உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அறிஞர் அண்ணா


சொ : அப்பா! இங்கே வாடாப்பா! பெண்ணுக மேலே, திடீல்திடீல்னு ஆண் பிள்ளைக சந்தேகப்படுவது பெரிய நோயாப் போச்சி. அந்தச் சாபக்கேட்டாலே, பெண்கள் படுகிற கஷ்டம் இருக்கே, சொல்லி முடியாதப்பா. வீணாகச் சந்தேகப்பட்டு, ஒரு பெரிய மனுஷர், தன் சொந்தப் பெண்ஜாதியைக் கொலை செய்ததை நான் கண்ணாலே பார்த்திருக்கிறேண்டாப்பா.

சே : (திடுக்கிட்டு) அம்மா, உன் பெயர் சொர்ணமா?

சொ : ஆமாம், உனக்கு எப்படித் தெரியும்?

சே : இப்ப நீங்க சொன்னது, கருணாகரத் தேவர் விஷயமாகத்தானே.

சொ : ஆமாம்பா!

சே : அம்மா! இந்தப் பெண், என்னால் வீணாகச் சந்தேகிக்கப்பட்ட பெண் வேறு யாருமில்லையம்மா, பவானியின் மகள் தேவரின் குமாரிதான்.

சொ : தேவர் மகளா? தெய்வமே, இவளையாவது காப்பாற்றினாயே. அப்பா! என் சேதி உனக்கு எப்படித் தெரியும்?

சே : தேவரே சொன்னார்.

சொ : ரத்னம்! அந்தப் பெண், உனக்குத் தங்கச்சி முறை தெரியுமா?

ர : எப்படிம்மா?

சொ : விவரம் கேட்காதே. நீ தேவர் மகன். இந்தத் துர்ப்பாக்கியவதி கழுத்திலே அவர் கையாலே ஒரு தாலிக் கயறு கட்டாததாலே, சொந்த அப்பன் வீட்டிலேயே திருடப் போற நிலை வந்தது.

சே : கஷ்டப்படாதீர்களம்மா, என்ன செய்வது? எல்லாம் இனி சுகமாக முடியும்.

ர : அதிசயமா இருக்கு. எனக்கு சுசீலாவிடம், ஒருவித அன்பு உண்டாயிற்று. இனி நீ என் தங்கை என்றுகூட நான் சொன்னேன்.

சே : உன் தங்கையேதான்! சந்தேகமென்ன?

ர : (பயந்து) அடே! ஒரு விஷயத்தை மறந்து விட்டேனே. அந்தப் பெண், விஷம் குடிக்க இருந்துதே. இந்த விபரீதம் நேரிட்டதாலே ஒருவேளை....

[சேகர் உடனே பதைத்து]

சே : நான் ஒரு முட்டாள், இதோ வருகிறேன்.

[சுசீலா! சுசீலா! என்று கூவிக்கொண்டே ஓடுகிறான்.]