34
இந்தச் சிலை, ஒவ்வொரு நிலையிலும் காணக்கிடக்கும் சிறுசிறு குறைகளை நீக்கி, ஒவ்வொன்றிலும் விளங்கிய அழகைக் கூட்டிச் சமைக்கப்பட்டது.
இந்தச் சிறப்பியல்பை எடுத்துக்காட்டுவர் என்று சிற்பி எதிர்பார்த்தான்.
சீமாட்டியின் சிலையாக இருந்தால், பொன்னும் பொருளும் கொடுத்திருப்பார் சீமான்.
இந்தச் சிலை சமைத்தபோது, எவரிடமும் பொன்னும் பொருளும் எதிர்பார்க்கவில்லை.
அரண்மனையோ, மாளிகையோ, இந்தச் சிலை தமக்குரியது என்று உரிமை கொண்டாடப் போவதில்லை.
இது வீரனின் சிலை! விருதுபெற்ற வீரன் அல்ல! வேந்தர் அவையில் உயர்இடம் பெற்ற வீரன் சிலை அல்ல! கட்டுண்ட வீரன்—விடுதலை பெறத் துடிக்கும் காளை — தளைகளை அறுத்திடும் முயற்சியில் தன் முழுவலிவையும் ஈடுபடுத்திய நிலையிலுள்ள வீரன் சிலை! இதை மன்னர் மகனோ, மாளிகை உடையோனோ, பாராட்ட எப்படி முடியும்! வீரர்கள்! விடுதலை விரும்பிகள்! தளைகளின் கொடுமையைக் கண்டவர்கள்! உரிமைக்காகப் போரிடத் துணிந்தவர்கள்! இவர்களுக்கு மட்டுமே, இதன் அருமை தெரியும்! பாராட்டத் தோன்றும்!
மக்களே, இதன் மாண்பு அறியத் தக்கவர்கள்.
மக்கள், மன எழுச்சி பெறவே, இந்தச் சிலை!
இந்தச் சிலை காட்டும் வீரத் திரு உருவமே, மக்களை மாக்களாக நடத்திடும் மமதையாளரை அழித்தொழிக்கும் மாவீரத்தை மக்களுக்கு ஊட்டவல்லது!
சிலை இத்தகைய எழுச்சியூட்டும்; இது கல்லில் எழுதப்பட்டுள்ள காவியம்! என்று மக்கள் கூறுவர் சிலையைகண்டதும். கண்களிலே ஓர் புத்தொளி தோன்றும்! வீரம் கொப்புளிக்கும் நெஞ்சத்திலே! கூனிக் கிடந்தவன் நிமிர்ந்து நிற்பான்! அஞ்சிக் கிடந்தவன், கெஞ்சி நின்றவன், பஞ்சை அல்ல நான்! கோழை அல்ல நான்! கொடுமையை எதிர்ப்பவன்! உரிமைக்காகப் போராடுபவன்!—என்று முழக்கமிடுவான். மனிதன் வீரனாவான்! மமதையாளன் அச்சம் கொள்வான். சிலைமூலம், சிறப்பானதோர் பாடம் தருகிறோம் — என்றெல்லாம் சிற்பி எண்ணாமலில்லை.