உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

எழிலூர்

வெட்ட வெளியிலே, கொட்டும் மழையிலே, கழகம் துவக்கினோம்! இன்று மாநாட்டுக் கொட்டகை அமைக்க ஊர் நடுவே இடமில்லை!! எனவே, திருப்பரங்குன்றம் பெரியதோர் திடலை எழிலூர் ஆக்குகிறார் வரவேற்புக்குழுத்தலைவர் மதுரை முத்து. தோழமைமிக்க தொண்டர்கள், உங்கள் தேவைகளைக் கவனிக்க.

காவியமும் ஓவியமும், இசையும் கூத்தும், எழுச்சியூட்டும் பற்பலவும், உம்மை மகிழ்விக்க!

எந்நாளும் மறக்கொணாத திருநாளாகும், திருபரங்குன்றம் மாநாடு.

தரணியாண்ட நாம் தாழ்ந்திருக்கிறோம், நிலை அறிந்ததால் நிமிர்ந்து நிற்கிறோம்!

பகைவர் சீறிக்கொண்டு பாய்ந்து வருகிறார்; பரணி பாடுவோம்! பகையை வெல்லுவோம்! வாரீர் திருப்பரங்குன்றம்!— என்று கூறு, தம்பி! நாட்டினருக்கு!!

நேரு அறியட்டும்

நேரு வருகிறார் பரிவாரங்களுடன் மதுரைக்கு, திருப்பரங்குன்றம் மாநாடு குறித்து அவர் அறிந்து கொள்ள முற்படுவார்!

அவர் செவியில், மிகப்பெரிய மாநாடு! மகத்தான ஏற்பாடு! ஏற்றமிகு எழுச்சி! வெள்ளம்போல் வீரர்கள் என்ற செய்தி விழவேண்டும்!

திருப்பரங்குன்றம் வருவது திராவிடரின் நீங்காக் கடமை.

வடபுலத்துத் தலைவர் திரு இடத்து மாண்பு அறியத் திருப்பரங்குன்றம் மாநாடு!

இதுவரை எவரும் காணாத அளவுடன், அழகுடன், சுவையுடன், பயனுடன், நடைபெற்றது என்ற நற்பெயர் கிடைத்திட வேண்டும்.

கழகத்தின் மாண்பு காத்திட அனைவரும் வாரீர் திருப்பரங்குன்றம் என்று தோழர்க்கெல்லாம், அழைப்பு அனுப்பு, தம்பி! மறவாமல்.