171
விரிப்புதனையும் பிறவற்றையும், காண்போர், எங்ஙனம் அவை குறித்து, நாட்டம் ஏதும் காட்டாதிருப்பரோ, அஃதேபோல, நடுவிலே இடம்பெற்றுள்ள ஒருவனைக் கண்டவர்கள், துளியும் பொருட்படுத்தாது இருப்பின், வெட்கம் பிய்த்துத் தின்னும், வேதனை பீறிட்டு எழுமல்லவா? உருவம் கூடவா தெரியவில்லை! உரையாடக் கூடவா, மனம் இல்லை! அற்பனென்று எண்ணிக் கொண்டனரோ? அனாமதேயம் என்று கருதினரோ?—என்றெல்லாம் எண்ணி ஆயாசப்படுவானல்லவா?
பொதுத் தொண்டில் ஈடுபடுவோரின் மனதை வெகுவாகப் புண்படுத்தக்கூடியது,
எதிர்ப்பு
ஏசல்
இழிமொழி
பழிச்சொல்
இவைகள் அல்ல! அலட்சியப்படுத்தப்படுவதுதான், அவர்களின் மனதை மிகுதியாக வாட்டும்; வேதனை கொட்டும்; மனம் புண்படும்.
அதிலேயும், மிகத் தேவையான, மிகத் தூய்மையான ஒரு இலட்சியத்துக்காகப் பணிபுரிவோரை, மற்றவர், கவனிக்க மறுத்தால், இலட்சியவாதிகள் இரத்தக் கண்ணீர் வடிப்பர்.
தம்பி! நமது நிலை அப்படி இல்லை! சிலகாலம், ஏறெடுத்துப் பார்ப்பதும், யாரடா அவன் என்று கேட்பதும்கூட. அளவுக் கதிகமான தகுதியைக் கொடுத்துவிடும் என்று எண்ணிக் கொண்டு, நம்மை அலட்சியப்படுத்தி வந்தனர்.
அப்போதெல்லாம், தம்பி! உண்மையைக் கூறுகிறேன் நான் குன்றிப்போனேன்.
நமது கழகத்தாரின் பேச்சு, ‘ஓசை’ என்ற அளவு கூடவா இல்லை; ஒருவரும் கவனித்ததாகத் தெரியவில்லையே, என்றெண்ணி மெத்தவும் வாடினேன்.
பிறகுதான். மெள்ளமெள்ள, ஒருவரிருவர், நம் பக்கம் திரும்பி, ‘என்ன இரைச்சல் இது?’ என்று கேட்கலாயினர்; நான் மகிழ்ச்சி அடைந்தேன்.