உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173

மிடுவான். ஏன்? பூங்கொத்து! ஆமாம்! பெருங்காற்றால், கிளை முறிந்து, அதிலொரு துண்டு, இங்கு அடித்துக்கொண்டு வரப்பட்டு, வீழ்ந்துளது!! ஆகவே, எங்கோ, மிக அருகில் கரை இருக்கிறது!

“கலங்காதீர்கள்! அழிவு இல்லை! கரை சேரப் போகிறோம்! இதோ, பூங்கொத்து! காற்றால் அடித்துக்கொண்டு வரப்பட்ட பூங்கொத்து! பக்கத்திலேயேதான் கரை இருக்கவேண்டும்! கரை மிக நெடுந்தொலைவில் இருப்பின், மரம் ஏது, செடிகொடி ஏது! பூங்கொத்து கண்டோம்; இனிக் கரை காண்போம். காரிருள் நீங்கிவிடும், கரை உள்ள திக்கு விளங்கிவிடும்!”— என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுவான்; மற்றவரும் அதன் பொருள் அறிந்து பூரிப்படைவர்!

தம்பி! பணியாற்றியபடி நாமிருந்தபோது, எவரும் நம்மைப் பொருட்படுத்தாமலிருந்த நிலை இருந்ததே, அது எனக்கு கரை காணவே முடியாதோ என்ற கலக்கத்துடன், கலம் இருந்த நிலை போன்றுதான் இருந்தது.

காற்றால் பறித்தெடுக்கப்பட்டு வந்து வீழ்ந்த பூங்கொத்துப் போலிருந்தது, நம்மைப்பற்றி நெரித்த புருவத்தினர் சிலர் கேலிமொழி பேசியபோது, கரை அருகாமையில்தான், என்று கலம்விடுவோன் எண்ணி மகிழ்ந்ததுபோல, நான் மகிழ்ந்தேன், நம்மை, மாற்றார் தூற்றக் கேட்டு,

கவனிக்கப்பட்டு விட்டோம். அலட்சியப்படுத்தப்படவில்லை.

அலட்சியப்படுத்தவில்லை, ஆகவே, நமது முயற்சி பொருளற்றுப் போய்விடவில்லை.

முயற்சி பொருளற்றுப் போகவில்லை, ஆகவே, பலன் தராமற் போகப்போவதில்லை.

தூற்றுகிறார்கள், ஏனெனில் கவனித்துவிட்டார்கள்.

எதிர்க்கிறார்கள், ஏனெனில் நமக்கு வலிவு ஏறுவது புரிவதால்.

தாக்குவார்கள், நம்மைத் தகர்த்தாக வேண்டும் என்ற துடிதுடிப்பால்!

தாங்கிக்கொள்வோம், அதற்கேற்ற ‘உரம்’ நமக்குக் குறிக்கோளில் உள்ள பற்று பெற்றுத் தரும்.