உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரிகையின்‌ கதை

171

“சுதேசமித்திரன்” பத்திராதிபராகிய ஜீ. சுப்பிரமணிய அய்யர் சில தினங்களுக்கப்பால் பம்பாயில் நடைபெறப் போகிற “காங்கிரஸ்“ என்ற பாரதஜன சபைக்கொரு பிரதிநிதியாகச் செல்ல வேண்டுமென்ற கருத்துடன் யாத்திரைக்கு வேண்டிய உடுப்புகள், தின்பண்டங்கள் முதலியன தயார் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் ஜீ. சுப்பிரமணிய அய்யர் மஹா கீர்த்திபெற்று விளங்கினார். அவருக்குக் கொடிய ரோக மொன்றினால் உடம்பெல்லாம் முகமெல்லாம் சிதைந்து முள்சிரங்குகள் புறப்பட்டிருந்தன. இருந்தாலும் நிகரற்ற மனோதைரியத்துடன் அவர் தேசப் பொதுக் காரியங்களை நடத்தி வந்தார். மேற்கூறிய 1904-டிஸம்பர் மாஸத்திடையே ஒரு நாட்காலையில் அவர் தம் வீட்டு மேடையின்மேல் தம்முடைய விஸ்தாரமான புத்தகசாலையினருகே ஒரு சாய்நாற்காலியின் மீது சாய்ந்து கொண்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார்.

அவர் முன்னே ஒரு ச்சுமங்கலிப் பெண்—அவருடைய இளைய மகள்— ஒரு பிரமாண்டமான ஊறுகாய்ப் பரணியைக் கொண்டுவைத்தாள்.

“இதில் என்னம்ம, வைத்திருக்கிறது?” என்று அய்யர் கேட்டார்.

“நெய்யிலே பொரித்த எலுமிச்சங்காய் ஊறுகாய்; நல்ல காரம் போட்டது“ என்று மகள் சொன்னாள்.

“இதையெல்லாம் எப்படிச் சுமந்து கொண்டு போகப் போகிறோம்? அந்த வேலைக்காரனோ பெரிய குருட்டு முண்டம்“ என்று அய்யர் முணுமுணுத்தார்.

இதற்குள், மேடையைவிட்டுக் கீழே இறங்கிச் சென்ற மகள் திரும்பி வந்து:— “அப்பா, வாயிலிலே ஒரு பிராமண விதவை ஒரு சிறு குழந்தையுடன் வந்து நிற்கிறாள். ஏதோ அவஸர காரிய நிமித்தமாக உம்மை உடனே பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறாள்“ என்றாள்.