உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதி அறுபத்தாறு/குவளைக் கண்ணன் புகழ்

விக்கிமூலம் இலிருந்து

குவளைக் கண்ணன் புகழ்

யாழ்ப்பாணத் தையனையென் னிடங் கொணர்ந்தான்,
இணையடியை நந்தி பிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான், பார்மேற்
கனத்த புகழ்க் குவளையூர்க் கண்ண னென்பான்;
பார்ப்பாரக் குலத் தினிலே பிறந்தான் கண்ணன்:
பறையரையும் மறவரையு நிகராக் கொண்டான்;
தீர்ப்பான சுருதி வழி தன்னிற் சேர்ந்தான்.
சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார். (42)

மஹத்தான முனிவ ரெலாங் கண்ணன் தோழர்;
வானவ ரெல்லாங் கண்ண னடியா ராவார்;

மிகத் தானு முயர்ந்த துணிவுடைய நெஞ்சின்
வீரர் பிரான் குவளையூர்க் கண்ணனென்பான்.
ஜகத்தினி லோ ருவமை யிலா யாழ்ப்பாணத்து
ஸாமி தனை யிவ னென்றன் மனைக் கொணர்ந்தான்.
அகத்தினிலே யவன் பாத மலரைப் பூண்டேன்;
“அன்றே யப்போதே வீடதுவே வீடு.” (43)

பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோம்;
பாரினிலே பயந் தெளிந்தோம்; பாச மற்றோம்;
நீங்காத சிவ சக்தி யருளைப் பெற்றோம்;
நிலத்தின் மிசை யமர நிலை யுற்றோ மப்பா.
தாங்காமல் வையகத்தை யழிக்கும் வேந்தர்,
தாரணியிற் பலருள்ளார், தருக்கி வீழ்வார்;
ஏங்காம லஞ்சாம லிடர் செய்யாமல்
என்று மருள் ஞானியரே யெமக்கு வேந்தர். (44)