84
போட்டடைப்பதுதான். சுகாடியா சிரித்தபடி, நம் சுகானுபவத்தைக் கெடுத்திடத் துணிந்தவர்கள் தொலைவார்கள் என்றெண்ணி உதயபுரி மாளிகையில் உல்லாசமாக இருந்திடுவார்.
தம்பி! கெய்ரான், சுகாடியா போன்ற, குற்றச் சாட்டுக்கு இலக்காகி உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் ஆள முற்பட்டபோது, அவர்களை வாழ்த்தவில்லையா, வரவேற்கவில்லையா, அவர்கள் நாட்டுப் பற்று, தன்னல மறுப்பு, அறிவாற்றல், பண்பு ஆகியவை பற்றிப் பலபடப் பேசவில்லையா, காங்கிரசை நடத்திடும் கர்த்தாக்கள். நிரம்பப் பேசினார்கள்! இன்று! சட்டசபையில் சரமாரியாகக் கிடைக்கிறது சவுக்கடி!!
ஒரு துளி அய்யப்பாடு கிளம்பினாலும், விழித்தெழுந்து, விசாரணை நடத்தி, தவறு இருந்தால் கண்டறிந்து, கேடு களைந்து, கேட்டினுக்குக் காரணமாக இருந்தவர்களைப் பதவியில் இருந்து மட்டுமல்லாமல், கட்சியிலிருந்தே நீக்கிவிட வேண்டியது முறையாக இருக்க, மூலைக்கு மூலை பேசப்பட்டு, நாறி, அழுகி, தானாக நாற்றமடிக்கிற வரையில், குற்றத்தைக் கண்டு பிடிக்கும் வேலை, களை எடுக்கும் வேலை நடைபெறுகிறதா! கிடையாது!! மாறாக, ‘கபர் தார்’ குற்றம் கூறாதே! உன் குலையை அறுத்தெடுத்து மாலையாக்கிக் கொள்வேன் என்று கூரை மீதேறிக் கூவுகின்றனர்.
இந்த மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல், துணிந்து நின்று, குற்றம் குற்றமே என்று கூறத்தக்கவர்கள் எத்தனை பேர் கிடைக்க முடியும்? மிகச் சொற்பம்.
கேரளத்து முதலமைச்சர் சங்கர் மீது குற்றச்சாட்டுகளைத் தொகுத்தெடுத்துக்கொண்டு, காங்கிரஸ் தலைவர்கள் டில்லிக்குச் சென்றனர் என்றோர் செய்தி சென்ற கிழமை வெளிவந்தது.
கேரளத்துக்கு எத்தனை முறை எத்தனை பெரிய பெரிய காங்கிரஸ் தலைவர்கள் சென்று வந்தனர்—சேதி அறிய—பிளவு போக்க—அமைதி காக்க–ஒன்றுபடுத்த–ஒழுங்கு படுத்த!! தொட்டால் பட்டமரம் துளிர்க்குமாமே அந்தக் காமராஜரும் போய்வந்தார்; இன்றைய ‘பாரதப் பிரதமர்’ லால்பகதூர் சென்று வந்தார், கண்டு வந்தார், நிலைமை சரியாகிவிடும் என்று செப்பிவிட்டு வந்தார்;