45
காரணத்தை விளக்கி மக்கள் சார்பாக, முழக்கமிட, மாமன்றத்திலே வீரர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது, துயரம் பறந்தோடுகிறது, புதியதோர் நம்பிக்கை பிறக்கிறது, என்று மக்கள் கூறி களித்தனர்.
கேவலத்துக்குரிய இந்தத் தோல்விகளைப் பெற, பெரும் பொருள் செலவிடப்பட்டது — அதைப் பெற மன்னன் கையாண்ட முறைகள், எதிர்ப்புத் தீயைக் கிளறிவிட்டது.
சரக்குகளின் மீது தீர்வை போடப்பட்டது-மாமன்ற அனுமதியின்றி, இலண்டன் நகராட்சி மன்றத்தாரை நகரிலிருந்து 100,000. கடன் பெற்றுத்தரச் சொன்னான் மன்னன் — நகரம் மறுத்துவிட்டது — நகராட்சி மன்ற உறுப்பினரில் சிலர் 20,000 தர முன் வந்தனர்; ஐந்தில் ஒன்று கிடைக்கிறது அரசன் கேட்கும்போது! இதற்கு முன்பு இவ்விதம் நடந்ததுண்டா? எவ்வளவு தீரமாக, இலண்டன் மக்கள், மன்னன் பேச்சை ஏற்க மறுத்துவிட்டனர்! கடன்கேட்கிறான்; முடிதரித்த மன்னன்—தங்களைச் சிறையிலிடவும், தூக்கிலிடவும் அதிகாரம் படைத்தவன், தேவனருளால் மன்னனானதாகப் பேசிக்கொள்பவன், எனினும், தரமுடியாது என்று தீரமாகக் கூறிவிட்டனர். இந்தத் தீரம் வளரவேண்டும்! மக்கள் மண்பொம்மைகளல்ல, தலையாட்டிகளல்ல, தன்மானம் கொண்டவர்கள், உரிமை வேட்கை மிக்கவர்கள், அவர்கள், விழித்துக்கொண்டார்கள், என்பதை தெளிவாகக் காட்டும் நிகழ்ச்சிகள் இது, எனினும், வேறு எந்த முறையால் பணம் தேடுவது என்றுதான் சார்லஸ் மன்னன் யோசித்தானே தவிர, காலக் குறியைக் காணமறுத்தான், மன்னன் தன்னிடமிருந்த தங்க வெள்ளித் தட்டுகளைக்கூட விற்றான்! மன்னன் எவ்வளவு ஆதரவற்ற நிலையில் இருக்கிறான் என்பதை மக்கள் அறியலாயினர், அகமகிழ்ந்தனர்.