உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

119


அலையுறுமாறு திடுமெனப் பாய்ந்து, அணிகலம் விளங்கும் உன் மகள் மார்பைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு வந்து கரை சேர்த்தான். தாயே! அவன் மார்பைத் தன் மார்பு தழுவிற்று என்பதை அறிந்து, என் தோழி, அன்றே அவனுக்கு மனைவியாம் உரிமையை ஏற்றுக் கொண்டமையால், பெய்தற்கரிய மழை பெய்யவிரும்பினால், பெய்விக்கும் தெய்வக் கற்புடையவளாகி விட்டாள்.

தாயே! உன் மகளின் மனத்தைக் கவர்ந்த அவன், நம்மினும் உயர்ந்த குடியில் பிறந்தவனாவான். புனம் காக்கும் மகளிர், தம் கூந்தல் ஈரம் புலர எழுப்பும் அகிற்புகையால் மறையும் மதி, மலை சேரக்காணும் கானவர், அதை, மலையுச்சியில் கட்டிய தேனடையாம் என்று கருதிக் கைப்பற்ற, மூங்கில் ஏணி ஆக்கி வைத்திருக்கும் அகன்ற காட்டு நாட்டு மன்னன் மகனாவான் அவ்விளைஞன்.

அவள் கொண்ட காதலையும் கற்பு நெறியையும் அறியாது, அவளை அவனுக்கு மணம் செய்து தர மறுத்து, அறமல்லாச் செயல்களை, இச்சிறுகுடியில் வாழும் கானவர் செய்வதால், சிறு குடிவாழ் மக்களே! வள்ளிக்கொடி, கிழங்கு விடாது; மலைமேல் தேனடைகள் கட்டப் பெறா; தினைப் புனங்களும் பெரிய கதிர்களை ஈனமாட்டா.

காந்தட் பூவின் மணம் வீசும், பார்த்தவர் கண்களைத் தன்னை விட்டு நீங்காவாறு பற்றி ஈர்த்துக் கொள்ளும் பேரழகு வாய்ந்த, மலைவளர் மூங்கில் போன்ற மெல்லிய அழகிய தோள்களைப் பெற்ற குறமகளிர் கணவனுக்குப் பிழை புரியாது அவரையே தெய்வமாகக்கொண்டு வாழும் கற்பு நெறியிலேயே இதுவரை நின்றிருந்தமையால், அவர் கணவன்மாரும், வேட்டையில் தப்பாது வெற்றி பெற்று வாழ்ந்தனர்.

- என்று நான் உண்மையை உரைக்கக் கேட்ட தாம் அதை நம் தந்தைக்கும் தமையர்க்கும் எடுத்துரைத்தாள்.

அது கேட்ட அவர்கள், ஒருநாள் வரை அம்புகளையும் வில்லையும் மாறி மாறிப் பார்த்து, கடுஞ்சினம் கொண்டு பின்னர் ஒருவாறு அச்சினம் ஆறி, 'காதல் கொண்ட அவ்விருவர் மீதும் குற்றம் இல்லை; காதல் கொண்ட அவர்க்கு மணம் முடிக்க மறுக்கும் நம்மீதே குற்றமாம்' என அறிந்து தலைவணங்கினார்கள்.

இவ்வாறு என் முயற்சியால் உருவான இம்மணம் விரைவில் முடிந்து, நீயும் உன் கணவனும் கூடி மகிழ அருள் புரியுமாறு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/120&oldid=1761961" இலிருந்து மீள்விக்கப்பட்டது