உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

“ஆண்டவனே! எங்களை ஏன் இப்படித் தவிக்க வைக்கிறாயோ தெரியவில்லையே. அந்தப் பாவிக்குப் பக்கத்துணையாகவே இருக்கிறாய்? நியாயமா? நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? தெய்வமே! இது அடுக்குமா?” என்று ஏழையின் மனைவி ஆண்டவனிடம் முறையிட்டு, நீதி வழங்கும்படிக் கேட்கிறாள்.

ஆண்டவனின் கண்களிலே இருந்து அவரையும் அறியாமல் நீர் வழியலாயிற்று. “இந்த அபலை, என்னை நீதி வழங்கும்படிக் கேட்கிறாளே. அவள் படும் கஷ்டம் ஒரு அக்கிரமக்காரனால் உண்டானது என்கிறாள், அதுவரையிலே சந்தோஷந்தான், நான்தான் கொடுமைக்குக் காரணம் என்று அம்மை குற்றம் சாட்டவில்லை. ஆனால், என்மீது உடந்தையாக இருக்கும் குற்றத்தைச் சுமத்துகிறார்களே, நான் என்ன செய்வேன்? என் கடமையை நான் செய்யவேண்டுமென்று எனக்குக் கவனமூட்டுகிறாள் அந்தக் காரிகை. முறையிடுகிறாள்! தூற்றிவிடக்கூடாதா? துயர் நேரும்போது, மனதிலே சாந்தி வருவித்துக்கொள்ளாமல், தெய்வத்தை நிந்தித்தாய், ஆகையால் உனக்கு அருள் பாலிக்க முடியாது என்றாவது சொல்லித் தப்பித்துக் கொள்ளலாமே? இந்தப் பெண்மணி, தன் கஷ்டத்தை என்னிடம் முறையிட்டு அல்லவா, நீதி வழங்கச் சொல்கிறாள். ஐயோ! அந்தக் கண்ணீருக்குதான் சமாதானம் சொல்லியாக வேண்டுமே என்ன செய்வேன்” என்று கூறினார். ஆண்டவன் கண்ணிலே இருந்து நீர் தாரை தாரையாகப் பெருகிற்று.

“ஆண்டவனறிய நான் ஒன்றும் தவறு செய்யவில்லை. வீணாக என் மேல் சந்தேகப்படவேண்டாம். அவன் பொய் பேசுகிறான். நான் அவன் சொத்தை அபகரிக்கவில்லை. சாட்சி உண்டா கேளுங்கள். என்னை அவமானப்படுத்த