும், வேறு இடத்திலிருந்து இந்தப் பாண்டியரின் செய்திகள் கிடைக்கின்றன.
உரோகண நாட்டில் அரசாண்டிருந்த பாண்டியகுலத்து அரசரை, தேவனாம்பிரிய திஸ்ஸனுடைய தம்பி மகாநாகன்கொன்று அந்த இராச்சியத்தைக் கைப்பற்றினான். மகாநாகனுக்கு உபராச மகாநாகன் என்னும் பெயரும் உண்டு. இவன் எப்படி உரோகண நாட்டுப் பாண்டியப் பரம்பரையை அழித்தான் என்பதைக் கூறுவதற்கு முன்பு, அந்தப் பாண்டிய குலத்தரசரைப் பற்றிக் கூறுவோம்.
இலங்கைத் தீவின் தென்கிழக்கில் உரோகணநாடு இருக்கிறது. அதன் பழைய தலைநகரம் மாகாமம் (மகாகிராமம்) என்பது. அதன் துறைமுகப்பட்டினம் சம்பந்திட்டை. இக்காலத்தில் அது ஹம்பந்தோட்டம் என்று கூறப்படுகிறது. சம்பந்திட்டை பழங்காலத்தில் பேர்பெற்ற துறைமுகப்பட்டினமாக இருந்தது. உரோகண நாட்டின் மற்றொரு தலைநகரம் கதிர்காமம். கதிர்காமத்தைச் சிங்கள நூல்கள் கதரகாமம் என்றும், கஜரகாமம் என்றும் கூறுகின்றன. கதிர்காமம், முருகன் கோயிலுக்குப் பேர்பெற்றது. மாணிக்க கங்கை என்னும் ஆற்றின் அருகில் கதிர்காமக் கோயில் இருக்கிறது. அந்தப் பழங்காலத்தில், கதிர்காமக்கோயில் ஒரு குன்றின்மேல் இருந்தது. தமிழர் முருகனைக் குன்றின் மேல்வைத்து வணங்குவது வழக்கம். உரோகண நாட்டை யரசாண்ட பாண்டிய குலத்தவர் கதிர்காம முருகனைப் பழைய வழக்கப்படி குன்றின்மேல் கோயில்கட்டி வணங்கினார்கள். (பிற்காலத்தில் சிங்களவர், குன்றின்மேல் இருந்த முருகனைக் கீழேகொண்டுவந்து இப்போதுள்ள கோயிலில் வைத்தனர்.) உரோகண நாட்டில் அக்காலத்திலிருந்த இன்னொரு கோயில் அட்டாலயம் என்பது. அதுவும் முருகன் கோயில் என்று தோன்றுகிறது. அசோகச் சக்கரவர்த்தி அனுப்பிய போதிமரத்துக் கிளையை அநுராதபுரத்தில் திஸ்ஸ அரசன் நட்டுச் சிறப்புச் செய்தபோது, அவ்விழாவுக்கு வந்திருந்த பெருமக்களில் கதிர்காமத்துப் பெருமக்களும் வந்திருந்தனர் என்று மகாவம்சம் கூறுகிறது.37 பெருமக்கள் என்று பன்மையில் கூறுகிறபடியால் உரோகண நாட்டை அரசாண்டவர் பாண்டிய சகோதரர்கள் என்று தெரிகிறது. உரோகண நாட்டரசர்கள் காமணி என்று பெயர் பெற்றிருந்தனர். அவர்கள் உரோகண நாட்டையும் அதற்கு வடக்கே கடற்கரையோரமாக இருந்த கிழக்கு இலங்கையையும் அரசாண்டார்கள் என்பதை அவர்கள் அங்கு எழுதியுள்ள பாறைக்கல் சாசன எழுத்துகளிலிருந்து அறிகிறோம் என்பதை முன்னமே கூறினோம். இலங்கையில் அம்பரை மாவட்டத்தில் ஹெனன்னெகல என்னும் இடத்திலுள்ள மலைக்குகையில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துச் சாசனம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இந்தக் கல்வெட்டு வாசகத்தின் இறுதியில் மீன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. மீன் அடையாளம் பாண்டியருக்குரியது என்பதை அறிவோம். இந்தச் சாசனம் எழுதிய அரசர் பாண்டியர் மரபைச் சேர்ந்தவர் என்பதற்கு இது முக்கியமான சான்றாகும்.38 மேலும், இந்தச் சாசனத்தில் மஜிமகாராசன் என்னும் பெயர் கூறப்படுகிறது. அதாவது, மச்ச (மீன்) மகாராசன் என்று கூறப்படுகிறான். பழைய சிங்கள மொழியில் மஜி என்றால் மச்சம் (மீன்) என்பது பொருள். ஆகவே, மஜிமகாராசன் என்றால் மீன் அடையாளத்தையுடைய மகாராஜன் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இந்தச் சாசனத்தின் இறுதியிலுள்ள மீன் உருவம், இவனுடைய அடையாளம் மீன் (கயல்) என்பதை ஐயமில்லாமல் தெரிவிக்கிறது. ஆகவே, இந்த அரசர் பரம்பரை மீன் அடையாளத்தையுடைய பாண்டியப் பரம்பரை என்பது தெரிகிறது. மச்ச மகாராசனும் அவனுடைய மகனான காமணி திஸ்ஸனும் சேர்ந்து பௌத்தப் பிக்குகளுக்குச் சில கிராமங்களையும் அவற்றைச் சேர்ந்த பொருள்களையும் தானஞ்செய்ததை இந்தக் கல்வெட்டு எழுத்துக் கூறுகிறது. இந்த அரசர்கள் பௌத்த பிக்குச் சங்கத்துக்கு ஏழு கிராமங்களைத் தானஞ்செய்ததையும், அந்த ஏழு கிராமங்களின் பெயர்களையும் இச்சாசனம் கூறுகிறது. இவ்வரசர்கள் எழுதியுள்ள 16 பிராமி எழுத்துச் சாசனங்கள் வெவ்வேறு இடங்களில் காணப்படுகின்றன. அந்தச் சாசனங்களின் இறுதியில் இவர்களுடைய மீன் அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. மீன் அடையாளம் அந்த அரசர் பாண்டிய மரபைச் சேர்ந்தவர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றது. இந்தப் பிராமி எழுத்துச் சாசனங்களையும் அதன் வாசகங்களையும் அச்சாசனங்களின் இறுதியில் பொறிக்கப்பட்டுள்ள மீன் உருவங்களையும் பரணவதானே அவர்கள் தொகுத்துப் பதிப்பித்துள்ள இலங்கைச் சாசனங்கள் முதலாம் தொகுதியில் காணலாம்.39
உரோகண நாட்டை அரசாண்ட காமணி அபயன் என்னும் (மீனன், பாண்டிய பரம்பரையரசன்) அரசனுக்குப் பத்து மக்கள் இருந்தனர். அவர்களுக்குத் தசபாதிகர் என்று பெயர் இருந்ததை முன்னமே கூறினோம். (தசபாதிகர் - பத்துச் சகோதரர்). அந்தப் பத்துச் சகோதரர்களில் மூத்தவன் பெயர் தர்மராசன் என்றும், அவனுடைய மகன் பெயர் மகாதிஸ்ஸ ஐயன் என்றும் போவட்டெகல பிராமி எழுத்துச் சாசனம் கூறுகிறது. ‘காமணி அரசனுடைய குமாரர்களான தசபாதிகர்களில் மூத்தவன் பெயர் தர்மராசன். அவனுடைய மகனான மகாதிஸ்ஸன். மகாசுதர்சனம் என்னும் பெயருள்ள இந்த மலைக் குகையைப் பௌத்த சங்கத்துக்குத் தானங்கொடுத்தான்’ என்று இந்தக் குகைச்சாசனங் கூறுகிறது.40 இந்த மலைக்குகையில் உள்ள இன்னொரு சாசனம். 'காமணி அரசனுடைய மகன் உதிராசன், உதிராசனுடைய மகன் அபயன். அபயனுடைய மகள் அநுராதி என்பவள், இந்தக் குகையைப் பிக்குகளுக்குத் தானஞ் செய்தாள்' என்று கூறுகிறது.41 உரோகண நாட்டையாண்ட பாண்டிய மரபைச்சேர்ந்த காமணி அரசனுடைய பரம்பரையைப்பற்றிக் கொட்டதாமூஹெல குகையில் உள்ள பிராமி எழுத்துச் சாசனங்களும் கூறுகின்றன. ‘தர்மராசனின் மகனான மகாதிஸ்ஸ ஐயனுடைய மகளும், அபயராசனுடைய மகனின் மனைவியுமான செவெர, புத்தசங்கத்துக்கு இந்தக் குகையைத் தானங் கொடுத்தாள்’ என்று ஒரு சாசனம் கூறுகிறது.42 'தர்மராசனுடைய மகனான மகாதிஸ்ஸ ஐயனுடைய மகளும், அபய அரசனுடைய மகனான திஸ்ஸனுடைய மனைவியுமான சவர இந்தக் குகையைப் பௌத்த சங்கத்துககுத் தானங்கொடுத்தாள்’ என்று இன்னொரு பிராமி எழுத்துச் சாசனம் கூறுகிறது.43 இவற்றிலிருந்து உரோகண நாட்டையரசாண்ட பாண்டிய குல அரசர் கால்வழியை இவ்வாறு அறிகிறோம்.
மஜிமகாராசன் (மச்சமகாராசன்)
│
காமணி அபயன்
(தேவனாம்பிய திஸ்ஸனுக்கும் அசோகச் சக்கரவர்த்திக்கும் சமகாலத்தில் இருந்தவன். அநுராதபுரத்தில் போதிமரத்தைத் திஸ்ஸன் நட்டு விழாக் கொண்டாடியபோது, அவ்விழாவுக்குச் சென்றிருந்தான். தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பி மகாநாதன், உயிருக்கு அஞ்சி இவனிடம் அடைக்கலம் அடைந்த போது, அவனுக்குப் புகலிடங்கொடுத்து ஆதரித்தான்.)
│
┌───────────────┬──────────────┬
தர்மராசன் உதிராசன் மற்றும் எட்டு மக்கள் (தசாபாதிகர்)
││
மகாதிஸ்ஸன் அநுராதி (மகள்)
│
┌───────────────┬
சவெர (மகள்) (மகள்)
(பௌத்த சங்கத்துக்கு
14 குகைகளைத் தானங்
கொடுத்தாள். கொட்ட
தாமூஹெல சாசனங்கள்.)44
மகாநாகன் அடைக்கலம் புகுந்தது
உரோகணநாட்டை அரசாண்ட பாண்டிய மரபு மச்சராசர் பரம்பரையைக் கூறினோம். இனி, தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பி மகாநாதன். உரோகண நாட்டுக்குப் போய்க் காமணி திஸ்ஸனிடம் அடைக்கலம் அடைந்ததையும், புகலிடம் பெற்றுக் காமணி திஸ்ஸனுடைய மக்கள் தசாபதிகரைக் (பத்துச் சகோதரர்களைக்) கொன்று உரோகண இராச்சியத்தைக் கைப்பற்றிக்கொண்டதையும் விளக்கிக் கூறுவோம்.
தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பியை மகாநாதன் என்று கூறுவர். அவன் அரச பதவிக்கு வரவேண்டியவனாகையினால் அவனை உபராச மகாநாகன் என்றும் கூறுவர். அவனை அரச பதவிக்கு வராதபடி செய்து தன்னுடைய மகனை (தேவனாம்பிய திஸ்ஸனுடைய மகனை) அரச பதவிக்கு வரச்செய்ய, தேவனாம்பிய திஸ்ஸனுடைய இராணி கருதினாள். ஆகவே, உபராச மகாநாகனைக் கொல்ல அவள் சூழ்ச்சிசெய்தாள். மகாநாகனும் இந்த இராணியின் மகனும் தரச்ச என்னும் ஊரில் தங்கி ஏரி ஒன்றை அமைத்துக்கொண்டிருந்தபோது, அநுராதபுரத்திலிருந்து இராணி மாம்பழங்களை மகாநாகனுக்கு அனுப்பினார்கள். அந்தக் கூடையில் உயர்தரமான நல்ல மாம்பழங்களை வைத்திருந்தாள். அவை நஞ்சு இடப்பட்டவை. அவற்றைத் தின்று மகாநாகன் இறந்துபோவான் என்று இராணி கருதினாள். மாம்பழங்களைக் கண்ட இராணியின் மகன் (தேவனாம்பிய திஸ்ஸனின் மகன்), அந்த மாம்பழத்தை எடுத்துத்தின்றான். அது நஞ்சிடப்பட்டிருந்த படியால் அவன் இறந்துபோனான். அவன் இறந்துபோன காரணத்தையறிந்த மகாநாகன், இராணியால் தன்உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று அறிந்து தன்னுடைய குடும்பத்தோடு இராச்சியத்தைவிட்டு அயல் இராச்சியத்துக்குப் போய்விடஎண்ணி, உரோகண நாட்டுக்குச்சென்று அங்கு மச்சராசனின் மகனான காமணி திஸ்ஸனிடம் அடைக்கலம் புகுந்தான். காமணி திஸ்ஸன் அவனுக்குப் புகலிடங்கொடுத்து ஆதரித்தான்.45
உரோகண நாட்டுக்குப் போகிறபோது வழியில் அட்டாலயம் என்னும் கோயிலில் மகாநாகனுடைய மனைவி ஒரு மகனைப்பெற்றாள். அந்தப் பிள்ளைக்கு அவன் பிறந்த இடத்தின் பெயரையும் மகாநாகனுடைய தமயனான திஸ்ஸராசனின் பெயரையும் இணைத்து அட்டாலய திஸ்ஸன் என்று பெயரிட்டான். பிறகு, அவன் உரோகண நாட்டுக்கு வந்து மகாகாம நகரத்தில்தங்கி உரோகண நாட்டை யரசாண்டான் என்று மகாவம்சம் கூறுகிறது (மகாவம்சம் 22 :7-8). இதனைக் கூறுகிற மகாவம்சம், உரோகண நாட்டரசனான காமணி திஸ்ஸன் அடைக்கலங்கொடுத்து ஆதரித்ததையும், காமணி திஸ்ஸன் இறந்தபிறகு அவனுடைய ஆட்சியை மகாநாகன் கைப்பற்றிக் கொண்ட துரோகச் செயலையும், மகாநாகனுடைய மகன், காமணி திஸ்ஸனுடைய மக்கள் பதின்மரைக் (தசபாதிகர்) கொன்று தானே உரோகண நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதையும் கூறாமல் அடியோடு மறைத்துவிட்டது. ஆனால், மகாவம்சம் மறைத்துவிட்ட வரலாற்றைத் தாதுவம்சம் என்னும் நூல் கூறுகிறது.
மகாநாகனுக்கு அட்டாலய திஸ்ஸன் என்னும் ஒரு மகன் பிறந்தான் என்று கூறினோம். மகாநாகனுக்கு உரோகண நாட்டரசனான காமணி திஸ்ஸன் அபயங்கொடுத்து ஆதரித்து அவனுக்கு ஜாவகநாயகன் என்னும் சிறப்புப்பெயர் அளித்துக் காப்பாற்றினான். பிறகு மகாநாகனுக்கு இன்னொரு மகன் பிறந்தான். அவனுக்குக் கோதாபயன் என்றும், அய்யஅபயன் என்றும், அபயன் என்றும் பெயர் உண்டு. தனக்குப் புகலிடங்கொடுத்துக் காப்பாற்றிய காமணி அபயன் (மச்சராசன்) காலமான பிறகு, மகாநாகன் உரோகணநாட்டு ஆட்சியைத் தானே கவர்ந்துகொண்டான். காமணி அபயனுக்குப் பத்துக் குமாரர்கள் இருந்தார்கள் என்றும் அவர்களுக்குத் தசபாதிகர் (பத்துச் சகோதரர்கள்) என்பது பெயர் என்றும் கூறினோம். காமணி அபயனுக்குப் பிறகு அவர்களே உரோகணநாட்டு ஆட்சிக்கு உரியவர்கள். ஆட்சியை அவர்களிடம் கொடுக்காமல் மகாநாகன் உரோகணநாட்டு ஆட்சியைத் தானே கைப்பற்றிக் கொண்டான். பிறகு மகாநாகனுடைய இளைய மகனான கோதாபயன் (அபயன்) தசபாதிகரைக் கொன்று உரோகண நாட்டைத் தானே கைப்பற்றிக் கொண்டான். கைப்பற்றிக் கொண்டபிறகு, கோதாபயன் தான்செய்த மகாபாதகத்தைக் கழுவுவதற்காகப் பல பௌத்த விகாரைகளைக் கட்டினான் என்று தாதுவம்சம் என்னும் நூல் கூறுகிறது.9 உரோகண நாட்டை அரசாண்ட பழைய பாண்டியர் ஆட்சி இவ்வாறு அழிக்கப்பட்டது. அவர்களுடைய கால்வழியைப் பின்னர் விளக்குவோம்.
மகாநாகனும் அவனுடைய மகனும் உரோகண நாட்டைத் துரோகமாகக் கைப்பற்றி அரசாண்டபோது இராஜராட்டிரத்தைத் (அநுராதபுரம் இராச்சியத்தை) தேவனாம்பிரிய திஸ்ஸன் அரசாண்டான். அவன் கி.மு.247முதல் 207 வரையில் நாற்பது ஆண்டுகள் அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய இரண்டாவது தம்பியான உத்தியன் கி.மு. 207 முதல் 197 வரையில் பத்து ஆண்டுகள் அரசாண்டான். அவனுக்குப்பிறகு அனுடைய தம்பியான மகாசிவன் கி.மு. 197 முதல் 187 வரையில் பத்து ஆண்டுகள் அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான சுவண்ணபிண்ட திஸ்ஸன் அரசனானான். அவன் முடிசூடிய பிறகு சூரதிஸ்ஸன் என்று பெயர்பெற்றான். அவன் கி.மு. 187 முதல் 177 வரையில் பத்து ஆண்டுகள் அரசாண்டான். இவர்களுடைய ஆட்சிக்காலத்தில் பௌத்தமதம் இலங்கையில் பரவிற்று.
அநுரையில் தமிழர் ஆட்சி
சூரதிஸ்ஸன் அநுராதபுரத்தில் இருந்து இராஜராட்டிரத்தை அரசாண்டுகொண்டிருந்தபோது, கி.மு. 177 இல் இரண்டு தமிழர்கள் சூரதிஸ்ஸனை வென்று அரசாட்சியைக் கைப்பற்றி இருபத்திரண்டு ஆண்டுகள் இலங்கையை அரசாண்டார்கள். இவர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் ஒன்றுமே கூறவில்லை. ஆனால், இலங்கை நூல்களான தீபவம்சம், மகாவம்சம், தூபவம்சம், பூஜாவளி, இராஜாவளி ஆகிய நூல்கள் இந்தத் தமிழர் இலங்கையை அரசாண்டதைக் கூறுகின்றன. இவர்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் எந்த நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்கள் என்பது தெரியவில்லை.
தமிழராகிய சேன்னுஓம் குட்டகனும் கப்பல் வாணிகர் என்றும், இவர்கள் இலங்கையில் குதிரைகளைக் கொண்டுவந்து குதிரை வாணிகஞ் செய்தார்கள் என்றும் (அஸ்ஸநாவிகர் - அஸ்வநாவிகர்), இவர்கள் சூரதிஸ்ஸ அரசனைவென்று இருவரும் இலங்கையை இருபத்திரண்டு ஆண்டுகள் நீதியாகச் செங்கோல் செலுத்தினார்கள் என்றும் கூறப்படுகின்றது (மகாவம்சம் 21: 10-11; துபவம்சம் 18: 47). தமிழ்நாட்டில் குதிரைகள் உற்பத்தியாகவில்லை. ஆனால், அரசர்கள் குதிரைப்படை வைத்திருந்தபடியால், அவர்களுக்குக் குதிரைகள் தேவைப்பட்டன. குதிரைகள் அரேபியா, பாரசீகம் முதலான அயல்நாடுகளிலிருந்து தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டன. இறக்குமதியான குதிரைகளைத் தமிழ் வாணிகர் இலங்கைக்குக் கொண்டுபோய் விற்றார்கள்.
சங்ககாலத்தில் சோழ நாட்டை அரசாண்ட இரண்டாம் கரிகாலனைப் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் வந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதைக் கூறுகிறார்.
‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவி’49 தொண்டைநாட்டின் துறைமுகப்பட்டினமாகிய எயிற்பட்டினத்திலும் குதிரைகள் கப்பலில் கொண்டுவரப்பட்டு இறக்குமதியாயின என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பாணாற்றுப்படையில், ‘வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம், நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை’50 எனக் கூறுகிறார்.
வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக வந்து இறக்குமதியான குதிரைகளைத் தமிழக குதிரை வாணிகர் தமிழ்நாட்டில் விற்றதுபோக எஞ்சிய குதிரைகளை இலங்கைக்குக் கொண்டுபோய் விற்றார்கள். அவர்கள் மகாவம்சம், தீபவம்சம் போன்ற இலங்கை நூல்களில் 'அஸ்ஸநாவிகர்' (அசுவநாவிகர், அசுவம் - குதிரை, நாவிதர் - நாவாய்க் கப்பல்களை வைத்து வாணிகம்செய்பவர்) என்று கூறப்பட்டனர். இலங்கையரசைக் கைப்பற்றின சேனனும், குட்டகனும் அசுவநாவிகனின் (குதிரை வாணிகனின்) மக்கள் என்று மகாவம்சமும் தீபவம்சமும் கூறுகின்றது.
அந்தக் காலத்தில், வாணிகர் தங்களுக்குப் பாதுகாப்பாக வில்வீரர்களை வைத்திருந்தார்கள். தமிழ்நாடு வாணிகர் மட்டுமல்லர், வேற்றுநாட்டு வாணிகரும் வீரர்களைத் தங்களுக்குப் பாதுகாப்பாக அக்காலத்தில் வைத்திருந்தார்கள். இலங்கையில் குதிரை வாணிகஞ்செய்த சேனனும் குட்டகனும் வீரர்படையை வைத்திருந்தபடியால் அவர்கள் இலங்கை அரசனான சூதிரஸ்ஸனைப் போரில்வென்று அரசாட்சியைக் கைப்பற்றினார்கள்.51
மகாவம்சம் குட்டகன் என்று கூறுகிற பெயரைத் தீபவம்சம் குட்டபரிந்தன் என்று கூறுகிறது. சேனனும் குட்டகனும் இலங்கையை நீதியாக அரசாண்டார்கள் என்று மகாவம்சம் கூறுவது போலவே தீபவம்சமும் கூறுகிறது.52 தன்னுடைய ஆட்சிக்காலத்தில் குட்டபரிந்தன் (குட்டகன்) பௌத்தமத விகாரைகளுக்குத் தானஞ்செய்தான். அவன் தானஞ்செய்ததைக் கூறுகிற கல்வெட்டெழுத்துச் சாசனம் அண்மைக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.52 சேனகுட்ட பரிந்தகர்களைப் பற்றி வேறுஒன்றும் தெரியவில்லை. இவர்கள் கி.மு. 177 முதல் 155 வரையில் இலங்கையை அரசாண்டார்கள்.
கி.மு. 155 இல் சிங்கள அரசர் பரம்பரையில் வந்த அசேலன் என்பவன் இவர்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றிப் பத்து ஆண்டுகள் அரசாண்டான்.
ஏலாரன் (ஏலேலசிங்கன்)
இலங்கையில் மீண்டும் தமிழர் ஆட்சி அமைந்தது. உயர் குலத்தைச் சேர்ந்தவனும் சோழநாட்டுத் தமிழனுமான ஏலாரன் என்பவன் அசேலனை வென்று இலங்கையை நாற்பத்துநான்கு ஆண்டுகள் அரசாண்டான் என்று மகாவம்சம் கூறுகிறது. இவன் கி.மு. 145 முதல் 101 வரையில் அரசாண்டான். இவனைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் ஒன்றும் காணப்படவில்லை. ஏலாரனை ஏலேல சிங்கன் என்றும் கூறுவர். ஏலேலசிங்கன், திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைத் தன்னுடைய குருவாகக் கொண்டிருந்தான் என்று ஒரு செவிவழிச்செய்தி உண்டு.
தமிழனாகிய ஏலாரன் சைவசமயத்தவனாக இருந்தும், பௌத்த நாடாகிய இலங்கையை மதக்காழ்ப்பு இல்லாமல் நீதியாக அரசாண்டான் என்றும், பகைவர் நண்பர் என்று கருதாமல் எல்லோரையும் சமமாகக்கருதிச் செங்கோல் செலுத்தினான் என்றும் மகாவம்சம் கூறுகிறது; இவனுடைய நேர்மையும் நீதியுமான ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்துபேசுகிறது. இவ்வரசன் தன்னுடைய படுக்கைஅறையில் ஆராய்ச்சிமணியொன்றைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான். அந்த மணியை அடிப்பதற்கு வாய்ப்பாக நீண்டகயிற்றை அரண்மனைவாயிலில் கட்டிவைத்தான். முறையிடுவோரும் நீதிவேண்டுவோரும் அரண்மனைவாயிலில் உள்ள கயிற்றை இழுத்து மணியடித்தால் அரசன்நேரில் வந்து அவர்களுடைய முறையீடுகளைக் கேட்டு நீதி வழங்குவான் (மகாவம்சம்21:15).
ஏலார மன்னனுக்கு ஒரே மகன் இருந்தான். அந்த அரசகுமரன் ஒரு நாள் திஸ்ஸவாவி என்னும் ஏரிக்குச் சென்றான். செல்லும் வழியில் ஒரு பசுவின்கன்று துள்ளி ஓடிவந்து அரசகுமரனுடைய தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டு மாண்டுபோயிற்று. அதைக் கண்ட தாய்ப்பசு தீராத துயரமடைந்து, அரண்மனைக்கு வந்து கயிற்றை இழுத்து ஆராய்ச்சி மணியை அடித்தது. அரசன்வெளியே வந்து பசுவின் துயரத்தையறிந்து, அதன் கன்று சாவதற்குக் காரணமாக இருந்த தன்னுடைய ஒரே மகனைத் தேர்ச்சக்கரத்தில் மடியும்படிசெய்தான் (மகாவம்சம் 21: 15 - 18). இது திருவாரூரை அரசாண்ட மனுநீதிச்சோழன் வரலாறுபோல இருக்கிறது.
பனைமரத்தின் மேலே கூட்டுக்குள் இருந்த ஒரு குருவிக் குஞ்சை ஒரு பாம்பு பனைமரத்தின்மேல் ஏறி விழுங்கிவிட்டது. அதனைக்கண்ட தாய்க்குருவி அரண்மனைக்கு வந்து ஆராய்ச்சி மணியை அடித்தது. அரசன் வந்து செய்தியறிந்து அந்தப் பாம்பைப் பிடித்துவரச் செய்து, அதன் வயிற்றைக் கீறிக் குஞ்சை வெளியில் எடுத்துவிட்டு, பாம்பை அந்த மரத்தில் தூக்கிக் கட்டித் தண்டித்தான் என்று இன்னொரு கதையை மகாவம்சம் கூறுகிறது (மகாவம்சம் 21 :எ 19-20).
ஏலார மன்னன், புத்த சங்கத்தாராகிய பௌத்தப் பிக்குகளை உணவுகொள்ள அழைப்பதற்காக அவர்கள் இருந்த சேதியமலைக்குச் சென்றான். செல்லும் வழியில் ஒரு பௌத்தத் தூபிக் கட்டடத்தில் அவனுடைய தேரின்அச்சுப்பட்டுச் சில கற்கள் விழுந்தன. அருகிலிருந்த அமைச்சன் கட்டடத்திலிருந்து கற்கள் விழுந்துவிட்டதைத் தெரிவித்தான். அரசன், தேரிலிருந்து இறங்கித் தேர்ச்சக்கரத்தின் அருகே படுத்துக்கொண்டு தன்மேல் தேரைச் செலுத்திக் கொல்லும்படி கூறினான். அமைச்சன், ‘எங்கள் புத்தர் பெருமான் ஒருவருக்கும் தீமை செய்வதைச் சம்மதிக்கமாட்டார். சிதைந்துபோன தூபியைப் பழுது தீர்ப்பதுதான் முறை’ என்று கூறினான். அரசன் அவ்வாறே பழுதுதீர்த்தான். விழுந்துபோன பதினைந்து செங்கற்களுக்கு ஈடாகப் பதினைந்தாயிரம்காப்பணம் (அக்காலத்தில் வழ'கிய ஒரு நாணயம் 9.48 கிராம் எடையுள்ளது) செலவுசெய்து அந்தத் துபியைப் பழுதுதீர்த்தான் (மகாவம்சம் 21 : 21 - 26).
கிழவியொருத்தி வெய்யிலில் உலர வைத்திருந்த அரிசியை மழைபெய்து நனைத்துவிட்டது. அவள் ஆராய்ச்சி மணியை அடித்து முறையிட்டாள். அரசன் பட்டினி நோன்பிருநது தன் குலதெய்வத்திடம் பகலில் மழைபெய்யாமல் இரவில்மழை பெய்விக்கும்படி இந்திரனிடம் கூறும்படி கேட்டுக்கொண்டான். அவ்வாறே பகலில் மழைபெய்து மக்களுக்கு இடுக்கண் நேராமல் இரவில்மழைபெய்துகொண்டிருந்தது என்று இன்னொரு கதையை மகாவம்சம் கூறுகிறது (மகாவம்சம் 21:27-33).
இந்தக் கதைகள் எல்லாம் இவ்வரசன் நீதியாகவும் நேர்மையாகவும் குடிமக்களின் நன்மையைக் கருதி அரசாண்டான் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன. இந்தக் கதைகளை இலங்கை வரலாற்றைக் கூறுகிற மகாவம்சம் சொல்லுகிறது.
ஏலார மன்னனுடைய இலங்கை இராச்சியம் கிழக்கு, மேற்கு, வடக்குத் திசைகளில் கடலையும், தெற்குத் திசையில் மாவலி கங்கைஎன்னும் ஆற்றையும் எல்லையாகக் கொண்டிருந்தது. இந்த ஆறு இலங்கையில் உள்ள ஆறுகளில் பெரியது.
ஏலார மன்னன் தெற்கு எல்லையில் பல கோட்டைகளை அமைத்து ஆங்காங்கே சேனைகளையும் சேனைத் தலைவர்களையும் நிறுத்தியிருந்தான். ஏலாரனுடைய இராச்சியத்தின் தென்கிழக்கில் உரோகண நாடு இருந்தது. ஏலேல அரசன் காலத்தில் உரோகண நாட்டை அரசாண்டவன் காகவன்னதிஸ்ஸன் என்பவன். அவன் உரோகண நாட்டை அரசாண்ட பழைய (பாண்டியர் குலத்தைச் சேர்ந்த) அரசர்களைக்கொன்று அநீதியாக நாட்டைக் கைப்பற்றிக்கொண்ட உபராச மகாநாகனுடைய பேரன். காகவன்ன திஸ்ஸனுக்குத் திஸ்ஸ அபயன் என்னும் பெயர் உண்டு. அவனுடைய மனைவியின் பெயர் விகாரமகாதேவி. அவர்களுடைய மூத்தமகன் பெயர் கமுனு என்பது. இந்தக் கமுனு, ஏலேல மன்னன்மேல் போர்செய்து இலங்கை இராச்சியத்தைக் கைப்பற்றும்படி தன் தந்தையான காகவன்ன திஸ்ஸனுக்கு அடிக்கடி கூறினான். அவன் அதற்கு இணங்கவில்லை. நீதியாகவும் நேர்மையாகவும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஏலேல அரசனைக் குடிமக்கள் பக்தியோடு நேசித்தார்கள். மேலும், ஏலேலன் தன்னுடைய இராச்சியத்தில் ஆங்காங்கே பலமான சேனைகளை நிறுத்தியிருந்தான். ஆகையால், அவனை வெல்லமுடியாது என்று காகவன்ன திஸ்ஸன் அவன்மேல் போருக்குப்போக விரும்பவில்லை. ஆகவே, கமுனு தன் தந்தைமேல் சினங்கொண்டு ‘என் தந்தை ஆண் மகன் அல்லன், பெண் மகள்’ என்று கூறி, அவனுக்குக் கைவளைகளையும் பெண்களுக்குரிய ஆடையணிகளையும் அனுப்பினான். அதனால், அவன் துட்டகமுனு (துஷ்ட கமுனு) என்று பெயர் பெற்றான். காகவன்ன திஸ்ஸன் காலஞ்சென்றபிறகு அவன் மகனான துட்டகமுனு ஏலேல மன்னன்மேல் போர்செய்ய வந்தான்.
உரோகண நாட்டில் சிங்கள அரசர்
இங்குத் துட்டகமுனுவுடைய பரம்பரையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பி மகாநாகன் தன்னுடைய உயிருக்கு அஞ்சித் தன்னுடைய குடும்பத்தோடு உரோகண நாட்டுக்குச்சென்று அங்கு அரசாண்டிருந்த பாண்டிய குலத்து அரசனான காமணி அபயனிடம் அடைக்கலம் புகுந்ததையும், காமணி அபயன் அவனுக்குப் புகலிடங்கொடுத்து ஆதரித்ததையும், காமணி அபயன் காலமானபிறகு மகாநாகன் உரோகண நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதையும், மகாநாகனுடைய இளைய மகனான கோதாபயன் உரோகண நாட்டு அரசகுமாரர்கள் (காமணி அபயனுடைய மக்கள்) பதின்மரையும் கொன்று உரோகண நாட்டையே கைப்பற்றிக் கொண்டதையும் முன்னமே அறிந்தோம். பத்து இராச குமாரர்களைக் கொன்று உரோகண நாட்டு ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்ட கோதாபயன், தன்னுடைய மகனான காகவன்ன திஸ்ஸனுக்கு உரோகண நாட்டுப் பாண்டியர் பரம்பரையில் வந்த சவெர என்பளைத் திருமணம் செய்துவைத்து உரோகண நாடு தன்னுடைய பரம்பரைக்கே சேரும்படி செய்துகொண்டான். காகவன்ன திஸ்ஸன் கலியாணி நாட்டு (இலங்கையின் மேற்குப் பக்கத்தில் கொழும்புப் பிரதேத்தைச் சேர்ந்த நாடு) அரசன் மகளான விகாரமகாதேவி என்பவளையும் திருமணஞ்செய்திருந்தான். காகவன்ன திஸ்ஸனுக்கும் விகாரமகாதேவிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவன்தான் ஏலேல சிங்கன்மேல் போர்செய்ய வந்த துட்டமகமுனு, அவனுடைய கால்வழியை அடுத்த பக்கத்தில் தருகிறோம்.
காகவன்ன திஸ்ஸன் இறந்தபிறகு துட்டகமுனு ஏலேல அரசன்மேல் போர்செய்யப் பெருஞ்சேனைனையத் திரட்டினான். அவனுடைய தாயான விகாரமகாதேவியும் ஏலேல மன்னன்மேல் போர் செய்யும்படி மகனைத் தூண்டி ஊக்கப்படுத்தினாள். என்னதான் தங்களுக்குச்சேனைப் பலம் இருந்தாலும், குடிமக்கள் ஏலேல அரசனைத் தெய்வம்போலக் கருதியிருந்தபடியால் அவனை நேர்மையாகவும் வீரமாகவும் வெல்ல முடியாது என்று அறிந்து அவர்கள் (விகாரமகாதேவியும் துட்டகமுனுவும்) யோசித்துச் சூழ்ச்சியினால் போரில் வெல்லத் திட்டமிட்டார்கள். திட்டமிட்டபடியே துட்டகமுனு பெரிய சேனையோடு மாவலி கங்கையைக்கடந்து ஏலேல மன்னன்மேல் போர் செய்ய வந்தான். தன்னுடைய சேனையோடு ஐந்நூறு பௌத்தப் பிக்குகளின் சேனையையும் அழைத்துக்கொண்டு வந்தான். ஐந்நூறு பௌத்தப்பிக்குகள் போர்செய்வதற்காக அல்லர்; ஐந்தாம்படை வேலை செய்வதற்காக, குடிமக்களிடத்தில்போய் அவர்களுக்கு மதவெறியையூட்டி ஏலேல மன்னனுக்கு எதிராக அவர்களைக் கிளப்பிவிடுவது அவர்கள் வேலையாக இருந்தது. சேனைகளோடு பிக்குகளை ஐந்தாம்படை வேலைசெய்ய அழைத்துக் கொண்டதுமல்லாமல், துட்டகமுனு தன்னுடைய தாயாகிய விகாரமகா தேவியையும் போர்க்களத்துக்கு அழைத்து வந்தான்.
போரில் வெல்லமுடியாமல் இருந்த இடங்களில் துட்டகமுனு தன்னுடைய தாயாகிய விகாரமகாதேவியைப் பகைவனின் தளபதிக்குக் காட்டி மயக்கி வெற்றிபெற்றான். தளபதிகள் அவளை மணஞ்செய்துகொள்ளும் ஆசையினால், போரைச் சரியாகச் செய்யாமல் நழுவிவிட்டார்கள். அப்போது துட்டகமுனு எதிரிப்படைகளை வென்று வெற்றிபெற்றான். மஹேல நகரத்துக் கோட்டைமேல் போர்செய்த துட்டகமுனு அந்நகரத்தைப் போர்செய்து வெல்லமுடியாதென்று கண்டு, அக்கோட்டைத் தலைவனான மகேலன் என்னும் தமிழ்ச் சேனாதிபதிக்கு விகாரமகாதேவியைக் காட்டிச் சூதாகப்போரை வென்றான் (மகாவம்சம் 25 : 48 - 49). அம்பதித்தகக் கோட்டை மேல் போர் செய்தபோது அக்கோட்டையைத் துட்டகமுனு வெல்ல முடியவில்லை. ஆகையால், அக்கோட்டையிலிருந்த தித்தம்பனுக்கு விகாரமகாதேவியைக் காட்டி ஏய்த்துச் சூதாகப் போர் வென்றான்.
சிங்கள அரச பரம்பரை உரோகண நாட்டுப்
பாண்டியர் பரம்பரை
மஜிமகராஜன்
│
மகாநாகன் காமணி அபயன்
(தேவனாம்பிய திஸ்ஸனின் தம்பி;(மகாநாகனுக்கு
காமணி அபயனிடம்அடைக்கலந் தந்தவன்)
அடைக்கலம் புகுந்தவன்;
காமணி அபயன் காலமான பிறகு
அவனுடைய ஆட்சியைக்
கைப்பற்றிக் கொண்டான்)
┌─────┴─────┐ ┌─────┴─────┐
அட்டாலயகோதாபயன்தர்மராசன்உதிராசன் மற்றும்
திஸ்ஸன்{அய்ய அபயன்)││8 சகோதரர்கள்
││
(காமணி{உரோகண நாட்டு││
திஸ்ஸன்)அரச குமாரர் 10││
பேரைக் கொன்று││
நாட்டைக் கைப்மகா திஸ்ஸன்அநுராதி
பற்றினான்)
│
விகாரமகா⇌காகவன்ன⇌சவெர
தேவிதிஸ்ஸன்
(கலியாணி{திஸ்ஸ
நாட்டுஅபயன்)
அரசன் மகள்}
││
└──────┬─────┘
துட்டகமனு
(கி.மு. 161 -137}
(மகாவம்சம் 25: 8-9). இவ்வாறு விகாரமகாதேவியைக் காட்டியும் பௌத்தப் பிக்குகளின் ஐந்தாம் படைச் செயலினாலும் துட்டகமுனு போர்களை வென்று கடைசியாக காசப்பட என்னும் இடத்துக்கு வந்து பாசறை இறங்கினான். காசப்பட என்னும் இடம் தலைநகரமான அநுராதபுரத்துக்குத் தென்கிழக்கே 29 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஏலேல மன்னனுடைய சேனாதிபதியான தீகஜாந்து என்பவன் தன் சேனையை நடத்திக் கொண்டு போய்த் துட்ட கமுனு மேல் போர் செய்தான். இந்த இடத்திலும் துட்ட கமுனு சூழ்ச்சி செய்து, சூதாகப் போர் செய்தான். துட்டகமுனு தன்னைப் போல் மரத்தினால் ஒரு பிரதிமை செய்து, அந்த பிரதிமையைப் போர்க்களத்தில் தன்னுடைய சேனைக்கு நடுவில் நிறுத்தினான். நிறுத்தி அந்தப் பதுமைக்கு அருகில் கொற்றக்குடையைப் பிடிக்கச்செய்தான். அரசர்கள் போர் செய்யும்போதும் போர்க்களத்தில் கொள்ளக் குடை பிடிப்பது அக்காலத்து வழக்கம். கொற்றக்குடையின் கீழே தன்னுடைய பதுமையை நிற்கச் செய்தான். அதனைத் துட்டகமுனு என்று கருதித் தீகஜநூந்து அங்குச்சென்று அந்த அரசன்மேல் (பதுமையின் மேல்) பாய்ந்து வாளால் வீசினான். வீசின வேகத்தில் பதுமை கீழே விழுந்தபோது தீகஜாந்து அதை வெட்ட ஓங்கினான். அப்போது துட்டகமுனுவின் வீரனான சூரநிமிலன் என்பவன் அவன்மேல் பாய்ந்து அவனைக் கொன்றுவிட்டான் (மகாவம்சம் 25 : 55 - 64) சேனாபதி இறந்துபோகவே தமிழச்சேனை தோற்றுவிட்டது.
தன்னுடைய சேனாதிபதி போர்க்களத்தில் இறந்த செய்தியறிந்து ஏலேல மன்னன் தானே போர்க்களத்துக்குச் சென்று போர்செய்தான். தன்னுடைய பட்டத்து யானையாகிய மகா பப்பதம் (மகாபர்வதம்) என்னும் யானைமேல் அமர்ந்து ஏலேல மன்னன் போர் செய்தான். வயது முதிர்ந்த கிழவனாகிய ஏலேல மன்னனுக்கும் இளைஞனான துட்டகமுனுவுக்கும் அநுராதபுரத்தின் தெற்குவாயிலின் அருகில் குயவர் கிராமத்துக்கு அருகே போர்நடந்தது. ஏலேல மன்னன் போரில் இறந்துபோனான். துட்டகமுனு வெற்றியடைந்தான் (மகாவம்சம் 25: 69 - 70).
ஏலேல மன்னன் இறந்தது அறிந்து குடிமக்கள் துக்கம் அடைந்தனர். தெய்வம்போல் இருந்த மன்னனை அவர்கள் அன்போடு நேசித்தார்கள். போர்க்களத்தில் வீரப்போர் செய்து இறந்த ஏலேல மன்னனுக்குத் துட்டகமுனு கடைசி மரியாதை செய்தான். அரசனுடைய உடம்பை நகர மக்களின் முன்பு கொளுத்தி எஞ்சியிருந்த எலும்புச் சாம்பலின்மேல் ஏலேல மன்னனுக்கு நினைவுச்சின்னமாக ஒரு சேதிமக் கட்டடம் கட்டினான். நான்கு வகையான பெரியவர்களுக்கு நினைவுச்சின்னமாக சேதிமம் அமைக்கவேண்டும் என்று பௌத்தமத நூல்கள் கூறுகின்றன. புத்தர்கள், பிரத்தியேக புத்தர்கள், அர்ஹந்தர்கள், சக்கரவர்த்திகள் ஆகிய நான்கு வகையான பெரியவர்கள் இறந்துபோனால் அவர்களுக்குச் சேதிமங்கள் கட்டவேண்டும் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. அந்த முறைப்படி துட்டகமுனு ஏலேலச் சக்கரவர்த்திக்குச் சேதிமம் கட்டிச் சிறப்புச் செய்தான்.13
‘இன்றும் இந்தச் சேதிமத்தின் அருகிலே இலங்கை அரசர்கள் வரும்போது மரியாதையின் அறிகுறியாக வாத்திய கோஷங்களை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி அமைதியாகவும் வணக்கமாகவும் நடந்து இந்த இடத்தைக்கடந்து போகிறார்கள்’, என்று மகாவம்சம் கூறுகிறது. (மகாவம்சம் 25: 72 - 74).
ஏலேல மன்னனுக்குப் பிறகு மீண்டும் சிங்கள அரசர்கள் இலங்கையை அரசாண்டார்கள். அவர்கள் 58 ஆண்டுகள் அரசாண்டார்கள் துட்டகமுனு (கி.மு. 101 -77), ஸத்த திஸ்ஸன் (கி.மு. 77- 59), தூலத்தனன் (கி.மு. 59), வஞ்சதிஸ்ஸன் (கி.மு. 59-50), கல்லாட நாகன் (கி.மு. 50-43) ஆகியோர் அரசாண்ட பிறகு, வாட்டகாமணி அரசனானான். வாட்டகாமணி காலத்தில் இலங்கையில் மீண்டும் தமிழர் ஆட்சி ஏற்பட்டது.
ஐந்து தமிழர் ஆட்சி
வாட்டகாமணி ஆட்சிக்கு வந்த ஐந்தாம் மாதத்தில் உரோகண நாட்டில் மகாகாமம் என்னும் ஊரில் இருந்த திஸ்ஸன் என்பவன், தனக்கு அரசாளும் ஊழ் இருக்கிறது என்று சோதிடர் சொன்ன வார்த்தையை நம்பிச் சேனையைத் திரட்டிக்கொண்டு வாட்டகாமணிமேல் போருக்கு வந்தான். அதே காலத்தில் ஏழு தமிழச் சேனாதிபதிகள் சேனைகளோடு இலங்கைக்குச் சென்று மகாதிட்டை (மாதோட்டம்) என்னுந் துறைமுகத்தில் இறங்கினார்கள். அவர்கள் கொற்றக் குடையைத் (அரசாட்சியை) தங்களிடம் கொடுக்கும்படி வாட்டகாமணிக்குத் தூதனுப்பினார்கள்.
உரோகண நாட்டிலிருந்து படையெடுத்து வந்த திஸ்ஸனும் ஆட்சியைத் தன்னிடம் கொடுக்கும்படி அரசனுக்குத் தூது அனுப்பினான். வாட்டகாமணி, ‘தமிழர்களை வென்று அரசாட்சியை எடுத்துக்கொள்’ என்று திஸ்ஸனுக்குத் தெரிவித்தான். ஆகவே, திஸ்ஸன் தமிழப்படைமேல் போருக்குவந்து போர்செய்து தோற்றுப்போனான் (மகாவம்சம் 33: 37 - 41).
பிறகு, ஏழு தமிழத் தலைவர்களும் வட்டகாமணியின்மேல் படையெடுத்துச்சென்று அநுராதபுரத்துக்கு வடக்கேயுள்ள கொலம்பாலக் என்னும் ஊரில் பாசறை இறங்கினார்கள். வாட்டகாமணி தன் சேனையுடன் போர்க்களத்துக்கு வந்து அவர்களோடு போர் செய்தான். போரில் தமிழர் வெற்றிபெற்றனர். தோல்வியடைந்த வாட்டகாமணி உரோகண நாட்டுக்கு ஓடிப் போனான்.
போரில் வெற்றிபெற்ற ஏழு தமிழத் தலைவர்களும் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டார்கள். அவர்களுள் ஒருவன் போரில் தோற்று ஓடிப்போன வாட்டகாமணி விட்டுவிட்டுச் சென்ற இளைய இராணியாகிய சோமதேவியை அழைத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்குப் போய்விட்டான். இன்னொரு சேனாதிபதி, பகவான் புத்தரின் பாத்திரம் என்று புனிதமாகப் போற்றி வைத்துக்கொண்டிருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தன் ஊருக்குப் போய்விட்டான். மற்ற ஐந்து சேனாதிபதிகளும் அநுராதபுரத்தில் தங்க ஒருவருக்குப் பின் ஒருவராக இலங்கையை ஆட்சி செய்தார்கள்(மகாவம்சம் 33: 54-55).
இந்தத் தமிழத் தலைவர்கள் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் எனக் கருதப்பெறுகிறார்கள். இவர்களுடைய பெயரைப் பாலி மொழியில் மகாவம்சம் இவ்வாறு கூறுகிறது. தீபவம்சம் இவர்கள் பெயரை அலவத்தன், பிஹியன், பழையமாறன், பலயன், தாட்டிகன் என்று கூறுகிறது. புலஹததன் மூன்று ஆண்டு அரசாண்டான். அவனுக்குச் சேனாதிபதியாக இருந்த பாகியன் அவனைக்கொன்று இரண்டு ஆண்டு அரசாண்டான். பாகியனுடைய சேனாதிபதியான பனையமாறன், பாகியனைக் கொன்று ஏழு ஆண்டு அரசாண்டான். அவனுக்குச் சேனைத்தலைவனாக இருந்தவன் பிலயமாறன். இவன் பனையமாறனைக் கொன்று ஏழு மாதம் அரசாண்டான். பிலயமாறனுடைய சேனாதிபதி தாட்டிகன், பிலயமாறனைக் கொன்றுவிட்டு இரண்டு ஆண்டு அரசான்டான். இவ்வாறு ஐந்து தமிழரும் பதினான்கு ஆண்டு ஏழு திங்கள்கள் (கி.மு. 44-29) அரசாண்டார்கள் (மகாவம்சம் 33 : 56-61; தீபவம்சம் 19: 16; 20 : 15-18).இந்தத் தமிழர்கள் பாண்டிய நாட்டிலிருந்து வந்தவர் என்று கூறினோம். இவர்களில் பிலயமாறன் என்பவன் பழையமாறன் ஆவான். பழையன்மாறன் என்னும் குடிப் பெயருள்ளவர் பாண்டியர்களுக்குச் சேனைத் தலைவராக இருந்தார்கள். அவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள மோகூரில் வாழ்ந்து வந்தனர். மோகூர்ப் பழையன் மாறனைச் சேரன் செங்குட்டுவன் போரில் கொன்றான் என்று சங்கச்செய்யுள் கூறுகிறது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் சேனாதிபதியாக இருந்தவன் இன்னொரு பழையன் மாறன். கிள்ளிவளவன் என்னும் சோழன், பாண்டியன்மேல் போருக்கு வந்தபோது இந்தப் பழையன் மாறன் அவனைப் போரில்வென்றான் என்று நக்கீரர் கூறுகிறார். (அகம். 346 : 18-24). பழையன் மாறன் பரம்பரை, பாண்டியருக்குச் சேனாதிபதிகளாக இருந்ததையறிகிறோம். இலங்கையை அரசாண்ட பழையமாறன் கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்தபடியால் அவன் இந்தப் பழையன் மாறர்களுக்கு முன்னோன் என்பது தெரிகிறது.
மீண்டும் சிங்களவர் ஆட்சி
முன்பு இவர்களுக்குப் போரில்தோற்று ஓடிப்போன வாட்டகாமணி அபயன் பதினான்கு ஆண்டுக்குப் பிறகு சேனையைச் சேர்த்துக்கொண்டு படையெடுத்து வந்து தாட்டிகனைப் போரில்கொன்று மீண்டும் அரசனானான். இவன் கி.மு. 29 முதல் 17 வரையில் பன்னிரண்டு யாண்டு அரசாண்டான் (மகாவம்சம் 33 : 95 -102) அவனுக்குப் பிறகு அவனுடைய தமயன் மகனான மகாசூளிக மகாதிஸ்ஸன் பதினான்கு ஆண்டு (கி.மு. 17-3) அரசாண்டான். இவன் ஆட்சிசெய்த காலத்தில், வாட்டகாமணியின் மகனான மகாநாகன், தான் ஆட்சியைப் பெறுவதற்காகக் கலகஞ்செய்து கொண்டிருந்தான். அதனால், அவன் சோரநாகன் என்று பெயர்பெற்றான். மகாசூளிக மகாதிஸ்ஸன் இறந்தபிறகு மகாநாகன் (சோரநாகன்) முடிசூடிப் பன்னிரண்டு ஆண்டு (கி.மு. 3 முதல் கி.பி. 9 வரையில்) அரசாண்டான். இவன் கலகஞ்செய்து கொண்டிருந்த காலத்தில் தனக்குப் புகலிடம் கொடுக்காமலும் உதவி செய்யாமலும் இருந்த பௌத்தப் பிக்குகளின்மேல் பகைகொண்டு, அரசாட்சிக்கு வந்தபோது அவர்களுடைய விகாரைகளை அழித்தான். பதினெட்டுப் பௌத்த விகாரைகளை இவன் அழித்தான். இவனுடைய அரசியான அநுலாதேவி இவனை நஞ்சிட்டுக் கொன்றாள் (மகாவம்சம் 34:11-14).
சோரநாகனுக்குப் பிறகு, மகாசூளிக மகாதிஸ்ஸனுடைய மகனான திஸ்ஸன் அரசனாகிக் கி.பி. 9 முதல் 12 வரையில் அரசாண்டான். அனுலாதேவி இவனையும் நஞ்சிட்டுக் கொன்று, தானே அரசாட்சியை ஏற்று நடத்தினாள். இவள் ஒருவருக்குப்பின் ஒருவராகப் பலரை மணந்து அவர்களையெல்லாம் நஞ்சிட்டுக் கொன்றுவிட்டாள். இவள் அநுராதபுரத்தில் பெருந்தச்சனாக இருந்த வட்டுகன் என்னும் தமிழன்மேல் விருப்பங்கொண்டு அவனுக்கு அரசாட்சியைக் கொடுத்தாள். அவன் இரண்டு ஆண்டுகள் ஆட்சிசெய்தான். அவனைக் கொன்றபிறகு, அரண்மனையில் பூசைக்காரியங்களைச் செய்துகொண்டிருந்த நிலியன் என்னும் தமிழப் பிராமணனுக்கு ஆட்சியைக் கொடுத்தாள். அவன் ஆறு திங்கள் ஆட்சிசெய்த பிறகு அவனையும் நஞ்சிட்டுக் கொன்றாள். பிறகு தானே நான்கு ஆண்டு (கி.பி. 12-16) அரசாண்டாள்.
குட்டகண்ண திஸ்ஸன் என்பவன், அநுலாதேவியைக் கொன்று இருபத்திரண்டு ஆண்டு (கி.பி. 16-38) அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகனான பாதிகாபயன் முடிசூடி இருபத்தெட்டு ஆண்டு (கி.பி. 38-66) அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாதாட்டிக மகாநாதன் முடிசூடிப் பன்னிரண்டு ஆண்டுகள் (கி.பி. 66-78) ஆட்சி செய்தான். இவனுடைய இராணியின் பெயர் தமிளா தேவி (தமிழத்தேவி). இதனால், இவன் தமிழ அரசன் குமாரத்தியைத் திருமணம் செய்திருந்தான் என்று தெரிகிறது. இந்தத் தமிழத்தேவி சேர, சோழ பாண்டியரில் யாருடைய மகள் என்பது தெரியவில்லை. தமிளாதேவி இளமையும் அழகும் உள்ளவள். அவள் அம்பத்தல என்னுமிடத்தில் இருந்த பௌத்தக் கோயிலுக்குச் சென்றபோது அங்கு அவளைக்கண்ட சித்தன் என்னும் பௌத்தப்பிக்கு அவளுடைய அழகில் ஈடுபட்டு அவளை வியந்தான். சில காலத்துக்குப்பிறகு அவள் இறந்துபோனை அந்தப் பிக்குவிடஞ்சொன்னபோது நம்பவில்லை. இந்தச் செய்தியை, அங்குத்தர நிகயா என்னும் பௌத்தமத நூலின் உரையாகிய மனோரத பூரணி என்னும் நூலிலிருந்து அறிகிறோம். மகாதாட்டிக மகாநாகனுக்கும் தமிளாதேவிக்கும் பிறந்த மகன் ஆமண்டகாமணி.
ஆமண்டகாமணி ஒன்பது ஆண்டு எட்டுத் திங்கள்கள் (கி.பி. 78- 88) அரசாண்டான். அவனுடைய தம்பியாகிய கணிராஜானு திஸ்ஸன், அவனைக்கொன்று மூன்று ஆண்டுகள் (கி.பி. 88-91) அரசாண்டான். அவனுக்குப் பிறகு சூளாபயன் ஓராண்டும் (கி.பி. 91-92), அவனுடைய தங்கையான சீவாலி நான்கு திங்களும் (கி.பி. 92) அரசாண்டனர். சீவாலியின் உறவினனான இளநாகன் அவளை அரச பதவியிலிருந்து இறக்கித் தான் ஆட்சியைக் கைப்பற்றி அரசாண்டான்.
இளநாகன் ஆட்சியைக் கைப்பற்றி அரசாண்டபோது அரச ஊழியத்தில் இருந்த இலம்பகன்னர் என்னும் இனத்தாருக்கும் இவனுக்கும் பகை ஏற்பட்டது. இலம்பகன்னர் பாண்டி நாட்டினர் என்பது தெரிகின்றது. அரச ஊழியத்திலிருந்த இலம்பகன்னர் இளநாகனை அரண்மனையில் சிறைப்படுத்தி ஆட்சியைத் தாமே நடத்தினர். சிறைப்பட்ட இளநாகன் சிறையிலிருந்து தப்பி மகாதிட்டைத் துறைமுகத்துக்குச் சென்று, அங்கிருந்து தமிழ்நாட்டுக்குப் போய்விட்டான். அவன் தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான். தமிழ்நாட்டில் எந்த இடத்தில் தங்கினான் என்பது தெரியவில்லை. இளநாகன், மூன்று ஆண்டுக்குப்பிறகு தமிழச்சேனையைச் சேர்த்துக்கொண்டு கப்பலில் பிரயாணஞ்செய்து இலங்கையின் தென்கிழக்கிலிருந்த உரோகண நாட்டில் வந்து இறங்கினான். பிறகு, அங்கிருந்து அநுராதபுரத்துக்கு வந்து இலம்பகன்னர் மேல் போர்செய்து அவர்களை வென்று ஆட்சியை மீட்டுக்கொண்டான். இளநாகன் ஆறு ஆண்டுகள் (கி.பி. 95-101) அரசாண்டான் (மகாவம்சம் 35: 15-45). இளநாகனுடைய மகன் சந்தமுக சிவன் (சந்திரமுக சிவன்)என்பவன். இளநாகன், சந்தமுக சிவனுக்குத் தமிழ்நாட்டு அரசன் மகளைத் திருமணஞ்செய்திருந்தான். இந்தத் திருமணம், இளநாகன் தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலத்தில் நடந்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது.
சந்தமுக சிவன் இலங்கையை எட்டு ஆண்டு எட்டுத்திங்கள்கள் (கி.பி. 101-110) அரசாண்டான். இவனுடைய இராணியின் பெயர் தமிளாதேவி (தமிழத்தேவி). சந்தமுக சிவன் மணிகாரகாமகம் என்னும் ஊரில் ஓர் ஏரியை அமைத்து, அந்த ஏரியை இஸ்ஸர பௌத்த விகாரைக்குத் தானமாகக் கொடுத்தான். அதாவது, அந்த விகாரையிலிருந்த பௌத்தப் பிக்குகளின் உணவுக்காகப் பயிர் செய்யப்படும் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச அந்த ஏரியைத் தானஞ்செய்தான். இவனுடைய இராணியாகிய தமிழத்தேவியும், மணிகாரகாமகத்திலிருந்து தனக்குக் கிடைத்த இறைப் பணத்தைப் பௌத்தப் பிக்குகளுக்குத் தானஞ்செய்தாள் (மகாவம்சம் 35: 45- 48).
சந்தமுக சிவனடைய தம்பியான அசலாலக திஸ்ஸன், சந்தமுக சிவனைக்கொன்று அரசாட்சியைக் கைப்பற்றி ஏழு ஆண்டு எட்டுத் திங்கள்கள் (கி.பி. 110-118) அரசாண்டான். அசலாலக திஸ்ஸனும் அவனுடைய அரண்மனைக் காவலனான சுபன் என்பவனும் உருவத்தில் ஒரேவிதமாகக் காணப்பட்டனர். இவர்களைக் கண்டவர் இவர்களில் யார் அரசன், யார் காவற்காரன் என்பதை அறிய முடியாமலிருந்தனர். சில சமயங்களில் அசலாலக திஸ்ஸன், காவற்காரனாகிய சுபனை அரசவேடத்தில் சிம்மாசனத்தில் வைத்துத் தான் காவற்காரன் உடையில் வாயிலில் நிற்பான். அமைச்சர் முதலானவர் வந்து சிம்மாசனத்தில் இருக்கும் காவற்காரனை உண்மையரசன் என்று கருதி அவனை வணங்குவார்கள். அதனைக் கண்டு காவற்காரனாக நிற்கும் உண்மையரசன் நகைப்பான். இவ்வாறு பலமுறை நிகழ்ந்தது. ஒரு நாள் இவ்வாறு நிகழ்ந்தபோது, சிம்மாசனத்தில் இருந்த காவற்காரனாகிய சுபன், காவற்காரன் உடையில் இருந்த அசலாலக திஸ்ஸனைச் சுட்டிக்காட்டி, ‘இவன் ஏன் மரியாதையில்லாமல் நகைக்கிறான்? இவனைக் கொண்டு போய்த் தலையை வெட்டுங்கள்’ என்று தன்னுடைய வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அதன்படியே அவன் கொல்லப்பட்டுக் காவற்காரனாகிய சுபன் அரசாட்சிசெய்தான். அரசாட்சிக்கு வந்தபோது சுபன், சுபராசன் என்று பெயர்பெற்றான். சுபராசன் இலங்கையை ஆறு ஆண்டுகள் (கி.பி. 118-124) அரசாண்டான்.
இலம்பகன்னர் ஆட்சி
சுபராசன் ஆட்சிக் காலத்தில் நிமித்திக வதந்தியொன்று நாடெங்கும் பரவிற்று. 'வசபன் என்னும் பெயருள்ளவன் ஒருவன், சுபராசனை வென்று அரசாளப் போகிறான்' என்பது அந்தவதந்தி.14 இந்த நிமித்திக வதந்தியைக் கேட்ட சுபராசன், நாட்டில் உள்ள வசபன் என்னும் பெயருள்ளவர்களையெல்லாம் கொன்றுவிடும்படி கட்டளையிட்டான். அவ்வாறே வசபன் என்னும் பெயர்கொண்டவர் கொல்லப்பட்டார்கள். சுபராசனுடைய சேனையிலே வசபன் என்னும் பெயருள்ள போர் வீரன் ஒருவன் இருந்தான். அவன், தன்னையும் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சி அநுரையிலிருந்து தப்பிஓடி மலையநாட்டுக்குச் சென்றான். சென்றவன் அங்கே ஒரு சேனையைத் திரட்டிக்கொண்டு அநுராதபுரத்தின்மேல் படையெடுத்துவந்து போர் செய்தான். சுபராசன் போரில் தோற்றான். வசபன் அரசாட்சியைக் கைப்பற்றி இலங்கையை நாற்பத்து நான்கு ஆண்டுகள் (கி.பி. 124-168) அரசாண்டான் (மகாவம்சம் 35 : 51- 100). வசபன், இலம்பகன்னர் இனத்தைச் சேர்ந்தவன். இலம்பகன்னர் பாண்டி நாட்டுத் தமிழ இனத்தைச் சேர்ந்தவர் என்றும், பாண்டி நாட்டிலிருந்து வட இலங்கையில் குடியேறி அரச ஊழியம் செய்தவர் என்றும் தெரிகின்றது. வசபன், இலம்பகன்னர் ஆடசியைத் தொடங்கிய முதல் அரசன். இலம்பகன்னர் என்பதன் பொருள் நீள்செவியர் என்பது. அந்த இனத்தார் காதுகளைத் தொங்கும்படி நீட்டி வளர்த்தபடியால் இலம்பகன்னர் என்று பெயர்பெற்றனர். (லம்ப - நீளம், கன்னர் - கர்ணர், செவியையுடையவர்.) தமிழர்களில் சில இனத்தவர் காதுகளை நீளமாகத் தொங்கும்படி வளர்த்தனர். இலம்பகன்ன இனத்தவனாகிய வசபனுக்குப் பிறகு அவனுடைய மகனான வங்கநாசிக திஸ்ஸன் இலங்கையை அரசாண்டான்.
வங்கநாசிக திஸ்ஸன் சுபராசனுடைய மகளான மகாமத்தா என்பவளைத் திருமணஞ் செய்திருந்தான். அவன் இலங்கையை மூன்று ஆண்டு (கி.பி. 168-71) அரசாண்டான். (இவன் காலத்தில், சோழநாட்டை அரசாண்ட சோழன் கரிகால்வளவன், இலங்கைமேல் படையெடுத்துச் சென்று பன்னிரண்டாயிரம் சிங்களவரைச் சிறைப் படுத்திக் கொண்டுபோய்க் காவிரிக்குக் கரைகட்டினான் என்று சிலர் கருதுகிறார்கள். இது உண்மையென்று தோன்றவில்லை. இலங்கையின் பழைய நூல்களான மகாவம்சமும் தீபவம்சமும் இச்செய்தியைக் கூறவில்லை. கரிகால் வளவன்மேல் பாடப்பட்ட பட்டினப்பாலையும் பொருநராற்றுப்படையும் இதுபற்றி ஒன்றும் கூறவில்லை. பிற்காலத்தவையான சிங்க நூல்களும் தமிழ் நூல்களுந்தாம் இதனைக் கூறுகின்றன. எனவே, கரிகாலன் இலங்கைமேல் போர்செய்தான் என்பதும், கஜபாகு அரசன் சோழநாட்டின்மேல் படையெடுத்து வந்தான் என்பதும் வரலாற்று நிகழ்ச்சிகள் என்று கருதுவதற்கில்லை). இந்தக் காலத்தில் இலங்கையின் வடக்கிலிருந்த நாகநாட்டை (இப்போதைய யாழ்ப்பாண நாடு) வளைவணன் என்னும் நாகராசன் அரசாண்டான். நாகர் திராவிட இனத்தவர். வளைவணனுடைய அரசியின் பெயர் வாசமயிலை. இவர்களின் மகள் பீலிவளை. பீலிவளை நாகநாட்டிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்தைச் சார்ந்த நெய்தலங்கானலில் வந்திருந்தபோது, சோழநாட்டு நெடுமுடிக்கிள்ளி அவளைக்கண்டு காதல்கொண்டான். அவர்கள் சிலகாலம் வாழ்ந்த பிறகு பீலிவளை நாகநாட்டிற்குச் சென்றுவிட்டாள். நாகநாட்டில் அவளுக்குப் பிறந்த குழந்தையை அவள் மணிபல்லவத் (சம்புகொலப்பட்டினம்) துறைமுகத்தில் வந்த கம்பளச்செட்டி என்னும் கப்பல் வாணிகனிடம் கொடுத்து, அச்சிறுவனைச் சோழனிடம் சேர்ப்பிக்கும்படி அனுப்பினாள். ஆனால், வழியில் அந்தச் சிறுவன் கடலில்முழுகி இறந்துபோனான் (மணிமே. 24: 27-60; 25:178-196).
கஜபாகு 1
வங்கநாசிக திஸ்ஸனுக்கும் மகாமத்தாவுக்கும பிறந்த மகன் பேர்பெற்ற கஜபாகு அரசன். கஜபாகுவைக் கநுபாகு காமணி என்றும், கஜ்ஜபாகுக காமணி என்றும், கயவாகு என்றும் கூறுவர். சிலப்பதிகாரம் கயவாகு என்று கூறகிறது. கஜபாகு காமணி இருபத்திரண்டு ஆண்டுகள் (கி.பி. 171-193) அரசாண்டான்.15 கஜபாகுவின் காலத்தில் சேர நாட்டையரசாண்ட சேரன் செங்குட்டுவன் பத்தினித் தேவிக்கு வஞ்சிமா நகரத்தில் பத்தினிக்கோட்டம் அமைத்துச் சிறப்புச்செய்தான். அந்த விழாவுக்கு வந்து சிறப்புச் செய்த மன்னர்களுள் கஜபாகுவும் ஒருவன். கஜநபாகு வேந்தன் இலங்கையில் பத்தினித் தெய்யோ (பத்தினித் தெய்வ) வழிபாட்டை உண்டாக்கினான். கஜபாகு வேந்தன் வஞ்சிமா நகரத்துக்கு வந்திருந்தபோது பத்தினித் தேவியைத் தன்னுடைய நாட்டிலும் வந்தருள வேண்டுமென்று வரங்கேட்டதும், அத்தெய்வம் வரந்தந்ததும், பிறகு அவன் பத்தினி வழிபாட்டை இலங்கையில் உண்டாக்கியதும் ஆகியவற்றைச் சிலப்பதிகாரக் காப்பியம் கூறுகிறது.
குடகக்கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென்றெழுந்த தொருகுரல் (சிலப். 30: 159-164)
‘தந்தேன் வரம்’ என்று எழுந்த குரலைக் கேட்டு மகிழ்ந்த கஜபாகு, பிறகு தன்னுடைய நாட்டுக்குச்சென்று பத்தினிக்குக் கோட்டம் அமைத்து விழாச் செய்ததைச் சிலப்பதிகார உரைபெறு கட்டுரை இவ்வாறு கூறுகிறது:
ஆடித் திங்க ளகவையி னாங்கோர்
பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப
மழைவீற் றிருந்து வளம்பல பெருகிப்
பிழையா விளையுள் நாடா யிற்று (சிலப். உரைபெறுகட்டுரை 3)
கஜபாகு வேந்தன் இலங்கையில் பத்தினித்தெய்வ வழிபாட்டை ஏற்படுத்தினான் என்று சிலப்பதிகாரம் கூறுவதை இலங்கை நூல்களான மகாவம்சமும் துபவம்சமும் கூறவில்லை. அந்த நூல்கள் இலங்கை அரசர்கள் பௌத்த மதத்துக்குச் செய்த தொண்டுகளையும் சிறப்புகளையும் கூறுவதையே நோக்கமாகக்கொண்டு பௌத்தமதப் பிக்குகளால் எழுதப்பட்ட நூல்கள். ஆகவே, கஜபாகு பௌத்த மதத்துக்குச் செய்த தொண்டுகளை மட்டும்கூறி, பௌத்தமதமல்லாத இந்துமத சார்பான பத்தினி வணக்கத்தைப் பற்றி ஒன்றும் கூறாமல்விட்டன. அந்த நூல்கள் பொதுவான வரலாற்று நூல்கள் அல்ல; பௌத்தமதச் சிறப்புக் கூறுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்கள். பௌத்தமதச் சார்பான அந்த நூல்கள் புறமதச் சார்பான பத்தினி வழிபாட்டைப்பற்றிக் கூறாமல் விட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.
கஜபாகுவுக்குப் பிறகு அவனுடைய மைத்துனனான மஹல்லக நாகன் ஆறு ஆண்டுகள் (கி.பி. 193-199) அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகனான பாதிக திஸ்ஸன் இருபத்து நான்கு ஆண்டுகள் (கி.பி. 199 - 223) அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான கனிட்ட திஸ்ஸன் பதினெட்டு ஆண்டுகள் (கி.பி. 223-241) அரசாண்டான். அவனுக்குப்பிறகு அவனுடைய மகனான குஜ்ஜநாகன் ஓராண்டும், பிறகு அவனுடைய தம்பியான குஞ்சாதன் இரண்டு ஆண்டுகளும் (கி.பி. 241-243) அரசாண்டார்கள்.
ஏறக்குறைய இந்தக் காலத்தில் கடைச் சங்ககாலம் முடிவடைகிறபடியால் இந்த வரலாற்றை இதனோடு நிறுத்துகிறோம்.
சங்ககாலத்து இலங்கையில் தமிழர் வாணிகம்
சங்ககாலத்து இலங்கையில், இலங்கையை அரசாண்ட சிங்கள மன்னர்களைப் பற்றியும் இடையிடையே அரசாண்ட தமிழ் மன்னர் ஆட்சியைப்பற்றியும் மகாவம்சம், தீபவம்சம் என்னும் இலங்கைப் பௌத்த நூல்களின் ஆதாரத்தைக் கொண்டு சுருக்கமாகக் கூறினோம்.
இனி, இலங்கையில் அக்காலத்தில் வாழ்ந்த தமிழரைப் பற்றியும், முக்கியமாக அக்காலத்துத் தமிழர் வாணிகத்தைப் பற்றியும் கூறுசூவாம்.
ஆதிகாலத்திலிருந்தே இலங்கைத் தீவில் திராவிட இனத்தவராகிய நாகரும் இயக்கரும் வாழ்ந்திருந்தனர். தமிழரில் ஓரினத்தவராகிய அவர்கள், சங்க காலத்தில் தமிழ்நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களில் காணப்படுகிற குறிப்புகளிலிருந்து அறிகிறோம். இலங்கையிலிருந்த நாகரும் இயக்கரும தமிழைத்தான் பேசினார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அவர்கள் திராவிட மொழியைச் சேர்ந்த ஏதோ ஒரு மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும். பழங்காலத்திலிருந்தே தமிழர், இலங்கைப் பழங்குடி மக்களான நாகருடனும் இயக்கருடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்ததனால் தமிழ்நாட்டிலிருந்து, தமிழ் வாணிகர் அப்பழங்காலத்திலேயே இலங்கைக்குச் சென்று வாணிகஞ் செய்தார்கள். பிறகு கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த விசயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் தமிழகத்திலிருந்து பாண்டிய நாட்டு மகளிரை மணஞ்செய்து கொண்டதை முன்னமே அறிந்தோம். பாண்டி நாட்டிலிருந்து இலங்கைக்குச்சென்ற எழுநூறு மணமகளிரோடு அவர்களைச் சேர்ந்த பரிவாரங்களும, பதினெட்டு வகையான தமிழத் தொழிலாளர் குடும்பங்கள் ஆயிரமும் இலங்கைக்குப் போனார்கள் என்பதையும் அறிந்தோம். அவர்கள் எல்லோரும் தமிழ்மொழி பேசியவர்கள். அதனால், காலப்போக்கில் தமிழ்மொழியும் வட இந்திய மொழியும் சேர்ந்து புதுவைகையான பழைய சிங்கள மொழி (ஈளுமொழி) தோன்றிற்று. இந்தக் கலப்புத் திருமணத்தின் காரணமாகத் தோன்றிய சந்ததியார் சிங்களவர் அல்லது ஈழவர் என்று பெயர்பெற்றனர். சிங்கள மொழியில் பேரளவிற்குத் தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளதற்கு இதுவே காரணமாகும். தமிழ் சிங்கள உறவு அந்தப் பழங்காலத்தோடு நின்றுவிட்வில்லை. இடையிடையே அவ்வக் காலங்களில் தமிழகத்திலிருந்து சில தலைவர்கள் தமிழ்ச்சேனையை அழைத்துக்கொண்டுபோய் இலங்கையாட்சியைக் கைப்பற்றிச் சில பல காலம் அரசாண்டதையும் வரலாற்றில் கண்டோம். அந்தத் தமிழர் ஆட்சிக் காலத்தில் தமிழ் வீரர்களும் தமிழ்க் குடும்பங்களும் இலங்கையில் தங்கி வாழ்ந்தனர். அவர்களில் சிலர் சிங்களவர்களாக மாறியிருக்கக்கூடும். இதன் காரணமாகவும் தமிழ்ச் சொற்கள் சிங்களமொழியில் கலந்துவிட்டன. இவ்வாறு அரசியல் காரணமாகத் தமிழர் இலங்கையில் குடீயேறினது மட்டுமல்லாமல், வாணிகத்தொடர்பு காரணமாகவும் தமிழ் வாணிகர் இலங்கையில் சென்று தங்கி வாணிகம் செய்தார்கள். அந்த வாணிகக் குழுவினர் அந்தக் காலத்தில் தங்கள் வாணிகப் பொருள்களின் பாதுகாப்புக்காகச் சிறுசேனைகளை வைத்திருந்தார்கள். தமிழ்நாட்டிலேயும் வாணிகச் சாத்துக் குழுவினர் வாணிகப் பொருள்களை வெவ்வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் கொண்டுபோனபோது, இடைவழியில் கொள்ளைக்காரர் வந்து கொள்ளையடிப்பதைத் தடுக்கும பொருட்டு, வில்வீரர்களை அழைத்துச் சென்றதை, சங்க இலக்கியத்தில் பார்க்கிறோம். அதுபோலவே, இலங்கைக்குச சென்று வாணிகஞ்செய்த தமிழர் தங்களுடைய பொருள் பாதுகாப்புக்காக வில்வீரர்களை வைத்திருந்தார்கள்.
சேனன், குட்டகன் என்னும் இரண்டு தமிழ் வாணிகர், சூரதிஸ்ஸன் என்னும் சிங்கள அரசனை வென்று அரசாட்சியைக் கைப்பற்றி இருபத்திரண்டு ஆண்டுகள் (கி.மு. 177-155) அரசாண்டார்கள் என்பதைக் கண்டோம். அந்தப் பழங்காலத்திலே தமிழ் வாணிகர் இலங்கையில்தங்கி வாணிகம் செய்தபோது வணிகச் சாத்தை (வணிகச் சங்கத்தை) நிறுவி வாணிகஞ்செய்ததை அக்காலத்துச் சாசன எழுத்துகளிலிருந்து அறிகிறோம். இலங்கையின் பழைய தலைநகரமான அநுராதபுரத்திலே தமிழ் வாணிகரின் வாணிகச் சங்கக்கட்டடம் இருந்ததைச் சமீபகாலத்தில் இலங்கை அரசாங்கத்துத் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை கண்டுபிடித்தது. அந்தப் பழைய வாணிகச் சங்கக் கட்டடம் பிற்காலத்தில் இடிந்து தகர்ந்து மண்மூடி மறைந்து போயிற்று. அந்தக்கட்டடத்தைச் சார்ந்திருந்த கற்பாறைகளில் எழுதப்பட்டுள்ள அக்காலத்துப் பிராமி எழுத்துக்கள் அக்கட்டடம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தது என்பதைத் தெரிவிக்கின்றன. இலங்கையில் இலுபரத என்னும் ஊரில் வாழ்ந்திருந்த ஸமன என்று பெயர் பெற்றிருந்த தமிழ் வாணிகத் தலைவன் அநுராதபுரத்தில் அந்த வாணிகச் சங்கக் கட்டடத்தைக் கட்டினான் என்று அந்த எழுத்துகள் எகூறுகின்றன. ஈடு என்னும் பழைய சிங்கள மொழியில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ள அந்தக் கல்வெட்டெழுத்தின் வாசகம்
வருமாறு:
இலுபாதஹி தமேட ஸமணெ கரிதெ தமட ககபதிகன பஸதெ
ஸக்ஸ அஸநெ நஸதஸ அஸநெ கஃதிஸஹ அஸனெ
... அஸநெ குபிர ஸுஜதஹு நவிக காரவ்வஹ அஸநே16
இதன் பொருள்:
இலுபாதத்தில் வாழும் ஸமண என்னும் தமிழன் செய்வித்த தமிழக் குடும்பிகளின் மாளிக ஸக என்பவரின் இருக்கை, நஸதரின் இருக்கை, சுஃதிஸ்ஸரின் இருக்கை... உடைய இருக்கை, குபிர ஸுஜதகரின் இருக்கை, நாவிகராகிய காரவ்வரின் இருக்கை.
குடும்பிகள் என்பது வாணிகரைக் குறிக்கிறது. ஆசனம் (இருக்கை) என்பது அவரவர் அமர்ந்திருந்த இடத்தைக் குறிக்கிறது. நாவிகன் என்பது கப்பல் தலைவன். நாவிகராகிய காரவ்வரின் பெயர் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. அவர் கடல்கடந்த நாடுகளுடன் கப்பலில் வாணிகஞ் செய்தவர். இந்த வாணிகச் சாத்து இலங்கையில் பௌத்த மதம் வருவதற்கு முன்பு அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
இலங்கையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாணிகம் செய்தவரின் பெயர் இன்னொரு கல்வெட்டெழுத்தில் கூறப்படுகிறது. இலங்கையில் வாவுண்ணி மாவட்டத்தில் பெரிய புளியங்குளம் என்னும் இடத்தில் உள்ள ஒரு மலைக்குகையில் இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டு விசாகன் என்னும் தமிழ் வாணிகன் பெயரைக் கூறுகிறது. அதன் வாசகம் இது:
தமெட வயிஜ க(ப)தி விஸகஹ விணே
தமெட வணிஜ கபதி விஸ்கணுஹ ஸேணி மென17
இதன் பொருள்:
தமிழ் வாணிகக் குடும்பிகள் விஸாகனுடைய (செய்வித்த) குகை
தமிழ் வாணிகக் குடும்பிகன் விஸாகன் செய்வித்த படிகள்.
இப்போது பெரிய புளியங்குளம் என்னும் பெயர்பெற்றுள்ள இடத்தில் உள்ள மலைக்குகையில், தமிழ் வாணிகக் குடும்பிகனான விஸாகன் என்பவர் பௌத்த முனிவர்கள் தங்கியிருப்பதற்காக (அக்காலத்தில் (கி.மு. 2ஆம் நூற்றாண்டில்) அமைத்துக்கொடுத்த குகையைப்பற்றி இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்துக் கூறுகிறது.
இன்னொரு கல்வெட்டெழுத்து இலங்கையிலிருந்த தமிழ்வாணிகக் குடும்பத்தைக் கூறுகிறது. அம்பரை மாவட்டத்தில் குடுவில் என்னுமிடத்தில் உள்ள மலைக்குகையில் பழைய சிங்கள் மொழியாகிய ஈளுவில் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டு கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இந்த எழுத்துகளின் இடையே சில எழுத்துகள் காலப்பழமையினால் மறைந்துபோயின. இந்தக் கல்வெட்டெழுத்தில் வாசகம் இது:
திகவபி ப(பொ) ரண வணிஜ ........... ய புதன் பரியய
தமெட திஸய (ணெ)18
இதன் பொருள்:
துகவாபி என்னும் ஊரில் வாழும்....... உடையமக்களாகிய
வாணிகரும் தமிழ திஸ்ஸனுடைய மனைவியும் சேர்ந்து
செய்வித்த குகை.
மேலே கூறப்பட்ட கல்வெட்டெழுத்துகள் பழைய சிங்கள மொழியாகிய ஈளு மொழியில், அக்காலத்தில் வழக்கத்திலிருந்த பிராமி எழுத்தினால் எழுதப்பட்டவை என்று கூறினோம். அந்தக் கல்வெட்டெழுத்துகளில் கூறப்படுகிற தமிழ் வாணிகருடைய பெயர்கள் சிங்களப் பெயர்களாக இருக்கின்றன. இதனால், இவர்கள் சிங்கள நாட்டிலே நெடுங்காலம் தங்கியிருந்தவர்கள் என்பது தெரிகிறது. இவர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலும், இரண்டாம் நூற்றாண்டிலும் இலங்கைக்குச்சென்று வாணிகஞ் செய்தார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் சென்று வாணிகஞ்செய்த அயல்நாட்டிலே அவர்கள் தாங்கள் ஈட்டிய பொருள்களில் ஒரு பகுதியினை அந்நாட்டிலே தருமம் செய்தனர் என்பது இக்கல்வெட்டு எழுத்துகளினால் அறிகின்றோம். அந்தப் பழங்காலத்திலே இலங்கைக்குப்போய் வாணிகஞ்செய்த தமிழர் எல்லோரையும்பற்றித் தெரியவில்லை. அவர்கள் எல்லோரும் கல்வெட்டுச் சாசனம் எழுதிவைக்கவில்லை. ஆனால், பெருந்தொகையான தமிழ் வாணிகர் இலங்கைக்கு வாணிகஞ் செய்யச் சென்றிருநதனர் என்பது தெரிகிறது. அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுபோய் விற்ற பொருள்கள் இன்னின்னவை, இலங்கையிலிருந்து தமிழகத்துக்குக் கொண்டுவந்து விற்ற பொருள்கள் இன்னின்னவை என்பது தெரியவில்லை. அக்காலத்தில் ஈழ நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் காவிரிப் பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் கொண்டுவரப்பட்டு இறக்குமதியாயின என்று அறிகிறோம். 'ஈழத்து உணவும் காழகத்துஆககமும்’ (பட்டினப். 191) என்று பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார்.
ஈழநாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்த பொலாலையன் என்னும் தமிழருடைய பெயர் (கடைச்சங்க காலத்தவர்) ஒரு கல்வெட்டெழுத்தில் காணப்படுகிறது. பாண்டிநாட்டுத் திருப்பரங்குன்றத்து மலைக்குகையொன்றில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டு இதைக் கூறுகிறது.19 இந்தத் தமிழ் வாணிகன் பெயரை ‘எருக்காட்டூர் ஈழக்குடும்பிகன் பொலாலையன்’ என்று கல்வெட்டெழுத்துக் கூறுகிறது. பாண்டிநாட்டில் எருக்காட்டூரில் இருந்தவரும் ஈழத்தில் சென்று வாணிகம் செய்தவருமான பொலாலையன் என்பது இதன் பொருள்.
ஈழநாடாகிய இலங்கையில் சங்ககாலத்திலே தமிழர்சென்று வாழ்ந்திருந்தனர் என்பதை அறிகிறோம். அவர்களில் ஒருவர் பெயர் பூதன்தேவனார் என்பது, ஈழத்தில் வாழ்ந்து வந்தபடியால் அவர் ஈழத்துப் பூதன்தேவனார் என்று கூறப்பட்டார். அவர் கடைச்சங்கப் புலவர்களில் ஒருவர். அவருடைய செய்யுள்கள் சங்கத் தொகைநூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன (அகம்.231: 10-13).
அகநானூற்றுச் செய்யுளில் இவர்,
..........பொருவர்,
செல்சமங்கடந்த செல்லா நல்லிசை
விசும்புஇவர் வெண்குடைப் பசும்பூண் பாண்டியன்
பாடுபெறு சிறப்பிற் கூடல்
என்று பசும்பூண் பாண்டியனைக் குறிப்பிடுகிறார். இந்தப் பசும்பூண் பாண்டியன் கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு கட்டிலில் துஞ்சிய ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு முன்பு இருந்தான். ஆகவே, இவர் கடைச்சங்க காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்) இருந்தவர் எனக் கூறலாம்.
அடிக்குறிப்புகள்
1. மகாவம்சம், 22 ஆம் பரிச்சேதம் 7 –8.
2. மேற்படி 37 : 41
3. மணிமே. 11 : 21 – 22
4. மேற்படி 28 : 107 –108.
5. மகாவம்சம், 11 : 23 – 24.
6. மேற்படி 11 : 33.
7. மகாவம்சம் 19 : 23.
8. மேற்படி 19 : 60.
9. மேற்படி.
10. மேற்படி 25:120 – 127.
11. மேற்படி 25 : 178 – 192
12.
13. மகாவம்சம், 7 : 58.
14. மேற்படி, 25 : 80.
15. மேற்படி 30 : 39.
16. மேற்படி 35 : 15 – 45.
17. மகாவம்சம், 1 : 19 –31
18. மகாவம்சம், 1 : 32
19. மேற்படி 1 : 43.
20. மேற்படி 1 : 44 – 47.
21. மகாவம்சம், 1 : 44 –62
22. மணிமே. 9 : 58 – 63, 10 : 58 – 71
23. மகாவம்சம் 1 : 71 –77
24. மகாவம்சம் 7 : 1 – 5.
25. மகாவம்சம், 7 : 10 –42
26. மேற்படி 7 : 43 – 45.
27. மகாவம்சம் 7 : 45 – 71
28. மேற்படி 7 : 72 – 74.
29. தீபவம்சம் 10 : 2
30. மகாவம்சம், 8 : 10.
31. On the Chronicles of Cylone Bimala Churn Lake, PP. 50 –52.
32. மகாவம்சம், 10 : 84 –88.
33. மேற்படி 10 : 103 –105.
34. மகாவம்சம், 18, 19 : 1 –52.
35. மேற்படி –8.
36. மேற்படி 19:53 –55.
37. மகாவம்சம், 19 : 54.
38. பழங்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள் இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு நாடுகளில் தங்கி அரசாண்டனர். அவர்கள் மீன் இலச்சினையைத் தங்களுக்கு அடையாளச் சின்னமாகக் கொண்டிருந்தார்கள். போவட்டகல கதரகாமத்துக்கு அருகிலுள்ள கொட்டதாமு கல, பட்டிக் குகாலவ மாவட்டத்தில் உள்ள ஹெனன்னெகல, வடமத்திய மாகாணத்தில் கிழக்குத் தமன் கடுவலில் உள்ள கண்டேகமகண்ட ஆகிய இடங்களில் காணப்படுகிற கல்வெட்டெழுத்துகளுடன் காணப்படுகிற மீன் உருவங்கள், அந்தப் பழைய அரசர்கள் ஆதிகாலத்தில் அநுராதபுரத்துச் சிங்கள அரசருக்குக் கட்டுப்படாமல் சுதந்தரமாக இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. அவர்கள் இந்தப் பகுதிகளில் ஆதிகாலத்தில் வந்து குடியேறியவர்களின் சந்ததியாரின் வழிவந்தவர் என்று தெரிகின்றது. (Mendis, Dr. G.C., A comprehensive History of India. Vol. II, P. 575, Edited by K.A. Nilakanta Sastri, 1957. The titles of Sinhalese Kings as recorded in the inscriptions of 3rd Century B.C. to 3rd Century A.D. by C.W. Nicholes, Univer – sity of Ceylon Review, Vol. VII.
39. Inscriptions of Ceylon, Vol. I, Edited by Paranavathana, 1970, Nos. 406, 549 to 558, 561 to 569.
40. lbid, Vol. I, P. 42, No.549.
41. lbid, Vol. I, P. 42, No.550.
42. Ibid, Vol. I, P. 43, No.556.
43. Ibid, Vol. I, P. 43, No.557.
44. lbid, Vol. I, P. Nos.556 to 569.
45. மகாவம்சம், 22: 2 –6.
49. பட்டினப். 185.
50. பெரும்பாண். 320 – 321.
51. சங்க காலத்தில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டு வாணிகர் இலங்கையில் சென்று வாணிகஞ் செய்தது போலவே, அக்காலத்துத் தமிழர் வடக்கே கலிங்க நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்தனர். கலிங்க நகரத்தில் கி.மு. 278ஐ யடுத்த ஆண்டுகளில் அவர்கள் அந்நகரத்தில் தங்கிப் பெரிய வாணிகஞ் செய்தார்கள். அவர்கள் நூற்றிருபது ஆண்டுகளாக அந்தக் கலிங்க நகரத்திலே வாணிகஞ் செய்து செல்வாக்குள்ளவர் ஆனார்கள். அவர்களிடத்தில் சேனை இருந்தபடியால் கலிங்கநாட்டு ஆட்சியையே கைப்பற்றிக் கொள்ளும் அளவு பலம் பெற்றிருந்தார்கள். தமிழ் வாணிகரினால் நேரிடக் கூடிய ஆபத்தைக் கண்டு அஞ்சிய கலிங்கநாட்டரசன் காரவேலன் என்பவன் கி.மு. 165 ஆம் ஆண்டில் (தன்னுடைய 11 ஆவது ஆட்சியாண்டில்) தமிழ் வணிகச் சாத்தரை அழித்து ஒடுக்கினான். இந்தச் செய்தியைக் காரவேலன் கலிங்கநாட்டு ஹத்திகும்பா மலைக்குகையில் எழுதிவைத்துள்ள கல்வெட்டுச் சாசனத்தில் கூறுகிறான்.
52. ஸூரத்திஸ்ஸம் கஹேத்வான தமிளா சேன குட்டகா துவே த்வாஸ வஸ்ஸானி ரஜ்ஜம் தம்மேன காரயும் (தீபவம்சம், 18 : 47). சேனன் குட்டகன் என்னும் தமிழர் சூர திஸ்ஸனை வென்று இருபத்திரண்டு ஆண்டுகள் நீதியாக இராச்சியத்தை அரசாண்டார்கள் என்பது இதன் பொருள்.
53. Anuradhapura Slab Inscriptions of Kutta parinda by S. Pranavatana, Epigraphia zelonica, vol. IV,pt. III, P.15.
54. ‘பிக்குகளே!தூபிகள் (சேதிமங்கள்)அமைக்கப்படுவதற்குத் தகுதியுள்ளவர் நால்வர். அந்த நால்வர் யாவர்? தாதாகர்என்று சொல்லப்பட்ட அர்ஹந்தராகிய நான்கு உண்மைகளைத் தாமாகவே அறிந்தவராகிய புத்த பகவான், பிரத்தியேக புத்தர், புத்தருடையசீடர்களாகிய அர்ஹந்தர், அரசச் சக்கரவர்த்தி. இந்த நால்வரும் தூபங்கள் அமைக்கப்படுவதற்குத் தகுதியுள்ளவர்கள்’ என்று தீகநிகாயம் (மகாபரி நிப்பாண குத்தந்தம் 12ஆம் அதிகாரம்) என்னும் நூல் கூறுகிறது.) என்னும் நூலும் கூறுகிறது. இந்தப் பௌத்த சமய மரபின்படி துட்டகமனு, ஏலேல மன்னனுக்குச் சேதிமம் அமைத்தான். அரசர்கள் போர்க்களத்திலே இறந்து போனால், அவருக்குப் பள்ளிப்படை என்னும் கோயில் அமைப்பது தமிழரின் பழங்கால வழக்கம். ஏலேல மன்னனுக்கு அமைக்கபட்டது, தமிழர் முறைப்படி அமைக்கப்பட்ட பள்ளிப்படை அன்று, பௌத்த மதப்படி அமைக்கப்பட்ட சேதிமக் கட்டடம் ஆகும். ஏலேல மன்னனுக்கு அமைக்கப்பட்ட சேதிமத்துக்கு ‘ஏலார படிமக்ககம்’ (ஏலாரப் படிமக்கிருகம்) என்று மகாவம்ச டீகா (டீகா – டீகை, உரை) கூறுகிறது. ஏலேல மன்னனை இலங்கை நூல்கள் ஏலாரன் என்று கூறுகின்றன.
55. சுபராசன் இலங்கையை யரசாண்ட யரசாண்ட காலத்தில் பாண்டி நாட்டை அரசாண்டவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். சுபராசனை வசபன் என்னும் பெயருள்ளவன் கொன்று இராச்சியத்தைக் கைப்பற்றுவான் என்னும் நிமித்திக வதந்தி இருந்தது போலவே, பாண்டி நாட்டிலும் நெடுஞ்செழியனைப் பற்றியும் ஒரு நிமித்திக வதந்தி இருநதது. ஓர் ஆடி மாதத்தில் தேய்பிறையில் அட்டமி வெள்ளிக் கிழமையில் மதுரை நகரமும் அரசாட்சியும் அழிந்துவிடும் என்பது அந்த நிமித்திகவாக்கு (சிலப். 23 : 133-37). அக்காலத்தில் நிமித்திக வதந்திகளை மக்கள் நம்பினார்கள். இந்த இரண்டு நிமித்திக வதந்திகளும் உண்மையாகவே நிறைவேறி விட்டன என்பதை மகாவம்சத்தினாலும் சிலப்பதிகாரத்தினாலும் அறிகிறோம்.
56. முதலாம் கஜபாகு கி.பி. 171 முதல் 193 வரை அரசாண்டான் எனக் கூறுவது பழையமரபு. டாக்டர் பர்னவிதானேவின் ஆராய்ச்சியால் இக்காலக்கணிப்புத் தவறானது என்றுநிலைநாட்டப்பட்டுள்ளது. இவனுடைய காலம் கி.பி. 112- 134 என்று மறுகணிப்புச் செய்துள்ளனர். காண்க: Paranavitana, S., Op.cit., University of Ceylon, Colombo, 1959, Vol. I, p. 125.(பார்.)
57. Inscriptions of Ceylon, Vol. I, p. 7, 94 (a) Edited by S.Paranavitana, 1970; See also Plate XI No. 94, Edited by S. Paranavitana, Tamil House - holders' Terrace, Anuradhapura, Annual Bibiliography of Indian Archeaology, Kern Institute, Lydon, Vol. XIII, 1940; Tamil House-holders' Terrace : S. Paranatana, Journal of Ceylon, Branch of the Royal Asiatic Society, Colombo, Vol. XXXV, 1942. pp. 54-56.
58. Inscriptions of Ceylon, Vol. I. p. 28. Nos. 356 (19), 357 (20) Edited by Paranavitana, S., 1970. See also plate XXXV, Nos. 356, 357 Edited by Paranavitana, S, 1970.
59. Ibid, Vol. I, p. 37, No. 480, Edited by S. Paranavitana, 1970.
60. Madras Epigraphy Collections, A.R. No. 333 of 1908, p. 65, No. 51. Tamil Brahmi Inscriptions, Seminar on Inscriptions (1966), Edited by R. Nagaswamy, p. 255. Early South Indian Palaeography by T.V. Mahalingam, 1967.
- ↑ தமிழ்நாடு - சங்க காலம் அரசியல் (1983) நூலில் உள்ள கட்டுரை.