இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
112
அவர் பதவி இழந்ததும் இங்கேகூட இழுத்த இழுப்புக்குச் சென்றிடும் இயல்பினர் சிலர், விருந்து வைத்து விழா நடாத்தி, இனி எமது வேலை, மீண்டும் இவரைப் பதவியில் ஏற்றி உட்காரவைத்துப் பக்கம் நின்று பார்த்துப் பரவசம் பெறுவதே! என்றுகூடப் பேசி வந்தார்களே, நினைவிலிருக்கிறதா! அதே கிருஷ்ணமேனன் தான! அடித்துப் பேசுகிறார், உற்பத்தி குறையவில்லை, விநியோக முறையிலேதான் கோளாறு என்று.
இந்தனை இடர்ப்பாட்டுக்கும் மூல காரணம் என்ன? அதனைக் கண்டறியாது ஏதேதோ பரிகார முறை தேடிப் பயன் என்ன? இப்போது எழுந்துள்ள பிரச்சினை, உற்பத்திக்கும் விநியோகத்துக்கும் இடையே மூண்டுவிட்ட தகராறு அல்ல. கள்ளச் சந்தை, பதுக்கல் இவைகளால் ஏற்பட்டு விட்டதல்ல, இந்தக் கேடு. ஜனத்தொகை பெருகிவிட்டது, கட்டுக்கு அடங்கவில்லை; இப்போது மூண்டு விட்டுள்ள போட்டி உணவு உற்பத்திக்கும் மக்கள் உற்பத்திக்கும் இடையிலே! உணர்க! உணர்க! இந்த இரு உற்பத்திகளும் ஒன்றை ஒன்று மல்லுக்கு இழுக்கின்றன. மக்கள் உற்பத்தி வளர்ந்தபடி இருக்கிறது. நெருக்கடி அதனால்தான்! விலை ஏற்றம் அதனால் தான்!!
இவ்விதம் உருக்கமும் புள்ளி விவரமும் கலந்த உரையாற்றுகிறார் காங்கிரசில் உள்ள தலைவரொருவர். கனைத்துக்கொண்டு; கண் சிமிட்டிக்கொண்டு எழுந்திருக்கிறார் இன்னோர் காங்கிரஸ் தலைவர்,
‘குடும்பக் கட்டுப்பாடு—கருத்தடை—இதுவா பரிகாரம் இன்றைய நெருக்கடிக்கு, மதியீனம்! மதியீனம்! சோறு போட வழி தெரியாததற்காக, மக்களைக்கொன்றுவிடத் திட்டமிடுகிறீர்களா! கொலை பாதகமல்லவா! குழந்தைகள் பிறவாமல் தடுத்திட வேண்டும் என்று திட்டமிடுகிறீர்களே, ஆண்டுக்கு ஆண்டு குழந்தைகள் பிறக்காவிட்டால், இந்த நாடு கிழவர்கள் நாடாகிவிடுமே! பிறகு? எல்லோரும் மந்திரிகளாகிவிட வேண்டியதுதான்!’
என்று ஏளனம் செய்கிறார் — இடித்துரைக்கிறார்—கருத்தடைத் திட்டம் கூடாது என்கிறார், காங்கிரசின் பெருந்தலைவர்களிலே ஒருவர் கிருஷ்ணமேனன்.