ஓர் இரவு
91
ஆடினான். பாவம், யாருக்குத்தான் ஆத்திரமா இருக்காது. தான் கலியாணம் செய்துகொள்ளணும்னு இருக்கற பெண், பாதி ராத்திரியிலே ஒரு கள்ளப் புருஷனோடே விளையாடறதைப் பார்த்தா மனசு பதறாதா? அவன் கண்டானா, இது தந்திரம்னு. புலி மாதிரி சீறினான், நானும் சும்மா இல்லை, நல்ல சண்டை. நல்ல அடி. நல்ல உதை இரண்டுபேருக்கும்.
சொ : அட பாவமே! அவ என்னா ஆனா?
ர : அம்மா! இந்த அன்யாயத்தைப் பாரு. அவளே தான், எனக்கு இப்படி இப்படி நடக்க வேணும்னு சொன்னா. ஜமீன்தாரன் வருவான், நான் பயப்படுகிறமாதிரி பாசாங்கு செய்வேன். கெஞ்சிக் கூத்தாடுவேன், நீ எதையும் கவனிக்காதே, அவனுக்குச் சரியான உதை கொடுன்னு சொல்லிக் கொடுத்தா. கடைசியிலே, அவ, அவனுடன் சேர்ந்துகொண்டு என்னையே அடிச்சி விரட்டினா.
சொ : ஏன்?
ர : ஏனோ? ஆத்திரம் எனக்கு. இவளுக்காக, நான் காதல் வேஷம் போட்டுகிட்டது வீண் வேலை. அவனிடம் அனாவசியமான சண்டை; கடைசியிலே, அவ நம்மையே திருப்பிக்கிட்டா; நல்லா திட்டிப்போட்டேன்.
[மறைந்திருந்த சேகர், இந்தச் சம்பாஷணையைக் கேட்டுத் தன்னையும் மறந்து]
சே : ஆஹா! சுசீலா! நீ மாசற்றவள்! உன்மீது வீணாகச் சந்தேகித்தேன்.
[குரல் கேட்டு ரத்னம் அலற, சேகர் அவனருகே வந்து]
சே : அப்பா! ரத்னம்! என் வயற்றிலே பால் வார்த்தாயே. சுசீலா, என்னைக் காதலிக்கிறாள். அவளை வற்புறுத்துபவன், அவள் மாமன் ஜெமீன்தாரன். அந்தக் காமுகனிடமிருந்து தப்பித்துக் கொள்ளவே, அவள் அந்த ஏற்பாடு செய்தாள். அவன் வரவேண்டிய சமயத்தில் எதிர்பாராதவிதமாக நான் வர நேரிட்டது. அதனாலே விபரீதமாகி விட்டது.
ர : (ஆச்சரியத்துடன்) அப்படியானா, நீ அல்லவா அவளுடைய மாமன், ஜெமீன்தாரன்.
சே : இல்லை! நான் டாக்டர் சேகர்!
ர : அட இழவே! விஷயம் எப்படியோ போய் எப்படியோ
முடிந்துவிட்டது.