பாரதியார் கதைகள்
ஞானரதம்
பீடிகை
பின்மாலைப் பொழுது. திருவல்லிக்கேணி, வீரராகவ முதலித் தெருவில் கடற்பாரிசத்தை நோக்கியிருக்கும் ஓர் வீட்டுமேடையின் மீது சிரமபரிகாரத்தின் பொருட்டு ஓர் மஞ்சத்தின்மீது படுத்துக் கொண்டிருந்தேன். ஆனந்தகரமான கடற்காற்று, நான் படுத்திருந்த முன்னறையிலே நான்கு பக்கங்களிலிருந்தும், கண்ணாடிச் சாளரங்களின் மூலமாகவும், புறக்கதவு நிலைகளின் மூலமாகவும், வந்து நிரம்பிய வண்ணமாக இருந்தது. அந்தக் காற்றும் பின்மாலை யொளியும் கலந்ததினால் உண்டாகிய தெளிவும் இன்பமும் என்னால் கூறி முடியாது. ”ஆகா! இப்போது போய் ஸ்நானம் செய்துவிட்டு நேர்த்தியான ஒரு குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு, கடற்கரை யோரமாகத் தெற்கே அடையாற்றுக்குப் போய்,— வழியெல்லாம் காளிதாஸனுடைய சாகுந்தலத்தையேனும், அல்லது ஓர் உபநிஷத்தையேனுங் கொண்டுபோய்ப் படித்து இன்பமடைந்து கொண்டே திரும்பினால் நல்லது” என்ற சிந்தனை உண்டாயிற்று. ஆனால், என்னிடம் குதிரைவண்டி கிடையாது என்ற விஷயம் அப்போழுதுதான் ஞாபகத்திற்கு வந்தது.
”அடடா! மிகுந்த செல்வம் இல்லாததனால்— உலகத்தில் பல விதமாகிய இழிவான இன்பங்கள் மட்டு மல்ல,—உயர்ந்த இன்பங்கள்கூடப் பெறுவதற்குத் தடை ஏற்படுகிறதே!” என்று எண்ணினேன். அப்பொழுது, என் மனம்—”மூடா, -