86
நிஜலிங்கப்பா மீது குற்றச்சாட்டு. இந்த நிலையில் காங்கிரசாட்சி இருக்கும்போது, கண்டபடி பேசிக் கொண்டிருப்பதும், எதிர்க் கட்சிகளைக் கேவலமாக ஏசுவதும், சரியா, முறையா? என்பதை நடுநிலையாளர் எண்ணிப் பார்த்திடவேண்டும். பொதுமக்களிடம் இத்தனைப் பெரிய அளவிலும், இவ்வளவு நெருக்கமான முறையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் நேசத் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதன் காரணமாக, இங்கு ஆளவந்தார்கள் வெகு விழிப்புடன் இருக்க வேண்டிவருகிறது. துளி சந்தேகம் எழுந்தாலும், விடமாட்டார்கள் கழகத்தார்! ஒரு நடவடிக்கையிலேனும் அழுக்குத் தெரியுமானால் அம்பலப் படுத்தி விடுவார்கள்! மிக விழிப்பாக இருக்கவேண்டும்; அப்பழுக்கற்ற முறையில் நடந்தாகவேண்டும்; இல்லை யென்றால் துளைத்தெடுத்து விடுவார்கள் என்ற அச்ச உணர்ச்சி, இங்குள்ள காங்கிரஸ் ஆளவந்தார்களுக்கு நிரம்ப இருக்கிறது இதனை நான் கூறுவதற்குக் காரணம் நமக்கு நாமே பெருமிதம் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல, ஜன நாயகத்தில், ஒரு ஆட்சி நேர்மையாக இருக்கவேண்டுமானால், ஆட்சியில் உள்ளவர்கள், நாம் எதைச் செய்தால் எதிர்க்கட்சியினர் எந்தவிதமாக நம்மை எதிர்த்துத் தொலைத்துவிட முனைவார்களோ என்ற அச்சம் கொண்ட நிலையில் இருந்தாக வேண்டும். அந்த நிலையற்றுப் போகுமானால் பிறகு ஆளவந்தார்கள் சொல்வதெல்லாம் சட்டம்தான், காட்டுவதெல்லாம் வழி தான்! மாற, மீற மக்கள் முயன்றாலும் முடியாது எனவே தம்பி! ஜனநாயகம் வெற்றிபெற, விழிப்புடனும் விறு விறுப்புடனும் பணியாற்றத்தக்க அளவும் ஆற்றலும், நிலையும் பெற்ற ஒரு எதிர்க்கட்சி இருந்தாக வேண்டும். அந்த நிலை, திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருக்கிறது. ஓங்கி வளர்ந்ததெல்லாம் ஒடிந்து வீழ்ந்துவிட்டன: ஓங்காரக் கூச்சலிட்டதுகள், ஒய்யாரக் கொண்டைக்குப் பூவுமுண்டு, ஒயிலாளின் காலுக்குத் தண்டை உண்டு என்று பாடிக்கொண்டு பாங்கி வேலை பார்க்கச் சென்றுவிட்டன. களத்தில் நிற்பவர் நாம்... கடுங்கோபம் காமராஜருக்கு வருவதற்குக் காரணம் அதுவே.
பெரிய இடத்திலே மட்டுமன்றி, எல்லா மட்டங்களிலும் இலஞ்ச இலாவணம்—ஊழல்—நெளிகிறது என்ற பேச்சு எழுந்தபோது கோபம் கொப்பளித்தது காங்கிரசின் கர்த்தாக்களுக்கு. மறுத்தனர், மிரட்டினர்