உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காஞ்சிக் கடிதம்: 9

பொற்காலம் காண...!


தெற்கு முனையிலே ஏற்பட்ட பெருவிபத்து
எடுத்துரைக்கும் எதனையும் மதித்திட மறுக்கும்போக்கு
என் தம்பி மணம் பரப்பிடும் மலர்
இந்தியா முதலாளிகளின் முகாம்
கண்டு கருத்தறிதல் கடினம்; எனினும் தேவை
குப்பை கூளம் பற்றிய ஜான் மேஸ்பீல்டின் கவிதை

தம்பி,

தமிழக மக்கள் தனிச் சிறப்பளித்துக் கொண்டாடி மகிழ்வுபெறும் திருநாள், பொங்கற் புதுநாள். எங்கிருந்தோ ஓர் புத்தெழில், இந்த விழாவன்று அரசோச்ச வந்திடும் விந்தை, சிந்தைக்கு இனிப்பளிக்கக் காண்கின்றோம். இன்னல் மிகுந்த வாழ்வில் பின்னிக்கிடந்திடும் நிலையினிலுள்ள மக்களையும், இன்றோர் நாள், கன்னல் கண்டு பேசிட, செந்நெல் குவிந்திருக்க, செவ்வாழை அருகிருக்க, உழைப்பின் பயனாக உருவான பண்டமெலாம் நிறைந்திருக்க, மாடுகன்றுகளும் மேனி மினுக்குடனே, பொங்கிடுவது நாங்கள் தந்திடும் பாலன்றோ எனக் கேட்பதுபோல் உலவிவர, இந்நாள் இதயம் பாடிடும் நாள்! இஞ்சியும் மஞ்சளும் இயற்கை தந்த அணிகலன் என்பதனை உணரும் நன்னாள்