85
மொரார்ஜிதேசாய் போய்வந்தார்; காங்கிரசின் ஒரு செயலாளர் சாதிக் அலி என்பார் போய்விட்டு வந்து, “வெளியே சொன்னால் வெட்கக்கேடு; அப்படி இருக்கிறது கேரளத்தில் காங்கிரஸ் நிலைமை” என்று தெரிவித்தார். இப்போது பட்டியலே தயாரித்துக்கொண்டு, டில்லிப் பட்டணமே சென்று, முதலமைச்சர் சங்கர் மீது இன்னின்ன குற்றச்சாட்டுகள் உள்ளன என்று கூறுகிறார்கள். மாலை வேளையில் மேடை ஏறியதும் எத்தனை பெரிய முழக்கம், இந்த நாட்டை ஆள நாங்களன்றி வேறு யார்? எவருக்கு உளது அந்த யோக்கியதை? என்று!! நாறுகிறது, நாட்டிலே பல பகுதிகளில்; நாக்கு மட்டும் நீளுகிறது. நம்மைவிட்டால் வேறு நாதி இல்லை இந்த மக்களுக்கு என்ற போக்கில்.
ஒன்றன்பின் ஒன்றாக இத்தனை ஊழல்கள் வெளி வருகின்றன என்பதைக் காட்ட மட்டும் அல்ல, தம்பி! மக்களிடம் எவர் எவர்களைப் பற்றி இந்திரன் என்றும், சந்திரன் என்றும், காங்கிரஸ் தலைவர்களால் புகழ்பாடி வைக்கப்படுகிறதோ, அவர்களெல்லாம், என்ன கதியாகிறார்கள், அவர்களைப் பற்றிய முழு உண்மை ஆராய்ந்து அறியப்படும்போது என்னென்ன விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகின்றன, அவைகள் எத்துணை மோசமான வைகளாக இருக்கின்றன என்பதையும் விளக்கிடத்தான் கூறுகிறேன். மாசிலாமணிகள் நாங்கள் என்று மார் தட்டிப் பேசுகிறார்களே, காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பற்றி. இந்த மணிகள் எத்தனை மோசம் என்பது விளக்கப்பட்டுக் கொண்டு வருகிறது.
எதிர்க்கட்சிகளே வேண்டாம் என்று பேசுகிறாரே காமராஜர், சிலரை அழைத்துக்கொண்டும், சிலரை இழுத்துக் கொண்டும், சிலரை ஒழித்துவிடத் திட்டமிட்டுக் கொண்டும் வருகிறாரே, காரணம் புரிகிறதா?
தம்பி! பீகாரில் இதுபோலவே புகார்! மைசூரில்,