172
தம்பி! கலம், வழிதவறிக் கடலிலே சென்று கொண்டிருக்கிறது. போய்ச்சேரவேண்டிய இடத்துக்கும், இப்போது கலம் ஊசலாடும் இடத்துக்கும் தொடர்பே தெரியாத நிலை! கரை காணமுடியவில்லை! கலம் உள்ளோர், எத்துணை கலக்கமடைவர்!
கடலிலேயே அமிழ்ந்து அழியத்தான் போகிறோம் என்று சிலர் அலறித் துடித்தழும் வேளை.
கலம் செலுத்துவோன் கருத்தற்றவன், திறமையற்றவன், இவனை நம்பி இந்தக் கலத்திலே ஏறிப் பயணப்பட்டதே அறிவீனம் என்று சிலர், கைபிசைந்து கொள்கின்றனர்.
ஆற்றல் மிக்கவர் எம் தலைவர்! அவர் அறிவார் எவ்வழியும்! அலறி அழாதே ஆரணங்கே! ஆபத்தின்றிப் போய் வருவேன்!— என்று கூறிக் கண்ணீரைத் துடைத்து, கன்னத்தைத் தடவிக்கொடுத்துவிட்டு, காதலிக்குத் தைரியம் கூறி, விடைபெற்றுக்கொண்டு வந்தவன், கலம் செல்லும் நிலை கண்டு, கண்ணீர் உகுத்தவண்ணம் உள்ளான்.
கலம் செலுத்தும் தலைவனிடம் கலகலப்பாகப் பேசிவந்தவர், காணவும் கூசுகின்றனர்; காணும்போதே, கண்கள் கேள்விக் குறிகள் ஆகின்றன!
கலம்விடு தலைவனோ, கடுங்கோபமும் கொள்கிறான்; நிலைமையை அறிந்து அடக்கிக் கொள்கிறான்!
கலத்தின் மேல் தட்டிலே உலவுகிறான்; கலக்கம் நிறைந்த உள்ளத்துடன்; சுற்றும் முற்றும் பார்க்கிறான்; கரை காண முயலுகிறான்!
எங்கும் தண்ணீர்! அலைகள் எழும்புகின்றன. மடிகின்றன! நம்பிக்கை அவன் இதயத்தில் எழும்பி மடிந்த நிலைகூடப் போய்விட்டது; இதயமே பாழ் வெளியாகிவிட்டது.
புயல் வீசுகிறது! கலம் கட்டுக் கடங்காமல், எப்பக்கமெல்லாமோ இழுத்துச் செல்லப்படுகிறது! கலத்திலுள்ளோர் கூவுகின்றனர்; இருள் கப்பிக்கொள்கிறது; அந்நிலையில் மேல் தட்டிலே உள்ள கலம்விடு தலைவன், உடல்மீது ஏதோ வந்து வீழ்கிறது; என்னவென்று எடுத்துப் பார்த்தால், அரும்பும் மலரும் கலந்து காணப்படும் ஒரு பூங்கொம்பு!! கலம்விடு தலைவன் அதைக் கண்டதும், என்ன நிலை பெறுவான்? களிநட-