உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

பேரால், இந்தக் கொடுமைக்கு இடமளித்துவிட்டு, மத்திய சர்க்காரிடம் எதற்கெடுத்தாலும் மண்டியிட்டுக் கிடக்கும் கேவல நிலைமை கூடாது. அதனைப் போக்கிக்கொள்வோம், என்று நாம் கூறும்போது, இதே அனுமந்தய்யாக்கள் பேசும் பாணி என்ன? பாரதம் ஒரு தேசம்—ஓர் அரசு—இந்த ஐக்யத்தை நாசம் செய்தல்கூடாது—என்றல்லவா பேசுகிறார்கள்!! நமது உரிமை முழக்கத்தை வரட்டுக் கூச்சல் என்று ஏசுகிறார்கள்; நமது ‘தனி நாடு’ கோரிக்கையை, ‘நாட்டைப் பிளவுபடுத்தும் நாசசக்தி’ என்கிறார்கள்!!

மத்திய சர்க்கார் தலையிட்டுத் தொல்லை தருகிறது—எதற்கெடுத்தாலும் டில்லி உத்தரவு பிறப்பிக்கிறது, நாம் அதன் கட்டளைப்படி ஆடவேண்டி இருக்கிறது—செச்சே! இது மகாகேவலம்!!—என்று பேசிக் கைபிசைந்து கொள்ளும் இந்தக் கண்ணியவான்கள், ஆசைக்கு ஆட்படாமலும், அச்சத்துக்கு இடமளிக்காமலும், கொள்கைக்கு மதிப்பளித்து, மக்கள் மன்றத்திலே அந்தக் கொள்கைக்கு ஆதரவு திரட்டிவரும், நம் போன்றார்மீது காய்வது ஏன்? பாய்வது எதன் பொருட்டு!!

பாரதம் ஒரு தேசம்...என்ற தத்துவத்தைப் பேசும்போதும், இவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்! மத்யசர்க்கார் எதிலும் குறுக்கிடுகிறது, எதற்கெடுத்தாலும் கட்டளை பிறப்பிக்கிறது, நாங்கள் கைகட்டிச் சேவகம் செய்யவேண்டிய கேவலம் ஏற்படுகிறது என்று மனக் குமுறலுடன் பேசும்போதும், அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்களே தவிர கொள்கைப்பற்றினால் செயலாற்றக் கிளம்புகிறார்கள் இல்லை!

குமாரசாமி ராஜா, கவர்னர் கோலத்திலேயே கோவை வந்ததும், அங்கு பிரமுகர்களும் தொழில் அதிபர்களும் கூடியிருந்த ஓர் அவையில், டில்லியின் போக்கினையும், தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதையும், வடநாட்டு அணைத் திட்டங்களில் பணம் பாழாக்கப்படுவதையும், கேட்போர் பதறித் துடித்து எழும் விதத்தில் பேசியதையும், அறிவாய்.

“இவ்வளவுதான் என்று எண்ணாதீர்கள்! இன்னும் சொல்லவேண்டியவை ஏராளமாக உள்ளன. இந்தக் கவர்னர் வேலையிலிருந்து விலகியதும் அவ்வளவையும் சொல்லிவிடுகிறேன்” என்றல்லவா முழக்கமிட்டார்.

பத்திரிகைகளெல்லாம் பத்தி பத்தியாக வெளியிட்டன; கொட்டை எழுத்திலே தலைப்புகளிட்டன; குமாரசாமிராஜா