உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

478

பாரதியார் கதைகள்

யெல்லாம் ஹிந்து ஆசாரங்களின்படி ஒரு பந்துவின் மூலமாக நடப்பித்துவிட்டு ஸ்வர்ண குமாரியைப் பார்க்கச் சென்றான். அங்கே வீட்டில் ஸ்வர்ண குமாரியில்லை. அவளுடைய தந்தை பின்வரும் கடிதத்தை மனோரஞ்ஞனனிடம் கொடுத்தார்,

“எனது காதலனாயிருந்த மனோரஞ்சனனுக்கு,

நெடுங் காலமாக உறங்கி நின்ற நமது சுதேச மாதா இப்போது கண் விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வகால மஹிமைக்கு வருவதற்குரிய அரிய முயற்சிகள் செய்து வருகின்றது. இந்த முயற்சிகளுக்கு விரோதமிழைக்கும் ஸ்வஜனத் துரோகிகளின் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்து போய்விட்டது, இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும் வரை உன் முகத்திலே விழிக்கமாட்டேன். பெற்ற தாய்க்குச் சமானமான தாய்நாட்டின்மீது அன்பு செலுத்தாத நீ என்மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்? நமது வாலிப எண்ணங்களைப் பற்றி நீ திருந்திய பிறகு யோசனை செய்து கொள்ளலாம், நான் காசியிலே எங்கள் அத்தை வீட்டிற்குச் சென்று ஒரு வருஷம் தங்கியிருக்கப் போகிறேன். அங்கே நீ என்னை வந்து பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன்.”

இங்ஙனம் இக் கடிதத்தைப் பார்த்தவுடனே மனோரஞ்சனன் மனம் தீயிலகப்பட்ட புழுவைப் போலத் துடிக்கலாயிற்று...

இப்போது மனோரஞ்சனன் புனாவிலே திலகரிடம் தேச பக்திப் பாடங்கள் படித்து வருகிறானென்று கேள்வி யுறுகின்றோம்.