உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

எடுத்துக்காட்டுகள், உவமைகள், கவிதைகள், கதைகள் ஆகியவைகளைக் கொண்டு, தேவையான அரசியல், சமுதாயக் கருத்துக்களை, எளிய முறையிலே அனைவரும் புரிந்துகொள்ளச் செய்யும் முறை—என் கண்டுபிடிப்பு அல்ல! நீண்ட பழம்காலந்தொட்டு, அறிவாளர் மெத்த அருமையாகக் கையாண்டவழி — அதே முறைப்படித்தான், நம்மைவிட்டு விலகிய சட்டசபை உறுப்பினர் எம்.பி. சுப்ரமணியம் அவர்கள், கழக மாநாட்டிலே, நாட்டு விடுதலையின் அடிப்படைத் தன்மையை விளக்க, இந்த உவமை காட்டிப் பேசினார்— புதுவையில். வழக்கறிஞர். பேச்சு வெறும் பேச்சாக அல்ல, வழக்கை விளக்க வாதம் தேவை அல்லவா — அம்முறையில்,

“நாடு புறக்கணிக்கப்படுவது தவிர்க்கப்பட்டால், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே போதிய பணம் திராவிடத்திற்கு ஒதுக்கப்பட்டால், திராவிடநாடு கேட்க மாட்டீர்களா?” என்பார்கள்.

“ஒரு நாடு விடுதலைபெற்ற நாடாக இருப்பதும், ஒரு மனிதன் சுதந்தர மனிதனாக வாழ்வதும், அதனால் ஏற்படக்கூடிய இலாப நட்டக் கணக்கல்ல — நாம் பார்க்கவேண்டியது. எல்லா வசதிகளையும் கொடுத்து வாழ்நாள் முழுவதும் சிறைக்கைதியாக இருப்பாயா? என்று ஒருவனைக் கேட்டால், கூலிக்காரனாக இருந்தாலும் சுதந்திர மனிதனாகவே இருக்க விரும்புவான் என்பது மறுக்க முடியாததாகும்.”

என்று விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கம் போதும்போலிருக்கிறதே! மேலும் இதிலே பால் உணர்ச்சி இல்லை. இதுபோல் பேசினால் போதுமே! என்று, உனக்குத் தோன்றுகிறது. ஆனால், அவருக்கு அப்படித் தோன்றவில்லை; ஆகவே அவர் தமது வாதத்தைத் தொடர்ந்து பேசுகிறார்:

“அதைப் போலத்தான் ஒரு நாடு அடிமையாக இருப்பதால் இலாபமா? சுதந்தர நாடாக இருப்பதால் இலாபமா என்பதல்ல நாம் கவனிக்கவேண்டியது— ஒரு பெண் கற்போடு இருப்பது இலாபமா? கற்பிழந்தவளாக இருந்தால் இலாபமா? என்று யாரும் கேட்க மாட்டார்கள். ஒரு பெண்ணின் கற்புக்கு எப்படி விலையில்லையோ, அதுபோல ஒரு நாட்டின் சுதந்தரத்திற்கும் விலையில்லை.”