பாரதியார் கதைகள்/கடல்
ஒரு நாள் மாலையில் நான் வேதபுரம் கடற்கரையில் தனியிடத்தில் மணல் மேலே போய்ப் படுத்துக்கொண்டிருந்தேன். பகலில் நெடுந்தூரம் நடந்த களைப்பினால் அப்படியே தூங்கிப் போய் விட்டேன். அந்தத் தூக்கத்திலே கண்ட கனவை எழுதுகிறேன்.
நடுக்கடலில் ஒரு தீவு; அதனிடையே பெரிய அரண்மனை. அரண்மனைக்கருகே சிங்காரத் தோட்டம். அதில் ஒரு நீரோடை. அதனருகே புல்லாந் தரை மேல் பதினாறு வயதுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருந்தாள். அவள் என்னைக் கண்ட மாத்திரத்தில் எழுந்து அரண்மனைக்குள் ஓடிப்போய் விட்டாள். நான் அவ்வழியைப் பின்தொடர்ந்து சென்றேன். போகிற வழியில் ஒரு பெரிய பாம்பு கிடந்தது. என்னைக் கண்டவுடன் படத்தைத் தூக்கி என் மேலே பாய்ந்து கடிக்க வந்தது. நான் ஓடினேன். அது என்னைத் துரத்திக் கொண்டு வந்தது. ஓடியோடிக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தேன். பாம்பு காலுக்கு மிகவும் சமீபமாக வந்தது. கடலுக்குள்ளே குதித்தேன்.
கடலிலே புயற்காற்று. ஓரலையைத்தூக்கி மூன்று பனையளவு தூரம் மேலே எறிகிறது. மற்றோரலையை மூன்று பனையளவு பள்ளத்தில் வீழ்த்துகிறது. எப்படியோ சாகாமல் அந்த அலைக்குத் தப்பிவிட்டேன். நெடுநேரத்துக்கப்பால் அலை அடங்கிற்று. நான் நீச்சலை விடவில்லை.
எப்படியோ நீந்திக்கொண்டு வருகிறேன். ஆனால் கரை தென்படவில்லை. பிறகு கைகளில் நோவுண்டாயிற்று. என்னால் நீந்தமுடியவில்லை. என்னுடைய குலதெய்வத்தின் பெயரை உச்சரித்தேன். அங்கே ஒரு கிழவன் தோணி விட்டுக் கொண்டு வந்தான். "அண்ணே, அண்ணே, என்னை உன்னுடைய தோணியில் ஏற்றிக் கொள்ளு. நான் புயற்காற்றில் அடிபட்டு மிகவும் நொந்து போயிருக்கிறேன்" என்று சொன்னேன். அவன் தனது தோணியில் ஏற்றிக்கொண்டான். தோணியை விட்டுக் கொண்டு கடலிலே போகிறோம்; போகிறோம்; வழி தொலையவேயில்லை. "அண்ணே, கரை சேர இன்னும் எத்தனை காலம் செல்லும்? எனக்குப் பசி கண் அடைக்கிறதே. நான் என்ன செய்வேன்?" என்று சொன்னேன்.
அந்தக் கிழவன் தின்பதற்குக் கொஞ்சம் அரிசி மாவும், ஒரு மிடறு தண்ணீரும் கொடுத்தான். இளைப்பாறி அப்படியே கண்ணயர்ந்தேன். (கனவுக்குள்ளே ஒரு தூக்கம்.) கொஞ்சம் ஆயாசம் தெளிந்தவுடனே கண்ணை விழித்துப் பார்த்தேன்; கரை தெரிந்தது. கிழவன் என்னைக் கரையில் யிறக்கி விட்டு, மறுபடி தனது தோணியைக் கடலிலே செலுத்திக்கொண்டு போனான்.
நான் அவனிடம் ஏதெல்லாமோ கேள்வி கேட்டேன். அவன் ஒன்றுக்கும் மறுமொழி சொல்லவில்லை. கண்ணுக்கெட்டும் வரை அவன் தோணியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுபடி அந்தத் தீவுக்குள் கொஞ்ச தூரம் போனவுடனே பழைய அரண்மனை தெரிந்தது. அதனருகே சிங்காரத் தோட்டம், அந்த நீரோடை, அந்தப் பெண்ணும் முன்போலவே புல்லாந் தரைமேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். என்னைக் கண்டவுடன் மறுபடி யெழுந்து தன் வீட்டை நோக்கி யோடினாள்.
நான் தொடர்ந்து போகவில்லை.
தொடர்ந்து போனால் முன்போலவே வழியில் பாம்பு கிடக்குமென்று நினைத்து மிகவும் பயங்கொண்டவனாய், அதிவேகமாகக் கடற்கரையை நோக்கி ஓடிச் சென்றேன். ஓடும் போதே பாம்பு துரத்திக்கொண்டு வருகிறதா என்று பலமுறை திரும்பிப் பார்த்தேன். பாம்பு வரவில்லை. கரைக்கு வந்து சேர்ந்தவுடனே இந்தத் தீவிலிருந்து எப்படியேனும் வெளியேறிப் போகலாமென்று யோசித்தேன். அந்தப் பெண் யாரென்று தெரிந்து கொண்டு பிறகு தான் அந்தத் தீவிலிருந்து புறப்பட வேண்டுமென்று மற்றொரு யோசனை யுண்டாயிற்று. அப்போது பசியும் களைப்பும் அதிகமாக இருந்தபடியால் அவற்றைத் தீர்க்க ஏதேனும் வழியுண்டா என்று சுற்றிப் பார்த்தேன். கரை யோரமாகவே நெடுந்தூரம் நடந்து வந்தபோது அங்கே ஒரு குடிசை தென்பட்டது.
அந்தக் குடிசைக்குள்ளே போய் நுழைந்தேன். அதற்குள்ளே ஒரு பிள்ளையார் வைத்திருந்தது.
அந்த மூர்த்தியின் முன்னே ஓர் இலையில் சோறு, கறி, பாயசம், பக்ஷணம் முதலியனவும், ஒரு குடத்தில் நீரும், பக்கத்தில் புஷ்பம், சந்தனம் முதலிய பூஜா திரவியங்களும் வைத்திருக்கக் கண்டேன். எனது பசியின் கொடுமையினால் அந்த ஆகாரத்தைத் தின்று விடலாமென்று யோசித்தேன். பிறகு சிந்தனை பண்ணிப் பார்த்தேன். 'போன ஜன்மத்தில் என்ன பாவம் பண்ணியோ இந்த ஜன்மத்தில் இந்தத் தீவில் வரவும், இத்தனைக் கஷ்டப்படவும் ஏதுவுண்டாயிற்று. இப்போது பசித் துன்பத்தைப் பெரிதாக எண்ணி எந்த மகானோ சுவாமி பூஜைக்காக வைத்திருக்கும் திருவமுதை அபகரித்தால், இன்னும் பாவம் மேற்படும். ஆதலால் அந்தக் காரியம் செய்யக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டேன்.
பசி தாங்கவில்லை.
நாமே பூஜை நைவேத்தியம் முடித்து விட்டுப் பிறகு அந்த உணவைக் கொள்ளலா மென்று நினைத்து ஸ்நானம் செய்ய இடம் கிடைக்குமா என்று பார்க்கும் பொருட்டு வெளியே வந்து சிறிது தூரம் சுற்றிப்பார்த்ததில் அங்கே ஒரு சுனையிருந்தது. அதில் ஸ்நானம் செய்து ஸந்தி முதலிய கர்மங்களை முடித்து விட்டு மறுபடி குடிசைக்குள் போய்ப் பார்க்கையில் பிள்ளையார் மாத்திரந்தானிருந்தது.
சோறு வடை தண்ணீர் பூ சந்தனம் ஒன்றையும் காணவில்லை. எனக்கு வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. "பிள்ளையாரே, பிள்ளையாரே, உமக்கு எங்கள் வேதபுரி சேர்ந்தவுடனே முப்பத்து மூன்று தேங்காய் உடைத்துப் பூஜை செய்கிறேன். எனக்கிந்த ஆபத்து நேரத்தில் உதவி செய்ய மாட்டீரா?" என்று வேண்டி வருத்தப்பட்டேன்.
இந்த நிலையில் எனது கனவு தடைப்பட்டது. பல குழப்பங்களுண்டாயின; செய்தி நினைப்பில்லை. பிறகு மறுபடியும் நான் கடலலைகளின்மீது மிதந்து செல்வது கண்டேன். யுகப் பிரளயம் போலவேயிருந்தது. என் கைகள் புடைத்தன. கண் தெரியவில்லை. பிரக்கினை சரியில்லை.
கடலைத் திவலை திவலையாக உடைத்து நாசம் செய்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் வாயு புடைப்பது போலிருந்தது: அதே சமயத்தில் எனதுடம்பைக் கடலலைகள் பந்தாடின.
என்னுயிரைக் கால தூதர் பந்தாடுவதுபோல் தோன்றிற்று. அப்போது மீண்டும் குல சக்தியின் பெயரை உச்சரித்து, விநாயகரை நினைத்தும் "பிள்ளையாரே, என்னை வேதபுரத்துக் கரை சேர்த்துவிட்டால் உமக்கு மூவாயிரத்து முந்நூறு தேங்காய் உடைக்கிறேன். காப்பாற்ற வேண்டும், காப்பாற்ற வேண்டும்" என்று என்னை அறியாமல் கூவினேன்.
சிறிதுநேரத்துக்குள் புயற் காற்று நின்றது: அங்கே ஒரு தோணி வந்தது; தோணியின் அழகு சொல்லி முடியாது. மயில் முகப்பும், பொன்னிறமும் கொண்டதாய் அன்னம் நீந்தி வருவது போல மெதுவாக என்னருகில் வந்த அத்தோணியிடையே ஒரு மறக்குமாரன் ஆசனமிட்டு வீற்றிருந்தான். அவன் முகத்தினொளி தீ யொளி போலே விளங்கிற்று. தோணியைக் கண்டவுடனே நான் கை கூப்பினேன். அப்போது தோணிக்காரனிடம் என்னை யேற்றிக் கொள்ளும்படி அவன் கட்டளையிட்டான். அவர்கள் என்னை யேற்றிக் கொண்டனர்.
அந்தத் தோணியில் ஏறினவுடனே என் உடம்பிலும், மனதிலுமிருந்த துன்பங்களெல்லாம் நீங்கிப் போயின. என் உடம்பைப் பார்த்தால் ராஜாவுடை தரித்திருக்கிறது. பதினாறு வயது பிள்ளையாகவே நானுமிருந்தேன். தோணியிடையிருந்த மன்னன் கரத்திலே வேல் தெரிந்தது. அப்போது கண்ணை விழித்தேன். வேதபுரத்துக் கடற்கரை, மாலை வேளை; மணல்மீது நான் படுத்திருப்பது கண்டேன்.
நம்பிக்கை யுண்டாகவில்லை. கண்ணை நன்றாகத் துடைத்துப் பார்த்தேன். தீவும், புயற்காற்றும், கனவென்று தெரிந்து கொண்டேன். அந்தத் தீவில் என்னைக் கண்டவுடன் ஓடி மறைந்த பெண்ணின் வடிவம் என் கண் முன்னே நிற்பது போலிருந்தது. பிறகு தோணியிலே கண்ட மன்னன் வடிவம் தெரிந்தது... வீடு வந்து சேர்ந்தேன்.
வேதபுரத்தில் மௌனச் சாமியார் என்றொருவர் இருக்கிறார். அவரிடம் கனவைச் சொல்லி, அந்தத் தீவிலே கண்ட பெண் யாரென்று கேட்டேன். "உன்னை யார் காப்பாற்றியதென்பதை நீ அறியவில்லை. அந்தப் பெண் உன்னிடம் அன்பு கொண்டாள்.
இரண்டாம் முறை தோணியிலே தோன்றிய இளவரசன் கையில் ஒரு வேல் இருந்தது கண்டனையா? அதுவே உனக்குப் பெண்ணாகத் தோன்றிற்று. உன்னைக் கவலைக் கடலில் வீழ்த்திய பெண்ணே பிறகு வேலாகத் தோன்றி உன்னைக் காத்தாள்" என்று சொன்னார்.
சக்தியே வேலென்றும் அதுவே உயிருக்கு நல்ல துணையென்றும் தெரிந்து கொண்டேன். சீக்கிரத்தில் நல்ல நாள் பார்த்து வேதபுரத்திலுள்ள ஏழைப் பிள்ளையாருக்கு மூவாயிரத்து முந்நூறு தேங்காய் உடைக்க வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறேன்.