உள்ளடக்கத்துக்குச் செல்

சொர்க்கவாசல், 1954 பதிப்பு/சொர்க்க வாசல்

விக்கிமூலம் இலிருந்து

அறிஞர் அண்ணாவின்
சொர்க்கவாசல்
முழு வசனமும், பாடல்களும்


[மதிவாணன் மலர்த்தோட்டம்—மதிவாணன் தங்கை திலகா, மெல்லிய குரலில் பாடுகிறாள்—அவன், ஒரு மலர்ப்புதரின் பக்கம் இருந்து அவள் அறியாமல் பாடலைச் செவிமடுக்கிறான்.]

இருகண்ணி

திலகா:

வெற்றி

வீரஞ் செறிந்தமுகம் - அருள்
மேவும் இரண்டு விழிமலர்போலே - குண
ஈரம் படிந்தமனம் இயல்பாலே - எதும்
இயும் கரங்கள் மொழிநிறை கோலே
                                     முல்
மாவேந்தர் காத்த தமிழ்மரபாளன்
                             முத்து
மாணிக்கம் என்ற எழில் பெயராளன்.
                             கற்ற
பாவேந்தர் சாற்றும் அவள் புகழ்வாழி.
                             வளர்
பார்மீது வாழி மிக நீடூழி!

[திலகா, பாடி முடித்ததும், மதிவாணன் பாடுகிறான்.]

மதிவாணன்:

வீரஞ்செறிந்த இளஞ் சூரியனைக் காணாமல்
சீருலவும் தாமரைப்பூ மலர்ந்தது பார்
நேரினில் நான் கண்ட அதிசயமே
                             எந்தன்
நெஞ்சறியும் இந்த ரகசியமே.

[மதிவாணன் பாடக்கேட்ட திலகா திடுக்கிடுகிறாள். மதிவாணன் எதிரே வந்து திலகாவைக் குறும்பாகப் பார்த்தபடி]

மதிவாணன்: திலகா! மனதிலே அப்படியே பதிந்து விட்டதோ பாடல்!

திலகா: வெவ் வெவ்வே!

மதிவாணன்: உம்...பாடு திலகா! நான் கேலி செய்ய மாட்டேன், பாடு. இனிமையாகத்தான் இருந்தது.

மதி: பாடு... ...பாடு... ...திலகா!

திலகா: ஐயோ, அம்மா! அம்மா! இரு...இரு...அம்மாவிடம் சொல்லி... ...அம்மா இங்கே வந்து.......

[மதி திலகாவின் குரலைப்போல் தன் குரலை மாற்றிக் கொண்டு]

மதி: திலகா பாடுவதைக் கேளம்மா!

[திலகாவின் காதலன் முத்துமாணிக்கம் அங்கு வருகிறான். திலகா, வேறோர் புறம், ஓடிவிடுகிறாள். மதி, முத்துவை, வரவேற்கிறான்]

மதி: முத்துமாணிக்கம்!

முத்து: (ஏட்டை நீட்டியபடி) கவிராயர் இதைக் கொடுத்தார்.

மதி: இதே ஏட்டிலே உள்ள இரண்டு அடிகளைப் பற்றித்தான் இங்கே பலத்த விவாதம்.

முத்து: (தழதழத்த குரலில்) கேட்டுக் கொண்டுதானிருந்தேன், நண்பா! நான் பாக்கியசாலி, உன் சம்மதம் கிடைத்தால்!

மதி: (கனிவுடன்) திலகா சிறுபெண். தோட்டத்திலே ஆடிப் பாடிக் கிடக்கும் இளமங்கை. கள்ளமறியாதவள்.

முத்து: என் உள்ளம் சிலந்திவலை யல்ல மதிவாணா?

மதி: நான் பரிபூரணமாக உன்னை நம்புகிறேன். வானவில்லைக் கண்டு சொக்கிவிடும் சிறுவனல்ல நீ—கடமையறிந்தவன்.

முத்து: வாழ்வின் விளக்காவாள், திலகா!

[கற்பகத்தம்மாள் வரக்கண்டு இருவரும் பேச்சை நிறுத்திக்கொள்ள]

கற்பகம்: தம்பியா, வா, அப்பா! மதிவாணா! வந்தவர்களை உபசரிக்காமல், பேசிக் கொண்டே இருந்துவிட்டாயோ? திலகா எங்கே? திலகா! திலகா!

மதி: திலகா, ஓடி ஒளிந்து கொண்டாள்!

கற்பகம்: திலகாவா பயமற்றவள்?

மதி: பயமல்ல அம்மா, பயமல்ல (முத்து கூச்சமடையக் கண்டு) இதோ இந்த வீராதி வீரனுக்கே வெட்கம் என்றால் திலகாவுக்கு எவ்வளவு வெட்கம் இருக்கும்

[மதிவாணனின் மலர்த்தோட்டம்—திலகாவும் முத்துவும்]

திலகா: என் அண்ணாவை எப்படியோ உம் வசமாக்கிக் கொண்டீரே, மாயக்காரர்!!

முத்து: மாயக்காரனல்ல திலகா! மாயக்காரிகள் நிறைந்த இடத்திலே இருந்தவன் — ஆனால் மனதைப் பறிகொடுத்திடாதவன், தெரியுமா?

திலகா: யார் கண்டார்கள்? ஆடவர்களின் பேச்சிலே நம்பிக்கை வைப்பது, அப்பப்பா மிக மிக ஆபத்து..

முத்து: இப்படி சொல்லிச் சொல்லியே பெண்கள் ஆடவர்களைப் பித்தராக்கி விடுகிறார்கள். நான் பேதை— நீரே என் கதி என்று நம்பி இருக்கிறேன்—உம்மைக் காணாதபோது என் இருகண்ணும் உறங்காது, என்றெல்லாம் வீணாகானம் மீட்டி, ஆடவரின் மனதை வாட்டி வதைத்து அடிமையாக்கி விடுகிறார்கள்.

திலகா: பொய்......பொய்... முழுப்பொய் — அண்ணாவைக் கேட்போமே.

முத்து:வா கேட்போம்.

[இருவரும் தோட்டவீடு நோக்கிப் போகிறார்கள்]

[சோமநாதன் மாளிகை—உட்புறம் — சோமநாதன், தன் நண்பரின் கையை உதறியபடி]

சோமநாதர்: விடு. போகப் போக விபரீதம் வளர்ந்து கொண்டு போகுது—நேராகவே போய், அந்த மண்டைக் கர்வி மதிவாணனை மானமிருக்கா, மட்டுமரியாதை இருக்கான்னு கேட்டாதான் என் மனதிலே உள்ள கொதிப்பு குறையும்.

(சோமநாதர் கோபமாகக் கிளம்பி மதிவாணன் மலர்த்தோட்டம் வருகிறார். அவரை வரவேற்கும் முறையில்)

மதி: ஏது இவ்வளவு தூரம்! உட்காருங்கள்!

சோமநாதர்: மகா யோக்கியன் போல் பேசுகிறாயே! துளியாவது மான ரோஷம் இருந்தால் இப்படியா காரியம் நடைபெறும்!

மதி: ஐயா! ஆத்திரப்படாமல் பேசும். என்ன வேலையாக வந்திருக்கிறீர்? அதைச் சொல்லும்!

சோம: மண்டைக் கர்வமடா உனக்கு! பஞ்சைப் பயலே! பராரிப் பயலே!

மதி: (ஆத்திரமாக) பெரியவரே!

சோம: என் மகனை வலைபோட்டுப் பிடிக்க, ஒரு மாயக்காரியை ஏவிவிட்டு விட்டு, என்னை எதிர்த்தா பேசுகிறாய்? பொடிப் பொடியாக்கிவிடுவேன் உன்னை!

மதி: அளவு அறிந்து பேசும், சோமநாதரே! வயது சென்றவர் என்ற ஒரே காரணத்தால், உமக்குத் தக்க பாடம் காட்டாமலிருக்கின்றேன்.

சோம: (தடியை ஓங்கியபடி) போக்கிரிப்பயலே! என்னிடமா துடுக்குத்தனம்?

மதி: ஏ, காட்டுக்குணம்படைத்த கிழவா! கழுத்தைப் பிடித்துத் தள்ளு முன் நீயாக ஓடிப்போ...போ...

சோம: சீமான் வீட்டுப் பிள்ளையை சொக்குப்பொடி போட்டுப் பிடிக்கத் தங்கையை ஏவும் வெட்கங்கெட்ட வேலையைச் செய்பவனை மனுஷ ஜாதியிலே எவனாவது சேர்ப்பானா?

(கோப மிகுதியால் மதிவாணன் சோமநாதர் கன்னத்தில் அறைந்துவிடுகிறான். சோமநாதர் கூச்சலிட்டு தன் ஆட்களை அழைக்கிறார். அவர் கூச்சலையும் மிஞ்சும்படியான குரலில் பேசுகிறான் மதிவாணன்.)

மதிவாணன்: உனக்கு மகனாகப் பிறந்தானே, அந்த உத்தமன் முத்துமாணிக்கம்!— ஓநாயே! ஓடிவிடு இந்த இடத்தைவிட்டு!

சோமநாதர்: டே மதிவாணா! உன்னை என்ன கதியாக்குகிறேன் பார். [என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சோமநாதரின் அடியாட்கள் வர வெறிநாயே, பார்! வேட்டைக்காரர்களை! முத்துமாணிக்கத்துக்கு, வில்வக்காட்டுச் சீமான், தன் ஒரே மகளைத்தர தவம் கிடக்கிறார், தெரியுமா? நானும் சம்மதம் கொடுத்திருக்கிறேன். அதைக் கெடுத்து நாசமாக்காதே! உன்னைச் சும்மாவிடமாட்டேன்! உன் குடும்ப யோக்யதை என்ன? என் குடும்ப அந்தஸ்து எப்படிப்பட்டது? என் மகன் அரச சபையில் பெரிய பதவியில் இருப்பவன்—அவனுக்கு திலகாவா மனைவியாவது? (பதைக்கிறான் மதிவாணன்.) அடி ஆட்கள் பாய்ந்து சென்று அவனைப் பிடித்துக்கொள்கிறார்கள், அரச சபையினர் ஒரு பத்துப் பேர், என் மகனுடைய நண்பர்கள் வந்தால் ஒருவேளை விருந்தளிக்க உனக்கு வக்குண்டா, வகையுண்டா (மதிவாணன் கண்களிலே நீர்) என்னடா இது. நீலிக்கண்ணீர் (மதிவாணனைப் பிடித்துக் குலுக்கியபடி) இதோ பாராட அறிவற்றவனே! உன் தங்கையின் எடைக்கு எடை தங்கத்தைக் கொடுத்தால், திருமணத்துக்குச் சம்மதிப்பேன்! முடியுமாடா உன்னால்? மூடா, முடியுமா? எடைக்கு— எடை தங்கமடா தங்கம். தரமுடியுமா? நிலைமையை அறிந்து நட.

(மதிவாணன் வீட்டில் கவலையுடன் உலவுகிறான். கற்பகத்தம்மாள் கலக்கத்துடன் நிற்கிறார்கள்.)

மதி: (தனக்குத்தானே) எடைக்கு எடை தங்கம்! எடைக்கு எடை தங்கம்!

திலகா: அம்மா! அண்ணா! ஏன் இப்படி?...

மதி: திலகா; எங்கே முத்துமாணிக்கம்?

திலகா: மாளிகைக்குச் சென்றார், அண்ணா

மதி: (வெறுப்புடன்) மாளிகைக்கு... ...

திலகா: உடனே வந்தாகவேண்டும் என்று அரச ஆணையாம். அழைத்துப்போக ஆள் வந்திருக்கிறான்.

மதி: யாரை? முத்துமாணிக்கத்தையா? நல்லவேளை, சிக்கல் தீர வழி கிடைக்கும் இனி!

திலகா: (திகைப்புடன்) என்ன அண்ணா, பேசுவது புரியவில்லை!

மதி: திலகா! உன் வாழ்வு பரிமளமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். உன்பொருட்டு நான் எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்கச் சித்தமாக இருப்பவன்.

திலகா: இதென்ன அண்ணா! நான் திகில் கொள்ளும் விதமாகப் பேசுகிறாய்.

மதி: (அன்புடன்) இல்லை தேனே! திகிலூட்ட அல்ல! நாம் ஏழைகளல்லவா?

திலகா: இன்றுதானா? நெடுநாளாக!

மதி: முத்துமாணிக்கம், மாளிகை வாசி! உன் மன மாளிகையில் அவனுக்கு இடம் கொடுத்து விட்டாய். அவனும் உன்னை மனப்பூர்வமாகக் காதலிக்கிறான். ஆனால்......

திலகா: ஆனால்...! வந்ததா பேரிடி! அண்ணா! என்ன அண்ணா அந்த ஆனால்?

மதி: சோமநாதன் கொக்கரிக்கிறான்; பராரி மக்களாம் நீ... பஞ்சையாம் நான்! அந்த சீமான் மகனை, திலகா, நாம் வலைபோட்டுப் பிடிக்கிறோமாம்.

திலகா: (கண் கலக்கத்துடன்) ஐயோ! என் களிப்பு கருகும் காலம் வந்து விட்டதா இவ்வளவு விரைவில்! அம்மா!.

மதி: (திலகாவை அருகே அழைத்து அணைத்தபடி) திலகா! பணம்தேடி அலையும் அவனுக்குப் பண்பு என்ன தெரியும்! காசாசை பிடித்தவன். காட்டுக்குணம் படைத்தவன். அவன் எப்படி அறிவான். காதலின் மேன்மையை? கண்டபடி ஏசினான் என்னை... கன்னத்திலும் அறைந்தான் (திலகா, மதியின் கன்னத்தைத் தடவ.......) அங்கு ஒன்றுமில்லை. திலகா, அங்கு ஒன்றுமில்லை (ஆத்திரத்துடன் தன் மார்பில் அறைந்தபடி) இங்கே இருக்கிறது புண்! என்னை வேதனைப் படுத்தும் புண் இங்கே இருக்கிறது திலகா, இங்கே இருக்கிறது! அவன் என்ன சொன்னான் தெரியுமா! உன் எடைக்கு எடை தங்கம் தர வேண்டுமாம் — முத்து மாணிக்கத்தைத் திருமணம் செய்து கொள்ளும் நிலை உனக்கு அப்போதுதான் ஏற்படுமாம் இந்தப் பொற்கொடி— இந்த முழுமதி—போதாதாம்! பொன் வேண்டுமாம்; பொன்! உன் எடைக்கு எடை தரமுடியுமாடா மூடா என்று கேட்டான். மடையன்! உன் எடைக்கு எடை தங்கம் தரமுடியும் என்னால்! இவனைப் போல பல்லைக்காட்டி அல்ல—அடுத்துக் கெடுத்து அல்ல—பாதகம் புரிந்து அல்ல. என் கவிதை எனக்குக் காணிக்கை தரும் வேண்டும் அளவு—இந்தப் பணப்பித்தன் கண்டு மிரளும் அளவு! திலகா! உன் அண்ணனின் மானத்தைக் காக்கத் தயங்காதே; உன் எடைக்கு எடை தங்கம் சேர்த்தாகவேண்டும் முதலில், அது வரையில் திருமணம் இல்லை. முத்து மாணிக்கம் உத்தமனானால்—உன் மீது அவன் கொண்டிருப்பது உண்மைக் காதலானால்—அவன் பொறுத்திருக்க வேண்டும்.. திலகா!—என் முடிவு கண்டு மனவேதனை அடைவாய். அம்மா! காதலின் மேன்மை அறியாத கயவனல்ல உன் அண்ணன்.

திலகா: (அழுகுரலுடன்) போதும் அண்ணா! போதும்! புரிந்துகொண்டேன், நிலைமையை! என் இதயம் இதைத் தாங்கவேண்டுமே! தாங்கிக் கொள்கிறேன் அண்ணா!

(மதிவாணன் வீட்டின் வெளிப்புறம் மதி நிற்கிறான்—முத்துவும் ரத்தினமும் வருகிறார்கள்.)

முத்து: உடனே வரவேண்டுமென்று அரசரிடமிருந்து......

மதி: சேதி, திலகா மூலம் தெரிந்தது. சென்று வா, முத்து.

முத்து: திலகா?

மதி : வெளியே சென்றாள் — அவசர வேலை—நீ புறப்படு.

(தோட்டத்தில் ஓர் இடம். சுந்தரமூர்த்தி கவிராயர், தனது ஆள் ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்கையில் வேறோர் ஆள் அங்கு வருகிறான்.)

வந்த ஆள்: சந்தச்சரபம் சுந்தரமூர்த்திக் கவிராயர் அவர்கள் தானே!

கவி: ஆமப்பா.

ஆள்: கோதானம் கூடாதென்று கவிதை தீட்டியவர்......

கவி: நானே தான்...ஏன்? பசுக்களுக்குக் கோபமா?

ஆள்: உமக்கு நல்ல புலமை இருக்கிறது. ஆனால் கவிதையைப் பாபத்துக்குப் பயன்படுத்துகிறீர்.

கவியின் ஆள்: கோதானம் செய்து புண்ணியம் தேடுவது ஒருவிதமான வியாபாரம் என்கிறார் கவிராயர். தவறா?

கவி: [வந்த ஆளைப் பார்த்து] வேழ நாட்டாரே, கோதானம் ஏன் செய்கிறார்கள்? காரணம் தெரியுமா? காரணம் கேட்டிருக்கமாட்டீர் - ஆவி பிரிந்ததும் மேலுலகம் செல்லுமாம். அங்கே நெருப்பு ஆறு. அதன் மீது மயிர்ப்பாலம், ஆவி அதன் மீது செல்ல அலையுமாம், அதற்காக நீர் கோதானம் கொடுத்தால், ஆவி பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு அந்தப் பாலத்தைக் கடக்குமாம். நமது பெரியோர்கள் அப்படி சொல்லவில்லை, இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வாணிகன் ஆய் அல்லன் என்பது பழந்தமிழ்ப் பாடல். ஆய் தமிழ் வள்ளல் வாரி வழங்கினான். ஆனால் புண்ணியம் என்னும் சரக்கு வாங்க அல்ல.

வந்த ஆள்: வருகிறேன்......(செல்கிறான்)

கவி: (தன் ஆளிடம்) மதிவாணன் தனது கவிதா சக்தியை மக்களுக்குப் புது அறிவு தரப் பயன்படுத்தவில்லை. எவ்வளவோ சொல்லி வருகிறேன் வேழ நாடு செல்லும்படி.

கவியின் ஆள்: மதிவாணன் ஒரே விசாரமாய் இருக்கிறான்.

கவி: ஆம்......ஆனால் அவனை எப்படியும் வேழநாடு அனுப்பவேண்டும். நான் சென்று மதிவாணனைப் பார்த்து வருகிறேன்.

(மதிவாணன் வீட்டிக்கு கவிராயர் வருகிறார்)

கவி: என்னடா மதிவாணா! இன்னமுமா கவலையும் கலக்கமும்? மலை குலைந்தாலும் மனம் குலையாதவன் தமிழன். தமிழ் மறக்குடி பிறந்த நீ, இப்படி மறந்து இருப்பது தகுமா?

மதி: (சோகமாக) என்ன செய்வது?

கவி: புறப்படு நான் சொன்னபடி.

மதி: எங்கு பெரியவரே! நரியூரில் இருக்கப் பயந்து கொண்டு புலியூர் புகுவது சரியாகுமா? சோமநாதன் செல்வச் செருக்கால் என்னை இழிவாகப் பேசினான், அதற்காக, அரச சபையில் இடம் தேடக் கிளம்பினால்.

கவி: இடம் கிடைக்காதோ என்ற அச்சமோ.

மதி: அல்ல—அல்ல—பெரியவரே! அரச சபை ஆயிரத்தெட்டுக் கேடுகள் நடமாடும் இடம். அங்கு சென்றால், கலையை அடகு வைத்துவிட்டு. கட்டியங்கூறித் தானே பிழைக்கவேண்டும். சரியா? முறையா?

கவி: நியாயமான கேள்வி, ஆனால் உள்ளத்தில் உரம் உண்டு உனக்கு. அரசனுக்கு அடிமையாகாமலே கலைத் தொண்டு செய்யமுடியும். அகமும், புறமும் பாடிய அருந்தமிழ்ப் புலவர்கள், அரசர்களைக் கண்டு அஞ்சினதில்லை; இச்சகம் பேசிப் பிழைத்ததில்லை; தவறி நடந்த மன்னர்களை இடித்துரைக்கவும் தயங்கியதில்லை.

மதி: அந்த உள்ள உரம் வேண்டுமே-எனக்கு உண்டா?

கவி: உண்டு, உண்டு, நான் அறிவேன், உன் கவிதை மக்களுக்குப் புதிய விருந்தாகப் போகிறது. புறப்படு, புறப்படு.

(வண்டி வருகிறது. தாயை வணங்கிவிட்டு, திலகாவின் கரத்தை அன்புடன் குலுக்கிவிட்டு, கவிராயருக்கு விடை கூறிவிட்டு, மதி செல்கிறான்)

(நடு நாட்டு மடாலயத்தின் வெளிப்புறம்—பல்லக்கு தயாராக இருக்கிறது புறப்பட—பரிவாரங்கள் அருகே நிற்கின்றன.)

பெரிய மடாதிபதி: (புறப்படத்தயாராக உள்ள மற்ற மடாதிபதியைப் பார்த்து.)

அருளாளர்: அருமறையானந்தரே! உமது திருத்தொண்டு நமது மதத்திலே படிந்துபோயுள்ள மாசுபோக்கி மக்களைச் சன்மார்க்கத்திலே சேர்க்கும் விதமாக அமைய வேண்டும். எங்கும் புத்த மார்க்கம் பரவிவிட்டது. மன்னர் பலர் புதிய மார்க்கத்தை ஆதரிக்க முன் வந்து விட்டனர். வேதமார்க்கம் மங்கிக்கிடக்கிறது. வேழ நாட்டு வேந்தன் வெற்றிவேலன், புராதன மார்க்கத்தை ரட்சிக்க முன்வந்தது நமது பாக்கியம்.

புறப்படும் மடாதிபதி: அருளாளரின் புகழுக்குக் கேடு வரும்படி நடந்து கொள்ளமாட்டேன்.

அருளாளர்: பரமன் உன் மனதைப் பரிபாலிக்கட்டும்.

(அருமறையானந்தர் பல்லக்கு புறப்படுகிறது. அருளாளர் வாழ்க என்ற முழக்கம் கிளம்புகிறது.)

(வேழ நாட்டிற்கு அருகே உள்ள ஒரு சாலை. மதிவாணனின் வண்டி போய்க் கொண்டிருக்கிறது. மதிவாணனின் பாடுகிறான்.)

மதிவாணன் பாடல்

கன்னித்தமிழ் சாலையோரம் சோலையிலே
             கவிதைக் கனிகள் உண்ணும் பறவைகளே!
தென்னவர் மூவேந்தராம் - தமிழ்வளர்த்த

             சேரசோழ பாண்டியனைப் பாடுங்களே

(கன்)


மேருமலை மீதினிலே கொடிநாட்டினான் - சேரன்
             வீரங்காட்டிக் கனக விசயன் தனைவாட்டினான்
பாரங்கல்லை உடைத் தெடுத்தான் பகைவனைச்
                                                                                  சுமக்க வைத்தான்
              பத்தினிப்பெண் சிலைசமைத்தான் கேளுங்களே
                                           அந்தப்

              பாடல்பெற்ற தேவிதன்னைப் பாடுங்களே

(கன்)


சீறிவந்த புலியதனை முறத்தினாலே—அடித்துச்
              சிங்காரமறத்தி யொருத்தி துரத்தினாளே - இதை
ஊரறிய உலகறிய உங்களாலே

              உண்மையான பெண்மைவாழ பாடுங்களே

(கன்)


(மதிவாணன் வண்டி ஊருக்குள் நுழைகிறது. நாலைந்து ஆட்கள் வண்டியை மடக்கி வேறு பக்கமாகப் போகச் சொல்கிறார்கள்.)

ஓர் ஆள்: நிறுத்து நிறுத்து.

மதி: ஏன்? இந்தப்பாதை வழியாகத் தான் போக வேண்டியிருக்கு.

ஆள்: அப்படியானா வண்டியை ஏதாவது மரத்தடியிலே நிறுத்தி வை—மடாதிபதி போன பிறகு போகலாம்.

(வேறோர் பாதையிலிருந்து பல்லக்கு வருகிறது. வண்டியோட்டி வண்டியை ஓரமாக நிறுத்துகிறான்)

வண்டியோட்டி: ஆட்களில் ஒருவனைப் பார்த்து......யார் வர்ரது?

ஆள்: மடாதிபதி அருமறையானந்தர்.

வண்டியோட்டி: எங்கே போகிறார்?

ஆள்: அவர் வேழநாட்டு மடாதிபதியாக இருக்கிறார். அங்கேதான் போகிறார்.

மதி: வேழ நாட்டுக்கா? நானும் அங்கேதான் போகிறேன்—வேறு வேலையாக.

வண்டியோட்டி: தம்பி பாடுவதுகேட்டா, மயில் ஆடும்.

ஆள்: (மதிவாணனைப் பார்த்து) பாடுவாயா?

மதி: சுமாராகப் பாடுவேன். கவிதையும் எழுதுவதுண்டு.

ஆள்: (மற்றவர்களைப் பார்த்து) அண்ணேன்! இங்கே வாங்க. இதோ இந்த தம்பி கவி எழுதுதாம்-பாடுமாம்.

ஆட்கள்: (மதிவாணனைப் பார்த்து) ஆளைப் பார்த்தாயா......

ஆள் காதிலே குண்டலம்......கழுத்திலே தாவடம், பட்டாடையில்லையேன்னு யோசனையா? நெஜமாகத்தான் அண்ணேன், அருமையான கவி இந்த தம்பி! இதோ; இந்த அண்ணன் சொல்லுது.

ஆட்கள்: வா தம்பீ! வா! ஊருக்கு ஒரு உபகாரம்! மடாதிபதிக்கு உபசாரம் செய்ய வேணும்! ஒரு கவி பாடு—வா!

(ஊர்ப் பொது மண்டபம். அருமறையானந்தர் ஆடம்பரமாக அமர்ந்திருக்கிறார்—மதிவாணன் பாடுகிறான்)

மதிவாணன் பாடல்

இராகம்: சாருகேஸி தாளம்: ஆதி

பல்லவி


சமரச நிலையருள் சந்நிதானம்
        சந்ததமும் எம்மதமும் சம்மதமாகக் காணும் (சம)
                                    அ. பல்லவி
தாமரைமேல் தண்ணீர்த்துளி போல்
       தாரணி வாழ்வினில் நேர்மைகொண்டார்
யாமெனும் அகங்காரம் காரியம் வென்றார்
       அருமறை யானந்தப் பெயர் குலாவும்.
தெருள் மெஞ்ஞான குருபரன் (சம)

(இசைத் திறமையுடன் மதிவாணன் பாடியது கேட்ட அருமறையானந்தர் பட்டாடையும் பரிசும் தந்து)

அருமறை: பரமன் உனக்கு அரிய ஞானத்தைத் தந்திருக்கிறார். அவன் புகழ் பாடு. திரு அருள் நாடு. உன் இசையால் அஞ்ஞான இருள் நிச்சயம் நீங்கும்.

(மதிவாணன்: தொடர்ந்து பாடுகிறான்.)

மதிவாணன் பாடல்

இராகம்: மாண்டு தாளம்: ஆதி


எங்கும்நிறை வானஜோதியே—இணையில்லா
         இன்பரசமான சேதியே
               இகபரம் இரண்டிலும் (எங்)
செம்பொன்னணி நவமணியே
       செல்வயமெனுந் திரு வுருவே
க்ஷேமநலம் யாவுமுந்தன் செயலாலே
அன்பர்சூழ் அருளகமாம் ஆதீனத்தரசே
     ஆண்டகை நீயே, நானேயாகும்-துணைபுரிவாய் (எங்)

(மதிவாணன் மாளிகை அழகும், செல்வமும் மிகுந்தததாகக் காணப்படுகிறது. இசைக் கருவிகள் ஓர்புறம். கவிராயர் படமும் முத்துமாணிக்கத்தின் படமும் மற்றோர்புறம் கூடத்தில் ஊஞ்சல்; அலங்கார ஆசனங்கள். திலகா ஆடை அணிகளுடன் முத்துமாணிக்கத்தின் படத்தைக் பார்த்தபடி ஊஞ்சலில் ஆடுகிறாள். மதிவாணன் வருகிறான்.)

திலகா: அண்ணா!

மதிவாணன்: திலகா என்னதான் சொல்லு எவ்வளவுதான் அலங்காரம் செய்தாலும், இந்தக் கூடத்திலே, ஆடம்பரம் தெரிகிறதே தவிர, ஆனந்தம் ஏற்படவில்லை.

தில: ஆனந்தம் இல்லையா? என்ன அண்ணா, இது? நமது மாளிகையைக் கண்டு மகிழாதவர் இல்லை! பாரண்ணா (மயில் படம் வரையப்பட்ட பட்டுத் திரையைக் காட்டி!) நான் எப்படி கூடத்தை அலங்காரமாக்கி இருக்கிறேன்!

மதி: அழகு, அலங்காரம், ஆடம்பரம் எல்லாம் இருக்கிறது, ஆனால் மணம் இல்லை, திலகா மணம் இல்லை! நமது மலர்த் தோட்டத்திலே என்ன மணம்—என்ன கவர்ச்சி! அந்த நிம்மதி, அந்த அமைதி, அந்த வனப்பு.

(பெருமூச்செறிகிறான், கற்பகம் வருகிறாள்.)

கற்ப: மதிவாணா! கேளடா அப்பா, போதுமா இவ்வளவு ஆபரணம் என்று. இவள் செய்து கொள்கிற அலங்காரத்தைக் கண்டு வேழ நாட்டுப் பெண்களே பொறாமைப் படுவார்கள்......

மதி: (அன்புடன் திலகாவை அருகே அழைத்து.) என் தங்கைக்கு ஆபரணமும் வேண்டுமா அம்மா......ஆமாம்—ஆடம்பரக்காரர்கள் வாழும் வேழநாடு இது— இங்கே இப்படி இருக்கத்தான் வேண்டும்.

கற்பகம்: மதிவாணா, இப்படிச் செல்லமாக வாழாமல் கிராமத்திலே, குடிசையிலே இருந்தது - திலகாவுக்குப் பிடிக்குமாடா.

திலகா: என் அண்ணா இருக்கிறார்—எனக்கு என்ன குறை? எதுவும் கேட்பேன் — கிடைக்கும்......அப்படித் தானே அண்ணா!

(மதிவாணன் "உன் தலைமீதினிலே" என்ற பாடலை மெல்லப் பாட, அவனது வாயைப் பொத்தியவாறு,)

திலகா: அந்தப் பழைய பாட்டு வேண்டாம். தெரிகிறதா அண்ணா? இப்போது......

கற்பகம்: உன் அண்ணன் பெரிய இசைவாணன்...

திலகா: இது என்ன பிரமாதம் என்கிறாயா அம்மா? பாரேன்! அண்ணா ஆஸ்தான கவியாகப் போகிறார்! என் அண்ணன் காலடியில் தங்கத்தைக் கொண்டு வந்து கொட்டப் போகிறார்கள்!

(மதிவாணனுக்கு, தங்கம் என்றதும், எடைக்கு எடை தங்கம் என்ற குரலொலி கேட்கிறது. உடனே திலகாவை வேகமாக உள்ளே இழுத்துக்கொண்டு செல்கிறான்.)

(வீதியில் இரண்டு பண்டாரங்கள் பேசிக் கொள்கின்றனர்.)

ஒருவன்: இப்போதல்லவா வேழ நாடு செழிப்பாக இருக்கிறது! மக்கள் பக்திரசத்தைப் பருகி எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறார்கள்!

மற்: எல்லாம் மதிவாணனின் இசை தந்த செல்வமப்பா! மக்களை எல்லாம் பக்திமான்களாக்கி விட்டார்! கலை என்றால் சாமான்யமா? அதன் சக்தியே சக்தி......

(அரசன் வெற்றிவேலனின் மந்திராலோசனை அறை. அரசனின் குழந்தை மரகதமணி அரசருடன் விளையாடுகிறது, அரசன் அமைச்சருடன் பேசுகிறான்)

வெற்றி வேலன்:—சதிகாரர்களின் பேச்சை ஏன் நம்பி நாசமாகிறார்கள் மக்கள்?

அமைச்சர்: பசி, பட்டினி, இவைகளைக் காட்டித் தூண்டுகிறார்கள் தந்திரக்காரர்கள்.

(மாசிலாமணி வருகிறான்)

வெற்றி: கட்டுக் காவலை மீறும் துணிவு பிறந்துவிட்டது.

மாசிலாமணி: யாருக்கு? மக்களுக்குத் தானே! என் துணிவு பிறக்காது? பாவ புண்யம் பற்றிய பயம் குறைந்துவிட்டது.

மரகதம்: (மாசிலாமணியைப் பார்த்து) நான் அங்கே போகிறேன்-எனக்குப் பயமா இருக்கு-இவனைப் பார்த்தா.

வெற்றி: (சிரித்தபடி குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு.........) போ, கண்ணே. போய் விளையாடு-டே!...போகூட.

(குழந்தை மான் குட்டியை இழுத்துக்கொண்டு பணியாளுடன் செல்கிறது.)

அமைச்சர்: புதுமார்க்கம் புயல் போலக் கிளம்பி விட்டது. பழைய முறை அழிந்து விடும் போலிருக்கிறது.

மாசிலாமணி:—நாம் காலம் அறிந்து பணி புரியாவிட்டால் நிச்சயம் அழியும்......

வெற்றி: கடுமையான சட்டம் இருக்க வேண்டும்.

மாசிலாமணி: போதாது வேந்தே! போதாது! மக்களின் மனமாசு போக வேண்டும். மடாலயத்திலே புதிய திட்டம் தயாராகிறது.

அமைச்சர்: அருமறையானந்தரின் உழைப்பு பலன் தருகிறது.

மாசிலாமணி: (குழைவாக)

வேந்தன் ஆதரவு. கிடைத்து விட்டால் விதண்டாவாதிகளை ஒழித்து விடமுடியும். சதி தானாகச் சாயும்.

(பணியாட்கள் அமைச்சருக்கும் மாசிலாமணிக்கும் பழரசக் கோப்பை தருகிறார்கள்.........)

வெற்றி: என் ஆதரவு எப்போதும் உண்டு.

மாசிலாமணி : (கோப்பையை ஏந்தியபடி) பிரசாரம் வேண்டும் பழைய மார்க்கத்திற்கு.

அமைச்சர்: (கோப்பையைக் கீழே வைத்து விட்டு) பணம் தானே? தருகிறோம்?

மாசிலாமணி: கலைமூலம் நமது காரியத்தைச் சுலபத்திலே முடித்து விடலாம் வேந்தே! மதிவாணனின் மதுர கீதம்—மக்களைச் சொக்க வைக்கிறது.

வெற்றி: கேள்விப்பட்டேன்! அருமையான இசைத் திறமை! அமைச்சரே, மதிவாணனை ஆஸ்தான கவியாக நியமித்தால் என்ன?

மாசி: அதைக் கூறவே வந்தேன்.

[கோப்பையைப் பார்க்கிறான் அருவருப்புடன்]

வெற்றி: இதிலென்ன கஷ்டம்?

மாசி: மண்டலத்தில் புகழ் பரவும்—மார்க்கம் தழைக்கும்.

[மன்னன் புன்னகை புரிகிறான். சரி என்று மன்னன் ஜாடை காட்ட, அமைச்சரும் மாசிலாமணியும் புறப்படுகிறார்கள். மாசிலாமணி கோப்பையைக் கீழே வைக்க, அமைச்சர்......]

அமைச்சர்: பருகவில்லையே பழ ரசம்?

மாசி: இல்லை. பூச்சி விழுந்து விட்டது...

[இருவரும் போகின்றனர். மன்னன் வேறு பக்கம் உள்ளே செல்கிறான். பணியாள் கோப்பையில் கிடந்த பூச்சியை எடுத்து எறிந்து விட்டு யாரும் காணாதபோது பருகுகிறான்...]

வேலைக்காரன்: பூச்சி, புழு விழுந்தால் தானே நமக்கு கிடைக்குது இந்தப் பானமெல்லாம். பூச்சி புழுக்களே வாழ்க! வாழ்க!

[வெற்றி வேலனின் கொலுமண்டபம், பிரமுகர்களும் அமைச்சர்களும் உள்ளனர். மதிவாணன் முகமலர்ச்சியுடன் அமர்ந்திருக்கிறான். நியமனப் பத்திரத்தை அரசரிடம் அமைச்சர் தருகிறார். மன்னர் அதைப்பெற்றுக்கொண்டு.]

வெற்றி: இன்று முதல் மதிவாணனை நமது ஆஸ்தான கவியாக நியமித்து இருக்கிறோம்—இதோ—அதற்கான பட்டயம்.

(மதிவாணன் எழுந்து, வணக்கம் செய்து பட்டயத்தைப் பெறுகிறான். அமைச்சர் ஜாடை காட்ட, ஒரு பணியாள் பட்டு பீதாம்பரம் உள்ள தட்டைத் தருகிறான். அவையினர் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்)

(அரண்மனைத் தோட்டம். மதிவாணனும் மரகதமும் பேசுதல்.)

மதிவாணன்: நீ பாடமாட்டே...?

மரகதம்: என்ன பாட்டு மாமா பாடறது?...

மதி: உனக்குத் தெரிஞ்ச பாட்டைப் பாடு.

மரகதம்: பாடட்டுமா?

மதி: ஊம்...

மரகதம்:
                  சுட்ட சாம்பல் பூசிடுவார் சாமியாருமல்ல!
                  சுருதியை விட்டுப் பாடிடுவார் பாகவதருமல்ல!
                  கட்டவிழ்த்து விட்டுவிட்டால் கண்ட பக்கம் திரிவார்!
                  கண்டபக்கம் திரிவார்! காகிதமும் தின்பாரவரைக்
                  கண்டு சொல்லு, மாமா?

இவரு யாருன்னு சொல்லுங்க மாமா பார்ப்போம்...?

மதி: நீயே சொல்லு...?

மரகதம்: ஓ...மாமாவுக்குத் தெரியலே! கழுதை மாமா!...கழுதை...

மதி: சீ—குறும்புக்காரப் பொண்ணு–உன்னைப் பாட்டுப் பாடச் சொன்னேனா? விடுகவி பாடச் சொன்னேனா—

மரகதம்: மாமா! மாமா! எனக்கு ஒரு நல்ல பாட்டு சொல்லிக் கொடுங்க—மாமா—

மதி: நல்ல பாட்டு...(நிலவு பாடல்)

மதிவாணன் பாடல்

இராகம்: தேஸ் தாளம்: ஆதி


நிலவே நிலவே ஆடவா?
     நீயன்புடனே ஓடிவா?
மலராம் அரும்பின் எழில் மேவும்
     மரகத மணியுடன் ஆடவா? (நில)


நீலவானக் கடல் நிதியே
      நித்தில மணியே வெண்மதியே.
சீலம் அருளறம் சேருங்குணவதி
      சிங்க நிதியுடன் ஆடவா? (நில)
                         நீ
மண்ணில் அமுதம் சிந்திடுவாய்-இவள்
      மழலைக் கமுதம் தந்திடுவாள்
உன்னில் இவளே உயர்ந்தவளதனால்
      உல்லாசமாக ஆடவா? (நில)

(வெற்றிவேலனின் அரண்மனை–உட்புறம்.)

அமைச்சர்: வேந்தே! தங்கள் உடலிலே புதிதாக ஒரு மினு மினுப்பு தெரிகிறது.

வெற்றிவேலன்: பைத்தியக்காரர்! தைலம் தடவினால் மினு மினுப்பு இராதா?

அமை: அது மட்டுமல்ல; உடற்கட்டும் வளமாகி வருமாம்-வைத்தியர் சொன்னார்.

வெற்றி: எனக்கும்தான் சொன்னார். இது வீண் வேலை அடிக்கடி வேட்டையாடினால் போதும். உடலும் வளமாகும். உள்ளமும் சுறு சுறுப்பாகும்.

(ஓர் ஓலையைக் காட்டியபடி)

அமை: கலை விழாவாம் வேந்தே, சோலை நாட்டில்— வெற்றி: அழைப்பிதழோ?

அமை: ஆமாம் அரசே! வேழநாட்டுக் கலைவாணர்களை அவசியம் அனுப்ப வேண்டுமாம்.

வெற்றி: (அலட்சியமாக) சரி! வேறு முக்கியமான ஓலைகள்?

அமை: (ஆர்வத்துடன்) வேந்தே! இதைவிட முக்கியமானது வேறு என்ன இருக்க முடியும்? நமது மதிவாணன் கலை விழாவிலே வெற்றி பெற்றால், வேழ நாட்டின் புகழ் பரவும்.

வெற்றி: கலை விழாவிலே வெற்றி பெற்று விட்டால் போதுமா?

அமை: போதாது–ஆகவே தான் அரசே, தங்கள் திருமணத் திட்டத்தையும் இதே சமயம் நிறைவேற்றி விட வேண்டும் என்று கூறுகிறேன். சோலை நாட்டில் ஒரு கன்னி–கட்டழகி–குமார தேவி–ஆட்சி தெரியுமே தங்களுக்கு...நாடு வளமானது வேந்தே, வேழ நாட்டை விடப் பெரிது அளவில்...

வெற்றி: வளமான நாடுதான்–ஆனால் அரசி அகம்பாவக்காரியாம்—அரசர்கள் பலரை அவமதித்தவளாம்.

அமை: வதந்தி—வீணான வதந்தி! வேந்தே! எட்டாப் பழம் எட்டிப்பழம் என்பார்களே–அது போல–

வெற்றி: நமக்குமட்டும் குமார தேவியின் சம்மதம் கிடைக்கும் என்று எப்படி நம்புவது?

அமை: ஏற்பாடு செய்ய முடியும் வேந்தே! கலை விழாவிலே...அதற்குத் துவக்கம்—

வெற்றி: முதலில் குமாரியின் உண்மையான குணம் தெரிய வேண்டும் எனக்கு—

அமை: மதிவாணன் அதை அறிந்து கூறுவான். அவனிடம் என் திட்டத்தை நான் விளக்கமாகக் கூறி அனுப்பி வைக்கிறேன்.

(மன்னன் சம்மதம் தெரிவிக்கிறான். அமைச்சர் களிப்புடன் வெளியே செல்கிறார்.)

(மதிவாணன் மாளிகை உட்புறம். விசாரத்துடன் வீடு திரும்பிய மதிவாணனைக் கண்டதும் திலகா களிப்புடன்.)

திலகா: அண்ணா! அண்ணா! கலை விழாவிற்குப் போகிறாயாமே சோலை நாட்டுக்கு? சோலை நாட்டிலே புதுவிதமான நகைகள் ஆடைகள் இருக்கும்...

மதி: இருக்கும்—அதெல்லாம் உனக்கு வேண்டும் அவ்வளவு தானே!

திலகா: (செல்லப் பிடிவாதத்துடன்) ஆமாம். வேண்டும். ஏன், கேட்கக் கூடாதா—என் அண்ணனைக் கேட்காமல் வேறு யாரைக் கேட்பது.

மதி: உன் காதலனை.

திலகா: போங்கண்ணா! கேலி தான் எப்போதும்.

(ஓடி விடுகிறாள் வெட்கப்பட்டுக் கொண்டு, இக்காட்சியைக் கண்டு கற்பகத்தம்மை மகிழ்ந்து.)

கற்பகம்: மதிவாணா–திலகாவின் திருமணத்தை முடித்துவிட வேண்டுமடா–சீக்கிரம்—

மதி: ஆமாம்மா. சோலைநாடுபோய்த் திரும்பியதும் முதல் வேலை அதுதான். அவனும் நிரம்பக் கோபித்துக் கொள்கிறானாம்.

(அறநெறிக் கழகம். கவிராயர், பூங்காவனத்துடன் பேசுதல்)

கவி: என்ன சொல்லித்தான் ஏமாற்றுகிறார்கள் எத்தர்கள்.....

பூங்காவனம்: பழங்காலப் பெருமையைக் கூறித்தான்......

கவி: ம்......பழங்காலம்......பழங்காலத்திலே என்ன பாம்பு கடித்தால் மக்கள் சாகாதிருந்தார்களா? தேள் கொட்டினால் துடிக்காதிருந்தார்களா? நல்லதும் கெட்டதும் எந்தக் காலத்திலும் இருக்கத்தானே செய்கிறது...... நமது புத்தியில் தெளிவு வேண்டும். அதுதானே முக்கியம்......

பூங்காவனம்: ஆமாம்......ஆனால் சொக்கி விடுகிறார்கள் இசையில். சொல்வதையெல்லாம் நம்பிவிடுகிறார்கள்.

(பேசிக்கொண்டே இருவரும் வேழ நாட்டு ராஜ வீதியை அடைகிறார்கள்; அங்கே...)

பூங்காவனம்: தெரிகிறதா...ஐயனே!

கவிராயர்: யார் அப்பா—இளவரசன் போல?

பூங்காவனம்: இளவரசனல்ல—இசை அரசன் மதிவாணன்.

கவிராயர்: அவனா...?

பூங்காவனம்: அரசர் அவனுக்கு தர்பார் உடை அணியும் அந்தஸ்து அளித்திருக்கிறார்.

(சோலை நாட்டு அரண்மனை உட்புறம்...தனி அறை–சுவற்றிலே மயில் கொடிச் சின்னம்—ஓலைகளைப் பிரித்துக் கொடுத்தபடி இருக்கிறாள், ஒரு பணிப்பெண்— அழகிய தோற்றமும் அறிவு ஒளி வீசும் கண்களும் கொண்ட அரசி குமார தேவி ஓலைகளைப் பார்த்தபடி,)

குமார தேவி: செந்தாமரை இந்த ஆண்டு கலை விழா அதிக சிறப்பாக இருக்கும். இதோ பார்த்தாயா? இது தொண்டை நாட்டுக் கலா வாணர் ஓலை! இது......அடடே...வேழ நாடு! வேழ நாட்டிலே கூடவா கலை......!

செந்தாமரை: அதென்ன தேவி! அப்படிச் சொல்லுகிறீர்கள்!

குமாரி: வேழ நாட்டு வேந்தன் வெற்றி வேலன் மண்ணாசை பிடித்தவன். அவன் கலையை எப்படி வளர்க்க முடியும்? என்ன அதிசயமோ —தெரியவில்லை! வேழ நாட்டிலிருந்து மதிவாணன் என்ற கலைஞன், வருகிறானாம்!

செந்தா: பலர், ஏற்கனவே வந்து விட்டார்கள். தேவி. கலை விழாவுக்கான ஏற்பாடே, கண் கொள்ளாக் காட்சியாக விருக்கிறது.

குமாரி: கள்ளீ! பார்த்து விட்டு வந்து விட்டாயா. நீ மட்டும்.

செங்: ஆமாம். தேவி! தாங்கள் பாசறையைப் பார்வையிடப் போனீர்களே!

குமாரி: அப்போது தலைவலி என்று என்னிடம் சொன்னாயே!

செந்: வேறு என்ன சொல்வது தேவி!

குமாரி: (அவளைக் கிள்ளி) என்னை ஏய்த்து விட்டா போயிருந்தாய்! சரி—இரு இரு—நான் போகப்போகிறேன் விழாக் காட்சிகளைக் காண—அப்போது இங்கேயே நீ இருக்க வேண்டும்.

செந்: தனியாகவா?

குமாரி: தனியாகத்தான்! ஏன்? ஏனடி செந்தாமரை? வளை அணிந்த கரமாயிற்றே என்கிறாயா?

செந்: நான் சொல்வேனா...தேவி– அந்தக் கரம் வாள் ஏந்தி வீரத்தை விளக்கியதைக் கண்டவள் அல்லவா நான். (சோகமாக) தேவி இப்போதே புறப்படுவதாகத் தீர்மானமோ—.

குமாரி: (எழுந்து) ஆமாமடி, ஆமாம். இப்போதே தான். ஆனால் இப்படி அல்ல.

(புன்சிரிப்புடன் உள்ளே செல்கிறாள். செந்தாமரை, குமாரி உள்ளே செல்வதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்)

(சோலை நாட்டுக் கலைவிழா, மதிவாணன், வாலிபன் ஒருவனிடம் பேசுதல்)

மதிவாணன்: அழகான ஓவியம். தீட்டியவர் திறமைசாலி.

வாலிபன்: சாமான்யமான திறமைசாலியல்ல...... இதுபோலத் தீட்டக் கூடியவர் வேறு யாரும் இருக்க முடியாது.

மதிவாணன்: அப்படி சொல்லிவிடக் கூடாது.

வாலிபன்: குறை என்ன காண்கிறாய் இதிலே...?

மதி: நிலவுமேலே...

வாலி: ஆமாம்...பால்வண்ண நிலவு.

மதி: குளம் கீழே.

வாலி: நிலவின் ஒளி. அதிலே அழகாகத் தெரிகிறது...

மதி: அல்லி மலர்ந்திருக்கிறது.

வாலி: ஏன் அழகாக இல்லையோ அல்லி...?

மதி: அற்புதமாக இருக்கிறது...தம்பி, அற்புதமாக இருக்கிறது. ஆனால், அதோ, தாமரை பார்த்தாயா...?

வா: அதுமட்டுமென்ன அழகாக இல்லையோ?

மதி: கண் படைத்த எவனும் அப்படிக் கூறமாட்டான்...ஆனால் மேலே நிலவு! கீழே குளத்தில் தாமரை!...கதிரவனைக் கண்டு கமலம் மலரும்! நிலவைக் கண்டு அல்லி மலரும்!

வாலி: உண்மைதான்...

மதி: தாமரை மலர்ந்த நிலையில் இருக்கக்கூடாது... குவிந்திருக்கவேண்டும்.

வாலி: மன்னிக்கவேண்டும்...தாங்கள் கலை விழாவுக்கு வந்திருக்கிறீரா...? இசைவாணரா?

மதி: பாடத்தெரியும், வேழ நாடு.

வாலி: ஓவியத்தை நானுந்தான் கூர்ந்து பார்த்தேன்...இந்தக் குறை எனக்குத் தெரியவேயில்லை.

மதி: ஓவியம் அழகாக இருப்பதால் குற்றம் சுலபத்தில் தெரியாது...ம்...யார் தம்பி...நீ?

வாலி: யாரா...? தம்பி தான்...வருகிறேன்.

(வாலிபன் போகிறான்.)

(மடாலயத்தின் உட்புறம். அருமறையானந்தரின் தனியறை, விசேஷ அலங்காரத்துடன் இருக்கிறது. மாசிலாமணியிடம் மடாதிபதி பேசிக்கொண்டிருக்கிறார்.)

அருமறை: சொர்க்கவாசல்! பெயரைக் கேட்டதும் மக்கள் சொக்கிவிடுவர்—உள்ளே ஒருபுறம் கைலாயம் (படம் போட்டுக் காட்டுகிறார் தரையில்)...

மாசிலாமணி: ஹா! அருமையாக இருக்கும்.

அருமறை: ஓர்புறம் வைகுந்தம்.

மாசி: அரியும் அரனும் வேறு வேறு அல்ல என்ற கோட்பாட்டை விளக்க.

அரு: ஆமாம் (படம் போட்டபடி) பிரம்மலோகம், இந்திரலோகம், எல்லாம் புராண வர்ணனைப்படி அமைக்க வேண்டும். இங்கு கற்பக விருட்சம்! இது காமதேனு! பளிங்கால் உருவம்.

மாசி: மக்கள் பரவசமடைவர் குருநாதா!

அருமறை: செலவு ஏராளமாக ஆகும். காணிக்கை கிடைக்குமா?

மாசிலாமணி: சந்தேகமா? காணிக்கைச் சீட்டுகள் இலட்சக்கணக்கிலே தயாரித்து, நமது உபதேசியார்கள் மூலம் நாடெங்கும் பரப்பினால், காணிக்கை குவியும்.

அருமறை: நல்ல யோசனை—காணிக்கைச் சீட்டு...உம்...பெயர் அவ்விதம் இருப்பதைவிட, அருள் சீட்டு என்றிருந்தால் நல்லது.

மாசிலாமணி: அருள் சீட்டு...ஹா...ஹா அருமையான பெயர். வேந்தனிடம் நானே முதல் சீட்டு தருகிறேன்.

அருமறை: நடு நாட்டரசனுக்கு இதுபற்றி ஓலை அனுப்புகிறேன்.

மாசிலாமணி: தங்கள் திருமுகம் கண்டதும் நடு நாட்டரசர் தாராளமாகக் காணிக்கை தருவார்.


(வெற்றிவேலன் அரண்மனை—பாசறைக்கூடம்)

மாசிலாமணி: இங்கு கைலாயம். இங்கு வைகுந்தம்

வெற்றிவேலன்: (படத்தைப் பார்த்தபடி) ஆமாம் பிரம்மலோகம்! இந்திரலோகம்! இதெல்லாம் என்ன?

மாசிலாமணி: சொர்க்கவாசல்—மன்னா! மக்கள் கண் முன், சொர்க்கலோக மகிமையைக் காட்ட விரும்புகிறார் அருமறையானந்தர். இந்தத் திட்டப்படி ஒரு பிரம்மாண்டமான ஆலயம் அமைத்து......

சிற்பி: புதிய ஆலயமா?

மாசிலாமணி: பல கோயில்கள் உள்ளன. ஆனால் இது பத்தோடு பதினொன்று அல்ல. நமது புராதன மார்க்கப் பாதுகாவல் கோட்டை! கைலாயத்தை யார் கண்டார்கள்? வைகுந்தம் யார் கண்டது! என்று பேசும் விதண்டாவாதிகளின் வாய்க்கொழுப்பை அடக்க, இந்த ஏற்பாடு. "முட்டாளே! இதோ பார், இவ்விதம் தான் கைலாயம் இருக்கும். வைகுந்தத்தின் வசீகரத்தைப் பார்" என்று ஏடுகளைக் காட்டுவதைவிட இப்படி ஒரு இடமே அமைத்துக் கட்டினால், மந்தமதியினரும், புரிந்து கொள்வார்களல்லவா?

வெற்றிவேலன: உண்மைதான்!

மாசிலாமணி: உள்ளத்திலே உயர்ந்த எண்ணம் மலரும்.

சிற்பி: புதிதாக இதுபோலக் கட்ட திட்டமா?

மாசி: திரு அருளின் துணைகொண்டு அருமறையானந்தர் இந்தப் புனித காரியத்தைத் துவக்கிவிட்டார்.

வெற்றி: அருமையான ஏற்பாடு...நானே பிரபுக்களுக்குச் சொல்கிறேன் சொர்க்கவாசல் மகிமை பற்றி... தாராளமாகக் காணிக்கை தருவர்...

மாசி: அவ்வளவு சிரமம் தங்களுக்குத் தரவேண்டுமா?

வெற்றி: சிரமமா? என் கடமை அல்லவா?

சிற்பி: பிறகு வருகிறேன் மன்னா! வணக்கம்.

மாசி: காணிக்கை தரவேண்டும் என்று தாங்கள் கூறுவதைவிட...

வெற்றி: வேறுமுறையிருந்தால் சொல்லுங்கள் செய்வோம்.

மாசி: யார் யார் காணிக்கை செலுத்தி அருள் சீட்டு பெறுகிறார்களோ அவர்களுக்கு அரசாங்க மரியாதை, பதவி உயர்வு இவை தரப்படும் என்று ஒரு திட்டம் ஏற்பட்டுவிட்டால்...

வெற்றி: இதிலென்ன சிரமம்? அருள் சீட்டுதான் இனி நமது ஆதரவு கோருவோர் காட்டவேண்டிய அனுமதி சீட்டு என்று கூறிவிடுகிறேன்.

மாசி: போதும் வேந்தே! அந்த ஒரு ஏற்பாடு போதும், குருதேவரின் திட்டம் நிறைவேற.

(மன்னன் வணக்கம் செய்ய மாசிலாமணி செல்கிறான். அவன் பின்னோடு சென்று பணியாள்...)

பணியாள்: ஒரு சிறு சந்தேகமுங்க, படத்தைப் பார்த்ததிலே.

மாசி: மரமண்டே; என்னடா சந்தேகம்,

பணியாள்: யாருக்கும் ஏற்படக்கூடிய சந்தேகம் தாங்க.

மாசி: சொல்லடா என்ன சந்தேகம்?

பணியாள்: சொர்க்கலோகப் படத்திலே, கைலாயம், வைகுந்தம், அந்த லோகம், இந்த லோகம் எல்லாம்தான் இருக்குது...ஆனா...

மாசி: ஆனா—என்னடா, ஆனா...

வேலை : சொர்க்கலோகம் எப்படி எப்படி இருக்கும் என்று தான் படம் காட்டுதே தவிர அங்கே போகிற பாதை தெரியலைங்களே படத்திலே—

மாசி: போடா போக்கிரி.

பணியாள்: பாதையைக் காட்டாத காரணம் என்னங்க.

[மாசிலாமணி முறைத்துப் பார்க்க, பணியாளன் அசட்டுக் சிரிப்புடன் சென்று விடுகிறான்.]

[கலைவிழாவில், மதிவாணனும் வாலிபனும்]

மதிவாணன்: தம்பீ வந்துவிட்டாயா? வா...வா...

வாலிபன்: நான் வருவேனென்று...

மதிவாணன்: எதிர் பார்த்துக்கொண்டு தானிருக்கிறேன்.

வாலிபன்: ஈட்டி எறியலாமே (ஈட்டி எறிகிறார்கள்)

மதிவாணன்: கெட்டிக்காரனடா நீ

வாலிபன்: என்ன பரிசு எனக்கு?

மதி: எனக்குக் கலைவிழாவில், கிடைப்பதில் பாதி.

வாலி: நிஜமாகவா?

மதி: நிஜமாகத்தான். வா...

வாலி: ஊஹூம்...நாளை மாலை...

[வாலிபன் போகிறான்]

வேழநாட்டு மடாலயத்தில் மடாதிபதி முத்திரையிடுகிறார் அருள்சீட்டுகளில், ஊர்ப் பிரமுகர்கள் பலர், சீட்டுக்களை வாங்குகின்றனர். ஒருவர் கண்களில் ஒற்றிக்கொள்கிறார் சீட்டை, ஒருவர் ஒரு கத்தை சீட்டுகளை வாங்கி ஒரு பேழையில் வைத்துப் பூட்டுகிறார்.

"அருள் சீட்டு உடையாரே அரனடி சேர்வார்!" "பொருள் தேடி அலைந்தது போதும் மாந்தரே!. ஐயன் அருள் தேட வாரீர் இன்றே!" "அருள் சீட்டு உடையார், அரண்மனை உடையார்” என்பன போன்ற விளம்பரப் பலகைகள் பல காணப்படுகின்றன. மடாதிபதியின் பேழை பணத்தால் நிறைகிறது.

வீதியில் ஓரிடம், மடாலய ஆட்கள் "அருமறையானந்தர் வாழ்க!" என்று முழக்கமிட்டவண்ணம், விருதுகளும் கொடிகளும் ஏந்தியபடி வருகிறார்கள்.

கவிராயரும் பூங்காவனமும் ஒரு வீட்டின் படிக்கட்டில் ஏறிநின்று கவனிக்கிறார்கள்.

"அருள் சீட்டு உடையாரே அரன் அருள் பெறுவாரே, பொருள் தேடி அலைவீரே, பொன்னடியை மறந்தீரே!" என்னும் பதிகம் பொறிக்கப்பட்ட விளம்பரக் கொடியும்; "சொர்க்கவாசல் கைங்கரியம், இன்றே பெறுவீர் அருள் சீட்டு "இகபரசுகம்" தரும் அருள்சீட்டு இன்றே பெறுவீர் மெய்யன்பர்களே." "மார்க்கம் தழைக்க மாநிலம் செழிக்க அருள்சீட்டு பெறுவீர்," என்று வகை வகையாகப் பொறிக்கப்பட்ட விளம்பரத் தாள்களையும் ஏந்தியபடி ஊர்வலம் வருகிறது

(ஊர் சாவடி. கவிராயரும் பூங்காவனமும் நிற்கிறார்கள். எதிரே ஒரு சிறு கூட்டம். கவிராயர் உணர்ச்சியுடன் பேசுகிறார்.

கவிராயர்:— மோசம்! அக்ரமம்! அருள் சீட்டு பெறாதீர்—அறிவை, இழக்காதீர் அன்பு, அறம் அஹிம்சை, தொண்டு, தூய்மை இவைகளைத்தான் ஆண்டவன் கேட்கிறான். அருள் சீட்டை அல்ல. மோசாண்டிகளின் பேச்சைக் கேட்டு ஏமாறாதீர்கள். அருள் சீட்டு வாங்க வேண்டாம்—கிழித்தெறியுங்கள்— கொளுத்துங்கள்.

கூட்டத்தில் ஒருகுரல்: பைத்தியம்! கிழப்பைத்தியம்!

கவிராயர்: நானா!

குரல்: பாருங்கள் பாருங்கள்! நம்மைப் பைத்தியம் என்கிறான். துரத்துங்கள்,

(மேலே சிலர் பாய்கிறார்கள். பலர் தாக்குகிறார்கள்)

(கலைவிழா விடுதி! மதிவாணனும் வாலிபனும் உள்ளனர். மதிவாணன் பாடுகிறான்.)

மதிவாணன் பாடல்

இராகம்: வாசஸ்பதி தாளம்: ஆதி

பல்லவி


எங்கும் இன்பமே!...... உல
        கெல்லாம் இன்பமே யாகுமினி (எ)

அ. பல்லவி

மங்களமே பெறும் மாண்பு கொண்டாடும்.
        மானிட வாழ்வில் மனதுதனாடும்
                   புனிதமான நினைவுபோல

(எ)


சரணம்


நிலவினிலே மாலைநேரத்திலே-அலை
         நீத்திவரும் ஆழியோரத்திலே-வெண் (நி)
களைதரும் அமுதான கானத்திலே-இரு
         காதலர் பாடும் சிங்காரத்திலே
மலர் நறுமணம் வீசும் வனந்தன்னிலே-யவ்
         வனந்தன்னிலே மக்கள் கலந்தன்னிலே-புய
வலிமைசேர் மறவர் திறனிலே-தனது
         மழலைபேசும் மொழி விழியிலே-பெண்கள்
         எழிலிலே உழவர் செயலிலே-அறிஞர்
         சபையிலே புலவர் கவியிலே-ஐம்
         புலனிலே நன்றே காணும்
               அறிவானந்தம் இன்பம்
               அன்பால் மேவும் இன்பம்
பொங்கும் என்றும் சொந்தம் இயல்வள (எங்)

மதிவாணன்: எப்படி—?

வாலிபன்: இசையில் மட்டுமல்ல—உன் பேச்சு—பார்வை எல்லாமே இன்பம் தருவதாகத்தான் இருக்கிறது—இந்த இன்பத்தை நான் அரண்மனையில்—

(உடனே பேச்சை வாலிபன் தயக்கத்துடன் நிறுத்திக் கொள்கிறான்.)

மதி: அரண்மனை வாசியா?

வாலி: (திடுக்கிட்டு) ஆமாம், அரண்மனைச் சேவகன்

மதி: ஓஹோ! அதனால்தான் அலங்காரம் இருக்கிறது உன் உடையில்! குறும்பு இருக்கிறது உன் பேச்சில்!

வாலி: சரி—நேரமாகிவிட்டது. நான் வருகிறேன்.

(போக முயற்சித்து எழுந்து நின்ற வாலிபனை ஆசனத்திலே தள்ளி,)

மதி: தம்பீ. இதோ பார், நான் கலை விழாவிற்காக மட்டும் சோலை நாட்டுக்கு வரவில்லை. வேறு காரியம் இருக்கிறது—உன் உதவி வேண்டும்.

வாலி: (ஆச்சரியப்பட்டு) வேறு காரியமா?

மதி: ஆமாம். எங்கள் வேழ நாட்டு மன்னர் திருமண விஷயமான வேலை! தம்பீ, இந்த நாட்டு அரசியை உனக்கு நன்றாகத் தெரியுமே!

வாலி: (திகைத்து) தெரியும்—அரண்மனைச் சேவகன் தானே நான்!

மதி: ஆமாம்...அழகியா உங்கள் ராணி!

வாலி: (புன்சிரிப்புடன்) அழகி என்றுதான் எல்லோரும் கூறக் கேட்டிருக்கிறேன்.

மதி: (அவன் தோளைத் தட்டி) உன் அபிப்பிராயம் என்ன அதைச் சொல்லடா தம்பி! நீ நல்ல ரசிகன். அதனால்தான் கேட்கிறேன், அரசி அறிவுள்ளவளா?

வாலி: (கோபம் கொண்ட முறையில்) எங்கள் அரசி அழகுள்ளவள்—அறிவுள்ளவள் வீரமுள்ளவள்–வெற்றி வேலர்களை விரும்பாதவள்.

மதி: யாரிடமாவது காதல்?

வாலி: மனதைப் பறிகொடுத்து விட்டாள்.

மதி: யார் அந்தப் பாக்கியசாலி!

வாலி: (குறும்பாக) உன் வயது இருக்கும்,

மதி: ஏதேது—என்னைப் போலவே இருப்பான் என்று கூறி விடுவாய் போலிருக்கிறதே—

(வாலிபன் போக முயல்கிறான். உடனே. மதி, வாலிபனைச் சேர்த்துக் கட்டிப் பிடிக்க முயல்கிறான். வாலிபன் அவன் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். ஓரளவு பயம் தோன்றுகிறது வாலிபன் முகத்தில்.)

வாலிபன்: சரி–சரி—நான் இருக்கிறேன் - என்னைத் தொல்லை செய்யாதே–

மதி: ஆம்!...இதுதான் நல்ல தம்பிக்கு அழகு—உட்கார்,

(வாலிபன் எழுந்திருக்க, மதி, வாலிபன் கரத்தைப் பிடித்து கீழே இழுத்து உட்காரவைத்து.)

மதி: இன்று இரவு இங்கேதான் விருந்து! காலையில்தான் விடுதலை—உனக்கு!

வாலி: ஐயய்யோ! முடியாது-போய்த் தீரவேண்டும்!

(மதிவாணன் எழுந்து வாலிபன் கரத்தைப் பிடித்துத் தூக்கியபடி...?

மதி: சரி–புறப்படு-உன் வீட்டுக்கே போவோம்...எனக்கு அங்கு விருந்து-

வாலிபன்: (கலக்கத்துடன்) இதேதடா சங்கடம் என்னுடன் வரக்கூடாது!

மதி: போக்கிரியடா நீ! நீயும் இங்கே இருக்க மறுக்கிறாய்-நானும் உன் வீட்டுக்கு வரக்கூடாது என்கிறாய்.

வாலி: என் நிலையறியாமல் பேசினால், நான் என்ன செய்ய முடியும்? (சற்று கண்டிப்பாக) நான் போய்த்தான் தீரவேண்டும்.

மதி: அதுதான் கூடாது—

[பழத்தட்டு பலகாரத் தட்டுகளை எதிரே மேஜை மீது வைத்து, ஓர் ஆசனத்தில் வாலிபனைத்தள்ளி, தானும் ஓர் ஆசனத்தில் உட்கார்ந்துக்கொண்டு...]

மதி: சாப்பிடு, உம், நெடுநேரமாகப் பேசிய களைப்பு உனக்கு! சாப்பிடு!

வாலி: பசியில்லையே! தொல்லையாகி விட்டதே!

[மதிவாணன் ஒரு பழத்தை எடுத்து வாலிபன் வாயிலே திணிக்க முயல்கிறான்...]

வாலி: சரி—சரி—நானே சாப்பிடுகிறேன்.

மதி: 'அடியாத மாடு படியாது' என்பார்களே அது சரியாகத்தான் இருக்கிறது, அதோ அந்த மாதுளை...

வாலி: போதும்.

மதி: பலாச்சுளை?

வாலி: மூன்று தின்றேனே!

மதி: அண்டப்புளுகன்—நான் அந்தத் தட்டிலே வைத்ததே மூன்று—அவை அப்படியே இருக்கே!

[வாலிபன் மேல்கொண்டு தகராறு செய்யாமல் சாப்பிட, அவன் சாப்பிடுவதைக் கண்டு களித்த படி—]

மதி: உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?

வாலி: ஏற்பாடாகி விட்டது—விரைவிலே நடைபெறும்.

மதி: பெண் எந்தநாடு—உம்—பால் சாப்பிடு—எந்த ஊர்—அழகியா—பால் சாப்பிட்டுவிட்டுச் சொல்லு—

வாலி: விவரம் நாளையதினம் கூறுகிறேன். இதோ பார், நேரமாகி விட்டது.
[கவலையுடன் உலாவுகிறான் வாலிபன். அவன் நிலை கண்டு மதி ஆச்சரிய மடைகிறான். வாலிபன் மதியைக் கோபமாகப் பார்க்கிறான் ஒரு கணம். மதி பாசத்துடன் பார்க்கக் கண்டு வாலிபனின் கோபம் தானாகத் தணிகிறது]—

வாலிபன்: என்ன செய்வதென்றே தெரியவில்லையே! என்னைப் போகவிட மாட்டீர்கள்?

மதி: ஊ ஹூம்!

வாலி: (பூமியில் காலைக் குழந்தைபோல உதைத்துக் கொண்டு...என்ன சங்கடம் இது! இதைக் கேளுங்கள்—நான்—நான்.

[தயக்கம் மேலிடுகிறது.]

மதி: என்ன? சொல்லு...

வாலிபன்: ஒன்றுமில்லை. பலரை நான் பரதவிக்கச் செய்திருக்கிறேன். இப்போது நான் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன். பெண் புத்திதான் பின் புத்தி என்பார்கள். உம்—என் புத்தியுமா அப்படி இருக்கவேண்டும்...

[வாலிபன் பலகணி வழியாக வெளிப்புறத்தைப் பார்க்கிறான். மதிவாணன் பின்புறம் சென்று வாலிபன் தோளின் மேல் தன் கரத்தை வைக்க, வாலிபன் பதறுகிறான். மதிவாணன் அரும்புமீசையுள்ள ஆணழகாகண்வளராய்! கரும்பு மொழி பேசும் என் கட்டழகா கண்வளராய் எனப் பாடுகிறான். பிறகு வாலிபனது கட்டிலருகே செல்ல அவன் திடுக்கிடுகிறான்.

மதி: வீராதி வீரன்போல் பேசுகிறாய். ஏன் திகில்?

வாலி: ஒன்றுமில்லை! போய்ப்படுத்துக் கொள்ளுங்கள்.

மதி: (சட்டையைக் களைந்தபடி) தம்பீ! மேலங்கி தலையணி, இவைகளைக் களைந்து விட்டுப் படுத்து உறங்கு–கொடு மேலங்கியை.

வாலி: (மேலும் திகைத்து) வேண்டாம்...வேண்டாம்...

[மதி, வாலிபனின் அருகே சென்று, அவனது மேலங்கியைக்களைய முற்பட, வாலிபன் பதறி மதிவாணனின் கைகளை உதறியபடி.] வாலி: தொல்லையாகி விட்டது உங்கள் போக்கு—இனி நான் வெளியே போய் விடுவேன்.

மதி: வேண்டாம்—உன் இஷ்டம் போல், மேலங்கியுடனேயே படுத்துக் கொள்—பிடிவாதக்காரன்!

[இருவரும் எதிர் எதிர் படுக்கையில் படுத்துக் கொள்கின்றனர். ஒருவர் அறியாமல் ஒருவர் பார்ப்பதும், தூங்குவது போலப் பாசாங்கு செய்வதுமாக உள்ளனர். வாலிபனின் போக்கு மதிவாணனுக்கு சந்தேகத்தை உண்டாக்குகிறது. வாலிபன் விசிறிக் கொள்கிறான் காற்றுக்காக. ஆனால் மேலங்கியைக் களைய மறுக்கிறான். வாலிபன் முகத்திலே வியர்வை அரும்புகிறது. விசித்திரமான போக்காக இருக்கிறேதே என்று மதிவாணன் யோசிக்கிறான்]

வாலிபன்: (மெதுவான குரலில்) திருமணம் ஆகிவிட்டதா?

மதி: எனக்கா? இல்லை. இப்போது கிடையாது.

வாலிபன்: ஏன்?

மதி: என் தங்கை திலகா திருமணம் முதலில்! பிறகுதான் என் திருமணம்!

வாலிபன்: இதுவரையில் காதல்?

மதி: நேரமே கிடையாதடா தம்பீ.

வாலிபன்: (கேலியாக) கலைஞன் என்கிறீர்?

மதி: ஆமாம். காமுகன் என்றா அதற்குப் பொருள்?

வாலிபன்: (கேலியாக) அழகிகளைக் கண்டால் உமது மனதிலே அலைமோதுவதே கிடையாதா?

மதி: முழுநிலவு கண்டால் களிப்புதானே?

வாலிபன்: ஆமாம்!

மதி: ஆனால் நிலவைப் பிடித்து வந்து நமது கூடத்திலே விளக்காக்க வேண்டும் என்றா முயல்கிறோம்! அதே போன்ற மகிழ்ச்சிதான் எனக்கு, அழகு மங்கையின் முக விலாசத்தைக் கண்டால்! கருங்குழலிலே கார்மேகத்தைக் காண்கிறேன். இன்ப வல்லிகளின் இசையிலே குயிலையும், ஆடலிலே மயிலையும், விழியிலே கெண்டையையும் தான் காண்கிறேன்.

வாலிபன்: காதலைத் தவிர மற்றதெல்லாம் காண்கிறீர்.

மதி: உண்மைதான்.

வாலிபன்: யார் நம்புகிறது இதை? இசை இருக்கிறது இனிமையாக!

மதி: எதற்கு? காதல் கீதம் பொழியத்தானா?

வாலிபன்: (அவன் பதிலைக் கவனியாமல்) இளமை! அரச சபையிலே இடம்! என்றாலும காதல் கணையைக் கண்டதே இல்லை! நம்பவே முடியவில்லையே!

[மதிவாணன்: எழுந்து வாலிபன் படுக்கை அருகே சென்றபடி]

மதி: (வேடிக்கையாக மிரட்டும் குரலில்) நம்ப..........

வாலிபன்: முடியவில்லை.

மதி: (அருகே நெருங்கி) முடியவில்லையா?

[வாலிபன், படுக்கையில் இருந்தபடி சிரிப்பை அடக்க முயற்சித்தபடி, இல்லை என்று தலையசைத்து ஜாடை காட்ட, மதிவாணன் வாலிபனிடம் மிகவும் நெருங்கி அவன் தோளைப் பிடித்துத் தூக்க முயற்சித்துக் கொண்டே.]

மதி: நம்ப...முடியவில்லையா?

வாலிபன்: (அவனைத் தள்ளிவிட்டு) நம்புகிறேன்—நம்புகிறேன்—

[மதிவாணன் மீண்டும் தன் படுக்கைக்குச் சென்று உட்கார்ந்தபடி வாலிபனைப் பார்க்க, அவன் புன் சிரிப்புடன் போர்வையை இழுத்து முகம் மறைகிற அளவிற்குப் போர்த்துக் கொள்கிறான். மதிவாணனும் படுத்துக்கொள்கிறான். சில

விநாடிகள் இருவரும் பேசாமல் இருக்கிறார்கள். மதிவாணன் கண்களை மூடிக் கொண்டதைக் கண்ட பிறகு, வாலிபன், தன் மேலங்கியைச் சிறிதளவு தளர்த்திக் கொண்டு ஒரு புறம் சாய்ந்துபடுக்கிறான்.........வாலிபன் செயலை அவன் அறியாமல் கவனித்து வருகிறான் மதிவாணன். தலைப்பாகையை மெல்லக் களைந்துவிட்டு, சரேலெனப் போர்வையை இழுத்துப் போர்த்துக் கொள்கிறான் வாலிபன். மதிவாணன் திடீரென எழுந்து விளக்கைப் பெரிதாக்குகிறான்; வாலிபன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறான். காற்று வீசுகிறது. மேல் போர்வை விலகுகிறது. வாலிபன் மிரட்சியுடன் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறான். மதிவாணன் தன் படுக்கை அருகே செல்வது போல் பாவனை செய்கிறான்.

ஆபத்து இல்லை இனி என்று சொல்வது போல வாலிபன் பெருமூச்செறிகிறான். வேகமாகக் திரும்பி, போர்வையை இழுத்து விடுகிறான் மதிவாணன். மேலங்கி பாதியளவு களையப்பட்டிருக்கிறது. பயம் மேலிட்டுப் பதைக்கிறாள் ஆண் வேடமிட்ட பெண்! ஆச்சரியத்தால் அவளையே உற்றுப்பார்க்கிறான் மதிவாணன், கண்களை அகல திறந்தபடி! அவன் முகத்திலே புன்னகை! அவள் முகத்திலே, அச்சம், வெட்கம்! இப்படியா இருக்கிறது விஷயம் என்று கேட்பது போலத் தலையை அசைக்கிறான் மதிவாணன், அரும்புமீசையை எடுத்து எறிகிறாள் பெண்]

மதி: (அன்பும், ஆச்சரியமும் கலந்த குரலில்......) கள்ளி!

பெண்: (அச்சத்துடன்) மெள்ளப் பேசுங்கள்!

மதி: இன்பமே!

பெண்: அன்பரே!

[அருகே அமர்ந்து மதிவாணன் பெண்ணைப் பார்க்கின்றான். அவள் விழியிலும் அன்பு வழியக் கண்டு மெய் மறந்தவனாகி]

மதி: ஆருயிரே!

பெண்: என்னை மன்னிப்பீரா? சாகசக்காரி என்று எண்ணுகிறீரா? எவ்வளவோ முயன்று பார்த்தேன், என் அரசே! என் மனம் என் வசமில்லை.

மதி: எங்கெங்கோ தேடினேன் கலாதேவியை! கதிரவனைக் கண்டு களிக்கும் தாமரையில், கார்முகிலைக் கிழித்தெழும் திங்களில், மலர் மணத்தை வாரி வழங்கும் தென்றலில், மலையுச்சியில், சிங்காரச் சிற்றூரில் எங்கெங்கோ தேடினேன், காணவில்லை. இங்கே காண்கிறேன், என் கலா தேவியை.

பெண்: செந்தேன்—இது நாள் வரை கேட்டறியாத கீதம்.

மதி: இன்பமே? யார், நீ? உன் பெயர் என்ன?

பெண்: என் பெயரா! இசைச் செல்வரே.

நான்......நான்......

மதி: தயக்கமேன், தங்கமே?

பெண்: என் பெயர் தங்கம்தான்.

மதி: எவ்வளவு பொருத்தமான பெயரிட்டிருக்கிறார்கள் உன் பெற்றோர்.

பெண்: நான் அரண்மனைத் தாதி!

மதி: வேடமிட்டு வந்த காரணம்?

பெண்: குமார தேவியின் கட்டளைப்படி, நான், மாறுவேடம் அணிந்து ஊரார் போக்கை அறிவது வழக்கம். இன்று தங்களைக் கண்டேன். கடமையை மறந்தேன் காதலில் கட்டுண்டேன். என் செயலைக் கண்டு, செல்வமே, சீரழிவான குணம் எனக்கு என்று எண்ணி விடுவீரோ? என்னை நம்ப வேண்டும் மணியே! நான் மாசற்றவள்.

மதி: (இருகரத்தைப் பெண் நீட்டியது கண்டு, கரங்களைப் பற்றிக் கொண்டு) தங்கம்! என் வாழ்வின் விளக்கே! மன்னன் திருமண விஷயமாக வந்தேன்.—காதல் மணம் எனக்குக் கிடைத்து விட்டது. தனியே! உன் பெற்றோரைக் கண்டு பேசி.........

பெண்: சம்மதம் பெறுவது சுலபம் கண்ணாளா! ஆனால் இந்த விழா முடிந்த பிறகுதான் திருமணப் பேச்சு. விளக்கம் கேட்க வேண்டாம், நான் இனி உமது பொருள். என் வாழ்க்கைக்கு நீரே இனி, வழிகாட்டி என் காதலை காணிக்கையாக்கிவிட்டேன் — நான் யாராக இருப்பினும். செல்வமே, என்னால் தங்களுக்கு எவ்விதமான இன்னல் வந்தாலும் என்னை ஏற்றுக் கொள்ளும் உறுதி இருக்குமா?

மதி: ஆழ்கடலில், அலை நிரம்பிய கடலில், சுறாவுக்கும், சுழலுக்கும் இடையேயுள்ள முத்து எடுக்கும் தமிழ் இனம் நான், தங்கமே! உன் உள்ளத்தில் எனக்கு இடம் உண்டு என்று நீ கூறியான பிறகு, உத்தமி! படை பல வரினும், தடை பல நேரிடினும், கலங்குவேனோ? உன்னை என்னிடமிருந்து பிரிக்கும் வலிமை கொண்டவர், எவரும் இருக்க முடியாது, என் கரத்தில் வாளும், கருத்தில் நீயும் இருக்கும் வரையில்.

பெண்: என்னைக் களிப்புக்.. கடலில் தள்ளாதீர், கண்ணாளா!

மதி: கலாதேவி! இனி நான் செய்ய வேண்டியது என்ன? கட்டளையிடு!

பெண்: கட்டளையா? நானா? நான் தங்களைக் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் என்னை நானாகக் கூறுமுன், நான் யார் என்று அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம், சில நாட்கள்.

மதி: என் இன்பம் நீ! வேறு நான் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது? என் தங்கம் நீ! வேறு விளக்கம் நீயாகக் கூறினாலொழிய எனக்கு ஏன்?

பெண்: இன்று இரவு முழுவதும் இப்படியே இருக்கத்தான் தோன்றுகிறது, ஆனால், கடமை கட்டளையிடுகிறது.

மதி: கட்டிக்கரும்பே! காதலும் ஒரு கடமை தானே! வாலிபர்கள் மீறக் கூடாத கடமை!

பெண்: ஆமாம், ஆனால் கருத்துக் குருடர்கள் இதை அறிவதில்லை.

மதி: எனக்கென்னவோ அச்சமாக இருக்கிறது.

பெண்: அச்சமா, ஏன்?

மதிவாணன்: எனக்கா இப்படிப்பட்ட பரிசு என்று எண்ணும்போது அச்சம்தான் உண்டாகிறது.

பெண்: பரிசு பெற்றவள், நான் குணாளா.

மதி: இல்லை, இல்லை, பரிசு எனக்குத்தான்! கலை விழாவிலே, பரிசு பெற வந்தேன்! விழாவுக்கு முன்பே பரிசு!

[அவளை அருகே அழைத்து அன்புடன் பார்க்கிறான்......]

பெண்: இந்தப் பரிசு போதுமா அன்பே?

மதிவாணன்: இதைவிட மேலான பரிசு ஏது குயிலே? இனித்தான் என் கலை கனியப்போகிறது. என் வாழ்வே, இனி கலையாகப் போகிறது.

பெண்: (திடுக்கிட்டு) நேரமாகிவிட்டது கண்ணாளா? தாதிகள் தேடுவர்—(தடுமாற்றத்துடன்) என்னோடு வேலை செய்யும் தாதிகள்.

மதி: அரசிக்குக் காவலோ?

பெண்: ஆமாம்...அரசிக்குப் பணிவிடை செய்பவள் நான். சதா அரசியுடனே இருப்பேன். வேடிக்கையாகக் கேலி கூடச் செய்வார்கள்—தங்கத்துக்கு என்னடியம்மா! தங்கமேதான குமாரதேவி, குமாரதேவியேதான தங்கம் என்றெல்லாம்.

மதி: இன்பமே! என் கலைத்திறனைக் கண்டு, அரசி, பரிசு தர வருகிறபோது.....

பெண்: வருகிறபோது......

மதி: குமார தேவியாரே! நான் கேட்கும் பரிசு தர வேண்டும் என்று கூறுவேன்.

பெண்: (குமாரி பேசும் பாவனையில்) "கேள். கொடுக்கப்படும். ஆனால் முறையும் நெறியும் அறிந்து கேள்" (சொந்த முறையில் பேச்சு) என்று எங்கள் அரசி கூறுவார்கள். ஏனென்றால் சில விஷமக்காரர்கள் ராஜ்யத்தில் பாதியும், அரச குமாரியும் வேண்டும் என்று கூடக் கேட்டு விடுவார்களல்லவா?

மதி: எனக்கு ஏன் புதிதாக ஒரு ராஜ்யம்? என் காதல் ராஜ்யத்திற்கு ராணியாக இருக்கும்படி தங்கத்தைத் தரவேண்டும்—நான் விரும்பும் பரிசு அதுதான் என்று கூறுவேன்.

பெண்: நான் வெட்கத்தால் தலை குனிந்துகொண்டு நிற்பேன்.

மதி: வெற்றி வீரனான நான், நான் விரும்பும் பரிசு பெற்று வீடு செல்வேன்.

பெண்: வீடு சென்று என்னைத் திலகாவிடம் தருவீர்கள்.

மதி: என் அம்மா, உன்னைக் கண்டதும்...

பெண்: கண்டதும்...

மதி: (தாயார் பேசுவதுபோல) வாடி என் கண்ணே என்று அன்புடன் கூறி..(அவள் கரங்களைப் பிடித்து இழுத்து அணைத்துக்கொள்ளும் நிலையில்...) அணைத்துக் கொண்டு, உச்சி மோந்து முத்த மிடுவார்கள்.

பெண்: அந்த நாள் தான், திருநாள்!

மதி: வாழ்விலோர் திருநாள்—

பெண்:—(தயக்கத்துடன) இனியும் இருப்பது முறையல்ல.

மதி: போகத்தான் வேண்டுமா, தங்கம்!

பெண்: கடமை! தவிர்க்க முடியாத கடமை!

மதி: சரி! பணியத்தான வேண்டும் பாகு மொழியாளே! நாளை மாலை...

பெண்: நாளை மாலையும் இன்னும் நாலு நாட்களும் நான் இந்த இன்பத்தைப் பெறமுடியாது. அரண்மனையிலே வேலை!

மதி: (ஏக்கத்துடன்) நாலு நாட்கள் நான் எப்படிக் சகிப்பேன்?

பெண்: நாலு நாட்கள் கண்ணாளா? (விரலை வேகமாக தட்டிக் காட்டியபடி) ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, நாலே நாலு நாட்கள், பிறகு...

மதி: பிறகு?

[பாசத்துடன் பார்க்கிறான். அவள் புறப்பட, மதிவாணனும் கிளம்புகிறான். அவள் வரவேண்டாம் என்று தடுக்கிறாள் ஜாடையாக. மதிவாணன் ஏக்கத்துடன் நிற்கிறான். மேலங்கி, தலையணி, சட்டை ஆகியவைகளைச் சரிப்படுத்திக் கொண்டு வெளியே வருகிறாள் தங்கம்.]

[கலை விழாவில், மதிவாணர், கலை மன்னன் என்ற பட்டம் அளிக்கப்படுகிறான். மதி, நன்றி தெரிவிக்கிறான்.]

மதிவாணன்: நன்றி—பெரியவர்களே மிக்க நன்றி—இந்தப் பெருமை வேழ நாட்டுக்குரியது. என்னை இவ்வாண்டுக் கலை விழாவிலே கலை மன்னனாக்கிய உங்கள் பெருந்தன்மைக்கு என் நன்றி—

ஒருவன்: என்ன பணிவு—என்ன பணிவு—கலை மன்னா—வா—

[சோலை நாட்டுக் கொலுமண்டபம். மதிவாணன், அரசியின் கொலு மண்டபம் அழைத்துச் செல்லப்படுகிறான்—அருகே சென்று வணக்கம் கூறிவிட்டு அரசியைப் பார்க்கிறான்—அரசி, தன் தங்கமாக இருக்கக்கண்டு திடுக்கிடுகிறான்—அவனால் நம்ப முடியவில்லை—ஆச்சரியத்தால் சிலை போல் நின்றுகொண்டு இமை கொட்டாது அரசியைப் பார்க்கிறான். சபையினர் சிறிதளவு அருவருப்படைகின்றனர் இந்தப் போக்கு கண்டு...அரசி முதலிலே ஒரு

விநாடி தன் ஆவலை வெளிப்படுத்தும் விழியுடன் காணப்படுகிறாள்—மறுகணம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள் ...... அமைச்சர் பரிசுப் பட்டயத்தை அரசியின் முன் காட்ட, அரசி அதிலே தன் கையொப்பத்தைப் பொறித்து விட்டு, பட்டயத்தைப் பெற்றுக் கொள்ளும்படி மதிவாணனை அழைக்கிறாள் தன் புன்னகையால்.

சொக்கிய நிலையிலிருந்து மாறாதவனான மதிவாணன் அரசி அருகே சென்று பட்டயத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வணக்கம் செலுத்திவிட்டு நிற்கிறான்—

இருவரின் விழிகளும் சந்திக்கின்றன. நிலைமையைச் சரிப்படுத்த தீர்மானித்து அரசி]

அரசி: மதிவாணரே! அரசிகளைக் கண்டதே கிடையாதோ—இதற்கு முன்பு எப்போதும்?

மதி: (பூரிப்புடன்) கண்டதில்லை...தங்கள் போன்ற தங்க குணம் படைத்த அரசிகளைக் கண்டதில்லை—

[தங்கம் என்ற சொல் கேட்டு ஒரு வினாடி குமாரதேவிக்கு கூச்சம் தோன்றி மறைகிறது]

குமாரி: கலை வாணரே! உமது கலைத் திறமையைக் கண்டு இந்நாடு களிப்படைகிறது.

மதி: புது மனிதனானேன். பாராட்டும் பரிசும் பெற்றதால்—

குமாரி: எமது விருந்தினராக சில நாட்கள் இருக்க...

மதி: உத்திரவு மகாராணி!

குமாரி: அன்பழைப்பை, மறுக்கமாட்டீர்!

மதி: முடியுமா அரசியாரே!

[குமாரதேவி எழுந்திருக்க, சபை கலைகிறது—மதிவாணனை ஒரு பெரிய அறைக்கு அழைத்துச் செல்கின்றனர்...உபசாரத்துடன்]

[அமைச்சரும் படைத்தலைவரும் வேறோர் பக்கம் சென்றபடி மெல்லிய குரலில் பேசிக் கொள்கினறனர்—

மதிவாணன் சென்ற திக்கையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாள் குமாரி-தோழி செந்தாமரை அரசியைக் குறும்பாகப் பார்க்கிறாள். அதுகண்ட குமாரி நிலைமையை உணர்ந்து தன்னை சரிப்படுத்திக் கொள்கிறாள். இருவரும் அந்தப்புரம் நோக்கிச் செல்கின்றனர்]

குமாரியின் தனி அறை
[மதிவாணன் அலங்காரம் நிறைந்த தனி அறையிலே கவலையும் பீதியும் கொண்ட நிலையிலே இருக்கிறான்—உட்புறக் கதவொன்று திறக்கப்பட்டு குமாரி மெல்ல உள்ளே நுழைகிறாள். மதிவாணன் திடுக்கிட்டு எழுந்திருக்கிறான். அவனையுமறியாமல் மரியாதை உணர்ச்சி ஏற்படுகிறது—வணக்கம் செலுத்துகிறான்— அவன் நிலை கண்டு குமாரி கேலியாகச் சிரித்தபடி...]

குமாரி: இதென்ன வேடிக்கை—கொலு மண்டபத்தில் காதலைப் பொழிகிறீர்—இங்கு தனி அறையில் தர்பார் பொம்மை போலாகிறீர்.

மதி: குமாரதேவியாரே;

குமாரி: இப்படி அழைத்திருக்கவேண்டும் அங்கு.

[குமாரி அவனருகே சென்று கரங்களைப் பிடித்துக்கொண்டு கனிவுடன்.]

குமாரி: இங்கு குமாரி அல்லவா வந்திருக்கிறார்—அரசி அல்ல—குமாரி, தன் மணாளனிடம்.

மதி: (உருக்கமாக) தங்கமே! தணலில் அல்லவா இருக்கிறாய்! இன்பமே, என்னை ஏன் சந்தித்தாய்? என் வாழ்வின் விளக்காகப் போவதாகக் கூறி என்னைப் பித்தனாக்கிவிட்டாயே?

குமாரி: கண்ணாளா! என்ன கலக்கம்? நான் தான் அரசி என்று கூறாததால் கோபமா? என் நிலைமை அப்படி துரையே! நான் என்ன செய்வேன்?

மதி: நிலைமை! ஆமாம்! தங்கமே! நாட்டை ஆளும் மகாராணி நீ—ஏட்டைத் தூக்கும் ஏமாளி நான்—

குமாரி: (பெருமிதத்துடன்) மகாகவி—மண்டலாதிபதிகள் போற்றிப் புகழத்தக்க, மகாகவி

மதி: தங்கம்!

குமாரி: என்ன கண்ணாளா?

மதி: இன்னமும் ஏன் அந்த இன்னமுது கொடுத்துக் கொல்கிறாய். தங்கம்! எனக்கு விடை கொடு.

குமாரி: விடை கொடுப்பதா?

மதி: காதலே விஷமாகிவிடும் முன்பு எனக்கு விடை கொடு—பாவி ஏன் வந்தேன் இந்த விழாவுக்கு—தங்கம்—குமாரதேவி—என் அன்பே! அரசாளும் ஆரணங்கே!

குமாரி: இதென்ன குழப்பம் கண்ணாளா? அரசியாக இருப்பதா தவறு?

மதி: தவறு அல்ல—பெரு நெருப்பு. நம்மைப் பிரித்துவிடும் பெரு நெருப்பல்லவா? தங்கத்தை நான் பெறமுடியும்—ஆனால் குமார தேவியாரை?

குமாரி: குமாரதேவி நாட்டவருக்கு! மற்றவருக்கு—தங்களுக்கு நான் என்றும் தங்கம்தானே!

மதி: பாடிப்பிழைப்பவன் நான்—நாட்டுக்கரசி நீ—

குமாரி: அந்தக் குற்றத்தை மன்னித்துவிடு குணாளா! நான் அரசி; ஆயினுமென்ன? ஒரு பெண்ணல்லவா?

மதி: வேந்தன் வெற்றிவேலன், என்னைச் சூதுக்காரன்—துரோகி—என்று தூற்றுவார். உன் நாட்டுத் தலைவர்களோ, ஊர் பேர் அறியாதவன் எப்படியோ அரசியின் மனதை மயக்கிவிட்டான் என்று ஏசுவார்கள் தங்கம்.

குமாரி: என் திருமணத்திட்டத்துக்குத் தடைபோட யாருக்கும் அதிகாரம் கிடையாது.

மதி: சட்டத்தைவிட சம்பிரதாயம் பலம் பொருந்தியது தங்கமே!

மதிவாணன், குமாரி தர்க்கப் பாட்டு

குமாரி: மாவொடு தழுவும் மலர்க்கொடிபோலே
                மாதுதான் மருவ முடியாதோ?
                மாது நான் மருவமுடியாதோ?

மதி:மாதுன்னால் முடியும் ஆனாலும் மாண்பெனும்
                மணிமுடி தடையுண்டு தெரியாதோ!
                மணிமுடி தடையுண்டு தெரியாதோ!

குமாரி: மேவுங் காதலில் உயர்வு தாழ்வெனும்
                 வித்யாசம் நினைப்பதும் இயல்பாமோ?
                 வித்யாசம் நினைப்பதும் இயல்பாமோ?

மதி:விழியால் மொழியால் வித்யாச மில்லாது
              வினவுகிறாய் பதில் சொல்லப்போமோ!
              வினவுகிறாய் பதில் சொல்லப்போமா!

வேறு காட்சி

குமாரி: கலப்பை தூக்கி முன்னாலே - கஞ்சிக்
                        கலையம் தாங்கிப் பின்னாலே.
               கழனிசெல்லும் அழகைப்பாரும் கண்ணாலே
                                                                        புருஷன் மனைவி (கழனி)
மதி:உழைப்பினிலே, புழக்கத்திலே,
                        ஒன்றுபட்ட இன்பக்காதல் தன்னாலே -
                                                 அவர்
               உடல் நிழலாய் வாழவந்தார் மண்மேலே.

குமாரி: பாத்தியிலே நீர்பாய்ச்சும்
                                     பாவையைப் பாரீர் - அந்தப்
                                     பாவையைப் பாரீர்.

மதி:அதைப்
                பார்த்துக் கணவன் ஏத்தம் இறைக்கும்
                          நேர்த்தியைப் பாராய்.

குமாரி: ஆத்துக்குள்ளே ஆடைதுவைக்கும்
                       அழகியைப் பாரீர் - அந்த
                       அழகியைப் பாரீர்.

மதி: அவன்
        அருகில் நிற்கும் உரிமை கொண்டான்
                 ஆனந்தம் பாராய் - கண்ணே
                 ஆனந்தம் பாராய்.

இருவரும்: காணும் காக்ஷியே காதல் ஆட்சிதான்.
                    காணும் காக்ஷியே காதல் ஆட்சிதான்.


(பேசிக்கொண்டே இருவரும் செல்கின்றனர்)

[குமாரதேவியின் தனி அறை. குமாரதேவி சாய்வாசனத்தில் வீற்றிருக்கிறாள்—தோழி செந்தாமரை குறும்பாகப் பார்த்துக் கொண்டே பேசுகிறாள்...]

செந்தாமரை: எப்படி தேவி இருக்கிறது ஊர்?

குமாரி: திருவிழாக் கோலமடி செந்தாமரை! எங்கும் அழகும் அன்பும் தாண்டவமாடுகிறது!

செந்தாமரை: ஆடாமல் என்ன?

குமாரி: கேலியா செந்தாமரை! மனதிலே மகிழ்ச்சி துள்ளி விளையாடும்போது, உலகம் உல்லாச கூடமாகத் தான் மாறிவிடுகிறது.

பணிப்பெண்: (அங்கு வந்து) அமைச்சரும்—படைத் தலைவரும்...

குமாரி: (ஆச்சரியமடைந்து)......வருகிறார்களா? இங்கா?

பணி: அனுமதி கோரி நிற்கிறார்கள்—அங்கு!

குமாரி: (முகம் மாறி) செந்தாமரை! புயல் கிளம்புகிறது!

[குமாரியின் தனி அறை—பணிப்பெண் வெளியேறுகிறாள். படைத்தலைவரும் அமைச்சரும் வருகிறார்கள். அமரும்படி சைகை காட்டுகிறாள் குமாரி. அமருகிறார்கள் அவர்கள். இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி...]

குமாரி: கவலையுடன் இருக்கக் காரணம்? படைத்தலைவர் முகம் பயங்கரமாக இருக்கிறதே ஏதாவது பகை மூண்டுவிட்டதா?

படைத்தலைவன்: மூண்டுவிடும் என்ற பயம்தான் அரசியாரே! கூறும் அமைச்சரே!

அமைச்சர்: தேவி! கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும்—நாங்கள் கூறப் போவது கேட்டு! அம்மணி! மதிவாணன் கலைச் செல்வன் எனினும் அவனிடம் தாங்கள் இவ்வளவு பாசம் காட்டுவதும்...

படைத்: ஊர் பார்க்கும்படி அவனுடன் உலவச் செல்வதும், பேசி மகிழ்வதும், துளியும் சரியில்லை.

குமாரி: உங்கள் அரசி—சரசக்காரி என்று பழி சுமத்துவார்கள் ஊரார், என்றுதானே பயப்படுகிறீர்!

அமைச்: பொறுப்பான பதவியில் உள்ளவர்களுக்கு அந்தப் பயம்தானே பொன்னாபரணம்?

குமாரி: பயப்பட வேண்டாம்—ஊரார் உள்ளம் மகிழும் வண்ணம் நடந்துகொள்ளத் தீர்மானித்து விட்டேன். அமைச்சரே! மதிவாணரைத் திருமணம் செய்துகொள்வது என்று தீர்மானித்துவிட்டேன்.

படைத்: ஆபத்தான தீர்மானம், அரசியாரே! அசட்டுத்தனமான முடிவு.

குமாரி: அமைச்சரே! படைத்தலைவரே! வீண்வாதங்கள் வேண்டாம். மிரட்டலுக்கு அஞ்சுபவளல்ல நான். அதேபோல மிரட்டி உங்களைப் பணிய வைக்கவும் விரும்பமாட்டேன். திருமணம் என் சொந்த விஷயம். என் வாழ்க்கைக்கு ஒளி தேடும் உரிமை எனக்கு உண்டு. இதிலே குறுக்கிடும் அதிகாரம், உங்களில் யாருக்கும் கிடையாது.

ப. தலைவன்: இந்த நாட்டின் நலத்திலே நாட்டங் கொண்டவர்கள் நாங்கள் தங்கள் திருமண விஷயமாகக் கூட யோசனை கூற உரிமை கொண்டவர்கள் தான், அரசியாரே.

குமாரி: ஊம்... என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பும் மனதிலே இருக்கும்போது, படைத்தலைவரே, நிச்சயமாகத் தங்கள் மேலான யோசனையைக் கேட்பேன். ஆனால் இந்த விஷயமாகத் தெளிவாக, திட்டமாக, முடிவுக்கு வந்தாகிவிட்டது. நான் கூற வேண்டியது அவ்வளவு தான்.

[அரசி எழுந்திருக்கிறார். இருவரும் எழுந்து செல்கிறார்கள். படைத்தலைவன் கோபமாகச் செல்கிறான்.]

[வெற்றிவேலன் அரண்மனை—குளிக்குமிடம்—வெற்றிவேலன் குளித்துக் கொண்டிருக்கிறான்—அப்போது பணியாள் ஒருவன் பலகாரத் தட்டுடன் வருகிறான்]

வெற்றிவேலன்: (பணியாளனைப் பார்த்து) புத்தி துளிகூடக் கிடையாது. போய் இன்றைய ஓலைகளைக் கொண்டுவரச் சொல்லுடா அமைச்சரை! அறிவிலி!

[பணியாள் ஓடுகிறான். ஓடும்போது ஒரு பலகாரத் துண்டை வாயில் போட்டுக் கொள்கிறான்.]

அரசன்: (மீண்டும் யோசனை கொண்டவனாகி) டேய்! கொண்டுவாடா தட்டை. (பணியாள் வருகிறான் வாய் திறவாமல்) என்னடா இருக்கு பலகாரம்? நீட்டடா இப்படி! போதும் ஓடு! அழைத்துவா அமைச்சரை.

[பணியாள் போகிறான். அமைச்சர் வருகிறார், கவலைக் குறிகளுடன்.]

அமைச்சர்: (தயக்கத்துடன்) வேந்தே, சோலை நாட்டிலிருந்து ஓலை...

வெற்றிவேலன்: (களிப்புடன்) வந்ததா ஓலை? மதிவாணன் இசையிலே மட்டுமல்ல ராஜதந்திரத்திலும் கெட்டிக்காரன்! அப்போதே தெரியும் எனக்கு!

அமைச்: அரசே!

வெற்றி: ஓய், என்னய்யா அழுகுரல்! ஓலையிலே என்ன எழுதியிருக்கிறான்? குமார தேவியைக் காணவே முடியவில்லையாமா?

அமை: கண்டிருக்கிறான் வேந்தே!

வெற்றி: கண்டு...

அமை: காதகன்!

வெற்றி: (ஆத்திரம் எழும்பிய நிலையில்) காதகனா? யார்? என்ன இது? இழுப்புப் பேச்சு–என்ன சேதிசொல்லும்

[குளத்தில் நடுவில் எழுந்து நிற்கிறான்...அமைச்சர் ஓலையைத் தருகிறார். வேந்தன் வாங்கி அவசரமாகப் பார்த்து, முகம் கடுமையான நிலையில் வெளியே எழுந்து]

வெற்றி: துரோகி! அடுத்துக் கெடுக்கும் அற்பன்! எவ்வளவு நெஞ்சழுத்தம! (கோபமாக உலவியபடி) சித்ரவதை செய்கிறேன் சிறு மதியாளனை! ஊர் திரும்பட்டும்! திருமணமாம் திருமணம்! அவள் அறிவுச் சூன்யம்! அரசியாம் அரசி! கலை வலையில் வீழ்ந்துவிட்டாள், கருத்துத் தெளிவற்றவள்! மலரைப் பறித்து வரச்சொல்லி மந்தியை அனுப்பினேனே, நான் ஒரு மடையன் யாரங்கே [பணியாட்கள் வருகிறார்கள்] போய் இழுத்து வாருங்கள் மதிவாணன் தாயையும் தங்கையையும்.

அமைச்: வேண்டாம் (நயமாக) வேந்தே! இப்போது அவனைத் தண்டித்தால் இழிவாக ஏளனமாகப் பேசுவர் விவரமறியாத பாமர மக்கள். நமது மண்டலத்தில் மட்டுமல்ல. பல நாடுகளிலும், பாடகனாம் ஒருவன்—பட்டத்தரசி அவனைக் காதலித்தாளாம்—பொறாமை கொண்ட வேந்தர் பாடகனைப் படுகொலை செய்துவிட்டாராம் என்று பரிகாசமாகப் பேசுவர்.

வெ.வே: உண்மைதான்—பெரிய தியாகி ஆகிவிடுவான்.

அமை: மேலும் தங்கள் காதல் திட்டத்தை, பாடிடும் பராரி ஒருவன் தகர்த்துவிட்டான் என்று வெளியே தெரிவது நல்லதா? அலட்சியமாக இருந்துவிடும் அரசே! ஆதரவு கூடத் தருவதாகக் கூறும்! அசடன் தானே! பூரித்துப் போவான்! பொன்னான சமயம் வருகிறபோது, துரோகியைத் தொலைத்துவிடலாம்.

அதுதான் சரி என்று முடிவுக்கு வந்தவனாகி தலையை. அசைக்கிறான் அரசன்.

மதிவாணன் மாளிகை உட்புறம். திலகா ஓர் ஓலையைப் படித்து மகிழ்கிறாள்

கற்பகம்: என்னடி அம்மா மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டிருக்கிறாய்?

திலகா: (ஓலையை மறைத்தபடி) போம்மா!

கற்: (புரிந்துகொண்டு) ஓஹோ! வருகிறானா முத்து (திலகா ஓலையைக் காட்டியபடி தலை அசைக்கிறாள். கற்பகம் மகிழ்கிறாள்)—எப்போது வருகிறானாம்?

திலகா: புறப்பட்டு விட்டாராம்!

[சோமநாதர் வீடு. அவருக்கும் அவர் மகனுக்குமிடையே உரையாடல்]

முத்து: திருமண ஏற்பாடு எனக்குச் சம்மதமில்லையப்பா வில்வக்காட்டார் மகளை நான் மணம் செய்து கொள்ள முடியாது.

சோம: வில்வக்காட்டார் மகளை—என்ன—என்ன—முத்து! என்னை இப்படிப் பார்த்துப் பேசு!

முத்து: அப்பா—நான் திலகவதியைத் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்துவிட்டேன்!

சோம: முட்டாள்தனமாகப் பேசாதே முத்து - பதில் பேசாதே. ஓராயிரம் காரணம் காட்டினாலும் என் காதில் ஏறாது.

முத்து: முடியாதப்பா. நான் திலகாவுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன்.

சோம: யாரைக் கேட்டு?

முத்து: அப்பா - வற்புறுத்திப் பயனில்லை. நான் திலகாவைத் தவிர வேறோர் பெண்ணைத் தீண்டமாட்டேன்.

சோம: விபரீதம் ஏற்படும் முத்து!

[முத்து வெளியே போகிறான்]

[சோமநாதரின் தோட்டம் சோமநாதருடன் வில்வக்காடர் உரையாடுதல்]
வில்வக்காடர்: சோமநாதரே என்ன இது, திருமண விஷயமாக இன்னும் ஓர் முடிவுக்கு வராமலிருக்கிறீர்?

சோம: முயற்சித்தபடிதான் இருக்கிறேன் - முத்து பிடிவாதமாக...

வில்: என் மகளை மணம் செய்துகொள்ள மறுக்கிறான் அல்லவா...

சோ: நான் புத்திமதி கூறி...

வில்: நீர் என்னய்யா புத்தி கூறுவது? எனக்குத் தெரியும் புத்தி புகட்ட...

சோ: வாலிபன்...விபரமறியாதவன்...

வில்: யாராக இருந்தால் என்ன? என்னை அவமானப்படுத்துபவன் வாழ முடியாது. நிச்சயமாக முடியாது. பார் அவன் கதியை...

[முத்துமாணிக்கம் தாக்கப்படுதல்] [சோமநாதர் மாளிகை - வேறோர் கூடம் – முத்துமாணிக்கம் மூர்ச்சை யடைந்திருக்கிறான். முகத்திலேயும் உடலிலேயும் பல இடங்களில் கட்டுகள். மருத்துவரும், நண்பரும் முத்துவின் பக்கத்தில் இருக்கிறார்கள், மருந்துகளைத் தயாரித்துக்கொண்டு]

[சோலைநாடு-காட்டாற்றின் ஓரம் - குமாரி, மதிவாணனுடன், கல்லணை கட்டப்பட இருக்கும் காட்டாற்றின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது,]

மதிவாணன்: குமாரி வெற்றி வேலர் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருக்கிறார்.

குமாரி: வாழ்த்துச் செய்தியா? வேந்தர் பெருங்குணம் படைத்தவராகத்தான் இருக்கிறார்.

மதி: நான் ஊர் சென்று...

கு: ஏன் இதற்குள்.

ம: மன்னனிடம் நேரிலே கூறவேண்டாமா? தாய், திலகா இவர்களிடம் பேசி மகிழவேண்டாமா.

கு: மகிழ்ச்சியில் மூழ்கி என்னை மறந்துவிடப் போகிறீர்.

ம: எப்படி முடியும் இன்பமே.

கு: மறந்தே போனேன். இன்று ஆயுதக்கிடங்கைப் பார்வையிடவேண்டும். அமைச்சர் காத்துக்கொண்டு இருப்பார்.

[போகின்றனர்]
[வள்ளியூரில்—சோமநாதன் மாளிகை உட்புறம்—முத்துமாணிக்கம் உடல் நலமடைந்த நிலையில் இருக்கிறான். என்றாலும் சோகமாகவே காணப்படுகிறான். மருத்துவரும் அவர் நண்பரும் அவனருகே காணப்படுகிறார்கள்.]

முத்து: (சோகமாக) ஐயோ, நான் சாவதை ஏன் தடுத்தீர்கள்? இந்த வாழ்வும் ஒரு வாழ்வா?

மருத்துவர்: உன்னைக் காப்பாற்ற நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல முத்து—அதிலும் இவருடைய உதவிக்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது.

நண்பன்: என் சாமர்த்தியம் முழுவதும் உபயோகித்திருக்கிறேன்.

முத்து: (சலித்து) சாமர்த்தியம்! செத்திருக்க வேண்டிய என்னைப் பேசும் பிணமாகச் செய்துவிட்டிருக்கிறீர்!

நண்பன்: உன் மனதிலேதான் முத்து, இப்படிப்பட்ட குழப்பம், பயம், சந்தேகம் இருக்கும்! முத்துமாணிக்கம் பழைய முத்துமாணிக்கமேதான் - உலகிலே எவருக்கும் - ஏன்? உன் திலகாவுக்கும் கூட...

முத்து: (தலையிலடித்துக்கொண்டு) ஐயோ - ஐயோ-அவள் பெயரைச் சொல்லவேண்டாம். என் கனவு அந்தக் காதல் அந்தப் பூங்கொடி, புழுத்துப்போன எனக்கா? வேண்டாம் - வேண்டாம் - இனியொருமுறை சொல்லவேண்டாம்.

[மதிவாணன் மாளிகையின் உட்புறம். திலகா ஏக்கத்துடன் இருக்கிறாள்.]
கற்பகம்: திலகா! ஓலையைச் சரியாகத்தான் படித்தாயா? முத்துவைக் காணோமே இன்னமும்...

திலகா: நான் என்ன செய்ய

கற்பகம்: புறப்பட்ட முத்து வராத காரணம்?

திலகா: ஆடவரின் அசட்டைக்குக் காரணம்கூட வேண்டுமா அம்மா...

கற்: ச்சீசி, முத்து அப்படிப்பட்டவனல்ல! ஆமாம்... திலகா!. வல்லியூரில் வசந்தாவின் திருமணம் - போக வேண்டும் என்று சொன்னாயே...

தில: போய் வரவா அம்மா.

கற்: செய்யடி கண்ணே! முத்துகூட ஒருசமயம் வல்லியூரில் இருக்கலாம்!

தில : இருக்கட்டுமே! இருந்தால் என்ன? நான் போய்ப் பார்க்கவா போகிறேன்!

[வெற்றிவேலன் அரண்மனையில் ஓர் கூடம். குழந்தை மரகதமணி மதிவாணனை குதூகலமாக வரவேற்கிறது.]

குழந்தையைத் தூக்கி முத்தமிடுகிறான் மதிவாணன்.

மரக: மாமா! மாமி கருப்பா, சிகப்பா?

மதி: தங்க நிறம் கண்ணூ!

மரகதம்: (கேலியாக) ஐயய்யோ மஞ்ச நிறமா?

மதிவாணன்: (பாடுகிறான்)

மதிவாணன் பாட்டு


ராஜாமகள் ராணி - புது
            ரோஜாமலர் மேனி - மிகப்
பேஷான ஒருமாமி - வரப்

            போறாள் பாரு நீ -

(ராஜா)


சீனிச் சக்கரைக்கட்டி - வாய்
            சிவந்த பவளப் பெட்டி - அவள்
சிரிச்ச முகத்துச் சிங்காரக்குட்டி

            உன் போல படுசுட்டி -

(ராஜா)


வக்கணைப் பேச்சுக்காரி - விழி
            வாளின் வீச்சுக்காரி - சுக
வாரி, அலங்காரி, - சுகு

            மாரி எந்தன் பாரி -

(ராஜா)



வீணை மீட்டியவள் பாடுவாள் - உடன்
            விதவிதமாக நீயும் ஆடலாம்
வேடிக்கைபல செய்வாள் - உன்னை
            விருப்பமாக வைவாள்!
வேண்டுவாள்?. . . .உன்னை

           மின்னே பொன்னே கண்ணே - என்பாள்

(ராஜா)


[சோமநாதர் மாளிகைத் தோட்டம் தோட்டத்திலே முத்து, திலகாவின் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறான் தொலைவிலே அவளைப் பார்த்ததும்...]

முத்து: திலகா...திலகா...

[திலகா ஆவலுடன் அவனருகே ஓடிவருகிறாள். முத்து ஆசையுடன் அவள் கரங்களைப பற்றிக்கொள்கிறான்...]

திலகா: ஆருயிரே! என்னை மறந்துவிட்டீரா?

முத்து: நானா? உன்னை மறப்பதா - திடீரென்று அப்பா இறந்துவிட்டதால், இங்கே பல தொல்லை.

திலகா: என்ன...என்ன...அப்பா இறந்துவிட்டாரா...

முத்து: ஆம் என்று தலையசைத்தவாறு சோகத்துடன் ஒருபுறமாக சென்று உட்காருகிறான் - திலகா வருத்தமுடன்.

திலகா: அதனால்தான் என்னைக் காண வரவில்லை! ஆனால் சேதி அனுப்பக்கூடவா, முடியவில்லை.

முத்து: (உருக்கமாக) என்னை மறந்துவிடு - திலகா- என்னை மறந்துவிட முடியுமா திலகா?

[திலகாவின் முகம் திகிலிடைகிறது - தழ தழத்த குரலில்]

திலகா: என்ன சொல்கிறீர் - இன்னுயிரே என்ன சொல்கிறீர்?

முத்து: (உருக்கமாக) வேடிக்கைக்குக் கேட்டேன் கண்ணே - இவ்வளவு நாளாகிவிட்டதே என்று கேட்டேன்.

திலகா: கேட்கத் துணிந்ததே உமக்கு...

[ஏதோ கூச்சல் கேட்டு இருவரும் திடுக்கிட்டு கூச்சல் வந்தபக்கம் சென்று பார்க்கிறார்கள். ஒரு வயதான மாதும் ஓர் இள மங்கையும் வருகிறார்கள் மங்கையைத் துரத்திப் பிடிப்பவள்போல வயதான மாது ஓடி வருகிறாள்.]

வ. மாது: கண்ணே - வேண்டாமடி - இதோ பாரம்மா.

இள மங்கையை திலகா பிடித்து நிறுத்துகிறாள். இள மங்கை கண்ணீர் விடுகிறாள்-வயதான மாதும் வந்து சேருகிறாள்.

திலகா: என்னம்மா? என்ன?

வ.மாது: குழந்தை என்மக உயிரைப் போக்கிக்கொள்ளப் போரேன்னு ஓடி வருது.

திலகா: ஏன்? சாகத்துணிந்த காரணம்? என்னம்மா தகராறு?

வ.மா: என்ன தகராறு கிளம்பும்!- கலியாண விஷயமாகத்தான்!

இளமங்: (ஆத்திரமாக) கலியாணமாம்! என்னைப் படுகுழியிலே தள்ள ஏற்பாடு செய்துவிட்டுப் பசப்பிப் பேசறியா? (திலகாவிடம்) - அவலட்சணமாம்மா நான், என்னை ஒரு நொண்டிக்குக் கலியாணம் செய்து கொடுக்க?

திலகா: (திடுக்கிட்டு) நொண்டிக்கா? எப்படி அம்மா மனம் இடங்கொடுத்தது ஒரு நொண்டிக்கு இவளைக் கலியாணம் செய்து தர.

வ.மாது: (பயத்துடன்) சொத்துக் கொஞ்சம் இருக்குது, கால் நொண்டியானாலும் மனுஷரு தங்கமானவர் - குணசாலி.

திலகா: (கோபமாக) குணசாலி! நாமோ நொண்டி - நமக்கு ஏன் கலியாணம் - நம்மைக் கலியாணம் செய்து கொண்டா எந்தப் பொண்ணுக்குத்தான் மனம் நிம்மதியாக இருக்கும் அவ புருஷன் நொண்டி - ஒரு கால் கிடையாது. இப்படித்தானே பலபேர் ஏளனமாக பேசுவாங்க - நம்மாலே ஒரு பெண்ணுக்கு இழிவும் பழியுமா கிடைக்க வேணும் - சேச்சே - கலியாணமே வேண்டாம்னு தீர்மானம் செய்திருந்தா - அந்த ஆள் தங்கமானவர் குணசாலி. புத்தியில்லாக் காரியம் செய்யாதே - குருடு - முடம் - நொண்டி - ஊமை இதுகளுக்கெலாம் கலியாணம் வேறயா?

வ.மா: (மகளைப் பார்த்து) வாடி கண்ணு வா - சத்தியமா அந்த நொண்டிக்கு நான் உன்னைத் தரமாட்டேன்.

[இள மங்கை மகிழ்கிறாள் திலகா அவளைப் பார்த்து]

திலகா: அப்படி ஏதாவது மறுபடியும் இந்த அம்மா ஏற்பாடு செய்தா - இதோ இவர் இருக்காரே—

[முத்து மாணிக்கத்தைப் பார்க்கிறாள், அவன் வெகு தூரத்தில் சென்றுகொண்டு இருப்பதைப் பார்த்து, சரி, போய்வாம்மா என்று கூறிவிட்டு முத்து மாணிக்கத்தைத் தொடருகிறாள். தன்னை மறந்து திலகா ஓடி வந்து முத்து மாணிக்கத்தின் கரத்தை பிடித்து]

திலகா: இதென்ன கள்ளன்போல, (என்று கேட்கும்போது முத்து கண்ணீர் வடித்தபடி இருக்கக்கண்டு கலங்கி) கண்ணாளா - என்ன இது?

முத்து: (சமாளித்தபடி) ஒன்றுமில்லை திலகா - நம் திருமணத்தைக் காண அப்பா இல்லையே என்ற விசாரம்...

திலகா: இல்லை - கண்ணாளா - எதையோ மறைக்கிறீர்—

முத்து: (புன்னகையை வருவித்துக்கொண்டு) ஒன்றுமில்லை திலகா—இன்னும் பத்துநாளில் வந்து சேருகிறேன்—புறப்படு கண்ணே - நேரமாகிறது - துணைக்கு யார்.

திலகா: தும்பை வந்திருக்கிறாள் - ஹா - பத்து நாட்களில்.

முத்து: ஆமாம் - திலகா? (அவளுடைய கரங்களை எடுத்து கண்களில் ஒத்திக்கொண்டு உருக்கமாக) போய் வா திலகா!

நாடகமேடை
நாடகப் பாடல்


சேடியர்கள்: மாசிலாதமாமணி மனோன்மணி வந்தனம்
                         மாண்பொடு உமதொரு பாங்கிமார்கள் தந்தனம்
                         மாநிலம் ஆண்டிடும் ராணியார்
                                                          வாழ்க வாழ்கவே!

கோணங்கி: வாழ்க வாழ்கவே!

ராணி:உல்லாசமிகும் பாங்கிமார்களே
                                        உயிரினும் அருமையாம் தருணிகாள்
                        எல்லோரும் இன்றுவருக வருக (உல்)

                        கலாபமயில்க் கூட்டம் போல
                                      காட்டில் நாம் உலாவலாம்
                        கலைமான் புலி யானை சிங்கம்
                                     கரடி வேட்டை யாடலாம்
                        கத்தி யீட்டியும் வில்வேலும்
                                      கரத்திலெடுங்கள் புறப்படலாம். (உல்)

ராணி:மதன்மோகனன் - எந்தன்மண வாளன்
                                    எந்தன் மணவாளன் - இன்பந்தரும் தோழன்!
                                    கந்தமலர் மாலைசூடும் காதல் கண்ணாளன் (மத)

ராணி:வெட்கம் வேண்டாம் சாமி பக்கத்தில்வா? - இனி
                                    வீண்ஜாலம் கூடாது விளையாடவா? (வெட்)

கோணங்கி: வேண்டாமம்மா வீணே விபரீதமேன்?

ராணி:விசனம் இனிமேல் வேண்டாம் - நான் சொல்கிறேன்!


வசன நடை


கோணங்கி: தாயே, தஞ்சம் தமியேன் என்னசெய்யணும்?

ராணி:இந்தா?
                         தாலிக்குப் பதிலாக இதையென் கழுத்தில் கட்டணும்!

கோணங்கி: எப்படி?

ராணி:இப்படி!...


சேடியர்கள்:லாலி லாலி. சுப லாலி லாலி.
                               மூளைகெட்ட - ராணிக்கும் கோணங்கி - ராஜர்க்கும் (லாலி)

வேறு சேடிகள்: வாங்க வாங்க வய்யா வைத்தியரே - இங்கே
                               வந்து கொஞ்சம் பாருமையா பெரியவரே.
                               மன்னி யெங்கள் ராணி மயங்குவதைப் பார்நீ
                               மனங்கொண்ட நோய்தீரவே - ஏதேனும்
                               மருந்துண் டோசீ ராகவே?...

வசன நடை


வைத்தியர்:எங்கே கையை நீட்டு..ஆ?.. அடிக்கிறது!
                              கண்ணைக்காட்டு.. ஓ?.. அதேதான்!
                              வாயைத் தொற, நாக்கை நீட்டு.
                              முழுங்கு, முழுங்கு, சரியாப்போகும்.

ராணி:ராணியிடம் சமானமாக
                                           ராசாவைப் போல் நிற்கும்
                                           ஆசாமியார் சொல்லு
                            யாரடா நீ? இங்கே வந்தவன் (யாரடா)

கோணங்கி: காதல் கண்ணாளனம்மா கட்டிக்கொண்ட தோழனம்மா.
                                     இஷ்டமென்று சொல்லுமம்மா.
                                                 ஆதரிக்கத் தடையேனம்மா!...

ராணி:மூடனை இழுத்துச் செல்லுங்கள்.
                                            முடியைச் சிரைக்கச் சொல்லுங்கள்.
                             காதகனைக் கழுதை முதுகினி லேற்றுங்கள்.
                                            கரும்புள்ளி செம்புள்ளிகள் கன்னத்திலே-குத்துங்கள்
                            வீதியெல்லாம் சுற்றிச்சுற்றி வெட்கங்கெடச் செய்யுங்கள்
                                            வெட்டுங்கள் வெட்டுங்கள் கட்டிக்
                                            குத்துங்கள் குத்துங்கள் எட்டி (மூடனை)


மதிவாணன்: புரிகிறது அமைச்சரே - நன்றாகப் புரிகிறது - நாடகம், அதன் நோக்கம் - எல்லாம்!.

துணை அமைச்சர்: (திடுக்கிட்டவர்போலாகி) மதிவாணரே! என்ன ஒரு மாதிரியாகப் பேசுகிறீர்?

மதி: சித்ரவதை செய்யப்படுகிறேன் - என்னால் தாங்க முடியாது இவ்வளவு இழிவை - ஏளனத்தை -

துணை அமைச்சர்: (குறும்பாகப் பார்த்தபடி) - எனக்கொன்றும் விளங்கவில்லையே! வேதனை ஏன் உமக்கு?

மதி: பட்டத்தரசியை இந்தப் பாவி மணம் புரிந்து கொண்டால் சித்ரவதைதான் கிடைக்கும் பரிசு.

[வேதனையுடன் ஓடுகிறான். வேந்தன் முதலியோர் சிரிக்கின்றனர்]

[குமாரதேவியின் அரண்மனை உட்புறம் அரசி, அமைச்சர், படைத்தலைவர் மூவரும் இருக்கின்றனர்.]

குமாரி: (கோபமாக) நான் ஒரு குடி மகனை மணம் செய்துகொள்வது நாட்டுக்கு அவமானம் என்கிறீர்!

அமைச்சர்: நாங்கள் கூறுவதல்ல தேவீ.

படைத்தலைவன்: மக்களின் மனப்போக்கைக் கவனித்தோம் மக்களின் சார்பாகப் பேசுகிறோம்!

குமாரி: (அமைச்சரைப் பார்த்து) தெளிவும் தைரியமும் கொண்ட எந்தப் பெண்ணும் தூய காதலுக்கு கட்டுப்பட முன் வரலாம். அரசியாக அமர்ந்திருக்கும் ஒரே காரணத்துக்காக, நான் அந்த உரிமையை இழக்கவேண்டுமா? என் எதிர்காலம் பாலைவனமானால் என் நாடு சோலைவனமாகுமா? இதுவா நியாயம்? என் வேதனையைக் கிளறாதீர். அவரை அன்றி நான் வேறொருவரை மணம் செய்து கொள்ள முடியாது...

அமைச்சர்: மனம் கரைகிறது தேவி! எனினும், மண்டலத்தின் நலன், ஆபத்து உண்டாக்கக்கூடாதே என்ற அச்சம், என் மனதைக் கல்லாக்கிவிட்டது.

குமாரி: சரி. என் முடிவான கருத்தைக் கூறிவிட்டேன்.

அமைச்: எங்கள் வேண்டுகோளை நிராகரிக்க...

ப. தலைவன்: துணிவு, தேவியாருக்கு இருக்கிறது அமைச்சரே. துளியும் உமக்குத்தான் இல்லை - இந்தத் திருமணம் நிச்சயம் என்றால் நான் படைத்தவனாக இருந்து பணியாற்ற முடியாது தங்கள் திருமணத்திற்கு நான் அனுப்பக்கூடிய பரிசு அதுதான்.

அமைச்: தேவி! நான்மட்டும் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க முடியுமா?

குமாரி: (படைத் தலைவரைப் பார்த்து) உள்ளத்தின் போக்கை உணரமுடியாத உம்மிடம் வாதிடுவது, வீண் வேலை, படைத்தலைவரே! போரிலே, நீர் புலி, மதிக்கிறேன். உமது சேவை நாட்டுக்கு நிச்சயமாகத் தேவை, உணர்கிறேன். அமைச்சரின் கூரிய மதியும், உமது கூர்மையான வாளின் துணையும, தாய் நாட்டுக்கு தேவை. நிச்சயமாகத் தேவை ..(இருவர் முகங்களும் மலர்கின்றன)

நாடு இழக்கக்கூடாது உம்மை இழக்கச் சம்மதியேன் துளியும். ஆனால் என் தூயக் காதலை அழித்துக்கொள்ளவும் சம்மதிக்க முடியாது (இருவர் முகமும் மீண்டும் சோகம்)

இருவரும்: ஆகையால்?

குமாரி: நாட்டை உங்களிடம் ஒப்படைக்கின்றேன்.

இருவரும்: நாட்டை...

குமாரி: நான் முடி துறக்கத் தீர்மானித்துவிட்டேன். அமைச்சரே! இந்த நாட்டின் எதிர்காலம் உங்கள் வசம் இருக்கிறது. மக்கள் தக்க திட்டம் தீட்டிக் கொள்ளட்டும்! தலையிலே முடியும் நெஞ்சிலே பெரு நெருப்பும், தாங்கித் தவித்திட முடியாது என்னால்! ஆகவே பொது சபை கூடட்டும்! நான் முடி துறந்து விடுகிறேன்!

[இருவரும் ஆச்சரியம் மேலிட்டு தயக்கத்துடன் நிற்கிறார்கள். அது கண்டு,]

குமாரி: போகலாம்.

[இருவரும் செல்கின்றனர் தோழி வருகிறாள் தயக்கத்துடன்]

[மதிவாணன் மாளிகை...உட்புறம் குமார தேவியிடமிருந்து வந்த பணியாள் மதிவாணனிடம் ஓலைதர, அவன் அதை வாங்கிப் பார்த்துப் பூரித்துப் போகிறான்.]
மதிவாணன்: திலகா! திலகா! கேட்டாயா சேதியை?

திலகா: (ஆவலுடன்) என்ன அண்ணா, அரசி வருகிறாரா?

மதி: உன் அண்ணி ஒரு நாட்டின் அரசி, ஆக அவளிடம் நாம் அடங்கிக் கிடப்போம் என்று பேசினார்களல்லவா, சில பித்தர்கள்?

திலகா: பொறாமையால் பேசினார்கள்!

மதி: நிலமையும் அதுதானே, திலகா! ஆனால், இனி அந்தக் களங்கமும் இல்லை, என் காதலிக்கு. திலகா, - உன் அண்ணி - என் பொருட்டு அரசிப் பதவியை வேண்டாமென்று கூறிவிட்டாள்.

திலகா: (திடுக்கிட்டு) ஹா!

மதி: முடி துறந்துவிடத் தீர்மானித்துவிட்டார் (மதிவாணன் மகிழ்ச்சியுடன் திலகாவின் கரத்தைப் பிடித்திழுத்து)

வா, திலகா. உன்னை இனியும் இங்கே இருக்க விடப் போவதில்லை.

திலகா: என்ன அண்ணா இது?

மதி: (அவள் கன்னத்தைக் கிள்ளி) கள்ளீ! ஒன்றுமே தெரியாது உனக்கு! திருமணம்! முதலில் உன் திருமணம்! பிறகுதான் எனக்கு! வா! (உள்ளே சென்று தராசைக் காட்டி) வா...உம்...நில் இப்படி!

திலகா: இது ஒரு வேடிக்கை அண்ணா, உனக்கு.

மதி: (தங்கக் கட்டிகளைப் போட்டு எடைபார்த்தபடி) வேடிக்கையா? எடைக்கு எடை தங்கம் என்னால் தர முடியாது என்றல்லவா எண்ணினான் சோமநாதன். (எடை பார்த்து மகிழ்ந்து) இதோ எடைக்கு எடை தங்கம்! எடைக்கு மேலும் தங்கம்!

[திலகாவின் எடை அளவுக்குப் போக மீதமிருக்கும் தங்கக் கட்டிகளைக் காட்டி மகிழ்கிறான். திலகாவும் பூரிப்படைகிறாள்]
மதி: என் சபதம் நிறைவேறிவிட்டது. ஓலை அனுப்புகிறேன் திருமண நாள் குறித்து! இதோ! இப்போதே!

[திலகா வெட்கப்பட்டு உள்ளே ஓடிவிடுகிறாள். மதிவாணன் மகிழ்ச்சியுடன் ஓலை தயாரிக்கிறான்.]

[வெற்றிவேலன் அரண்மனை ஓர் கூடம். வெற்றிவேலன் ஒற்றனிடம் பேசுகிறான்...]

வெற்றிவேலன்: நம்ப முடியவில்லையே! இந்தப் பராரிக்காகப் பட்டத்தைவிடச் சம்மதிக்கிறாளா? ஹும்! எவ்வளவு பைத்தியக்காரத்தனம்!

ஒற்றன்: பலர் இதுபோலத்தான் வேந்தே கேலி பேசுகிறார்கள் - குமாரதேவி எதையும் பொருட்படுத்தவில்லை.

வெற்றி: பிடிவாதக்காரி...அதோ அவன் தான்! சரி, நீ போகலாம்! (மதிவாணன் மகிழ்ச்சியுடன் அங்கே வர...) வா, மதிவாணா! கேள்விப்பட்டேன் - களித்தேன் - காதலின் சக்தியே சக்தி...!

மதி: வேந்தே! குமாரதேவியின் தியாகம் மகத்தானது நான் துளியும் எதிர்பார்க்கவில்லை! என் பொருட்டு ஒரு பெரும் அரசை இழக்க மனம் வருவதென்றால் ஆச்சரியம்தான்...!

வெற்றி: ஆம் ஆம். இசை அரசனல்லவா நீ - பிறகு பேசுவோம் - ஒரு அவசரமான வேலை.

மதி: வணக்கம்.

மதிவாணன் வணக்கம் கூறிவிட்டுச் செல்ல

வெற்றி: மடையன்! நான் வேறு புகழவேண்டுமென்று எதிர்பார்க்கிறான்! மண்டைக் கர்வியாகி விடுவான். மட்டந்தட்டியாக வேண்டுமே!...(யோசித்தபடி) எப்படியாவது மட்டந்தட்டியாக வேண்டும். குமாரியும் இவனும் இங்குக் குதூகலமாக வாழ்வது! நான் அதைக் காண்பதா? வெட்கம் வேலெனக் குத்துகிறது என் நெஞ்சை! வேந்தனாக வேறு இருக்கிறேன் இந்த இலட்சணத்தில்!

(கவலையுடன் உலாவுகிறான்)
[வல்லியூரில் முத்துமாணிக்கம் மாளிகை...ஒர் கூடம். முத்துமாணிக்கம், தோழி தும்பை தந்த ஓலையைக்கண்டு பூரிப்படைகிறான் முதலில்,—அவள் காணாவண்ணம். அடுத்த விநாடி அவன் முகம் மாறுகிறது. வேதனைப்படுகிறான்...ஓலையைப் பார்க்கிறான் மீண்டும். மறுகணம் ஓலையைக் காணக் கண் கூசுகிறது. கண்களை மூடிக்கொண்டு கலங்குகிறான்...தும்பை அறியாவண்ணம் தன் வேதனையை மறைத்துக் கொள்கிறான்...பலகணி வழியாக வெளிப்புறத்தைப் பார்த்தபடி நிற்கிறான். ஓலையைக் கண்களில் ஒத்திக் கொள்கிறான் தொலைவிலே பட்சிகளின் இன்ப வாழ்வுக் காட்சி காண்கிறான்... வேதனை தாங்கமாட்டாது கண்களை மூடிக்கொள்கிறான். யோசனை செய்கிறான். ஒரு முடிவுக்கு வந்தவனாகிறான்...இலேசாகப் புன்னகை தோன்றுகிறது... மறைத்துக்கொள்கிறான். முகத்தை கடுமையாக்கிக்கொண்டு, திரும்பி, தும்பையைப் பார்த்து...ஓலையைக் கசக்கி அவள் எதிரே வீசி.]

முத்து: என்ன இது? ஏமாளி என்று எண்ணிக் கொண்டானா என்னை? திருமணமாம்.. திருமணம்! (தும்பை திகைக்கிறாள்) எவ்வளவு ஆணவம்? முத்துமாணிக்கம் முட்டாளல்ல. ஊர் பேரில்லாத் திலகாவைத் திருமணம் செய்துகொள்ள! (தும்பை கோபம் கொள்கிறாள்) ஆடிப்பாடிப் பேசினாள். நானும் மகிழ்ச்சிக்காக விளையாடினேன்—கலியாணமே செய்துகொள்வதாமே—ஊம் (கேலியாக) பெரிய பிரபு குடும்பமல்லவா? பாடிப் பிழைக்கும் பராரிக்கு எவ்வளவு பேராசை! போ.. போ.. போய்ச் சொல்லு உன் திலகாவிடம்! அவனிடமும் சொல்லு திருமணம் என்ற எண்ணத்தை மறந்துவிடச் சொல்லு! என் அந்தஸ்து என்ன? குலம் என்ன? குடும்ப கெளரவம் என்ன? எப்படி அடுக்கும் இந்த சம்பந்தம் என்று கேள்? போ! ஒலையை எடுத்துச் செல்! கொண்டுபோய் அவன் முகத்தில் வீசு! திலகாவைத் திருமணம் செய்துகொள்வதாம்! ஹும்! பைத்யக்காரன்! நான் செய்துகொள்வதாம்!..நான்!

[தும்பை கண் துடைத்தபடி வேகமாகச் செல்கிறாள்...அவள் சென்றதும், முத்துவின் வேதனை மீண்டும் தோன்றுகிறது. பதறுகிறான். கீழே எறிந்த ஓலையைப் பாய்ந்து சென்று எடுத்துக்கொண்டு பாசத்தோடு மார்பருகே வைத்துப் பதறியபடி..]

முத்து: திலகா! திலகா! நான் என்ன செய்வேன்? ஐயோ! எவ்வளவு கொடுமை! எப்படித் தாங்குவாய் கண்ணே! எப்படித் தாங்குவாய்!

(தள்ளாடிச் சென்று பலகணி வழியாகப் பார்க்கிறான். எங்கும் வெட்டவெளியாகத் தெரிகிறது அவன் கண்களுக்கு)

[சோழநாட்டில் மதிவாணன் மாளிகை-ஓர் கூடம். திலகாவின் தனி அறையில் தோழி தும்பையும் திலகாவும் பேசுதல். திலகா கண்ணீர் சிந்தியபடி..]

திலகா: எப்படித் தாங்குவேன்! எப்படியடி தாங்குவேன். உயிரினும் மேலாக மதித்துவந்தேனே! அவரா திருமணம் கிடையாது என்றார்! ஏசினாரா? என்னையா? சோலையிலே சாலையிலே விளையாடிய என் சுந்தரனா?

தேம்புகிறாள். அவளைத் தேற்றியபடி.

தும்பை: அக்ரமக்காரனம்மா அந்த முத்துமாணிக்கம்; வீசி எறிந்தான் ஓலையை! ஏசினான் கண்டபடியெல்லாம்! என் கரத்திலே கட்டாரி இருந்தால் குத்திக் கொன்றிருப்பேன் அந்தக் கொடியவனை!

[அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே அங்கு வந்த மதிவாணன் மனம்பதறி..]
மதிவாணன்: தும்பை! என்ன என்ன (கோபமாக) முத்துமாணிக்கமா? இப்படிச் சொன்னான்? அவனா மோசம் செய்கிறான்? நம்ப முடியவில்லையே.

[கோபமாக வெளியே செல்கிறான். திலகா கண்ணீர் பொழியும் நிலையில் தும்பையைப் பார்க்கிறாள்.]

[சோலைநாடு குமாரியின் பொது சபை கூடியிருக்கிறது. கவலை தோய்ந்த முகத்துடன் பிரமுகர்கள் உள்ளனர். அரண்மனை வெளியில் பெருந்திரள் கூடியிருக்கிறது. கொலுமண்டபத்திற்கு, அதன் உட்புறக் கோடியிலிருந்து, செந்தாமரையுடன் அரசி வருகிறாள் அரசி, அரசி உடையும் தலையில் கிரீடமும் அணிந்திருக்கிறாள் அதைக் கண்டு அனைவரும் உருகுகின்றனர். நடுக்கமற்ற குரலில் படிக்கிறாள்]

குமாரி: பொது சபையினரே! நம் நாட்டு சம்பிரதாயமும், அதைக் கட்டிக் காத்திட உறுதிகொண்டவர்களும், நான் ஒரு குடிமகனைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்று தெரிவிப்பதால், நான் என் காதலைத் தடைசெய்யும் இந்த அரச பதவியிலிருந்து விலகிக்கொள்வதென முடிவு செய்துவிட்டேன். இது முடி துறப்புப் பிரகடனம். கடமைக்காகக் காதலைக் கைவிடவேண்டும் என்று வாதிட்டனர் பெரியவர்கள். காதலும் ஒரு கடமைதான். அந்தக் கடமையை நான் மதிக்கிறேன். அரசியாக இருப்பதனால் காதல் உரிமையை இழக்கவேண்டும், என்று கூறினர் பெரியவர்கள். அவர்களின் அறிவாற்றல் இந்த நாட்டுக்குத் தேவை. அவர்களை இழக்க நான் இசையவில்லை. எனவே நாட்டைப பொது சபையிடம் ஒப்படைத்துவிட்டு, நான் முடி துறந்துவிடத் தீரமானித்து விட்டேன்.

[செந்தாமரை ஓர் எழுதுகோல் தர, தடுமாற்றமின்றிக் கையொப்பமிட்டுவிட்டு, பிரகடனத் தாளைச் சுருட்டி மேஜைமீது வைத்து கிரீடத்தை ஜாக்கிரதையாக எடுத்து ஒருகணம் பாசத்துடன பார்த்துப் பக்கத்தில் வைத்துவிட்டு, "நான் விடை பெற்றுக் கொள்கிறேன். வணக்கம்." என்று தெளிவாகக் கூறிவிட்டு, கீழே இறங்குகிறாள். அமைச்சர் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். யாவரும் வருத்-
தப்படுகின்றனர். தன்னைத் தடுத்துவிடுபவர் போலப் பரபரப்பு அடைபவர்களைப் புன்னகை செய்து தடுத்துக்கொண்டே மண்டபத்தின் வெளிப்புறம் வருகிறாள்...அலங்கோல நிலையில் ஓர் போர்வீரன் பரபரப்புடன் ஓடிவந்து அரசியிடம் ஓர் ஓலையை நீட்டியபடி...]

தூதுவன்: ஆபத்து! அரசியாரே! பேராபத்து! நடுநாட்டரசன் போர் தொடுத்துவிட்டான், நம் நாட்டின் மீது!

[அரசி திடுக்கிடுகிறாள். அவள் கண்கள் மேஜைமீதுள்ள முடிமீது செல்கின்றன.]

சபையோர்கள்: (அச்சத்துடன்) போர்! போர்!

[படைத்தலைவர் மீசையில் கைவைத்தபடி புன்னகை புரிகிறார்]

குமாரி: போர் தொடுத்துவிட்டானா?

தூதுவன்: புயலென ஓடிவந்தேன் அதைக் கூற.

குமாரி: பிரகடனத்தைக் கிழித்தெறியும், அமைச்சரே, நான் முடிதுறக்கப் போவதில்லை! அரசி குமாரதேவியின் படைகள் தயாராகட்டும். நடுநாட்டின்மீது நாம் படை எடுக்கத் தீர்மானித்துவிட்டோம்!

[முத்து மாணிக்கம் பூஞ்செடிகளிடையே செல்லுதல்—பிறகு, காய்ந்து கருகிய பாதை வழியே வருதல். தனி உரை]

திலகா! திலகா! என்ன பாடுபடுகிறாயோ என்னால்! திருமணம் இல்லை என்ற உடனே வேதனை, வெள்ளம் போலாகியிருக்கும்! யார் நம்புவார்கள் முத்துமாணிக்கம் திலகாவுக்குத் துரோகம் செய்வானென்று! யாருக்குப் புரிகிறது என் துரோகத்துக்குக் காரணம் என்ன என்று! எப்படி புரிய வைப்பேன்!

[மதிவாணன் மாளிகை உட்புறம், விசாரத்துடன் வீடு திரும்பிய மதிவாணரிடம் குமாரியின் தூதன் ஓலை தருகிறான்.]
மதி: என்ன, என்ன, முடிதுறக்கவில்லையா? முடியவில்லையா? விளக்கம் கூறுவதற்கு முடியாதா? முழு மூடனானேன்—மோசம் போனேன்!

தூதன்: ஓலையைச் சரியாகப் பார்த்துவிட்டுப் பேசும் மதிவாணரே!

மதி: –ஓலை.., என் களிப்புக்கு மரண ஓலை இது...

[மடாலய உட்புறம், மாசிலாமணியும் அருமறையானந்தரும் பேசுதல்.]

மாசிலாமணி: (ஒரு படத்தைக் காட்டி) இந்த மாளிகை, தங்கள் தங்கை மகனுக்குக் கட்டிக் கொடுத்ததைவிட அழகாக இருக்கிறது...இது...

அருமறை: –ஆனால்...அண்ணன் மகள் தொல்லை பொறுக்க முடியவில்லை... (மற்றொரு படத்தைக் காட்டி) இதைக் கட்டிக் கொடுக்கவேண்டும். அதற்குப் பணம் கைவசம்...

மாசி: நேற்று ஆயிரம் அருள்சீட்டு விற்ற பணம் என்னிடம் இருக்கிறது...

அரு: மகரகண்டி வாங்கினோமே அதற்குப் பணம் தந்தாகிவிட்டதோ?

மாசி: மாணிக்கப் பூபதியிடம் விற்ற அருள் சீட்டுத் தொகையை அதற்கே செலவிட்டேன்.

அரு: ஆறு கிராமங்கள் வாங்கிவிட்டு அவசரப்படுகிறாய்!

மாசி: அருமையான கிராமங்கள், விட மனமில்லை.

அரு: பணம் தேவையாயிருக்கிறது பல காரியங்களுக்கு.

[மடாலயத்தின் உட்புறம். மதிவாணன் மடாதிபதியின் தனி அறை நோக்கிச் செல்கிறான். உள்ளே மிரட்டிப் பேசும் குரல் கேட்டு வெளியே நின்று கேட்கிறான் பேச்சை—பதறியபடி.]

மடாதிபதி: (ஆண்டிகளைப் பார்த்து) தடித்தாண்டவராயன்களே! அருள்சீட்டு விற்கக்கூடத் திறமையில்லையென்றால் எப்படி நீங்கள் தனி மடாலயங்களைக் கட்டி ஆளப்போகிறீர்கள்?

ஓர் ஆண்டி: மக்களிடம் பணம் முன்போல் இல்லை, ஏராளமாக. ஆனால் இம்முறை அதிகச் சீட்டுகள் விற்பனையாகும்.

மடா: வணிகர்களைத் தேடிப்பிடி. வயோதிகச் சீமான்களை விடாதே. குழந்தையில்லாக் குடும்பங்களின் கணக்கைத் தயாரித்துக்கொண்டு வேலையில் இறங்கு. இதுதானே நான் வகுத்த முறை!

ஆண்டி: சொர்க்கவாசல் துவக்கவிழா நடந்துவிட்டால் பணம் மளமளவென்று குவிந்துவிடும் என்று கூறுகிறார்கள்.

மடா: யார் இல்லை என்கிறார்கள்? இது தெரியும் எனக்கும்! ஆனால் துவக்கவிழாவுக்குப் பணம் வேண்டாமா? துதிபாடி விட்டால் விழா நடந்துவிடுமா? பணம் திரட்டுமய்யா, பணம்!

ஆண்டி: சென்று வருகிறோம்...

மடா: சென்று கூறும் சொர்க்கவாசல் துவக்கவிழாவிலே, மதுரகவி, அரசியைக் காணிக்கையாய்ப் பெற்ற அமரகவி, மதிவாணன் இசை விருந்து உண்டென்று சொல்லும்.

ஆண்டி: இசை விருந்து! சொன்னால் போதுமே! சீட்டுக்கள் சிட்டுபோல் பறக்கும்.

[ஊரை அடுத்துள்ள அடவி. மதிவாணன் செல்கிறான். சுற்று தூரத்தில் கவிராயர் வரக்கண்டு, மதிவாணன், ஐயனே, ஐயனே என்று கதறிய வண்ணம் அங்கே அடைகிறார்.]

கவி: மகனே! இது என்ன மருட்சி?

மதி: என் தலை சுற்றுகிறது! மனம் எரிமலையாகிவிட்டது!

கவி: எதனால்? உண்மையைக் கண்டதாலா?

மதி: உத்தமன் என்று ஊரெல்லாம் புகழ்கிறது அந்த உலுத்தனை!

கவி: நீயும் புதுப்புதுப் பாடல்களைப் பாடினாயே அவனைப் புகழ்ந்து.

மதி: காட்டு ராஜாபோல் பேசுகிறான் ஆண்டிக் கோலத்தில் உள்ள அக்ரமக்காரன்! பூசுவதோ திருநீறு! ஐயோ! நாடு எப்படிச் சகித்துக் கொண்டிருக்கிறது இந்த கயவஞ்சகத்தை!

கவி: நாடு! யார் நாட்டு மக்களுக்கு உண்மையை உரைத்தவர்கள்? அவர்கள் உண்மையைத் தெரிந்து கொள்வதையும் தடுக்கத்தான் உன் திறமை—கவிதா சக்தி இருக்கிறதே!

மதி: ஐயனே! சொர்க்கவாசல் கட்டுகிறானாம் அந்த சோற்றுத்துருத்தி.

கவி: பொருள் திரட்டப் புதுவழி!

மதி: துவக்க விழாவாம்! அதிலே என் இசை விருந்தாம்!

கவி: சொன்னானா?

மதி: நான் அவனைக் காணவில்லையே! முடியவில்லை! அக்ரமக்காரன் ஆண்டிகளிடம் பேசினது கேட்டு, ஓடோடி வந்துவிட்டேன், உம்மிடம் கூற!

கவி: சொர்க்கவாசல்! சொர்க்கவாசலா கட்டப் போகிறான்? அதன் மகிமையை மதுரகீதம் பாடி மக்களுக்குத் தெரிவிக்கச் சொல்லுகிறான் உன்னை.

மதி: அந்த அகரம் விழாவிலே நான் ஈடுபடமாட்டேன்.

கவி: சொர்க்கவாசல்! இங்கே நரகமிருக்கிறது, நாற்றமடித்துக்கொண்டு ஏமாளிகளைக் கொள்ளை அடித்து சொர்க்கவாசல் கட்டுகிறானாம் சொர்க்கவாசல்! மகனே! நரகத்தைப் பார்த்ததுண்டா? நேரம் இருந்திராது உனக்கு. உல்லாச புரியிலே உலவியவனல்லவா? உன் கண்களிலே நரகம் தெரிந்திராது. வா, மகனே வா நரகத்தைக் காட்டுகிறேன் வா! நயவஞ்சகர்களால் ஏற்பட்ட நரகத்தைப் பார்க்கலாம். நல்லறிவு பெற்றவர்கள், நமக்கென்ன என்று இருந்து விட்டதால், ஏற்பட்டுவிட்ட நரகத்தைப் போய்ப் பார்க்கலாம் வா...வா மகனே வா...வேந்தன் வெற்றிவேலனால் ஏற்பட்ட இந்த வேதனை தரும் காட்சியைப் பார். மன்னன், நமக்கென்ன என்று இருந்துவிட்டதால் மக்கள் படும் அவதியைப் பார்.

[மதிவாணன், கவியின் உருக்கமான பேச்சால் இழுக்கப்பட்டவனாய், கவியின் பின் செல்கிறான். வெட்ட வெளியில் வசிப்போர், இடிந்த வீட்டில் இருப்போர், சாக்கடை ஓரம் இருப்பவர், அரைப்பட்டினிகள், நோயாளிகள் ஆகியவர்கள் வதைபட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளைக் காட்டுகிறார் மதிவாணனுக்கு.

காட்சிகளைக் காணக்காண மதிவாணனின் சோகம் வளர்கிறது. கண்களில் கசியும் நீரைத் துடைத்துக் கொள்கிறான்.]

கவி: மதிவாணா! இந்த நரகத்தை மறைக்க சொர்க்கவாசல் கட்டுகிறார் மத அதிபர்! முறையா? இவர்களுக்கு இதம் செய்யப் பணத்தைச் செலவிடச் சொல் மகனே! சொர்க்கவாசலுக்கு அல்ல!

[மடாலயத்தின் உட்புறம். மடாலயத்தில் மாசிலாமணி மதிவாணனை அழைத்துக் கொண்டுபோய் மடத்தலைவர் முன்நிறுத்தி]

மாசி: கண்டுபிடிப்பதே கஷ்டமாகிவிட்டது. வீட்டிலே தங்குவது கிடையாதாம்.

மடா: விசாரம் மதிவாணனுக்கு குமாரதேவியின் மோசம் மனதை உடைத்துவிட்டிருக்கும். கவலைப்படாதே மதிவாணா! எங்கே போயிருந்தாய் பல நாட்களாக?

மதி: நரகத்துக்கு!

மடா: (சிரித்தபடி) நரகத்துக்கா? மதிவாணா! என்ன மனக்குழப்பம் இவ்வளவு? காதல் கைகூடாவிட்டால் கஷ்டம்தான்! ஆனால் அதற்காக உலகை வெறுத்துவிடுவதா?

மதி: காதல் சம்பந்தமாக விளக்கம் வேண்டாம்.

மாசி: கோபம் இப்படி வரக்கூடாது! அதுவும் இந்த இடத்தில்!

மதி: அழைத்த காரணம்?

அரு: சொர்க்கவாசல் விழாவுக்கு நாள் குறித்துவிட்டேன். விழாவிலே உன் இசை விருந்து — பல நாட்டு மன்னர்கள், பிரபுக்கள், கலாரசிகர்கள், பக்த கோடிகள் இவர்கள் முன்னிலையில் உன் இசை விருந்து!

மாசி: இதுவரை அப்படிப்பட்ட திருச்சபை நீ கண்டிருக்க மாட்டாய்—இனிக் காணவும் முடியாது.

மதி: இப்போதுகூட அந்தத் திருச்சபையைக் காணப் போவதில்லை நான்.

மடா: மதிவாணா?

மதி: நான் விழாவிலே பாடமுடியாது. விழா அல்ல அது, வீணர் கொண்டாட்டம்.

மடா: (திகைப்புடன்) கலந்துகொள்ள...? மதிவாணா? என்ன சொல்கிறாய்?

மாசி: (கோபமாக) கலந்துகொள்ள மாட்டாராம் இந்த ராஜாதி ராஜன்.

மடா: மதிவாணா! என் கோபத்தைக் கிளறாதே!

மதி: பாபத்துக்கு நான் உடந்தையாக இருக்கமுடியாது. வேண்டாம் இந்த வீண் விழா! நாட்டிலே நரகம் இருக்கிறது—நாற்றமடித்துக்கொண்டு! அதை ஒழிக்காமல் சொர்க்கவாசல் கட்டுவது, படுமோசம்! நயவஞ்சகம்!

மடா: துரோகி! நான் அழைக்கிறேன்டா! இந்த நாட்டு மதத்துக்கு அதிபராக உள்ள நான் அழைக்கிறேன்!

மதி: நான் மறுக்கிறேன்.

மடா: எங்கோ கிடந்த உன்னை இவ்வளவு நல்ல நிலைக்குக்கொண்டு வந்தேன்—என் மனதைப் புண்ணாக்காதே மதிவாணா! சொர்க்கவாசல் விழா புனிதமானது? புண்ய காரியம்!

மதி: அருமறையானந்தரே!

[தன் பெயர் கூறி அழைப்பது கேட்டு அருமறையானந்தர் திடுக்கிடுகிறார். மாசிலாமணி, மதிவாணனின் கன்னத்தில் அறைந்து]

மாசி: மடையா! அவ்வளவு ஆணவமா? குருதேவர் என்று கூறாமல் பெயரிட்டா அழைக்கிறாய்?

மதி: (கலங்காமல்) குரு எனக்குக் கிடைத்துவிட்டார்கள் ஐயா! கண் திறந்துவிட்டார்கள்!

மடா: வேண்டாமடா மதிவாணா! வேகவைக்காதே நெஞ்சை...

மதி: நான் அந்த விழாவிலே பங்குகொள்ளமுடியாது.

மடா: நான் கட்டளையிடுகிறேன். விழாவில் பாடத்தான் வேண்டும்

மதி: நான் மறுக்கிறேன்.

மடா: பிணமாவாய்.

மதி: பிணம் பாடாது.

மாசி: இவனுடைய மண்டைக் கர்வத்தை, மன்னனிடம் கூறி...

மடா: போ நாயே வெளியே! போக்கிடமின்றி இருந்த உன்னைப் போக போக்யத்திலே புரளச் செய்தேனே! நன்றி கெட்ட நாய்க்குட்டியே, போ இந்த இடத்தைவிட்டு...

[மதியை மாசிலாமணி தள்ளுகிறான் வெளியே...]

(வெற்றிவேலன் அரண்மனை – ஓர் கூடம்–அரசனும் மாசிலாமணியும் அமைச்சருடன்)

அமைச்: மதிவாணனைத் தீர்த்துக்கட்ட இதுதான் சமயம்—மக்கள் பாய்வர் அவன் மீது—மண்டலம் நமது பக்கம் நிற்கும்.

வேந்: விளங்கவில்லையே.

அமைச்: மதிவாணன் நாத்திகன். புனித விழாவிலே பாட மறுத்தான். நாம் குற்றம் சாட்டுகிறோம். விசாரணை — தண்டனை.

வேந்: அருமையான திட்டம். அமைச்சரே. நாத்திகன் ! நாடு சீறும் அந்தச் சொல் கேட்டு.

தொலையட்டும் துரோகி—விசாரணைக்கு ஏற்பாடு செய்யும்.
[வெற்றிவேலன் அரசவை — மடாதிபதி மாசிலாமணி முதலியவர்கள் வீற்றிருக்கின்றனர். மதிவாணன் இரு போர் வீரர்களிடையே நிறுத்தப்பட்டிருக்கிறான்...]

வெற்றிவேலன்: (கோபமாக) மதிவாணா! நான் கட்டளை இடுகிறேன். விழாவிலே நீ பாடத்தான் வேண்டும்.

மதி: (உறுதியாக) முடியாது வேந்தே. மான் இரத்தம் குடிக்காது—வேங்கைபோல...

வெற்: புனித விழாவிலே கலந்து கொள்ள மறுப்பது எந்த விதமான குற்றம் தெரியுமா?

மதி: கூறுங்கள் வேந்தே.

வெற்: நீ ஓர் நாத்திகன்.

மதி: நான் நாத்திகனல்ல வேந்தே. நாத்திகனல்ல. கடவுளை மறுக்கவில்லை. பாபம் புரியும்படி தூண்டவில்லை. சத்தியம் வேண்டாமெனறு சொல்லவில்லை. சன்மார்க்கம் ஏன் என்று கேட்கவில்லை, சாந்தம், ஒழுக்கம், அன்பு, தயை, நீதி, நேர்மை எதையும் நான் மறுக்கவில்லை...

வெற்: சொர்க்கவாசல் விழாவிலே கலந்துகொள்ள மறுக்கிறாய்...

மதி: ஆமாம் அரசே விழா கூடாது என்கிறேன். மக்கள் வாடுகிறார்கள் வாழ்வில் சுகம் கிடைக்காமல். நாட்டிலே நரகம் இருக்கிறது. நானே கண்டேன். எனவே தான் விழா கூடாது என்கிறேன். கடவுளை வேண்டாம் என்று கூறவில்லை...

வெற்: போதும் உன் புது ஞானம். இன்று விழா வேண்டாம் என்கிறாய். பிறகு துறவி வேண்டாம், குருமார் வேண்டாம் என்று பேசுவாய். பித்தம் வேகமாக வளரும்.

மதி: மக்களின் மன மாசு போக்க, ஒழுக்கத்தை வளர்க்க துறவிகள் தேவை என்றால், புத்தர்போல் போதிக்கட்டும் பற்றற்று. பசித்தால் புசித்து, வியர்த்தால் குளித்து, நிழல் கண்டால் படுத்து, செம்பொன்னும் ஓடும் ஒன்றெனக் கண்டுள்ளவர்களே துறவி என்று ஆன்றோரும் சான்றோரும் கூறுகின்றனர். இவர் முறை இவ்விதமாகவா இருக்கிறது.

மடா: வேதனை எப்படி இருப்பினும் தேவ காரியத்துக்கு என்று கேட்டால் தட்டாமல் தயங்காமல் காணிக்கை தருகிறார்களே மக்கள். கருத்தற்றவனே இதன் பொருள் என்ன? காணிக்கை குவிந்திருக்கிறது குன்றுபோல...

மதி: காணிக்கை குவிந்ததே, எதற்குச் செலவிட்டார்? சன்மார்க்கப் போதனைக்கா?

மடா: அஞ்ஞானிகள் கொட்டத்தை அடக்க! கள்ளிகாளான்களைக் களைந்தெறியா முன்னம் செந்நெல்லைத் தூவுவாரோ அறிவுடையோர்?

மதி: ஞான பூமியிலே ஏனய்யா கள்ளி காளான் முளைத்தது?

மடா: உன் போன்ற பாபாத்மாக்களின் செயலால் தான்.

மதி: முளைவிட்ட கள்ளி காளான்களை காட்டுகிறோம். களைந்தெறியச் சொல்லுகிறோம். வயல் உம்மிடம் இருந்தது. உபதேசம் என்ற ஏர் கொண்டு உழுதீர். மக்களின் உழைப்பு என்னும் நீர் பாய்ச்சினீர். முளைத்துக் கிடப்பதோ கள்ளி காளான். தினைவிதைத்தால் தானே தினை கிடைக்கும்.

வெற்: இவனிடம் ஏன் விவாதம்? வீண் வேலை! கேள்வி—பதில்—தீர்ப்பு—இது தான் முறை.

மதிவாணா...சொர்க்கவாசல் விழாவைக் கண்டிக்கிறாய் இப்போதும்?

மதி: ஆமாம் அரசே. தேவ காரியம் அல்ல அது; தேவையான காரியமும் அல்ல அது என்று கண்டித்தேன்.

வெற்: உபதேசம் செய்தாயோ நீ?

மதி: இல்லையே. அது அவருடைய உரிமையல்லவா? உண்மையை உரைத்தேன். உபதேசம் செய்யவில்லை. கடமையைச் செய்தேன்.

வெற்: கடவுள் காரியத்தைக் கெடுப்பதுதான் கடமையா?

மதி: கடவுள் காரியத்தைக் கெடுப்பவனல்ல நான்—கடவுளின் பெயர் கூறிக்கொண்டு கயவர்கள் வெட்டும் படுகுழியில் விழ மறுத்தேன். குன்றுபோல் குவிந்ததாமே காணிக்கை. ஏழைக்கு இதம் தரும் ஏற்பாட்டுக்குச் செலவிடக் கூடாதா, என்று கேட்டேன். அறம் அதுதானே? ஆண்டவனிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்குச் சான்று அதுதானே? என்று கேட்டேன்.

வெற்: பேசக் கற்றுக் கொண்டான் பிரமாதமாக.

மடா: மயக்க மொழி பேசுகிறான் மக்களை வசப்படுத்த.

மதி: மக்களை மரக்கட்டைகள் என்று எண்ணாதையா! யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் நிலையிலே மக்கள் இன்று இல்லை.

மடா: பொய்யை மெய் போலப் பேசும் வித்தை, தெரிந்திருக்கிறது உனக்கு.

மதி: அந்தப் பெரும் வித்தை தங்களுடைய ஏக போக பாத்யதை அல்லவா?

வெற்: விசாரணை முடிந்தது. வீணனே கேள்! உன் மீதுள்ள குற்றங்கள்; புனித விழாவிலே கலந்துகொள்ள மறுத்தது, விழாவைக் கேவலமாகப் பேசியது. பூஜயர் அருமறையானந்தரை அவமதித்தது, அரச மார்க்கத்தை இகழ்ந்தது, ஆகிய குற்றங்களைச் செய்திருக்கிறாய்.

மதி: இவைகளில் ஒன்றைக்கூட மறுக்கவில்லை. ஆனால் இவைகளைக் கூட்டிப் பார்த்து நான் நாத்திகன் என்று கூறுகிறீர்களே அந்தத் தப்புக் கணக்கைத்தான் மறுக்கிறேன்.

வெற்: குறுக்கே பேசாதே. இவைகளைச் செய்ததால் உன்னை நாத்திகன் என்று நாம் குற்றம் சாட்டுகிறோம்.

பிரபுக்கள்: நாத்திகன் தான் இவன். நாத்திகன் தான் இவன்.

மதி: அதை நான் மறுக்கிறேன் மீண்டும். நல்லறிவை நாத்திகம் என்கிறீர், வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் வித்யாசம் தெரியாத குருடனைப்போல! நயவஞ்சகம் அல்ல, நாதன் அருளைப்பெறும் வழி, என்று கூறுவதா நாஸ்தீகம். அன்பும் அறமும் அறிந்து, உண்மையை உணர்ந்து, தன்னலத்தைத் தகர்த்தெறிந்து, பொது நலத்துக்கு பாடுபட்டு, நாட்டைப் பொன்னாடு ஆக்கினால், மக்களை வாழ வைத்தால் இறைவன் அருளைப் பெறலாம் என்று எடுத்துக் கூறுவதா நாத்திகம்? எது நாத்திகம். அன்பையும் அருளையும செழித்திடச் செய்வதற்காக ஏற்பட்ட இடங்களிலே அக்ரமம் தலைவிரித்து ஆடினால், அறம் அறிந்தோர் கண்டிக்காமலிருக்க முடியுமா? கண்டிப்பதா நாத்திகம்?

வெற்: கண்டனம்.

வெற்: மண்டைப்புழு இவனுக்கு! மகான்களை ஏசும் உன்னைக் காண்பதும் மகாபாபம். இந்த நாடு இப்படிப்பட்ட மகா பாபிகளை தாங்கிக் கொண்டிருக்க சம்மதிக்காது. நாத்திகனே உன்னை நாம் நாடு கடத்துகிறோம். இந்த வினாடி முதல்.

மதி: (உருக்கமுடன்) ஒரு குற்றமும் செய்யாத எனக்கா இக்கடும் தண்டனை... மக்கள் இதையா நீதி என்று எண்ணுவார்கள்...?

வெற்: நாத்திகனின் இரத்தம் இந்தப் புனித பூமியில் படுவது பாவம். எனவே கொல்லாது விட்டோம்—ஓடு இந்த நாட்டை விட்டு...

மதி: (உருக்கமாக) உண்மைக்காகப் பரிந்து பேச ஒருவரும் இல்லையா? ஏழை பங்காளர் பூண்டே இல்லையா?

வெற்: நாச காலனே! நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட பிறகு போய் அழைத்து வா உன் வீரர்களை, எங்கிருந்தாவது. புது ஞான போதகனே. போ. போய்க் கூட்டிவா உன் படைகளை—ஞான குருவை நிந்தனை செய்துவிட்டு வேழ நாட்டிலே வாழ முடியுமா? உம்... இவனுடைய விருதுகள் சின்னங்கள் எல்லாவற்றையும் களைந்தெறியுங்கள்.

மதி: ஆத்திரமாகப் பேசுகிறேன் என்று எண்ணுவீர் அறிவுடையோனே! அருமறையானந்தரின் போக்கு என் மனதை எரிமலையாக்கிவிட்டது. கனல் கக்கினேன். அருள் சீட்டு வாங்குவீர். ஐயன் அருளைப் பெறுவீர் என்று மக்களிடம் கூறினார். பொருளைத் திரட்டினார். மாளிகைக்கும், மகர கண்டிக்கும் ஆறு கிராமங்கள் வாங்குவதற்கும், செலவிட்டார். சுயநலத்திற்குச் செலவிட்டார். பஞ்ச வர்ணக் கிளி கொஞ்சிப் பேசும் என்று, அருகில் செல்லும்போது, அது கண்ணைக் குத்தினால், கடும் கோபம் வராதா? சன்மார்க்கம் தழைத்திட பணி புரிவார் என்று நம்பினோம், இவரோ சுயநலம் பிடித்து ஆடுகிறார். அக்கிரமம் செய்கிறார்.

வெற்: யார் முன் பேசுகிறோம் என்பதை மறந்தாய் மதியிலீ, சாலையோரத்திலே கிடக்கும் வேலையற்றதுகளிடம் பேசிப் பழக்கமோ!

மதி: சாலையோரத்திலே வேலையற்றதுகள் இருப்பது தான் அரசே, ஆபத்து—படையும் அழிக்க முடியாத புயல் அரசே. அந்த வேலையற்றதுகள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டன. அவர்களின் முகம் கேள்விக் குறியாகிவிட்டது. அவர்களிடம் நான் பேசுகிறேன், என்றீரே. உண்மை. என் பேச்சும் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. பொருள் தெரிகிறதா வேந்தே. சாலையோரத்திலே வேலையற்றதுகள்—வேலையற்றதுகள் மனதிலே விபரீத எண்ணங்கள், வேந்தே இதுதான் காலக்குறி...

மடா: பிதற்றுகிறான்—மனக்குழப்பம்.

கவி: மிரட்டுகிறான் நம்மை யாரென்று அறியாமல்...

மதி: நாட்டைத் தமது களி நடன மாடமாக்கிக் கொண்டு, அரண்மனைகளைத் தமது சிற்றின்பக் கூடமாகக் கொண்டு, அடுத்துக் கெடுப்போர் யார்? அறநெறி அறிந்தோர் யார்? என்ற விளக்கமும் அறியாது துடியிடைக்கும், கொவ்வை அதரத்துக்கும், தேன் மொழிக்கும், தேக காந்திக்கும் அடிமைப்பட்டு மக்களின் மனம் ஒரு எரிமலை, அதை ராஜபக்தி என்னும் சல்லாத்துணி கொண்டு மறைத்துவிட முடியாது என்ற சாதாரண உண்மையையும் மறந்து, வயல்கள் வெடித்துக் கிடந்தாலும் ஆறுகள் வறண்டு போயினும், மாடு கன்றுகள் செத்து, மக்கள் எலும்பும் தோலுமாகிய போகினும் தமக்கு மகிழ்ச்சி தர மங்கையும் மதுவும் தமது கொலுமண்டபத்திலே கோணங்கிகளும் கொடி பிடிப்போரும் இருக்கவேண்டும் ஊருக்கோர் உல்லாச கூடம் இருந்தாகவேண்டும் வீரமில்லாவிட்டாலும் விருதுகள் வேண்டும் என்று இறுமாந்து கிடக்கும் வேந்தர்களிடம் கைகட்டிக் கட்டியங் கூறி கவிபாடி காலந்தள்ளி வந்த கபோதிக்கு, அறிவுக்கண் திறந்திடவும், அன்பு நெறி தெரிந்திடவும் செய்த ஐயனின் அருளால்...நான் ஆபத்துக்களைத் துரும்பாக எண்ணும் துணிவையும், உயிரையும் இழக்க நேரிட்டாலும் உள்ளத்திலேற்பட்ட உண்மையை உரைக்க அஞ்சலாகாது என்ற ஆற்றலையும் பெற்றேன். அரசே தங்கக் கூண்டிலே அடைபட்டுக் கிடக்கும் கிளியல்ல, வானத்திலே வட்டமிடும் வானம்பாடி மக்களின் கவி, மண்டலங்களை ஆக்கவும் அழிக்கவும் வலிமை பெற்ற மக்களின் கவி, மணி முடிகளைத் தரவும் பறிக்கவும் உரிமை பெற்ற மக்கள் கவி, மக்களின் கவி பேசுகிறேன். மன்னா! மக்களின் கோபத்தைக் கிளறாதீர் என்று எச்சரிக்கிறேன்.

வெற்: இழுத்துச் செல்லுங்கள் நாயை...உம்...துரத்துங்கள் நாட்டை விட்டு வெளியே—நாத்திகன் மதிவாணன் ஒழிக.

[அரசன் சபையைக் கோபமாக முறைக்க சபையினர் மறுமுறை உரத்த குரலில் ‘ஒழிக’ என்று கூறுகின்றனர். மதிவாணன் இழுத்துச் செல்லப்படுகிறான்.]

வெற்: மதிவாணன் குடும்பத்தாரைச் சிறையில் தள்ளு.

(காவலனுக்கு உத்தரவிடுகிறான் சபை கலைகிறது.)

[வீதியில் மக்கள் செல்லக்கண்டு கற்பகத்தம்மை பதறிச் சென்று...]

கற்: ஐயா! விசாரணை முடிந்ததா? என் மகனுக்கு ஆபத்து ஒன்றுமில்லையே?

திலகா: தீர்ப்பளித்தாகிவிட்டதா!

ஒருவன்: என்னம்மா செய்யலாம்—நாடு கடத்திவிட்டாங்க, உன் மகனை.

திலகா: நாடு கடத்தி விட்டார்களா?

கற்: ஏதோ அந்த மட்டோடு போச்சே, ஆண்டவனே! என் மகன் உயிருக்கு ஆபத்து இல்லை! நாடு கடத்தினா என்ன? வேழ நாட்டிலே இருக்கக்கூடாது அவ்வளவு தானே?

[மக்களை விரட்டியபடி படைவீரர்கள் சிலர் வருகின்றார்கள். வீட்டினுள்ளே அவர்கள் நுழைவதைத் திலகா தடுத்து...]

திலகா: நில்லுங்கள்...உள்ளே என்ன வேலை?

படை வீரன்: அவனுக்கு...இவ தங்கச்சி.

தில: இவ...! அக்ரமம்! என்ன துடுக்குத்தனமான பேச்சு!

[திலகாவின் கழுத்தைக் சுற்றிவிட்டபடி இன்னொரு படை வீரன்:]

படை: ச்சீ...வாயாடி! அண்ணன் ஆஸ்தான வித்வானாச்சே என்ற கர்வமா? அது மலை ஏறிப்போச்சு!

கற்: அப்பா, அப்பா...அவ சிறு பெண். கோபிக்காதே.

[கற்பகத்தம்மை பதறிச்சென்று திலகாவின் வாயை மூட திலகா அதைத் தள்ளி...]

திலகா: விடம்மா—என்ன தலையா போய்விடும்? அண்ணனையே நாடு கடத்திவிட்டார்களாம்—இந்த நாட்டிலே நியாயமா கிடைக்கும்? (இதற்குள் சில படை வீரர்கள் உள்ளே நுழைய) பாரம்மா! பாரம்மா! உள்ளே போவதை! ஏ—சிப்பாய் ...ஏ......

[வேறு சில படை வீரர்கள் திலகாவின் கரத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்.]

கற்: (கதறும் முறையில்) அப்பா—இது என்னப்பா—எனப்பா இம்சை.

படை: அட, யாரம்மா, விவரம் தெரியாமே பேசறே! இந்த வீட்டைப் பறிமுதல் செய்ய உத்தரவு!

இன்னொரு படை: உங்க இரண்டு பேரையும் அரசாங்க விடுதிக்கு அழைத்து வரச் சொல்லியும் உத்தரவு இருக்கு!

தில: சிறையா எங்களுக்கு?

கற்: ஐயோ, ஏம்பா, என் மகனோடு நானும் திலகாவும் இந்த நாட்டை விட்டு போய் விடறோம்பா.

வீரன்: உம்...உம்...நடங்க...உம்.

[படை வீரர், வீட்டை இழுத்துப் பூட்டி, கற்பகத்தையும், திலகாவையும் இழுத்துச் செல்கின்றனர். இருவரும் சிறையில் தள்ளப்படுகின்றார்கள். அரசாங்க ஆணை முரசறையப்படுகிறது.]

படை வீரன்: நாத்திக மதிவாணன் நாடு கடத்தப்பட்டான். அவனுக்குத் தங்க இடம் கொடுத்தால் தண்டனை. உணவு கொடுத்தால் தண்டனை.

(முரசொலி கேட்கிறது.)

கவி: மதிவாணன் நாடு கடத்தப்பட்டான். மதிவாணன் நாடு கடத்தப்பட்டான்... வெற்றி...வெற்றி...கவிதைக்கு வெற்றி...தமிழுக்கு வெற்றி...ஓடுகிறார்...(வேறு சிலர் வரக்கண்டு......) இனி, அறிவுப் புரட்சி ஆரம்பமாகிவிடும்...மதிவாணன் மகத்தான பரிசு பெற்றுவிட்டான். மதிவாணா! மதிவாணா! ஏற்கெனவே தாக்கப்பட்டு தள்ளாடி நடந்துவரும் மதிவாணணைத் தொலைவிலே கண்ட கவிராயர்...) மதிவாணா! மதிவாணா

[எதிர்ப்புறமிருந்து அவரைக்கண்ட மதிவாணன், ஐயனே ஐயனே என்று அழுகுரலில் கூறிக்கொண்டே ஓடி வருகிறான். கவிராயரும் மதிவாணனும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்கிறார்கள். படை வீரர்கள் தாக்குகிறார்கள்.]

கவி: மகனே!

படை: வாயாடி. வா, இங்கே!.

மதி: ஏன்? எதற்காக! அடப் பாவிகளா! ஏன்டா இந்தப் பெரியவரைத் தாக்குகிறீர்கள்? பேயர்களே!

மதி: ஐயோ! அக்ரமத்துக்கு ஒரு அளவே கிடையாதா? சாந்தம் தவழும் இந்த முகத்தைச் சற்றுப் பாருங்கள்டா! பேரறிவாளர்டா! பெரியவர்டா இவர்?

[மதிவாணன் தாக்கப்படுகின்றான். ஆவேசமடைந்தவன்போல், ஒரு படை வீரனின் ஆயுதத்தைப் பறித்துக்கொண்டு மிரட்டுகிறான். பலர் கூடி, ஆயுதத்தைப் பறித்துக்கொண்டு பலமாகத் தாக்கிவிடுகிறார்கள் மதிவாணனை. ஒரு பக்கமாக கவிராயரைப் பிடித்து இழுத்து செல்கிறார்கள். மற்றோர் புறமாக மதிவாணனை இழுத்துச் செல்கிறார்கள்.]

கவிராயர்: கலங்காதே மதிவாணா! கலங்காதே!

மதி: ஐயனே! கொடுமைக்கு ஆளான மெய்யனே

கவி: மகனே! அஞ்சாதே! அஞ்சாதே துளியும் வெற்றி நமதே! அஞ்சாதே!

மதி: அறிவு அளித்தோனே! அண்ணலே...!

கவி: மதிவாணா! நிமிர்ந்து நில்! ஏறு நடை போடு! வெற்றி—வெற்றி......!

[மயக்கமுற்றுக் கீழே சாய்கிறார் கவிராயர்.]

ஒரு படை வீரன்: வாயாடிக் கிழவன் செத்துத் தொலைந்தான்.

(ஊருக்கு வெளியே ஓர் இடம். பூங்காவனமும், மதிவாணரும்.)

பூங்காவனம்: மதிவாணரே! மதிவாணரே!

மதி: (கண் திறந்து பார்த்து களைப்புடன்) ஐயா, நான் எங்கே இருக்கிறேன்? என்னைக் காப்பாற்றிய நீங்கள் யார்?

பூங்கா: வேழ நாட்டில் இல்லை, மதிவாணரே! ஆஸ்தான கவியாக எந்த வேழ நாட்டில் கொலு வீற்றிருந்தீரோ அந்த வேழ நாடு அல்ல இது...இது ஏழைகள் நாடு...அடுத்து இருப்பது காடு...

மதி: சரியான தண்டனை எனக்கு. கவிராயர் கதி என்ன ஆயிற்றே? ஐயா! உன் பெயர் என்ன? யார் நீ?

பூங்கா: என் பெயர் பூங்காவனம்!

மதிவாணன்: பூங்காவனமா? எங்கேயோ, எப்போதோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது.

பூங்கா: சதிகாரன் என்று சபா மண்டபத்திலே, பேசி இருப்பார்கள். மக்களை மன்னனுக்கு எதிராக தூண்டிவிடுபவன்—ராஜத்துரோகி என ஏசியிருப்பார்கள். கொலு மண்டபத்தில் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்னை வேழ நாட்டு வெறியர்கள். கவிராயருக்கு நான் நண்பன்.

மதி: (அவன் கரத்தைக் கண்களில் ஒத்திக்கொண்டு) கவிராயர் நண்பனா? அவர் கதி என்ன அப்பா?

பூங்கா: எவ்வளவு முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை.

மதி: பாவிகள் அவரைப்பலமாகத் தாக்கிவிட்டார்கள்! எனக்கு ஆதரவளித்த அண்ணலைக் காப்பாற்றும் ஆற்றல் இல்லையே எனக்கு! முயற்சித்தேன் நானும்! முடியவில்லை!

பூங்கா: மதிவாணரே! களைப்பு நீங்கியதும் பேசலாம்!

[வேறோர் இடம். மதிவாணரும் பூங்காவனமும் வேறு சிலரும் உள்ளனர்.]

பூங்காவனம்: மதிவாணரே, அறப்போர் தொடுக்க அருமையான சமயம். போம் ஊருக்குள்ளே, விழாப்பந்தலுக்கு வேண்டாம். வேறோர் பக்கம். இவர்கள் வருவார்கள் உன்னுடன். சென்று எது உண்மையான சொர்க்கவாசல் என்பதைப் பாடு. மக்கள் கேட்கட்டும்.

மதி: சரி பூங்காவனம்.

[போகின்றனர்]

[சொர்க்கவாசல் விழா. அருமறையானந்தர் அலங்கரிக்கப்பட்ட உயரிய ஆசனத்தில் அலங்கார ஆடையுடன் அமர்ந்தபடி உபதேசம் செய்கிறார். மெய்யன்பர்களே! என்று குரலில் கனிவுடன் கூறிவிட்டு, அரசரும் பிரதானியரும் ரசிக்கின்றனரா என்பதைக் கண்டறிய விரும்புபவர் போல அவர்-
களைப் பார்க்கிறார். பக்திமான்கள் என்பதைக் காட்டும் நோக்குடன் அனைவரும் அருமறையானந்தரைப் பாசம் நிறைந்த பார்வையுடன் நோக்குகின்றனர். மாசிலாமணி வெற்றிக் களிப்புடன் நிற்கிறார். மாசிலாமணி ஜாடை காட்ட மடாலயத்தார் சிலர் கை கொட்டுகின்றனர். அதே சமயம் தொலைவில், மரத்தடியில், மதிவாணன் பாடுகிறான். அருமறையானந்தர் செவியில் பலமான கரகோஷம் விழுகிறது. ஆனால் சபையோரின் கரகோஷமல்ல. வெளியே தொலைவிலிருந்து கேட்கிறது. சபையினர் முகத்தில் ஆச்சரியக் குறிகள்! மன்னன் பணியாளைப் பார்க்க, பணியாள் ஜாடையைப் புரிந்து கொண்டு வெளியே செல்கிறான். புன்னகையுடன் அருமறையானந்தர் பேசுகிறார்.]

அரு: மெய்யன்பர்களே! திரு அருளைப் பெறும் மார்க்கம் எது என்பதைத் திருமறைகள் தெளிவாகக் கூறிவிட்டன......

[சபையிலே ஒரு சீமான் திருமறை என்ன என்று கேட்பவன் போலப்பக்கத்துச் சீமானைப் பார்க்க அவர் தனக்குத் தெரியாது என அறிவிக்க உதட்டைப் பிதுக்குகிறார்—வேறு சீமான் இதைக் கவனித்து ரசிக்கிறார்.]

[மறுபடியும் மதிவாணன் பாட்டு கேட்கிறது]


                                        மதிவாணன் பாடல்
                                              தொகையறா

மதிவாணன்: அந்தரத்தில் நீர்பாய்ச்சி தருவளர்த்தே
                                     விந்தைமிகும் கனிகொள்வார் வினயம்போலாம்
                            இந்த உலகம் விட்டிறந்த பின்னே
                                      இன்புறும் சொர்க்கமெனில் ஏமாந்துபோவீரே!

                                                          பாட்டு
                            எங்கே சொர்க்கம் எங்கே சொர்க்கம்
                                          என்றே தேடுறீர்.
                                          ஏமாந்தே ஓடுறீர் - அது


அங்கே இல்லை இங்கே உண்டு
                அன்பால் நாடுவீர்
                ஒன்றாய்க் கூடுவீர் - எல்லோரும்
                ஒன்றாய்க் கூடுவீர் (எங்)

தன்னந்தனியே தவம் புரிந்தே
            சமாதியாகப் போறீரா?—சமு
சாரம் பிள்ளை சுற்றத்தோடு
            வாழ்ந்து கொஞ்ச வாரீரா?
இங்கு வாரீரா? அங்கு போறீரா?
            உள்ளம் தேறீரா?—இனி
அங்கே சொர்க்கம் இங்கே இல்லை
            என்றே சொல்லுவார் - அது
அங்கே இல்லை இங்கே உண்டு
            அன்பால் நாடுவீர்
ஒன்றாய்க் கூடுவீர் - எல்லோரும்
ஓன்றாய்க் கூடுவீர் - (எங்)
பஞ்சம் இல்லாநாடு - உயர்
           பத்தினிமேவும் வீடு - வள
மிஞ்சும் வயலும் தோட்டங்காடும்
           மேன்மையான சொர்க்கம்தான்
நெஞ்சில் ஈரம்நேசம் அன்பு
           உள்ளார்காண்பது சொர்க்கம் - அது
           இல்லார்காண்பது நரகம்
                  நினைவேமெய்க்கும், நிம்மதியே சொர்க்கம், அது
                  நீதியின் பக்கம் - இனி
அங்கே சொர்க்கம் இங்கே இல்லை
                  என்றே சொல்லுவார் - அது
அங்கே இல்லை இங்கே உண்டு
                  அன்பால் நாடுவீர்
                  ஒன்றாய்க் கூடுவீர் - எல்லோரும்
                  ஓன்றாய்க் கூடுவீர் (எங்)

                                 கோரஸ்
நூலே சொல்லும் சொர்க்கம் மேலோகந்தான் - அன்பில்
மேலோர் கண்ட சொர்க்கம் பூலோகந்தான்
வேதாந்தியின் சொர்க்கம் விண்ணாட்டிலே - நல்ல
விவசாயி காணும் சொர்க்கம் இந்நாட்டிலே.

பரதேசியின் சொர்க்கம் தெரியாதது—மெய்ப்
பாட்டாளியின் சொர்க்கம் உருவானது


            சோம்பேறியின் சொர்க்கம் சுயகாரியம் - நல்ல
            தொழிலாளியின் சொர்க்கம் பிறர்காரியம்
இங்கே உண்டு சொர்க்கம் அங்கே இல்லை - உண்மை
அங்கே இல்லை சொர்க்கம் இங்கே உண்டு (எங்)


[அருமறையானந்தர், தொடர்ந்து பேசுகிறார்.]

அரு: மெய்யன்பர்களே! எவனொருவன் இந்திரியங்கள்எனும் துஷ்டக் குதிரைகளுக்கு, அறிவெனும் கடிவாளமிட்டு அடக்கி, நன்னெறி எனும் பாதையிலே செலுத்துகிறானோ, அவனே, இறைவனடி எனும் திருத்தலத்தை அடைவான்.

[இச்சமயம், குதிரைகள் ஓடும் சத்தமும், சாட்டையடி சத்தமும் கேட்கின்றன. சபையில் பரபரப்பு, மீண்டும் ஓர் முறை மதிவாணன் பாடல்.]


                    மதிவாணன் பாடல்
ஆகும்நெறி யெதுஆகா நெறியெது
அறிந்துசொல்வீரே - நன்றாய்ப் புரிந்துகொள்வீரே! (ஆகும்)
ஆஸ்த்தியைச் சேர்க்கும் சுயநலமார்க்கம்
           சாஸ்வதமா இன்பம் ஏற்படுமா - பூமி (ஆள்)
                               மக்கள்
சமத்துவங்காட்டும் பொதுநல மார்க்கம்
       தான்சுகமா துன்பந்தான்தருமா - இதில் (ஆகும்)
சம்சாரம்விடுத்து சந்யாசம் அடுத்து
       தனிமையிலிருப்பது சாத்தியமா - அது
       எளிதிலை யென்பதில் மனப்பயமா
சரிசமமாக இருவரும் வாழ்வது
       தகுமெனச் சொல்வதில் தரங்கெடுமா - அதில்
       பகைமை கொண்டாடுவது பயன் தருமா இதில் (ஆகும்)
காணிக்கை வாங்கிக்கடமையை மறந்து
       காலங்கடப்பது அவசியமா - அது
       கதிதரும் என்பது வாஸ்தவமா
காணரும் அன்பால் நாணயமாக
       கடமை யைப்புரியெனல் அவசியமா- அதற்க்
குடன்பட மறுப்பது அறிவினமா இதில் (ஆகும்)
போட்டிபோட்டுச் சீமான்கள் வீசிடும்
       பொன்னும்பரகதி யளித்திடுமா-அதிர்


வேட்டுவாணங்கள் சிங்காரங்கள் காட்டும்
     வேடிக்கையெல்லாம் அவசியமா
நாட்டுக்காக இதுதேவையில்லை யெனில்
     ஆச்சரியங்கொள்வது அறிவினமா அது
பாட்டன்பூட்டன் வைத்த பவுசைக்காட்டும் செல்வர்
     பேட்டியின்றது அவசியமா-அதில் (ஆகும்)

அரசர் தம்மை உருப்போட்டு
     அருமறை யாளன் அருள்சீட்டு
அறிவும் வலிவும் எலாங் கொடுக்க
     ஆமோ அதுவும் அவசியமா
     ஆமோ அதுவும் அவசியமா
உலகு கண்டதோர் நாதன் - என்ற
     உண்மை அன்பதே மேவும் - இதைப்
பெருமையான சிலர் விளங்க வைப்பதும்
     முறையிது வென்பதும் அவசியமா
     முறையிது வென்பதும் அவசியமா இதில் (ஆகும்)

[அருமறையானந்தர் வாழ்க என்ற ஒலி கிளப்புகிறான் மாசிலாமணி—பண்டாரங்கள் மட்டும் கலக்கின்றனர். மும்முறை வாழ்க கூறி பண்டாரக் கூட்டம் கலைகிறது. வேந்தனும் மடாதிபதியும் கலக்கமடைகிறார்கள்.]

[காட்டின் ஓர்பகுதி. மதிவாணன் காடு போய்ச் சேருகிறான் மலைவாசிகள் துணை கொண்டு. அவர்கள் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த பூங்காவனத்திடம்......]

மதி: வெற்றி! மகத்தான வெற்றி!

மலைவாசி: விழா, பாழ்!

மதி: மக்கள் கடல்போல் கூடினர் நான் பாடுவதைக் கேட்க!

மலை: விழாவிலே, வேஷதாரிகள் மட்டும் தான்! மக்கள் நம் பக்கம்!

பூங்: (பெருமிதத்துடன்) மதிவாணரே! உமது இசைத் திறமை எனக்குத் தெரியுமே நன்றாக! பாடலில் கருத்து என்ன......?

மதி: எது உண்மையான சொர்க்கவாசல் என்பது பற்றித்தான்...

ஒரு மலைவாசி: இனி, நான்கூடப் பாடப்போகிறேன்.

2வது மலைவாசி: நான் கூடத்தான்.

பூங்: மக்களில் பலர் இன்னும் உன்னை நாஸ்திகன் என்றுதான் எண்ணிக் கொண்டிருப்பார்கள், ஆகையால் எது ஆஸ்திகம்—எது நாஸ்திகம் என்று ஒரு பாடலை இவர்கள் மூலம் நாட்டிலே பரப்பு......

ஒரு மலை: அண்ணே, எனக்கும் பாடத் தெரியும்......

2வது மலை: நம்ம சாரீரம், அண்ணேன் ஜிலு ஜிலுன்னு இருக்கும்! நம்மை மறந்துவிடாதே!

[மூன்றாவது மலைவாசி பாடுகிறான். மதிவாணன் புன்னகையுடன் அவர்களை அணைத்துக் கொள்கிறான்...]

[மடாலயத்தின் உட்புறம். மாசிலாமணி அருமறை இருவரும் பேசுதல்]

மடாதிபதி: பாவி ! கெடுத்துவிட்டானே! அவமானமாகிவிட்டது!.

மாசிலாமணி: பிரமுகர்கள் யாரும் வெளியே போய் விடவில்லை. ஜனக்கூட்டம் தான் வெளியே போய் விட்டது

மடாதிபதி: வெளிநாட்டிலிருந்து வந்திருந்த சீமான்கள் என்ன எண்ணியிருப்பார்கள்!

மாசிலாமணி: ஆனால் காணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகம்!

மடாதிபதி: அதிகம்! மாசிலாமணி! அந்த மதிவாணன் மட்டும் விழாவைக் கெடுக்காமலிருந்தால், அதைவிட அதிகம் குவிந்திருக்கும், தெரியுமா?

[வெற்றிவேலன் அரண்மனை–ஓர் கூடம், வேந்தன் அமைச்சர் பணியாள் முதலியோர்]

பணியாள்: ஆணவக்காரனை அடித்து விரட்டினோம். ஆனால் ஊராரின் மனதை அவன் மயக்கிவிட்டிருக்கிறான்.

வேந்: எப்படி?

பணி: மதிவாணனின் கவிதைகள் மக்களிடம் பரவி...

வேந்: கவிதைகள்! கவிதைகள்! அவன் பாடுகிறானாம்! அதுகேட்டு இவர்கள் ஆடுகிறார்களாம்......! சரி! நாத்திக மதிவாணனின் பாடல்களை நமது மண்டலத்திலே, இன்று முதல் யாரும் பாடக்கூடாது–பாடினால் சிறை– தடைவிதிக்கிறோம்.
[பணியாள் ஓடுகிறான்]
[வீதியில் இருசாமியார்கள் பாற்காவடியுடன் வருகிறார்கள் - ஒரு வீட்டின் முன் நின்று]

சாமி: பால் காவடி தர்மம்! பால் காவடி தர்மம்!

மாது: தர்மம் செய்தாகி விட்டது

சாமி: எந்த சன்னதிக்கு?

மாது: ஏழை எளியவங்க வீட்டு குழந்தைகளுக்கு பால் கொடுத்து விட்டோம்

சாமி: பாலபிஷேகம்

மாது: கிடையாதுங்க......

முதல் பண்டாரம்: ஆசாமி கொடாக்கண்டனாயிருக்கிறான். நாலுநாளாய் நடையாய் நடக்கிறோம்.

இரண்டாவது பண்டாரம்: ஆசாமி சம்மதிக்க வில்லையே!

முதல்: நஞ்சை நிலம் அருமையானது அம்பலம்?

இர: தோட்டமும் சிலாக்கியம்தான்.

முதல்: எல்லாம் மடத்துக்குத்தானே தானமாக எழுதி வைக்கிறதாகச் சொன்னான்?

இர: என்ன கச்சி முடிஞ்சிதா?

மற்றொரு: ஆஹா முடிஞ்சுது, ஆள் போயிருக்கு, தாரை தப்பட்டைக்கு!

இர: ஆசாமி போய்விட்டானா! தான விஷயம்?

மற்: தானம் எழுதிவிட்டுத்தான் செத்தான். பூரா சொத்தையும் பள்ளிக்கூடத்துக்கு எழுதிவைத்துவிட்டான்!

முதல்: படுபாவிப்பய! அடியோடு கெட்டுப்போச்சு. வாங்க, வாங்க, மடாலயம் போவோம்!

(வெற்றிவேலன் அரண்மனை; வேந்தன், அமைச்சர், பணியாள் முதலியோர்)

பணியாள்: ஆணவக்காரனை அடித்து விரட்டினோம். ஆனால் ஊராரின் மனதை அவன் மயக்கிவிட்டிருக்கிறான்!

வெற்றி: எப்படி?

பணி: மதிவாணனின் கவிதைகள் மக்களிடம் பரவி

வெற்றி: கவிதைகள்...ஹூம் கவிதைகள். அவன் பாடுகிறானாம் அதுகேட்டு இவர்கள் ஆடுகிறார்களாம்...சரி. நாத்திக மதிவாணனின் பாடல்களை நமது மண்டலத்திலே இன்றுமுதல் யாரும் பாடக்கூடாது. பாடினால் சிறை—தடை விதிக்கிறோம்!

[கடைவீதி. உரத்த குரலில் மலைவாசி ஒருவன் தடை செய்யப்பட்ட பாடலைப் பாடுகிறான்.]

(சிறுகூட்டம் கூடிவிடுகிறது. வீரர்கள் ஓடோடி வருகிறார்கள் - பிடரியில் கை கொடுத்துத் தள்ளியபடி......)

போர்வீரன்: பாடாதே!

[மலைவாசி பாடுகிறான். போர்வீரன் அவன் வாயைப் பொத்தியபடி] பாடாதே! தடை-தடை உத்திரவு-தெரியாதா?

மலைவாசி: தெரியும்! மன்னனுக்குத் தடை விதிக்கத் தெரியும்! மாவீரருக்கு அதை மீறத் தெரியும்!

போர் வீரன்: போக்கிரி

மற்றொரு போர்வீரன்: முட்டாள்

வேறோர் போர்வீரன்: இழுத்து வாருங்கள்

மற்றொரு போர்வீரன்: கலைந்து செல்லுங்கள். உம்...கூட்டம், என்ன கூட்டம்

[பாடியபடி இருக்கிறான் மலைவாசி. இழுத்துச்செல்லப்படுகிறான் போர் வீரர்களால். அவன் தெருக்கோடியில் கொண்டு செல்லப்படும்போது, வீதியின் மற்றோர் முனையில் வேறோர் மலைவாசி பாடும் குரல் கேட்கிறது. மக்கள் அந்தப்பக்கம் ஓடுகிறார்கள்..... பிடிபட்ட மலைவாசி சிரிக்கிறான்.]

மலைவாசி: தடையா விதிக்கிறீர்கள் தடை? கேள் பாடலை. அதோ! அதோ!! அதோ!!! எங்கும் கேட்கும் அந்த இன்பக்கவிதை புல்லர்கள் கொட்டம் அழியும் வரையில் புரட்சிக்கவிதை இருந்தே தீரும் தடையாதடை அதோ தடை உடைபடுகிறது.
[வெவ்வேறு இடங்களில் மலைவாசிகள் பாடுகிறார்கள். வேறு ஓர் இடம், மலைவாசிகளுடன் மதிவாணர் உரையாடல்]

1வது மலைவாசி: தடைபோட்டு விட்டானே தன்னலக்காரன்!

2வது மலைவாசி: அரசன் அதிகாரமிருக்கிறது!

1வது: மண் பொம்மைகளல்ல நாம். மதிவாணரே, தடையை மீறியாக வேண்டும்.

2வது: தடையை மீறினால் தண்டனை கடுமையாகும்

3வது: தூக்குமேடையிலும் பாடிக்கொண்டே இறக்கச் சித்தமாயிருக்கிறேன்

மதி: வீரனே, அரைக்க அரைக்கத்தான் சந்தனம் மணக்கும். தடை, என் கவிதையின் சக்தியை வளர்த்துவிடும்.

1வது: மதிவாணரே, தடையை மீறப்போகிறேன் நான்.

2வது: நானும்தான்.

3வது: நான் மட்டுமென்ன?

எல்: நாங்கள் தயார்! தடையை மீறுவோம்!

மதி: இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்? மீறுவோம் தடையை! பாடுவோம் கவிதையை!

[பாடுகிறார்கள்]
[வெற்றி வேலன் அரண்மனை–உப்பரிகை—வெற்றி வேலன் உப்பரிகையில் உலவியபடி கோபமாக......]

வெற்றிவேலன்: தடையை மீறிவிட்டார்களா? தரித்திரப் பயல்களுக்கு அவ்வளவு துணிவா! சிறையிலே கிடக்கட்டும் நாய்கள்! கஞ்சிக் கலயமும் இரும்புக் காப்பும் தான் பரிசு இதுகளுக்கு! கவிதை பாடுதுகளாம் கவிதை...(அதட்டும் குரலில்) யார் அங்கே? (பணியாள் ஓடிவா) தயவு தாட்சண்யம் கூடாது. தம்பி, அண்ணன், தாய், மக்கள், மனைவி, தகப்பன், எந்த உறவு முறை இருந்தாலும், பாடினால் பிடித்துத்தள்ள வேண்டும் சிறையிலே......

பணியாள்: தள்ளிக் கொண்டுதானிருக்கிறார்கள்....

வெற்றி வேலன்: இன்னமுமா?

பணியாள்: ஆமாம் அரசே! பாடுபவர் ஓயவில்லையே!

வெற்றிவேலன்: அடித்து நொறுக்குங்கள் ஆணவக்காரரை-தடியர்கள்.....

[ஒரு வீதி. கிழவி ஒருத்தி ஏதோ பேசுகிறாள். மக்கள் பலர் அவளைச் சூழ்ந்து கொள்கின்றனர்.]

மக்கள்: பாடுவாயா பாட்டி? பாடவா வந்திருக்கிறே?

கிழவி: பொக்கை வாய்க் கிழவி நான்—நானு என்னத்தை பாடறது?

[அப்போது அங்கே வருகிறான் ஒரு போர் வீரன்.]

போர்வீரன்: பாடினயா?

கிழ: யாரு? நானா? பாட்டா? என்ன பாட்டு?

போர்வீரன்: என்ன பாட்டா? உங்க பாட்டன் பாடினது!

[மக்களைத் தள்ளிவிட்டு, கிழவியைப் போகச் சொல்லிவிட்டு அவள் போன பிறகு போர்வீரன் போகிறான்.]

கிழவி: (ஒரு சிறுமியைப் பார்த்து) கொழந்தே! என்னம்மா அமளி? என்ன பாட்டு அது?

சிறுமி: பாட்டி, உனக்குத் தெரியாதா? மதிவாணர் பாட்டு, நம்ம ராஜா தடை செய்திட்டாரு...

கிழவி: பாட்டையா? என்னடி இது பைத்தியக்கார ராஜாங்கம்! பாட்டு பாடினா என்னவாம்...?

சிறுமி: இந்தப் பாட்டு மட்டுந்தான் பாடக் கூடாதுன்னு சட்டம், பாட்டி!

கிழவி: அந்தப் பாட்டு தெரியுமாடி கண்ணு உனக்கு?

சிறுமி: ஓ, தெரியுமே! ஆனா பாடமாட்டேன்! அடிப்பாங்க!—தடியாலே—தலை மேலே!

கிழவி: (செல்லமாக) அவன் யார்டி கொழந்தையை அடிக்கிறவன்; அடிப்பானாமேல்லோ! நீ பாடு குழந்தை! எவனாச்சும் வந்தா நான் பாத்துக்கறேன்...!

[கிழவி தன் கைத்தடியைக் காட்டுகிறாள். சிறுமி பயந்து பயந்து பாடுகிறாள். கிழவி பாட்டைக் கேட்டுக் களித்தபடி, இடை இடையே...]

கிழவி: நல்லாத்தானே இருக்குது பாட்டு! இதையா தடை செய்யறாங்க?

[சிறுமியின் பாடல் ஒலி கேட்டு ஓடி வருகிறான் ஒரு போர் வீரன்—சிறுமியின் காதைத் திருகியபடி.]

போர்வீரன்: பாடாதே! ச்சீ...பாடாதே!

கிழவி: தடியைக் கொண்டு போர்வீரன் மேல் தட்டி...யார்டா அவன்? அறிவு கெட்டவனா இருக்கியே! கொழந்தை எவ்வளவு அழகா பாடுது, அடிக்கிறியே? புள்ளே குட்டி இல்லே உனக்கு!

போர்வீரன்: உனக்கு புத்தி கித்தி இருக்கா? இந்த பாட்டு பாடக்கூடாது! தடை உத்தரவு! தெரியுமா?

[சிறுமியை போர்வீரன் துரத்த அவள் ஓடி விடுகிறாள். கிழவி முனகிக் கொண்டேயிருக்கிறாள்.]

கிழவி: புத்தி கெட்டவன்—புத்தி கெட்டவன்.

போர்வீரன்: உனக்கு கேட்குது பூஜை—மரியாதையா போகமாட்டே?

கிழவி: போக முடியாது! என்னா செய்து விடுவே? நாலு பேரப் பிள்ளைங்க இருக்கிறாங்கோ எனக்கு! உன்னுடைய எலும்பை நொறுக்கி விடுவாங்க!

போர்வீரன்: என்னடா தொல்லை இது! பாட்டியம்மா! ஊர் இருக்கிற இருப்பு தெரியாமே பேசாதே! போ வீட்டுக்கு...

கிழவி: ஊர் இருக்கிற லட்சணம்தான் தெரியுதே—பாடக் கூடாதாம்—பாடினா அடியாமில்லே—என் இஷ்டம்! நான் பாடுவேன்! உனக்கென்ன?

[பாட்டி தன் நடுக்கும் குரலில் பாடுகிறாள். அவளைச் சூழ்ந்துகொள்கிறது ஓர் கூட்டம். வேறு வழியின்றி அவளையும் இழுத்துச் செல்கிறான் போர்வீரன்...]

[சாலையில் போகிற ஒருவன் பாடுகிறான். போர்வீரர்கள் அவனைத் துரத்திச் செல்கிறார்கள். சோலையில், பெண்கள் பாடுகிறார்கள்—சிறை நிறைகிறது. சிறையில் உள்ள கைதிகளை அரசன் பார்வையிட
வருகிறான். சிறைப்பட்டோரும் கைதிகளும் சேர்ந்து பாடுகிறார்கள். மன்னன் வெட்கப்பட்டுக் கொண்டே வெளியே செல்கிறான்...]
[சிறைக்கூடத்தில்]

ஒரு கைதி: அண்ணேன் இது என்ன! புதுப் புது ஆசாமிகளா கொண்டு வந்து தள்ளிகிட்டே இருக்கிறாங்க! பெரிய கொள்ளைக் கூட்டம் போலிருக்கு!

மற்றோர் கைதி: ஆசாமிகளைப் பார்த்தா அப்படித் தெரியலையே! (உள்ளே வந்து தடை மீறுபவனைப் பார்த்து) ; கொள்ளையா? கொலையா?

மலைவாசி: (புன்சிரிப்புடன்) அதெல்லாம் இல்லை அப்பா—பாட்டுப் பாடினேன்.

ஒரு கைதி: (திடுக்கிட்டு) பாட்டுப் பாடினா?

மலைவாசி: பாடாதேன்னு அரசாங்கம் தடை போட்டது.

மற்றோர் கைதி: பாடக்கூடாதுன்னா தடை?

மலைவாசி: எல்லாப் பாட்டுக்கும் தடையில்லை—மதிவாணர் பாட்டுக்கு மட்டும் தடை—

ஒரு கைதி; அது என்ன பாட்டு தம்பி! ராஜாங்கத்துக்குப் பிடிக்காத பாட்டு...

மற்றோர் கைதி: களவு எப்படிச் செய்யறது—கொலை எப்படிச் செய்யறதுன்னு புதுப் புது வழி சொல்லிக் கொடுக்கிற பாட்டுப் போல இருக்கு...

மலைவாசி: அதெல்லாம் இல்லையப்பா—ஜாதி கூடாது—பேதம் கூடாது. கடவுள் பேரைச் சொல்லி ஏழைகளை ஏமாற்றக் கூடாது. இப்படிப்பட்ட விஷயமிருக்கு அந்தப் பாட்டிலே.

ஒரு கைதி: நல்ல விஷயந்தானே?

மற்றோர் கைதி: இது பாடக்கூடாதுன்னா தடை?

மலைவாசி: ஆமாம்.

ஒரு கைதி: நல்ல ராஜாங்கமா இருக்கே.

மற்றோர் கைதி: தம்பி! அந்தப் பாட்டைப் பாடு கேட்கலாம்...

மலைவாசி: தடையை மீறிப் பாடினா இங்கேயும் கண்டிப்பாங்களே.

ம. கைதி: கொலை கொள்ளை போல அக்ரமம் செய்து தண்டனை அனுபவிக்கிரதை விட, இந்தத் தம்பி மாதிரி நல்ல காரியம் செய்து தண்டனை பெத்தா பெருமைதான். பாடு தம்பி! ஒரு ராஜ்ஜியமே கிடு கிடுன்னு நடுங்குது இந்தப் பாட்டைக் கேட்டுன்னா, மனுஷனாய்ப் பிறந்தவன் அந்தப் பாட்டைக் கேட்காமெ இருக்கலாமா? பாடு...

ம. கைதி: ஆமாம்—பாடு—வெளியே பாடினா, உள்ளே தள்ளினாங்க! இங்கே பாடு! வெளியே தள்ளராங்களான்னு பார்ப்போம்!

(மலைவாசி பாடிக் காட்ட...)

ஒரு கைதி: படுபாவிப் பயலுக, இதுக்கா தடை போட்டானுங்க?

ம. கைதி: அண்ணேன், இது ரொம்ப அக்ரமம், இந்த ராஜாங்கம்.

ஒரு கைதி: பைத்யம் பிடுச்சுப் போச்சி போல இருக்கு...

ம. கைதி: அண்ணேன்! தடையை நாமும் உடைக்க வேண்டியதுதான்! தம்பீ! அந்தப் பாட்டை எங்களுக்குச் சொல்லிக் கொடு!

ஒரு கைதி: ஆமாம்.

(மலைவாசி மகிழ்கிறான்.)
[சிறையில் பெண்கள் பகுதி. திலகாவும் வேறு சில மாதரும் இருக்கிறார்கள். திலகாவின் முகத்திலே சோர்வு தெரிகிறது. அச்சம் இல்லை. சிறைக் கூடத்திலே ஆடவர் பகுதியிலே மன்னன் பார்வையிட்டபோது கிளம்பிய ஒலி, லேசாகக் கேட்கிறது. பெண்கள் என்ன சத்தம் என்று உற்றுக் கேட்கிறார்கள். சிறைக் காவலர் சிலர் ஓடோடி வந்து சுறுசுறுப்பாக இங்குமங்கும் நடந்து காவல் செய்கிறார்கள்...]

ஒரு மாது: என்னப்பா கூச்சல்?

காவலாளி: அரசர் இங்கு கூட வருகிறார்...

ஒரு பெண்: அரசரைக் கூடவா சிறையில் போடுகிறார்கள்!

காவலாளி: அம்மா! புண்யவதிகளே! கொஞ்ச நேரம், அவர் வந்து போகிற வரையிலே, வாயை மூடிகிட்டு இருங்களேன்! பெரிய தொல்லையாப் போச்சு உங்களாலே...

ஒரு பெண்: திறந்து விட்டுவிடு! உனக்கு என் வீணான தொல்லை? நாங்க பேசாம வீட்டுக்கு போயிடறோம்!

காவலாளி: சரிதான்—என் தலை?

(பெண்கள் சிரிக்கிறார்கள்.)

திலகா: பாவம் அந்த ஆளோடே ஏன் வம்பு...?

காவலாளி: என் பிழைப்பில் மண் போடாதீங்க, மகாராசிகளே! நான் புள்ளே குட்டிக்காரன்!

திலகா: அங்கே என்னப்பா அமளி...

காவலாளி: அமளியா? அமளி இருந்தாத்தான் வேலை சுலபமாயிடுமே! அடித்து நொறுக்கி விட்டிருப்பாங்களே! சிறையிலே இருக்கிறவங்க எல்லாம், அரசர் வருகிறபோது அந்தப் பாட்டை கும்பலா கூடிக்கிட்டு பாடறாங்க...

ஒரு பெண்: எந்தப் பாட்டை...

காவலாளி: எல்லாம் இவங்க அண்ணன் பாட்டைத் தான்...

இன்னொரு பெண்: உனக்குத் தெரியாதா அந்தப் பாட்டு...

காவலாளி: சரி—எனக்கே தீம்பு வைக்க ஆரம்பமா?—துணிஞ்ச பேர்வழிங்க—எனக்கு பாட்டும் தெரியாது; கூத்தும் தெரியாது.

இன்னொரு பெண்: புளுகு—தெரியும்—ஒரு நாள் பாடினதை நானே கேட்டிருக்கிறேனே!

காவலாளி: யார்—நானா—பாடினேனா—அந்தப் பாட்டையா?

இன்னொரு பெண்: உரக்க இல்ல—மெதுவாக! ஆனா (திலகாவைப் பார்த்து) திலகா! இவருடைய குரல் ரொம்ப நல்லாயிருக்கு.

காவலாளி: (புன்னகையுடன்) வம்புக்கார பொம்பளைங்க—போங்க போங்க—வரப்போராரு மன்னரு...

ஒரு பெண்: (கெஞ்சும் முறையில்) அவர் வருவதற்குள்ளே, பாடிடு. ஒரே ஒரு தடவை—பாடமாட்டாயா—இரு...இரு...நாங்க பாடறோம் பாரு இப்போ—வாங்கடி, பாடலாம்.

திலகா: அந்தப் பாட்டு வேண்டாம். நேற்று ஒரு பாட்டு கட்டினமே...

இன்னொரு பெண்: எந்தப் பாட்டு? ஓஹோ ஏமாந்த மாப்பிள்ளை—பாட்டா?

திலகா: ஆமாம்—அதை...

இன்னொரு பெண்: பாடுவமா?

திலகா: அரசன் வருகிறபோது...எல்லாப் பெண்களும் கையைத் தட்டி...

பெண்கள்: ஆமாம்—அதுதான் சரி,

[காவலாளிகள் வருகிறார்கள். பின்னால் வெற்றிவேலன் வருகிறான். திலகா துவக்குகிறாள் பாட்டை. அனைவரும் சேர்ந்து பாடுகிறார்கள்...]

திலகா பாடல்


திலகா: ராஜாதிராஜன் நம்மராஜா! அவர் நம்மராஜா!
                         ராஜ்ஜியத்தையாளவந்த பொம்மைராஜா!
                                     ஆமா. பொம்மை ராஜா!—மக (ரா)
                                                       நவ,
                         ராத்திரியிலே அவர்கொலுவிருப்பார்—அர்த்த
                         ராத்திரியில் நேர்த்தியாய்க் குடைபிடிப்பார்
                                   ராஜாகுடை பிடிப்பார்—மக (ரா)

                         கோமாளித் தன்மையால் எட்டாத பழத்துக்குக்
                                   கொட்டாவி விட்டு மதிகெட்டராஜா
                                            மானங்கெட்ட ராஜா!—மக (ரா)

                        பாவலனை நாட்டைவிட்டு ஓட்டியராஜா—அவம்
                                 பாட்டைக்கேட்டுப் பலபேரை வாட்டிய ராஜா!
                              கோவராஜா! கொடும்பாவிராஜா - இனிக்
                                   கோட்டைவிடப் போகும் விளையாட்டுராஜா-மக (ரா)


                                                மிக
ரோஷக்கார் போலே மீசைக்காரர் - சுக
வாசக்காரர் படுமோசக்காரர் - வெளி
வேஷக்காரர் பெண்கள் ஆசைக்காரர் - எந்த
வேலையுஞ் செய்யாமலுண்ணும் காசுக்காரர்
                   ஆமா, காசுக்காரர் - மக (ரா)


(இவ்விதம் கேலி செய்யும் பாடலைப் பாடுகிறார்கள். வெற்றிவேலன் பாடலைக் கேட்டுக் கோபம் கொள்கிறான். காவற்காரர்கள் திடுக்கிட்டு மிரட்டுகிறார்கள் பெண்களை. மன்னன் ஒரு காவற்காரனைப் பார்த்து.)

வெற்றி: இங்கேதானே, அந்த மண்டைக்கர்வியின் தங்கை திலகா இருக்கிறாள்!

காவல்: ஆமாங்க!

திலகா: (கேலிக் குரலில்) ஒ! ராசா! என்னையா தேடறீங்க? ஏன்?

ஒரு பெண்: புதுசா, ஏதாவது தடை உத்திரவு போடுவாரு...

இன்னொரு பெண்: (குறும்பாக ) ஒரு வேளை, பெண்களெல்லாம், இனி என் நாட்டிலே ஜடை போட்டுக்கொள்ளக்கூடாதுன்னு உத்திரவு பிறக்குமோ, என்னவோ?

வெற்றி: இழுத்து வாருங்கள் அந்த நாயை, சிறை விசாரணைக்கூடத்திற்கு...

(மன்னன் போகிறான் கோபமாக)

திலகா: (உரத்த குரலில்) ஐயா, வீராதி வீரரே!

கற்பகம்: திலகா, பேசாதிருக்க மாட்டே?

திலகா: நீ, சும்மா இரும்மா!

(மன்னன் திடுக்கிட்டு, எதிர்ப்புறம் வந்து நிற்கிறான் மமதையுடன். திலகா அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு...)

திலகா: அடே! மனுஷன் போலவேதான் இருக்கிறார் ராஜா......

[பெண்கள் சிரிக்க, மன்னன் கோபங்கொண்டு......]

வெற்றி: அவன் எவ்வளவோ அடக்கமானவன் இது ஒரு அடங்காப் பிடாரி!

[காவலாளி தலை அசைக்கிறான்...]

வெற்றி: ஏய் வாயாடி. பெண்ணாயிற்றே என்பதாலே சவுக்கடி இன்னமும் விழாமலிருக்கிறது...

திலகா: சவுக்காலடிப்பீங்களா?...ஹா...! அது உடலைத்தான் புண்ணாக்கும் உலுத்தனே! மனதையே புண்ணாக்கிவிட்டு, மாமிசப் பிண்டமே, தடை போட்டாயே தடை, பாடலுக்கு! முடி தாங்கியே! பார்த்தாயா உன் தடை தவிடு பொடியாவதை? வெட்கம் இருக்க வேண்டாமா உனக்கு? நீயும் ஒரு அரசனாக நாட்டை ஆளுகிறாயே நாட்டை! காட்டிலே இருந்து என் அண்ணா கட்டளையிடுகிறான், உன் தடை உடைபடுகிறது. பூட்டி வைத்துவிட்டு வீரம் பேசுகிறாய் எங்களிடம். (கோபம் அதிகமாகிறது மன்னனுக்கு...) உருட்டு விழி என்னை ஒன்றும் செய்துவிடாது! நாட்டுக்கு நீ அரசன்! ஆனால் என் அண்ணனிடம் தோற்றுப்போன உன்னை நான், அரசன் என்றா மதிப்பேன்! கொலுபொம்மை! கொக்கரிக்கும் கொலுபொம்மை!

பெண்கள்: கொக்கரிக்கும் கொலுபொம்மை!

திலகா: மதம் கெட்டுவிடும் என்று இந்தப் பரம பக்தருக்குத் தாங்க முடியாத பயம்! அதனாலே என் அண்ணனை நாடு கடத்தினாராம்! உண்மைக் காரணம் எனக்குத் தெரியும்!

வேந்தன்: என்னடி உளறுகிறாய், பேதையே

திலகா: மன்னன் நீ—உன்னை மணம் செய்து கொள்ள மறுத்தாள் குமாரதேவி—உன்னை துச்சமெனக் கருதி, இசை அரசனான என் அண்ணனிடம் காதல் கொண்டாள். பொறாமை உனக்கு—வெட்கம் உனக்கு. ஆகவே சமயம் பார்த்து, சாகசமாக, என் அண்ணனைப் பழி தீர்த்துக்கொண்டாய்.

வெற்றி: ச்சீ! போக்கிரிப் பெண்ணே!

திலகா: மறுக்க முடியாது உன்னால்! இந்த மண்டலம் அறிந்த இரகசியம் இது. போகிறதைப்பார் அதிகாரத்தை நிலைநாட்டமுடியாத இவனுக்கு அரசன் என்ற பட்டம்.

[மன்னன் கோபமாக வெளியே செல்கிறான்... ...]

அரசன்: துரோகி (பணியாளிடம்) மதிவாணனின் தங்கை திலகவதியை தவனக் காட்டுக் கோட்டைக்கு இழுத்துக்கொண்டு வா, இன்றிரவு! துணைக்கு, நாலு போர் வீரர்களை அழைத்துச் செல்!

[பணியாள் உத்திரவு பெற்றுக்கொண்டு செல்கிறான்...]

அரசன்: (புதிய களிப்புடன்) அதுதான் சரி!...அவமானம் அவனை அணு அணுவாகச் சிதைக்கட்டும்! என் திட்டத்தைக் கெடுத்தான்! என் சட்டத்தை உடைத்தான்! (குரூரமான பார்வையுடன்) சிறையில் அந்தச் சிறுக்கி என்னை எவ்வளவு கேவலமாகப் பேசினாள்...அவளை.......

[அரசன் போகிறான். பிறகு..]

சேவகன்: எங்கே அந்த வாயாடி?

திலகா: பாபிகளே! பெண்களிடமா இப்படி முரட்டுத்தனம்? வேண்டாம்...அக்ரமக் கூத்தாடா தய்யா,

சேவ: வாயாடி, கிளம்பு!

கற்ப: என்னப்பா இது? திலகா! நெருப்புடன் விளையாடாதே என்றால் கேட்டாயா?

தில: அம்மா...அம்மா...

கற்: ஐயா, இதென்ன அக்ரமம்

சேவ: இது அரசன் ஆணை.

தில: அபலைகளை இம்சிக்கச் சொல்வதா? இதுவா அரசன் ஆணை?

சேவ: என்னிடம் வாதாடாதே! விடு.......!

கற்ப: விடமாட்டேன்.

[சேவகன் இழுத்துச்செல்ல, திலகா, அம்மா அம்மா...வெனக் கதறுகிறாள். மற்றப் பெண்கள் திலகா! திலகா! எனக் கூச்சலிடுகின்றனர்.]

(தவனக் காட்டுக் கோட்டை. திலகா அரசனால் கற்பழிக்கப்படுகிறாள். அரசன் வெளியில் போகும்போது அங்குள்ள சேவகனைப் பார்த்து,)
அரசன்: அவளை இஷ்டம்போல் விட்டு விடுங்கள் தடைசெய்ய வேண்டாம்.
(திலகா அலங்கோலமான நிலையில் சுற்றுகிறாள். காட்டில், பைத்தியம் பிடித்தவள் போலாகிறாள் திலகா. பாடுகிறாள்.)


திலகா பைத்தியப் பாட்டு



திலகா:ஆஹா! ஆஹா!
                           ராஜாதிராஜன் நம்ம ராஜா!—இந்த
                           ராஜ்ஜியத்தையாள வந்த பொம்மை ராஜா!
                           ஆஹா! ஆஹா!
திலகா:நானே இந்தநாட்டின் மகராசா—இனி
                 நல்லோர்முதல் எல்லோரையும் மதிப்பேன்லேசா (நா)
                 காணேன் இங்கே மதிமந்திரியார் தம்மை
                 காரணமே யானறியேன் காவலர்கள் யாரங்கே— (நா)
திலகா: கூக்கூ கூக்கூ என்றே கூவாதே—உஸ்
                 கூக்கூ கூக்கூ என்றே கூவாதே—குயிலே
                 கூக்கூ கூக்கூ என்றே கூவாதே—பகல்
                 குருட்டாந்தை தூங்கவேணும் குறும்புத்தனம்
                                                                    பண்ணாதே (கூக்)
                                                        என்
                 கோபம் வந்தால் பொல்லாதே—சிறைக்
                      கூண்டுக்குள்ளே செல்லாதே
                 கொம்பில்நின்றே தாவித் துள்ளாதே—மரக் (கொம்)
                                                      பகல்
                 குருட்டாந்தை தூங்க வேணும்
                      குறும்புத்தனம் பண்ணாதே— (கூக்)
திலகா: ராசா என்தோட்டத்திலே வந்து
                 ரோசாப்பூக்கொய்வதாரடி பெண்ணே
                                               அலுக்கி—குலுக்கி
                    அஞ்சாத நெஞ்சோடு. ஆ– ஊம்-நீ
                 பேசாமெப் போகா விட்டா—இப்போ
                    லேசாவிடமாட்டேனுன்னே,
                    ஆஆ ஆஆ ஆஆ—நவ
                    ராத்திரியிலே இவர் கொலுவிருப்பார்—அர்த்த
                    ராத்திரியில் நேர்த்தியாய்க் குடைபிடிப்பார். மக (ரா)


திலகா: கடுந்தண்டனை கடுத்தண்டனை.
                    காலை மாலை கன்றுக் குட்டிக்குப்
                    பாலையூட்டாதே பசுவே பாலை யூட்டாதே—உயர்
                    காவலனிட்ட கட்டளை மீறி வாலையாட்டாதே
                    பசுவே வாலையாட்டாதே ஆட்டினால்— (கடுந்)
                         தென்றற் காற்றால் அசைந்தசைத்து
                                செடியே ஆடாதே—வளருங்
                                கொடியே ஆடாதே—இந்தத்
                         தேசந்தன்னில் ராசன் போடும்
                                தடையை மீறாதே—போடுந்
                                தடையை மீறாதே—மீறினால்— (கடுந்)


(வெற்றிவேலன் அரண்மனையில்-ஓர் கூடம் நிம்மதியற்ற மனத்தினனாயிருக்கும் வெற்றி வேலனிடம் அமைச்சர் வருகிறார்.)

அமை: நல்ல சேதி, அரசே! நல்ல சேதி!

வெற்: என்ன சேதி? மதிவாணன் மாண்டானா?

அமை: அதைவிட நல்லசேதி, அரசே! அந்தக் குமார தேவியை அழிக்க ஓர் அருமையான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.

வெற்: விளக்கமாகப் பேசும், ஐயா!

அமை: நடு நாட்டரசன் போர் தொடுத்து விட்டான்—குமாரிக்குப் பேராபத்து—படைகளைச் சுற்றி வளைத்துக் கொண்டு விட்டான்.

வெற்: (சிறிது யோசித்து விட்டு) படைகள் புறப்படத் தயாராகட்டும். நடு நாட்டரசன் படைகளை நமது படைகள் தாக்கட்டும் பின்புறமிருந்து...

அமை: (ஆச்சரியத்துடன்) அரசே!

வெற்: ஆமாம். குமாரியை மீட்டாக வேண்டும். வெட்கப்படட்டும் குமாரி. எந்த வெற்றி வேலனை அவள் அலட்சியப்படுத்தினாளோ அவனுடைய வாள் பலத்தால் தான் காப்பாற்றப்பட்டாள் என்ற சொல் போதும் அவள் வாழ்வைச் சுட்டெரிக்க.

[படை வீரர்கள் செல்கிறார்கள்.]
[கோட்டையின் மேல்தளம். நடு நாட்டரசன் படை பிளக்கப்படுவதைக் காண்கிறான், குமாரியின் ஒற்றன். தளபதி ஒருவன் குமாரதேவியிடம் சேதி கூறுகிறான். குமாரி களிப்படைகிறாள்...வேறோர் ஒற்றன் விறைக்க விறைக்க ஓடி வருகிறான்......]

ஒற்றன்: நடுநாட்டரசன் படைகளை, வெற்றிவேலன் படைகள் பிளந்துவிட்டன! கடும்போர்! நடுநாட்டரசனின் படை வரிசை குலைந்து விட்டது!

குமாரி: (பூரிப்புடன்) இதுதான் தக்க சமயம், தாக்க.

[குழல் ஊதப்படுகிறது. குமாரி தன் ராணுவ உடையைச் சரிப்படுத்திக்கொண்டு குதிரைமீது ஏறுகிறாள். படைகள் கிளம்பும் ஒலி கேட்கிறது.........]

[கோட்டையின் முன்புறம் குமாரியும் காப்பாளரும் நிற்கிறார்கள். எதிர்ப் புறத்திலிருந்து வெற்றிவேலனும் துணைவர்கள் நால்வரும் வருகிறார்கள். வெற்றிவேலனின் கோலம், அவன் களத்திலிருந்து வருகிறான் என்பதைக் காட்டுகிறது. அருகே வந்ததும், குமாரி, தழதழத்த குரலில்...]

குமாரி: இந்தப் பேருதவியை என்றும் மறக்க முடிவயாது. என் நாடு அடிமைச் சாவடியாகியிருக்கும் தங்கள் உதவி கிடைத்திரா விட்டால்......

வெற்: குமாரி தேவியாரே என் கடமையைச் செய்தேன்.

குமா: தங்கள் வீரவாளை என் நாடு என்றென்றும் போற்றிப் புகழும்......

வெற்: நாடா? (சிறிதளவு பெருமூச்சு) சரி போகலாம்

குமாரி: (அவள் மனதை அறிந்துகொண்டு) நானுந்தான் தங்கள் வீரவாளைப் போற்றுகிறேன்.

வெற்: (ஒரு கணம் மகிழ்ச்சிகொண்டு மீண்டும் சோகமாக) வாளையா?

குமாரி: தங்கள் வீரவாளை அனைவருந்தான் போற்றச் செய்வர்.

வெற்: (சலிப்புடன் குதிரையைத் தட்டிவிட்டு) போகலாம்.

[வெற்றிவேலன் போகிறான். குமாரி அவனைத் தொடர்ந்து செல்கிறாள். இருநாட்டு வீரர்களும் அவர்கள் பின் செல்கின்றனர்.]

[திலகா பைத்தியம் பிடித்தவள்போல காட்டில் பாடிக்கொண்டு திரிகிறாள்.]

[முத்துமாணிக்கம் காட்டில் அலைகிறான்]
[வெற்றிவேலன் அரண்மனை—உப்பரிகை மரகதமணி விளையாடிக்கொண்டு தடை செய்யப்பட்ட மதிவாணன் பாடலைப் பாடுகிறாள். பணியாள் மரகதமணியின் அருகே சென்று பாடாதபடி தடுகிறான். மரகதம் அவன் பேச்சைச் சட்டை செய்யாமல் ஓடி ஆடிப் பாடிக்கொண்டு இருக்கிறாள். பணியாள் பதறுகிறான்]

மரகதம்: நான் பாடுவேன்! நீயார் தடுக்க?

பணியாள்: அப்பாவின் உத்தரவம்மா! பாடக்கூடாது!

(குழந்தை அவன் கையைக் கடித்துவிட்டு சிரித்தபடி மேலும். பாடுகிறது. குழந்தையை அவன் பிடிக்க முயலுகிறான். குழந்தை தவறி மாடியிலிருந்து கீழே விழுகிறது. பணியாள் பதறி ..ஐயோ என்று கூவுகிறான். குழந்தைக்குப் பலத்த அடி இரத்தம் கசிகிறது......)

[யுத்த களத்தில் குமார தேவியின் கூடாரம். போர்க்களத்துப் படத்தைப் பார்த்தபடி இருக்கிறாள், வெற்றிவேலனுடன். அப்போது அவசரமாக வந்து சேர்ந்தான் வெற்றிவேலன் நாட்டு வீரன்]

வீரன்: இளவரசிக்குப் பேராபத்து. மருத்துவர், உடனே தங்களை வரச்சொன்னார்.

குமாரி: இளவரசிக்கா?

வெற்: என் குழந்தை மரகதமணிக்கா? என்னடா ஆபத்து?

வீரன்: கடுமையான ஜூரம்—பலமான அடி—ஆபத்தான நிலைமை.

குமாரி: போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்—தயங்க வேண்டாம். நிலைமை இங்கு பரவாயில்லை, புறப்படுங்கள்.

[வெற்றி வேலன் மனம் பதறியவனாய்ப் புறப்படுகிறான்.........]

[வெற்றிவேலன் அரண்மனையில்—ஓர் கூடம்-மரகதமணி படுக்கையில்—சேடிகள் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளனர். மரகதமணி புரண்டபடி குளறிக் கொண்டிருக்கிறாள்.]

மரகதம்: மாமா! பாடு மாமா—பாடு—மா...மா!

மருத்: (சேடியிடம்) அந்த ஒரு பேச்சுதான், வேறே நினைப்பு இல்லை—வேறே பேச்சு இல்லை—மாமா—பாட்டு...

சேடி: நெருப்பாகக் காயுது உடம்பு

மருத்: நிலைமை ஆபத்துதான்—மன்னர் என்ன சொல்லுவாரோ!

(வெற்றிவேலன் இறைக்க இறைக்க ஓடிவருகிறான்......)

வெற்: கண்ணே, மரகதம்! அடடா! இவ்வளவு நிலைமை மோசமாகிற வரையிலா பார்த்துக்கொண்டிருந்தீர்கள்? மருத்துவரே! என்ன இது?

மருத்: (மரியாதையாக) கடுமையான ஜூரம், குழந்தை மாடியிலிருந்து விழுந்துவிட்டது.

வெற்: (மண்டைக் கட்டு இருக்கக் கண்டு பதறி) பலமான அடி—மடப்பயல் பணியாள் தூங்கிவிட்டானா? எப்படி விழுந்தது மரகதம்?

மரகதம்: (கண் திறக்காமல் குளறு மொழியில்) பாட்டுப் பாடு—பாடு—மாமா—ஒரே ஒரு பாட்டு.

(வெற்றிவேலன் முகம் சுளித்துக் கொள்கிறான்.)

மருத்: எனக்குத் தெரிந்த மூலிகைகள் எல்லாம் கொடுத்தாகி விட்டது. குழந்தையின் மனம் ஒரே விஷயத்தில் பதிந்துவிட்டது. வேறு நினைவு இல்லை. இப்படியே இருந்தால் பேராபத்து தான்.

வெற்: உளறாதே! என்ன விஷயத்திலே மனம் பதிந்துவிட்டது?

மருத்: குழந்தை கீழே விழுகிறபோது மதிவாணன் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தது. தடுத்தான் காவலன், தவறி விழுந்துவிட்டது; அதிலேயிருந்து குழந்தைக்கு மதிவாணன் மேலேயும், அவன் பாட்டின் மேலேயும் நினைவு. வேறு நினைவு எதுவும் கிடையாது.

வெற்: சதியா செய்கிறீர்கள்? மதிவாணன் பாட்டு தான் மருந்தாம்! மிரட்டுகிறாயா என்ன! என் சுபாவம் தெரியுமே உனக்கு! என்னிடமா இந்த வேலை எல்லாம்?

மர: மாமா......பாடு......

வெற்றி: (வேதனையுடன்) என்ன செய்வது நான்? அந்தத் துரோகியிடமா மண்டியிட வேண்டும்! என் மகளின் உயிர் அவன் பாட்டிலா ஒட்டிக் கொண்டிருக்கிறது? மருத்துவரே! என்னைச் சித்திரவதை செய்ய வேண்டாம்! எங்கு இருக்கும் மூலிகையாக இருப்பினும், சொல்லுங்கள் கொண்டு வருகிறேன்.

மருத்துவர்: வீண் வேலை! மதிவாணன் சீக்கிரம் வந்தாக வேண்டாம்! உள்ளம் வெந்து கிடக்கிறது குழந்தைக்கு...

[பாய்ந்து சென்று, மருத்துவரின் கழுத்தை நெறித்து விடுவது போல் பிடித்துக் குலுக்கி...]

வெற்றிவேல்: பாவி என்னைக் கேலி செய்கிறாய்! எவனை இந்த நாட்டிலே இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டேனோ அவனை வரவழைக்க வேண்டும் என்கிறாய்! எவ்வளவு துணிவு?

மருத்துவர்: நிலைமை புரியவில்லையா வேந்தே! மரணத்தின் பிடியில் இருக்கிறாள் மரகதம், மதிவாணன் தான் அவளைக் காப்பாற்றமுடியும், (அவன் அருகே சென்று அணைத்தபடி) வீண் கௌரவம் குறுக்கிடக்கூடாது வேந்தே! குழந்தையைக் கொல்லாதீர்! என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது! பல கொடுமைகளைச் செய்தீர் இதுவரையில்! ஆனால் இது எவ்வளவு கொடியவனும் செய்யக்கூசும் பாதகம்! மகளைச் சாகடிக்காதீர் உமது மமதையால்! வேண்டாம்! உலகம் உம்மைச் சும்மா விடாது!

(ஆத்திரமாகப் பேசியதால் வைத்தியர் கீழே சாய்கிறார்—வெற்றிவேலன் அவரை

விரைக்க விரைக்கப் பார்த்துவிட்டு மீண்டும் ஓடி மரகதமணியைப் பார்க்கிறான். "பாடு மாமா பாடு! ஒரே பாட்டு..." என்று குழந்தை குளறுகிறது. வேதனை தாங்காமல், வெற்றிவேலன் பணியாளிடம், மதிவாணனை அழைத்து வாருங்கள்...என்று கூறிவிட்டு படுக்கை அருகே தலைகவிழ்ந்தவண்ணம் அமருகிறான்,)

(காடு. மதிவாணனைத் தேடி மருத்துவர் வருகிறார்)

மருத்துவர்: மதிவாணா! மறுக்காதே! மரகதமணியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது! வேந்தன் துடிக்கிறான்.

மதி: (வெறுப்புடன்) கடிக்க வரும் பாம்புகூடத் தான் மருத்துவரே அடிபட்டால் துடிக்கிறது...(தன் இதயத்தைக் காட்டி) இங்கே எவ்வளவு வேதனை குழம்பிக் கொண்டிருக்கிறது தெரியுமா?

மருத்: தெரியுமப்பா! அங்கே அன்புக்கு - இடம் உண்டு என்பதும் தெரியும்.

மதி: என் தாய் சிறையில்! திலகா இருக்குமிடம் தெரியாது! நான் காட்டில்! அரண்மனையில் உள்ள புலிக்குப் பரிந்து பேச வருகிறீர் நீர்!

மருத்: மரகதமணிக்காக அப்பா! மமதை கொண்ட மன்னனுக்கு அல்ல. அவனுடைய அக்ரமத்துக்காக அந்தக் குழந்தை சாக வேண்டுமா? வா மதிவாணா!

மதி: மருத்துவரே, என்னை மீண்டும் அந்தக் கொடியவன் இருப்பிடம் வரச் சொல்கிறீர்! சரி! மரகதமணிக்காக வருகிறேன்! ஆனால் என் தோழர்களை விடுதலை செய்தாக வேண்டும் முதலில்! என் பாடலுக்கு விதித்துள்ள தடை நீக்கப்படவேண்டும்! என் தாயை விடுதலை செய்யவேண்டும்!

மருத்: இதைக் கூடச் செய்ய முடியாதா? வா...

மதி: செய்துவிட்டுச் சேதி அனுப்பும்!

(மருத்துவர் போகிறார். விடுதலை செய்யப்பட்ட மலைவாசிகள் வருவது கண்டு...)

மதி: விடுதலை...பூங்காவனம் விடுதலை...அறப்போர் வீரர்கள் எல்லாம் விடுதலை! வெற்றி வீரர்கள் வருகிறார்கள்! தடையை மன்னன் நீக்கிவிட்டான்!

பூங்: மக்களின் சக்திக்கு முன் மன்னன் என்ன செய்ய முடியும்?

மதி: ஆனால், பூங்காவனம், மரகதமணியைக் காப்பாற்றத்தானே மன்னன் இவ்வாறு செய்தான்!

பூங்: காரணம் அதுமட்டுமல்ல மதிவாணரே! மன்னன் நமக்கு மகிழ்ச்சி தந்தான். நாமும் அவனுக்கு மகிழ்ச்சி தருவோம்! மரகதமணியைக் காப்பாற்ற அரண்மனை சென்று வாரும்...

மதி: நான் சென்று என்ன செய்வது.

பூங்: இதோ மூலிகை! கடும் காய்ச்சலையும் மனக் குழப்பத்தையும் இது போக்கும்!

[வெற்றி வேலன் அரண்மனையில் ஓர் கூடம்...மதிவாணன் உள்ளே நுழையுக் கண்டு, வெற்றிவேலன் வெட்கப்பட்டு வேறு அறைக்குச் செல்கிறான். மதிவாணன். குழந்தை அருகே சென்று அதன் நெற்றியைத் தடவுகிறான். மருத்துவர் ஆவலுடன் பார்க்கிறார். குழந்தை கண் திறக்கவில்லை.]

மருத்: பாடு மதிவாணா! மெதுவாக...

மதி: இந்த நிலையிலா?

மருத்: இந்த நிலைமை போக!

(மெல்லிய குரலில் பாடுகிறான் மதிவாணன், மெல்லக் கண் விழிக்கிறது குழந்தை...)

[அரண்மனையில் பக்கத்துக் கூடம். பணியாள் ஓடி வருகிறான்;]

பணியாள்: குமார தேவியார்!

[குமாரதேவி அவசரமாக அங்கு வருகிறாள். அரசனைக் கண்டதும் ஆவலுடன்.]

குமார தேவி: குழந்தை எப்படி இருக்கிறாள்?

வெற்றி: பிழைத்துக்கொண்டாள்! அதோ...

[குமாரதேவி குழந்தை அறைப்பக்கம் வேகமாகச் செல்கிறாள். மதிவாணன் இருக்கவே தடுமாற்றத்துடன் நிற்கிறாள். மதிவாணன் வெறுப்புடன் சரேலென வெளியேறுகிறான்.

குமாரி வருத்தத்துடன் வெற்றிவேலனிடம் வருகிறாள்.]

[வெற்றிவேலன் தனி அறை, வெற்றிவேலனும் மருத்துவரும்.]

மருத்: வீணான விசாரம்! குழந்தை பிழைத்ததை எண்ணிக் களிப்படைய வேண்டிய நேரத்தில், ஏன் வீண் விசாரம்?

வேந்தன்: (சலிப்புடன்) சரி! சரி! அவனை இங்கே சில நாட்கள் இருக்க ஏற்பாடு செய்தீரா?

மருத்: சிரமப்பட்டு சம்மதிக்கச் செய்தேன்,

வேந்: குமாரதேவியாருக்கு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன்—தவனக் காட்டுக் கோட்டையில்—செல்கிறேன்—குழந்தையைக் கவனித்துக்கொள்ளும்...

[தவனக் காட்டுக் கோட்டை வெளிப்புறம். காவலாளிகள் பரபரப்பாக வேலை செய்கின்றனர்.]

ஒருவன்: ராணி வராங்களாமே, குமாரதேவி!

இரண்டாவது: இங்கேயா? ஐயோ பாவமே! வேங்கையும் வருதா?

காவலாளி: மான் இங்கே இருந்தா, வேங்கை வேறு இடமா போகும்?

[கோட்டையில் ஓர் இடம். அமைச்சரும், அரசனும்]

அமைச்: வேந்தே, அலங்கார விளக்குகள் வேண்டாமா?

அரசன்: விளக்கா...ஆமாம், ஒரே இருளாகத்தான் இருக்கிறது என் மனம்போல (உள்ளே சென்று குழப்பத்துடன் திரும்பி) அமைச்சரே! கொடுமை செய்துவிட்டேன்! மனம் நிம்மதியாக இல்லை! உலவிவிட்டு வருகிறேன்! (அமைச்சர் உடன் வருவது கண்டு) இல்லை! தனியாக!

[காட்டில், மன்னன்! திலகா, கவசத்தால் மன்னனைத் தாக்குகிறாள்.]

அரசன்: யாரது?

திலகா: வீராதி வீரனே! அபலைகளை அணைத்து அழிப்பதிலே அனுபவம் அதிகமல்லவா உனக்கு! ஏன் இந்தக் காட்டு ராணியைக் கண்டு ஓட்டமெடுக்கிறாய்? (மீண்டும் அரசனைத் துன்புறுத்துகிறாள். அரசன் உடலிலிருந்து ரத்தம் கசிகிறது.)

திலகா: அன்பின் அறிகுறி! காதல் வெள்ளம்!

[வெற்றிவேலனின் அரண்மனைத் தோட்டம். மரகதமணி, குமாரியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய், ஒரு புன்னமர நிழலில் உட்கார்ந்து கொண்டுள்ள மதிவாணனைக் காட்டுகிறாள். மதிவாணன் திடுக்கிட்டு எழுந்திருக்கிறான். முகத்திலே கோபமும் வெறுப்பும் படருகிறது—]

மதி: (வெறுப்புடன், கேலிக்குரலில்) மஹாராணி! வணக்கம்! நம்பி மோசம் போன இந்த நாடோடியின் வணக்கத்தை ஏற்றுக்கொள்வீரோ என்னமோ?

குமாரி: (அமைதியாக) மதிவாணரே! கோபம்வரத் தானே செய்யும்! ஆனால்!

மதி: ஆனால்! அரண்மனைவாசிகளான எமக்கு இதுதான் பொழுதுபோக்கு என்று கூறுகிறீரா தேவியாரே!

குமாரி: உங்கள் கோபப்பேச்சிலும் கவிதா நடை இருக்கிறது.

மதி: (கோபமாக) காதல் மொழி பேசி என் கருத்தைக் கெடுத்த காதகீ! ஏன் என்னைப் பித்தனாக்கினாய்? ஆருயிரே, அரசா பெரிது—இதோ முடி துறக்கிறேன் என்று மழுப்பிவிட்டு, என்னை மோசம் செய்தாய், ஒரு முடிக்காக! என்னை நடைப்பிணமாக்கினாய் அரச போகத்திற்காக!

குமாரி: பதவி மோகம் எனக்கு! அதனால் உம்மை மோசம் செய்தேன்! அதுதானே, இன்னுயிரே, உம் குற்றச்சாட்டு?

மதி: (கோபமாக) இன்னுயிர்? எவ்வளவு துணிவு அப்படி இன்னமும் சொல்ல...

[குமாரியைத் தாக்குபவன் போல் செல்கிறான். குமாரி விலகாமல் நிற்கிறாள், அருகே சென்ற மதிவாணன் தயக்கமடைகிறான்]

குமாரி: (புன்னகையுடன்) ஏன், அச்சமா? உம் காதல் தணியவில்லை. அந்த ஒளி கோபமாக வெளி வருகிறது!

மதி: தர்பார் தருக்கன் எவனாவது கிடைத்தால் அவனிடம் காட்டு உன் சாகசத்தை.

குமாரி: (முகத்தில் கோபரேகை படர) எல்லைக்கு வந்தாகிவிட்டது, கண்ணாளா! என் மனமும் ஒரு அளவுக்குத்தான் தாங்கிக்கொள்ள முடியும்.

மதி: (கேலியாக) ஆஹா ஹா ! என்ன உருக்கம்! எவ்வளவு நேர்மை!

குமாரி: (கோபமாக) மதிவாணரே, இதோ பாரும்!

[பிரகடனத்தை வீசி எறிகிறாள் அவன் முகத்தில். மதிவாணன் அதைப் பரபரப்புடன் படித்து பார்க்கிறான்......]

மதி: முடி துறக்க ஏற்பாடாகி......கடைசி நேரத்திலே...

குமாரி: ரத்து செய்துவிட்டேன்; உம்மை ஏமாற்ற அல்ல.

மதி: ஏது! அதிகாரத்தோடு பேசுகிறாய்!

குமாரி: குறுக்கே பேச வேண்டாம். நான் பட்டத்தை விட்டு விடத் தீர்மானித்தேன். பிரகடனம் இதோ. ஆனால், நடு நாட்டரசன் போர் தொடுத்துவிகிட்டான்.

குமாரி: (தொடர்ந்து) காதலா? அரசா? என்ற கேள்வியல்ல கவிவாணரே, நாட்டுக்குப் பேராபத்து! நான், அது சமயம், கொட்டு முரசு என்று பேசுவதா? கட்டிக் கரும்பே என்று உம்மிடம் வந்து கொஞ்சுவதா? இது என் பிரச்னை—சிக்கல். களம் சென்றேன்—கவிபாட அல்ல—கடும் போரிட...

மதி: குமாரி! குமாரி!

குமாரி: நாடு காப்பாற்றப்பட்டது. இங்கே வருகிறேன் உம்மிடம் காட்டுக் குணம் இருப்பது காண...

மதி: குமாரி! குமாரி!

[என்று கெஞ்சியபடி அருகே செல்கிறான்]

குமாரி: பிரகடனத்தை சோலை நாட்டுக்கு அனுப்பி விடும். நான் புத்த மார்க்கப் பிரசாரத்துக்காகச் செல்கிறேன், வெளி நாட்டுக்கு.

[கோபமாகத் திரும்புகிறாள். மதிவாணன் அவளைத் தடுத்து நிறுத்தி...]

மதி: (மகிழ்ச்சி மயமாகி) குமாரி! என் உயிரே! வீணான சந்தேகம்—கோபம்—எனக்கு

குமாரி: (புன்னகை பூத்து) ஆடவர் அனைவருக்கும் உள்ளதுதான் அந்தச் சுபாவம! கவிவாணராயிற்றே, அந்த சுபாவம் உங்களுக்கு இராதென்று நினைத்தேன்!

[மதிவாணன் அசடு சொட்டப் பார்க்கிறான். அவன் கன்னத்தை தட்டியபடி]

குமாரி: ஆனால், இந்தக் காதல் விஷயத்திலே மட்டும், மாவீரரானாலும், மகா கவியானாலும், ஒரே அசடுகள் தான் ஆடவர்கள்.

மதி: கேலி போதும்! குமாரி! வா...வா...! உன்னிடம் எவ்வளவோ பேச வேண்டும்! வாயேன்!

[காடு: திலகா ஓர் புறத்தில்-அவளுக்கு எதிர்ப்புறமாகத் தொலைவிலே முத்து மாணிக்கம் தள்ளாடிக்கொண்டு வருகிறான். அவனைக் கண்டு திலகா அலறுகிறாள். அவன் ஓடி வருகிறான், திலகா என்று தெரிந்ததும்.]

முத்து: திலகா! என் கண்ணே! காட்டிலா? இந்தக் கோலத்திலா?

திலகா: யார்? என் மாணிக்கமா? என் இன்பமா?

[என்று கூவிக்கொண்டே ஓடுகிறாள். கால் இடறிக் கீழே விழுகிறாள். அவளைத் தூக்கி மடி மீதுதூய வைத்துக்கொண்டு ஆசையுடன் பார்க்கிறான், முத்து. அவன் முகத்தை அன்புடன் தடவிக் கொடுக்கிறாள் திலகா. அவன் பயப்படுகிறான்...]
திலகா: என் முத்துவா? என் மாணிக்கமா? கடைசியில் வெற்றி! காதல் பாதையில் வெற்றி பெற்றேன்! இதோ என் ஆருயிர்!

[என்று கூறிக்கொண்டிருக்கும்போது மயக்கம் மேலிடுகிறது. திலகர.... திலகா...என்று மனமுருகக் கூவுகிறான் முத்துமாணிக்கம்.]

[அரண்மனை. மதியும் குழந்தை மரகதமும் உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது...]

ஒரு சேவகன்: (ஓடி வந்து) தங்கள் தங்கை திலகாவை...!

மதி: கண்டு பிடித்து விட்டார்களா? என் திலகாவை!

சேவ: திலகம்மை, காட்டில் பிணமாக...

மதி: திலகா! திலகா!

[மதி ஓடுகிறான். ஒரு மரத்தடியில் திலகா பிணமாகிக் கிடக்கிறாள். பக்கத்தில் முத்துமாணிக்கம் அலங்கோலமான நிலையில் காணப்படுகிறான். மதிவாணன் அவனைக் கவனிக்கவில்லை. திலகாவைக் கண்டதும் கதறுகிறான்.]

மதி: திலகா! அரச சபை! கவிதா மண்டபம்! காதல் மேடை! எங்கெங்கோ அலைந்தேன் அறிவற்று! உன்னை இழந்தேன்! என் அருமைத் திலகமே! என் செய்வேன்—எப்படி சகிப்பேன்!

முத்து: ஒரு பாட்டுப்பாடு. அதுதானே உன் வேலை.

[மதிவாணன் அப்போதுதான் முத்து அங்கு இருப்பதைக் காண்கிறான். கோபம் கொப்பளிக்கிறது.]

மதி: ஹா! நீயா? காதல் காதல் என்று கனிமொழி பேசி, என் தங்கையின் கருத்தைக் கெடுத்த பாதகா! ஏன்டா என் தங்கையைக் கைவிட்டாய்?

முத்து: நான் அவளைக் கைவிட்டேனா?

மதி: என்னடா பசப்புகிறாய்? என் காதில் நாராசம் போல் வீழ்ந்ததே அன்று உன் பேச்சு,

முத்து: என் பேச்சு! ஏமாளி! என்ன சொன்னேன் நான்? திலகாவை நான் இழக்கத்தான் வேண்டும் என்றேன்! என் தூய காதலையா சந்தேகிக்கிறாய்? திலகாவை இழக்கத் தீரமானித்தது, மதியிலி, காதல் எனக்கு இல்லாததால் அல்ல! இந்த இதயத்தில் அவள்தானடா எப்போதும்! ஆனால், சதிகாரரின் செயலால், நான் திலகாவுக்குத் துளியும் ஏற்றவன் அல்ல என்ற நிலை பெற்றேன்! விளங்காது உனக்கு!

மதி: என்னடா முத்து! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!

[முத்து தனது முகத்தின் இடப்பக்கமாகக் கை வைத்து வேதனையுடன் சதையைப் பிய்த்து எடுக்கிறான். உட்புறம் கோரமான குழிகள் நிரம்பியதாக இருக்கிறது. மதிவாணன் இதைக் கண்டு ஐயோ இதென்ன முத்து? என்று கேட்கிறான்]

முத்து: பார்! பாரப்பா புலவனே! பார் முத்துமாணிக்கத்தை! ஆயிரம் தடவை புகழ்ந்தாள் அழகான முகம் என்று திலகா! பார்த்தாயா எப்படி ஆக்கப்பட்டு விட்டது!

மதி: முத்து... உனக்கா இக்கதி?

முத்து: வில்வக் காட்டுச் சீமானின் வேலை! அவன் மகளை மணக்க மறுத்தேன்! பழி தீர்த்துக்கொண்டான்! இப்படி ஆனபிறகு திலகாவை நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? மனம் இடம் தருமா? தூய காதல் ததும்பும் மனமடா இது! இடம் தருமா? அதனால் தான் அவளை இழக்கத் துணிந்தேன்.

மதி: தியாகியடா முத்து நீ! வீரனடா நீ! உன் உள்ளம் உத்தமமானது! உணராமல் போனேன்! என்னை மன்னித்துவிடு! (முத்துவை அணைத்தபடி) தியாகச் சின்னமே வா! திலகா எப்போதும் உன்னுடன்தான் இருப்பாள்! வா! முத்து வா! அவனை அழைத்துச் செல்கிறான்.
[மயானம்: மதிவாணன் மனம் வெதும்பி அழுகிறான்.]

மதி: ஐயோ திலகா! என் அருமைத் தங்கையே! உன்னை நான் இழந்தும் உயிர் வாழ வேண்டுமா? பூங்கொடியே! உன் எடைக்கு எடை தங்கம் தேடிக்கொடுத்து முத்துமாணிக்கத்துக்கு உன்னைத் திருமணம் செய்து வைக்கும் ஒரே நோக்கம் கொண்டுதானே இந்த வேழ நாடு வந்தேன்! இந்தக் கோலம் காணவா? சாலையிலும் சோலையிலும் காதற் கனிமொழி பேசி நீங்கள் மகிழ்ந்தாடுவதைக் கண்டுகளிக்க வேண்டிய இந்தக் கண்கள் இந்தத் தீயையா காணவேண்டும்?

என் அண்ணா இருக்கிறார்—எனக்கு என்ன குறை என்று அன்பு ததும்பப் பேசி என்னை ஆனந்தத்தில் ஆழ்த்துவாயே! ஐயோ! உன் அண்ணன் உனக்குத் தந்தது என்ன? இந்தப் பெரு நெருப்பா? என் உடன்பிறப்பே! நெஞ்சிலே புகுந்துவிட்டது பெரு நெருப்பு! திலகா! திலகா! இனி என்று நான் காண்பேன் உன் மலர் முகத்தை! தாயை இழந்தேன்! தங்கையை இழந்தேன்! வாழ்வின் ஒளி இழந்தேன்! பாலைவனமாகி விட்டதே என் வாழ்வு! அந்தோ, திலகா! திலகா!!

[மடாதிபதியும் அருமறையானந்தரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.]

அருமறை: காலதாமதம் கூடாது காரியம் கெட்டுவிடும். மதிவாணன் அரண்மனையில் மீண்டும் ஆதிக்கம் பெற்றுவிட்டால் நமக்குப் பேராபத்தாகும்.

மாசி: மன்னனே தொலையப் போகிறான்! மதிவாணன் என்ன செய்ய முடியும்? இந்த பூஜை எதற்காகத்தான்? இதோ, மன்னனை அரனடிகொண்டு சேர்க்கும் அற்புதமான ஜெபமாலை! ஒரு மண்டலம் ஜெபித்தால் போதுமே—கடும் விஷம் கக்கும் ஜெபமாலை.

அரு: ஏற்பாடு பிரமாதம்! மாசிலாமணி! நாட்டுக்கு அமைச்சனாக வேண்டியவன் நீ! சந்தேகமில்லை!

மாசி: வாரும். மடாலயம் சென்று நமது போர் வீரர்களையும் அழைத்து வருவோம்.

(வெளியிலிருந்து மரகதமணி கேட்டுக்கொண்டிருக்கிறாள்...

படுக்கையில் மன்னன் சாய்ந்து கொண்டிருக்கிறான். மரகதமணி பதறிக்கொண்டே வருகிறாள். வெற்றிவேலனிடம் இரகசியமாகக் கூறுகிறாள்.)

வெற்றி: என்ன? என்ன!

மரகத: ஆமப்பா! என் காதால் கேட்டேன்!

வெற்றி: கெடுமதியாளர்கள்! பாடம் கற்பிக்கிறேன். இப்போதே...யாரங்கே?...குருதேவரைக் காணவேண்டும்.

(சுடலை. திலகா தகனம் செய்யப்படுகிறாள் வேதனை மிகுந்தவனாகித் தள்ளாடி நடந்து செல்கிறான் மதிவாணன். இரு போர் வீரர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதிவாணன் அவர்கள் அருகே அமர்ந்திருக்கிறான்—அவர்கள் அறியாமல்.)

ஒருவன்: கதறுகிறான் மதிவாணன். எப்படித் தாங்கிக் கொள்வான் பாபம் புள்ளிமான் போலத் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த திலகா, வேங்கையால், கொல்லப்பட்ட விஷயம் தெரியாது மதிவாணனுக்கு...

மற்றவன்: தெரிந்தால், நெஞ்சு வெடித்துவிடும்.

ஒருவன்: அன்று நான்தான் தவனக்காட்டுக் கோட்டையில் காவல்...மன்னன்... திலகாவை...

மதி: (திடுக்கிட்டு) யாரது? திலகாவை, மன்னன் என்று பேசினது? (இருவரும் திடுக்கிட்டு)

ஒருவன்: ஒன்றுமில்லை மதிவாணரே.

மதி: எதையோ மறைக்கிறாய்! திலகாவையும் மன்னனையும் சேர்த்துப் பேசிய மர்மம் என்ன? (அவன் தயங்க, மதி, அவன் கழுத்தைப் பிடித்து, நெறித்தபடி, உரத்த குரலில்) என்ன? என்ன? என்ன?

அவன்: மதிவாணரே, மன்னன், மாசற்ற உன் தங்கையை......

மதி: (ஆத்திரமும் அழு குரலும் கொண்டு) என் தங்கையை...ஐய்யோ... சொல்லு....என் தங்கையை...

அவன்: அந்தத் தீயவன் கற்பழித்துவிட்டான். மனம் குழம்பி அந்த மலர்க்கொடி கருகிவிட்டாள்...

மதி: ஆத்திரமுற்று ஹா...என்ன, என்ன......என் தங்கையை...ஐயோ...திலகா, உனக்கா அந்தக் கதி...

மதி: (போர் வீரனிடமிருந்து கட்டாரியைப் பிடுங்கிக் கொண்டு) மன்னனா இவன்...நாடா இது....திலகாவின் அண்ணன்தானா நான்...ஆஹா, பாடித் திரியும் பராரி என்று எண்ணி இப்பாதகம் புரியத் துணிந்தானா அந்தப் படுமோசக்காரன்....இதோ.. இதோ.... (வேகமாக நடந்தபடி) இதோ தீயவனைத் தீர்த்துக் கட்டாமல் திரும்பமாட்டேன்.

(வெற்றிவேலன் அரண்மனை. மதிவாணன் வரக் கண்ட சேவகன், அரசனிடம்...)

சேல: மதிவாணன் கட்டாரி கொண்டு வருகிறான் கடுங்கோபமாக.

அரசன்: வருகிறானா? என் உத்திரவின்றி அவனை ஏதும் செய்ய வேண்டாம்.

(அரண்மனையின் உட்புறக் கதவை உதைத்துத் தள்ளி விட்டு ஆவேசமாக மதிவாணன் செல்கிறான். வெற்றிவேலன் கடைசி அறையில் ஆசனத்தில் இருக்கிறான். அவனருகே பாதுகாவலர் சிலர் உள்ளனர். மன்னனைக் கண்டதும்
ஆத்திரம் கொள்கிறான் மதிவாணன். என்றாலும், தெளிவாக, உறுதியுடன், பேசுகிறான்)

மதி: கவிஞன் என்ன கனல்கக்கும் கண்களுடன், கரத்தில் கட்டாரியுடன் வந்திருக்கிறானே என்று எண்ணுகிறாயா காவலனே! திலகாவின் அண்ணன் வந்திருக்கிறேன் தீயவனே. திலகாவின் அண்ணன்—திலகாவுக்கு நேரிட்ட கதியைத் தெரிந்து கொண்டு, உன்னை அதோகதியாக்க வந்திருக்கிறேன். வேங்கையிடம் பிடிபட்ட புள்ளிமான் போல, புயலில் சிக்கிய பூங்கொடிபோல் ஆனாளே, என் திலகம்! களங்கமற்ற அந்த முகத்தைக் கண்டாயே காதகா! எப்படி உன் மனம் இடம் தந்தது இழிசெயல் புரிய! எப்படிக் கதறினாளோ என் தங்கை! எவ்வளவு கெஞ்சினாளோ! காலடி வீழ்ந்திருப்பாள்—கடவுளைத்துணைக்கு அழைத்திருப்பாள்—கண்ணீரைப் பொழிந்திருப்பாள். கல் மனம் படைத்தவனே! உன் மனம் இளகவில்லையா ஒரு துளி? எப்படி இளகும்? மக்களைக் கசக்கிப்பிழிந்து மதோன்மத்தனாக வாழ்ந்து வந்தவனல்லவா நீ? வறண்ட தலை, இருண்ட விழி, உலர்ந்த உதடு, சுருங்கிய முகம், காய்ந்த வயிறு, சோர்ந்த உடலம், ஓட்டைக் குடிசை, ஓடிந்த பாண்டம், மாரடித்து அழும் மனைவி, மண்ணில் புரளும் மக்கள், தேம்பித்தவிக்கும் தாய், சாந்தியிழந்த தங்கை — உன் ஆட்சியிலே காணக் கிடைக்கும் காட்சிகள் இவை. இந்தக் கொடுமைகளைச் செய்து செய்து பழக்கப்பட்டுப் போய்விட்டவனல்லவா நீ? கணக்குத் தீர்க்கும் காலம் வந்துவிட்டது. கணக்குத் தீர்க்கும் காலம் வந்து விட்டது காவலனே! திலகாவின் கண்ணீரடா இது......கன்னியின் கண்ணீர்! காதகனே! உன்னால் கற்பழிக்கப்பட்ட என் தங்கையின் கண்ணீர்! கண்கள் கூசுகிறதா, இறுக மூடிக்கொள்—உன் இதயத்தில் இதைப் பாய்ச்சாது விடேன்!

(மதிவாணன் அரசன் அருகே செல்ல வீரர்கள் தடுக்கிறார்கள்—சீறிப் போரிடும் அவனைத் தடுத்து நிறுத்துவது கடினமாகிறது—கோபாவேசத்துடன்)

மதி: என்னைத் தடுத்துவிட்டால் தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணாதே! இந்த ஆணவ அரசை அழித்தொழிக்கும் ஆற்றல் மிக்க வீரர்கள் வருகிறார்கள்!

(காலடிச் சத்தம்—அருமறையும் மாசியும் வருகிறார்கள்—நிலைமையைக் கண்டு மாசி பதறுவது போலாகி)

மாசி: என்ன அக்ரமம் நீசா! மன்னனையா கொல்லத் துணிந்தாய்? எங்கள் மார்க்க ரட்சகனையா தாக்கத்துணிந்தாய்? மன்னா! இந்த மாபாவி..........

வெற்: (அலட்சியமாக) கட்டாரியால் குத்தவந்தான்.

மாசி: மகாபாதகன்—மகாபாதகன்—மரணதண்டனை தான் தரவேண்டும்

(மரகதம் ஒரு சிறு பேழையை மன்னனிடம் தந்துவிட்டுப் போகிறாள்)

அரு: நாத்திகன்—பழிபாவத்துக்கு அஞ்சுவானா? இவனைக் கொல்லாவிட்டால், மன்னா, தர்மம் தழைக்காது!

வெற்: (மேலும் அலட்சியமாக) கிடக்கிறான்! அனுபவமற்றவன்! காதகனின் கத்தியும் கட்டாரியும் என்னை என்ன செய்யும், குருதேவரின் ஆசிஇருக்கும்போது! இவன் அறியான்....(பேழையைத் திறந்து அருமறையிடம் காட்டி) எனக்குச் சாகாவரம் அருளத்தாங்கள் தயாரித்த ஜெபமாலை இருப்பதை. எனக்காக விசேஷ பூஜை செய்து தயாரித்த ஜெபமாலை அல்லவா இது! ஜெபம் நடக்கட்டும்! (பேழையை அருமறையிடமும் மாசியிடமும் மாறிமாறிக் காட்ட இருவரும் மிரள்கிறார்கள்) கொடியவர்களே! மதவேடமிட்டுத் திரிந்து என் மதியை மாய்த்த மாபாவிகளே! ஆதிக்க வெறிக்காக ஆண்டிக் கோலமிட்ட அக்கிரமக்காரர்களே! உங்கள் படுமோசம் அறியாமல் உத்தமன் மதிவாணனுக்குக் கேடுபல செய்தேன்! நானோர் கடையேன்! நில்லாதீர் என் முன் (பணிபாட்களைப் பார்த்து) இவர்களை இழுத்துச் செல்லுங்கள்.......சிறைக்கு.
(இழுத்துச் செல்லுகிறார்கள்)

மதி: (தழு தழுத்த குரலில்) வேந்தே...வேந்தே...

வெற்: (உருக்கமாக) உத்தமனே! உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்! (தள்ளாடி, அவன் அருகே வந்து, மடல் கொடுத்து.) இதோ மன்னிப்பு மடல், மக்களாட்சி மடல்! மதிவாணா! நான் திருந்தி விட்டேன்!

(சாய்கிறான்.)
(வேழநாட்டு அரண்மனையில் ஓர் கூடம் விசாரத்துடன் இருக்கும் மதிவாணனை, குமாரி, மக்கள் மன்றத் தலைவர்கள் கூடியுள்ள இடத்துக்கு அழைத்துச் செல்கிறாள்.)

குமாரி: கண்ணீர் விடுவது போதும் கண்ணாளா! கடமையைக் கவனிக்க வேண்டாமா? பெரிய பொறுப்பு ஏற்பட்டுவிட்டது. நாட்டுக்கு மன்னன் இல்லை. மக்கள் மன்றம் கூடுகிறது. மனம் உடைந்துபோகக்கூடாது இப்போது.

(சிறைச்சாலைக்கு முன்புறம் அருளாளர் அருமறை வெட்கித் தலைகுனிகிறார். அருளாளர் கோபமாகப் பேசுகிறார்.)

அருளாளர்: சன்மார்க்கம் பரப்பச்சொல்லி உன்னை அனுப்பினேன்; நீ சுயநலப் பேய்பிடித்து ஆடி அழிந்தாய். மக்களுக்கு உழைக்கச்சொல்லி உன்னை மடாலயத் தலைவனாக்கினேன். நீயோ மக்களைக் கசக்கிப்பிழிந்து, கொழுத்தாய். உன் போன்ற தீயவர்களால் மதமே நாசமாகலாம். போ, போ. உன்னைப் பார்ப்பதும் மகா பாபம் மக்கள் மன்றம் கூடுகிறதாம். அங்கு சென்று மன்னிப்புக் கேட்டுக் கொள். மார்க்கத்தையே நாசமாக்கிவிட்டாய். மகாபாதகன் நீ, மகாபாதகன் நீ.

மதி: மக்களாட்சி மலர்கிறது வேழ நாட்டவரே! வீரரே! மக்களாட்சி மலர்கிறது.

குமாரி: இங்குமட்டுமல்ல என் நாட்டிலும் மக்களாட்சிதான். ஓலை அனுப்பிவிட்டேன்.

மதி: மட்டற்ற மகிழ்ச்சி. மக்களாட்சியிலே உழைப்பவரே உயர்ந்தோர். உலுத்தருக்கு இடமில்லை. உடமை எனக்கே என்று கொக்கரிக்கும் கொலுப் பொம்மைகளுக்கு இடமில்லை. மக்களுக்கே நாடு சொந்தம். சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற வசதி. அறிவு பரப்புவோம். அற நெறியை மறவோம்.

(இருபோர் வீரர்கள் மடாதிபதியையும் மாசிலாமணியையும் இழுத்து வருகிறார்கள்)

மதி: மகானுபாவர்கள் வந்திருக்கிறார்கள்.

மக்கள்: அடித்துவிரட்டுங்கள் இவர்களை.

மதி: வேண்டாம். இவர்கள் தாராளமாக உலவ அனுமதியுங்கள் இவர்கள், மக்கள் மதிபெற்றனர் என்பதை எடுத்துக் காட்டும் திருத்தூதர்களாக இருக்கட்டும். பாடுபட்டுப் பிழைக்கட்டும் - பஞ்சை பராரிகளைப் பார்க்கட்டும். பசி பட்டினி இன்னது என்று தெரியட்டும், இவர்களின் கபட வேடத்தை நம்பி மோசம் போகாதீர்கள், இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம்..அன்பே கடவுள். அறநெறியே அபிஷேகம். தூய உள்ளமே கோயில். மக்கள் பணியே பூஜை. அதற்காக வாழ்வோம்.

(மடாதிபதியும் மாசியும் வெளியேறுகிறார்கள்)

மக்கள்: மக்களாட்சி வாழ்!

(மதிவாணன் கொடியேற்றுவிக்கிறான்)

மதிவாணனும், நாட்டுமக்களும்


வாழிய மாநிலம் வாழியவே — தமிழ்
மாண்பெழில் நூன்முறை வாழியவே.
(வாழி)
வளமது நீள்மக்களாட்சியுமே—மதி
வாணர்கள் மாட்சியுமே—அது
வாரிதிபோல் உயர்வான சுடர் போல்
நீடுழி காலம் வாழியவே
(வாழி)