உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

எனவே வடக்கே அமைந்துள்ள பேரரசினை நடாத்திச் செல்பவர்கள், காங்கிரஸ் கட்சியினராக இருப்பினும், தென்னகத் தலைவர்களைச் சந்தேகிக்கிறார்கள்.

இது தென்னகத் தலைவர்களுக்கும் புரிந்துவிட்டது.

எனவே, அந்தச் சந்தேகத்தையும் துடைத்துத் தீர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, தென்னகக் காங்கிரஸ் தலைவர்கள், பேரரசு நடாத்தும் பேறுபெற்றோரின் ‘தாக்கீது’ கண்டு, கடுங்கோபத்தை வரவழைத்துக்கொண்டு, தி. மு. கழகத்தைத் தாக்கிடத் துணிவு கொண்டுவிட்டனர். ஆமடா தம்பி, ஆமாம்! உள்ளதை உள்ளபடி கூறிவிட்டேன்! உண்மையை மறைக்க விரும்பவில்லை. தி. மு. கழகத்தை ஒழிக்க, எல்லாவிதமான வலியினையும், திட்டமிட்டுச் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிறது, காங்கிரஸ் கட்சி.

அச்சமூட்டக் கூறுவதாக எண்ணிக்கொள்ளாதே! ஆனால், அலட்சியத்தாலே, உண்மையை மறைத்து வைப்பது தவறல்லவா? அதனால் கூறினேன்.

வலிவு கண்டு அஞ்சும் இனம் அல்ல நீ; அறிவேன்; பெருமைப்படுகிறேன்!

நான், தென்னகக் காங்கிரசு தலைவர்கள், பேரரசு நடாத்துவோரின் சந்தேகத்தை நீக்கவும், கசப்பைப் போக்கவும், தி. மு. கழகத்தைத் தாக்குவதுதான், தமக்குள்ள ஒரே வழி என்ற முடிவுக்கு வந்து, தளவாடங்களைத் திரட்டி வைத்துக்கொண்டும், துந்துபி முழக்கிக்கொண்டும், தொடை தட்டிக்கொண்டும் கிளம்பும் நிலையைக் காட்டுவது—அச்சம் ஏற்படுத்த அல்ல—தம்பி! உன் உயர்தரமான உழைப்பின் பயனாகக் கழகம் பெற்றுள்ள வளர்ச்சி, அத்துணை பெரிது, அத்துணை வலிவுமிக்கது. எனவேதான் கழகத்தைத் தாக்க, காங்கிரசு அத்துணை திட்டமிட்டுத் தளவாடங்களைத் திரட்ட வேண்டி வருகிறது என்பதை உணர்ந்து உவகை பொங்கும் நிலையைக் காணத்தான்!

பத்துப்பேருக்கு நடுவே வீற்றிருக்கும் ஒருவன், அணிபணி பூண்டிருப்பினும், நறுமணம் பூசியிருப்பினும், நகைமுகம் காட்டிடினும், ஒருவரும் திரும்பியும் பாராமல், என்ன என்று கேளாமல், அலுவல்களைக் கவனித்துக்கொண்டும், உரையாடி மகிழ்ந்தபடியும் இருந்திடின், கவனிக்கப்படாமலிருப்பவன், மனம் என்ன பாடுபடும்! அங்கு உள்ள சுவரினையும் கதவினையும்