உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

நம்மோடு இருந்தாலாவது இத்தகைய விளக்க உரைகளை நாம் அடிக்கடி கேட்கலாம்—ஆனால் இல்லை—என்ன செய்வது எப்படி எப்படிப் பேசினார் — பேசக்கூடியவர்—என்பதை எண்ணி மகிழ, அவருடைய உரையிலே சில பகுதிகளைத் தந்திருக்கிறேன்.

“இருண்ட கண்டம்” என்று சொல்லப்படும் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் இதுவரை ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் காலனிகளாக வைக்கப்பட்டிருந்த நாடுகள், இழைக்கப்பட்ட கொடுமைகளை வாய்திறந்து ஏனென்று கேட்காமல், அடிமைகளாய் வாழ்ந்த மக்கள், ‘மனிதர்களாய்ப் பிறந்தோம்; அடிமைகளாய் வாழ்ந்தோம்; கொடுமைகளைச் சுமந்தோம்; இனியும் சகியோம்; வாழ்ந்தால் விடுதலைபெற்ற மக்களாய் வாழ்வோம்; அல்லது விடுதலைப் போரிலே மாள்வோம்; இனி, வீணில் காலம் கடத்தமாட்டோம்’ என்று ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் விடுதலைப்போரிலே தங்களைத் தியாகம் செய்யும் நிலையினைப் பார்க்கிறோம்.

கொடுக்கவேண்டிய பலிகளைக் கொடுத்து, செய்ய வேண்டிய தியாகங்களைச் செய்து, விடுதலைபெற்ற மொராக்கோ, டுனீஷியா, கணா, சைப்ரஸ் நாடுகளைக் காண்கிறோம். வெற்றியின் அருகிலே உயிரைப் பணயம் வைத்துப் போராடும் அல்ஜீரியா, நயசாலாந்து நாடுகளையும் காண்கிறோம்.

இங்கே —‘திராவிடம் விடுதலை அடையவேண்டும்’ என்று நாம் சொல்லுகிறோம். இந்தியா ஒன்று என்பது என்று இருந்ததில்லை? இந்திய உபகண்டத்தின்மீது படையெடுத்தவர்கள் எத்தனையோ பேர். ஆனால், எவரும் திராவிடத்தில் நுழைந்ததில்லை. பேரரசர்கள் என்று புகழ் பெற்றோர் இந்திய உபகண்டத்தில் ஏராளம்; ஆனால், எவரும் திராவிடத்தைத் தன்னாட்சியின்கீழ் கொண்டு ஆண்டதில்லை.

‘இந்தியா ஒன்று’ என்று சந்திரகுப்தன் காலத்தில் இல்லை! சமுத்திரகுப்தன் காலத்தில் இல்லை! அசோகன் காலத்தில் இல்லை! ஹர்ஷன் காலத்தில் இல்லை! கனிஷ்கன் காலத்தில் இல்லை! அக்பர் காலத்தில் இல்லை! ஒளரங்கசீப் காலத்தில் இல்லை! ஆனால், அலகாபாத் பண்டிதர் காலத்தில் மட்டும் எப்படி இந்தியா ஒன்றாகும்?

அந்நியன் — வெள்ளையனும், பிரெஞ்சுக்காரனும் ஆண்ட காலத்தில், தன் நிர்வாக வசதிக்காகத் துப்பாக்கி முனையில்,