12
சர்க்கஸ் கம்பெனியில் ஆட்டையும் சிங்கத்தையும் ஒருசேர வைப்பதுபோல் —இந்தியாவை ‘ஏக இந்தியா’வாக வைத்திருந்தான். அதனாலேயே, நாம், எப்படி வடவரோடு ஒன்றாக முடியும்?
மொழியால், கலையால், பண்பாட்டால், வரலாற்றால் பழக்கவழக்கங்களால், பூகோளரீதியாகத் திராவிடர் வேறு—வடவர் வேறு; அப்படியிருக்க, நாம் அனைவரும் ஒன்று என்று எப்படிச் சொல்லமுடியும்?
இந்த மதத்தைத் தழுவியவர்கள் இந்தியா முழுமையும் உள்ளவர்கள்; ஆகவே இந்தியா ஒன்றாக இருக்கவேண்டும்—என்றால், இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்கள் எல்லோரையும் ஓர் அரசின்கீழ் கொண்டுவர இயலுமா? கிருத்துவ மதத்தைத் தழுவியிருக்கின்ற காரணத்தினாலேயே அமெரிக்காவும், இங்கிலாந்தும், பிரான்சும், ஜெர்மனியும், ஓர் ஆட்சியின்கீழ் இருப்பது சாத்தியமாகுமா? அதைப்போலத்தான், திராவிடமும் இந்தியாவோடு ஒன்றாக இருக்க இயலாது.
இரண்டு கைதிகளை, வசதிக்காகப் போலீசுக்காரன் ஒரு கைதியின் வலதுகையுடன் மற்றவனின் இடதுகையைச் சேர்த்து விலங்கிட்டு, சிறைக்கு அழைத்துச் சென்று ஓர் அறையில் பூட்டிவைப்பதாக வைத்துக்கொள்வோம். விடுதலை அடைந்ததும், அந்தக் கைதிகள் வீடு திரும்புகையில், அவரவர்கள் வீட்டுக்கு அவரவர்கள் போவார்கள். இதுவரை ஒன்றாகவே சிறையில் வைக்கப்பட்டிருந்தோம்; ஆதலால் இனியும் ஒன்றாகவே வெளியிலும் வாழ்க்கை நடத்துவோம்; அப்படித்தான் இருக்கவேண்டும்—என்பது எப்படி நீதியல்லவோ, அதைப் போலத்தான் வெள்ளைக்காரர்களால் அடிமைப்படுத்தப்பட்ட நாம் வெள்ளையர்கள் வெளியேறியவுடன் தனித்தனியே வாழ்வது — அரசோச்சுவதுதான் நீதி என்கிறோம்.
நாம் நமது உரிமையைக் கேட்டால், ‘பகைமை பாராட்டுகிறோம்’ என்கிறார்கள். ‘என் வீட்டுக்குக் காம்பவுண்டு சுவர் போடுகிறேன்’ என்றால், ‘பக்கத்து வீட்டுக்காரன் திருடனா?’ என்கிறார்கள்—இது எப்படி நியாயமாகும்?
இந்திய அரசியல் சட்டம் என்பது, திராவிடர்களை வடவர்கள் அடிமைபடுத்த ஏற்பட்ட அடிமை சாசனம் ஆகும்.
★